Search

Eelamaravar

Eelamaravar

Tag

மாவீரர் நாள்

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தினத்தில் பொன் தியாகம் ஐயா !

கடந்த 27ஆம் திகதி தேசிய மாவீரர் தின நாள் தாயத்தில் புலம்பெயர் நாடுகள் எங்கிலும் எழுச்சிப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் வரலாற்று சரித்திரமாக பதிவாகியுள்ளது.

வருடா வருடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்படும் மாவீரர் தின நிகழ்வுகள் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக பிரம்மாண்டமான முறையிலும் பேரெழுச்சியுடனும் இந்த மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழினத்தின் மூத்த போராளியும் நான்கு மாவீரர்களின் தந்தையுமான பொன் தியாகம் அப்பா பல வருடங்களின் பின்னர் பொது வெளியில் முதன்மை சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.

தன்னுடைய நான்கு பிள்ளைகளை ஈழ மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் மண்ணுக்காக கொடுத்த இந்த மூத்த போராளி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு அருகாமையில் என்றும் மாவீரர்நாள் காலப்பகுதியில் அவரோடு சேர்ந்து விளக்கேற்றும் ஒருவராக இருந்துள்ளார்.

இந்நிலையில், பெருந்திரளான மக்கள் இந்த மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை இந்திய மத்திய மற்றும் மாநில அரசுக்கு சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

**
பொன்.தியாகம் அப்பா போராளிகள் எல்லோர்க்கும் தாயாக, தந்தையாக -ஒரு நினைவுப்பதிவு!

என்னைப் பாதித்த நாட்கள் பலவுண்டு. இன்றைய நாளும் அவற்றிலொன்று. அதுபற்றிய பதிவிது.

பொன்.தியாகம் அப்பா முழு நேரப்போராளி. எழுபதைத் தாண்டிவிட்ட வயதிலும் வன்னியெங்கும் சுழன்று திரிந்து பணியாற்றிய போராளி. புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக உள்ளார். அவரது மனைவி முன்னாள் ஆசிரியை. பிள்ளைகள் சிலர் புலம்பெயர்ந்துள்ளனர்.மகன்களில் இருவர் ஏற்கனவே புலிகள் இயக்கத்திலிருந்து வீரச்சாவு. (கணேஸ், தினேஸ் என்று நினைக்கிறேன்). முதலாமவர் எண்பதுகளின் நடுப்பகுதியில் வீரச்சாவு. அதைவிட மருமகன் போராளி. இன்னொரு மகள் (மேஜர் தேன்மொழி (டிலானி) வீரச்சாவு

போராளிகள் எல்லோரும் அத்தம்பதியரை அப்பா, அம்மா என்றுதான் அழைப்பர் தெரிந்தவர்கள் அயலவர்க்கு அவரீச்சர். எந்தநேரமும் சமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் வீடது. என்போன்ற பக்கத்து வீட்டுக்காரருக்கு அதுவொரு சாப்பாட்டுக்கடை போன்ற தோற்றத்தைத்தான் தரும்.

அப்போதுயாழ்செல்லும் படையணி என்று ஒரு படையணி இருந்தது. ( கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட லெப்.கேணல் மகேந்தி அவர்களும் அதில் தளபதியாகச் செயற்பட்டவர்) அதில் பெண்போராளிகளும் இருந்தார்கள். யாழ்ப்பாணத்துள் அவர்களால் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. லெப்.கேணல் தணிகைச்செல்வியைத் தளபதியாகக் கொண்டு பெண்கள் படையணி இருந்தது. யாழ்ப்பாணத்துள் செல்வதும் குறிப்பிட்டகாலம் தங்கியிருந்து தாக்குதல்கள் செய்வதும், மீண்டு வந்து வேறோர் அணியை அனுப்புவதுமென்று செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

பொன்.தியாகம் அப்பாவின் மகளும் அப்படையணியில்தான் இருந்தார். ஏற்கனவே தளபதி தணிகைச்செல்வி உட்பட அந்தப்படையணியில் இருக்கும் பலர் இந்தவீட்டின் நீண்டகால உறவுகள். அனைவரும் அவர்களின் பிள்ளைகள்.

அந்நேரத்தில் சிங்களப்படை மன்னாரிலிருந்து பூநகரி வழியாக (கண்டிவீதி இனி சரிவராது என்ற நிலையில்) யாழ்ப்பாணத்தை அடைவதென்று திட்டம் போட்டு முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டிருந்தது. ரணசிக்குறு என்ற பெயரின்பின் தொடரிலக்கத்தில் நடவடிக்கை செய்த அவர்களைப் பள்ளமடுவில் மறித்துவைத்துச் சண்டைசெய்தனர் புலிகள். பள்ளமடுவை சிங்களப்படையாமல் தாண்ட முடியவில்லை.இந்நிலையில் யாழ்செல்லும் படையணியை பள்ளமடு முறியடிப்புச் சமரிலும் ஈடுபடுத்துகின்றனர் புலிகள். தளபதி தணிகைச்செல்வியின் தலைமையிலேயே அணி களத்தில் நிற்கிறது.

இன்றைக்குச் சரியாக 18 ஆண்டுகளின் முன்னால் 26.06.1999 அன்று பள்ளமடுவில் இராணுவம் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டான். கடும் சண்டை முண்டது. மாவீரர் பணிமனைக்குக் கிடைத்த தகவலின்படி தளபதி லெப்.கேணல் தணிகைச்செல்வி வீரச்சாவு. தனக்குக் கிடைத்த தகவலை வீட்டுக்கு மனைவியிடம் அனுப்பிவைத்துவிட்டு அலுவலகத்தில் இருக்கிறார் பொன்.தியாகம் அப்பா. சிலமணித்துளிகளின் பின் மேஜர் தேன்மொழி வீரச்சாவென்று செய்தி வருகிறது.

ஆம்! பொன்.தியாகம் அப்பாவின் பிள்ளைதான்.பணிமனையிலிருந்து வீடுவருகிறார் தியாகம் அப்பா. வீட்டில் யாருமில்லை. தணிகைச்செல்வி அக்காவின்ர வீரச்சாவு கேட்டு அங்க போயிட்டா ரீச்சர் என்று அக்கம்பக்கத்தார் சொல்கின்றனர். தணிகைச்செல்வியின் வீட்டுக்குப் போகிறார். வாசலிலேயே மனைவியின் அலறல் கேட்கிறது. இன்னும் வித்துடல் வந்திருக்கவில்லை. தியாகம் அப்பாவைக் கண்டதும்,

எங்கட பிள்ளை எங்கள விட்டுப் போயிட்டாளே என்று கத்திக்கொண்டு வருகிறார். தியாகம் அப்பாவோடு கூட வந்தவர், ரீச்சருக்கு அதுக்கிடையில ஆரோ தேன்மொழியின்ர செய்தியைச் சொல்லிப்போட்டினம் என்று நினைத்துக்கொண்டார். ஆனால் தியாகத்தாருக்குத் தெயும் மனுசி தணிகைச்செல்வியைத்தான் சொல்லுது, இன்னும் பெத்தபிள்ளை செத்தது தெரியாது என்று.

எல்லாம் எங்கட பிள்ளையள் தான். ஒருக்கா வீட்ட வா போவம்என்று கூட்டிக்கொண்டுவந்து தேன்மொழியின் செய்தியைச் சொல்கிறார். இதற்குமேல் அத்தாயின் நிலையை விளக்க முடியாது. இருவரின் உடல்களையும் ஒன்றாக வைத்து வீரச்சாவு நிகழ்வு நடந்தது.

2009 க்கு முன்னர் அம்மா, அப்பா என்று அழைத்துக்கொண்டு நிறையப் போராளிகள் வீட்டு வந்துபோவார்கள். அந்த வீட்டு அடுப்பு எந்த நேரமும் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும்.

லெப்.கேணல் தணிகைச்செல்வி

யாழ் ஏழாலையை பிறப்பிடமாக கொண்டவர் . ஆரம்பகாலச் சுகந்திர பறவைகள் அமைப்புடன் சேர்ந்து இயங்கியவர். 1989 இல் மணலாற்றுக் காட்டில் மகாலிர்ப் படையணியின் நான்காவது பயிற்ச்சி முகாமில் ஆயுதப் பயிற்ச்சி எடுத்தவர்.
அரசியல் துறையில் வன்னி , யாழ் உட்பட பல இடங்களில் அரசியல் பணிசெய்து அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராகச் செயட்பட்டு அதன் பின் யாழ் செல்லும் படையணிப் பொறுப்பாளராகவும் , அரசியல்துறை தாக்குதல் அணியின் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். லெப்.கேணல் தணிகைச்செல்வியின் வீரச்சாவிற்கு பின்னர் லெப் கேணல் தாரணி யாழ்செல்லும் படையணி தளபதியாக நியமிக்க பட்டர்.

பொன்.தியாகம் அப்பாவின் வீட்டின் நடுவிறாந்தையில் நாலு மாவீர்களின் படங்கள் மாலைகளோடு இருக்கும். வெவ்வேறு காலகட்டங்களில் ஈழப்போராட்டத்தில் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்கள் இந்நால்வரும். நாலுபேருக்கும் அதிகாரபூர்வ அம்மாவாக ரீச்சர் இருக்கிறா. சுமந்து பெற்ற பிள்ளைகள் மூன்று.

இவர்களையே தன் தாய்தந்தையாகப் பதிவுசெய்துகொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்மாவீரின் படம் மற்றது.லெப்.கேணல் தணிகைச்செல்வியையும் அவருடன் இருந்த பெண் போராளிகளையும் மையமாக வைத்து போராளி ஒருவர் அருமையான படைப்பொன்றை எழுதியிருந்தார். அது புத்தகமாக வந்ததா தெரியவில்லை. வந்திருந்தால் இவர்களைப் பற்றிய நிறையத் தகவல்கள் கிடைக்கும்.

ஒரு மரபுப் படையணியிலிருந்து வேறுபட்டது இவர்களின் அனுபவங்களும் செயற்பாடுகளும். முழுக்க எதிரியால் கைப்பற்றப்பட்ட பகுதிக்குள் மறைத்துவைத்த ஆயுதத்துடன் சேலையோ சுடிதாரோ அணிந்துகொண்டு திரிவது தொடக்கம், வேவு பார்த்தல், திட்டமிடல், தாக்குதல் அனைத்தையுமே தனித்தே செய்யவேண்டிய நிலை. அப்படித்தான் செய்தார்கள். குருநகர் இடுகாலைக்கு அருகில் நடந்த காவலரண் தாக்குதல் குறிப்பிடத்தக்க ஒன்று.

18 வருடங்களின் முன் இதேநாளில் பள்ளமடுவில் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை முறியடித்த சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தணிகைச்செல்வி, மேஜர் தேன்மொழி உட்பட அனைத்து மாவீரர்களுக்கும் எமது அஞ்சலி.புலிகளின் முக்கிய போர்த்தளபதியாயிருந்து சமர்முனைகளில் எதிரிகளைக் கலக்கிப் பெருவெற்றிகளை ஈட்டி, பின்னொரு நாளில் இரணைமடுக்குளத்துள் மூழ்கி இறந்துபோன லெப்.கேணல். இராஜசிங்கனது நினைவுநாளும் இன்றுதான்.

ஆனையிறவைக் கைப்பற்றும் நீண்ட சமரில், மாமுனையில் தரையிறங்கி இத்தாவிலில் கண்டிவிதியை மறித்துநின்ற புலிப்படையை கேணல் பார்றாச்சின் தலைமையின் கீழ் வழிநடத்தி அச்சமரை வென்ற திறன் மட்டுமே போதும் இராஜசிங்கனைப் பற்றிச் சொல்ல. எவரையும்விட எதிரிக்கு அதிகம் தெரிந்திருக்கும். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாயிருந்தவர். இரணைமடுக்குளத்தில் குளிக்கும் போது விளையாட்டுத்தனமாக துருசிலிருந்த நீருள் பாய்ந்தபோது மரணமடைந்தார். சண்டைக்களங்களில் சாகாத வீரன், தண்ணிரில் மாண்டுபோனான்.

26 .06 .2017

தொகுப்பு வன்னியன்

லெப்.கேணல் தணிகைச்செல்வி தொகுப்பு- கண்ணன்

தமிழர் தாயகத்தில் சிறப்பாக நடந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒளிப்படத் தொகுப்பு


தமிழீழ விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், நேற்றுமாலை தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.

சிறிலங்கா அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், தமிழர் தாயகத்தில், நேற்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களிலும், நினைவிடங்களிலும், மாவீரர்களை நினைவு கூர்ந்து, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

இந்த நிகழ்வுகளில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

தமிழர் தாயகத்தில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வுகளின் ஒளிப்படத் தொகுப்பு-

முல்லைத்தீவு – முள்ளியவளை துயிலுமில்லத்தில்-

கிளிநொச்சி – கனகபுரம் துயிலுமில்லத்தில் – விஸ்வமடு தேறாவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர்நாள்

முல்லைத்தீவு- அளம்பில் துயிலுமில்லத்தில்-

யாழ்ப்பாணம் -கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக –

கடற்புலி மாவீரர்கள் நினைவாக – முல்லைக்கடற்கரையில். மாவீரர்நாள்

அம்பாறை – கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்தில்-

மட்டக்களப்பு – வாகரை துயிலுமில்லத்தில் –

யாழ்.- உடுத்துறை துயிலுமில்லத்தில்- யாழ் பல்கலைக்கழகத்தில்  மாவீரர் நாள் நினைவேந்தல்

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் 

யாழ்.சாட்டி துயிலுமில்லத்தில்-

முல்லைத்தீவு- வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில்-

யாழ். வல்வெட்டித்துறை மாவீரர் நினைவுத் திடலில்-

மட்டக்களப்பு- தரவை துயிலுமில்லத்தில் – 

மட்டக்களப்பு – தாண்டியடி துயிலுமில்லத்தில்-

மன்னார்- ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தில்- மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் நாள் நிகழ்வு

மட்டக்களப்பு கோவில்குளம் உயர்தொழில்நுட்ப கல்லுரியில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்ல மாவீரர் நாள்!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை  மாவீரர் நாள்

முல்லைத்தீவு ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

முதலாவது மாவீரர் லெப்.சங்கர் எரியூட்டப்பட்ட இடத்தில் ஏற்றப்பட்டது பொதுச்சுடர்


தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் லெப். சங்கர் உடல் எரியூட்டப்பட்ட கீரைத்துரை சுடுகாட்டில் மாலை சரியாக 6.05க்கு விளக்கேற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

புலிகளின் கட்டளைத் தளபதி சங்கர், சிங்கள ராணுவத்துடன் நடந்த சண்டையில் படுகாயமுற்று குடல் சரிந்த நிலையில், மதுரையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 1982-ம் ஆண்டு நவம்பர் 27-ம் நாள் மாலை மேதகு வே.பிரபாகரன் மடியில், மதுரை மண்ணில் உயிர் நீத்தார். சங்கர் வீரச்சாவடைந்த அதே நாளன்று இரவு விடுதலைப் புலிப் போராளிகள் மதுரை வந்து இராணுவ மரியாதையோடு தளபதி சங்கரின் பூத உடல் இதே கீரைத்துரை மயானத்தில் எரியூட்டப்பட்டது என்பது வரலாறு.

மாவீரன் சங்கர் மரணமடைந்த அந்த நாளைத்தான் மேதகு வே.பிரபாகரன் கடந்த 1989-ம் ஆண்டு முதல் புலிகளின் மாவீரர் தினமாக அறிவித்ததுடன், தனது மடியில் சங்கர், தலை வைத்து உயிர் நீத்த அந்த மாலை 6.05 மணிக்கு தனது மாவீரர் உரையை வாசிப்பதும் மயிர்கூச்செரிய வைக்கும் வரலாறு.

புதுச்சேரியில் மில்லர் அரங்கத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்.

மாவீரர் நாள் சோழமண்டலம் 

தாய்த் தமிழகத்தின் தஞ்சையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் நினைவேந்தல்

லெப்.போசன் கல்லறை நிகழ்வு!

தமிழ்த் தேசியப்பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் மாவீரர் நாள் நிகழ்வு

27.2018 மாலை தமிழ்த்தேசியப்பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் மாவீரர் நாள் எழுச்சியாகக் கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், ஓசூர், சென்னை, உள்ளிட்ட பல இடங்களில் நடந்தேறியது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. மாவீரர்களின் ஈகங்களை போற்றியும் தமிழீழம் அடுத்த கட்ட செயல்வடிவ போராட்ட முன்னெடுப்புகளையும் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் முன்னிறுத்தி எழுச்சியுரையாற்றினார்.

அதேபோல் திருச்சி, குடந்தை உள்ளிட்ட இடங்களில் த.தே.பே. பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்தி நினைவேந்தல் உரையாற்றினர்.

விதைப்பதும் முளைப்பதும் கார்த்திகையே

உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்

   1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது.

அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை….

மாவீரர் நாள் வரலாறும் தேசியத் தலைவர் பிரபாகரனும்

மேலும் பார்க்க ……………

**

**

**

தமிழ்த் தலைவர் பிரபாகரனின் இலட்சியத்திற்கு மதிப்பளித்து அகண்ட தமிழ் இராட்சியம் அமைப்போம்

தமிழினம் தனது தலைவரின் பிறந்த தினத்தை மிகவும் உணர்வு பூர்வமாக உலகம் எங்கும் கொண்டாடி வருகின்றது. யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை, யாரும் இலவசங்கள் வழங்கவில்லை ஆனாலும் தமக்குள் இருந்து எழும் தமிழ் இன உணர்வின் வெளிப்பாடாக இன்று தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் வயது வேறுபாடின்றி தம் தலைவனை கொண்டாடுகின்றனர்.

தலைவரின் புகைப்படத்தை கைகளில் ஏந்துவதில் பெருமை கொள்கின்றனர். யாரை பயங்கரவாதி என சிங்கள தேசமும், இந்தியாவும், மேற்குலகமும் முத்திரை குத்தியதோ இன்று அந்த தலைவரின் பிள்ளைகள் கொண்டுள்ள எழுச்சியை கண்டு அனைத்துலகமும் ஆச்சரியமடைந்துள்ளது.

பிரபாகரன் என்ற நாமத்தை அழிக்க வேண்டும் என்பது சிங்கள இந்திய ஆதிக்க சக்திகளின் திட்டம் ஆனால் இன்று அந்த நாமம் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உயிர் மூச்சாக பரிணமித்துள்ளது.

உலகை ஆண்ட மூத்த இனம் ஒன்று அடிமைப்பட்டுக் கிடப்பதையும், தனது கண்முன்னால் தனது மக்கள் அடிமைகளாக வாழ்வதையும் கண்டு பொறுக்கமுடியாத பலகனாக களம் புகுந்த எமது தலைவரிடம் அன்று ஆயுதங்களும் இல்லை அவருக்கு ஆதரவுகளும் இல்லை.

ஆனாலும் தனி ஒருவராக இயக்கத்தை கட்டி எழுப்பி ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை தமிழ் இனத்துக்கு என ஒரு தேசத்தையும், அதற்கான நிர்வாகக் கட்டமைப்புக்களையும், படைக்கட்டமைப்புக்களையும் கொண்டதாக மாற்றம் பெற வைத்தது என்பது அவரின் தலைமைத்துவத்தின் சிறப்பாகும்.

உலகத்தின் நான்காவது மிகப்பெரும் இராணுவத்தையும் உலக நாடுகளின் ஆதரவுடன் பல இலட்சம் படைகளைக் கொண்ட சிங்கள இராணுவத்தையும் கதிகலங்க வைத்த வீரமும், விவேகமும் தமிழ் இனத்தின் சரித்திரத்தை மீண்டும் எழுதிச் சென்றுள்ளது.

தமிழீழமும், தமிழகமும் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது, அதற்கு ஆதரவாக அனைத்துலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் களமிறங்கியுள்ளனர். மக்களின் எழுச்சியை அடக்கமுடியாத நிலையில் சிங்களமும், இந்தியாவும் உள்ளன.

தமிழனை ஆளவேண்டும் என்ற வேற்று இனத்தவனின் கனவுக்கு இந்த எழுச்சியானது சாவு மணியடித்துள்ளது. பிரபாகரன் என்ற நாமத்தை நாம் உச்சரிப்போமேயானால் எம்மை ஆள்வதற்கோ அல்லது எம்மை அணுகுவதற்கோ எதிரியும், துரோகியும் அச்சப்படுவான்.

தமிழகத்தில் தமிழ் மக்களின் ஆட்சி மலரும் போது தமிழ் தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்த தினம் அரச தினமாக அறிவிக்கப்படும் என்ற கருத்துக்களும் உண்டு. அவ்வாறு நாம் அறிவித்தால் அன்று எமது இனத்தின் விடுதலைக்கான கதவானது திறக்கப்படும் என்பதே யதார்த்தமானது.

எதிரிகளால் அழிக்க நினைத்த தமிழ் இனத்தின் வரலாற்றை மீண்டும் எழுதிய பெருமை மட்டும் எமது தலைவருக்கு உரியதல்ல, உலகம் எங்கும் சிதறிக்கிடந்த தமிழ் இனத்தை ஒரு அணியில் இணைத்த பெருமையும் பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்லுக்கே உரித்தானது.

சாவதற்கு துணிந்துவிட்டால் சாதாரதண மனிதன் கூட சரித்திரம் படைக்க முடியும் என்பதை தமிழ் மக்களுக்கு உணர்த்தியதும் அவர் தான். இன்று தமிழ் மக்கள் உலகத்தின் சரித்திர நாயகர்களை நினைவில் கொள்வதில்லை, அவர்களின் ஒரே நாயகன் தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரன் மட்டுமே.

எம் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடுவதுடன், அவரின் இலட்சியத்திற்கு மதிப்பளித்து இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு அகண்ட தமிழ் இராட்சியத்தை அமைப்பதற்காக நாம் அனைவரும் ஒருங்கியைந்து பயணிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

ஈழம் ஈ நியூஸ்

2004 தாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் காணொளிகள் தொகுப்பு

கடல்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வு காணொளி

அகவணக்கம் செய்தோம் வீரர்களே மாவீரர் பாடல் காணொளி

கல்லறைப் பாட்டு காதினில் கேட்டு மாவீரர் பாடல் 2014 -காணொளி

maveerar_day_2014

“தோன்றி” இசைத் தட்டிலிருந்து பாடகர் நிரோஜன்

தாயகக் கனவுடன் மாவீரர் நாள் பாடல் காணொளி

மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் !

kilinochi-maaveerar-day-2016-5மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். இந்த நிலையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு, அங்கு மாவீரர்களுக்கு விளக்கேற்றத் தீர்மானித்து மாவீரர் குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

போரில் சிதைக்கப்பட்ட துயிலும் இல்லம்

நானும் ஒரு மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற வகையில் 25ஆம் திகதி காலை ஏழு மணிக்கு கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்றேன். ஒரு காலத்தில் அமைதியுடன் செழித்த ஒரு பூந்தோட்டம் போலக் காட்சி அளித்த மாவீரர் துயிலும் இல்லத்தை 2009இல் கிளிநொச்சியை கைப்பற்றியபோது இலங்கை படைகள் புல்டோசர் கொண்டு அழித்து தரைமட்டமாக அழித்தது. ஈழத் தமிழ் மக்களால் இருதயக் கோவிலாக வணங்கப்பட்ட துயிலும் இல்லங்களை சிங்களப் படைகள் கொடூரமாகச் சிதைத்தன. தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் அவர்களின் நிலத்திற்காகவும் போராடியவர்களை உறங்க இடமற்றவர்களாக அழித்து அவர்களை நினைவுகூரும் உரிமையையும் அழித்து தமிழ் நினைவழிப்பை மேற்கொண்டது இலங்கை அரசு.

2009இல் ஈழப் போர் முடிவுற்றதன் பின்னர் ஏழு ஆண்டுகளாக மாவீரர் தினங்களை மறைவிடங்களிலேயே மக்கள் கொண்டாடி வந்தனர். போரின் பின்னர் இந்த வருடம் எட்டாவது மாவீரர் தினம். கடந்த மாவீரர் தினங்களின்போது இலங்கை அரச படைகள் வடகிழக்கை சுற்றி வளைத்து, ஒரு விளக்கை ஏற்றக் கூட அனுமதி மறுத்தது. ஆலயங்களில் விளக்கேற்றவும் மணி எழுப்பவும்கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கடந்து ஈழத் மக்கள் மாவீரர்களுக்கு தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் தொடந்து ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களுக்காய் விளக்காய் எரிந்தது. எங்கள் விடுதலைக்காக போரிட்டு மாண்டவர்களை நினைவுகூறும் எங்கள் தாகம் என்பது எங்கள் விடுதலைக்கான தாகம்.

ஆட்சி மாற்றத்தின் பின்னரான மாவீரர் நாள்

2015இல் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2015 மாவீரர் தினத்தின்போது விடுதலைப் புலிகளை நினைவுகூரத் தடை என்று அறிவித்த இலங்கை அரசாங்கம் அவர்களின் பெற்றார்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம் என்றும் அறிவித்தது. இந்த ஆண்டு மாவீரர் நாள் நெருங்கும் தருவாயில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை நினைவுகூர அனுமதியில்லை என்று அறிவித்தார். எனினும் மாவீரர்களுக்காய் விளக்குகள் ஏற்றப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு மக்களால் செல்ல இயலவில்லை. தங்கள் பிள்ளைகளை நினைந்து கண்ணீர்விட இயலவில்லை. இவை தமிழர் நெஞ்சுக்குள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.

கடந்த சில நாட்களின் முன்னர் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விட்டு இராணுவம் வெளியேறியிருந்தது. நவம்பர் 25 ஆம் திகதி காலை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த பத்துப் பேர் மாவீரர் துயிலும் இல்லத்தின் வாசலில் நுழைந்தோம். சில நிமிடங்களிலேயே பத்து இருபதாகி ஐம்பதாகி நூற்றுக்கணக்கானவர்களாக மக்கள் வரத் தொடங்கினார்கள். அந்த வழியில் பேருந்தில் சென்றவர்கள் பேருந்தை விட்டிறங்கி வந்தார்கள். செய்தியை அறிந்தவர்கள் பலரும் துயிலும் இல்லம் நோக்கி விரைந்தார்கள். எருக்கலை மரங்களும் உண்ணியுமாய் அடர்ந்த காட்டை சுத்தப்படுத்தி எங்கள் முகவரியை தேடிச் சென்றவர்களின் கல்லறைகளை தேடினோம். ஒரு சில கல்லறைகள் அடையாளம் காணும் நிலையில் இருந்தன. மற்றைய அனைத்துக் கல்லறைகளைளும் இலங்கை அரச படைகளால் சிதைக்கப்பட்டன.

அலை அலையாக வந்த மக்கள்

ஆங்காங்கே சில கல்லறைகள் எஞ்சியிருந்தன. பெயர் விபரங்கள் அடங்கிய கல்லறைகளின் பகுதித் துண்டுகள் சிலவும் மீட்கப்பட்டன. அடர்ந்த காடுகளை அழிக்க மூன்று நாட்கள் ஆகியது. சிதைந்த கல்லறைத் துண்டுகள் யாவும் பத்திரமாக மீட்கப்பட்டு சேகரிக்கப்பட்டன. அவற்றை உரிய வகையில் பாதுகாப்பதற்கவும் மக்கள் தீர்மானித்தார்கள். அப் பெரும் துயிலும் இல்லத்தை, சுமார் மூவாயிரம் கல்லறைகளை, பொதுச் சுடர் ஏற்றும் மேடையை, கல்லறைகளுக்குச் செல்லும் வழியை எல்லாவவற்றையும் மண்ணோடு மண்ணாக இலங்கை அரச படைகள் ஆக்கிரமித்தன. அத்துடன் அழிக்கப்பட்ட துயிலும் இல்லத்தின்மீது முகாமிட்டு தங்கியிருந்தனர்.

அத்துடன் மாவீரர் துயிலும் இல்லத்தை அலங்கரிக்கவும் விளக்கேற்றுவதற்கான சில பொருட்கள் கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்பட்டன. வர்த்தக நிலையங்களுக்குச் சென்று மாவீரர் தின நிகழ்வுக்காக இயன்ற பங்களிப்பு கோரப்பட்டபோது எந்த பங்களிப்பு வேண்டுமானாலும் கேளுங்கள் என்று மனமுவந்து பங்களித்தனர் வர்த்தகர்கள். பல நூற்றுக் கணக்கானவர்களின் பங்களிப்புடன் துயிலும் இல்லம் தன் பழைய முகத்தை மெல்ல மெல்ல உருவேற்றியது. மாவீரர்களுக்கான சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்க நவம்பர் 27ஆம் திகதி துயிலும் இல்லம் வீரர்களுக்கு விளக்கேற்றத் தயாரானது. மக்கள் அலை அலையாக மக்கள் வரத் தொடங்கினார்கள். ஆயிரம் பேர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல ஆயிரம் மக்கள் கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் நிறைந்தனர்.

ஒளிபெற்ற துயில் நிலம்:

மாவீரர்கள் துயிலும் இல்லம். நெகிழ்ச்சியான நிலம். அக் கல்லறைகள் நெஞ்சை உருக்குபவை. சனங்கள் கண்ணீருடன் வந்தனர். எல்லோருடைய முகங்களும் வீரர்களின் ஒளிமுகங்களைத் தேடின. மாவீரர்கள் குறித்த பாடல்கள் ஒலிக்க அந்த வீரர்களின் நினைவில் உருகியது துயிலும் இல்லம். போரில் மாண்டுபோன தம் உறவுகளுக்கு பல்லாயிரம் மக்கள் விளக்கேற்ற, பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. துயிலும் இல்லம் வீரர்களுக்கான வெளிச்சத்தால் ஒளிர்ந்தது. எங்கள் தேசம் எங்கும், வீடுகள் தோறும் மாவீரர்களுக்கு விளக்கெரிந்தது. முழங்காவில், உடுத்துறை, வவுனிக்குளம், ஆண்டான்குளம் முதலிய துயிலும் இல்லங்களிலும் மாண்ட வீரர்களுக்கான விளக்குள் ஏற்றப்பட்டன.

உணர்வுபூர்வமாக திரண்ட இணைஞர்களை ஒருங்கிணைத்து புனரமைப்புப் பணியை வேழமாலிகிதன் முன்னெடுத்தார். பத்துப்பேருடன் தொடங்கிய இந்த முயற்சி பல ஆயிரம் பேரை திரள செய்தது மாத்திரமின்றி பல துயிலும் இல்லங்களில் மக்கள் நுழைந்து விளக்கேற்ற வைத்தது. மக்கள் தன்னிச்சையாகவே பங்களித்தனர். கல்லறைகளை தேடி அழுத தாய்மார்கள் பலர். முற்றுமுழுதாக அழிந்த மண்ணிலும் தம் பிள்ளைகள் விதைக்கப்பட்ட இடங்களைக் கண்டுபிடித்து அங்கு விளக்கேற்றினர். அப் பெரு நிலத்தில் வீரர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தீபங்கள் பரவி எரிந்தன. உழவு இயந்திரத்துடன் வந்து துயிலும் இல்லத்தை துப்புரவு செய்த ஒரு சகோதரன் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்தார். இரு நாட்களாக காடுகள் அழிக்கப்பட்ட பின்னர் மண் மூடியிருந் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்து நெகழ்ந்த அந்தக் கணத்தை எளிதில் விபரிக்க இயலாது.

தவிப்பை தடை செய்ய முடியாது

துயில் நிலத்தின் கீழ் என் உறவு எங்கே புதைக்கப்பட்டிருக்கிறார் என்று அலைந்த அந்த தவிப்பை இலங்கை அரசால் எப்படி தடை செய்ய முடியும்? தடைசெய்யப்பட்ட இயக்கத்தை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அன்று திரண்டு வந்த மக்களின் உணர்வை அரசால் தடை செய்ய இயலுமா? அவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள். அவர்களை வரலாறு முழுதும் தமிழர்கள் தொழ விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக, விடிவுக்காக, விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்தவர்கள். இந்த மண்ணில் எங்கள் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றார்கள், எங்கள் தாயகம் இப்போதும் எஞ்சியிருக்கிறது என்றால் அது அவர்களால்தான். துயிலும் இல்லங்கள், இன ஒடுக்குமுறையின், அதற்கு எதிரான எழுச்சியின் சரித்திரத் தடங்கள். மாவீரர்கள், ஈழத் தமிழ் இனத்தின் பெருமுகமாய், விடுதலையின் பெருங்குரலாய் விதைகுழியிலிருந்தும் இன்றும் போராடும் தொன்மங்கள்.

எங்கள் வீரர்கள் எம் தாயக நிலம் மீட்கச் சென்றனர். நாம் அவர்களின் விதை நிலம் மீட்கச் சென்றோம். இனி வரும் நாட்களில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிங்கள சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இனி எங்கள் மாவீரர்களின் கல்லறையுடன் அவர்கள் பேசட்டும். எங்கள் மாவீரர்களின் கல்லறையும் அவர்களுடன் பேசும். நாங்கள் சந்தித்த இன ஓடுக்குமுறைகள் குறித்தும், எங்கள் தாகம் குறித்தும் கல்லறைகள் பேசும். எங்கள் முகங்களின் காயங்களை அவர்கள் பார்க்கட்டும். எங்கள் கல்லறைகளுடன் புரிந்த மனித நாகரிகத்திற்கு விரோதமான போரை அவர்கள் பார்க்கப்பட்டும். தாய் நிலத்திற்காக போராடி மாண்டுபோனவர்களுக்கு உறங்க நிலம் மறுக்கப்பட்ட பண்பாடற்ற செயலை சிங்களவர்கள் இனி உணரட்டும்.

மாவீரர்களை நினைவுகூர்வதைக் கூட தடுத்த இலங்கை அரசு இம்முறை நினைவுகூரவே உத்தியோகபூர்வமற்ற முறையில் அனுமதி அளித்திருக்கிறது. மாவீரர்களை நினைவுகூறும் தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரிப்பதும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதும்தான் தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ளும் வழி. அதனை மறுக்கிற வரை இலங்கை அரசை உரிமை மறுப்பு அரசாக, ஆக்கிரமிப்பு அரசாகவே ஈழ மக்கள் கருதுவார்கள். இந்த நாட்டில் மிக நீண்ட காலமாக புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாக இருந்தால் இந்த இனப்பிரச்சினையால் – இந்த இன ஒடுக்குமுறையால் போராடி மாண்டவர்களை, அவர்களின் தாகத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Up ↑