Search

Eelamaravar

Eelamaravar

Tag

அவலம்

இரும்புத்துண்டுகளுடன் வாழும் மனிதர்கள் !

நமது உடல் பூ போன்றது என்பர். அல்லது பூ போலக் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பர். அதற்கிணங்கவே, நமது உடலும் பூ போன்றதுதான் என்பதை சிறு தலைவலி வந்தாலே நாம் உணர்ந்துகொள்வோம். அதிலும், காலில் சிறு முள் குத்தி, அந்த முள்துண்டு இரண்டொரு நாளைக்கு வெளியில் எடுக்கமுடியாது போய்விட்டால் துடித்தே போய்விடுவோம். இரவில் உறங்கமுடியா தளவுக்கு ஒரு வலியிருக்கும். காய்ச்சல் வந்ததுபோலவும், வராததைப்போலவும் ஓர் உணர்வு கொதித்துக்கொண்டேயிருக்கும். சாதாரண முள் குத்தியதற்கே இந்தநிலையெனில், உடலில் வெடிபொருட்களுடன் வாழ்பவர்களைப் பற்றி என்றாவது நினைத்துப்பார்த்திருக்கிறோமா?

இலங்கையில் போர் நிறைவுக்கு வந்து ஒரு தசாப்தமாகிறது. இன்னொரு விதத்தில் அத்தகைய போர் எச்சங்களைத் தம் உடலோடு காவித்திரியும் மனிதர்கள் வாழத்தொடங்கியும் ஒரு தசாப்தம் எட்டப்பட்டிருக்கிறது. சிறியோர் முதல் பெரியோர் வரை எவ்வித பால் வேறுபாடுமற்று இத்தகையவர்கள் வடக்கு கிழக்கு முழுவதும் வாழ்கின்றனர். தம் உடம்பில் கனமான, விஷத்தன்மைமிக்க ஒன்றோ அதற்கு மேற்பட்டோ கூடிய இரும்புத்துண்டை காவியபடிதான் இவர்களின் வாழ்க்கை நகர்கிறது. அந்த வாழ்க்கை எப்படியானது?

மாங்குளத்திலிருந்திலிருந்து முல்லைத்தீவு செல்லும் வழியில் இருக்கிறது தச்சடம்பன் எனும் கிராமம். அந்தக் கிராமத்தில் முழுமையாக நிறைவுபெறாத, கதவுகளற்ற வீட்டுத்திட்ட வீட்டில் வாழ்கிறார் யோகராசா நகுலேஷ்வரி (45 வயது). உரையாடத்தொடங்கு முன்பே, ஸ்கான் அறிக்கைகளை அறிமுகப்படுத்துகின்றார். அந்த அறிக்கைகளைப் பார்த்தால், அவரின் தொடையின் கீழ்ப் பகுதியில் முழுமையானதொரு ரவைத்துண்டு எலும்புக்கு மிக அண்மையில் குத்திக்கொண்டு நிற்பது தெரிகிறது. அது மிகச் சாதாரண வலியாக இருக்காது. ஆனால் அதனையும் தாங்கிக்கொண்டு நம்முடன் உரையாட ஆரம்பிக்கிறார். அவரின் கணவரான யோகராசா மிக அருகிலேயே அமர்ந்திருக்கிறார்.

எப்படி அம்மா இது நடந்தது?

‘திகதி நினைவில்ல…ஆண்டு….’ என்று இழுத்தவாறே கணவனைப் பார்க்க, ‘கடைசி சண்டை நேரத்திலதான் நடந்தது. 2008க் கடைசி என்று நினைக்கிறன்’ என்கிறார் அவர்.

‘நாங்கள் இங்கயிருந்து இடம்பெயர்ந்து வலையன்மடத்துக்கு இடம்பெயர்ந்து போன்னாங்கள். பின்னேரமாகிற்றுது அங்க போய்ச்சேர. சாமானுகள் எல்லாம் இறக்கிவைக்க இருட்டாகிற்று. ஒரே ஷெல்லடி, ரவுண்ஸ் அடியா இருந்தது. பின்ன, அந்த ட்ரக்டர் சில்லுகளுக்கு பக்கத்திலயும், ட்ரக்டர் பெட்டிகளுக்கு கீழயும் படுத்து நித்திரையாப் போனம். இரவு 12 மணியிருக்கும். நல்ல நித்திரையாப் போனன். வெடிச்சத்தமா இருந்தது. ட்ரக்டர் சில்லுக்கு பட்டமாதிரி இருந்தது. எனக்கு உடனும் ஒன்றும் தெரியாது. கொஞ்ச நேரம்போக கால் விறுவிறுத்தது. என்ன விறுவிறுக்குது என்று தடவிப்பார்த்தன் கொளகொளவென்று ஒரே ரத்தம். நல்லா உள்ளுக்குப் போயிற்று ரவுண்ஸ்’.

இவ்விடத்தில், ‘மருந்துகள் ஏதும் கட்டேல்லயா?’ என்ற கேள்வி இயல்பானதுதானே.

‘…அந்த நேரத்தில தெரியும்தானே ஒழுங்கான மருந்துகள் இல்ல. ஸ்கான் பண்ணி பார்க்கிற வசிதியள் இல்ல. ரவுன்ஸ், ஷெல்துண்டுகள் வெளியால தெரிஞ்சா எடுத்துப்போடுவினம். இது உள்ளுக்குப் போனபடியால் எடுக்க முடியேல்ல. மாத்தளன் ஆஸ்பத்திரியில் மருந்து கட்டியாச்சுது’

சண்டையெல்லாம் முடிஞ்ச பிறகு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் காட்டேல்லயா?

‘காட்டினம். யாழ்ப்பாணம் போனது, வவுனியா போனது. 2010 ஆம் ஆண்டு வவுனியால ஸ்கான் பண்ணிப்பார்த்துத்தான் இந்த ரிப்போர்ட் தந்தது. பீ.கே. ரவுண்ஸ் இருக்கு எண்டு சொல்லிச்சினம். உள்ளுக்கு இருக்கிற ரவுண்ஸ் துண்டை வெளியில் ஒப்பிரேசன் செய்து வெளியில் எடு;க்கலாம் என்றும், அது இங்க செய்ய ஏலாது கொழும்புக்குத்தான் போகவேணும் என்றும் சொல்லிச்சினம். அதுக்கு பிறகொரு நாளைக்கு வரச்சொல்லி அனுப்பிவிட்டவை’

பிறகேன் போகேல்ல?

ம்…போகேல்ல..என வார்த்தையை இழுத்தார் நகுலேஸ்வரி. கணவரைப் பார்த்தார். கணவர் வேறு எங்கேயோ பார்த்தார்.

‘ஏன் என்ன பிரச்சினை என்று அழுத்தமாகவும், தயவாகவும் ஒரு கேள்வியைக் கேட்க, ‘நிறைய செலவாகும் தம்பி. அவ்வளவுக்கு எங்களிட்ட காசில்ல. அரசாங்க ஆஸ்பத்திரி எண்டாலும், போக்குவரத்து, தங்கிநிற்கிற செலவு, அதுக்குப் பிறகு உடனும் வேலைக்கு ஏதும் போக ஏலாது. எனக்கு நாலு பொம்பிளப் பிள்ளையள். வீட்டிலயும் கஸ்ரம். அவருக்கும் கால் ஏலாது. கனநேரம் நின்று வேலை செய்ய சிரமப்படுவார். கூலி வேலைக்குத்தான் போறவர். இங்கயிருந்து பிள்ளையள் பள்ளிக்கூடம் மாங்குளத்துக்குதான் போகவேணும். காலம 4 மணிக்கு நான் எழும்பி சமைச்சால்தான் அதுகள பள்ளிக்கூடம் அனுப்பலாம். அதோட ஒப்பிரேசன் எல்லாம் சக்ஸஸா முடியாமல் எனக்கு ஏதும் கால்கை இழுத்திற்று எண்டால் என்ர குடும்பத்த யார் கொண்டுபோறது? நான் பகலில் படுக்கையில் விழாம இருக்கிறபடியால் குடும்பம் நகருது. பகலிலும் படுக்கையில் விழுந்திட்டால் யார் என்ர குடும்பத்த பார்க்கிறது. மூன்றும் பொம்பிளப் பிள்ளையள். ஒரு சயிக்கிள வச்சித்தான் மாறிமாறி பள்ளிக்கூடம் போவினம். அதுவும் இன்றைக்கு காத்துப்போய்க் கிடக்கு. இதெல்லாம் சமாளிச்சி நான்தான் கொண்டுபோகவேணும்.’ நகுலேஸ்வரியுடன்; உரையாடிக்கொண்டிருக்கும்போது, ஓர் இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர்களுடன் உரையாடுவதை ஆழமாகக் கவனிக்கத்தொடங்கினார். இப்போதெல்லாம் கெமராவுடன் வன்னியின் எந்தத் தெருவில் இறங்கி நடந்தாலும் நம்மைப் பின் தொடர்வதற்குச் சிலர் இருப்பர். அப்படியானவராக இருப்பாரோ என்ற சந்தேகம் மேலிட்டபோதிலும், அதனைக் கணக்கிலெடுக்காமல் நகுலேஸ்வரியிடம் உரையாடலைத் தொடர்ந்தேன்.

‘ உங்கட கணவருக்கு என்ன நடந்தது?’ கேள்வி முடியுமுன்பே ‘அவரும் காலில் காயப்பட்டவர்கள்’ எனப் பதில் வந்தது. உழைத்து, நடந்து களைப்பான கால்களின் நுனிப்பகுதியை ஏவுகணைத்துண்டொன்று அறுத்திருப்பதை யோகேஸ்வரன் காட்டுகின்றார்.

ரவுண்ஸ் உள்ள இருக்கிறபடியால் வலி ஏதும் இருக்குமா அம்மா? எனக் கேட்க, ‘வலியோ, இரவில் துடிச்சிப்போவன்தம்பி. இவையள் யோசிப்பினம் என்றதுக்காக வெளியில் காட்டிக்கொள்றதில்ல. தூரத்துக்கு நடக்க ஏலாது. ஏதும் கஸ்ரமான வேலை செய்ய ஏலாது. நான் வலியில்லாமல் நித்திரகொண்டு பத்துவருசம் ஆகுது. இரவில் சரியா குத்தி உளையும். இங்கயிருக்கிற ஆயர்வேத ஆஸ்பத்திரியில ஒரு களிமருந்து வாங்கி வச்சிருக்கிறன். அதைப் பூசினால் கொஞ்சத்துக்கு வலி இருக்காது. இப்ப ரவுண்ஸ் முதல் இருந்த இடத்தவிட கொஞ்சம் கீழ இறங்கினமாதிரி இருக்கு. தடவிப் பார்க்க தெரியுது.

இப்பிடி ரவுண்ஸோட வாழுறது ஆபத்தென்று விளங்குதோ அம்மா? ஓம் தம்பி. ஆபத்துத்தான். என்ன செய்யிற. எனக்கு ஏதுமென்றால் என்ர குடும்பம்? யாரும் ஒரு உதவியில்ல. அரசாங்கமும் இப்பிடி உடம்பில் வெடிபொருட்களோட வாழுற ஆக்களுக்கு ஒன்றும் தாறதில்ல.. என நகுலேஸ்வரி சொல்லிக்கொண்டிருக்கவே,

ஏன் எங்களிட்ட ஏதும் கேட்கமாட்டியளோ…நாங்களும் காயப்பட்டனாங்கள்தான் என மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடியே பெரிதாகக் குரலெழுப்பினார் நான் ஏற்கனவே சந்தேகித்த இளைஞர்.

‘நாங்களும் சண்டையில் காயப்பட்டனாங்கள்தான். ஒருக்கா இயக்கத்தில் இருக்கும்போது காயப்பட்டனான். அது துடையில. கிட்ட கையக் கொண்டுவாங்கோவன் காட்டுறன் எனக் அவரின் அருகில் கூப்பிட்டார். கையைவைத்துத் தடவிப் பார்க்கையில் துடையின் கீழ்ப் பகுதியில் ஒரு ரவைத்துண்டு அங்குமிங்கும் அசைவது கைகளுக்குள் பிடிபடுகிறது. இதில மட்டுமில்ல. தோள்பட்டையிலும் காயம். அது இயக்கத்தில இருந்து வந்த பிறகு, நித்திர கொள்ளேக்க காயப்பட்டது. தோளால இறங்கி உள்ளபோட்டுது ஷெல் துண்டு. அது எடுக்க கஸ்ரம் எண்டு சொல்லிற்றினம். நானும் எடுக்காமல் விட்டிட்டன். இரவில் நித்திர கொள்ள ஏலாது, பாரம் ஏதும் தூக்க ஏலாது. சுரியாக கஸ்ரப்படுகிறன். ஆஸ்பத்திரியில் கொண்டு போய் வெட்டிச் செய்யலாம்தான். ஒருக்கா போனன். அவங்கள் செய்வம் என்று தொடங்க எனக்குப் பயம்பிடிச்சிற்று. கையொன்று இழுத்தமாதிரி இருந்தது. பிறகு செய்வம் என்று விட்டிற்று வந்திற்றன். இனி போக பயமாக் கிடக்கு. கலியாணம் கட்டிற்றன். எனக்கு ஏதும் நடந்திட்டால் என்ர குடும்பத்த யார் பார்க்கிறது. ஏதோ நடப்பதை பார்த்துக்கொள்வம். இருக்கிறவரைக்கும் வாழ்ந்திற்றுப் போவம் என்று இருக்கிறன்;..’ என இலகுவாகப் பதிலளித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பறக்கிறார் அந்த இளைஞர்.

இப்படியாக உடலில் இரும்புத்துண்டுகளுடன் வாழ்வாதல் என்பது, இறுதிப்போரில் அகப்பட்டுத் திரும்பியவர்களுக்கு இலகுவானதாக மாறியிருக்கிறது. அதன் வலியை தசாப்தம் கடக்கும் உறக்கமற்ற இரவுகளை அவர்கள் வாழப்பழகிக்கொண்டிருக்கின்றனர். வடக்கு கிழக்கின் ஒவ்வொரு கிராமத்திலும் பெருமளவிலானவர்கள் இவ்வாறு வெடிபொருட்களை உடலில் தாங்கி உயிர்வாழ்கின்றனர். தன் குடிகளின் உடற்சுகாதாரத்தில் அக்கறையுள்ள அரசு எனில், முதலில் அபாயகரமான வாழ்க்கை வாழும் இந்த மக்களைக் காப்பாற்றத் திட்டங்களை வகுக்க வேண்டும். உரிய முறைப்படியான மருத்துவபொறிமுறையும், ஏதாவதொரு வகையான கொடுப்பனவும் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.

By

Jera Thampi

https://oorukai.com/

மனிதநேயம் என்ற பெயரில் புகழ்ச்சி தேடும் சில மனிதர்கள் !

மாலைநேர வகுப்பிற்கு சென்றுவந்த மகள் அறைக்குள் சென்று சத்தமாக அடித்து கதவைச் சாத்துவது கேட்டது,ஒருநாளும் இப்படி கோபப்படாதவள்,இன்றைக்கு ஏன் இப்படி செய்கிறாள்..?

ஏதோ நடந்திருக்கு என்று மட்டும் ஊகிக்க முடிந்தது என்னால்,போய் கதவில் தட்டி எழில் கதவைத்திறவம்மா என்று கூப்பிட்டேன்,வெளியே வந்தவள் அம்மா எனக்குப் படிக்கப்போக சைக்கில்தேவை. யாரிட்டயாவது வாங்கித்தாங்கோ என்று உங்களிட்ட கேட்டனா.,?எனக்கு பள்ளிக்கூடத்துக்கும் பின்னேர வகுப்புக்கும் நடந்துபோகத் தெரியாதா என்று கேட்டாள்..?

ஏன் பிள்ளை என்ன நடந்தது சொன்னால்த்தானே தெரியும் என்றேன்,எனக்கு சைக்கில் தந்த போட்டோவை பத்திரிகையிலையும்,முகநூலிலையும் போட்டிருக்கினமாம், நான் என்ன சின்ன பிள்ளையே. அவயல் உதவிசெய்த போட்டோவை முகநூலிலை கட்டாயம் போடனுமா அம்மா..? என்றாள்,வகுப்பிலை எல்லோரும் என்னை நக்கலடிக்கிறாங்கள்.

உன்ர போட்டோ பேப்பரில வந்திருக்கு.பார்த்தனியோ என்று கேட்கிறாங்கள், எனக்கு வெட்கமா இருக்குதம்மா,என்ர அப்பா இருந்திருந்தால் நான் ஏன் அம்மா இப்படி மற்றவர்களிட்ட அவமானப்படுறன் என்று அழுதாள்,நான் அவளை தேற்றினேன்,அவர்கள் உதவி செய்வதால் முகநூலில் போடுகிறார்கள் பிள்ளை,நாங்கள் கைநீட்டி வாங்குகிறோம்,சொல்லமுடியுமா..? என்ர பிள்ளைக்கு 15வயதாகிட்டுது,வளர்ந்திட்டால் போட்டோ எடுக்காதயுங்கோ முகநூலிலை பத்திரிகையிலை போடாதயுங்கோ என்று.

அப்படி போடுவதால் அவர்களிற்கும் ஒரு மனத்திறுப்தி,உதவி செய்ய பணம் கொடுப்பவர்களும் நம்பிக்கையா உதவி செய்வினம் என்றுதான் போடினம் என்றேன். ஏனம்மா அப்படி போடுபவர்கள் பெண் பிள்ளைகளின் போட்டோ போடும்போது முகத்தை மறைத்து போடேலாதா..? என்றாள் கோபமாக,
எனக்கும் மகளின் கண்ணீரைப்பார்க்க வேதனையாக இருந்தது.

என்னம்மா செய்வது நாங்களும் மற்றவர்களைப் போல சுயநலத்தோடு குடும்பத்தை பார்த்துக்கொண்டு போராடாமல் இருந்திருந்தால் இன்று நீ கண்ணீர் சிந்தியிருக்க மாட்டாய்,என்ன செய்வது எம்மால் அப்படி வாழமுடியவில்லை. அதுதான் நாங்கள் இன்றுவரை கண்ணீரோடு வாழுகிறோம்,

என் கணவனோடு நாம் மகிழ்வாக வாழ்ந்த வாழ்வின் இனிய நினைவுகளை மீட்டுப்பார்க்கிறேன்…….
நானும் என் கணவனும் போராளிகளாக இருந்தோம்.போராட்ட காலத்தில் எமக்கு திருமணம்பேசி செய்துவைத்தார்கள், திருமண பந்தத்தில் நாம் இருவரும் இணைந்துகொண்டோம்.

எமது மகிழ்வான வாழ்வின் அடையாளமாக இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்.மகன் கருமுகிலன்.மகள் எழில்நிலா.
நாம் திருமணம் செய்திருந்தாலும் போராளிகளாகவே இருந்தோம்,பிள்ளைகளும் நன்றாக படித்தார்கள்,எமக்கு துணையாக கணவனின் நண்பர் ஒருவரின் குடும்பம் அருகில் இருந்தார்கள்,எமக்கு மிக ஆறுதலாக இருந்தார்கள்.

யுத்தம் அகோரமாகிக்கொண்டிருந்தது.இராணுவத்தினர் முன்நகர்ந்தபடி இருந்தார்கள்,எனது கணவன் களமுனையில் நின்றபடியால் வருவது குறைவாகவே இருந்தது,வட்டக்கச்சியில்தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தோம்,இராணுவம் முன்நகர்ந்து வர வர ஒவ்வொரு இடமாக அருகில் இருந்த குடும்பத்தவர்களோடு தேவிபுரம்வரை சென்றோம்.

எனது மகளிற்கு தகப்பன்தான் எப்போதும் வேண்டும்,அப்பா எங்க அப்பா எங்க அப்பாவை வரச்சொல்லுங்கோ அம்மா என்று கூறியபடி இருப்பாள்,தேவிபுரம்வரை இடம்பெயர்ந்து போனதோடு நான் எனதுபோராட்ட பணிகளை நிறுத்தி பிள்ளைகளோடு நின்றுகொண்டேன்.

ஒருநாள் பயங்கரமான செல்லடி தொடங்கியது. இராணுவம் செல்மழை பொழிந்தான்,ஒரு சிறிய பங்கரில் பலபேர் ஓடிப்போய் இருந்தோம்,மூச்சுவிடக்கூட முடியாதநிலை,சனநெரிசலில் மூச்சு நின்றுவிடுவதுபோல் இருந்தது.

செல்அடித்து ஓய்ந்தபின் மரண ஓலம் வானைத்தொட்டுநின்றது.பலநூறு மக்கள் செல்தாக்குதலுக்கு இரையாகிப்போனார்கள்,பலநூறுபேர் காயமடைந்தார்கள்.எங்கும் அவலக்குரல்கள்,இறந்தவர்களை கண்ட இடமெல்லாம் கிடங்குவெட்டி அதற்குள் போட்டு மூடிவிட்டு அடுத்த இடத்திற்கு நகர்ந்தார்கள் மக்கள்,
இனிமேல் பங்கர் இல்லாமல் இருக்கேலாது என்று தெரிந்து, என் கணவனிடம் சொன்னேன்,எங்கு போனாலும் எனக்கும் பிள்ளைகளிற்கும் பங்கரை வெட்டித்தாங்கோ என்று.

அதேபோல் என் கணவனும் நான் எங்கு இடம்பெயர்ந்து சென்றாலும் பெரிய எண்ணை பரல்களை அடுக்கியும் பனம் குற்றிகளை போட்டும் தான் தனிய நின்று பங்கர் அமைத்து தருவார்,

இராணுவம் முன்னோக்கி வந்து கொண்டிருந்தபடியால் வேறிடத்தில் நின்ற எனது கணவனிற்கு நான் முள்ளிவாய்க்கால் போகப்போகிறேன் ஒருக்கா வந்திட்டு போங்கோ என்று தொலைத்தொடர்பு கருவியூடாக அறிவித்தேன்,

ஓடிவந்தவர் எமக்கு முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக்கு பின்னால ஒரு பனிச்ச மரத்தடிக்கு கீழ தான் தனிய நின்று பங்கர் அடிச்சு தந்திட்டு போனவர்,அதுக்குப்பிறகு ஒரு பத்துநாளாக எங்களைப்பார்க்க வரவும் இல்லை,ஒழுங்கான சாப்பாடில்லை.பிள்ளைகள் இரண்டும் பசியில அம்மா பசிக்குது சாப்பாடுதாங்கோ பசிக்குது என்று கேட்டு அழுதபடி இருந்தார்கள்,

நான் தனிமரமாக நின்றேன்,என்ர பிள்ளைகளிற்கு சாப்பிடக் கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை,எல்லாமக்களின் நிலையும் இதேதான்,யாரிடம் போய்க்கேட்க முடியும் பசிக்குது என்று.? மகள் பசியில அழத்தொடங்கினாள்.மகனிற்கு 7-வயதும்,மகளிற்கு 5வயதும்,எந்தத்தாய்தான் பிள்ளைகள் அழுவதை பார்த்துக்கொண்டிருப்பாள்.

ஒரு 50மீற்றர் தூரத்தில் நிறுவனங்களால் கஞ்சி காய்ச்சி கொடுக்கும் இடம் இருந்தது,பிள்ளைகள் இருவரையும் பங்கரிற்குள் விட்டுவிட்டு ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டுபோய் கஞ்சிவாங்க லைனில் நின்றன், அப்போதுதான் கஞ்சி காய்ச்ச தொடங்கியிருந்தார்கள்.எல்லோரும் கால்கடுகடுக்க நடுவெய்யிலுக்க நின்றம். இடைக்கிடை எல்லா இடமும் செல்லுகள் வந்து விழுந்தபடி இருந்தது,அந்த இடத்திலயே படுத்தெழும்பி நின்றம்,சரியான சனம்,இரண்டு மணித்தியாலம் பிடிச்சுது கஞ்சி வாங்குவதற்கு,வாங்கிய கஞ்சியை கொண்டுவந்து பிள்ளைகளிற்கும் கொடுத்து நானும் கொஞ்சம் குடிச்சன்.சரியான சாப்பாடில்லாதத்தில காதும் அடைச்சுப்போய் இருந்தது,

நீண்ட நேரம் வெய்யிலுக்குள்ளும் நிண்டது, ஏலாம இருந்தபடியால் பங்கருக்க அப்படியே நித்திரையாபோனன்,யாரோ வான்மதி என்று கூப்பிடும் சத்தம் கேட்டது.
கண்விழித்துப் பார்த்தேன்,என் கணவன் நிற்பது தெரிந்தது,அவரின் முகம் என்றும் இல்லாதபோல வாடி இருப்பதை பார்த்தேன்.

அவரோட நின்ற நெருக்கமான போராளிகள் யாரும் வீரச்சாவோ தெரியாதென்று நினைத்துக்கொண்டு ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.
எதுவும் கூறாமல் இருந்தார்,மீண்டும் கேட்டு வற்புறுத்தினேன்,பிள்ளைகள் சாப்பிட்டார்களா..?நீங்கள் சாப்பிட்டீங்களா என்று அன்போடு கேட்டார்,ஓம் சாப்பிட்டம்,நீங்கள் சாப்பிட்டீங்களா என்றேன்..?

அந்த பையில கொஞ்ச அரிசியும் பருப்பும் இருக்கு,அதை எடுத்து பிள்ளைகளிற்கு சமைத்து கொடுங்கோ.கஞ்சி வாங்க லைனில நிற்கிறீங்களாம் என்று என்னோட நின்ற மணிமாறன் கண்டிட்டுவந்து இந்த அரிசியையும் பருப்பையும் தந்தவன்,

அண்ணி கஞ்சி வாங்க லைனில நிற்கிறா உடன ஒருக்கா போங்கோ அண்ண என்டவன்,அதுதான் வந்தனான் என்றார் தலையை நிமிர்த்தாமல்,அவர் வேதனைப்படுகிறார் என்பது புரிந்தது.

நாளைக்கு சோறும் காய்ச்சி பருப்பையும் சமைச்சு பிள்ளைகளுக்கு கொடுங்கோ கவனமா இருங்கோ,நான் போகோனும்,பெடியல் சாப்பிடாம நிற்கிறாங்கள் நான்போறன் என்று கூறிவிட்டு பிள்ளைகளையும் கொஞ்சிப்போட்டு பங்கருக்க கவனமாக இருங்கோ என்றிட்டு போட்டார்,

மறுநாள் எழும்பி நேரத்தோட சோறும் காய்ச்சி,தனிய பருப்பை தண்ணில அவிச்சுப்போட்டு பிள்ளைகளிற்கு சாப்பிடக்கொடுத்திட்டு நானும் சாப்பிட்டு பிள்ளைகளை பங்கருக்க இருக்கவிட்டிட்டு பக்கத்த இருந்த கிணத்தடிக்கு குளிக்கபோனன்,

ஆமிஅடிச்ச செல் ஒன்று திடீரென்று வந்து கிட்ட விழுந்திச்சு.உடன அந்த இடத்திலயே மண்ணுக்க விழுந்து படுத்தன்,எல்லா இடமும் மல்ரிசெல் அடிக்க தொடங்கினான்,ஒரு தடவை 40-50 செல் அடிப்பான்,

மக்கள் செறிவா வாழ்ந்த இடம் எல்லாம் செல்விழத்தொடங்கியது,எனக்கு என்ர பிள்ளைகள் முக்கியம்,எனக்கு என்ன நடந்தாலும் பறவாயில்லை.அடுத்த செல் விழுந்து வெடிச்ச உடன என்ர பிள்ளைகளிட்ட ஓடோனும் என்று நினைச்சபடி படுத்திருந்தன், அதுக்கிடையில என்ர பாலனுகள் இருந்த பங்கருக்க செல்விழுந்திட்டுது,குளிக்க வரும்போதும் என்ர மூத்த மகன் சொல்லித்தான் விட்டவன் அம்மா செல்லடி தொடங்கினா உடன ஓடிவாங்கோ பங்கருக்க என்று.

என் உடம்பெல்லாம் நடுங்கத்தொடங்கியது, பிள்ளைகளுக்கு ஏதும் ஆகக்கூடாதென்று நினைத்தபடி எழும்பி ஓடினேன், செல்பீஸ்கள் சிதறியபடி இருந்தது,எதையும் பொருட்படுத்தும் மனநிலையில் நான் இல்லை,வேகமாக ஓடிப்போனேன் என் பிள்ளைகளை கூப்பிட்டபடி,நாங்கள் இருந்த பங்கள் சரிந்து கிடந்தது,

பங்கர் வாசலும் தெரியேல,ஒரே புகைமூட்டம்,என்ர உயிர் இரண்டையும் காணேல,ஒருமாதிரி பரலுகள இழுத்துபோட்டுவிட்டு உள்ளே பார்த்தேன்,பலபேர் உள்ளே கிடந்தார்கள்.செல்லடி தொடங்க எங்கட பங்கருக்க பக்கத்த இருப்பவர்கள் எல்லோரும் ஓடிவந்து இருப்பார்கள்,பங்கருக்கு மேலேயே செல் விழுந்திருந்தது,
என்மகளை கண்டுவிட்டேன், உடல் எல்லாம் இரத்தம் வழிய கிடந்தாள்,மரக்குற்றிகளை இழுத்து வெளியே தள்ளிவிட்டு என் மகளை இழுத்து எடுத்தேன்,அம்மாச்சி அம்மாச்சி நோகுது தூக்குங்கோ.என்ர அம்மா தூக்கு என்று கத்தியபடி இருந்தாள்,

உடல் முழுவதும் காயம்,அவள் இரத்தத்தில் தோய்ந்துபோய் இருந்தாள்.யாராவது ஓடிவாங்கோ என்ர பிள்ளையை காப்பாத்துங்கோ என்று கத்தியபடி அங்கும் இங்கும் ஓடித்திரிந்தேன்,செல்லடி ஓயவில்லை.பயத்தில் யாரும் உதவிக்கு வரேல,என்ர மகன் என்ன ஆனான் என்று தெரியாது,நான் கத்திய சத்தம் பல மீற்றருக்கு கேட்டிருக்கும்,யாரும் உதவிக்கு வரேல,

அங்கும் இங்கும் ஓடுவதும் திரும்பி வந்து என்ர பிள்ளைக்கு மூச்சிருங்கா என்று பார்ப்பதுமாக இருந்தேன்,பக்கத்து பங்கருக்குள் இருந்தவர்களிடம் ஓடினேன்,அவர்கள் யாரும் வெளியில் வரவில்லை.அதன்பின் அருகில் போராளிகள் இருந்த தறப்பாள் கொட்டிலுக்கு ஓடினேன்,
யாராவது ஒருவர் உதவி புரிந்தால் என் மகனையும் தூக்கிவிடுவேன்,பங்கர் வாசலில் இருக்கும் பனம் குற்றிகளை தூக்க உதவி செய்யுங்கோ என்று மன்றாடியபடி ஓடித்திரிந்தேன்,

அங்கிருந்த போராளிகளும்,பெரும் காயக்காறரும்,கண்பார்வை அற்றவர்களுமே,அக்கா நாங்கள் என்னக்கா செய்றது எங்களால ஏலாது.ஏலுமென்றால் உங்கட அவலக்குரல கேட்டிட்டு பேசாமல் இருப்பமாக்கா..?என்றார்கள்,நான் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தேன்,யாரிடம் போவது,பலர் ஏற்கனவே இடம்பெயர்ந்து முன்னக்கு சென்றவிட்டார்கள்.

ஓடிவந்து மகளை தூக்கி மடியில் வச்சு அழுதேன்.மூச்சுவருகுதா என்று அடிக்கடி இதயதுடிப்பைப் பார்த்தபடி இருந்தேன்,என் அவலக்குரலை கேட்கமுடியாது பெரும் காயங்களோடு இருந்த போராளி ஒருவன் ஊன்றுகோலோடு வந்து அக்கா வாங்கோ என்னால ஏலுமான உதவி செய்றன் என்றான், அவனைப்பார்க்கவே பாவமாக இருந்தது.அந்தபோராளியின் உதவியோடு வாசலில் இருந்த மரக்குற்றிகள் இரண்டை அகற்றினேன்,செல் விழுந்ததில் இருந்து 30 நிமிடத்தின் பின்பே மரக்குற்றிகளை அகற்றி என் மகனை தேடினேன்,

அப்போது ஒரு மூன்று (3 )வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் உடல் முழுவதும் இரத்தத்தோடு வெளியே ஓடிவந்தான்.வந்தவன் என் சட்டையை பிடித்தபடி அம்மா நெருப்பு சுட்டுப்போட்டுது தூக்கு தூக்கு என்று கத்தினான்,என்னைத் தூக்கு அம்மா தூக்கு என்று என் கையைப் பிடித்து அழுதான்.

எனக்கு அந்தச் சிறுவனை தூக்குவதா என்ர மகனை தேடுவதா..?என்ற மனநிலை.பலர் அந்த பங்கருக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்கள்,அதற்குள் காயக்காறரை ஏற்றும் வாகனம் வந்துவிட்டது, பலர் வந்து மரக்குற்றிகளை தூக்கி இறந்த உடல்களை வெளியே எடுத்தார்கள்,ஒரு 30 உடல்கள் பங்கருக்குள் கிடந்தது,சிலர் காயங்களோடும் கிடந்தார்கள்,

என் மகளை காயங்களோடு முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு ஏற்றினார்கள்,மகனின் உடலை பார்க்க துடித்தேன்.என்ர பிள்ளைக்கு காயம் எதுவும் இருக்ககூடாது என்று உள்ளநாட்டு தெய்வம் எல்லாத்துக்கும் நேர்த்தி வச்சன், ஆனால் தூங்கி பார்த்தவார்கள் இறந்த உடல்களோடே என் மகனின் உடலையும் வாகனத்துக்குள் போட்டார்கள்,ஓடிச்சென்று பார்த்தேன்,தலைப்பகுதி நசிந்தபடி இரத்தம் பிடரிபக்கத்தால் வழிந்தபடி இருந்தது.என்ர பிள்ளை என்னை விட்டிட்டு போட்டான் என்று கத்திஅழுதேன்,

என்ர இரண்டு குஞ்சுகளையும் பறிகொடுத்திட்டனே கடவுளே உனக்கு கண் இல்லையா..?இனிநான் உயிரோட இருந்துதான் என்னத்துக்கு, வாய்விட்டு அழுதேன்.என் கத்தல் சத்தம்தான் அந்த பகுதி எங்கும் கேட்டது. என் சட்டையை பிடித்தபடி நின்ற சிறுவன் என்னைவிடவில்லை.அவன் குடும்பத்தவர்கள் அனைவரும் பங்கருக்குள் இறந்து விட்டார்கள்போல்,அவனை யாரும் தேடவும் இல்லை.

என் பிள்ளைகளை பார்க்கவா அந்த சிறுவனை பார்க்கவா.?சிறுவனையும் தூக்கிக்கொண்டு ரக்ரர்பெட்டிக்க இருந்து முள்ளிவாய்க்கால் மருத்தவமனை போனேன்,
எப்படியாவது என்ர இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றி தாங்கோ டொக்டர்,என்ர கணவன் பிள்ளைகளை கவனமா இருக்கசொல்லி எங்க போனாலும் பங்கர் வெட்டி தாறவர்,என்ர கணவனிற்கு நான் என்ன பதில் சொல்லுவன்.?

கடவுளே என்ர பாலனுகள் இரண்டையும் காப்பாற்றித்தா என்று அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தேன்.கண்ணாடிபக்கத்தால எட்டிப்பார்த்தேன் என் மகளிற்கு சேலைன் ஏறுவது தெரிந்தது.என்ர கடவுளே என்ர பிள்ளைகளை காப்பாத்து என்று அழுதபடி உள்ளே ஓடினேன்,போராளி மருத்துவர்கள் உள்ளே என்னை விடவில்லை,
அதற்குள் தகவல் அறிந்து என் கணவனும் வந்துவிட்டார்.என் கணவனிடம் ஓடிச்சென்று கால்களை பிடித்து அழுதேன்,என் பிள்ளைகளை காப்பாற்றேலாத பாவியா போனன். என்னை மன்னிச்சிடுங்கோ என்று அழுது புலம்பினேன்.என் கணவர் என்னைத் தேற்றினார்,

உள்ளே சென்றுவிட்டு வந்த என் கணவன் சோகமாக இருந்தார்,ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று ஊகித்தேன்,மகனிற்கு என்ன நடந்தது,தம்பிக்கு சுகமா..?உயிருக்கு ஒன்றும் இல்லைத்தானே என்றேன்,எதுவும் கூறாது நிலத்தை பார்த்தபடி இருந்தார்.என்ர பிள்ளைக்கு என்ன நடந்ததென்று சொல்லுங்கோ என்று அழுதேன், தம்பி எங்களைவிட்டிட்டு போட்டான் என்று கூறினார், இல்லை என்ர பிள்ளை சாகேல,நான் குளிக்கபோகவும் தம்பி சொல்லித்தான் விட்டவன் அம்மா செல்வந்தால் உடன பங்கருக்க ஓடிவாங்கோ என்று.அம்மாக்கு எதுவும் நடந்திடக்கூடாதென்று என்ரபிள்ள துடிச்சது,என்ர பிள்ளைக்கு ஒன்றும் நடந்திருக்காது,திரும்பப்போய் ஒருக்கா வடிவா பார்த்திட்டுவாங்கோ என்று துரத்திவிட்டேன்,

என்ர பிள்ளையை இழந்திட்டன்,என் மூத்த ஆண்பிளைப்பிள்ளை என்னை விட்டிட்டு போட்டான்,நான் இனி அவனை இந்த ஜென்மத்தில் பார்க்கமுடியாதே..?
என் கணவனில்தான் கோபம் வந்தது,நீங்கள் நேற்று வரச்சொல்லி கோல் எடுக்கேக்க வந்திருந்தால் நாங்கள் வட்டுவாகல் போயிருப்பம்,என்ர பிள்ளை தப்பி இருப்பான்,எல்லாம் உங்களாலதான்.

உங்களுக்கு கடமைதானே முக்கியம்.எங்கள வட்டுவாகலில கொண்ட விட்டிருந்தால் என்ர பிள்ளை தப்பியிருக்கும்,நீங்கள் என்ர பிள்ளையின்ர உடலைத்தாக்க வேண்டாம்,நீங்கள் உங்கட கடமையை பார்த்துக்கொண்டு போங்கோ,என்ர பிள்ளை செத்ததுபோல நானும் செல்லடிக்க நின்று சாகிறன் என்று அழுதேன்,
என் கணவர் என்னை தேற்றினார்,என்னால் எப்படி ஆறுதல் அடையமுடியும்..?அதற்குள் மறுதடவையும் செல்லடி தொடங்கியது,

சேலைன் ஏறிய படியே நான் மகளைத்தூக்கிக்கொண்டு நடையாக வட்டுவாகலுக்கு கொண்டு சென்றேன் ,என் கணவர் என் மகனின் உடலை தூக்கிக்கொண்டு வந்தார்.
என் பின்னாலே என்சட்டையை பிடிச்சபடியே பயம் அப்பியமுகத்தோடு அந்த சிறுவனும் வந்தான்.பெற்றோரை இழந்து காயத்தில் நிற்பவனை எப்படி தனியே விட்டிட்டுவர முடியும்.? அவனையும் கூட்டிக்கொண்டு வட்டுவாகலுக்கு போனோம்,

எம்மை ஒரு றோட்டுகரை மரத்தடியில் இருக்கவிட்டிட்டு அருகில் இருந்தவர்களிடம் மண்வெட்டி வாங்கி கிடங்குவெட்டி ஒரு ஆலமரத்துக்குகீழ மகனை தாட்டார் என்கணவர்.

மகளின் உடல் நிலையும் மோசமாகவே இருந்தது,சிறுவனுக்கும் சிறுசிறு காயங்கள்,என் கணவரே அவனிற்கு காயத்திற்கு துணிவைத்துகட்டினார்.அவனிடம் நாங்கள் எதுவும் கேட்கவில்லை,என்னத்தை கேட்பது..?

அவன் அம்மா அம்மா நோகுது நெருப்பு சுட்டுப்போட்டுது நோகுதென்று மட்டுமே கூறியபடி இருந்தான்,பீஸ்பட்டது பிள்ளைக்கு நெருப்புசுட்டதுபோல இருந்திருக்கு என்று ஊகித்தோம்,

என் கணவர் ஒரு நாள் எம்மோடு நின்றார்,மறுநாள் கூறினார் பெடியல் தனிய பாவங்கள் நல்ல சாப்பாடும் இல்லாம கஸ்ரபடுறாங்கள். இந்தநேரத்தில நான் உங்களோட நிற்கிறது சரியில்ல,நான் போறன் இரண்டு பேரையும் பாருங்கோ,பிள்ளை கவனம்,நான் போட்டுவாறன் என்றார்.எனக்கு என் கணவனை அனுப்புவது விருப்பம் இல்லை. அழுதேன் எங்களோடு நில்லுங்கள் எழில் உங்களைதான் தேடுவாள் என்றேன்.

ஆமிகிட்டவந்தால் சனங்கள் ஆமிக்க போகேக்க சனங்களோட சனமா நீங்களும் போங்கோ,என்னைப் பார்த்துக்கொண்டு நிற்கவேண்டாம்.நான் பார்த்துவருவன் என்றிட்டு என்னைப் பார்த்தார்,

அந்த பார்வையில் ஓராயிரம் ஏக்கங்கள் தெரிந்தது….

என்னை நம்பி வந்தவளை நாட்டின் கடமைக்காக நடுத்தெருவில் விட்டிட்டு போறன் என்றுதான் வேதனைப்படுறார் என்று புரிந்தது,ஆனால் எதுவும் செய்யேலாத நிலை.நீயும் போராளி என்ர நிலையை புரிஞ்சுகொள்ளுவாய் என்று நம்புறன் என்டார்,உங்கட கடமையாலதான் என்ர பிள்ளையை இழந்தன்,இனியும் என்ன இருக்கு……நீங்கள் போங்கோ,கவனமா இருங்கோ என்றேன்.

கவலைபடிந்த முகத்தோடு மகளை முத்தமிட்டவர் சென்றுவிட்டார்,அவர் தேசத்திற்கான கடமையைத்தேடிச் சென்றார்,நான் என் குடும்பத்தை இழந்து நின்றேன்,
இறுதிப் போரில் என் கணவனிற்கு என்ன நடந்ததென்று தெரியாமல் போனது,என் கணவனை கூட்டிவரவேண்டும் என்று 18ஆம் திகதி காலைவரை நின்றுவிட்டே வட்டுவாகல் ஊடாக இராணுவத்திடம் சரணடைந்தேன், என்மகனை போரால் இழந்தேன்,ஆனால் யுத்தம் தந்த பங்கரில் கிடைத்த மகனோடும் என்மகளோடும் வாழ்கிறேன், உயிரிழந்த என் மகனின் பெயரான கருமுகிலன் என்றபெயரையே பங்கரில் கிடைத்த மகனிற்கு வைத்தேன், மகன் சிறுவனாக என்னோடு வந்தபடியால் என்னையே அம்மா என்பான்,அவனிற்கு சிறுவயது சம்பவம் எதுவும் நினைவில் இல்லை,என் மகளும் காட்டிக்கொடுக்க மாட்டாள்.

தம்பியோடு பாசமாக இருக்கிறாள்.தேசத்தின் கடமையை நேசித்த படியால் என் மகனை தந்தை இழந்து நின்றார்,இன்று நான் இருவரையும் இழந்து வாழ்கிறேன். இன்று ஏனையோரை பார்க்கும்போது அவர்களைப்போல் இல்லாமல் நாம் நமது தேசத்தை அதிகமாக நேசித்துவிட்டோமா..?

இன்று பல துயர்களை சுமக்கிறோம், மற்றவர்களைப்போல் நாமும் சுயநலத்தோடு வாழ்ந்திருக்கலாமா..?அப்படி எம்மால் வாழமுடிந்திருக்குமா..?

இன்றுவரை கணவனைதேடி நடைப்பிணமாக அலையும் என் அவலம் எப்போது ஓயும்…? புதிது புதிதாய் கவலைகள் வந்தபடியே…மகளின் முகத்தைப் பார்க்கிறேன் எதைச்சொல்லி அவளைத் தேற்றுவேன்..?

முள்ளிவாய்க்காலில் உறவுகளை தொலைத்து அவலத்தை சுமந்து கொண்டிருப்பவர்களின் சார்பான பதிவாக…

– பிரபா அன்பு

போர் தாண்டவம் ஆடிய பூமியில் இவர்கள் வாழ்வு செழித்திட உதவிடுங்கள் | உறவுப்பாலம்

போர் தாண்டவம் ஆடிய பூமியில் நம் வாழ்வு செழித்திட உதவிடுங்கள் !!! | உறவுப்பாலம்

 

 

https://www.youtube.com/results?search_query=%23Uravuppalam

அண்ணா இருக்கும்போது திறமையாகவும் கௌரவமாகவும் வைத்திருந்தார்.

முன்னாள் போராளி

En Iname En Saname | என் இனமே என் சனமே

https://www.youtube.com/results?search_

படுத்த படுக்கையாக கிடக்கும் முன்னாள் ஜெயந்தன் படையணி போராளி!

கண் திறப்பார்களா புலம்பெயர் தமிழர்கள்?

மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம் 48 வயது என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார். இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல் என்பவரும் நடக்க முடியாது உள்ளார்.

இவரை வைத்திய சாலைக்கு கொண்டு பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் இவர் தொடர்ந்தும் படுத்த படுக்கையாக உள்ளார்.

இவருக்கு சக்கர நாற்காலி மற்றும் மலசலகூட வசதிகள் எதுவும் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றார்.

இவரது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கும் இவர் தனது குடும்பத்தையும் பிரிந்து வாழ்கிறார்.

இவரது குடும்பத்தில் இரண்டு மாவீரர்கள் களப்பலி ஆகியுள்ளனர்.. இவரது அக்காவான விஜித்தா என்பவரின் பெயரிலேயே கரவெட்டியாறு விஜித்தா தமிழ் கலவன் பாடசாலை இயங்கி வந்துள்ளது. குறித்த பாடசாலையும் ஆசிரியர் பற்றாக்குறையால் தற்போது இயங்காது உள்ளது.

மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வைத்திய உதவிகள் இன்றி படுத்த படுக்கையாக இருக்கும் திலீபனை காப்பாற்றி அவருக்கு மறுவாழ்வளிக்க முன்வருமாறு புலம்பெயர் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் அவரது தாய்

(அந்த முன்நாள் போராளியை 0094771105199 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு பேசலாம்)

நம் தாயகம் உற்பத்திகளை வாங்குவீர் வாழ்வு கொடுப்பீர் !


அண்மையில் இதை பார்க்க நேரிட்டது இது முல்லைத்தீவில் போரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களினால் தயாரிக்கப்பட்ட உற்பத்திகள்

இவை கனடாவில் ஒரு சில வர்த்த நிலையங்களில் மட்டுமே காணப்படுகின்றது. அதுவும் இறைச்சிகள் பகுதியில் காண நேரிட்டது !

தேசியம் பேசுபவர்களின் வியாபார நிலையங்களில் அது கூட இவைகள் இல்லை !

புலம் பெயர் நாடுகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தமிழர் பொருட்களும் இலங்கை இந்தியாவிலிருந்து தான் தருவிக்கப்படுகின்றன எதுவும் புலம் பெயர் நாடுகளில் தயாரிக்கப்படுவதில்லை ஆகவே சுகாதாரம் என்று பார்த்தால் எல்லாம் ஒன்று தான்

இவர்கள் எங்கு தயாரிக்கின்றார்கள் என்று தெரிகின்றது ஆனால் மற்றைய உற்பத்திகள் எங்கு எப்படித் தயாரிக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது !

 

இதை பாவிப்பவர்கள் நன்றாக இருப்பதாகவே சொல்கின்றார்கள் நீங்களும் ஒரு முறை வாங்கிப் பாருங்கள் !

நம் தாயகம் உற்பத்திகளை வாங்குவீர் வாழ்வு கொடுப்பீர்

போரால் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கு உதவி வரும் எங்கள் மக்கள் கனடா இளையோர் அமைப்பு

போரால் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கு உதவி வரும் எங்கள் மக்கள் கனடா இளையோர் அமைப்பு

மேலதிக விபரங்கள் முகநூலில்

https://www.facebook.com

 

இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிர்காக்க விரைந்து உதவுங்கள் !

இருதய நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குடும்பஸ்தரின் உயிர்காக்க உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கந்தசாமி ஈஸ்வரன் (45) என்னும் 4 பிள்ளைகளின் தந்தைக்கு அவசரமாக இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

புலோப்பளை மேற்கு, பளை என்னும் முகவரியில் வசித்துவரும் கந்தசாமி ஈஸ்வரன்(45) என்பவர் இருதய நோயினால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவரது நோய் தீவிரமடைந்துள்ளமையால் இருதய சத்திர சிகிச்சை அவசரமாகச் செய்ய வேண்டும் என மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது.

இவருக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு 1000000 (பத்து இலட்சம்) ரூபா பணம் தேவைப்படுவதாக இவரது மனைவியாராகிய ஈஸ்வரன் அற்புதராணி என்பவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது குடும்பம் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தால் பெரிதும் பாதிக்கபட்ட நிலையில் இவரது உடலிலும் எறிகணை வீச்சினால் ஏற்பட்ட காயங்கள் காணப்படுகின்றன.

அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த மேற்படி குடும்பஸ்தர் கடந்த மூன்று மாதங்களாக வேலைக்குச் செல்லாது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதனால் இவரது குடும்பம் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இவரது குடும்பத்தால் கொழும்பு மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான 1000000 (பத்து இலட்சம்) ரூபா பணத்தினைப் பெறமுடியாத நிலை காணப்படுவதாகவும் தனது கணவனின் இருதய சத்திர சிகிச்சைக்கான பணத்தினை வழங்கி உதவுமாறும் கருணை உள்ளம் கொண்ட பரோபகாரிகளிடம் பணிவன்புடன் அவரது மனைவி உதவியை எதிர்பார்த்து உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

கருணை உள்ளம் கொண்டவர்களே உயிர்காக்க உதவுங்கள்.

தங்களது உதவிகளை வழங்குவதற்குத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் (ஈ.அற்புதராணி) – +94779290816 மற்றும் வங்கிக் கணக்கு இலக்கம் – 80742451 (இலங்கை வங்கி) என்பவற்றினூடாகத் தொடர்புகொண்டு வழங்க முடியும்.

மேலதிக தகவல்களை, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது தொலைபேசி இல.+94776913244 உடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.

மேற்படி குடும்பஸ்தரது வைத்தியசாலை சான்றிதழ், கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

மூத்த பெண்மணிக்கு கை கொடுங்கள் !

கண்டி வீதியில் (A9), மூன்றுமுறிப்பு பிள்ளையார் கோயில் மணிக்கோபுரத்தடியில் “இரத்தினம்” என்ற பெயருடன் ஒரு வயதில் மூத்த பெண்மணி தினமும் காலை 8 மணி முதல் 3அல்லது4 shopping bag நிறைய பூக்களுடன் அமைதியாய் உட்காந்திருப்பார். ஒரு பை 50/= . அப் பைகளை விற்பதற்காக ஏறத்தாழ 11 மணிவரை அவ்விடத்திலேயே காலை உணவின்றி அமர்ந்திருப்பார். பெற்றோரை இழந்த தனது பேரப்பிள்ளைகளை வளர்ப்பதற்குத் தன்னால் இயன்றதை பிச்சை எடுக்காது செய்து வருகிறார்.

தினமும் அவ்வாலயத்தில் தரித்து நின்று வணங்கி செல்லும் ஆயிரக்கணக்கானோர் இவரது 50/= உழைப்பிற்கு மரியாதை கொடுத்து அப்பைகளில் ஒன்றை வாங்கி உங்கள் வாகனத்தில் வைக்கலாம் அல்லது பூக்களை கருவறையருகில் வைத்துவிட்டு சென்றால் மத்தியான பூசைக்கு குருக்கள் அதை பாவிப்பார். இந்த 50/= அவரது வாழ்க்கைக்கு இன்றியமையாதது. என்னால் தினமும் ஒரு பை வாங்கமுடியும். ஆனால் நான் விடுமுறை எடுக்கும்போதும் வேறு பாதையால் செல்லவேண்டிய தேவை இருக்கும்போதும் அவர் நிலமையை யோசிக்கிறேன். அருகிலேயே உள்ள கடையில் பூக்கள் மாலைகள் உண்டு. ஆனால் 4 பை பூக்களுக்கு உதவுவதால் இவர் போட்டியாக வியாபாரத்தை பெருக்கப் போவதில்லை. கடை போடப்போவதுமில்லை , அதற்கு அவரது வயதும் உடல்நிலையும் ஒத்துழைக்காது. நீங்கள் அதில் ஒரு பையை வாங்கி உதவுவதால் அன்றைய காலை உணவை அவர் சற்று முன்னதாக உண்ண முடியும்.

அவ்வளவுதான்.!
கை கொடுங்கள் தோழர்களே!

வரணி பிரான்ஸ் மக்கள் ஒன்றியம்

Up ↑