Search

Eelamaravar

Eelamaravar

Category

eelam poetry

சாவும் வாழ்வும் விடுதலைக்கானால் ! தீயும் கூடக் குளிர்கிறது.!

 

நெஞ்சினிலே பஞ்சுவைத்து
எண்ணையிட்ட நெருப்பு
நில்லெனவே சொல்வதற்கு
யாருமில்லை எமக்கு
சாகவென்று தேதிசொல்லிப்
போகும்புயல் கறுப்பு
நாளைபகை மீதினிலே
கேட்குமெங்கள் சிரிப்பு

புதிய திசையொன்றின் புலர்வு தினம்.
ஆதிக்கக் கதிரைகள்
அச்சத்தில் உறையும் நாள்.

நெல்லியடியில் மில்லர் தொடக்கி வைத்த
சொல்லியடிக்கும் திருநாள்.
“கரும்புலிகள்”
மேகத்தில் முடியும் ஆழத்தில் அடியும் கொண்டு
தாகத்தில் திரியும் கோபங்கள்.

தேகத்தில் தீமூட்டும் போதும்
சோகத்தின் திரைமூடாத திருமுகங்கள்.
ஆழத்திற் கிடக்கும் இவரின் அனல்வேர்களை
எந்த ஆய்வாளர்களாலும்
அளவெடுக்க முடிவதில்லை.
அழுதழுது வரும் வார்த்தைகளாற் கூட
இவர்களை எழுதிவிட முடியாது.

கரும்புலிகளைப் பாடும் போதுதான்
கவிஞர்கள் தோற்றுப்போகின்றனர்.
வெடித்த புயல்களுக்கு எழுதிய கவிதைகளை
இருக்கும் கரும்புலிகள் படிக்கும்போதுதான்
எழுத்தின் இயலாமை தெரியவருகிறது.

தூரிகை எடுத்து ஓவியம் தீட்டலாம்
வர்ணங்கள் தோற்றும்போகும் இறுதியில்.

முலைகொடுத்த தாயர்கள் கூட
மலைகளை நிமிர்ந்து பார்க்கலாமே தவிர
அவர் உள்ளக்கிடக்கையை
உணர்ந்துகொள்ள முடியாது.

சாவொன்றின் முன்னேதான்
அதிகமானோர் சகலதையும் இழக்கின்றனர்.
விஞ்ஞானத்தால் சாவுக்குத் தேதிவைக்க
முடியுமெனில்
அச்சத்தில் அந்தரித்துப் போகும் உலகு.
இந்தப்புயல்கள் மட்டும் தேதிவைத்த பின்னர்தான்
சந்தோசத்தை தலையில் வைத்துக்
கூத்தாடுகின்றனர்.
நகம் வெட்டும்போது தசை கிள்ளுப்பட்டாலே
வேர்த்து விறுவிறுத்துப்போகும் இனத்தில்

இந்த உற்பவங்கள் எப்படி சாத்தியமானது?

விதி வழியேதான்
சாவுவருமென நம்பும் சமூகத்தில்
இந்தப் புதுவிதிகள் பிறப்பெடுத்தது எப்படி?

வீதியிற் காணும்போது அமுக்கமாகவும்
வீட்டுக்கு வரும்போதில் வெளிச்சமாகவும்
குதித்துக்கொள்கின்றன இந்தக்
குளிரோடைகள்.

நாளை இவர்களா வெடிக்கப்போகின்றனர்?

நம்ப முடியாமல் இருக்கும் சிலவேளைகளில்.
சத்திரசிகிச்சை என்றாலே
நாங்கள் பாதி செத்துவிடுகிறோம்.
சாகப்போகும் நேரத்திலும்
இவர்களால் எப்படித் தலைவார முடிகிறது?

எல்லா உயிர்களையும் இருந்து பார்க்கும்
இயமன்
இவர்களின் உயிரைமட்டும் எழுந்து
பார்ப்பானாம்.

கரும்புலிகளின் பிறப்பின் சூத்திரம்
உயர்மலையொன்றின் உச்சியிலிருக்கிறது.
இவர்களின் நதிமூலம்
தலைவனின் நம்பிக்கைப் புள்ளியில்
ஊற்றெடுக்கிறது.

வழி தவறாத பயணியென நம்பியே
கரும்புலிகள் கந்தக வெடியாகின்றனர்.
இவர்கள் வரலாறு திருப்பும் பொழுதுகளில்
பூப்பூத்துக்கொள்கின்றன வாசல் மரங்கள்.

மிதித்துச்சென்ற முட்செடிகள் கூட
போய் வருவோருக்குப் புன்னகை
எறிகின்றன.
பயணம் சொல்லிப்போன காற்தடங்களை
பவுத்திரப்படுத்திக் கொள்கிறது காற்று.
தரையில்
கடலிலும்
மறைவிலும் அதிரும்வெடி ஒவ்வொன்றும்
காற்றில் கலந்து கரைவதில்லை
உளிவரும் திசையில் வரையப்படுகின்றன.

அறிந்தழும் தாயரின் குரல்கூட
அடித்தலறி ஒப்பாரி வைப்பதில்லை
மௌனமாக மாரடித்துக்கொள்கிறது.
கரும்புலிகள் எங்கள் காவற்தெய்வமென
நாளை வரும் இளைய உருத்தாளர்
பூட்டனுக்கும், பெத்தாச்சிக்கும்
கோயிலெழுப்புவர்.
வெடியம்மன் கோயிலென விளக்கேற்றுவர்.
பேச்சியம்மனும்

பிடாரியம்மனும் இன்றிருப்பதுபோல
வெடியம்மன் நாளை விளங்குவாள்.
வாழ்வின் அர்த்தம் புரியாமல்
நாங்கள் வெறும்வெளியில் வழக்காடுகிறோம்.
எவரையும் நிகழ்காலம் தீர்மானிப்பதில்லை
இல்லாத காலத்தில் எதிர்காலமே
தீர்மானிக்கிறது.

வாழும்போதில் வாழ்வதுமட்டும் வாழ்வல்ல
சாவின் பின்னர் வாழ்வதுதான் வாழ்வாகிறது.
முன்னோர்கள் இதைத்தான்
சொர்க்கமெனச் சொன்னார்கள்.

கரும்புலிகள் வானத்திலில்லை
பூமியிலேயே வாழ்வார்கள்.
சாவுடன் முடியும் சரித்திரமல்ல இவர்கள்
தீயுடன் எரியும் ஜீவன்களல்ல இவர்கள்.
வரலாற்றில் வாழ்தலென்பது
செய்யும் தியாகத்தால் வருவது.

சந்தனமாய்க் கரையும் வாழ்விலிருந்து
விரிவது.
கரும்புலிகளின் வாழ்வு கோடிதவம்
பூர்வ புண்ணிய வரம்.

ஆணென்றும் பெண்ணென்றும் பேதமின்றி
இந்த அனற்குஞ்சுகளின் பிறப்புக்கு
உலகம் உருகாலம் தலைசாய்க்கும்
ஈழத்தமிழருக்கான விடுதலையை
எவர் தரமறுத்தாலும்
அவரைக் கரும்புலிகளின் கறுப்பு அச்சமூட்டும்.

கறுப்பே அழகு
கறுப்பே வலிமை
கறுப்பே வர்ணங்களின் கவிதை
கறுப்புத்தான் உலகின் ஆதிநிறம்.
அதனாற்தான் ஆதிமனிதனான தமிழனும்
கறுப்பாய் விளங்குகிறான்.
கரும்புலிகள் காலமெழுதிகள்
எழுதும் காலத்தின் எல்லைக்கற்கள்.

எல்லையைக் கடந்து எதிரிகள் வராமல்
இந்த இடியேறிகள் காவலிருக்கின்றனர்.
கரும்புலி போகும் திசையினையெந்த
மனிதரும் தெரிவதில்லை – அந்தக்
கடவுளென்றாலும் இவர்களின் வேரை
முழுவதும் அறிவதில்லை
அழகிய கனவும் மெழுகிய அழகும்
இவரிடம் பூப்பதில்லை – இந்த
அதிசய மனிதர் உலவிடும் பூமி
பகையிடம் தோற்பதில்லை.

கவியாக்கம் : வியாசன்

-விடுதலை புலிகள் இதழ் 136-

காற்றோடு காற்றானவர்….கரும்புலிகள் !

உயிராயுதம்என்றொன்று
உலகினில்உண்டென்று
உயிர்விலைகொடுத்த
உத்தமர்கள்கரும்புலிகள்…..

உருகிக்கொண்டிருந்தஈழத்துக்காய்
கருகிப்போனவர்கள்கரும்புலிகள்
தண்ணிலவும்செங்கதிரும்என்றும்
தன்னகத்தேகொண்டவர்கள்கரும்புலிகள்…….

உக்கிரயுத்தவடிவை
உலகிற்குகாட்டியமறவர்
மரணத்தின்தேதிதன்னை
மகிழ்வோடுதமதாக்கியதீரர்கரும்புலிகள்………

தன்னினத்தின்காப்புக்கவசமாய்
தமை ஈகம்செய்து
நூற்றாண்டுகடந்தும்என்றும்
மாற்றானுக்குபுத்திபுகட்டுபவர்கரும்புலிகள்…….

எத்தடைஎவ்வழிவரினும்
அத்தடைஅவ்வழிநீக்கி
சாவுக்கேபயம்காட்டிய
சரித்திரநாயகர்கள்கரும்புலிகள்………

கண்கள்வலிக்கவழியனுப்பியவரிடம்
கலங்காநெஞ்சோடுவிடைபெற்றவர்
ஆறடிமண்ணில்அடங்கா
அனல்பூத்தநெருப்பானவர்கரும்புலிகள்……..

காற்றோடுகலந்தவர்ஈகம்
நேற்றுவரைவிஞ்சஒருவரில்லை
புதியதொருநாளில்நாளை
புத்துயிர்பெற்றுமீண்டும்……
விதைக்குள்முளையாய்இருந்து
விருட்சமாய்விழுதுகள்தாங்கி
அவன்நிகர்கொண்டவர்தாமாய்
அவனியில்அவதரிப்பார்எமக்காய்…….

நன்றி

திருமதி சுதர்சினி நேசதுரை.
—-

உயிர்வாழும் ஈகங்கள்….

இருவிழியில் தமிழீழக் கனவேந்தி நடந்தவர்கள்
கருவேங்கையாகும் துணிவோடு நிமிர்ந்தவர்கள்
கடினமான தேர்வு யாவும் மகிழ்வுடனே முடித்து
காத்திருப்பர் சாகும் தேதிக்காய் நாட்குறித்து
கரிகாலன் விழியசைக்கும் திசை நோக்கி வெடியோடு
காடு மலை கடலெனினும் இவர் பயணம் தொடர்ந்திடும்

பொங்கும் அலை நடுவே கடற்கலங்கள் தகர்த்து
உப்புநீரில் உதிர்ந்து போன உத்தமர்கள் பலருண்டு
சீறிவரும் சிங்களத்தின் படை நடுவே உட்புகுந்து
பகையழித்த நிறைவோடு தரைக்கரும்புலிகளாகிடுவர்
வான்வழியில் ஏறி வந்து எம்மினத்தை கொன்றவரை
தேடிப்போய் கதை முடித்தார் வான் கரும்புலிகளாகி

உயிர் வாழும் வரை வெளியில் தெரியாத அற்புதங்கள்
விடிகாலைப் புலர்வோடு வெளியில் வரும் வதனங்கள்
வெற்றிச்செய்திகளை மண்ணுக்காய்த் தந்துவிட்டு
சிரித்த முகங்களோடு உருவப்படமாகிடுவார்
அன்றலர்ந்த மலர்களெல்லாம் மாலைகளாய் கோர்த்து
உங்களுக்காய்க் காத்திருப்பர் தேசத்து மக்களெல்லாம்
வடியும் கண்ணீரால் விடைகள் தந்திடவே
நடுகல் நாயகராய் உறங்கிடுவீர் பணிமுடித்து
மண்ணில் புதைந்திருக்கும் வேரின் ஆழம்போல்
வெளியில் தெரியாது இவர் உணர்வுகளின் தாகம்

போர்மேகம் கருக்கொண்டு எம்மினத்தைச் சூழ்ந்த போது
பெருந்தலைவர் உயிர்காக்க தம்முடலில் வெடிபொருத்தி
இறுதிக்கணம்வரையும் மாறாக்கொள்கையுடன்
தமிழீழமுரைத்து உயிர்க்கொடையீந்தார் கரும்புலிகள்
முகமும் முகவரியும் வெளிவரா உயிராயுதங்களாய்
பெற்றவர்கள் உற்றவர்கள் தேடலோடு காத்திருக்க
இன்னுமின்னும் எத்தனையோ அநாமதேயக்கரும்புலிகள்
அறிந்திடாத, அழிந்திடாத வரலாறாய் வாழ்ந்திடுவர் ….…!

விஜிதா ராஜ்குமார்

—-

காவியத்தில் உறைந்தவர்கள்…

கருமை என்பது நிறம் அல்ல
காருண்யம் நிறை மனதாம்
உரிமை என்பதை தேசமதில்
உணர்வோடு வைத்த உத்தமர்
உலகாளும் வல்லமை உளத்தில்
உயர்வாகிய நெறி கொடையில்
வரலாறு வியக்கும் நடையில்
வாழ்ந்த மாதவர் சோதரர் ஆனவர்…

கருமை என்பது வானத்தில்
கலைந்து போகும் மேகத்தில்
மழையாகிப் பொழியும் வீரத்தில்
மண் மீது பதித்த பாசத்தில்
நீறு பூத்த நெருப்பாகி எங்கும்
நீக்கமற நிறைந்த வித்தகர்
காற்றோடும் கனலோடும் கலந்து
கண்ணீரில் உறைந்திட்ட புனிதர்…

நாளும் கோளும் குறித்த பின்னர்
நீளும் அந்தப் பொழுதுக்காய்
நீக்கப் போகும் உயிர் காத்து
நிம்மதியுறும் நேசர் இவராம்
நாளும் பொழுதும் தேசத்தாய்
நலனுக்காய் நலம் வாழ்ந்த தூயவர்
நீரோடு கரைந்து நிலம் மீது தவழ்ந்து
அலையோடு எழுந்தாடி சாதித்தவர்…

ஆண்டுகள் முப்பத்தி யிரண்டு
மாண்டு போனதென்ன மில்லரே
நின் நீண்ட கனவெல்லாம் நம்மோடு
நித்தம் கதை பேசி கடப்பதேன்
வித்தாகி விழுதாகி முளைத்திட
வித்துடலும் இல்லாது போனதென்ன
வெடியோடு உறவாடி வெந்தீரே
வெல்லும் ஈழம் மீட்டிடவே நீவிர்…

வானத்து நிலவும் வாசல் வரும்
வாகையர் வீரத்தை சாற்றி நிற்கும்
பெண்ணாகி ஆணாகி வீரமொடு
எண்ணற்று போனவரே எம்மவரே
கண்ணாகி தேசத்தின் ஒளிகாணவே
காலத்தால் அழியாத புகழ் சூடி
கலைந்து போகா இலட்சியம் ஏந்திய
காவியரே கரும்புலி யானவரே …

பெண்மையின் உள்ளம் மென்மையாம்
மேன்மைத் தமிழுக்காய் வன்மையாய்
தொன்மை வீரம் உமக்குள் சுரக்கும்
அன்னை வடிவே ஆதியாகி சூழுமிந்த
முன்னை விதி மாற்ற குழலேந்தி
குண்டுகளாய் வெடித்தீரே கோதையரே
கண்டோம் கரைந்தோம் மகளிர் படையில்
கொட்டிய தீப்பொறிகளும் பொசுக்காத
கோபக்கனலே நீவிர் அன்றோ இன்னும்
தாபம் கொண்ட தேசத் தாய்க்கு
சமர்ப்பணமானவரே உறுதிஉரைத்தோம்
உம் தியாகங்கள் வீணாவதில்லை
விடியல் ஒன்று நம் சொந்தம் ஆகும்…

யூலை ஐந்தில் உமக்காய் சுடர் ஏந்தி
சுவாலை என்றே எமக்குள் அசையும்
சவாலை ஏற்று வழி தொடர்வோம்
உயிர்க்கும் ஒரு நாள் எங்கள் தேசம்
உங்கள் பெயரை நிதமும் உரைக்கும்
கல்லறையும் வேண்டா கனவான்களே
நெஞ்சறை புதைத்தோம் உங்கள் கனவை
அஞ்சுதல் அழித்த அரங்கப் பெருமானாய்
எஞ்சிய ஒற்றைத் தமிழன் உள்ள வரை
ஒன்றான இலக்கு வென்றாடும் நாளை…

சிவதர்சினி ராகவன்

அப்பா … கத்திக் கத்தி அழைக்கும் என் குரல் கேட்கவில்லையா…?

என் தந்தையின் வலி சுமந்த நினைவுகள் என் வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் பொக்கிசமாகின்றது இன்று. வரிப்புலியுடையில் சீறுகின்ற புலியாகி, சிங்களப்படையோடு பொருதிய பெரும் வீரன். அப்பா! என் தாய் உங்களைப் பற்றியும், உங்களின் உணர்வுகள் பற்றியும் எனக்கூட்டிய விடயங்களின் மூலம் உங்களின் ஈழப்பற்றை நான் உணர்ந்து கொண்டேன் அப்பா. கொட்டிடும் வெடி மழைக்குள்ளே அச்சம் இன்றி பணி புரிவீர்களாம்.

எப் பணியிருப்பினும் அப்பணி முடித்து என்னை பார்க்கவென்று ஓடி வருவீர்களாம்.

“ அண்ண செல்லடிக்கிறான் காலைல போங்கோவன் “

என்று தாங்கள் மறித்தாலும்

“மகன் பாவமடா “

என்று சொல்லி விட்டு வீடு வருவீர்களாம். உங்களோடு வாழ்ந்த உங்களின் நண்பர்கள் சொல்வார்கள்.

இரவு பன்னிரண்டு என்றாலும், என் முகம் பார்த்து முத்தம் ஒன்றை தந்து தான் திரும்பி பணிக்கு செல்வீர்களாம். அம்மா அடிக்கடி சொல்லுவா.

ஒட்டிசுட்டான் பகுதியை சிங்கள எதிரிகள் கைப்பற்றிய போது, களமுனையில் இருந்து வந்து, களமுனை உடையோடே எனக்கு புதுக்குடியிருப்பில் வைத்து ஏடு தொடக்கினீர்களாம். தொடக்கி குறுகிய நேரத்தில் மீண்டும் களமுனை நோக்கி சென்று விட்டீர்களாம். ஏனப்பா? என்னையும் தமிழீழத்தையும் இரு கண்களாகவா வைத்திருந்தீர்கள். அதனால் தான் இரண்டையும் நேசித்தீர்களோ?

வலைஞர்மடம் என்ற இடத்தில் பதுங்ககழிக்குள் என் அன்னையுடன் இருந்த போது, விளையாட்டு விமானம் ஒன்றை பறக்க விட்டு காட்டி விட்டு,
“என் மகனும் ஒரு நாள் தமிழீழ விமானியாவான் “என்று கூறினீர்களாம்.

முள்ளிவாய்க்காலில் முட்டை கிடைப்பது என்பது அரிது. அவ்வாறு கிடைத்த ஒரு முட்டையை எங்கோ இருந்து கொண்டோடி வந்து எனக்கு ஊட்டி விட்டு, மீண்டும் களம் நோக்கி சென்றதாக அம்மா கூறினார். இப்போதும் முட்டை உண்ணும் நேரங்களில் எல்லாம் உங்களின் நினைவு தான் அப்பா.

விளையாடும் போது உங்களின் ஏற்கனவே காயப்பட்டு வலியோடு இருந்த ஒற்றைக் கண்ணில் நான் தவறுதலாக குத்திய போது, வலி தாங்காமல் துடித்தாலும், என் மகனுக்காக நான் உயிரையும் குடுப்பேன் என்றீர்களாம். இப்போ எனக்காகவா நீங்கள் காணாமல் போனீர்கள்? எங்கே நீங்கள் என்று தினம் தினம் ஏங்கும் என்னை தவிக்க விட்டு எதற்காக போனீர்கள்.?

“ விடுதலை வீரனின் இறுதி பேச்சு அவன் மூச்சு இருக்கும் வரை தான்” என்பதைப் போலவே உங்களின் பயணமும் தமிழீழம் நோக்கியே இருக்கும் என்பீர்களாம் அப்பா. எம்மினம் சுற்றி நிற்கும் சிங்கள காடையர்களால் சாம்பல் மேடானாலும், மகனை காப்பாற்று என்பீர்களாம். எப்பிடியாவது அவனைக் காப்பாற்றி வளர்த்து எங்கள் கனவுகளை ஊட்டி விடு என்று நீங்கள் சொன்னீர்களாம். அதற்காகவே உரிமையின் உணர்வுகளை ஊட்டி என் தாய் என்னை வளர்க்கின்றா.

அப்பா பத்து ஆண்டுகள் கடந்து செல்கின்றன. உங்களுடன் வாழ்ந்த இரண்டு வருடகாலம் போல மீண்டும் உங்களின் வசந்தம் எனக்கு வேண்டும் அப்பா.

அப்பா நீங்கள் என்னை உப்பு மூட்டை தூக்கிய நினைவுகள், பசுமரத்தாணி போல பசுமையாக கிடக்குதப்பா. உங்கள் மார்பில் ஏறி தவன்று விளையாடிய போது எனக்குத் தெரியவில்லை, நீங்கள் என்னை இப்படி தவிக்க விடுவீர்கள் என்று. தெரிந்திருந்தால் சிலவேளை உங்கள் கூடவே வந்திருப்போம் நானும் என் தாயும். அப்பா,
முள்ளிவாய்க்காலில் எனக்கு காய்ச்சல் வந்து துடித்த போது கண்ணில் நீர் வடிய தூக்கிக் கொண்டு ஓடிச் சென்று மருந்தெடுத்து தந்துவிட்டு களம் நோக்கி சென்ற நீங்கள் எவ்வாறு வருந்தி இருப்பீர்கள்…? ஆனாலும் தளராது களத்தில் நின்ற அந்த பொழுதுகளை எனக்கு அம்மாவின் கண்ணீர் அடிக்கடி நினைவூட்டுகிறது அப்பா. இறுதியாக என்னை விட்டு நீங்கள் பிரியும் போது உங்களின் மனம் எந்த நிலையில் இருந்திருக்கும் அப்பா? மீண்டும் என்னிடம் வருவீர்கள் என்று தானே எண்ணி இருப்பீர்கள்? ஆனால் எங்கே அப்பா நீங்கள் மீண்டும் வராது எங்கே போனீர்கள்…? காத்திருக்க வைத்துவிட்டு?

கூட இருக்கும் நண்பர்கள் தந்தையரோடு பாசம் காட்டி பழகும் போதும், தந்தைமார் பிள்ளைகளோடு சேர்ந்து நடந்து வரும் போதும் வெற்று வானத்தை பார்த்தபடி உங்களின் முகத்தினைத் தான் தேடுகிறேன். என் அப்பா இருந்திருந்தால் அவர் கைகளை கோர்த்தபடி, வானத்தில் மினுமினுக்கும் நட்சத்திரங்களை எண்ணியபடி, மழலை மொழியில் அப்பாவை மகிழ்வித்தபடி, ஊஞ்சலாடும் தூக்கணாங்குருவிகளின் இசை போல தந்தை அன்பை நுகர்ந்தபடி நானும் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் என்ற இயல்பான ஆசையை மட்டும், வெறுமையான வானத்தில் அங்கங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்களின் ஒற்றை வெளிச்சத்துக்கு சொன்ன படி காலத்தை போக்குகிறேன் நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு…

இன்று உங்களின் பிறந்தநாள் அப்பா. இன்று என்னவோ எல்லாம் எழுத துடிக்கிறது. ஆனால் உங்களை இழந்து விட்ட என் மனமோ கவலையில் தடுமாறுகிறது. இரண்டு வருடங்கள் மட்டுமே கிடைத்த உங்களின் அணைப்புடனான மகிழ்வை மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்று ஏங்குகிறது மனது. அப்பா என்று கதைக்க அன்று என்னால் முடியவில்லை. இன்று அழைத்து அழைத்து அழுகின்றேன் யாருக்கும் அது கேட்கவில்லை. அழுகின்ற என் குரலை செவிகளில் வாங்கி, உணர்வுகளில் புதைந்து கிடக்கும் கனவுகளோடு என்னிடம் நீங்கள் வருவீர்கள் என்று முள்ளிவாய்க்காலில் தொலைத்த நாளில் இருந்து தேடுகிறேன் அப்பா.

மீண்டும் ஓர் பிறப்பு வேண்டும். அதிலும் உன் மகனாய் பிறத்தல் வேண்டும். நாள் முழுக்க உன்னோடு வாழ வேண்டும். இப்பிறவியில் தொலைத்தவற்றை அதில் என்றாலும் நான் மீண்டும் பெற்று மகிழ வேண்டும். காத்திருக்கின்றேன் அப்பா…

வலி மிகுந்த உன் மகன் இவ் வரிகளோடு…

அணைக்க எம் கரங்களுக்கு அப்பா இல்லை – தமிழினி , பிறையினி

இலட்சியக் கனவொன்றை இனிதாக்க
எமை விட்டுத் தூரம் சென்றீர்களே
எட்டி எட்டிப் பார்க்கிறோம் உங்களை
எங்குமே நீங்கள் இல்லை

காலனவன் கைகளில் காணிக்கையானீர்களா
கண்ணீர் நிறைந்த கண்கள் தினமும்
உங்களுக்காய் காத்திருக்க
காலத்தை வென்றெடுக்க மறந்து ஏன் போனீர்கள்.

பள்ளிக்கு செல்லும் போதும் படுத்து உறங்கும் போதும்
அள்ளித் தினம் அணைத்திடும் உங்கள் கைகளின் அசைவு எங்கே அப்பா?
ஆண்டுகள் பத்து கடந்தாலும்
நீண்ட தூரம் நாம் உயர்ந்தாலும்
மீண்டு வரா உங்கள் கைகளைத் தான்
தினம்தினம் தேடுகிறோம் அப்பா

களம் உங்களை அணைத்தாலும்
எட்டி எமை நோக்கி நிற்கும்
உங்களின் விழிகள் எங்கே?
முட்டிப் பகை வெல்லும் உங்கள்
இலட்சியக் கனவுகளுக்குள்
எங்கள் வாழ்க்கையையும் இலக்காக்கினீர்களே
அவ்விலக்கு இப்போது எங்கே?

நாங்கள் வாழ வேண்டும் என்று தானே
நீங்கள் கருவி ஏந்தினீர்கள்
நாங்கள் வாழ்வதை காணாது
விட்டு எங்கே போனீர்கள்?
ஒவ்வொரு நிமிடமும் எமைத் தாங்கிய
அப்பாவே இடைநடுவே அறுத்துவிட்டு போய் சேர்ந்ததேனோ?

திட்டங்கள் நீங்கள் கொண்டீர் நாங்கள்
பல பட்டங்கள் வெல்ல என்று
விட்டு போய்விட்டீர் எங்கள் வெற்றிகள்
காண முன்பு

முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்று இரட்டையராய் இருந்த போது
அம்மாவும் அப்பாவும் எமக்கு வழிகாட்ட இணைந்திருந்தீர்கள்.
அம்மாவை மட்டும் எமக்காய் விட்டு
தூர தேசம் போனதேனோ?
அப்பா என்று உரக்க அழைக்கின்றோம் நிதம்
அருகில் வர நீங்கள் இல்லை
அணைத்து கொஞ்ச வரவுமில்லை
ஏங்கி ஏங்கி தவிக்குது எங்கள் நெஞ்சம்
ஆறுதலுக்கு யாரும் இல்லை.
அணைக்க எம் கரங்களுக்கு அப்பா இல்லை

ஓ மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்கு தா !

உண்மையான வீரனின் எச்சம்

முள்ளிவாய்க்கால் போர் முடிந்து
பத்து வருடங்களில்
வரிப்புலிச்சீருடையுடன் ஒரு எலும்புக்கூடு மீண்டது
பாம்பு செட்டை உதிர்ந்த இடங்களில்
பாம்புகள் குடியிருப்பதாய்
எமது ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு
காலம் உதிர்ந்ததாய்
சீருடையுடன் எலும்புக்கூடு
எங்கள் ஊரில்
ஒரு புதிய பேச்சு வழக்கை தொடக்கிற்று
புலியிருந்த நிலம் எனத்தொடங்கிப் பேசப்படும் அது

எலும்புக்கூடு என்று சொல்ல
பலரையும் போல எனக்கும் மனம் ஒப்பவில்லை
ஒரு களத்தில் வீழ்ந்த போராளியின்
வித்துடலுக்கு கொடுத்த மரியாதையை
நாம் எமது ஊரில் கடவுளுக்கும் கொடுத்ததில்லை
நடுகல் பண்பாட்டின் வழி
வித்துடல் பண்பாட்டில்
நாம் வாழ்ந்து இருந்துவிட்டோம்
எமது போர்ப்பரணியில் ஒரு படலத்தில் தலைப்பாய்
இன்று இந்த வீரனின் எச்சம்

ஒரு உண்மையான போராளியின்
வர்ணங்களை அடையாளத்தை
மீண்டும் முள்ளிவாய்க்காலில்
பத்து ஆண்டு கழித்து காண நேரிட்டபோது
ஓ உண்மையான புலிவீரனே
நீ வாழ்ந்த வீழ்ந்த மண்ணில்
நான் வாழ்ந்து கொண்டிருப்பதற்காய் பெருமிதப்படுகின்றேன்

பலர்
எதிரிகளுக்குள் சரணாகதி
அடைந்து கொண்டிருந்த தருணத்தில்
சீருடையோடும் குண்டோடும்
பயிற்சிப் பாசறையில் சத்தியப்பிரமாணம் செய்து
கழுத்தில் கட்டிக்கொண்ட சயனைட்டோடும்
நீ சன்னங்கள் தாங்கி வீழ்ந்திருந்தாய் எனும்போது
சத்தியவான் ஒருவனை நான்
முள்ளிவாய்க்காலில் பூமிக்கு காட்டுகின்றேன்
இறுதி வரை போராடித் தோற்றார்கள்
இதோ முள்ளிவாய்க்காலில் ஒரு பெரிய உதாரணம்
ஒரு புலிவீரனின் சத்தியத்தை
எந்த வல்லரசாலும்
தோற்கடிக்க முடியவில்லை என்பதற்கு
இதோ ஒரு வீரபுருசனின் சீருடை தரித்த எலும்புக்கூடு

எனது காதுகளில்
ஓ மரணித்த வீரனே உன் சீருடைகளை
எனக்கு தா
அந்த பாடல் ஒலிக்க ஆரம்பிக்கின்றது
பாடல் முடிந்தும்
உன்னை சுமந்து செல்ல தடுமாறுகிறேன்
முள்ளியவளைக்கா தேராவிலுக்கா தரவைக்கா
சாட்டிக்கா உயிலங்குளத்துக்கா கனகபுரத்துக்கா
எங்கு
உன்னை விதைப்பதற்கு
என் மனதை தவிர வேறிடமில்லை

கவிதை
பொன் காந்தன்

தொடர்பு பட்ட செய்தி

முள்ளிவாய்க்காலில் புலிச் சீருடையுடன் காணப்பட்ட எலும்புக்கூடு மீட்பு! – இலக்கத் தகடும் கிடைத்தது

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் 681 ஆவது படை தலைமையகத்துக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் மலசல கூடம் அமைப்பதற்காக கடந்த 17ஆம் திகதி அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்போது விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற அனுமதியுடன் இன்று அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றது.
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் 681 ஆவது படை தலைமையகத்துக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் மலசல கூடம் அமைப்பதற்காக கடந்த 17ஆம் திகதி அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்போது விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற அனுமதியுடன் இன்று அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் தடயவியல் பொலிசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். சட்டவைத்திய அதிகாரி ,மற்றும் தடயவியல் பொலிசார், மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்றுகாலை இந்த சடலம் காணப்பட்ட பிரதேசம் அகழ்வு செய்யப்பட்டு சடலத்தின் எச்சங்கள் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மண்டையோடு சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட குறித்த சடலத்தில் இரண்டு குண்டுகள் ,துருப்பிடித்த துப்பாக்கி ரவைகள் ,வோக்கி டோக்கி ஒன்றின் சிதைவுகள், இலக்கத்தகடுகள்,சயனைட் குப்பி ஆகியனவும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட இலக்கதகட்டில் த.வி.பு ஐ 2719 என்ற இலக்கம் காணப்படுகின்றது.

அந்த இடம் எனக்குத் தெரியும்

அந்த இடம் எனக்குத் தெரியும்
இப்போது இணையத்தில் உலா வருகின்ற
ஒளிப்படங்களில் இருக்கின்ற அந்த இடம்
எந்த இடம் என இனங்காண நீங்கள் துடிக்கிறீர்கள்

போர்க்குற்ற ஆணையாளர்களின்
வலுவிழந்த தொழில் நுட்பப் பிரிவினர்
கைகளைப் பிசைகிறார்கள்
அவர்களுக்கு வல்லரசு வழங்கும்
செய்மதிப் படங்களில் துல்லியம் இல்லை;
தெளிவு இல்லை;
துலக்கம் இல்லை;
விவரமும் இல்லை
எனக் குழம்புகிறார்கள்

எனினும்,

அந்த இடம் எனகுத் தெரியும்
அம்மணம்; அவலம்; திகைப்பில் மருண்டு இருண்ட கண்கள்
ஆச்சரியமாய்ப் பெய்த மழையின்
கலங்கிய நீர்

அவற்றையும் எனக்குத் தெரியும்
அந்தச் சேற்றின் நிறம் எனது கண்ணீர்

பாதி அழிந்தும் மீதி மறைந்தும் மங்கலாகத் தெரிகிற
பாலை மரத்தையும் நான் அறிவேன்
இடது புறம்
காயாமரத்தின் கீழ்க் காயாத குருதியின் மணமும்
எனக்குத் தெரியும்

அந்தப் பெண்களை இழுத்துச் செல்லும் போது
அவர்களின் உடலை
உங்கள் தேசியத்தால் உழுத ஆண்குறிகளின்
வேடிக்கைக் களிப்பின் எக்காளத்தின் மீது ஒரு பிடி மண்ணை வீசுகிறேன்

அந்த இடம் எனக்குத் தெரியும்
அதன் மண்வாசனையில் உருகும்
என் ஈரக்கால்களையும் கோபக் கண்களையும் விட
வேறென்ன ஆதாரம் உங்களுக்கு வேண்டும்?

அந்த இடம் எனக்குத் தெரியும்
எனினும்
நான் சொல்லப் போவதில்லை.

சேரன்

மீண்டு வருவோம் வலிகளை உரமாக்கி மீண்டும் எழுவோம்!

முள்ளிவாய்க்கால் எம் தேசத்தின் விடியலின் வாசல் தலம்! – ஜனனி (சிறப்பு காணொளி)


நான் ஸ்ரீலங்கன் இல்லை

ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள்
எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென

ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை
பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா?
வேற்றினம் என்பதனால்தானே
நமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர்

ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்
எமை அழைத்தனர் பிரிவினைவாதிகளென

ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை
பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா?
வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானே
நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது

நாமொரு இனம்
எமக்கொரு மொழி
எமக்கென நிலம்
அதிலொரு வாழ்வு

வீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியே!
உறிஞ்சப்பட்ட குருதியும்
மனிதப்படுகொலைகளும்
அழித்துவிடுமா ஓரினத்தின் சரித்திரத்தை?

சுதந்திரம் எவ்வளவு இனிமையானதோ
அதைப் பெறுவதும் அவ்வளவு கடினமானதென்றபடி
மாபெரும் விதையாய் புதைந்திருப்பவளே
இன்னும் பல நூறு வருடங்களெனினும்
நான் காத்திருப்பேன்

நீ அறிவாய்
நான் வரலாறு முழுதும் போராடுவேன்
அடிமையை எதிர்த்துக்கொண்டே இருப்பேன்

காதலியே! அடிமையால் என் அடையாளத்தை ஒழிக்க இயலுமோ?
ஆக்கிரமிப்பால் என் தேசத்தை மறைக்க இயலுமோ?
மாபெரும் சுற்றிவளையிலும்
நான் முன்னகர்ந்துகொண்டேயிருப்பேன்

கண்களுக்கு முன்னால் விரிந்திருக்கும்
எனது நாட்டை வேறொரு பெயரால் அழைக்காதே நண்பா!

ஒரு பாலஸ்தீனனை
இஸ்ரேலியரென அழைப்பயா?
என்னை சிறிலங்கன் என்று அழைக்காதே
நான் தமிழீழத்தவன்
எனது நாடு தமிழீழம்

மாபெரும் சமுத்திரத்தில்
தொலைக்கப்பட்ட ஓர் ஊசியினை
தேடியலைவதுபோல
அலைகிறேன் என் தாய்நாட்டைத் தேடி.

தீபச்செல்வன்

நன்றி: தீராநதி மே 2014

முள்ளிவாய்க்கால்…….
ஆண்ட தமிழினம் மாண்டு போன ஈழத்துக் கரை
துரோகத்தால் துண்டாடப்பட்ட தமிழர் நிலம்
கொத்துக் கொத்தாய் குண்டு விழுந்து தமிழர் உயிர் குடித்த நிலப்பரப்பு
ஆண்டுகள் பத்தாயினும் மறக்குமா தமிழினம் அந்த இனப்படுகொலையை!!!
எதை மறப்பது? எப்படி மறப்பது?
ஓன்றா? இரண்டா? கண்முன்னே விரிகின்ற காட்சிகளின் கோரங்கள்!!!

தொப்புள் கொடிச் சொந்தங்களை
தொலைத்து நின்றதை எப்படி மறப்பது?
துள்ளித்திரிந்த சிறுமி சில நொடியில் காலிழந்து வீழ்ந்து
துடித்ததை எப்படி மறப்பது?
கொத்துக்குண்டிற்கு குடும்பமே இரையான
கோரத்தை எப்படி மறப்பது?
கிபிர் சத்தத்திற்கு நாங்கள் பயந்து அழுத அழுகையை எப்படி மறப்பது?

தகிக்கும் வெயிலில் நாங்கள் தறப்பாள் கொட்டிலுக்குள்
அடங்கி இருந்ததை எப்படி மறப்பது?
பால்குடி மாறாத பச்சிளம் குழந்தை தாயை
இழந்து தவித்ததை எப்படி மறப்பது?

பத்துப்பேர் கொண்ட குடும்பத்தில் ஓருவர் மட்டுமே
உயிர் பிழைத்த துரதிஷ்ட வாழ்வை எப்படி மறப்பது?
பதுங்கு குழியினுள் பல இரவுகளைத் தொலைத்து
பயந்தபடியே உறங்கிய பாதி இரவுகளை எப்படி மறப்பது?

பொழியும் எறிகணை மழையிலும் கஞ்சிக்காய் காத்திருந்த
பிஞ்சுகள் மத்தியில் வீழ்ந்து வெடித்த
எறிகணைச் சிதறல்களை எப்படி மறப்பது?

எல்லைச்சாமிகளாய் எம்மைக் காத்த புலிகளை விட்டு
எறிகணை கொண்டு தாக்கியவன் எல்லைக்குள் சென்ற
இழிநிலையை எப்படி மறப்பது?

இருபுறமும் வீங்கி வெடித்துக் கிடந்த பிணங்களின் மத்தியில்
இருகைகளாலும் பிள்ளைகளை அணைத்தபடி
இராணுவ எல்லைக்குள் கூனிக்குறுகியபடி சென்றதை எப்படி மறப்பது?

குடிக்க நீரின்றி, உடலங்கள் மிதந்து கிடந்த நீர்நிலையில்
தண்ணீர் அள்ளிப் பருகிய அவலநிலையை எப்படி மறப்பது?

பசியால் அழுத குழந்தைக்கு பசியாற்ற,
பால்சுரக்காத மார்பைப் பார்த்து பரிதவித்த
தாயின் அவலத்தை எப்படி மறப்பது?

பரந்த வெட்டைவெளியில் குடிக்க நீரின்றி, ஓதுங்க நிழலின்றி
தவித்த தவிப்பை எப்படி மறப்பது?
மறக்க முடியுமா இந்தக் கோரங்களை!!!

காட்சிகளாயும் இனவழிப்பின் சாட்சிகளாயும் இருக்கும் இவை
மறந்து விட்டு நகர்ந்து விடமுடியாத எம் இனத்தின் வலி….
பத்தாண்டுகளாகியும் நீதி கிடைக்காத தமிழினப்படுகொலையை
நினைவு கூரும் இந்நாளில்,
தலைகள் தாழ்த்தி சத்தியம் செய்கிறோம்,
இறந்து போன எம் உறவுகளே!
உங்கள் கனவுகள் சுமந்தே நாங்கள் நடக்கின்றோம்.

உலகின் மௌனம் கலையும் வரைக்கும்
உயிரின் வலியை புரியும் வரைக்கும்
உங்கள் கனவுகள் சுமந்தே நடக்கிறோம்
அன்றும் இன்றும் என்றும் ” தமிழீழமே தமிழர் தாகம் ” என்று
ௐங்கி ஓலிக்கிறோம்….

-இலக்கியா புருசோத்தமன்-

பத்தலையோ….பத்தாண்டுகள் திரும்பலையே…பார்வையின்னும்…….- சுதர்சினி நேசதுரை

அண்டமதில்புவிஒன்று

கண்டமதில்தீவொன்றாம்

சின்னஞ்சிறியஈழமொன்றின்

சத்தமொன்றும்கேட்கலையோ……

கூடுகட்டிவாழ்ந்திருந்த

கூடிஆடிமகிழ்ந்திருந்த

குருவிகளின்ஈனவொலி

குவலயத்தின்காதில்விழவில்லையோ……

பார்ஆண்டபழந்தமிழன்

பாதகத்தார்கைப்பிடியில்

பாடுபட்டுப்போனகதை

பார்த்தவர்கள்யாரும்மிலையோ…..

தேசமெங்கும்சல்லடைகள்

தேகமெங்கும்சன்னங்கள்

கொத்துக்குண்டுகளால்ஈழத்தில்

செத்தவர்களைநீரும்பாக்கலையோ……

செத்தவர்உடலைக்கூட

தொட்டுவிடக்கூடாதென

எலும்புகூடமிஞ்சாமல்

எரிகுண்டுஅழித்ததையும்

தேசத்தின்இளம்வித்துகளும்

தேசம்காத்தவிழுதுகளும்

தேற்றஅங்குயாருமின்றி

தேம்பித்தேம்பிஅழுததையும்……..

பாதகரின்படுகுழியில்பலரையும்

பாதயாத்திரையில்சிலரையும்

பசித்தவயிறுஆற்றாமல்இன்னும்பலரையும்

பார்த்திருக்கப்பிரிந்தோமே அதையும்பாக்கலையோ…..

ஒன்றன்மேல்ஒன்றாக

ஒன்றல்லஓராயிரம்உடலங்களை

ஒருபாடையில்ஒன்றாக்கி

ஒற்றைதீதின்றதையும்பாக்கலையோ….

அல்லோலப்பட்டதேசமக்கள்

அரைவயிறுக்கஞ்சிஇன்றி

காததூரம்போனகதை

கண்உள்ளவரேகாணலையோ………

கண்டிருந்தால்கண்டிருப்போமேவிடிவெள்ளியை

கண்டும்காணததும்போல்இன்றும்

கரைகிறதுகாலவோட்டத்தில்எம்வாழ்வு

கரைசேர்க்கயார்வருவீரோ……..

இழந்தவைஎன்றும்இழந்தவையே

இருப்பதைஇனிஇருப்பாக்குவோம்…..

இத்தனைநாள்இமையாதிருந்தது

ஈழம்மடியில்தலைசாயவே…….

பாராதவிழிகளையும்இங்கு

பேசாதமொழிகளையும்வரைவில்

தேடாதவிரல்களையும்இனி

ஓயாமல்பார்க்கவைப்போம்

எங்கோஒருமூலையில்

ஏதோஒருஇடத்திலென்போர்க்கு

எள்மூக்கின்நுனிஅளவாயினும்

அதுஎம்தேசமெனபறைசாற்றுவோம்

நன்றி

சுதர்சினி நேசதுரை

முள்ளிவாய்க்கால் முடிவல்ல !

நந்திக்கடலும் வட்டுவாகலும்
நொந்துபோய் கிடக்கிறது
வலி சுமந்த அடிமனதோடு…

பிஞ்சும் பூவும்
காயும் கனியுமாய்
சிந்திய இரத்தம்
காயாமலே
சிவந்தது தாய் முற்றம்

இரத்தமும் சதையும்
சேற்றுச்சகதியாய் மாற
மூச்சுக்காற்று தேடி
முனகியது வாழ்வு

காலின் கீழ் ஒட்டி பிசுபிசுத்தது
காயாமல் சுட்ட இரத்தம்…
யாரதென்று தீர்மானிக்க
இப்போது நேரமில்லை..
மொத்த இனமும்
செத்துக்கொண்டிருந்தது

நாளும் பொழுதும்
கொலைக்களமானது

கஞ்சிக்கும் கடலைக்கும்
கெஞ்சி நின்ற பிஞ்சுகளை
பிச்செறிந்தன வானேறிய பிசாசுகள்

கொத்துக்குண்டுகளின் சத்தத்தில்
செத்துத் தொலைந்தோம்

பொஸ்பரஸ் குண்டுகளின் புகையில்
கருகி இறந்தோம்

பதுங்குகுழிகளே பலவேளைகளில்
சவக்குழியாக சபிக்கப்பட்டோம்

மருத்துவரும் மத தலைவரும்
வதை செய்யப்பட்டார்கள்

பாதுகாப்பு வலயத்திலும்
மருத்துவ நிலையத்திலும்
பள்ளி சென்ற நேரத்திலும் தான்
கொத்தாக பிள்ளைகளை
கொல்லக் கொடுத்தோம்

தொண்டு நிறுவனங்களோ
மனிதநேய அமைப்புக்களோ
அத்தனையும் எமை கைவிட்டு
அமைதியாய் வெளியேற
அநாதையாய் நாங்கள்
அடைக்கப்பட்டோம்

ஐநா என்ன….
அகிம்சை என்ன…
உலக அமைதி மந்திரமென்ன…
எல்லாமும் ஏமாற்றியது எம்மை

மொத்தமாய் பார்த்திருந்து
அவன்பக்கம் சேர்ந்திருந்து
பத்தோடு பதினொன்றாய்
துரோகித்தது சர்வதேசம்..
மௌனித்தது மனிதம்..

இந்தக் கள்ள உலகின்
பொல்லாத பார்வை
கட்டவிழ்த்தது ஒரு சுடுகாட்டை..

எனினும்
இந்தச்சுடுகாட்டிலும் பூக்கின்றன
செவ்வரத்தம் பூக்கள்!

இந்தச் செவ்வரத்தம் பூக்களில்
சிவந்திருப்பது வெறும் நிறமல்ல
நாங்கள் சிந்திய இரத்தத்துளிகள் தான்…!!

முகில்நிலா

எங்கள் ஒப்பாரியின் பெரும்பொருளாய் சன்னங்கள் மாறியிருந்தது!(காணொளி)


10 ஆண்டுகள் கழிந்தும், தாரை தாரையாக வழிந்தோடும் கண்ணீர்!(காணொளி)

முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்! பிரசாந்

நிலவானவளின் நினைவுகள் !

உன் வாசம் நிறைந்து
என் தேகம் சுமந்த
இனிய நினைவு ஒன்று
இன்றும் என்னோடு
பயணிக்கிறது…

காதலியாய் காத்திருந்த
வாழ்வைத் தூக்கி வீசிய
ஈழ வேலியின் காவல்ப்பூவே
உன்னை விட நெஞ்சமர்ந்து
என்னைத் தினமும்
தொட்டுணர வைப்பது
வேறு யாருமில்லை…

தேசம் நினைத்து – என்
நாமம் மறந்து சென்றவளே
வேசம் கலைத்து
வரியுடைக்குள் வாகைக் காற்றாய்
நிமிர்ந்தெழுந்த – என்
தேசக்காற்றே

காயங்கள் தந்து
கனி நினைவை தின்று
காந்தள் மலருக்குள்
நீ வாசம் செய்ய
சென்றுவிட்டாய்

காலங்கள் கடந்தும்
காயாத நினைவுகள்
உன் பெயருக்குள்
புதைந்து போக
விழிகளில் சொரியும்
அருவி ஓட்டத்தில்
நீச்சலிட முடியாது திணறுகிறேன்

உன் நினைவு
தினமும் வருகிறது
தூங்கவும் முடியவில்லை
தாங்கவும் முடியவில்லை
நீ கனவு என்று தெரிந்தும்
எதற்காக நினைவாக
நெஞ்சை தொடுகிறாய்

கனவு தானே என
கண்களை திறந்து உனை
தொலைக்க பார்க்கிறேன்
நீயோ இமையாக இருந்து
எனை விட்டுச் செல்ல மறுக்கிறாய்

உனக்கும் நினைவிருக்கும்
நீயும் நானும் அன்று தேடிய
வண்ணக் கோலங்கள்
கீறப்பட்ட கோடுகளாய்
இணைக்கப்படாமலே
நீண்டு கொண்டே போகிறது

சாவு என்ற ஒற்றைச் சொல்லில்
எங்களின் சிதைந்த காதலின் மீது
தொடருந்துப் பயணம்
செய்து கொண்டிருக்கிறது
வலிய சிங்களம்

வானமேறி வந்த
மேகத்துப் பறவைகள்
தாண்டவக் கூத்தாடிய
வேண்டப்படாத அந்தப்
பொழுதை இன்றும்
மெல்லவும் முடியவில்லை
சொல்லவும் வார்த்தையில்லை

நாட்கள் கணக்கல்ல
நாளிகை ஐந்தை
தாண்டிப் பயணிக்காத
உனக்கும் எனக்குமான
இறுதியான சந்திப்பின் முடிவில்

உன் இருப்பிடம் சிதைந்து
கூடி இருந்த தோழிகளும்
உன்னோடு இணைய
சாவை சிதறலாய் பெற்றாய்

தீண்டியழக் கூட உன்
வீரவுடல் நிலம் விழவில்லை
கூட்டியள்ள சிதறிப்போய்
கண்ணில் ஈரம் ஏன்
தந்து சென்றாய்

நீ தேடித் தேடி
கனவாய் கண்ட நிலவை
என் கண்கள் பறித்து
ஆளுகை கொண்டன
என்று தானே என்னிடம்
கோவம் கொண்டாய்.

நான் பறித்த நீ
விரும்பிய நிலவொளி உன்னிடம்
தானே நான் கண்டேன்
உன் கரங்கள் அதைத் தானே
தீண்டக் காத்திருந்தது.
நிலவொளியின் சுவாசம்
உன் முகத்தில் மிளிர்ந்த
அந்த நிமிடங்களை
என் கண்கள் கூச்சத்துடன்
பார்த்துக் கொண்டன…

நீ சென்று விட்டாய்
குன்றிடாத வீரமும்
கட்டியிருந்த குப்பியின்
நஞ்சுச் சுவையும்
நான் அறிய முன்பே
என்னை விட்டு
நீ சென்றாய்…

நீயும் நானும் ஒன்றாக பயணித்த
பாதைகள் எங்கும்
காதலுக்கு ஒற்றைச் சொல்லால்
நாட்டப்பட்டுக் கிடக்கும்
நடுகற்களில்
மனம் நிறைந்து கிடந்த
பொழுதுகளை மறந்து
தொலைத்து சென்றாய்

நிலவொளியை கை பிடித்து
கவலைகள் துறந்து சிரிக்க
நான் காத்திருக்க
நீயோ…
நிலவொளியில் வசந்தமாய்
உறங்கி கொண்டிருக்கிறாய்
சிறு குழந்தையாக நான்
மட்டும் விம்மிக் கொண்டருக்கிறேன்…

இ.இ. கவிமகன்

அப்பாவுக்காக… கேணல் வசந்த்தின் மகள் !

அன்பான தந்தையே…
உங்கள் நினைவலைகள்
ஒவ்வொரு நொடியும்
எங்களை வாட்டி வதைக்கின்றன

வார்த்தையால் வழி நடாத்தி
அன்பினால் ஒளி காட்டி
எம் நெஞ்சங்களில் என்றுமே
நிறைந்தவர் நீங்கள் அப்பா

நீங்கள் இல்லாத நாளை
கனவிலும் நினைத்ததில்லை
இன்று நீங்கள் இல்லாத நாட்கள்
பத்து ஆண்டுகளை கடக்கிறது.

ஈரைந்து ஆண்டுகளில்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு நொடியும்
எங்கள் துன்பம் ஏராளம் அப்பா

வேதனைகளை சாதனையாக்கி
சங்கடங்களை சருகாக்கி
வெற்றி படி ஏற தினமும் உங்கள்
நினைவுகளோடு நடக்கின்றோம்

உங்கள் அன்பென்ற பெரும்
கடலில் விளைந்த இரு முத்துக்கள்
நீங்கள் இல்லாது தனித்துவிட்ட
அம்மாவின் சொத்துக்கள்

அகரம் சொல்லித் தந்த போதும்
அனலை நெஞ்சில் சுமந்த போதும்
இன்று சிகரம் ஏறி நிற்கும் போதும்
நீங்கள் அருகில் இல்லை அப்பா.

நினைவிருக்கு அப்பாவே!
எனது சிறுவர் பள்ளியில் விளையாட்டில்
முதலிடம் பெற்றதற்கு முதல்
பரிசுகள் உங்கள் கையால் வாங்கினேன்

இன்று முதலிடங்களை பல பெற்று
பரிசுகளும் பெறுகின்றோம்
அருகிருந்து அன்பு தர
நீங்கள் மட்டும் இல்லையப்பா

நீங்கள் இல்லா ஒவ்வொன்றும்
உயிரற்ற வெறுமை அப்பா
காலங்கள் கனியாதா – எம்
கலக்கம் தீராதா?

எம் அருகில் நீங்கள் இல்லை
அம்மாவோடு நீங்களும் எம்மருகில்
இருந்திருந்தால் எம்
சாதனைக்கு ஏது எல்லை?

தொலைத்து விட்டு அழுகின்றோம்
அப்பா எனும் பொக்கிசத்தை
முள்ளிவாய்க்கால் எனும் ஊரில்
முத்தாய் உன்னை தவற விட்டோம்.

மே திங்கள் ஒன்பதாம் நாள்
மாலை நேரத்தை எங்களால்
என்றென்றும் மறக்கவே முடியாமல்
கண்கள் குளமாகின்றதப்பா.

உங்கள் அன்புக்கும்
உங்கள் அமைதிக்கும்
உங்கள் கனிவுக்கும்
உங்கள் உறுதிக்கும்
உங்கள் பலத்துக்கும்
உங்கள் பொறுமைக்கும்
உங்களை போற்ற
ஓர் நாள் போதுமா அப்பா?

தினமும் பல தடவை
போற்றப்பட வேண்டியவர்
நீங்கள் அப்பா உங்களைப் பாட
எங்களுக்கு புலமை இல்லை.

உங்கள் இழப்பை எங்களால்
ஈடு செய்ய முடியவில்லை
நாங்கள் வாழும் காலம் வரை
உங்கள் எண்ணமும்
எங்களோடு உயிர்
வாழும். தந்தையே…!!!
இது உறுதி இது உறுதி

புலர்வு

Up ↑