ஈழத்திலே சிவசேனா என்ற இந்துவெறி அமைப்பை ஈழத்தை சேர்ந்த சைவநெறி அறிஞர் மறவன்புலவு க. சச்சிதானந்தம் கொண்டு வருகின்றமை பலரிடையேயும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளது.
சாள்ஸ் அன்ரனி என்ற பெயரை தலைவர் பிரபாகரன் தன் மகனுக்குச் சூட்டினார். இம்ரான் பாண்டியன் என்ற படையணியை ஏற்படுத்தினார். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் சிறுபான்மை மதங்களின் அடையாளத்தை பிரதிபலித்த ஈழத் தமிழ் மண்ணில் கிறீஸ்தவ, இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல கலவரங்களை செய்த சிவசேனாவுக்கு இடமளிப்பதா?
இந்துமுறைப்படி இறந்தவர்களின் உடல்களை எரிப்பார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் களத்தில் மாண்ட மாவீரர்களின் உடல்களைப் புதைத்தார்கள். இந்தச் செயல்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்துத்துவ பண்புகளுக்கு மாறானது என்பதைப் புலப்படுத்தியது. அத்தகைய போராட்டம் நடந்த மண்ணில் மதக் கலவரங்களை செய்த சிவசேனாவுக்கு இடமளிப்பதா?
இந்த சிவசேனா என்றால் யார்?
சிவாஜி என்ற மராட்டிய மன்னனின் பெயரில் உருவாக்கப்பட்டதே சிவசேனா அமைப்பு. மராட்டிய மன்னரான சிவாஜி முகாலயர்களுக்கு எதிராகப் போரிட்டு இந்துத்துவ ஆட்சியை மராட்டிய மண்ணில் நிறுவினார். மன்னன் சிவாஜியின் பெயரில் தொடங்கப்பட்ட சிவசேனா என்ற கட்சி பாரதிய ஜனாதாக் கட்சியின் இந்துத்துவ கட்சிகளில் ஒன்று. இந்து மக்கள் கட்சி, சிவசேனா கட்சி ஆகியவற்றின் ஊடாகவே பா.ஜ.க மதக் கலவரங்களை நடத்தியுள்ளது.
இந்தியாவில் பரவலாக வாழும் இஸ்லாமிய மக்களையும் கிறீஸ்தவ மக்களையும் ஒடுக்கும் நோக்கில் சிவ சனா செயற்படுகிறது. அவர்களுக்கு எதிராக பாரிய கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டு அழிவுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் இவ் அமைப்பை ஈழத்தில் கொண்டு வருவதன் மூலம் தமிழ் இன விடுதலைப் போராட்டத்தின் திசையை மாற்ற இந்தியா முயல்கிறது.
ஈழத்தில் சைவ சமய அடையாளங்கள் ஒழிக்கப்படுவது இன ஒடுக்குமுறையின் செயற்பாடே. அத்துடன் வடகிழக்கில் உள்ள கிறீஸ்தவ ஆலயங்களும் இஸ்லாமிய வணக்கத் தலங்களும் அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் பேசும் மக்களின் மத அடையாளங்களே இங்கு அழிக்கப்படுகின்றன. அத்துடன் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காக கருணாரட்னம் அடிகளார், அருட்தந்தை பிரான்சிஸ் உள்ளிட்டோர் உயிரையே தியாகம் செய்துள்ளனர். ஜிம்புரவுண் அடிகளார் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் அடையாளம். மன்னார் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப்பு தமிழர் தேசிய உரிமைக்காக குரல் கொடுத்தவர்.
இவ்வாறான நிலமைகளை குழப்பி மக்களை சிதைப்பதே சிவசேனாவின் நோக்கம்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது சமத்துவ சோசலீச தமிழீழமே. மதச் சார்பற்ற தேசம். அனைத்து மதங்களும் பண்பாடுகளும் மதிக்கப்படும் தேசம். இந்தக் கனவுக்காகவே மாவீரர்கள் போராடி மாண்டார்கள். ஈழத்தில் சிவசேனாவை கொண்டு வருவதன் மூலம் தமிழீழ மக்கள் இத்தனை ஆண்டுகள் செய்த தியாகத்தை கொச்சைப் படுத்துவதுடன் தமிழீழ விடுதலைக்காக மாண்ட மாவீரர்களுக்கும் துரோகம் இழைக்கின்றனர்.
முக்கியமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை திசை மாற்ற முயல்கின்றனர். வடக்கில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்பில் செண்பகப் பார்வை தொடர்ச்சியான சுட்டிக்காட்டி வந்துள்ளது. இந்தியாவில் எவ்வாறு மத முரண்பாடுகளையும் சாதிய முரண்பாடுகளையும் வளர்த்துவிட்டு தமிழ் இனம் என்ற ரீதியில் ஒன்று சேராமல் மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்யப்படுகின்ற தோ அவ்வாறே ஈழத்திலும் அரசியல் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் காரணமாகவே அம்பேத்கர் நினைவு விழா யாழில் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நடக்கிறது. காந்தியின் அகிம்சை தினம் நடக்கிறது. முழுக்க இந்திய ஆதிகத்தை ஈழத்தில் நிலை நிறுத்துவதும் ஈழத் தமிழ் சமூகத்தை தூண்டு தூண்டாக பிளவுபடுத்தி தமிழீழ இலட்சியத்திற்கான போராட்டத்தை சிதைப்பதுமே இதன் நோக்கம். இந்திய அரசின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா அரசு எந்தவிதமான எதிர்ப்பையும் வெளியிடவில்லை.
மாறாக சிவசேனா போன்ற அமைப்புக்கள் காரணமாக பௌத்திற்கு பாதிப்பு இருப்பதாக கூறி சிங்கள அரசு அரசியல் அமைப்பில் பௌதத்தத்தை பாதுகாக்க முன்னிலை கொடுக்கவும் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது அதனை தடுக்க எதனையும் செய்திராத இந்து மதவாத சக்திகளுக்கு ஈழத் தமிழர்மீது என்ன திடீர் பாசம்?
இது ஈழத்தை, ஈழத் தமிழினத்தை அழிப்பதற்கான பாசமே.
எனவே சிவசேனாவை ஈழத்திற்கு கொண்டு வருவது என்பது ஈழத் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் செயலாகும். இதனை அனைத்து ஈழத் தமிழர்களும் கணடிப்பதுடன் குறித்த அமைப்பை ஈழத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும். இந்திய இலங்கை அரசுகளின் சதிகளுக்குப் பலியாகாது நாம் உயிரை கொடுத்து வளர்த்த உரிமைப் போராட்டத்தை காப்பாற்ற ஒன்று திரள்வோம்.
ஆசிரியர்,
செண்பகம்.
14.10.2016
புகைப்படம் – சிவசேனா மதவெறி வன்முறையில் மாட்டிய இஸ்லாமிய இளைஞன் கைகூப்பி வணங்கி உயிர்பிச்சை கேட்கும் புகைப்படம். உலகின் கவனத்தை ஈர்த்த இந்தப் புகைப்படம் இந்து மதவெறியின் முகத்தை அம்பலம் செய்கிறது.
*
ஈழத்தில் சிவசேனை என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளை நிறுவுவதால் தேசிய இனவிடுதலைப் போராட்டம் ‘ மதவாதமாக மாறுவதும், பின்னுக்கு தள்ளப்படுவதுமே நிகழும். – திருமுருகன் காந்தி
மேற்குலகை நம்பியும், அமெரிக்க தீர்மானத்தினை நம்பியும் ஆறு ஆண்டுகளை கடத்திய பின்னர், இந்தியாவின் இந்துத்துவத்தினை நம்பி பிற ஆண்டுகளையும் வீணடிக்கப் போகிறோமா?..
அறிஞராகவும், ஆய்வாளராகவும் நீண்ட போராட்ட பின்புலத்தை கொண்ட மதிப்பிற்குரிய சச்சிதானந்தம் அவர்கள் இந்த முயற்சியை உடனே கைவிடுதல் நலம்.
தமிழர்களின் பல்வேறு அடையாளங்களை, முற்போக்கு அரசியல் சித்தாந்தங்களின் அடிப்படையில் ஒன்றிணைத்து வலுப்படுத்துவதே இன்றய வரலாற்று தேவை. போராளி திலீபன் முன்மொழிந்த சோசலிச தமிழீழத்திற்கு இந்த வழிமுறை நேரெதிராய் நிற்கும்.
அமெரிக்காவின் தீர்மானம் எப்படி நேரத்தினை தின்று, சிங்களப் பேரினவாதம் வலிமையடைய உதவியதோ, அதே போன்ற ஒரு பணியை இந்த இந்துத்துவ சக்திகளும் செய்து முடிக்கும்.
அமெரிக்கத் தீர்மானத்தினை ஆதரித்த சக்திகள் தமிழகத்தின் போராட்ட களத்தினை, இயக்கங்களின் ஒற்றுமையை கூறுபோட்டன என்பதை கடந்த காலத்தில் பார்த்தோம். இன்றும் கூட அமெரிக்காவிற்கு ஆதரவாய் தமிழகத்தின் இயக்கங்களை திரட்டுவதையே இவை செய்கின்றன. அமெரிக்கத் தீர்மானம் செய்த துரோகங்களைப் பற்றி வாய் திறப்பதில்லை. அவர்கள் இனி ஈழ அரசியலின் விடுதலையைப் பற்றி பேசுவதைக்காட்டிலும் வாழ்வுரிமை, சமபங்கு, அகதிகள் உரிமை என்று பேசி மடைமாற்றுவதையும் கண்டு கொண்டுதானிருக்கிறோம். வாய் திறந்து இதுவரை, அமெரிக்க தீர்மானத்தின் மூலமாக, நடந்தேறிய துரோகத்திற்கான சுயவிமர்சனத்தினை செய்ததில்லை. குறிப்பாக சொல்லவேண்டுமெனில், அமெரிக்க அரசு என்ன செய்யச் சொன்னதோ அதைச் செய்து இங்கே பிளவுகளை ஏற்படுத்தினார்கள். இன்று ஈழம் குறித்தோ, சர்வதேச விசாரணை குறித்தோ பேசுவதில்லை, மாறாக அமெரிக்காவில் சராசரி நிகழ்வுகளை நட்த்தித் திரிவதோடு முடிந்து விடுகிறது இவர்களுடைய தமிழார்வம், தமிழர் அரசியல்.
இதே போன்றதொரு பணியையே இந்த இந்துத்துவ முயற்சியும் செய்யும்.. தமிழகத்தில் செயல்படும் ஈழ ஆதரவு ஆற்றல்களை மேலும் கூறுபோட்டு பிரிக்கும்…. இப்படியான போக்குகள் ஈழப் போராட்டத்திற்கான தியாகங்களையும் செய்த தோழர்களை பெரும் சோர்வுக்குள்ளக்கவே செய்கிறது .
மும்பையில் தமிழர்களை அடித்து விரட்டிய ‘சிவசேனை’ அதே பெயரோடு ஈழத்தில் நுழைவது மிகப்பெரும் துயரம். வன்மையான கண்டனத்திற்குரிய நிகழ்வு. ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்த கிருத்துவர்களையும், இசுலாமியர்களையும் எப்படி ஒதுக்கி வைக்க இயலும்?… கிருத்துவ நிறுவனங்கள், ஆலயங்கள். இடிக்கப்பட்டதை எந்த கணக்கில் சேர்ப்பது?… இம்மாதிரியான நகர்வுகள்,. வலதுசாரித் தன்மையையும் மட்டுமே வளர்த்தெடுக்க மட்டுமே உதவும் அபாயம் உண்டு. இது, ஒரு போதும் உழைக்கும் மக்களுக்காக நிற்கப் போவதும் இல்லை, சிங்களப் பேரினவாதத்தினை வீழ்த்தப் போவதுமில்லை.
யாழில் இருக்கும் இந்திய துணைத்தூதரகம் இருப்பது இப்படியான அழிவு திட்டங்களை நிறைவேற்றவே…
இதை சாக்காக வைத்துக்கொண்டு தி இந்து நாளிதழ் . போன்ற போலிகள், தமிழீழ தேசிய எழுச்சியை மதவாத, சாதிய நிகழ்வாக சித்தரிக்கும், சிங்கள இனவாதம் முற்போக்கு அரசியலாக மாறிவிட்டதெனெ புகழ்வார்கள். ஏற்கனவே இப்படியான கட்டுரைகள் எகனாமிக் பொலிட்டிக்கல் வீக்லியில் எழுதப்பட்டு சில மாதங்களே ஆகிரது…
வலிமையுடன் முற்போக்கு மக்கள் எழுச்சியை கட்டி எழுப்பவில்லையெனில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரத கனவிற்குள் தமிழீழம் திணிக்கப்பட்டு சாகடிக்கப்படும். இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ், சிவசேனா, விஷ்வ இந்து பரிசத், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்ற கும்பலுக்கு தமிழினப் படுகொலை நடந்த போது வராத இந்துப் பாசம் இனிமேல் வரப்போகிறதா என்ன? ..
Recent Comments