Search

Eelamaravar

Eelamaravar

Category

வீரவரலாறு

வெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’

கேணல்.மனோகரன் (மனோமாஸ்டர்)
கதிரவேல் சந்திரகாந்தன்
திருகோணமலை.

கேணல்.மனோமாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப் புலிளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார்.இந்தியப் படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

போராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல் ரீதியிலும் வளர்க்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார்.போராளிகள் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த இறுக்கமான கொள்கையுடையாவராக இருந்தார்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பெறப்பட்ட பல்வேறு போரியல் வெற்றிகளுக்கு மட்டுமன்றி தமிழீழப் பரப்பெங்கும் களமாடிய ஜெயந்தன் படையணியின் வெற்றிகளுக்குப் பின்னாலும் இந்த மனிதரின் உழைப்பு உயர்ந்து நிற்கின்றது.

‘ஜெயசிக்குறு’ படைநடவடிக்கை காலத்தில் அவர் வன்னியில் நின்றபோது ஜெயந்தன், அன்பரசி படையணிகள் மேம்பாட்டு நடவடிக்கைகளில் மட்டுமன்றி பல்வேறு படையணிகள், பிரிவுகளுக்கும் தனது படைத்துறைப் பங்களிப்பை வழங்கினார்.

முன்னாள் உயர்தரக் கணித ஆசிரியரான இவர், பௌதீகம், வேதியியல் பாடங்களிலும் சிறந்த அறிவைக் கொண்டிருந்தார். இதனால்தான் அவரால் போராளிகளை அரச மருத்துவர்களாகக் கூட ஆக்கிக்காட்ட முடிந்தது. தமிழ் அடிச்சுவடி அறியாத பல போராளிகளை இந்த மனிதரால் ஆங்கிலம் கூட பேசவைக்க முடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர் பணியாற்றிய நாட்களில் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த கிராமப்புறங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டார். அவரது பணிகளில் சில இன்றுவரை நீட்சி பெறுவது அந்த மனிதரின் அன்றைய உழைப்பின் வெளிப்பாடு.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக கடினமாக உழைத்து 29.04.2009 அன்று முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மிக எளிமையான இந்த மனிதன் பற்றிய விரிவான பதிவொன்றை வரலராற்றில் பதிக்கவேண்டியது இந்தப் போராட்டத்தில் அவருடன் பயணித்த அனைவரினதும் கடமையாகும்.


——–

கேணல்.மனோகரனுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சாந்தன், அந்தச் சம்பவத்தில் விழுப்புண் அடைந்திருந்து பின்னர் வீரச்சாவடைந்த மட்டு-அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல்.கீர்த்தி ஆகியோரையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவில் நிறுத்தி இவர்கள் அனைவருக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.

————-
கேணல்.மனோகரன் ஆசிரியர் குறித்து அரசியல் ஆய்வாளர் திரு.இதயச்சந்திரன் அவர்கள் தனது முகநூலில் பதிந்திருக்கும் அவரது நினைவுக் குறிப்பு பின்வருமாறு:
“என் இளமைக்கால நண்பன். வீரச்சாவடையும் வரை அவனோடு பேசிக்கொண்டிருந்தேன். 29.04.2009 அன்று குருவியிடமிருந்து துயரச்செய்தி வந்தது. ‘அண்ணே எறிகணை வீச்சில் வாத்தி இறந்துவிட்டார்’. இப்படி எத்தனையோ இழப்புகள். வலிகளால் நிறைந்தது எம் வாழ்க்கை.”

கருணா வரலாற்று துரோகத்தை இழைத்தபோது அப்போது தராக்கி சிவராமின் பெயரும் கேள்விக்குட்படுத்தப்பட்டது.
எனக்கு தெரிந்த வரையில் அப்போது தராக்கி சிவராம் ஒருத்தரை தொடர்பு கொண்டு அவருக்கு மட்டும் தன்னிலை விளக்கம் அளித்தார்.
அவர்தான் கேணல் மனோ மாஸ்டர்.

அடுத்து கருணாவின் துரோகத்தைக் கண்டித்தும் வன்னி பின் தளத்தின் தேவை குறித்தும் அதன் படைத்துறை மூலோபாய சிந்தனைகளை விபரித்தும் சிவராம் “வீரகேசரியில்’ கருணாவை விளித்து ஒரு கடிதம் எழுத முன்பாகவும் சிவராம் தொடர்பு கொண்டு பேசிய ஒரு ஆளுமை கேணல் மனோ மாஸ்டர் மட்டுமே..
அன்று மனோ மாஸ்டர் சிறிது சலனப்பட்டிருந்தாலும் வரலாறு வேறு வகையில் எழுதப்பட்டிருக்கும்..

‘வெற்றி தோல்வி முக்கியமில்லை, அடுத்த தலைமுறைக்குத் தெளிவான வரலாற்றையே விட்டுச் செல்ல வேண்டும்’ என்ற தலைவரின் கோட்பாட்டிற்கமைவாக அன்று காய்களை நகர்த்தி தென் தமிழீழத்தின் மீது விழ இருந்த கறையை துடைத்து தாயகக் கோட்பாட்டை நிலை நிறுத்தியவர் மனோ மாஸ்டர்.
****

Nilavan Leema என்னும் முகநூலைக் கொண்டவர் பின்வருமாறு பகிர்ந்துள்ளார்:

“கேணல்.மனோகரன் ஆசியர் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆணிவேராவார். மட்டு/அம்பாறை மாவட்டங்களில் எண்ணற்ற போராளிகளை பயிற்சி அளித்து தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் கரங்களைப் பலப்படுத்தியவர். அது மட்டுமின்றி சிங்கள இராணுவ முகாம்களைத் துல்லியமாக வேவுபார்து, அந்த முகாம்களைத் தாக்கி அழித்திடும் வரைகும் இவர் உறங்குவதில்லை. தலைவர் அவர்கள் மீது மிகவும் அன்பு கொண்டவர். இந்த உன்னதமான வீரனைப் பற்றிய பதிவினை – இவர் வளர்த்த ஏராளமான போராளிகள் இன்னும் உள்ளார்கள் – அவர்களில் மருத்துவர் திரு.வாமன் உட்பட பலர் உள்ளார்கள் – இந்த வெளிவராத சூரியனின் ஆற்றலை வெளிக்கொண்டு வருவது, உடன் இருந்த போராளிகளின் கடமையாகும். நன்றி, வணக்கம்.”

குறிப்பு:- தமிழன் வன்னிமகன் என்னும் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

———

An another Patriotic Son of Our Soil!
பல்துறைகளில் வித்தகர்களாக மிளிர்ந்த பல போராளிகளை செதுக்கிய சிற்பி மனோமாஸ்டர்!

ஒரு நல்ல வீரனில் பண்பும் அடக்கமும் நிறையவே இருக்கும் என்று சாண்டிலியனும்,கல்கியும் எழுதிய பொத்தகங்களில் படித்திருக்கிறேன்.

அதை மனோமாஸ்ரிட(மு)ம் பார்த்திருக்கிறேன்!!

கல்வியும் எங்கள் மூலதனம்… என்பதை சிந்தையில் கொண்டு கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை பொதுமக்களிடமும் போராளிகளிடமும் ஊக்குவித்தவர்.

ஆங்கிலப் புத்தகங்களை அதிகம் அதிகம் வாசித்து யோசித்து யோசித்து எங்களது பூகோள அமைப்பு,காலநிலை,தட்பவெட்பம் போன்றவருக்கு ஏற்ப நவீன படைத்துறைப் பாடத்திட்டங்களை வரைந்தவர்.

சாதாரண போராளிகளுக்கும் இலகுவில் விளங்கக் கூடிய முறையில் அவர்களுக்கு பக்குவமாக படைத்துறை அறிவூட்டி வந்தார்.

அம்பு வில்லுடனும் ,வாளுடனும் இருந்த தமிழர்தம் படைத்துறை அறிவைப் பெருக்குவதற்கு தலைவரின் தலைமையில் தமிழினம் எடுத்த முயற்சிகளையும் வார்த்தைகளில் வடிக்கமுடியாது.

அந்த முயற்சிகளுக்கு காத்திரமான பங்களிப்பை நல்கிய எங்களின் ஆசான்!

காடுகளில் போராளிகள் கஞ்சி குடித்து வாழ்ந்த காலங்களிலும் அவர்களுக்கு #கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் முன்னின்று வழிகாட்டிய திறமையான வழிகாட்டியும் ஆவர்!

மனோமாஸ்டர் எனும் பெருவிருட்ஷத்தின் விழுதுகள் இன்றும் எம்மண்ணில் உள்ள கல்விச்சாலைகளிலும் பட்டி தொட்டிகளிலும் கல்விப்பணி செய்தே வருகிறார்கள்.

அந்தப் பெருவிருட்ஷத்தின் பெருவிழுதுகள் பாரெங்கும் பரவி அவரின் பெரும் பண்புகளைத் தாங்கி எங்களுடன் வாழ்ந்து வருவதால் பெருமை

சமராய்வு

எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்!

– முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள்

அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்தியில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுது. எங்கும் பிணக்குவியல் பிணங்களைப் பார்ப்பதற்கு கூட வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளின் கந்தகத்தீயின் வெளிச்சத்தில் பிணங்களை மக்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். எனது குடும்பமும், இன்னும் மூன்று குடும்பங்களையும் நான் ஓரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

மக்கள் கூட்டமாக எங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். புதுக்குடியிருப்பு முல்லை வீதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அடிக்கு மேல் அடி வைத்து நகரும் மக்கள் கூட்டத்தின் நடுவே எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. எங்கும் கூக்குரல். வெடிச்சத்தம் மிக அண்மையில் கேட்கத்தொடங்குகிறது. இராணுவம் எமக்கு அருகில் வந்துவிட்டான் என்பதை துப்பாக்கி வெடிகளின் சத்தம் உறுதிப்படுத்துகிறது. இந்த நிலையில் தொடர்ந்தும் அந்த இடத்தில் இருக்க முடியாது என உணர்கிறேன். ஆனாலும் மக்கள் செல்லும் வீதி இராணுவத்தின் எறிகணைத்தாக்குதலால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. வீதிக்கும் இறங்க முடியாது தொடர்ந்து அந்த இடத்தில் இருக்கவும் முடியாது விரைவாக நான் முடிவெடுக்க வேண்டிய நேரம்.
இராணுவத்தால் சுடப்படும் துப்பாக்கி ரவைகள் எனது குடும்பம் மறைந்திருக்கின்ற இருசக்கர உழவு இயந்திரப்பெட்டியில் பட்டுத் துழைக்கின்றன. இனி வேறு வழியில்லை அந்த இடத்திலிருந்து வெளியேறியே தீரவேண்டும். எனது குடும்ப அங்கத்தவர்களையும் எனது பாதுகாப்பிலிருந்தவர்களையும் வெளியேறுமாறு உத்தரவிடுகிறேன்.

அப்போது ஒரு கரும்புலி வீரன், இராணுவம் தாக்குதல் நடாத்திக்கொண்டிருக்கும் பக்கமாக நான் இருக்கும் இடத்திற்கு எதிர்ப்பக்கமாக புழுதி படிந்த சேட்டுடன் – ஒரு மெல்லிய உருவம், போராளிகள் வழமையாக நீழக்காற்சட்டைக்கு மேலாக இடுப்பில் மடித்துக்கட்டியிருக்கும் சறம், கையில் PK L.M.G., தன்னால் எவ்வளவுக்கு சுமக்க முடியுமோ அவ்வளவு LMG ரவைகளுடன் – நாங்கள் பதுங்கியிருப்பதை உணர்ந்த அந்தக் கரும்புலி வீரன் கட்டளை இடுகிறான்.

“எல்லோரும் போங்கோ!… இங்கை இருக்காதிங்கோ!… இனி ஒருவரும் இங்க இருக்க வேண்டாம். பாதை திறந்தாச்சு, எல்லோரும் போங்கோ! தயவு செய்து இருக்காதையுங்கோ….”
அந்த கரும்புலி வீரனின் கையில் இருக்கும் PK L.M.G இராணுவத்தை நோக்கி தீச்சுவாலையை ஊமிழ்கிறது. அதன் மங்கலான ஒளியில் அந்த வீரனின் முகம் என் கண்ணுக்கு புலப்படவில்லை. அவன் உருவம் மட்டுமே தெரிகிறது. மீண்டும் கரும்புலி வீரன் “எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம், நாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், எல்லோரும் போங்கோ…,” என்கிறான்.

இராணுவத்தின் துப்பாக்கிச்சூடு எமக்குப்படாதவாறு பாதுகாப்புக்கொடுத்து எதிரிக்குத் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறான் அந்த கரும்புலி வீரன். எனது குடும்பமும் ஏனையவர்களும் பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து வெளியேறுகிறோம். நாங்கள் நான்கு குடும்பங்கள் தான் அந்த இடத்திலிருந்து இறுதியாக வெளியேறியிருக்க வேண்டும். அந்தப்பகுதியில் பொது மக்கள் இல்லை என்பதை ஊகித்த அந்தக் கரும்புலி வீரன் தனது கடமையை அந்த இடத்திலிருந்து முடித்துக்கொண்டு இராணுவம் முன்னேறிக்கொண்டிருக்கும் திசை நோக்கித் தனது துப்பாக்கியால் சுட்டபடி நகர்கிறான்.

அந்த வீரனை நான் திரும்பித்திரும்பிப் பார்த்தவாறு நடக்கிறேன். என் கண்ணுக்கு எட்டியவரை அவனது துப்பாக்கி ஓயவில்லை.
முள்ளிவாய்க்கால் மண் வெறுமனே சோகத்தை மட்டும் சுமக்க வில்லை. உலகில் எந்த இனத்திற்கும் கிடைக்காத உன்னத புருசர்களையும் எமது மக்களுக்கு அடையாளமிட்டது.

குறிப்பு:- சிவகரன் (Siva Karan) என்னும் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

கரும்புலி லெப் கேணல் தேனிசை !


உலகெங்கும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக இன்றைய “யூலை-5 கரும்புலிகள் நாள்” நினைவுகூரப்படுகின்றது.

இந்த வேளை, இதுவரை வெளிவராத ஒரு கரும்புலி மாவீரரைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே பதிவுசெய்கிறேன்.

சமராய்வுப் பிரிவில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது 2009 ஆம் ஆண்டு தை மாதமளவில் கரும்புலியாகத் தன்னை இணைத்துக்கொண்டு, ஏறக்குறைய ஒரு மாதத்துக்குள்ளேயே ஒரு வெற்றிகரமான கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு “லெப்ரினன்ட் கேணல் தேனிசை” ஆகத் தன்னை வெடித்து, 23 எதிரிப் படைகளைக் கொன்றொழித்து, தரைக் கரும்புலி மாவீரராக எங்கள் இனத்துக்காகத் தன்னைக் கொடையாக்கிய ஒரு அற்புதமான போராளி தேனிசை.

ஆண்டு 2002 அளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டவர். விடுதலைப் புலிகளின் “#படைய_அறிவியற்_கல்லூரி” என்னும் பிரிவால் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று, அந்த அணியின் மகளிர் பிரிவில் கடமையாற்றினார்.

படைய அறிவியற் கல்லூரியால் தயாரிக்கப்பட்ட அனைத்து வகையான படைத்துறை சார் நூல்களையும் கட்டுவதற்கென்றே (binding) ஒரு பகுதி இருந்தது. அது ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பிரிவிலும் இருந்தது. இரகசிய ஆவணங்களை வெளியில் கொடுத்து கட்டுவிக்க முடியாது என்பதற்காகவே இந்தப் பகுதி உருவானது.

குறித்த இந்த நூல்களைக் கட்டும் பகுதியில் ஆரம்பத்தில் பணியாற்றிவந்தார் தேனிசை.

பின்னர், விடுதலைப் புலிகளின் சமராய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டு, அது விரிவாக்கம் பெற்றுக்கொண்டிருந்த போது அதற்கான துறைசார் ஆளணி தேவைப்பட்டது. அதனால், படைய அறிவியற் கல்லூரியில் இருந்து சமராய்வுப் பிரிவிற்கு போராளி தேனிசை பிரிவு மாற்றம் செய்யப்பட்டார். அந்த ஆண்டு 2007 இன் தொடக்கத்தில் என நினைக்கிறேன்.

சமராய்வுப் பிரிவின் நூலகத்திற்குப் பொறுப்பாக போராளி தேனிசை கடமையாற்றினார். அதேவேளை, அங்கே பல்வேறு பணிகளை அவர் ஏனைய போராளிகளோடு இணைந்து செய்தார். நூல்கள் தயாரித்தல், கட்டுதல், அறிக்கை தயாரித்தல், வடிவமைத்தல், தட்டச்சு செய்தல் போன்ற கடமைகளையும் அவர் ஆற்றிவந்தார்.

இவ்வாறு பணிகள் பல முனைகளில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தபோது, தமிழீழம் எங்கும் போர் மிகவும் தீவிரமாகிக்கொண்டு இருந்தது. படிப்படியாக நிலங்கள் விடுபட்டுக்கொண்டிருந்தன.

இறுதியாக புதுக்குடியிருப்பு வரை எதிரி முன்னேறியதால், அந்தப் பகுதியில் பாரிய மறிப்பு வரிசை அமைத்து, எதிரியின் முன்னகர்வுகள் முறியடிக்கப் பட்டுக்கொண்டு இருந்தது.

அந்த வேளை, பரவலாக கரும்புலியாக இணைய விரும்புவோர்களது பெயர் விபரங்கள் எடுக்கப்பட்டு வந்தது. அப்போது, சமராய்வுப் பிரிவிலும் எடுக்கப்பட்டது. இதன்போது, போராளி தேனிசையிடம், “கரும்புலியாக இணைந்துகொள்ள விருப்பமா?” என்று அறிக்கை எடுத்த போராளி கேட்டார்.

அதற்கு தேனிசை தனது வழக்கமான புன்னகையுடன் மிகச் சாதாரணமாக, “ஆம்” என்று கூறித் தலையசைத்தார். அறிக்கை எடுத்தவரும் அதனைப் பார்த்தவர்களும் தேனிசை ஏதோ பகிடியாகக் கதைக்கிறார் என்று நினைத்து, மறுபடியும் கேட்டு, “என்ன உண்மையாகவா ஆம் என்கிறீர்கள்,” என்று கேட்டு உறுதிப்படுத்தினார்கள்.

கறுத்த உருவம். என்றும் இழையோடும் அழகிய புன்முறுவல். கடமைகளை நேர்த்தியாக முடிக்கும் பக்குவம். சக போராளிகளோடு அன்பாய் பழகும் மனம். அதேவேளை, அதிகம் பேசாத தனித்துவம். இதுதான் போராளி தேனிசை.

அவ்வாறு அவர் சம்மதம் தெரிவித்து சிலநாட்கள் கழிய, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் திரு.பொட்டு அம்மான் அவர்கள் சமராய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் திரு.யோகி அவர்களுடன் பேசிவிட்டு போராளி தேனிசையை கரும்புலிகள் அணியில் இணைத்தார்.

அவ்வாறு அவர் இணைக்கப்பட்டு, அடுத்த சில நாட்களிலேயே அவர் கரும்புலிக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் பயிற்சிகளை மிகக் குறுகிய நாட்களுக்குள் பெற்றார். அத்துடன் தனது இலக்கையும் பார்வையிட்டார்.

தான் இலக்கில் சென்று வெடிப்பதற்கு ஒரிரு நாளிற்கு முன்னர் தான் பணியாற்றிய சமராய்வுப் பிரிவுக்கு வந்து, தனது சகோதரர்களாகவும் ஒரு கூட்டுக் குடும்பமாகவும் இருந்த சக போராளிகளிடம் இறுதி விடைபெற்றுச் சென்றார்.

மற்ற எல்லோருக்கும் அது மிக உணர்வுபூர்வமான விடயமாக இருக்க, தேனிசைக்கு மட்டும் அது ஒரு விடுமுறைக்கான விடுப்பு எடுத்துச் செல்வதுபோன்ற உணர்வு. அப்போதும் தேனிசை புன்னகையும் கலகலப்பான முகபாவனையுடன் தான் விடைபெற்றுச் சென்றார். விடைகொடுத்த போராளிகளுக்கு தேனிசையைக் கடைசி முறையாகப் பார்க்கின்ற தருணம் அது. அந்தக் கணத்தை எழுத்தில் உணர்த்திவிட முடியாது.

“சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும், என் சாம்பலும் தமிழ் மணந்து வேகணே்டும்,” என்ற கூற்றைப் போன்று, அன்று தேனிசை தனது இறப்புக்கான இறுதி விடைபெறும்போதும் புன்னகையோடுதான் இருந்தாள். அவள் வெடித்த கணத்தில் சாம்பலாகும் போதும் புன்னகையுடன் தான் இருந்திருப்பாள்! தனது இறப்பால் தமிழினம் விடிவுபெறட்டும் என்பதற்காக.

தேனிசை விடைபெற்றுச் சென்று ஓரிரு நாட்கள் கழித்து, பொட்டு அம்மான் அவர்கள் யோகி அண்ணையைச் சந்தித்து தேனிசை புதுக்குடியிருப்புப் பகுதியில் கரும்புலியாக வெடித்து 23 எதிரிப் படைகளைக் கொன்றொழித்தார் என்ற செய்தியைத் தெரிவித்தார். “கரும்புலி தேனிசை மிகவும் சிறந்த போராளி. மிகக் குறுகிய நாட்களுக்குள் தனது கடமையைச் சரியாகச் செய்துமுடித்தார்,” என்று யோகி அண்ணையிடம் பாராட்டினார் பொட்டு அம்மான் அவர்கள்.

தேனிசைக்கு லெப்ரினன்ட் கேணல் என்ற நிலை வழங்கப்பட்டது.

இன்று, கரும்புலி மாவீரர் லெப்.கேணல் தேனிசை அவர்களின் படம் எங்களிடம் இல்லை! அவர் குறித்த முழுமையான தரவு எங்களிடம் இல்லை! ஆனால், அவரோடு பணியாற்றிய எஞ்சிய ஓரிரு போராளிகளிடம் மட்டுமே அவரது இந்த நினைவுக் குறிப்பு உள்ளது.

இப்படி எத்தனையோ ஆயிரம் மாவீரர்களின் வரலாறுகள் பதியப்படாமல் எமது இனம் வாழத் தங்களது உயிர்களைக் கொடையாக்கினார்கள்.

வாழ்ந்துகொண்டிருக்கின்ற எங்கள் இனம் அவர்களின் தியாகத்தையும் வரலாற்றையும் கற்றுணர்ந்து அவர்களின் நினைவுகளுடன் வாழவேண்டும்; அவர்கள் எந்த உயரிய நோக்கத்துக்காகத் தங்களைக் கொடையாக்கினார்களோ, அந்த உயரிய நோக்கம் நிறைவேற ஒவ்வொரு தமிழரும் தங்களது பங்களிப்பை சரியான கட்டங்களில் செய்யவேண்டும்.

இதுதான் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குச் செய்யும் உயரிய மாரியாதையாக இருக்கும்.

த.ஞா.கதிர்ச்செல்வன்.
நன்றி- சமராய்வு

அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 31 ஆண்டுகள் கடந்துவிட்டன.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.

இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்வாறு சிறீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீரவரலாறானார்கள்.

2007ஆம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம்மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர்சூட்டப்பட்ட கரும்புலித்தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை, 2009 ஆம் ஆண்டு வான்கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.

முள்ளிவாய்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீரவரலாறானார்கள்.

வெளியில் தெரியாத அந்த அற்புதமனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.

கரும்புலிகளின் வரலாறு

http://www.eelamview.com/2011/07/06/black-tigers-day-5/
http://www.eelamview.com/2018/01/21/black-tigers-15/

http://www.eelamview.com/2016/09/28/black-tigers-1-9/
http://www.eelamview.com/2015/07/04/black-tigers-day-2015/

தமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசியத் தலைவரும் மின்னூல்கள்

Pdf  தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழீழத் தேசியத் தலைவரும்

**

http://anyflip.com/xaxc/tqms/

http://online.anyflip.com/xaxc/tqms/

————–viduthalaiperoli-history of prabakaran

pdf–விடுதலைப்பேரொளி

http://anyflip.com/xaxc/ryqq

http://online.anyflip.com/xaxc/ryqq/

—————————

Pdf prabhakaran-a-leader-for-all-season-book

தமிழில்

http://online.anyflip.com/xaxc/eift/

PDF : எனது இலட்சியப் பாதை

http://anyflip.com/xaxc/awad

http://online.anyflip.com/xaxc/awad/

————-

pdf –பிரபாகரன் பற்றி பொட்டு

http://online.anyflip.com/xaxc/flnq/

http://www.eelamview.com/2011/11/17/a-histroy-ofprabhakaranism/

நீரிற் கரைந்த நெருப்பு .! லெப்.கேணல் ராஜன்.!

லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம்.

அன்று சித்திரை 10.2000 விடுதலைப் போர்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்தப் போர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலைபோல் வெடிக்கச் செய்தான் எதிரி. புலிகளை மட்டுமல்ல, தமிழனின் வீரம்பேசி எழுந்துநின்ற அந்தச் சின்னஞ்சிறு பிரதேசத்தையே பூமியிலிருந்து உடைத்தெறிந்துவிடப்போவதுபோல் எறிகணைகளை ஆயிரமாயிரமென இடைவிடாது துப்பின எதிரியின் பீரங்கி வாய்கள். எம் தாய்மண்ணை ஏறி மிதித்த ராங்கிகள் உள்ளிட்ட கவச வாகனங்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு எம் வீரர்களை மூன்று திசைகளாலும் சூழ்ந்துகொண்டு களமிறங்கின. 30,000 எதிரிகள் நடுவே நிற்கும் நூற்றுக்கணக்கிலான புலிவீரர்களை மட்டுமே அவை எதிர்கொண்டன. ஆயினும், எதிரியை முறியடித்தேயாக வேண்டிய நிலை. ஆனையிறவை வீழ்த்துவதற்கான அடுத்தகட்டப் படைநகர்த்தல் அன்றைய சண்டையின் முடிவிலேயே தங்கிநின்றது. தன் போராளிகளின் மனவுறுதியை அதிகம் நம்பினார் தலைவர். போராளிகளோடு போராளியாகக் களத்தில் நின்று சமரை வழிநடத்தினார் தளபதி பிரிகேடியர் பால்ராஜ். அவருக்குத் துணையாய் களத்தின் மையத்தில் நின்றான் ராஜன்.

1990 இன் முற்பகுதியில் மன்னார் மாவட்டப் போர்க்களங்களிற் சிறிய அணிகளுடன் களமிறங்கி, முப்பத்தைந்திற்கு மேற்பட்ட போர்க்களங்களில் அணிகளை வழிநடத்தி, பெரும் போர்வீரனாய் உருவெடுத்து நின்ற எங்கள் தளபதி ராஜனின் களவாழ்வின் அத்தியாகத்தைப் புகழ்பூத்த இத்தாவிற் (கண்டி வீதி) போர்க்களத்திலிருந்து தொடங்குவதுதான் பொருத்தமானது.

நண்பகலைத் கடந்துவிட்ட நேரம். களத்தின் மேற்கு முனையில் யாழ்ப்பாணப் பக்கமாகக் கண்டிவீதியை மூடியிருந்த காவலரண்களிற் கணிசமானவை எதிரியிடம் வீழ்ந்துவிட்டன. “றோமியோ, றோமியோ” என ராஜனின் ‘சங்கேத’ப் பெயரை அழைத்த அலைவரிசைகளே எங்கும் நிறைந்திருந்தன. ஒவ்வொன்றிற்கும் பதில்சொல்லி, தளபதி பால்ராஜின் கட்டளைகளை நிறைவேற்றி, முறியடிப்பு அணிகளை வழிநடத்திக்கொண்டிருந்தான் ராஜன். அந்தச் சிறிய களப்பகுதியில் ஏற்கனவே சூழ்ந்துவிட்ட எதிரிகள் நடுவே, கணக்கின்றி எதிரி ஏவிய எறிகணைகள், ரவைகளுக்கிடையே ஏனையவர்களுடன் இணைந்து விபரீதம் ஏதுமின்றி செய்து முடித்த அந்தப் பனி அவ்வளவு இலகுவானதன்று; எந்தவொரு போரியலாளனையும் அது வியக்கவைக்கும்.

அணிகள் களமிறக்கப்பட்டன. பறிகொடுத்த காவலரண்களை ஒவ்வொன்றாக எம் வீரர்கள் மீட்க, எரிமலை நடுவே நின்று அணிகளை நகர்த்தினான் ராஜன். எதிரியின் நடவடிக்கை முழுமையாக முரியடிக்கப்படவிருந்த கட்டம்; எதிரி அவமானம் அடையத் தொடங்கிய நேரம்; மீண்டும் ஆனையிறவுத் திசையிலிருந்து மூன்று முனைகளால் எம் அரண்களை உடைத்தான் எதிரி. நிலைமை சிக்கலாகியது. களநிலை மீண்டும் எதிரிக்குச் சாதகமாய் மாறிவிட்டது. நிலைமைகளைக் கணிப்பிட்ட தளபதி பிரிகேடியர் பால்ராஜ், மேற்கு முனைச் சண்டைகளை அப்படியே நிறுத்திவிட்டுக் கிழக்கு முனையில் – ஆனையிறவுப் பக்கமிருந்து முன்னேறிய எதிரியை முறியடிப்பதற்கு முடிவுசெய்தார். அதைச் செய்துமுடிக்கக் கூடியவர்களுள் ராஜனும் இருந்தான். அவனுக்கு அதற்கான கட்டளை வந்தது.

சுழன்றடித்த புயலைப்போல் பல மணித்தியாலங்கள் ஓய்வற்று நீண்டு சென்றது அந்தச்சமர். நள்ளிரவை எட்டிய நீண்ட சமரின் முடிவில் எதிரியின் கிழக்குமுனை நகர்வை முழுமையாய் முறியடித்துத்தன் போராளிகளின் வீரத்தையும் போராற்றலையும் நிரூபித்தான் ராஜன். மேற்குமுனையில் எதிரி கைப்பற்றிய சில அரண்களிலிருந்து சிறிது தூரம் பின்வாங்கிப் புதிய நிலைகளை அமைப்பதற்கு முடிவுசெய்யப்பட்டது. விடிவதற்கிடையில் அது செய்துமுடிக்கப்பட்டேயாகவேண்டும். அப்பணி ராஜனிடமே விடப்பட்டது. அன்று முழுவது போராளிகளும் ராஜனும் ஓயவேயில்லை. ஆனையிறவின் தலைவிதி அவர்கள் கையிலேயே இருந்தது.மறுநாள் விடிந்ததும் ‘புலிகளால் இனிமேலும் நின்று பிடிக்க முடியாது’ என்ற அசையாத நம்பிக்கையோடு கைப்பற்றிய பகுதியிலிருந்து மீண்டும் புதிய அணிகளைக் களமிறக்கினான் எதிரி. அன்றைய சண்டையின் முடிவு, ராஜனின் ஓய்வற்ற உழைப்பிற்கும் அவனது போராற்றலுக்கும் சாட்சியமாய் முடிந்தது. பேரிழப்புடன் எதிரி முடங்கினான். பெரும் படைப்பலம் ஒன்றாற் சின்னா பின்னமாக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அபாயகரமான அதேகளத்தில் வைத்தே அத்தனை வேகமாய்ச் சீர்செய்து முடிக்கப் புலிகளால் எப்படி முடிந்தது? களத்தில் நிற்கும் ராஜனை முழுமையாக அறிந்தாலே இதற்கு விடைகிடைக்கும்.

“அண்ணை ஒண்டும் யோசிக்காதேங்கோ, நான் எல்லாம் செற்றப்பண்ணிப் பிடிச்சுத் தருவேன்” இறுக்கமான கட்டங்களில் ராஜனிடம் இருந்துவரும் அந்த வார்த்தைகளை மூத்த தளபதிகள் எல்லோரும் ஒருங்குசேர நினைவுகூருகின்றனர். நெருக்கடியான எத்தனையோ கட்டங்களிற் புத்துணர்ச்சியளித்த அவனது இந்த வார்த்தைகள் நம் எல்லோருக்குள்ளும் இன்னமும் பசுமையாய் ஒலிக்கின்றன.

வன்னிக்களத்தின் உச்சமாய் அமைந்த “ஜசிக்குறு” எதிர் நடவடிக்கைக் காலம். புலிகளை நெருக்கடிக்குள் தள்ளவந்தவர்களைப் புலிகள் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் விந்தையை உலகம் வியப்புடன் பார்த்திருந்தது. களத்தில் எதிரி நினைப்பதை அடையமுடியாத படி தடுத்து நாம் நினைத்தபடி எதிரியை ஆட்டுவித்த நுட்பமான போரரங்கைத் தலைவர் நெறிப்படுத்திக் கொன்றுந்தார். களத்தில் நின்ற போராளி ஒவ்வொருவரது கைகளிலும் அன்று எம் தேசத்தின் வாழ்விருந்தது. எதிரிதான் நினைத்ததை அடைந்துவிடும் எந்தவொரு கட்டமும் போரரங்கில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவந்துவிடும் அத்தகைய களத்தில் ராஜன் சந்தித்த சண்டைகள் பல. அதுவும் வன்னியின் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக இரணைமடுவினூடான பாதிமட்டுமே இருந்தது. அதை இராணுவம் கைப்பற்றுவது சண்டையிற் பாரிய திருப்பங்களை ஏற்படுத்தும். ஒருநாள் எதிரிக்குச் சாதகமாய் மாறியிருந்தது களநிலை. அதைத் தலைகீழாய் மாறிவிட்ட சண்டையில் ராஜன் என்ற புசல் சுழன்றடித்த விதம் இப்போதும் அவனை வழிநடத்தியவர்களின் கண்களில் நிற்கிறது.

“அன்று 1998 ஆனி 04ம் திகதி. கிளிநொச்சி முனையில் எதிரி பெரும் படையெடுப்பைச் செய்தான். எமது பாதுகாப்பு நிலைகளை உடைத்து எதிரி வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் எமது பகுதிக்குள் நுழைந்துவிட்டனர். பல மணித்தியாலங்களாகச் சண்டை தொடர்ந்தது. எதிரிதன் இலக்கை (இரணைமடுவை நோக்கியது) ஏறத்தாழ அடைந்துவிட்டக்கூடியதாகவே காலநிலை இருந்தது. எப்படியாயினும், அன்றைய நடவடிக்கையை முறியடிப்பதே எமது இறுதி முடிவு. முன்னணியில் நின்ற அணிகள் கணிசமான இழப்பைச் சந்தித்திருந்தன. இந்நிலையில் அந்த முறியடிப்பை எப்படிச் செய்து முடிப்பது? பல மைல்களுக்கப்பால் நிலைகொண்டிருந்த ‘றோமியோ’ வின் அணியைத்தான் நான் அழைத்தேன். எதிரி உறுதியாய் நிலையெடுக்கமுன் ‘றோமியோ’ வின் அணியைச் சண்டைமுனைக்கு வேகமாய் நகர்த்துவது கடினமானது. அவனுக்கு நான் கட்டளையிட்டபோது அவனிடமிருந்துவந்த நம்பிக்கையும் துடிப்பும் நிறைந்த பதில் எனக்குத் தெம்பூட்டியது. எவரும் நினைத்துப்பார்க்காத வேகத்தில், பல மைல்கள் ஓட்டத்தில் எதிரியின் எறிகணைகளைக் கடந்து சண்டைமுனையில் தன் அணியுடன் வந்தவுடனேயே அவன் முறியடிப்புச் சமரைத் தொடங்கவேண்டியிருந்தது. கடைசிவரை இறுக்கமாகவே தொடர்ந்தது சண்டை. அப்போது ‘அண்ணை நான் விடமாட்டன் பிடிச்சுத்தருவன்’ என்ற அவனது நம்பிக்கை தரும் குரலையே நான் கேட்டேன். சோர்ந்து போகாது தன் அணியை வழிநடத்திய றோமியோவின் விடாமுயற்சி இறுதியில் எதிரியை ஆட்டிவைத்தது. அன்றுதான் றோமியோவிற்குள் இருந்த அத்தனை பெரிய ஆற்றல்களை நான் முழுமையாக இனங்கண்டுகொண்டேன். அன்றைய சண்டையில் றோமியோவும் அவனது வீரர்களும் வெளிப்படுத்திய அபாரமான வீரமும் தீரமிக்க தாக்குதலும் என்றைக்குமே எம் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டியவை” என அன்றைய நினைவுகளை ராஜனின் சாவின்பின் நினைவு கூர்ந்தார் தளபதி பிரிகேடியர் தீபன்.

அன்றைய வெற்றியைத் தமிழினம் பெருமையுடன் கொண்டாடியது. எதிரிக்கோ தன் வெற்றிச் செய்திக்குப் பதிலாகப் பேரிழப்பின் கணக்குகளை மட்டுந்தான் தன் எஜமானர்களுக்கு அனுப்பமுடிந்தது. இந்த வெற்றியின் பின்னால் எவருக்கும் வெளித்தெரியாது ராஜன் இருந்தான். இவையெல்லாம், ‘ஓயாத அலைகள் – 02′ இன் பின்னாற் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதியாய் அவனை உயர்த்தின.

வன்னிக்களத்திற் பெரும்புயலின் நடுவே நின்று எம் தமிழீழத் தாயின் வாழ்வை அவள் புதல்வர்களால் எப்படிக் காக்க முடிந்தது? நிச்சயமாக உயிர் அர்ப்பணிப்புக்களால் மட்டுமே அது நிகழவில்லை. உயிரையே வெறுக்கவைக்கும் அந்தக் கடினமான காலங்களில் உயிர் வாழ்ந்து அந்த உயிரை வைத்தே எம் வாழ்நாளின் இறுதி மணித்துளிகளிலும் உழைத்தார்கள் எம் மாவீரர்கள். அவர்களின் உன்னதமான வாழ்வின் அந்த மணித்துளிகளில்தான் அந்த இரகசியத்தைத் தேசமுடியும். இந்தக் களத்தில் ஒரு ‘செக்கன்’ அணித்தலைவனாய் இருந்து ஒரு படையணியின் துணைத் தளபதியாக உயர்ந்த ராஜன் ஒரு பொறுப்பாளன் என்ற வகையில் எவ்வளவு சுமைகளைச் சுமந்திருப்பான்! தன் உயிரைவைத்து இருப்பையே உருக்க அவன் உழைத்த உழைப்பின் மணித்துளிகளின் நீட்சி எத்தனை பெரியது! அவனது வாழ்வின் நீண்ட பக்கங்களை உணர்வுகுலையாது பக்குவமாய்ச் சொல்லிவிடத்தான் முடியுமா?

அவை ‘ஓயாத அலைகள் -03′ இற்கு முற்பட்ட நாட்கள். வன்னிக்களத்தில் ஒரு வருடமாகப் புலிகளின் மௌனத்தின் இரகசியம் புரியாது எல்லோரும் திணறிக்கொண்டிருந்தனர். “முதலிற் பாதுகாப்புப் போர்முறையில் நிறைய அனுபவங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் போர்த்திறனை எதிரிக்குப் புரியவையுங்கள். அடுத்த கட்டத்தை நான் பிறகு சொல்கிறேன்” என்று தலைவர் அவர்கள் கூறியபோது ஓர் இளநிலைத் தளபதியாய் நின்ற ராஜன் தன் ஆளுமையையும் வீரத்தையும் மெருகேற்றவேண்டியிருந்தது. ஏனைய தளபதிகளுடன் சேர்ந்து தன் வீரர்களின் சண்டைத்திறனை வளர்ப்பதற்காக அவன் உழைக்கவேண்டியிருந்தது.

‘ஓயாத அலைகள் -03′ இன் முழுமைப்படுத்தப்பட்ட அத்தியாயத்தில் ராஜன் தனது அழியாத தடயங்களைப் பதித்தான். அதுதான் அவனைப் போரியலில் மேலும் வளர்த்து விட்டது. அதுதான் ராஜனை எமது இயக்கத்திற்கு அப்பால் வெளியே அறிமுகமாக்கியது. அதிலும் சில இறுக்கமான கட்டங்களில் ராஜன் ஆற்றிய பணிகள் அவனை எம் வரலாற்றில் என்றைக்குமே வாழவைக்கும் வலிமை வாய்ந்தவை.

ஒட்டுசுட்டான். ‘ஓயாத அலைகள் – 03′ இன் வாசற்படி அதுதான். எப்போது எம் வாழ்வை சிங்களத்திடம் தொலைத்துவிடப் போகிறோமோ என வன்னி மக்கள் யுறும் அளவிற்கு எதிரி களச்சூழலை மாற்றியிருந்த காலம் அது. எங்கே, எம் போராட்டம் மீளமுடியாத நெருக்கடிக்குள் போய்விடபபோகின்றதோவென எம் அனுதாபிகள் எல்லாம் ஏங்கிக்கொண்டிருன்தனர். “இயக்கம் சும்மா விட்டிட்டு இருக்காது” என்ற உறுதியான நம்பிக்கையும் எம்மக்களிடம் வேரூன்றியிருந்தது. எல்லாமே அந்த வாசற்படிக்கான முதலுடைப்பின் வெற்றியில்த்தான் தங்கியிருந்தன. அதற்காக ஆராய்ந்து, நிதானித்துத் திட்டமிட்ட தலைவர் பொருத்தமான காலத்தைத் தெரிவுசெய்து அதன் பணிகளைப் போராளிகளிடம் ஒப்படைத்திருந்தார். அப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்தவன் லெப்.கேணல் ராகவன். “உன்னை நம்பித்தான் ஓட்டுசுட்டானுக்குள்ள இறங்கிறன்” என்று கூறித் தலைவர் அவர்கள் அவனிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தபோது, தலைவர் சொன்னதையே நினைத்துத் திரிந்த அந்தத் தளபதியின் அருகிருந்து “பிரச்சினை இல்லை அண்ணை அதெல்லாம் சுகமா செய்து முடிச்சுப்போடலாம்” என்று நம்பிக்கை வார்த்தை கூறுவான் எங்கள் ராஜன்.

சண்டைக்கு முந்தய நிமிடங்கள்; மிகப்பெரிய திட்டம் என்பதால் எல்லோருள்ளும் படபடப்பு, இறுதி நிமிடங்கள் நெருங்க நெருங்க தவறுகள் எதுவும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற தவிப்பு. எல்லாம் நிதானத்துடன் நகர்ந்தன. மற்றைய முனையில் திட்டமிட்டபடியே சண்டை தொடங்கப்பட இந்த முனையில் இன்னும் சண்டை தொடங்காததால் பரபரப்பானது களம். நிலைமையைச் சீர்செய்ய முன்சென்ற தளபதி ராகவன் குண்டுபட்டு வீழ்ந்துவிட்டான். அணிகளை ஓரளவு சீற்படுத்தியபடி எதிரி அரண்களுக்குள் மூர்க்கமாய் நுழைந்த லெப்.கேணல் நியூட்டன் ஓரிரு காவலரண்களை வீழ்த்தி நிலைமையை மாற்ற முயலவே அடுத்த இடி நியூட்டனும் குண்டுபட்டு வீழ்ந்தான். குறுகிற நேரத்தில் அனுபவம் வாய்ந்த களமுதல்வர்கள் இருவர் வீழ்ந்துவிட்டதால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு முன் கேள்விக்குறிகள் எழுந்தன. ஒட்டுசுட்டான்…… கரிப்பட்ட முறிப்பு…. மாங்குளம்……. கனகராயன்குளம்….. புளியங்குளம்…. எனச் செய்துமுடிக்கவேண்டிய பாரிய படைநகர்த்தல்கள் மனக்கண்முன் நின்றன. பதிலாய் எழுந்து அணிகளை ஒழுங்கமைத்து வழிநடத்தத் தொடங்கினான் ராஜன். “ஒன்றும் யோசிக்காதேங்கோ நான் பிடிச்சுத்தருவன்” எப்போதும் ஒலிக்கும் அந்த வார்த்தைகள் தான் இப்போதும் வேண்டும். ஆனால், இப்படியான பெரிய பொறுப்புக்களை இதுவரை சுமந்திராத ராஜனால் அதைச் செய்துமுடிக்க முடியுமா என்ற ஐயம் எல்லோருள்ளும் இருக்கவே செய்தது. அவ்விடத்தில் ராஜனைத்தவிர வேறு எவரும் இல்லை. இறுதியில் எல்லோர் புருவங்களும் உயரும்படி படைநகர்த்தினான் ராஜன். வெற்றிச் செய்திகள் ஒவ்வொன்றாய் எம்மக்களைக் குதூகலிக்க வைக்க, எதிரிகள் தலையில் அவை பேரிடியாய் இறங்க, ராஜன் தலைவரின் திட்டங்களைச் செயற்படுத்தினான். அந்தக் களந்தான் ராஜனின் ஆற்றலைத் தலைவருக்கு இனங்காட்டியது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாய் அவனை உயர்த்தியது.

ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் மூன்று. பரந்தன் ஆக்கிரமிப்புத்தளம் புலிகளின் வரவை நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்தது. ஒன்றன்பின் ஒன்றாய் இறுக்கமாக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்துள் அது இருந்தது. ஆக்கிரமிப்பாளர்களின் போர்மூலோபாயத்தின் முது கெலும்பாய் ஆனையிறவு இருந்ததென்றால் ஆனையிறவின் பாதுகாப்பின் முதுகெலும்பாய் பரந்தனும் இருந்ததெனலாம். அத்தகையதொரு களத்தில் எதிரிக்குச் சவால் விடுவதாய்ப் பகற்பொழுதில் ஒரு சமருக்கு ஏற்பாடாயிருந்தது. மூன்று முனைகளில் திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டத்திற்கு ஒரு சமருக்கு ஏற்பாடாகியிருந்தது. மூன்று முனைகளில் திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டத்திற்கு ஒரு முனையின் தளபதியாய் ராஜன் நியமிக்கப்பட்டான். பரந்தனின் கிழக்குப்புறக் காவலரண் வரிசையைக் கைப்பற்றி எதிரியின் பாதுகாப்பு வியூகங்களைச் செயலிழக்கவைக்கும் பணி அவனுடையது. திட்டத்தின்படி எல்லாவற்றையும் அவன் திறம்படச் செய்துமுடித்தான். எதிர்பார்க்கப்பட்டதைவிட ராஜன் அதிகமாகவே அங்கு சாதித்தான். அங்கு ராஜனின் இடைவிடாத உழைப்பும் தந்திரமான சில செயற்பாடுகளுந்தான் எதிரியை நிலைகுலைய வைத்தன.

போராளிகளை அரவணைப்பதிலும் வர்களின் தேவைகளைக் கவனிப்பதிலும் ராஜன் அதீத அக்கறை செலுத்துபவன். அவர்களின் அன்னையாய், தந்தையாய்….. என எல்லாமாயும் அவன் இருப்பான். சண்டைக்களம் பரபரப்புடன் இருக்க, அடுத்த கட்ட ஏற்பாடுகளில் எல்லோரும் தீவிரமாய் ஈடுபட்டிருக்க, ஓய்வற்ற வேலைகளின் நடுவேயும் களைத்திருக்கும் தன் போராளிகளுக்காகச் சோடாவும் உலருனவும் கேட்டுத் தளபதியுடன் சண்டை பிடித்துக் கொண்டிருப்பான். தொடர்சண்டைகள் நடந்துகொண்டிருக்க ராஜனின் கட்டளை அரணிற் போராளிகளுக்கு அனுப்புவதற்காக ஏதாவது கறியும் தயாராகிக்கொண்டிருக்கும். இப்படித்தான் எல்லா விடயங்களிலும் ராஜன் தன் போராளிகளைக் கவனித்தான். ராஜனின் இத்தகைய இயல்பு இருமுறை தலைவரின் முன்னாள் அவனைக் கூச்சத்தோடு தடுமாற வைத்த காட்சி இப்போதும் கண்டவர் கண்களில் முன் அழியாது தெரிகிறது.

கண்டிவீதி – இத்தாவிற் போர்க்களத்திற் சண்டைகளுக்கு ஓய்வே இருக்காது. தொடர் சண்டைகளாற் சோர்ந்துபோகும் உடலைவைத்துப் போரிடுவதற்குப் போராளிகளுக்கு அதித மன உறுதி தேவைப்படும். அக்காலத்திலும் போராளிகளை உற்சாகமாய் வைத்திருந்தான் ராஜன். அங்கு நடக்கும் கடுமையான சண்டைகள் சற்றுத் தணிந்துவிட்டால் ராஜன் ஆட்டுக் கறிக்குத் தயார்பண்ணத் தொடங்கிவிடுவான். போர்க்களமும் கரிக்கலமும் ஒன்றாகவே அங்கு நடக்கும். அந்தக் களமுனையின் ஒரு பகுதியிற் கட்டாக்காலி ஆடுகள் திரிவது வழக்கம். அந்தக் களப் பகுதியில் உள்ள போராளிகளுக்கு ராஜன் வோக்கியில் அறிவிப்பான். “இஞ்ச கொஞ்சம் தணிஞ்சுபோய் இருக்கு, வகுப்பு எடுக்கலாம் போலகிடக்கு, நிண்டால் ஒரு மாஸ்ரரை அனுப்புங்கோ.” ‘மாஸ்ரர்’ என்பது ஆட்டுக்கிடாய் என்று அவர்களுக்கு மட்டும் புரியும். அது அவர்களுக்கிடையினான மொழி. மாஸ்ரர் – அதுதான் கிடாய் ஆடு. ராஜனிடம் போவார் அவனது கட்டளை போலவே ஒவ்வொரு காவலரணுக்கும் கறியும் போகும். ஒருமுறை சண்டை தனிந்திருப்பதாகவும் மாஸ்ரரை வகுப்பெடுக்க அனுப்புமாறு ராஜன் அறிவித்தபோது பதில் வந்தது, “இஞ்ச மாஸ்ரர் ஒருத்தரும் இல்ல, வகுப்ப இண்டைக்குக் கைவிடுங்கோ”.

“ஒரு மாஸ்ரரும் இல்லையோ?”

“மாஸ்ரர் இல்ல ரீச்சர் நிக்கிறா அனுப்பவோ” ராஜனுக்குப் புரிந்துவிட்டது. ரீச்சரெண்டு அவங்க மறியாட்டைச் சொல்லுறாங்களெண்டு. “ஒ ஒ ஒ ரீச்சரெண்டாலும் பரவாயில்லை வகுப்பெடுத்தாச் சரி” இந்த ரீச்சர்ப் பகிடி இயக்கத்திற் பரவலாக எல்லா இடமும் பரவத் தொடங்கியது. சண்டை முடிந்து அடுத்த சண்டைக்குப் புறப்பட இருந்த நேரம். போராளிகளைச் சந்திப்பதற்காகத் தலைவர் வந்திருந்தார். அவர் புறப்படும்போது “தம்பியாக்கள் இனிச்சங்களின்ர இடங்களுக்குள்ள போகப்போறியள். அங்க சாமானுகள் எதிலும் கைவைச்சுப்போடக்கூடாது. ஆடு, மாடு, கோழிகளையுந்தான் சொல்றன்” அன்று கூறிவிட்டு அருகிலிருந்த ராஜனைப் பார்த்துப் பெரிதாகச் சிரித்தபோது கூச்சப்பட்டு அந்தரப்பட்டுச் சிரித்தான் அவன். எல்லோருக்கும் அவனைப் பார்க்கச் சிரிப்பு வந்தது. எல்லாம் முடிந்து வந்தபின்னர் அவன் சொன்னான் “நாங்கள் எங்கட பிரச்சினையை மட்டும் பாகிரம், பாவம் அண்ணை எவ்வளவு பிரச்சினைகளைப் பார்க்க வேணும்”.

கட்டளை இடுவதிலும் ராஜனுக்கென்றொரு தனித்துவமான பாணி இருந்தது. எந்தவொரு கட்டத்திலும் பதர்ரமடையாத அவனது கட்டளைகளிலும் அரவணைப்பு இருக்கும். அதிற் கண்டிப்பு, ஆலோசனை, நம்பிக்கை, உற்சாகம் என எல்லாமே கலந்திருக்கும். அவனது அன்பான வார்த்தைகளுக்கு இருந்த அத்தனை பெரிய ஆளுமை அவனுக்கேயுரியது. இப்படியே நீண்டு செல்லும் ராஜனின் ஆளுமையை அவனது போர் வாழ்வின் கதையை இங்கு முழுமையாய் எழுதி முடிப்பது அவ்வளவு இலகுவானதன்று.

ஆனையிறவை வீழ்த்துவதற்கான இறுதிக்கட்டம். உலகப் போரியல் வரலாற்றில் முக்கிய பதிவாய்த் தலைவர் பிரபாகரன் அவர்கள் நிகழ்த்திய விந்தைமிகு படைநகர்த்தல். அந்த இத்தாவிற் போர்க்களத்தில்தான் ராஜனின் குரல் அதிகமாய் ஒலித்தது. அங்குதான் அவனது பெயர் அதிகமாகப் பேசப்பட்டது. அங்கிருந்த ஒவொரு தொலைத்தொடர்புச் சாதனமும் ‘றோமியோ’ என்ற அவனது ‘சங்கேத’ப் பெயரையே அதிகமாய் உச்சரித்தும் கேட்டும் இருக்கும். புலிகள் இயக்கம் நிகழ்த்திய அந்த வரலாற்றுச் சாதனைக் களத்தில் ராஜன் பங்கெடுத்த ஒவ்வொரு சண்டையுமே அவனை எம் வரலாற்றில் உயர்த்தியது. ஆனையிறவை வீழ்த்தும் எம் தலைவரின் போர்த்திட்டத்தின் அத்திவாரத்தை அசையாது காத்த அந்த வெற்றிகளின் பின்னால் ராஜனின் உழைப்பு மதிப்பிட முடியாதது.

கண்டி வீதியூடாகப் பயணித்துப் பளையைக் கடந்து இத்தாவிலிற்குப் போகும்போது நிலமெல்லாம் கிளறியெறியப்பட்டு, மரங்களெல்லாம் குதறப்பட்டு சுடுகாடாய்க் கிடக்கும் ஒரு சிறிய நிலப்பரப்பு. அந்த வீதியிலிருந்து வலதுபுறமாய்ச் சில நூறு மிற்றர் தொலைவிலிருக்கும் அந்த உருக்குலைந்த சிறிய வளவுதான் ராஜனின் கட்டளை மையம். அதை எதிரி எறிகணைகளால் உலுப்பியெடுத்து ஒவ்வொரு தடவையும் அதற்குளிருந்துதான் ராஜன் சிரித்தபடி படைனடத்தினான். உறுதியாக, நிதானமாக முடிவெடுக்க முடியாதவாறு மனித மூளையைக் கலங்கவைக்கும்படி எதிரியால் மாற்றப்பட்டிருந்த அந்த நரகலோகத்திலிருந்தே தளபதி ராஜன் செயற்பட்டான். தன் கறுத்தமேனி கருகி மேலும் கறுப்பாய் மாற, மெலிந்த அவன் உருவம் வாடிவற்றிப்போக அந்தக் களத்தில் அவன் செய்தவை அளப்பரியவை.

பங்குனி 27, இத்தாவிலுக்குள் புலிகள் புகுந்த மணித்தியாலங்களில் விடிந்துவிட்டது அன்றைய காலைப்பொழுது. புலிகளால் உறுதியாக நிலைகொண்டிருக்க முடியாது என எண்ணிய பகைவன், அவசர அவசரமாகச் சண்டையைத் தொடங்கினான். பலப்படுத்தப்படாத அரண்களிலிருந்தே எமது போராளிகள் சண்டையிட வேண்டியிருந்தது. எதிரியின் கையே களத்தில் மேலோங்கியிருந்தது. களத்தின் மையத்தில் நின்று எல்லாவற்றையும் செய்விக்க வேண்டியவர்களுள் ராஜன் முக்கியமானவன். எறிகணை மழை நடுவே அவனது பாதுகாப்பிற்கென இருந்தது சிறியதொரு தண்ணீர்த் தொட்டிதான். ராஜனின் கட்டளை அலைவரிசைகள் மூலம் அவன் இருக்கக்கூடிய இடத்தைக் கணிப்பிட்டு எறிகணைகளை எதிரி பொழிந்து கொண்டிருந்தான். அவனைக் குறிவைத்த எறிகணைகளும் ரவைகளும் தோற்றுப்போக ராஜன் வெற்றிகரமாய் எல்லாவற்றையும் செய்துமுடித்தான்.

மூன்று தினங்களில் மருமொரு படையெடுப்பு. அன்றும் எதிரிக்கே சாதகமாக மாறியிருந்தது களநிலை. உச்சக்கட்டச் சண்டையை நடத்திக்கொண்டிருந்தான் ராஜன். முன்னிலையில் நின்ற அணித்தலைவர்களின் தொடர்புகள் அறுந்துபோக எதிரி மூன்று திசைகளாலும் சூழத் தொடங்கினான். ராஜனின் சுமை களத்தில் அதிகரித்துக் கொண்டேபோனது. திடீரென்று ஒரு தடவை அவனது கட்டளை அரண் அதிர்ந்து குலுங்க அதன் வாசலில் வீழ்ந்து வெடித்தது எறிகணை. அதன் அதிர்வு எல்லோரையும் உலுப்பிவிடக் கந்தக நெடியும் புகையும் அரனை மூடியது. அப்போது ராஜனின் கட்டளையிடும் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. அங்கிருந்த தோழன் தன் உடையால் விசுக்கி விசுக்கிப் புகையை விளக்க முனைந்து கொண்டிருக்க நிலைகுலையாது தொடர்ந்தும் சண்டையை நடத்திக்கொண்டிருந்தான் ராஜன். அன்றைய வெற்றியால் ஆனந்தமடைந்த மண்மாதா தன் புதல்வன் ராஜனின் போராற்றலை எண்ணிப் பெருமிதமடைந்திருப்பாள்.

சித்திரை 02ம் நாள். இருநாள் இடைவெளிக்குள்ளேயே அடுத்த பாரிய படையெடுப்பு. ‘வெலிகதர’ எனப் பெயரிட்டிருந்தான் எதிரி. இம்முறை ராஜனின் பகுதியை விடுவித்து வேறொரு பகுதியிற் சண்டை மூண்டது. உள்ளிருந்த எமது அணிகளை முழுமையாக முற்றுகையிட்டு “புலிகளின் தளபதி பால்ராஜும் அவர் தோழர்களும் உயிருடன் பிடிபடப்போகிறார்களா? அல்லது அழியப்போகிறார்களா” எனச் சிங்களத் தலைமை ஆவலுடன் பார்த்திருக்குமலவிற்குக் கடுமையான சண்டையது. முறியடிப்பில் உறுதிகொண்டு தளபதி பால்ராஜ் நடத்திய புலிகளின் வீரம் செறிந்த சண்டையது. மறுமுனையில் நின்ற ராஜன் தளபதி பால்ராஜால் சண்டை முனைக்கு அழைக்கப்பட்டான். அந்தக் களமெங்கும் எதிரி அமைத்த எறிகணை வேலிகளைக் கடந்து, மேஜர் றோயின் அணியுடன் ஓடோடிச்சென்று, ஏனையவர்களுடன் இணைந்து அன்றைய புகழ்பூத்த முறியடிப்பு செய்துமுடித்தான் எங்கள் ராஜன். அன்றும் தமிழர் சேனை வெற்றிக்கொடி நாட்டியது.

”ஓயாத அலைகள் – 03″ இல் ஆனையிறவிற்கான சண்டைகள் முடிந்து இத்தாவிலில் நின்ற ராஜனுடன் கைகுலுக்கச் சென்ற அவன் தோழர்கள் கண்டது பழைய ராஜனையல்ல. ஆனையிறவின் வெற்றிக்காக எம் போராளிகள் வாழ்ந்த கடினவாழ்வைப் பிரதிபலித்த புதிய ராஜனைத்தான். வாடி வதங்கிய அந்த முகத்திற்கூட எவரையும் வசீகரிக்கும் அவனுக்கே உரிய கவர்ச்சிமட்டும் அப்படியே இருந்தது. நாங்கள் எப்போதும் அவனுடன் கூடவேகாணும் அந்த அழகான சிரிப்புங்கூட அப்படியேதான் இருந்தது. காய்ந்து வறண்ட அவனின் தொண்டையிலிருந்து வந்த கரகரத்த குரலிலும் எப்போதும் இருக்கும் குழைவுமட்டும் மாறாமலிருந்தது. பெரும் சாதனையைச் செய்துமுடித்ததும் தளம் வந்தவன் தலைவரைச் சந்தித்தான். தன் வீரர்கள் சாதித்தவற்றை அவருக்குத் தெரியப்படுத்தினான். தலைவருடன் தன் போராளிகளைச் சந்திக்கவைத்தான்.

ராஜனை மீண்டும் களம் அழைத்தது. அது ‘ஓயாத அலைகள் – 03′ இன் இறுதிக்கட்டம். தளபதி பிரிகேடியர் சொர்ணத்திற்க்குத் துணையாய் நின்ற தளபதிகளில் ஒருவனாகத் தன்பணிகளைத் தனக்கேயுரிய இயல்பான திறமைகள் மூலம் செய்துமுடித்தான். அங்கு சண்டைகள் முடிந்ததும் அடுத்தகட்டச் சண்டைகளுக்கான பயிற்சிக்காக ராஜனும் அவனது போராளிகளும் தலைவரால் அழைக்கப்பட்டனர்.

ராஜனின் சண்டைப் பட்டியல் நீண்டுகொண்டே போனது. உயிர்ப்பசிகொண்ட யுத்தக் களங்களிற்குள்ளேதான் எங்கள் ராஜன் நிதமும் வாழ்ந்தான். ஆயினுங்கூட அந்தக் களங்களில் ராஜனுக்கென்றொரு சாவு இருக்குமென நாங்கள் நம்பவில்லை. அந்தளவிற்கு அவனது துணிவிலும் தந்திரத்திலும் துடிதுடிப்பிலும் நாங்கள் அத்தனை பெரிய நம்பிக்கை கொண்டிருந்தோம். ராஜனால் உயிருடன் திரும்பமுடியுமா? என நாங்கள் ஐயுற்ற எத்தனையோ களங்களிலிருந்து அவன் மீண்டுவந்துள்ளான். 1993 இல் புலோப்பளைச் சமரிலும் பின்னர் ‘ஜெயசிக்குறு’ எதிர் நடவடிக்கைகளிலுங்கூட அவனுக்கு நேராய் வந்த ரவைகளால் அவனது கால்களிலும் இடுப்பிலுமாக வெறும் தசைகளையும் எலும்புகளையும் மட்டுமே துளைத்துச் செல்ல முடிந்தது. 1997 ஆனையிறவு, பரந்தன் சமரின்போது கூட ராஜனுக்கு நேராய் வந்த ரவியால் அவனது மண்டையை வெறுமனே துளைத்துச் செல்லத்தான் முடிந்தது. நிச்சயமாக இவற்றிலெல்லாம் ராஜன் உயிர்தப்பியதும் அவனிடமிருந்த நினிவாலும் நம்பிகையாலுந்தான்.

எங்கள் தளபதி இன்னும் களங்கள் காணுவான். வளர்ந்து, முதிர்ந்து அனுபவமிக்க தளபதியாக அவன் எம் தலைவரின் சுமைகளை இன்னும் இன்னும் பகிர்ந்து கொள்வான் என நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனி மாதம் 26ம் திகதி, மறுநாள் தன் வீரர்களுடன் களமுனை ஒன்றிற்குப் புறப்பட இருப்பதாய் ராஜன் சொல்லியிருந்தான். அதற்கு முன் தன் தோழர்களோடு குளிப்பதற்காக இரணைமடு சென்றான். திடீரென அன்று மாலை எல்லோரையும் விரிக்க வைத்த அந்தச் செய்தி பரவியது. “ராஜனுக்குச் சாவு…” அந்தப் பெருவீரனின் சாவு மட்டும் வெறுமையாய் நின்றது. சாவுக்குள் வாழ்ந்தவனிடம் தோற்றுப்போன சாவு தண்ணீருக்குள் ஒழிந்துகொண்டது. தமிழீழப் போர்க்களங்களில் அதிகம் பேசப்பட்ட எங்கள் வீரனுக்குச் சாவில் மட்டும் அங்கு இடமில்லாமற் போனது. “றோமியோ சண்டையிற் செத்திருந்தாலும் மனம் ஆறுதலாக இருந்திருக்கும்” அவனை அறிந்த போராலியாகுள் எல்லோரும் அதையேதான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில், அதைச் செரித்துக்கொள்ள முடியாமலிருக்கிறது.

நினைவுப்பகிர்வு:- அ.பார்த்தீபன்.
வெளியீடு :நெருப்பாற்று நீச்சலின் பத்தாண்டு நூல்

பிரிகேடியர் சொர்ணம், சசிக்குமார் வீரவணக்கம்

**

வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்

**


**

பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம்

**

தளபதி கானகன் பற்றி ஒரு போராளியின் குருதியில் இருந்து சில பதிவுகள்.. ( உண்மைச் சம்பவம் )

கானகன் பற்றிய சுருக்கமான சில பதிவுகள்.. ( உண்மைச் சம்பவம் )

kaanakan

 

நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து…..

(உண்மைச் சம்பவம்)

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும்.

அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து கிடக்கின்றன..! அவர்களோடு, அவர்களின் வலிகளோடு இறுதி நேரத்திலிருந்து தப்பி வந்த சில போராளிகளின் மனதில்தான் அந்தத் துயரமான வலி நிறைந்த என்றுமே அழியாத காட்சிகள் பதிவாகி இருக்கின்றன… அப்படியான பதிவுகளில் எல்லோர் மனங்களிலும் மிகுந்த வலிகளை உருவாக்கி, இதயத்தினை உருக்கி கண்ணீர் வரவழைக்கும் பதிவுகளில் இந்தப் படத்தினில் இருக்கும் போராளியின் படமும் ஒன்று!

இந்தப் புலிவீரன் துன்புறுத்திக் கொல்லப்படும் போது அருகினில் இருந்து காப்பாற்ற முடியாத வலிகளோடு துடித்துக் கொண்டிருந்த மற்றுமொரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உன்னதமான போராளியின் வலிகள் நிறைந்த வாக்குமூலமே வார்த்தைகளாக கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.

“எனது தமிழ் உறவுகள் அனைவருக்கும்… என் மனதில் என்றும் அழியாத ரணங்களாக இருக்கும் பல உண்மைகளில் சிலவற்றை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்றே சிறை மீண்டு முகமும், முகவரியும் இன்றி கண்ணீருடன் இங்கே கூறுகின்றேன்.

இந்தப் படத்திலே இருக்கும் என் தோழனை சிங்களக் காடையர்கள் கொடுமைப்படுத்திக் கொலை செய்ததை நேரில் பார்த்தவன் நான்!, இவன், முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் என்னோடு அகப்பட்டு, இந்த வீரனை மட்டும் மூன்று நாட்களாக தென்னை மரத்திலே கட்டி வைத்து சாப்பாடு தண்ணீர் கூட கொடுக்காமல் தினமும் சித்ரவதை செய்து பட்டினி போட்டான் சிங்களக் காடையன்.war-crime1

இவன் துன்புறுத்தப்பட்டு வந்த மூன்று நாட்களும் இவனின் வாயிலிருந்து “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வார்த்தைகள் வந்ததனாலே, இந்த வீரன் மிகவும் துன்புறுத்தப்பட்டான்.

எவ்வளவு வலிகள் கொடுக்கப்பட்ட போதும், இவன் மண்டியிடவேயில்லை..! இதனை சகித்துக் கொள்ள முடியாத சிங்களக் காடையர்கள், அங்கம் அங்கமாக கூரிய கத்தியினால் கீறி இவனை துன்புறுத்தி கொடுமைப்படுத்தினார்கள்.

ஒவ்வொரு கீறல் விழும் போதெல்லாம் “அண்ணன் வாழ்க, தமிழீழம் மலர்க” என்றே கூறிக் கொண்டிருந்தான். இறுதியில் இந்த வீரனின் வீரத்தினைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்களக் காட்டுமிராண்டித் தளபதி கொன்று விடும்படி சைகை காட்டவே… இவனின் கழுத்திலே அந்தக் கூரிய கத்தியினை வைத்து சடார் என இழுத்து விட்டான் ஒரு காட்டுமிராண்டிச் சிங்களவன். தொண்டைக்குழி அறுபட்டு இரத்தம் சீறி அவனின் உயிர் அவனை விட்டுப் பிரிவதை மிகுந்த வலிகளோடு பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர கைகள் கட்டப்பட்டிருந்த எம்மைப் போன்ற போராளிகளால் எதுவுமே செய்யமுடியாமல் நாதியாற்றுப் போனோம். கொலை செய்தபின் இவனின் உள்ளாடைக்குள் எமக்கே தெரியாமல் இவன் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியினை எடுத்து இவனின் மேல் போர்த்தி விட்டனர் சிங்களக் காட்டுமிராண்டிகள்..!war-crime 2

எங்கள் அனைவரினதும் தாக்குதல்களுக்குரிய பொறுப்பினை ஏற்று நடத்திய தளபதிதான் இந்த மாவீரன்!

இந்த மாவீரன், சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல களங்களைக் கண்ட சிறந்த வேவுப்புலி வீரனாவான்!
2008 முதல் 2009 வரையிலான காலப்பகுதியிலே முக்கியமான ஒரு தளபதியின் மெய்பாதுகாப்பாளனாக இருந்து செயற்பட்டவன். சிறு வயதினிலேயே போராட்டத்தில் இணைந்ததனால் தலைவர் மீதும், தாய்மண்ணின் மீதும் மிகுந்த பற்றுடையவன் இவ்வீரனை கொடுமைகள் செய்து கொலை செய்வதை எங்களால் பார்க்க மட்டும்தான் முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியாத கைகள் கட்டப்பட்ட நிலையில் நாம் இருந்தோம். இந்த மாவீரனின் உயிர் பிரியும் நேரத்தில் கூட இவனின் உதடுகளிலிருந்து “அண்ணன் வாழ்க”, “தமிழீழம் மலர்க”, “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வீர வார்த்தைகளுடனேயே இவனின் உயிரும் அடங்கிப் போனது!

இந்த வீரனின் உயிர் பிரியும் நேரங்களை நான் மட்டும் பார்க்கவில்லை. அந்த இடத்தில் நான் உட்பட பதிமூன்று போராளிகள் இருந்தோம். அதில் ஐந்து பெண் போராளிகள். அவர்களை எங்களிடம் இருந்து பிரித்துச் சென்று விட்டார்கள். அந்தச் சகோதரிகளின் நிலை இதுவரை என்னவென்று தெரியாது!

இந்தப் படத்தினைப் பார்க்கும் போதெல்லாம் என் உயிர் வலிக்கின்றது. என் ஆயுள் வரை மாறாத வலிகளை இந்தப்படமும், இதற்குரிய சம்பவங்களும் எனக்குள் ஏற்படுத்தியிருக்கின்றது”!war-crime 3

(கண்கள் கலங்கியபடி)

“என் உயிர்த்தோழனே! எங்கள் அண்ணன் வளர்த்த புலிக்குட்டி நீ! உனக்கு நிகழ்ந்த கொடுமைகளை நினைத்து என் இதயம் கொதிக்கிறது. நீயும் நானும் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒன்றாக உறங்கிய காலங்களும்… பகைவனைக் கொன்றொழித்த அந்த வீரச்சமர் புரிந்த காலங்கள் அனைத்தையும் நினைக்கும் போது என் இதயம் அழுது வெடிக்கின்றது தோழனே!!! என் தோழனே! நீ இறுதியாக உரைத்த வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும்!”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

என என் இதயத்தை கனக்க வைத்தார்,

-பெயர் குறிப்பிட விரும்பாத அந்த உன்னதமான விடுதலைப் போராளி!

இந்த மாவீரனைப் போலவே பல போராளிகள் முள்ளிவாய்க்காலின் இறுதி நேர யுத்தத்தில் இறுதி வரை நின்று தாய் மண்ணிற்காகவே போராடி உயிர் துறந்து வெளியுலகிற்குத் தெரியாமலேயே மக்களோடு மக்களாக மண்ணிற்குள் புதையுண்டு போயுள்ளார்கள். சிலர் அடையாளம் தெரியாதளவிற்கு எரிக்கப்பட்டு பின் அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டனர். இந்தப் புண்ணிய வீரர்களைப் பெற்றெடுத்த தாய்மார்களும், உறவினர்களும் இன்னும் இன்றுவரையும் தேடியே வருகின்றனர்.

தாய் மண்ணின் விடிவிற்காய் இறுதி வரை நின்று போரிட்டு உயிர் துறந்த மாவீரர்களுக்கு நாமும் அவர்களுக்குரிய தகுந்த மரியாதையினைக் கொடுக்காமலும், அவர்களின் வீர வரலாற்றினை தெரிந்து கொள்ளாமலும் இன்றுவரையும் மறந்தே வாழ்ந்து வருகின்றோம்.

இந்தப் புண்ணிய வீரர்களின் வீரச்சாவானது சாதாரண நிகழ்வாகிப் போய் விடக்கூடாது என்பதற்காகவும், இவர்களின் வீரவரலாறுகள் யாரும் அறியாமல் மறைந்து அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்களுக்குரிய மரியாதையினையைக் கொடுத்து கௌரவப்படுத்தி வெளியுலகிற்குத் தெரியப்படுத்துகின்ற வகையில் இந்தப் புண்ணியவான்களின் உயிர் பிரியும் போது இவர்களோடு இறுதி வரை நின்று உயிர் தப்பி வந்த போராளிகளும், மக்களும்தான் இவர்களைப் போன்ற மாவீரர்களின் உண்மை விபரங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

எமக்காகவும், எம் மண்ணின் விடிவிற்காகவும் இறுதிவரை நின்று போராடி உயிர் துறந்தவர்களை நாம்தான் கௌரவித்து… அவர்களுக்குரிய மரியாதையையும் வழங்க வேண்டும்.

எம்மால் உறுதிப்படுத்த முடியாது ஆனால் இவராக இருக்கலாம் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் !

நான் கண்ட பாலகுமாரன்

க.வே. பாலகுமாரன், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான பெயர். தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களிலேயே எனக்குப் பிடித்தமான இயக்கங்கள் இரண்டு. ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகள். மற்றொன்று ஈரோஸ், பிடித்தமான தலைவர்கள் இரண்டு பேர். ஒருவர் வே. பிரபாகரன். மற்றொருவர் வே. பாலகுமாரன். இந்த இருவரில் நான் முதலில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றது அண்ணன் க.வே. பாலகுமாரன் அவர்களைத் தான். [க.வே.பாலகுமாரன்] க.வே.பாலகுமாரன்

1989 ஆம் ஆண்டு புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் இந்திரா பார்த்தசாரதி எழுதி இராசு இயக்கிய ‘கொங்கை தீ’ நாடகத்தைப் பார்த்து விட்டு, அரங்கத்தை விட்டு வெளியே செல்ல எத்தனித்த என்னை, என் பெயர் சொல்லி அழைத்த குரல் கேட்டு அத்திசை நோக்கித் திரும்பினேன். அங்கே நண்பர் வைகறையும், ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணன் பாலகுமாரன் அவர்களும் நின்று கொண்டிருந்தார்கள். எதிர்பாராத அதிர்ச்சி எனக்கு. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இடையில் பல இருக்கைகள் இருப்பதையும் மறந்து விரைந்து சென்றேன். அதற்குள் நண்பர் வைகறை என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். நானும் அண்ணன் பாலகுமாரன் அவர்களும் கரங்களைப் பற்றி நலம் விசாரித்துக் கொண்டோம்.

“உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். உங்கள் ஓவியங்கள் பற்றிய கட்டுரையைப் பாலம் இதழில் படித்தேன். மிக்க மகிழ்ச்சி. எங்கள் போராட்டங்கள் குறித்து நிறைய தொடர்ந்து செய்யுங்கள்” என்றார்.

இதுதான் எங்கள் முதல் சந்திப்பு.

அதற்குள் நண்பர் இராசு அவர்களும் அங்கு வந்து சேர்ந்தார். அனைவரும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம்.

ஈரோஸ் குறித்தும், பாலகுமாரன் குறித்தும் நான் கொண்டிருந்த உயர் மதிப்பீட்டிற்கு. காரணம் பாலம் இதழ் என்றால் மிகையாகாது. ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம், எவ்வாறு கலை இலக்கியங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கும், உலக விடுதலை இயக்கங்களைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கும் அடையாளமாக பாலம் இதழ் வெளிவந்தது. குறிப்பாக பாலத்தீன விடுதலை இயக்கத்தைப் பற்றிய வரலாறுகளையும், செய்திகளையும் போராடுகின்ற மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பாலம் இதழ் ஆற்றிய பணி அளவிட முடியாதது. எனக்குள் இருந்த சமூகம், கலை இலக்கியம் குறித்த பார்வையை இன்னும் ஆழப்படுத்து வதற்கும், அதிகப்படுத்து வதற்கும் பாலமும் அடிப்படை யாக இருந்திருக்கிறது.

ஈரோஸ் இயக்கம் போராட்டம் குறித்துக் கொண்டிருந்த மார்க்சியக் கோட்பாடும், அணுகு முறையும் தெளிவும், புரிதல்களும் எனக்கு அந்த இயக்கம் மீதும், அதன் தலைவர் பாலகுமாரன் மீதும் மதிப்பும்மரியாதையும்,ஈடுபாடும் அதிகமாவதற்குக் காரணமாக இருந்தன. புலிகளும், ஈரோசும் ஏன் இணைந்து செயல்படக்கூடாது என்று சிந்தித்த தருணங்களும் உண்டு.அண்ணன் பால குமாரனைப் புதுச்சேரியில் சந்தித்த பிறகு மீண்டும் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்த காலத்திலேயே, ஈரோஸ் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, புலிகள் இயக்கத்தில் இணைய விரும்புகிறவர்கள் இணையலாம் என்று அறிவித்து முதலில் அவர் புலிகள் இயக்கத்தில் இணைந்ததாக செய்தி அறிந்தேன். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதை விமர்சித்த நண்பர்களும், தோழர்களும் இங்கு உண்டு. ஆனால் அண்ணன் பாலகுமாரன் செய்தது மட்டுமே சரி என்பதைக் காலம் உணர்த்தியது. நான் ஈழத்திற்குச் சென்று, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள் என்னை வரவேற்று நான் பார்க்க வேண்டிய இடங்களையும், சந்திக்க வேண்டிய நபர்களையும் விவரித்த பிறகு, அண்ணன் பாலகுமாரன் எப்படி இருக்கிறார்? நான் அவரைப் பார்க்க வேண்டும என்று சொன்னேன். அண்ணை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்.

தமிழகத்திலேயே எனக்கு அறிமுகம், எனக்குப் பிடித்தமான மனிதர் என்று சொன்னேன். உடனே ஏற்பாடு செய்கிறேன், நீங்கள் சந்திக்கலாம் என்று கூறினார். ஒரு முன்னிரவுப் பொழுதில் என் வாகனம் கிளிநொச்சியிலிருந்து கிளம்புகின்றது. என்னை அழைத்துச் செல்லும் நண்பர் ‘பாலகுமாரன் அண்ணை உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறார்’ என்றார்.

மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றேன். வாகனம் இருளைக் கிழித்துக் கொண்டு சென்றது. ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு அடர்ந்த மரங்கள் அடங்கிய ஒரு தோப்பின் வாயிலில் நின்றது. அது, புதுக் குடியிருப்பு.

என்னை வாகனத்தி லேயே இருக்கச் சொன்ன நண்பர் கீழே இறங்கவும், வாயிலில் இருந்தவர் கைவிளக்கோடு நண்பரை நோக்கி வந்து, ஏதோ கேட்டுவிட்டு, என்னை உள்ளே அழைத்துச் சென்றார். சுற்றுப்புறம் மிகவும் இருளாகஇருந்தது. எதையுமே பார்க்க முடியவில்லை. ஒரு 150 அடி தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது. அது வீடாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் அங்குத் தெரியும் விளக்கொளியில் அண்ணன் பாலகுமாரன் நிற்பது தெரிந்தது. வீட்டு வாசலில் கட்டி அணைத்து வரவேற்றார். அண்ணியை அழைத்து அறிமுகம் செய்து வைத்தார். தேநீர் கலக்கித்தர வேண்டுகை விடுத்தார். குடும்பத்தினர் நலம் விசாரித்தார். தமிழ்நாட்டு நண்பர்கள், தலைவர்கள், மக்கள் குறித்து விசாரித்தார்.

[ஓவியர் புகழேந்தி] ஓவியர் புகழேந்தி நான் அவருக்காக எடுத்துச் சென்ற என்னுடைய நூல்களை அவரிடம் தந்தேன். உங்கள் ஓவியங்களையும் அதுகுறித்த கட்டுரைகளையும் ஊடகங்களில் தொடர்ந்து பார்க்கிறேன். எங்கள் போராட்டத்தை, இன்னொரு பரிமாணத்திற்கு உங்கள் ஓவியம் இட்டுச் செல்கிறது. இன்னும் நிறைய செய்ய வேண்டும். இப்போது தானே இங்கு வந்திருக்கிறீர்கள். ஓவியம் செய்வதற்கான கரு இங்கே நிறைய கிடைக்கும் என்று அவர் பேசிக் கொண்டே சென்றார். நான் அவரிடம் கேட்க வேண்டிய பேச வேண்டிய செய்திகள் நிறைய இருந்தன. அண்ணே, நீங்கள் ஈரோசை கலைத்துவிட்டு, இயக்கத்தில் சேர்ந்தது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்படி அவ்வாறு ஒரு முடிவுக்கு வந்தீர்கள் என்று கேட்டேன். அவ்வாறு செய்யவில்லை என்றால் மிகவும் சிரமப்பட்டிருப்போம். இரத்தம் இரத்தம் ஒரே இரத்தம் அப்பப்பா தாங்கமுடியவில்லை. என்னால் வழிநடத்துவது சிரமம் என்று உணர்ந்தேன். ஒருங்கிணைந்து போராடுவது தேவை என்று உணர்ந்தேன். அதனால்தான் ஈரோசைக் கலைத்துவிட்டு, புலிகள் இயக்கத்தில் இணைய விரும்புபவர்களை இணையச் சொன்னோம் என்றார். உறங்கா நிறங்கள் ஓவியத் தொகுப்பில் உள்ள பிரபாகரன் ஓவியத்தைப் பார்த்து, குதூகலித்து என்னைக் கட்டிப் பிடித்து பாராட்டினார். இதுதான் உண்மையான பிரபாகரன். இதுதான் வெளி உலகத்திற்குக் காட்ட வேண்டிய பிரபாகரன். அவருடைய மனிதநேயச் சிந்தனை தோய்ந்த முகம் உங்களுடைய ஓவியத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றார். நான் எதை நினைத்து அவ்வோவியத்தைச் செய்தேனோ, அதையே அவரும் உள்வாங்கியதை நினைத்து மகிழ்ந்தேன்.

சர்வதேச அளவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும், அரசியல் மாற்றங்கள், விடுதலைப் போராட்டத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளாமல், எல்லாவற்றை யுமே பயங்கரவாதமாகப் பார்க்கும் உலகநாடுகளின் பார்வை. ‘ஈழ விடுதலைக்கு இந்தியா ஏன் பக்கபலமாக இருக்க வேண்டும்.’ தமிழ்நாட்டுத் தலைவர்கள், மக்கள் செய்யவேண்டிய பங்களிப்புகள் குறித்து விரிவாகவே பேசினோம்.

தமிழ்நாட்டிலே நாம் தங்கியிருந்த நாட்களில், தமிழ்நாடே எமது முன்னணிக் களமாக இருந்த நாட்களில், தமிழ் இனமான உணர்வில் ஒன்றுபட்டு, விடுதலைப் போராட்டத்தின் வீச்சின் பால் ஒன்றுபட்டு, சர்வதேச மனிதநேய அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்பட்டதை நினைவு கூர்ந்தார்

க.வே. பாலகுமாரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர். அவருடைய மார்க்சியச் சிந்தனை அந்த நாட்டைக் கட்டமைப்பதிலும், வடிவமைப்பதிலும் திட்டமிடுவதிலும் பயன்படுத்தப்பட்டது. அவருடைய எழுத்தாற்றல், சர்வதேச அரசியல் குறித்தும், விடுதலைப் போராட்டங்கள் குறித்தும், உள்ளூர் அரசியல் நிலைகள் குறித்தும், இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் இதழ்களில் கட்டுரைகளாக வெளிப்பட்டது.

அவருடைய சிந்தனைகள், புலிகளின் குரல் வானொலியின் ஊடாகவும், தமிழீழத் தேசிய தொலைக்காட்சி ஊடாகவும், கலை இலக்கிய நிகழ்வுகள் போன்ற அனைத்து வகையான நிகழ்வுகள் ஊடாகவும் உரைகளாகவும் வெளிப்பட்டன.

நெருக்கடியான காலகட்டத்தில் மக்களுக்குத் தெளிவுபடுத்துபவராகவும் இருந்திருக்கிறார்.

நான் தமிழீழத்தில் நின்ற நாட்களில் அவரை சந்திக்காத நாட்கள் மிகவும் குறைவு. அவருடைய இருப்பிடத்திற்கு நான் சென்று விடுவேன். இல்லைஎனில் என்னுடைய இருப்பிடத்திற்கு அவர் வந்து விடுவார். நிறைய பேசுவோம், விவாதிப்போம், அய்யங்களைப் போக்கிக் கொள்வோம். சினிமா, கலை, இலக்கியம், அரசியல், சமூகம், போன்றவற்றை சர்வதேசிய அளவில் விவாதித்திருக்கிறோம். அவரிடமிருந்து நான் நிறையவே கற்றிருக்கிறேன். ஆனால் அவர் சொல்வார் ‘உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டியிருக்கிறது’ என்று. அவரை சந்திக்காத நாட்களில் நான் எதையோ இழந்ததாக உணர்வேன்.

**
இனி தமிழரது அத்தனை அழிவுகளுக்கும் சர்வதேசமே பொறுப்பு: க.வே.பாலகுமாரன் மே 28, 2006

இலங்கை இனப்பிரச்சனையின் இன்றைய நிகழ்வுகளுக்குப் பின்னால் நடக்கக் கூடிய தமிழ் மக்களினது அத்தனை அழிவுகளுக்கும் சர்வதேசமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் அரங்கம் நிகழ்வில் நேற்று சனிக்கிழமை (27.05.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

“உலகம் எப்போதும் ஒரு இலக்கு நோக்கி நகருகிறது- அந்த இலக்கை அடைவதற்கு அடிப்படை முரண்கள் காரணமாக இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒத்திருக்கும் எதிர்த் தன்மைகள் ஒன்றிணைந்து ஒரு புதிய நிலையை எடுக்கும்” என்பார் கார்ல் மார்க்ஸ்.

இதை அவர் சுருக்கமாக “எதிர்மறையின் எதிர்மறை” என்பார்.

அதாவது- ஒரு மரம் இருக்கிறது. அதனுள் ஒரு விதை இருக்கிறது. அந்த விதையிலிருந்து மற்றொரு புதிய மரம் உருவாகிறது. இந்த புதிய மரமானது விதை வெடித்துச் சிதறி உருவாகிறது. இதைத்தான் கார்ல் மார்க்ஸ் எதிர்மறையின் எதிர்மறை என்பார்.

தமிழ் மக்களிடம் ஒரு அடிமைக் கருத்தாக்கம் இருந்தது.

அதன் பின்னர்

புலிகளின் விடுதலைக் கருத்தாக்கத்தால் அது முரண்பட்டு இன்னொரு நிலைக்குச் சென்றது.

அதன் பின்னர் இன்று அந்தக் கருத்தாக்கம் புத்தாக்கம் பெற்று இன்று உலகளாவி பரந்து நிற்கிறது.

இதுவே எதிர்மறையின் எதிர்மறை என்பார்கள். இது ஒரு “இயங்கியல்”. இந்த இயங்கியல் கோட்பாட்டை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால்

சிங்களத்திலோ

இந்த எதிர்மறையின் எதிர்மறை என்பது இன்னொரு எதிர்மறையாக உருவெடுத்து- “இயங்கியல் மறுப்பியலாக” உருவெடுத்து நிற்கிறது.

1948 ஆம் ஆண்டு முதல் இனச் சிக்கலில் மூன்றாம் தரப்பினரது தலையீட்டை முற்று முழுதாக சிங்களம் எதிர்த்து வந்துள்ளது.

நடுவர் தலையீட்டு தமிழர் தரப்பு கோரியபோதெல்லாம் முழுமையாக எதிர்த்த சிங்களம்,

ஒரு நிலையில் இந்தியத் தலையீட்டுக்குத் தானே கோரியதும்

சந்திரிகா காலத்தில் சர்வதேசத் தலையீடாக நோர்வேயை வரவழைத்ததும்

இதற்கு அப்பால்-

இன்றைக்கு ஐக்கிய நாடுகள் சபையினது படைகள் இங்கே வரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தலைவர் கூறுவதுமான விந்தைதான் இன்று நடைபெறுகிறது.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை திடீரெனச் சந்தித்த சர்வத மதத் தலைவர்களிடம் “நான் நேரடியாக புலிகளுடன் பேசத் தயாராக இருக்கிறேன்” என்று மகிந்த ராஜபக்ச ஒரு செய்தியைச் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

மேலும்

இலங்கையில் ஒரு புதுமாதிரியான தீர்வை- ஒற்றையாட்சியின் கீழ் வைக்கலாம் என்றும் ஒற்றையாட்சியின் கீழான எந்தத் தீர்வுக்கும் தான் தயார் என்றும் மகிந்தர் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

ஐ.நா. அமைதிப்படை தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்தை மறுத்திருக்கும் சிறிலங்கா அமைச்சர் டியூ. குணேசகரா,

“இனப்பிரச்சனiயை சிலர் ஐ.நா. வரை கொண்டு செல்ல முற்படுகின்றனர். இனப்பிரச்சனை இப்போது சர்வதேசத்திடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இனப்பிரச்சனையை சர்வதேச மயப்படுத்த எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. ஐ.நா. வரை கொண்டு செல்ல மேற்கொண்ட முயற்சி தவறு. ஐ.நா. தலையிட்டால் நாம் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.

அத்துடன் “இனப் பிரச்சனையை நாம் அரசியல் ரீதியாகத் தீர்க்க வேண்டும்” என்றும் மனம் தவறி ஒரு உண்மையைத் தெரிவித்துள்ளார்.

1956 ஆம் ஆண்டு நேரடிப் பேச்சுக்களில் எந்தத் தீர்வையும் வைக்காத சிங்களம்-

1983 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்குப் பின்னர் இந்தியா தலையிட்டபோது அதை முடிந்தளவுக்கு ஒதுக்கிப் புறந்தள்ளிய சிங்களம்-

1987 ஆம் ஆண்டு இந்தியாவையே மீண்டும் வரவழைத்த சிங்களம்-

தமிழீழம் என்பது அமெரிக்காவின் சதி என்று கூறிய சிங்களம்

2000 ஆம் ஆண்டு அளவில் நோர்வேயைத் தலையிட வைத்த சிங்களம்-

இப்போது

ஐ.நா. வரை கொண்டு செல்ல கோரிக்கை வைக்கிற சிங்களம்-

ஐ.நா. தலையீட்டை எதிர்க்கிற சிங்களம்-

என்று அடிப்படையிலேயே முரண்பட்டு பகுத்தறிவற்று செயற்படுகிற சிங்களத்தின் மனமானது

பூனைக்கும் மனிதனுக்கும் பலருக்குமாக அச்சப்பட்டு அச்சப்பட்டு உருவங்களை மாற்றிக் கொண்ட ஒரு சுண்டெலியின் மனத்தை ஒத்தது.

அரசியல் ஆலோசகர் பாலாசிங்கம் அண்ணையினது போரும் சமாதானமும் நூலில் ஒரு பக்கத்தை நினைவூட்டுகிறேன்.

“1983 ஆம் ஆண்டு ஜுலை 24 ஆம் நாள் தமிழருக்கு எதிரான இனக்கலவரம் தலைதூக்கிய அன்றே திருமதி இந்திரா காந்தியின் அரசியல் இராஜதந்திர முயற்சிகள் தொடங்கின. தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கோரத்தாண்டவமாடிய போது நிலைமையை உணர்ந்த இந்திரா அம்மையார், உடனடியாக ஜெயவர்த்தனாவைத் தொடர்பு கொண்டு தனது அதிருப்தியை வெளியிட்டார். அவரது அறிவுறுத்தலின் பேரில் இந்திய வெளியுறவு அமைச்சு ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டது. தனது கொல்லைப்புறத்தில் இந்தக் கொடுமைகள் நீடித்தால் இந்தியாவால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும் எச்சரித்தது” என்கிறார்.

இப்படியாகத்தான் நரசிம்மராவ் மற்றும் மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டதும் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டதும் நாம் அறிந்ததுதான். இந்தத் திட்டத்தை முற்றிலுமாக புறந்தள்ளி இந்திரா காந்தியை மிகக் கேவலமாக எதிர்த்தார் ஜே.ஆர்.

அதேபோல்

1987 ஆம் ஆண்டு மிக மோசமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஜே.வி.பி.எதிர்த்தது.

இந்தியா-இலங்கை ஒப்பந்தம் ஒரு ஏகாதிபத்திய சதி என்றும் தமிழ் மக்கள் அனைவருமே இந்தியாவின் கூலிகள்- ஏஜெண்டுகள் என்றும் விமர்சனம் செய்த அதே ஜே.வி.பி-

அண்மைக்காலமாக இவர்கள் இந்தியத் தலையீட்டை இரந்து கெஞ்சி மன்றாடி வருகின்றனர்.

தமிழ் மக்கள் வைத்த கோரிக்கைகளைப் புறந்தள்ளிய சிங்களம்-

தமிழ் மக்களை அளிப்பதற்காக தமிழ் மக்கள் வைத்த கோரிக்கைகளை தாங்களே வைக்கின்ற விந்தையை என்ன என்று அழைப்பது?

பிராந்திய நிலையில் இந்தியத் தலையீட்டை நிராகரித்தவர்கள் பின்னர் அதை ஏற்றுக்கொண்டனர்-

சர்வதேசத்தினது தலையீட்டை முற்றாக நிராகரித்த சிங்களம் பின்னர் தாங்களே அதை சர்வதேசத்துக்குக் கொண்டு சென்றனர்-

1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிறுநீரகக் கோளாறினால் அவதிப்பட்ட அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அண்ணையை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க மறுத்தது சிங்களம். தேசியத் தலைவரினது முயற்சியால் வெளிநாடு சென்று பாலா அண்ணை சிகிச்சை பெற்றார்.

அதன் பின்னால்-

அவரைத் தொடர்பு கொள்ள நோர்வே சமாதானக் குழுக்களை அனுப்பினர்.

லண்டனில் உள்ள பாலா அண்ணை இல்லத்துக்கு எரிக் சொல்ஹெய்ம் போன்றவர்கள் அடிக்கடி சென்று தங்கள் தலையீட்டுக்கான சம்மதம் பெற முயற்சித்தமையும் அப்போதெல்லாம் அதற்கு சந்திரிகா இணங்கியதாக கூறியிருப்பதும் வரலாற்றில் பதியப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள்.

2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் நாள் வன்னியில் உள்ள மல்லாவியில் தலைவர் அவர்களுக்கும் நோர்வே சமாதான குழுவினருக்கும் இடையே சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பினது நேரடி விளைவுதான் இன்றளவும் நோர்வேயின் சமாதன முயற்சி நீடிக்கிறது.

நோர்வேயை வரவழைத்த அதே சிங்களம் நோர்வேக்கு எதிராக குரல் எழுப்புகிறது.

இப்போது நோர்வேயைத் தவிர்த்து ஐ.நா. பற்றி பேசுகின்ற போதும் முன்னைய கருத்துகளே மீண்டும் வருகின்றன.

இனப்பிரச்சனையானது சர்வதேசமயமாக்கப்பட்டு விட்ட நிலையில்

அதை உணராமல்

இனப்பிரச்சனையை சர்வதேசமயப்படுத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று கூறுகிற இவர்கள்- யதார்த்தத்தை மறுக்கக் கூடிய- “இயங்கியல் மறுப்பியல்” என்ற கோட்பாட்டுக்குள் செல்லுகின்றனர்.

இதனை மேலும் விளக்க ஜே.வி.பி.யினது கொள்கை விளக்கப் பிரகடனத்தை பார்க்கலாம்.

ஜே.வி.பி.யின் மறைந்த தலைவர் றோகன விஜயவீரவின் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்கிற 315 பக்க நூலில் அவர் சில கருத்துகளை முன்வைக்கிறார்.

இனப்பிரச்சனையாது

ஏகாதிபத்தியத்தின் சதி-

சர்வதேச முதலாளித்துவத்தின் விளைவு-

இவற்றுக்கு புலிகள் அல்லது தமிழ் மக்கள் துணை போகின்ற கூலிகள்

என்று கூறி இனப்பிரச்சனையை எதிர்த்தவர் றோகண விஜயவீர. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. குறித்தும் எதிர்க்கருத்துகளைக் கூறியுள்ளார்.

ஆனால் அதே சிங்களம்

இன்றைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவைக் கேட்டு ஓடுகிறார்கள்.

இப்படித் தலையிடக் கோரிக்கை விடுக்கின்றபோது “இந்தத் தலையீடு எத்தகைய எதிர்விளைவை உருவாக்கும்” என்பதை மறந்து பேசுவது அதிசயமாக இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத் தடை முயற்சியைத் தொடர்ந்து உலக நாடுகள் முழுவதும் பயணம் செய்து அனைத்து நாடுகளிலும் தடை செய்யக் கோருகிற நிலையை உருவாக்கு வருகிறார்.

மங்கள சமரவீர சர்வதேசத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற நிலையில் உள்நாட்டிலோ அன்னியத் தலையீடு வேண்டாம்- நேரடியாக பேசுவோம்- ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு என்று பழைய வறட்டுத்தனத்தை மக்கள் முன் வைக்கின்றனர்.

சிங்களத்தின் இந்தப் போக்கானது

“எதிர்மறையின் எதிர்மறை” என்பதற்கு அப்பால்- செல்கிற மற்றொரு எதிர்மறையாகிறது.

வரலாற்றில் இயங்கியல் ரீதியாக முற்றிலுமாகவே மறுக்கப்பட்டுவிட்ட ஒரு நிலைக்கு சிங்களம் சென்று கொண்டிருக்கிறது.

இதை உலகம் அறியாமல்-

இந்தக் கோரிக்கைகளுக்கு உலகம் இணங்கியிருப்பதன் மூலம்

புலிகளைத் தனிமைப்படுத்தி-

மக்களைக் படுகொலை செய்ய சிறிலங்கா அரசுக்கு கால அவகாசத்தை வழங்க

உலகம் முற்படுவதை

தமிழீழ விடுதலைப் புலிகள் மிக அவதானமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சுதுமலையில் தேசியத் தலைவர் அவர்கள், “தமிழ் மக்களினது பாதுகாப்புக்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியது போல-

இன்னொரு பிரகடனத்தை வெளியிடாத நிலையிலும்

“இன்றைய நிகழ்வுகளுக்குப் பின்னால் நடக்கக் கூடிய தமிழ் மக்களினது அத்தனை அழிவுகளுக்கும் சர்வதேசமே பொறுப்பேற்க வேண்டும்” என்று தெளிவாகச் சொல்லுகிறோம்.

சர்வதேசத்தின் மனசாட்சியானது ஒரு கழிவிரக்க நிலைக்கு தள்ளப்படப் போகிறது என்பதை முன்கூட்டியே நாம் தெரிவித்துவிடுகிறோம்.

சர்வதேசத்தை நம்பி நாங்கள் வாழாமல்-

எங்களது வெற்றிக்கான ஒரு துணைக் காரணியாக சர்வதேசத்தைச் சேர்த்துக் கொண்டிருப்பதால்

எங்களுடைய தாயகத்தின செயற்பாடுகளுக்கான அத்தனை வலிமையையும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதால்

இதை மக்களுக்குத் தெரிவிக்கிறோம்.

இந்தியத் தலையீட்டை மறுத்தவர்கள் இந்தியத் தலையீட்டை வரவேற்றார்கள்-

சர்வதேசத் தலையீட்டை மறுத்தவர்கள் சர்வதேசத் தலையீட்டை வரவேற்றார்கள்-

இப்போது இவர்கள் ஐ.நா.வுக்கும் செல்வார்கள். ஏனென்றால் சிங்களத்துக்கு எதுவும் செய்யத் தெரியாது.

தமிழ் மக்களினது கோரிக்கைகளை மழுங்கப்படிப்பதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு மட்டுமே இந்த உலகம் உதவும் என்று நினைக்கிறது.

எத்தகைய தலையீடு என்பதையும்

எங்களது செய்திகளைச் சொல்லுகிற வாய்ப்பாகவும்

மறுக்கப்பட்ட மக்களினது குரலை வெளிப்படுத்துகிற வாய்ப்பாகவும் நாம் பயன்படுத்திக் கொள்வோம்.

ஆனாலும் சிங்களமோ

தமிழ் மக்களுக்கு எதிராகவே சொல்லிச் சொல்லி முழுமையாக தனது அடிப்படையான ஆதாரமான கருத்தை இழந்து அம்மணமாக நிற்கிறது.

இதை உலகம் அறியாமல் உள்ள நிலையில்

எமது நிலத்தில்-

எமது சொந்த பலத்தில்-

எமது வாழ்வை அமைத்துக் கொள்வோம்

என்ற செய்தியை நாம் சொல்லுகிறோம் என்றார் க.வே.பாலகுமாரன்.

*
நஞ்சுண்ட காடு : தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் க.வே. பாலகுமாரன் எழுதிய முன்னுரை..

கவியழகனின் நஞ்சுண்ட காடு நாவலுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் க.வே.பாலகுமாரன் எழுதிய முன்னுரை.4ம் கட்ட ஈழப்போர் காலத்தில் வன்னியில் போராளியாகவிருந்த கவியழகனால் ஏணைப்பிறை என்ற பெயரில் இந்நாவல் எழுதப்பட்டது.

அறிய மனமுள்ள அனைவரிற்கும் ஏணைப்பிறையை அறிமுகம் செய்கின்றோம். இதில் பெரும் மனநிறைவும் அடைகின்றோம். புவி ஏதோவொரு அச்சில் சுழல்வதாகச் சொல்கின்றார்கள். இந்த மனிதகுலம் எந்த அச்சில் சுழல்கின்றது. ஏணைப்பிறையில் விடையுள்ளது. ஏணைப்பிறையை யாரும் வாசிக்க முடியாது. அதற்குள் வாழத்தான் முடியும்.வாழத்துடிக்கின்ற,ஆனால் வாழமுடியாத, ஆனாலும் வாழ முயல்கின்ற மக்கள் கதைதான் இது. ஒவ்வொரு காலகட்டத்தின் முடிவும் இன்னொன்றின் தொடக்கமும் ஏதோ ஒரு விடுதலையை நோக்கிய போராட்டத்தின் விளைவே. ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் உலகிற்களித்த கொடை, என்றும் உயிர் வாழும் இலக்கியங்கள்தான். இவ்விலக்கியங்களுள் என்றும் உயிர்வாழும் மனிதர்களைத்தான். அவ்விலக்கியங்களுள் முற்றிலும் இருள் சூழ்ந்து பாதைகள் யாவும் மூடுண்ட நிலையிலும், வதைபட்டும், குருதி சிந்தியும், தாக்குப் பிடித்தும் நம்பிக்கை எனும் நாட்களில் மக்கள் வாழ்கின்றார்கள். சோவியத், சீன, வியட்நாமிய, லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க, பாலத்தீன மக்களின் இலக்கிய வரிசையில் இறுதியாகச் சேர்வது ஈழ விடுதலைப்போராட்ட இலக்கியங்கள். இதிலும் இப்போது இணைவது ஏணைப்பிறை.எதனையும எதனோடும் ஒப்பிடமுடியாது. ஏனென்றால் அதுவது அதற்குரிய சிறப்பியல்போடு இருக்கும். ஆனால் எம்மால் ஒப்பிடாமலும் அளவுகோல் இல்லாமலும் வாழமுடியாது. ஏணைப்பிறையில் பக்கம் 70வதில் வருவதுபோல “வாழ்க்கையில் அதுவொரு போலி ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான போலியாக அது இருக்கு”உலகில் உள்ள அனைத்து விடுதலைப் போராளிகளுக்கும், அவ்வாறு மாறமுடியாத போராளி உணர்வுள்ளவர்களுக்கும் நிச்சயமாக ஒரு பொதுத்தன்மை இருக்கும். அவர்கள் நிச்சயமாக மக்சிம்கோர்க்கியின் “தாயை” வாசித்திருப்பார்கள். வாசித்தவர் மனதிலே பாவெல்லும் அவனது தாயும் என்றும் இடம்பிடித்திருப்பார்கள்.

ஏணைப்பிறையை வாசித்த பின் சுகுமாரும் பெயர் அறியப்படாத அவனது அக்காவும் இடம்பிடித்துக்கொள்வார்கள். தாய் நாவலிலும் (தாயின் பெயர் சரிவரத் தெரியாது) பொறுப்பற்ற குடிகாரத் தந்தை ஏணைப்பிறையிலும் அவ்வாறே. ஆனால் இங்கு தாய்க்குப் பதில் அக்கா. ஏணைப்பிறையில் ஒரு கட்டத்தில் அம்மா செயலற்றுப் போகின்றார். அக்காவே எல்லாச் சுமையையும் சுமக்கின்றார். (அம்மாவிற்கு இரண்டு காலும் இழுத்திற்று நாரிக்குக் கீழே உணர்வில்லை்’ பக்கம் 100) தாயில் தாய்க்கும் மகனுக்குமான உறவே அடிநாதமாகப் பரவுகின்றது. இங்கு சுகுமாருக்கும் அக்காவிற்குமான உறவு.

வதைக்கப்படுவதானால் விடுதலைவேண்டிப் போராடும் அனைத்து மக்களும் போராட்டத்தின் பொழுதும் பெரிதும் வதைக்கப்படுகின்றார்கள். அக்கொடிய வதையும் அதிலிருந்து பிறக்கும் ஓர்மமும் மானிடத்தின் உயரிய பண்புகளாகக் கற்பனையே செய்யமுடியாத சாதனைகளாகின்றன. இதுவே முதல் விடுதலைப்போராட்டமாகக் கருதப்படும் ஸ்பாட்டகசின் அடிமைகள் எழுச்சியிலிருந்து பிரான்சியப் புரட்சிவழி தொடர்ந்து ருஸ்ய, சீன புரட்சிகள், வியட்நாமிய, கியூபா விடுதலைகள் வழி உலகறிந்தது. இதற்கு ஈழவிடுதலைப் போராட்டமும் விதிவிலக்கல்ல. ஆனாலும் இங்கே ஒரு பெருத்தவேறுபாடு உள்ளது. இதுவே பிறர் இன்று புரியவேண்டியது. இவ்விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவும் அதுவே. ஆயினும் அதுவே பலருக்கு வியப்பூட்டும் அதிர்ச்சிதரும் புரியமுடியாத மர்மம். இதைப் புரியவைப்பதே ஈழவிடுதலைப் போராட்ட இலக்கியங்கள் வழி இன்று பிறப்பெடுத்திருக்கும் போரிலக்கியங்களின் இலக்கு. இதனை உணர ஒரு பின்னோக்கிய வரலாற்றுப் பயணத்தினை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழினம் பட்ட அவமானத்திலும் கடைநிலை அவமானத்தின் தாக்கத்தினை எவராலும் புரியமுடியும்.

ஏனெனில் இன்றைய வீரம் செறிந்த ஈழத்தேசிய விடுதலைப்போராட்டம் இவ்வரலாற்றின் விளைபொருளே. சுயம்புவாகவே தோன்றி சுயம்புவாகவே நகரும் போராட்டம் இது.

ஆங்கிலேயர் ஆண்டபொழுது (1789 – 1948) 1833ல் தமிழ் தாயகத்தையே முற்றாக இழந்த ஈழத்தமிழினம் 1930ன் பின் படிப்படியாக தாய் நிலத்தையே இழக்கத் தொடங்கியது. 1948ல் சுதந்திரம் என்கின்ற பெயரில் சிங்களவர்கள் பெற்ற உரிமைகளை பெறாமலே இழக்கத்தொடங்கியது. 1956இன் முதன் இனக்கொலை நிகழ்வின் பின் உடமை, உறவு, உயிர் என எல்லாவற்றையும் இழக்கத்தொடங்கியது. எனவே இவற்றிற்கெதிராக (ஆங்கிலேயர் காலத்தில் காந்தி காட்டிய காங்கிரசு வழியில் சிங்களவர்களுக்கும் சேர்த்து சுயராச்சியம் வேண்டிய) தமிழினம் 1948இன் பின் இணைந்து வாழ இணைப்பாட்சி வேண்டியது.

ஆனால் சிங்களமோ பிரிந்துபோவென அரசியல், பொருண்மிய இராணுவ அடக்குமுறைகளை வேண்டியபொழுது பொறுக்கமுடியாத நிலையில் 1970 வரை மென்முறை வழியிலே போராடிய தமிழினம் தனக்கெதிராக நீட்டப்பட்ட ஆயுதங்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப்போராட பாரிய முடிவினை எவரையும் வேண்டிநிற்காமல் தானே எடுத்தது.

எனவே இயல்பாகவே ஈழத்தமிழிலக்கியப் போக்கும் பாரிய மாற்றம் கண்டது. இம்மாற்றம் ஏற்பட்ட முறைமை கூர்ந்து நோக்கப்படவேண்டியது. ஏற்கனவே 1950களில் புதிய பாய்ச்சலை நிகழ்த்த முற்பட்ட முற்போக்கு இலக்கிய இயக்கம் (மாக்சியச் சித்தாந்த அடிப்படையிலான புதிய சமூக முறைமையினை இலங்கை முழுவதும் உருவாக்க விரும்பியோரின் இலக்கிய இயக்கம்) பெரும் பின்னடைவு காண நேரிட்டது. வரலாற்றில் தவிர்க்கமுடியாத மாற்றம் இது.இலங்கைத் தேசியத்தின் வீழ்ச்சி – தமிழ்தேசியத்தின் எழுச்சி, சிங்கள முற்போக்காளர்களின் அதி பிற்போக்குவாத நிலை என்கின்ற இரு காரணங்கள் இலக்கியப் பாங்கினை முற்றாக மாற்றியமைத்தன. எனினும் இக்காலகட்ட முற்போக்கு எழுத்தாளர்களை ஈழத்தமிழிலக்கியம் தனது முன்னோடிகளாக பதிவுசெய்தே வைத்துள்ளது.

அதேவேளை 1960களிலேயே இந்நிலைமைகளைத் தம் பட்டறிவால் உணர்ந்து இலக்கியப் போக்கிலே இம்மாற்றத்தினை நிகழ்த்திய முன்னோடிப் படைப்பாளிகள் இன்றைய ஈழத்துப்போராட்ட – போரிலக்கியத்தின் முன்னோடிகள் ஆவர்.

1950களின் பிற்பகுதிகளிலே புதிய நிலைப்பாடொன்றை முன்வைத்த மு.தளயசிங்கம் எழுதிய நாவலான ஒரு தனிவீடு, தமிழன் கனவினை எழுதிய காசி ஆனந்தன், ‘வெளியார் வருகை’ என 1968ல் நெடுங்கவிதை எழுதிய சண்முகம் சிவலிங்கம், சிறுகதை ஆசிரியர்களான பிரான்சிஸ் சேவியர், அண்மையில் காலமான வரதர், அ.செ.முருகானந்தன், வ.அ.இராசரத்தினம் போன்றோரோடு முருகையன், வில்வரத்தினம், சேரன், ஜெயபாலன், கே.ஆர்.டேவிட், சாந்தன், சோ.பத்மநாதன், புதுவை இரத்தினதுரை, அ.யேசுராசா, எம்.ஏ.நுஃமான் எனத் தொடரும் இவ்வரிசை ஆரோக்கியமான தடத்தில் கவிதை, புனைகதைத்துறையில் இப்பொழுது பயணிக்கின்றது. (பட்டியல்கள் பூரணமானவையல்ல, வெறும் குறியீட்டுக்காகவே. பட்டியல்கள் ஒருபோதும் எப்போதும் எவராலும் பூரணப்படுத்த முடியாதவை) எனவே இவ்வாறாக 1970களின் பின்னான இம்மாற்றம் 1983யூலை இனவழிப்பின் பின் மிகத்தெளிவான பிரிகோட்டை உருவாக்கியது. தாமும் தமது சந்ததியும், சந்ததி சந்ததியாகப் பட்ட கொடும் வடு சுமந்த அவமானப் பழு அனைத்தையும் நீக்க இளைய தலைமுறை தீர்க்கமான முடிவெடுத்தது. இம் முடிவின் பின்னான வரலாற்றின் இலக்கியத் தொகுப்பே இன்றைய ஈழப்போராட்ட – போரிலக்கியம். எனவே இப்போது போராளிகளே படைப்பாளிகள் ஆகினர். தமது கதையைத் தாமே எழுதினர். இது இவ்வாறுதான் தொடங்கியது. இப்போது ஏணைப்பிறையிலும் அது நிகழ்கின்றது.வழிகாட்ட, துணைநிற்க, எவருமற்றும் எதுவித ஆயத்தமற்றும் கையில் எதுவுமற்ற நிலையிலும் தமிழீழத்தாயின் புதல்வர்கள் போருக்குக் கிளம்பினர். எவருமற்ற வெளிகளிலே அலைந்தனர். அருகில் அணைந்து படுத்துக்கிடந்த பிள்ளைகளைக் காணாமல் தாய்மார்கள் ஓவென அலறினர். வயிற்றிலே நெருப்பைக் கட்டியது போல் பதறினர். இவ்வாறாகத்தான் ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்தது.

இவ் வரலாறு மிக அற்புதமாகப் பதியப்பட்ட கதைதான் ரஞ்சகுமாரின் கோசலை. உலக இலக்கியங்களுள் சேர்த்துவைத்துப் பார்க்கப்படவேண்டிய சிறுகதை இது. தமிழ் தாயினதும் அவளது புதல்வர்களினதும் விசும்பல், அலைதல், படுகாயமுற்று அவயம் இழந்து குற்றுயிராதல், மண்டையோடுகள் சிதறிக்கிடத்தல், பயிற்சிக்காக கண்காணாத தேசம் போதல், பிரிவுத்துயர், அலைந்துழழல், போராட்ட ஓர்மம் கோசலையின் வரிகளின் வழி காணலாம். சிறுவயதில் இருளைக் கண்டு பயந்து அம்மாக்கள் பக்கத்திலே ஒட்டியபடி படுத்திருந்த புதல்வர்கள் யாருமற்ற வயல்வெளிகளிலே பிசாசுகளும் உலாவத் தயங்கும் நடுநிசி வேளைகளிலே இவ்வாறு திரிய எவ்வாறு பழகினர்? இந்தப் பயங்கரச் சத்தங்களை எவ்வாறு தாங்குகின்றனர். இந்த ஆபத்துக்களை எவ்வாறு விருப்புடன் ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வளவு வேகத்தையும் பெரும் சினத்தையும் இவர்களில் விதைத்தது யார்?

1970, 1980களின் பின்னே கோசலையில் தாயின் குரல் ஒலித்ததுபோல ‘என்ர பிள்ளைகள் எங்கே’ என்ற குரல் தமிழ்த் தேசம் முழுவதும் ஒலித்தது. கோசலைக்குப் பிறகு ரஞ்சகுமாரால் எழுதவே முடியவில்லை என்றே நினைக்கத்தோன்றுகின்றது. 1983களிற்குப் பின்னான மாற்றங்களை அவர் பதிவாக்கினார். 1989ல் கோசலை அடங்கிய மோகவாசல் தொகுப்பு வெளிவந்தது.

இவ்வாறாக அன்னை மடியின் இதமான சூட்டில் இருந்து விலகியவர்கள் என்னவானார்கள்? எங்கு போனார்கள்? என்ன செய்தார்கள்? என்ன எண்ணினார்கள்? எவ்வாறு கொடிய தனிமை நிரம்பிய எவ்வித முற்பட்டறிவுமற்ற வாழ்விற்கு முகங்கொடுத்தார்கள். இவ்விலக்கியப் பதிவுகளே தமிழ்கூறும் நல்லுலகிற்குப் புத்தம் புதிய வரவாக போரிலக்கியமாக விரிகின்றது.

இதுவரை எழுதியவர்களைவிட எழுதப்பட்டதைவிட இவை வேறுபட்டவை. போராட்டத்தின் ‘மறுபக்கம்’ ‘ இன்னொரு முகம்’ ‘முழுமையொன்றின் இன்னொரு பகுதி இவை. ஏனென்றால் இவை போருக்குள் இருந்து போர் செய்தவர்களால் போர் செய்யப்படும்பொழுது எழுதப்பட்டவை. எழுதப்படுகின்றவை.

கோசலை பற்றிக் குறிப்பிடும்பொழுது பேராசிரியர் சிவத்தம்பி ‘தமிழ் புனைகதை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்தது’ என்றார். இப்பொழுது கவியழகனின் ஏணைப்பிறையும் இன்னொரு புதிய அத்தியாயம்தான். ஆயினும் ரஞ்சகுமாருக்கும் கவியழகனுக்கும் இடையில் நடந்தவை, மிகமுக்கியமானவை (ஏணைப்பிறை இரண்டு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டு எழுத்துப்படியாக சிலகாலம் தவம் இருந்தது.)

பொதுவில் இப்போர்க் காண்டத்தின் தொடக்க நிலையாக சுபாஸ் (முன்னாள் போராளி தா.பாலகணேசன்) எழுதிய கொக்குளாய் படைமுகாம் தாக்குதல் பற்றிய கதையான ‘விடிவிற்கு முந்திய மரணங்கள்’ என்கிற குறுநாவல் கருதப்படுகின்றது. எனினும் அதிகம் வாசிக்கப்பட்ட நூலாக கப்டன் மலரவன்

(23.11.1992ல் இன்னொரு தாக்குதலில் இவர் வீரச்சாவடைந்தார்) எழுதிய நெடுங்கதையான (100 பக்கங்களுக்கு மேல்) போருலா உள்ளது.வனத்தின் வனப்பும் வனத்திடை வாழ்வுமாக ஒரு பயணக்குறிப்பாக மணலாறு எனும் இடத்திலிருந்து மாங்குளம் சென்று அங்கிருந்த படைமுகாமைத் தாக்கியழித்த கதை அற்புதமாகப் பதியப்பட்டு ஒரு புதிய போரிலக்கிய வரவின் குறிகாட்டியானது. இதனைத் தொடர்ந்து பலவாக இல்லாவிட்டாலும் சிலவாக இலக்கியங்கள் வெளிவரத்தொடங்கின. இதேவேளை 1985ல் கோவிந்தன் (இவரும் ஓர் இயக்கத்தின் போராளியே) எழுதிய ‘புதியதோர் உலகம்’ விடுதலைப் போரின் மற்ற முகத்தினை தமிழகம் பயிற்சிபெறச் சென்று பரிதவித்தோர் துயரக்கதையை (இயக்கம் ஒன்றின் உள் முரண்பாடுகளை) பதிவுசெய்கின்றது. ஈழத்தமிழ் போராட்ட இலக்கியத்தில் இவ்வாறாக எதிர் மறையில் முரண்பாடுகளின் உள்முகத்தைப் போரின் மறுபக்கமாக வேறு கோணத்தில் தமது மனநிலைக்கேற்ப விபரிக்கும் இலக்கியத் தரமுள்ள சிறுகதைகளும் நெடுங்கதைகளும் தோன்றி பரவலான வாசிப்புத் தளத்தினைப் பெற்றன.

மலரவனின் பின் பல கதைசொல்லும் போராளிகள் தோன்றினர். தூயவன், மலைமகள், தமிழ்கவி, என சிலரைக் குறிப்பிடலாம். தூயவன் ஒரு மருத்துவப் போராளி. இதனால் இவரது ஆக்கங்கள் போரின் மருத்துவப் பக்கத்தையும் இராணுவ நுட்பங்களையும் கதையாகச் சுவைபட விபரிக்கும் விதமாக அமைந்தன.

பெரும் விமானப்படைத் தளமொன்றில் எவ்விதம் தற்கொடைப் போராளிகளால் வேவுப் புலிகள் உதவியோடு தாக்குதல் நடத்தப்பட்டது என்கிற உண்மைக் கதை ‘இன்னொரு போர் முகம்’ ஆனது.இவ்விதமாக மலைமகள், தமிழ்கவி போன்றோர் பெண்புலிகள் போரின் நடுவே நின்று போர் செய்த கதை, சமூகத்திரையைக் கிழித்துக்கொண்டு வெளிவந்த விதம், எல்லாவற்றையும் உயிரோட்டமாக எழுதுகின்றனர். மலைமகளின் சொற்செட்டும் அது சிக்கனமாகக் கட்டமைக்கப்படும் விதமும் அவரை ஒரு தரமான சிறுகதை ஆக்கியாக்கி உள்ளது. முன்னர் போராளியாக இருந்து எழுதத்தொடங்கிய யோ.கர்ணனின் வளர்ச்சி வியக்கத்தக்கது. இவ்வாறாக இக்கதை நீளும்.

இப்பின்னணியில்தான் இப்போது கவியழகன் வருகை தருகின்றார். ‘ஏணைப்பிறை’ இவரது முதல் ஆக்கம் என்றால் எவரும் நம்பார். பலகாலமாக எழுதியவர் போல வெகு இயல்பாக தங்குதடையின்றி தனது தனித்த அடையாளங்களை கதையெங்கும் தூவி ஏணைப்பிறையை ஆக்கியுள்ளார். ஏணைப்பிறை என்கிற தலைப்பே மிக வித்தியாசமானது.

பயிற்சி முகாம் இருந்த காட்டின் நடுவே ஒரு பக்கமாக இருந்து வரிச்சுத் தடியில் (மரத்தடிகளால் செய்யப்பட்ட இருக்கை) இருந்து சுகுமாரும் எழுத்தரும் கதைப்பன மிக ஆளமான மன விசாரங்களைக் கொண்டவை. ‘இங்கிருந்து பார்க்கும்பொழுது வானத்தில் நிலா குழந்தையின் ஏணையைப் போல தெரிகின்றது. எல்லோரையும் தாலாட்ட வானம் ஏணைகட்டி வைத்திருக்கின்றது. வானத்தில் நிலவு ஏணைபோலத் தெரியுது. இதில் ஏறிப் படுத்துத் தூங்க எத்தனை பேருக்குத் தெரியும்.’ என வினா எழுப்புகின்றார்.

மிக இளைய வயதிலேயே முதிர்ச்சியான மனமொன்றை கவியழகன் பெற்றிருக்கின்றார். பிறர் அனுபவங்களை, அவர்களின் குணவில்புகளை, நடையுடை பாவனைகளை ஒரு பகுத்தாய்வு செய்யும் ஒரு பகுப்பாளனாக பயிற்சி முகாமில் இருந்த போராளிகளை, அதன் பொறுப்பாளர்களை வருணிக்கும், மெல்லிய நகைப்புடன் அவர் விபரிக்கும் பாங்கு மிக நேர்த்தியாக உள்ளது. அதேவேளை எத்தகைய பல்வேறுபட்ட பின்புலங்களிலிருந்து போராளிகள் வருகின்றனர் என்கின்ற கதையையும் வெளிவரச் செய்துவிடுகின்றார்.

வனத்தின் வனப்பையும் அதன் தனிமையையும் – கத்தியால் வெட்டி எடுக்கக்கூடிய இருள் – என்றும் – காட்டின் மௌனமும் அந்த மௌனத்தின் ஒலியும், காட்டின் இருளும் அந்த இருளின் ஒளியும் – என்றும் அவர் சொற்களில் இட்டுக்கட்டும் விதம் இதுவரை காடுகள் பற்றி எழுதிய எழுத்தாளர் வரிசையிலேயே அவரையும் சேர்த்துவிடத் தூண்டுகின்றது. ஏணைப் பிறை முழுவதும் ஒரு வலி பரவிக்கிடக்கின்றது. வாழ்வின் இருண்ட பக்கங்கள், வறுமை, இல்லாமை என்கின்ற பெரும் துயர், இதற்குள் வாழத்துடிக்கும் மனிதர்கள் என வெகு யதார்த்தமான பதிவுகளின் தொகுப்பாகின்றது. மனிதத் தேடலின் ஒரு பகுதிதான் ஏணைப்பிறை. ஏணைப்பிறை முழுவதும் இழையோடும் தத்துவ விசாரங்கள் வாசிப்பாளனை பலவித கேள்விகளுக்கும், நெருக்கடிகளுக்கும், அந்தரத்திற்கும் உட்படுத்தி விடுகின்றன. ஏதோவொரு வகையான குற்றவுணர்வு பரவுகின்றது.

‘புற மெய்மைகளை படிமங்களாக்கி நிஜஉலகின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை வன்மையுடனும் இரத்தத்துடனும் சதையுடனும் உண்மைசொட்ட யதார்த்தமாகத் தரும்போதே ஒரு படைப்பாளியின் படைப்பாளுமை, ஆக்க ஆளுமை தெரியவரும்.’ (பேராசிரியர் சிவத்தம்பி) என்பதற்கு கவியழகன் ஏணைப்பிறையில் சான்றாகின்றார்.

130 பக்கங்கள் கொண்ட ஏணைப்பிறையில் இரண்டாம் பகுதி (கதையில் அவ்வாறில்லை) 104லில் இருந்தே தொடங்குகின்றது. அதுவே கதையின் முதன்மைப் பகுதி. முதன்மைக் கரு. ஏணைப்பிறையின் உயிரோட்டமான அக்கா எமக்கு நேரடியாக 17ஆம்ப க்கத்திலேயே அறிமுகமாக்கப்படுகின்றார். அதிலிருந்து நூல் முடியும்வரை அக்காவின் கதை வளர்த்தெடுக்கப்படும் விதம் கவியழகனின் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்துகின்றது. குறுந்துயரக் காவியமாக இருள் படர்ந்து, தூசு மண்டி மங்கலாகத் தெரியும் அக்காவின் மெலிந்த உயரமும் அதனுள் படர்ந்து இருக்கும் துயரமும் நிழற்படமாக மனதில் படிகின்றது. கதை முடிந்தவுடன் கனத்த இதயமே எமக்கு மிஞ்சுகின்றது. பெரும் துயர் கலந்த மௌனமே நீடிக்கின்றது. இம்மௌனத்தைச் சுரம்பிரிக்குமாறு அன்பு வாசகர்களை வேண்டுவதே எம் பணி. ஈழப்போராட்ட இலக்கியங்களுள் உறையும் சோகம், ஓர்மம், ஈகம் இவையே அறியவேண்டியவை.

கொழுந்துவிட்டெரியும் துயரக்கொந்தளிப்புக்கள், அவமதிப்புக்களிலிருந்து பிறக்கும் கடும் சீற்றம், உயரிய ஈகங்களை உயிரைத் தற்கொடையாக்கி நிகழ்த்தும் அற்புத மனநிலைகள், விடுதலைப் போரின் உயிர்ப் பக்கங்கள், துணிகரப் போரின் அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இவற்றின் பிழிவாக ஈழத்தமிழிலக்கியம் இன்று தமிழ் கூறும் நல்லுகம் முன் விரிகின்றது. இன்னமும் எழுதப்படாத பல ‘உண்மை மனிதர்கள்’ கதைகள் உள்ளன. இவற்றினை அறியவும் ஆயத்தமாகுமாறு உங்களை வேண்டுகின்றோம்.ஏணைப்பிறையின் ஒரு வரியோடு இத்தொடர்புரையை நிறைவாக்குகின்றோம். மானிட விடுதலைக்காகப் போராடும் ஆதரவளிக்கும் அனைவரையும் இக்கணத்திலே நினைவில் கொள்கின்றோம்.

*நேசம் உறவுறுவதால் வருவதில்லை

அது நினைவுறுவதால் வருவது*

க.வே.பாலகுமாரன்

**
இராணுவத்தின் பிடியில் பாலகுமாரன்: புதிய போர்க்குற்ற புகைப்படம் வெளியானது !

தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் க.வே.பாலகுமாரனும், அவரது மகனும் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும்
இராணுவத்தின் பிடியில் பாலகுமாரன்

புதிய போர்க்குற்ற ஆதாரப்புகைப்படமொன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான பாலகுமாரன் தொடர்பான புகைப்படத்தில், அவர் வடலிப்பற்றை சூழ்ந்த இடத்தில் மரத்தில் செய்யப்பட்ட இருக்கையில் உட்கார்ந்திருந்தார். இந்த புகைப்படத்தில் தரையில் உள்ள சிறிய பலகை போன்ற ஒன்றில் உட்கார்ந்திருக்கிறார். அவரை இராணுவத்தினர் விசாரணை செய்வது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வெளியான புகைப்படத்தில் பாலகுமாரனின் முகத்தில் பெரும் கலவரம் தெரிந்தது. இந்த புகைப்படத்தில் அவர் ஓரளவு இயல்பான நிலையில் இருப்பதாக தெரிகிறது. இதனால், கைது செய்யப்பட்டு நீண்டநேரத்தில் பின்னர் இந்தபடம் பிடிக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.இந்த படத்தில் பாலகுமாரன் மற்றும் அவரது மகன் தவிர்ந்த இன்னொருவரும் உட்கார்ந்திருக்கிறார்.

பாலகுமாரனை தாம் கைது செய்யவில்லையென படைத்தரப்பும், இராணுவமும் திரும்பத்திரும்ப கூறிவரும் நிலையில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் மைத்திரி அரசை நிச்சயம் நெருக்கடியில் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Up ↑