Search

Eelamaravar

Eelamaravar

Category

நாட்டுப்பற்றாளர்

ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்தவர்கள் யார்?

விடுதலைப் புலிகளின் பிளவு மட்டக்களப்பில் வசித்த இரண்டு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக அமைந்திருந்தது.

அதில் ஒருவர் கொழும்பில் இருந்து செயற்பட்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்கள் அடுத்தது மட்டக்களப்பில் இருந்து பணியாற்றிய ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன்.

இருவரும் எந்த மக்களின் விடுதலைக்காக தங்களது ஊடகப் பணியை அர்ப்பணித்தார்களோ தமிழ் மக்களின் விடுதலைக்காக யாருடன் கூடுதலான உறவு வைத்திருந்தார்களோ அவர்களாளேயே இவர் கொல்லப்பட்டார்கள் என்பதே கசப்பான உண்மைகள்.

விடுதலைக்கான பயணத்தில் இருந்து விலகியவர்கள் முதலில் பயந்தது துப்பாக்கிகளுக்கு அல்ல தங்களுடன் கூடவே இருந்த பேனாக்களுக்கே .

என்னதான் தங்களது பிளவை நியாயப்படுத்தினாலும் தங்களுடன் தொடர்பில் இருந்த ஊடகவியலாளர்களுக்கு முழுவதும் தெரியும் அவர்கள் உண்மையை எழுத தொடங்கிவிட்டார்கள் அவர்கள் எமக்கு எதிராக சவால் விட்டு எழுதுகிறார்கள் அவர்களின் எழுத்திற்கு பதில் சொல்ல தெரியாத ஒரு படையை நடத்திய தளபதி தங்களது வீரத்தை காட்டிய விதமே ஐயாத்துரை நடேசனின் படுகொலை என அந்த நேரத்தில் பலராலும் சொல்லப்பட்ட விடயம்.

நடேசன் யாருக்காக எழுதினார்? எதற்காக எழுதினார்? அவர் கடைசியாக யாரை குறிவைத்து எழுதினார்? போன்ற வினாக்களுக்கு விடை தேடும் போது அவரை கொலை செய்தவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இன்நிலையில் மட்டக்களப்பில் உள்ள இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அது இன்று வரை தொடர்கிறது.

கருணா அம்மான் மற்றும் அவருடன் சேர்ந்தியங்கிய பிள்ளையான் ஆகியோரே ஊடகவியலாளர் நடேசனின் படுகொலைக்கு பின்னால் உள்ள சூத்திரதாரிகள் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு இது வரை பகிரங்கமான மறுப்புக்கள் வெளியாகவுமில்லை. குறித்த கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் இல்லை.

எனவே ஊடகவியலாளர் நடேசனின் கொலை தொடர்பான உண்மைகள் கடந்த 13 வருடங்களாக மறைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த கொலை தொடர்பான விசாரணைகளை இன்று வரை அரசாங்கம் ஆரம்பிக்க வில்லை

நடேசனை கொலை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்கிற சிவநேச துரை சந்திரகாந்தன் அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதை நேரம் ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்த சம்பவத்தில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர் அந்த நேரத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தனர்.

மட்டக்களப்பு எல்லைவீதியில் மே மாதம் 31ஆம் திகதி காலை ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் தனது அலுவலகத்திற்கு செல்லும் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நடேசன் தனது அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடேசனை சுட்டுக்கொன்றனர்.

மோட்டார் சைக்கிளிலில் வந்தவர்களில் ஒருவர் பிள்ளையான் என தெரிவிக்கப்படுகிறது.

அக்காலப்பகுதியில் பிள்ளையானும் சகாக்களும் இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கியிருந்ததாகவும்

நடேசன் இறந்த பின் சற்று நேரத்தில் அப்பகுதியில் இருந்த ஆஞ்சநேயர் மரக்காலை சுற்றுமதிலுக்கு அருகில் பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர்.

கொலையாளிகள் பின்னர் அம்மக்களுடன் நின்று நடக்கும் சம்பவங்களை அவதானித்து கொண்டிருந்தனர் என தற்போது மட்டக்களப்பில் இருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஊடகவியலாளர் நடேசனின் கொலை யாருடைய தேவைக்காக நடத்தப்பட்டது என்பது இன்றும் மர்மமாக உள்ளது.

மரணத்தை கண்டு அஞ்சாத நடேசன்!

ஊடகவியலாளர் பராபிரபா அவர்கள் நடேசன் குறித்து தனது பதில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அதாவது பத்திரிகையாளர் மரணத்தை எதிர்பார்த்த வேளையிலும் பேனாவை கீழே வைப்பதற்கு மறுத்தவர் நடேசன்.

“நான் செத்தாலும் பரவாயில்லை. புற முதுகில் சூடுபட்டுச் சாகக் கூடாது. நெஞ்சில் குண்டு பாய்ந்து வித்தாக விதைக்கப்படுவதையே விரும்புகின்றேன்” என்பது நடேசனின் வாசகங்கள்.

அந்த வாசகம் பகிடியாகக் கூறப்பட்டதல்ல என்பதே தனது மரணத்தின் மூலம் பதிவு செய்தவர் நடேசன். நடேசனின் இன்னுமொரு பகிடிக் கதையும் நிதர்சனமாகியது இங்கு பதிவு செய்வது பொருந்தும்.

“பத்திரிகையாளன் குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மரணித்தால் அது செய்தியாக ஒரு கிழமை உலாவரும். பிறகு மறந்து விடுவார்கள். மறந்து விடுவது என்பது மரணித்த பத்திரிகையாளனை மாத்திரமல்ல. அவர்களது குடும்பத்தையும்தான். மரணித்த பத்திரிகையாளன் இல்லாது அவனது குடும்பம் சோகத்தில் இருந்து மாத்திரமல்ல பொருளாதார ரீதியிலும் மீள முடியாத நிலையை அடைந்து விடும். இது பற்றி எவருமே கவலைப்படுவதில்லை என்பதுதான் நடேசனின் ஆதங்கமாகிறது.

நடேசனின் இந்த கருத்து நிதர்சனமானது என்பது தமிழ் பத்திரிகை உலகம் பின்னர் கண்ட உண்மை.

மறைந்த மூத்த பத்திரிகையாளன் எஸ்.நடராஜா தமிழ் பத்திரிகை உலகம் குறித்த அடிக்கடி கூறும் வாசகம் இது

“நாங்களெல்லாம் கூலிகள். கூலிகளாகவே தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கணிக்கப்படுகின்றார்கள்” என்பதுதான் அவரது ஆதங்கம்.

தமிழ்த் தேசியத்திற்காக எழுதியவர்களையும் உழைத்தவர்களையும் வைத்து வியாபாரம் நடத்திய பத்திரிகை உலகத்திற்கு அதற்காக உயிர் நீத்த பத்திரிகையாளர்களையும் அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் ஏறெடுத்துப் பார்ப்பதற்குக் கூட மனம் வருவதில்லை என்பதை பதிவு செய்திருந்தார்.

நாட்டு பற்றாளர் நடேசன்!

படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் நடேசனுக்கு கிடைத்த ஒரே அங்கிகாரம் நாட்டுப்பற்றாளர் என்று அந்தஸ்தினை விடுதலைப்புலிகள் இயக்கம் வழங்கியிருந்தது.

விடுதலைப் புலிகள் அல்ல அந்த நேரத்தில் எந்த அமைப்பாக இருந்தாலும் நடேசன் அவர்களின் ஊடகப் பணிக்கு உயரிய அந்தஸ்தை வழங்கும் அளவுக்கு தமிழ் ஊடகத்துறைக்கு அந்த காலப்பகுதியில் துணிவுடன் எழுதிய பத்திரிகையாளர் அவர்.

அவரது துணிச்சல் கருணாவை நேரடியாக விமர்சித்து எழுதும் அளவுக்கு சென்றிருந்தது.

நடேசன் அவர்களின் மரணம் குறித்து அப்போது மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர் இரா துரைரெட்ணம் எழுதியவற்றில் இருந்து சிலவற்றை இங்கு தொகுத்து தருகின்றோம்

2004 மே 31ஆம் திகதி. நடேசன் படுகொலை செய்யப்பட்ட நாள். தான் வாழ்ந்த சமூகத்தின் நீதிக்காக அரசியல் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த பத்திரிகையாளன் ஒருவனுக்கு அதற்கு பரிசாக நடு வீதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள்.

கிழக்கு பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் தம்பையாவின் படுகொலை பற்றி அந்த கொலை நடந்த அடுத்த ஞாயிறு தனியார் பத்திரிகை ஒன்றில் நடேசன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது. மிக காரசாரமானதும் துணிச்சலோடு பல விடயங்களையும் சொல்லிய கட்டுரையாக அது அமைந்திருந்தது.

அந்த கட்டுரையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது.

இந்த சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றிய தம்மையாவின் படுகொலையை வெறும் செய்தியாக பார்த்து விட்டு மௌனமாக இருக்க போகிறோமா?

இத்தகைய கொலைகளுக்கு எதிராக வெகுஜனரீதியாக திரண்டெழுந்து இதை தடுக்கவில்லை என்றால் ஒரு தம்பையாவை போன்ற பல கல்விமான்களை அறிஞர்களை சமூக பணியாளர்களை இழக்க வேண்டி வரும்.

அந்த இழப்புக்களை பார்த்து வெறும் கண்ணீரை விடும் சமூகமாக இருக்கப்போகிறதா அல்லது அராஜகவாதிகளுக்கு எதிராக தங்கள் சக்தியை காட்டப்போகிறார்களா? என கேள்வி எழுப்பியிருந்த நடேசன் கட்டுரையின் இறுதியில் அராஜகவாதிகளின் அடுத்த இலக்கு யார் என்ற கேள்வியுடன் முடித்திருந்தார்.

அடுத்த இலக்கு தன் மீதுதான் என்பதை தெரிந்து கொண்டுதான் இதை எழுதினாரா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனால் தம்பையாவின் படுகொலையை ஒத்த கொலைகள் தொடரப்போகிறது என்ற ஆரூடத்தை அக்கட்டுரை சொல்லியிருந்தது.. ஆனால் அந்த கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே தங்களின் அடுத்த இலக்கு யார் என்பதை கொலையாளிகள் வெளிப்படுத்தி விட்டார்கள்.

சில தினங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து விட்டு ஞாயிறு இரவு வீடு திரும்பியிருந்தோம்.

ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து நடேசனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இன்று ஞாயிறு என்ர கட்டுரை பார்த்தியா என கேட்டான். இல்லை என்றேன்.

இந்த படுகொலைகளையும் அராஜகங்களையும் எத்தனை நாட்களுக்கு இந்த சமூகம் பொறுத்துக் கொண்டிருக்க போகின்றது. தம்பையாவின் படுகொலை பற்றி காரசாரமான கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறேன். வாசித்து பார் என சொன்னான்.

2004 மே 31 திங்கட்கிழமை. சரியாக தம்பையா சுட்டுக்கொல்லப்பட்டு ஒருவாரம்.வழமை போல மனைவியை அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தேன்.அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வந்தது.

நடேசன் பணியாற்றிய அலுவலகத்தில் இருந்துதான் ஒருவர் பேசினார். நடேசனை சுட்டுவிட்டார்கள். அவரின் மனைவிக்கு அறிவித்து விட்டோம். எங்கள் அலுவலகத்திலிருந்து சற்று தள்ளித்தான் இச்சம்பவம் நடந்திருக்கிறது என்றும் தாங்கள் அந்த இடத்திற்கு போகவில்லை என்றும் சொன்னார்கள்.

அந்த தகவலை சொல்லிவிட்டு அவர் தொலைபேசியை வைத்த மறுகணம் மீண்டும் தொலைபேசி மணி அடித்தது. மறுமுனையில் தனியார் வானொலியிலிருந்து நண்பர் குருபரன் பேசினார்.நடேசனை சுட்டுவிட்டார்கள். நாங்கள் பிறேக்கிங் நியூஸ் இப்ப போட்டிருக்கிறம் என்றார். என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது. காயங்களுடனாவது தப்பி விட வேண்டும் என மனதிற்குள் எண்ணிய எனக்கு குருபரனே பதில் சொன்னார்.

ஆள் முடிஞ்சுதாம். அவரின்ர அலுவலகத்திற்கு போற றோட்டிலை தான் பொடி கிடக்காம் என குருபரன் சொன்னார்.

அலுவலகத்திற்கு புறப்பட்ட மனைவிக்கு விடயத்தை சொல்லிவிட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு செல்வதற்கு புறப்பட்ட போது அச்சத்தால் அங்கு போவது ஆபத்தில்லையா என என்னை தடுத்தார்கள்.

இப்படியான விடயங்களில் தடுத்தாலும் நான் கேட்பதில்லை என அவர்களுக்கு தெரியும். அவர்களின் பேச்சை கேட்கும் நிலையிலும் அப்போது நான் இருக்கவில்லை. உடனடியாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு எல்லை வீதிக்கு சென்றேன்.

சம்பவம் நடைபெறுவதற்கு முன் தாண்டவன்வெளி திருமலை வீதியில் பத்திரிகையாளர் உதயகுமாருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு அலுவகத்தை நோக்கி சென்ற போதுதான் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

எல்லை வீதி வழியாக நடேசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நேர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே கைத் துப்பாக்கியால் நடேசன் மீது சுட்டிருக்கின்றனர். நான் சென்ற போது இரத்தம் கொப்பளித்தவாறு நடேசனின் உடல் வீதி ஓரத்தில் கிடந்தது. மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்தது.

இராணுவத்தினரும் பொலிஸாரும் நின்றனர். தூரத்தில் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் நடேசனுடன் நெருங்கிய நண்பர்களாக பழகிய சிலரும் நின்றிருந்தார்.

அந்த நேரத்தில் சடலத்திற்கு அருகில் வர பலரும் அஞ்சினார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த தனியார் பத்திரிகையாளர் சந்திரபிரகாஷ் அண்ணன் இங்கு நிற்கவேண்டாம். சுட்ட ஆக்களும் இங்கதான் நிக்கிறாங்கள். நீங்கள் நிற்பது ஆபத்து போய்விடுங்கள் என கூறினார்.

அங்கு வந்த பொலிஸார் சுடப்பட்டவரை தெரியுமா என்று கேட்டனர். தெரியும் அவர் எங்கள் சக பத்திரிகையாளர் என கூறிய போது சடலத்தை அடையாளம் காட்டி பொறுப்பேற்க முடியுமா என கேட்டனர். நான் ஆம் என்றேன்.

எனக்கு ஏற்கனவே தெரிந்த பறங்கி இனத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தான் இச்சம்பவம் நடந்தது. அவர் வீட்டில் நின்று அவதானித்து கொண்டிருந்தார்.

அவரிடம் சென்று நடந்த சம்பவத்தை கேட்டேன். சொல்வதற்கு தயங்கினார்கள். அந்த வீட்டுக்கார வயோதிபர் என்னுடன் நெருங்கிய பழக்கம் என்பதால் தனியாக அழைத்து சென்று சில தகவல்களை சொன்னார்.

இருதயபுரம் இராணுவ முகாமில் இருக்கும் கருணா குழுவை சேர்ந்த இருவர் தான் மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டார்கள். அவர்கள் சுட்டு விட்டு திருமலை வீதிப்பக்கம் சென்று விட்டு சில நிமிடங்களில் திரும்பி வந்து இறந்து விட்டாரா என பார்த்துச் சென்றனர் என கூறினார்.

5 நிமிட இடைவெளியில் பிள்ளையானும் வந்து பார்த்து சென்றதாக அவர் சொன்னார். அவருக்கு இயக்கத்தில் இருப்பவர்களை பெரும்பாலும் தெரியும். அவரின் மகனும் முன்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்.

என்னிடம் காவல்துறையினரும் பின்னர் மரண விசாரணை நடத்திய நீதிபதியும் வாக்கு மூலங்களை எடுத்தனர். அப்போது கொலையாளி இருவரின் பெயர்களையும் அவர்களிடம் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீதிபதி சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்த்து விட்டு வைத்தியசாலைக்கு கொண்டுவருமாறு சொன்னார். வேன் ஒன்றை ரெலோ பிரசன்னா கொண்டுவந்திருந்தார். சடலத்தை தூக்கி வானில் ஏற்ற வேண்டும்.

நான் ஒருபக்கம் பிரசன்னா மறுபக்கம் தூக்கினார். நடேசன் மிக உயரமானவர். எங்களால் தூக்க முடியாது கஷ்டப்பட்டோம். உதவிக்கு வருமாறு சற்று தூரத்தில் தள்ளி நின்றவர்களை அழைத்தோம். யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இறுதியில் அங்கு நின்ற பொலிஸ்காரர் ஒருவரே வானில் சடலத்தை ஏற்ற உதவினார்.

இச்சம்பவத்தை அறிந்த மட்டக்களப்பு தமிழ் பத்திரிகையாளர்கள் அனைவரும் அச்சத்தால் உறைந்து போய் இருந்தார்கள். வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு போனதும் அங்கு தவராசா வந்து சேர்ந்தான்.

மனதுக்கு ஆறுதலாக இருந்தது. அந்த நேரத்திலிருந்து சடலத்தை யாழ்ப்பாணம் கரவெட்டிக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வரை என்னுடன் கூட இருந்த ஒரே ஒரு மட்டக்களப்பு பத்திரிகையாளர் தவராசா மட்டும் தான். சடலத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதே நல்லது என நடேசனின் குடும்பத்தினருக்கு கூறிய போது அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.

அன்றிரவு தமிழ் செல்வன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் வவுனியாவில் வைத்து தாங்கள் சடலத்தை பொறுப்பெடுத்து யாழ்ப்பாணம் வரை ஊர்வலமாக கொண்டு செல்வதென்று தீர்மானித்திருப்பதாகவும் சொன்னார்.

இந்த விடயத்தை நான் நடேசனின் குடும்பத்திற்கு கூறவில்லை. சடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு முதல் காலையில் நடேசனின் மட்டக்களப்பு வீட்டில் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

அஞ்சலி செலுத்த வந்த மட்டக்களப்பு அன்பர் ஒருவர் என்னிடம் சொன்னார். நடேசனோ அல்லது நீங்களோ யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியாது. இன்றுதான் தெரிந்து கொண்டேன் என சொன்னார். விடுதலைப்புலிகளின் நகரப் பொறுப்பாளர் சேனாதி தலைமையிலான சிலர் அஞ்சலி செலுத்தி விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை போர்த்தி சென்றார்கள்.

நெல்லியடியிலிருந்து வந்திருந்த நடேசனின் அக்கா அந்த கொடியை தூக்கி எறிந்து பிரச்சினை ஏற்படுத்தினார். புலிக்கொடியுடன் சடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு போக மாட்டோம் என கூறினார். அவ கடும் புலி எதிர்ப்புவாதி போல தெரிந்தது. மறுநாள் காலையில் நடேசனின் குடும்பம் மற்றும் நான் தவராசா உதயகுமார் ஆகியோர் மூன்று வேன்களில் யாழ்ப்பாணம் புறப்பட்டோம்.

நாங்கள் புறப்பட்டு சில மணி நேரத்தில் மன்னம்பிட்டியை கடந்து சென்று கொண்டிருக்கும் போது தனியார் பத்திரிகை ஒன்றின் அலுவலகத்திலிருந்தும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிலிருந்தும் தொலைபேசி எடுத்தார்கள்.

நடேசனின் சடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு போகவிடாது இராணுவம் தடுத்து வைத்திருக்கிறதாமே புலிக்கொடியுடன் சடலத்தை கொண்டு சென்றதால் நீங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என தகவல் வந்திருக்கிறது என கேட்டார்கள்.

பிழையான தகவல் ஒன்றை யாரோ கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள். பின்னர் அந்த பொய் தகவலை பரப்பியவர்கள் கருணா குழு என அறிந்து கொண்டேன்.

வவுனியா எல்லையில் வைத்து புலித்தேவன் தலைமையில் வந்த விடுதலைப்புலிகள் பூதவுடலை கையேற்றார்கள்.

பெரிய அளவில் வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் அஞ்சலி நிகழ்ச்சிகளை விடுதலைப்புலிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பதை நடேசனின் அக்கா முதல் அவர்களின் குடும்பத்தினர் அறிந்து கொண்டனர். மட்டக்களப்பில் புலிக்கொடியை தூக்கி எறிந்த நடேசனின் அக்கா வன்னியில் மௌனமாக இருந்தார்.

வவுனியா எல்லையில் விடுதலைப்புலிகள் நடேசனின் பூதவுடலை பொறுப்பேற்றதும் எங்களுடன் கூட வந்த உதயகுமார் தான் தொடர்ந்து வரவிரும்பவில்லை என கூறி மட்டக்களப்புக்கு திரும்பி சென்று விட்டார்.

எனக்கு கவலையாக போய்விட்டது. அப்போது தவராசா சொன்னான் அண்ணன் நான் கடைசி வரைக்கும் உங்களுடன் வருவேன். வருவது வரட்டும் என துணிச்சலுடன் யாழ்ப்பாணம் வந்தான்.

மறுநாள் கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த நாள் நெல்லியடியில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நடேசன் படித்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கொழும்பிலிருந்து சுதந்திர ஊடக அமைப்பை சேர்ந்த சுனந்த தேசப்பிரிய உட்பட சிங்கள ஊடகவியலாளர்களும் வந்திருந்தனர்.

நெல்லியடி சுடலையில் தகனம் செய்யப்பட்ட பின் சுனந்த தேசப்பிரிய என்னை சந்தித்து மட்டக்களப்புக்கு செல்ல வேண்டாம் என ஆலோசனை கூறினார். கொழும்புக்கு வருமாறும் மாற்று ஏற்பாடு ஒன்றை செய்வதாகவும் கூறினார்.

மட்டக்களப்புக்கு திரும்பி சென்ற தவராசா அங்கு தொடர்ந்து இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து கொண்டு கொழும்புக்கு வந்து சேர்ந்தார். என நடேசனின் நண்பர்களில் ஒருவரான ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம் அவர்கள் நடேசனின் படுகொலை சம்பவம் பற்றிய கட்டுரையில் எழுதி உள்ளார்.

நடேசன் மட்டும் அல்ல இலங்கையில் சுமார் 45 ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நீதி விசாரணைகளை இன்றுவரை அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை.

ஆனால் ஊடகவியலாளர் நடேசனின் படுகொலையில் நேரடியாக கருணா, பிள்ளையான் ஆகியோரின் தொடர்பு குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்கிறது. இதற்கான பதிலை அவர்கள் முழு உலகிற்கும் சொல்லவேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

நடேசனை அன்று படுகொலை செய்தது கருணா, பிள்ளையான் இல்லை என்றாலும் அவரின் படுகொலை குறித்த உண்மைகள் அவர்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது. எனவே அது குறித்த உண்மைகளை வெளியிடுவது அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும்.

S.நிலாந்தன்

தமிழீழத் தேசத்தின் நாட்டுப் பற்றாளர் தினம் சித்திரை 19ம் நாள் !

தமிழீழத்தின் வீரத்தாய் தியாகச் சுடர் அன்னை பூபதி தமிழ் இனத்தின் ஒரு குறியீடு!

‘தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.’

-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.Annai Poopathi-2012

தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாக தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது.

**naaddu pattalar

தமிழீழக் கலைஞர் நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா

Nationalist Kanesh Artistஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா.

காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டார்.

போராட்டத்துக்காக “கலை” வடிவில் போராடிய உண்மை கலைஞன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசு எம்மக்கள் மீது நாளும் விளைவிக்கும் இனவெறித் தாக்குதலை – கொடுமைகளை அதனால் துன்பப்படும் உறவுகளின் சொல்லிலடங்கா வேதனைகளை, தன் தத்துருவமான திறனால் அவற்றை ஓர் காட்சியாக நடித்து ஓர் உறவுகளின் உயிரோட்டமாக புலத்து மக்களிடம் சென்றடைந்து அவர்கள் புரிதலுக்கு ஏற்றவகையில் செயல்திறன் கொண்டவரும் எத்தனை எத்தனையோ போராளிகளின், தாய் – தந்தையர்களின், சகோதர – சகோதரிகள், மழலைகள் மனங்களில் நிறைந்தவர்.

தன்னடக்கம், குறும்பு சிரிப்பு, அனைவர் மனத்தையும் வசிகரிக்கும் பார்வை….. வறுமையில் வாடினாலும் போராட்டத்துடன் ஒன்றிப்போன, போராடத்துகாகவே வாழ்வை அர்ப்பணித்து கடைசிவரை உறுதியாக இருந்த உண்மை மனிதர்களில் இவரும் ஒருவர்.

“நமது எதிர்கால சந்ததிக்கு, நாம் தலை குனிந்து பதில் சொல்லும் நிலைமை வந்து விடக்கூடாது”

பல காலமாக தமிழீழ திரைப்படத் துறையில் ஓர் கலைஞானாக வலம் வந்தவர். எல்லோராலும் கணேஸ் மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார். தமிழீழ தேசம் ஓர் கலைத்துறையில் ஓர் சிறந்த கலைஞனை, ஓர் நகைச்சுவையாளனை தன்னுள் ஓர் வரலாறாக அரவணைத்தது.

கணேஷ் மாமாவின் நடிப்பும் அவரின் விடுதலைப்பற்று யாருக்கும் யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. மிக அண்மைகாலம் வரையில் போராட்டகளங்களுக்கு மத்தியில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தாய் மண்ணின் நினைவோடு தாயகத்திலிருந்து வரலாறாகிய இந்த கலைஞனுக்கு எமது இதய அஞ்சலிகள்…..

எத்தனை வருடம் சென்றாலும் ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவர் நம் கணேஷ் மாமா தமிழீழ காற்றில் கலந்து எம் நெஞ்சமதில் நீங்காத நினைவுகளாய்……………..

கணேஷ் மாமாவின் விடுதலைக்கான உழைப்பின் சில காவியம்……….
* இன்னும் ஒரு நாடு
* அம்மா ! நலமா ?
* உயிரம்புகள்
* கடலோரக் காற்றுkanesh uncle

இன்றும் உம் உருவம் தொலைக்காட்சித் திரைகளில் விடுதலை தாகத்தின் குரலாய் கேட்கிறது காதோரம் கண்ணீர்தான் விழியோரம் நினைவுகளுடன்……

Up ↑