Search

Eelamaravar

Eelamaravar

Category

கரும்புலிகள்

வெடி சுமந்த வேங்கையின் காதல்.! போராளி என்பவன் யார்.!

முகம் தெரியாத ஒருவருக்காக கண்ணீர் சிந்துபவர்களைத் தான், நாங்கள் இளகிய மனம் படைத்தவர்கள் என்று வகைப்படுத்துகின்றோம்.!

black tigers documentaryஇன்னொருவர் படும் துன்பம் கண்டு, எவனொருவன் மனம் கசிந்து, அவர்களைக் காக்க, அவர்களுக்காக போராடப் புறப்படுகின்றானோ அவனே போராளி.!

களத்தில் களமாடும் போது, உறுதியில் “உருக்கை” போன்றவர்களாக இருந்த போதும், அன்பினால் இளகிய மனம் படைத்தவர்களே எங்கள் போராளிகள்.!

இந்த உலக அமைப்பு இவர்களை பயங்கரவாதிகள் என்று வகைப்படுத்துவதை, அடிமைப்பட்ட ஒரு இனம் மறுதலித்தே வரும் என்பது நிதர்சனம்.!

போராளி என்பதனால், இவர்கள் மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இவர்களும் எல்லா உணர்வுகளும் கொண்ட ஒரு சராசரி மனிதர்களே.!

எமது மக்களுக்கு எமது போராளிகளின் வீர வரலாறுகளும், அவர்களது சாகசங்கள் நிறைந்த, சாதனைகள் மட்டுமே தெரியும். அதையும் தாண்டி அவர்களின் மறுபக்க வாழ்க்கையை யாரும் அறிவதில்லை.

அந்த வீரர்களின் மறுபக்கம் மிக அழகானது.!

பாறை மனம் கொண்ட அந்த வீரர்களின் இதயத்தில், காதல் என்ற அருவி பாய்வது எமக்கு கண்ணுக்கு தெரிவதில்லை.!

அவர்களின் காதலும் தெளிந்த நீரோடை போன்றது.!

இந்த உணர்வுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. அதற்கு தலைவரின் காதலே எமக்கு உதாரணம்.!

ஆம், இது ஒரு கரும்புலி வீரனின் காதல் கதை.!

இந்திய இராணுவம் எம் மண்ணைவிட்டு அகன்றதும் புலிகளமைப்பு கட்டமைப்பு ரீதியாக பல மாற்றங்களை செய்தது. புதிய துறைகள் தலைவரால் உருவாக்கப்பட்டது.

செயற்பாடு குறைந்திருந்த பல கட்டமைப்புகளுக்கு, ஆளுமையான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் வேகம் பெற்றிருந்தது.

விசு அண்ணையின் வீரச்சாவின் பின்னர், மாத்தையா அவர்களின் மேற்பார்வையில், சலீம் என்பவரது பொறுப்பில், சில போராளிகளுடன் இயங்கிய புலிகளின் உளவுத்துறை, கிடப்பில் போடப்பட்டது போல செயற்பாடு இல்லாது இருந்தது.

அவரிடமிருந்து புலனாய்வுத்துறையை அம்மான் பொறுப்பெடுத்ததும், புதிய போராளிகளை உள்வாங்கி, முழு வேகம் பெற்றது புலிகளின் உளவுத்துறை.!

அப்படியான நேரத்தில் தான் இந்த போராளியும், உளவு நடவடிக்கை நிமித்தம், சிங்களத் தலைநகர் நோக்கி வேவுப்போராளியாக அனுப்பப்பட்டான்.

அங்கு ஒரு கேளிக்கை விடுதியில் தனது பணியை ஆரம்பித்து, அன்றைய சிங்களதின் உச்சப்பதவியில் இருந்தவரை சந்தித்து, அவருடன் உணவுண்டு வரும் அளவுக்கு, சிங்கள அரசின் மேல் மட்டங்கள், மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வரை தொடர்பை உண்டாக்கியிருந்தான்.

புலிகளின் புலனாய்வு ஊடுருவலில், மிகப்பெரிய ஊடுருவல் இது என்றால் அது மிகையாகாது.!

இவன் மிகப்பெரும் சாணக்கியன். அவனது பேச்சு எதிராளியை கவரும் வசீகரம் கொண்டது.!

இந்த நேரத்தில் இந்த போராளிக்கு ஒரு அழகான காதலி இருந்தால்.!

இன்றைய காதல் ஒரு SMS அல்லது இணையம் ஊடாக ஏதோ ஒரு விதத்தில், தூங்கும் நேரத்தை தவிர, மற்றைய நேரம் முழுவதும் ஒருவர் ஒருவரை பார்த்தபடியே உரையாட முடியும்.

அன்றைய காலத்தில் இது சாத்தியம் இல்லை.

அன்றைய நேரத்தில் அவளுடன் இவனுக்கு இருந்த ஒரு தொடர்பு கடிதப்போக்குவரத்து மட்டுமே.

தனது கடமையை எந்த பிசிறும் இல்லாத செய்த போதும், அவனுக்கான இரண்டாவது இரகசியமாக, அவனது காதல் இருந்தது.

அந்த நேரத்தில் யாழில் இருந்து கடிதம் அனுப்பினால் வாரங்கள் கடந்து தான் வந்து சேரும். சில வேளை இரண்டு மூன்று கடிதங்கள் ஒன்றாக வரும்.

அந்த போராளி இருந்த வீட்டுக்கு கடிதங்கள் வருவதில்லை. அந்தக் கடிதங்களை தனக்குத் தெரிந்த ஒருவரது விலாசத்தை கொடுத்து, முன் எச்சரிக்கையாக அங்கு கடிதங்களை வரவழைத்தான்.

தனக்கான நேரத்தில், ஒரு சில, மணித்துளிகளை இந்த கடிதங்களை பெறுவதற்காக சென்று வருவான். கடிதம் வராத நேரங்களில் அவனது தவிப்பை பாக்கும் போது, வேடிக்கையாகவே இருக்கும்.

இவனுக்கு கடிதங்கள் வராதபோது இவனது தவிப்பை கண்டு, கடிதம் வரும், அந்த வீட்டுக்கார அக்கா சொல்லுவார் “இனி நான் தான் உனக்கு கடிதம் போடோனும் என்பார். அதற்கு, வீட்டுக்கார அண்ணையின் பதில் உடனே வரும் எனக்கு பிரச்சனை இல்லை” என்று” (அவர்களுக்கு அவன் போராளி என்பது தெரியாது)

அவர்களது கேலியை ரசித்தபடி வீடு திரும்புவான் அந்த போராளி.

உண்மையின் அன்றைய “நேரத்து காதால் அலாதியானது” என்றே எனக்கு தோன்றுகின்றது.
ஒரு எதிர்பார்ப்புடன் இனம் புரியாத உணர்வுடன் கூடிய, காத்திருப்பு நிறைந்தது அன்றைய காதல்.

இப்படி காலம் கடந்து. தனது கடமையிலும், தனது காதலிலும் உறுதியாகவே பயணப்பட்டான் அந்த போராளி.!

இப்படியான நேரத்தில் தான், அவன் நெருங்கி இருந்த பெரும் இலக்கை, அழிக்கவேண்டிய தேவை தலைமைக்கு உருவானது.!

மிகப்பெரும் மூன்று பாதுகாப்பு வலையப்பாதுகாப்புடன் இருந்த அந்த இலக்கை, ஒரு கரும்புலிப்போராளியை கொண்டு அழிக்கக்கூடிய நேர அவகாசம் அன்று தலைமைக்கு இல்லை. அப்படி அனுப்பினாலும் மூன்று வலைய பாதுகாப்பை கடந்து இலக்கை அந்த போராளியால் நெருங்குவதென்பது முடியாத காரியம்.

தமிழர் தரப்புக்கு இக்கட்டான நேரமது. இலக்கை அழித்தே ஆகவேண்டும்.
ஏனெனில், அவர்கள் எங்கள் தலைவரை இலக்கு வைத்து, அதை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

ஆக, இலக்கை நெருங்கும் நிலையில் இருந்தது இந்த போராளி மட்டுமே. இவனிடம் நடைமுறைச்சிக்கல் கூறப்பட்டது. அவனிடம் இலக்கை அழிக்கும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அவன் ஒரு கணம் கூட யோசிக்காது, தான் இந்த தாக்குதலை செய்வதாக உறுதியுடன் கூறினான்.

சிங்களத்த தலைநகரின் கேளிக்கை, ஆடம்பரம், மது, மாது என்ற வட்டத்துக்குள்ளேயே அந்த போராளி சுழன்றவன். அந்த சுக போகங்கள் அவனை ஒரு போதும் பாதித்ததில்லை. அதற்கு அந்த தமிழிச்சியும் ஒரு காரணம் என்பதே எனதெண்ணம்.

அவன் நினைத்திருந்தால் இயக்கத்தின் பணத்தை கொண்டே, வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்று ஆடம்பரவாழ்க்கை, வாழ்ந்திருக்க முடியும். (அப்படி தப்பி ஓடி வந்த பலரில் சிலர் இயக்கத்திடம் மன்னிப்பு கேட்டு “இன்று தியாகி” விட்டனர், மிகுதியான சிலர் கோட்டு சூட்டு போட்டு முன்னாள் போராளிகளாக வலம் வருகின்றார்கள் என்பதையும் நாம் காண்கின்றோம்)

ஆனால், அவன் தலைவரையும்,எம் தேசத்தையும், எம் மக்களையும் தனது உயிரிலும் மேலாக நேசித்தான்.!

இவர்களுக்காக தான் நேசித்த,உருகி உருகிக் காதலித்த, காதலிக்கு தனது முடிவையும், அதன் வரலாற்று தேவையும் வலியுறுத்தி கடிதமொன்றை எழுதி தன் நண்பனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு, அந்த பெரும் இலக்கை வெடி குண்டு சுமந்து அன்று அழித்திருந்தான்.

அவனது கடிதம் கண்ட அந்த கன்னிகை அவனை நினைத்து நிச்சையம் பெருமை கொண்டிருப்பாள்.

அவளினுள் பூட்டி வைத்து பாதுகாத்த, அந்த காதால் வெளித்தெரியாமலே போன போதும், இன்றும் அவள் மனதில் அவன் வாழ்வான் என்பது எனதென்னம்.!

இவர்கள் தான் எங்கள் மாவீரர்கள். நாம் என்ன தவம் செய்தோம் இந்த இனத்தில் பிறப்பதற்கு.!

மக்களுக்காகவே தங்களின் இளமைக்கால இன்பங்கள் அனைத்தையும் உதறிய உத்தமர்கள்.!

எம் தேசத்தின் புரிந்துகொள்ள முடியாத புதிர்கள் இவர்கள்.!

எமது போராட்டத்தில் பல விதமான தியாகங்கள் வரலாறாக இருந்த போதும், இதுவும் எம் மக்கள் அறியவேண்டிய “பெரும் தியாகம்” என்பதே எனது கணிப்பு.!

என்னைப் பொறுத்தவரை இவனின் தியாகம் ஈடில்லாதது, பல இரவுகள் உறங்கவிடாது சுழற்றிப்போடும் நினைவுகளைக் கொண்டது.

ஒவ்வொரு போராளிக்குப் பின்னாலும், ஒரு பசுமையான நினைவுகள் இழையோடி இருக்கும் என்பதே நிதர்சனம். !

நினைவுகளுடன் துரோணர்.!!

Advertisements

உயிராயுதங்கள்[ கரும்புலிகள் ]பாகம் 1-8 காணொளிகள்

black-tigers-1-3

நிலமும் வானும் கடலும் அதிர்ந்தது மேஜர் சிட்டு பாடல்

கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தாக்குதல்

உயிராயுதம் பாகம் 1-3 -காணொளி

black-tigers-1-3

வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள்

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று வெற்றிகரத் தாக்குதலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான….. வான்கரும்புலிகள் கேணல் ரூபன் – லெப்.கேணல் சிரித்திரன்

ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்கள் வரலாறு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்க்கும்.

skytigersபகை வாழும் குகை தேடி – வான்
கருவேங்கை பாய்ந்தது..
காற்றோடு வந்த சேதி உலக
மெங்கும் புது வரலாறெழுதியது..
நமனை அஞ்சிடா வீரம் வெல்ல
தலைவன் அணியின் வீரர் போயினர்..
விண்ணைச்சாடிக் காற்றில் கலந்த
ரூபன் அண்ணா சிரித்திரன் அண்ணா..
உங்கள் தாகம் வெல்லும் நாளில்
எங்கள் தேசம் விடியும் விடியும்!

எல்லாளன் நடவடிக்கையி​ல் காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

விடுதலைப் போராட்ட வரலாற்றின் திருப்பு முனை எல்லாளன் நடவடிக்கை ஐந்தாம் ஆண்டு நினைவுகள்

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய  நினைவுநாள் 22- ஒக்டோபர் -2012 இன்றாகும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய நாளாக 2007 ஆம் ஆண்டு காணப்படுகின்றது.

தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மாவீரர்களின் ஆண்டு 22- ஒக்டோபர்-2012 ல்நினைவுகூரப்படுகிறது.

தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி படம்எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்து சென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை.

அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்படுகின்றது.

அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படைத் தளம் மீது “எல்லாளன்” என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் மேலும் பல வானூர்திகள் சேதமாக்கப்பட்டன.

இந்த எல்லாளன் சிறப்பு நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

பலநூறு கோடி பெறுமதி வாய்ந்த சிறிலங்கா வான்படையின் வான்கலங்கள் அழிக்கப்பட்ட இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 21 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

“எல்லாளன் நடவடிக்கை” 22-10-2007

ellaalan-attack-bt-ltte 21 praba

அவர்களின் விபரம் வருமாறு:

லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் – திருகோணமலை)
லெப். கேணல் இளங்கோ (இராசதுரை பகீரதன் – யாழ்ப்பாணம்)
லெப். கேணல் மதிவதனன் (பாலசுப்பிரமணியம் தயாசீலன் – யாழ்ப்பாணம்)
மேஜர் சுபன் (கதிரவன் ஜீவகாந்தன் – யாழ்ப்பாணம்)
மேஜர் கனிக்கீதன் (இராசன் கந்தசாமி – மட்டக்களப்பு)
மேஜர் இளம்புலி (துரைரட்ணம் கலைராஜ் – யாழ்ப்பாணம்)
மேஜர் காவலன் (சண்முகம் சத்தியன் – கிளிநொச்சி)
மேஜர் எழிலின்பன் (விமலநாதன் பிரபாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் தர்மினி (கணேஸ் நிர்மலா – கிளிநொச்சி)
கப்டன் புரட்சி (செல்வராசா தனுசன் – யாழ்ப்பாணம்)
கப்டன் கருவேந்தன் (மயில்வாகனம் சதீஸ்குமார் – கிளிநொச்சி)
கப்டன் புகழ்மணி (தர்மலிங்கம் புவனேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் புலிமன்னன (கணபதி நந்தகுமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் அன்புக்கதிர் (வில்சன் திலீப்குமார் – முல்லைத்தீவு)
கப்டன் சுபேசன் (நாகராசா மகாராஜ் – மன்னார்)
கப்டன் செந்தூரன் (கணேசநாதன் தினேஸ் – யாழ்ப்பாணம்)
கப்டன் பஞ்சீலன் (சிவானந்தம் கஜேந்திரன – மட்டக்களப்பு)
கப்டன் ஈழப்பிரியா (கந்தையா கீதாஞ்சலி – யாழ்ப்பாணம்)
கப்டன் அருள்மலர் (சேவியர் உதயா – யாழ்ப்பாணம்)
கப்டன் ஈழத்தேவன் (தங்கராசா மோசிகரன் – யாழ்ப்பாணம்)
லெப். அருண் (பத்மநாதன் திவாகரன் – யாழ்ப்பாணம்)

எல்லாளன் முழுநீளத் திரைப்படம் காணொளி

கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள்……மேஜர் நிலவன், கப்டன் மதன்

கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன், கப்டன் மதன் 26.08.1993 அன்று….

Bt Maj Nilavan_Cap Mathan 2

‘மகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது! இப்ப எப்படி இருப்பானோ ?’

அம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது, “புலிக்கு…..” என்று புறப்பட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூடக் காணவில்லை.

இடையில் ஒரு நாள்…..

சண்டை ஒன்றில் கண்ணிவெடி (மைன்ஸ்) வெடித்து பிள்ளைக்குக் கால் போய்விட்டதாம் என்ற துயரச்செய்தி அம்மாவுக்கு எட்டியது.

அம்மாவின் கண்களில் அருவி, வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ…? “அம்மா….!” என்று அழுவானோ….? அவள் மகனையே நினைத்துக்கொண்டிருப்பாள். கொஞ்ச் நாட்களாக அம்மாவின் இரவுகள் துக்கம்று நீண்டு கழிந்தன.

காலம் அசைந்தது.

“பிள்ளை இப்ப யாழ்ப்பாணத்திலையாம்….. கடற்புலியாக கிளாலியில நிக்கிறானாம்… சிங்கள நேவியிட்ட இருந்து சனங்களைக் காப்பாத்துகிற வேலையாம்…..” அவர்கள் அறிந்தார்கள்.

‘எவ்வளவு காலமாகிவிட்டது….? எப்படி இருக்கிறானோ…? மகனைப் பார்க்க அம்மா ஆசைப்பட்டாள். பாசமும், ஆவலும் அவளை அவரசப்படுத்தியது.

சோதனைச் சாவடிகள், இராணுவக் கெடுபிடிகள். கொச்சைத் தமிழில் துளைத்தேடுக்கும் கேள்விகள், கிரானில் துவங்கி தாண்டிக்குளத்தில் முடிந்த துயரப் பயணத்தின் இறுதியில், அம்மா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தாள்.

மட்டக்களப்பு தொடர்பகத்தில் பெயரைப் பதித்து, பிள்ளைக்குத் தகவல் அனுப்பிவிட்டு ஆவலோடு காத்திருந்தாள். தங்கியிருந்த வீட்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருக்க ஒரு நாள் கடந்து போனது; ஆனால் மகன் வரவில்லை.

“கிளாலியில நேவிக்கு கரும்புலித் தாக்குதல் நடந்ததாம்…. கனக்க நேவியும் முடிஞ்சுதாம்…..” என்று ஒரு செய்தி மட்டும் வந்தது.

எல்லோருக்கும் சோகம் கலந்த மகிழ்ச்சி. அம்மாவுக்கும் தான் மாலையானதும் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தச் செய்தியைத் தாங்கி, “ஈழநாதம்” விசேட பதிப்பு அம்மாவின் கைகளிற்கு வந்தபோது…. அந்த படங்கள்….! அந்தப்படம்….! அம்மா உற்று உற்றுப் பார்த்தாள்…. கண்கள் இருண்டன…..! உடல் விறைத்துப்போனது. நம்பவே முடியவில்லை. அம்மாவின் பிள்ளை…. வரதன்…..? அவன்தானா என்று பெயரை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஆம்! அது அம்மாவில் பிள்ளையே தான். அள்ளி அனைத்து முத்தமிட ஆசையோடு ஓடோடி வந்தாளே….. அதே பிள்ளைதான்.

கறியில்லாமல், காசுமில்லாமல் அடுப்பெரியாத நாட்களில், “சோறு காய்ச்சனை கரியோட வாறன்” என்று துவக்கெடுத்துக் கொண்டு காட்டுக்குப் போவானே…… அதே மகன்.

வீதியில் சிங்களப் படை மறித்து கிறினேட்டைக் கையில் கொடுத்து “வாயுக்குள்ள போடடா….” என்றபோது,” விருப்பமெண்டா உணர வாயுக்குள்ள போடு……” என்று துணிவோடு திரும்பிக் கொடுத்துவிட்டு வந்தானே…. அந்த மகன்!

சோகத்தோடு அனைத்து நிற்கும் தலைவனருகில், பூரிப்போடு சிரித்து நின்றான் அந்தக் கரும்புலி.

தாங்கமுடியாத பெரும் சுமையாய் துயரம் நெஞ்சை அழுத்த அம்மா அழுதாள். கவலையைத் தீர்க்க கண்ணீர் தீரும்வரை அழுதாள்.

கந்தசாமி ஐயாவுக்கும் அம்மாவுக்கும் பிறந்த ஒன்பது குழந்தைகளுக்குள் நான்காவது வரதன். இராமச்சந்திரன் என்பது இயற்பெயர்.

1973ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஒவ்வொரு வருடமும் தமிழ்ப் புத்தாண்டிற்கு இரண்டு நாள் முன்னதாக வரதனின் பிறந்த நாள் வந்து போகும்.

கல்வியிலும், விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் மிகுந்தவனாக துடிப்புடன் பள்ளிக்குப் போனவனை, அப்பாவோடு வயலுக்குப் போகவைத்தது குடும்பநிலை.

குடும்பச்சுமை பகிர்ந்து உழைச்சு, 16 வயதுவரை வீட்டோடு இருந்தவனை இயக்கத்துக்குப் போக வைத்தது நாட்டு நிலை.

மன்னம்பிட்டிக்குக் கிழக்கே 15 மைல் தூரத்திலுள்ள கள்ளிச்சை வடமுனைதான் ஊர். ஆக்கிரமிப்பின் கொடிய வழியை அனுபவிக்கும் எங்கள் தாயகத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்று.

மட்டக்களப்பில் பயிற்சியை முடித்தவனுக்கு அங்கு கண்ணிவெடிப் பிரிவில் பனி.

சிங்களப் படையுடன் மீண்டும் போர் துவங்கி, வெடியோசைகளால் நிறைந்து நகர்ந்து கொண்டிருந்த நாட்களுள் ஒன்று. கள்ளிச்சை வடமுனைக்கும் பெண்டுகல்செனைக்கும் இடையில் எதிரி விதைத்துவிட்டுப் போயிருந்த மிதிவெடிகளுள் ஒன்று, விநியோக வேளைகளில் ஈடுபட்டிருந்த வரதனின் வலது காலைப் பிய்த்தது.

காட்டு முட்கள் கீறிக் கிழிக்க நரக வேதனைக்கு நடுவில் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டான் வரதன். சிகிட்சை முடிய புகைப்படப் பிரிவில் பணி.

கிளாலியிலிருந்த கடற்புலிகளின் தளம் .

எங்கள் அன்புக்கினிய மக்களை, இரத்தப்பசி கொண்டலையும் இனவாதப் பேய்களிடமிருந்து காத்து நிற்கும் உன்னத பணியில் அவர்கள்.

இரவில் விழித்திருந்து அலைமடியில் காவல், பகலை இரவாக்கி துங்க முயலும் வாழ்வு.

முகாமில் எப்பொழுதும் கலகலப்பை நிறைத்திருப்பவன் மதன் தான். துடிதுடிப்பான சுபாவம் அவனுடையது.

வரதனும், மதனும் உற்ற நண்பர்கள். புகைப்படப் பிரிவில் ஒன்றாக வேலை செய்தபோது மெல்ல அரும்பிய உறவுதான். இன்று உயிருக்குயிரான சிநேகிதமாக இறுக்கம் பெற்றிருந்தது.

ஒன்றாகத் தலைவருக்குக் கடிதம் எழுதி, ஒன்றாகக் கடற்புலிகளுக்கு வந்து, ஒற்றரைக் கால்களோடு நீந்திப் பழகி, பயிற்சி பெற்று, படகேறி கடலில் களமாடி, ஒன்றாகக் கிளாலியில் பணி செய்தவர்கள் ஒன்றாக கரும்புலிக்கும் பெயர் கொடுத்து, இறுதியிலும் ஒன்றாகவே போனார்கள்.

மதன் துடிதுடிப்பானவன். ஒற்றைக் காலில்நின்று கூத்தாடி…. ஊன்று தடியோடு துள்ளியோடி… கும்மாளமடித்தபடி திரிந்து….. அவன் ஓய்வதில்லை .

திருமலைக் காட்டில் மிதிவெடி ஒன்று கழற்றிவிட்ட இடதுகாலுகுப் பதிலாக மதனுக்கு ஜெய்ப்பூர் கால் கொழுவப்பட்டிருன்தது பொய்க்காலை கழற்றிவிட்டு, ஒன்றரைக் காலில் மரத்திலேறி மாங்காயும் இளநீரும் பிடுங்கித்தந்து, எங்களோடு சேர்ந்திருந்து சாப்பிட்டு மகிழ்ந்த உயர்ந்த நண்பன் அவன்.

இரவெல்லாம் படகொடி கடலில் சமராடிவிட்டு, பகலில் ஓய்வெடுத்துத் துங்கமுயலும் தோழர்களை ஊன்று தடியால் தட்டித் குழப்பித் தொந்தரவு செய்துவிட்டுத் துள்ளி ஓடி அவர்களுடியே அன்பான சினப்பிற்க்கும் ஆளாகின்றவன் அந்தக் குழப்படிக்காரன். அவன் கூட தானும் இரவு சண்டைக்குப் போயிருப்பான்: ஆனால் பகலில் ஓடித்திரிவான்.

சண்டைக்குத் தயாரான ஓடுபாடுகள் இல்லாத ஓய்வான ஒரு மாலைப்பொழுதில்…. மதன் ஒரு தென்னைமர அடியில் சாய்ந்திருப்பான். கடற்காற்றோடு கலந்து ஒரு பாடல் விரியும். தன்னுடையது பாடுவதற்கு ஏற்ற ஒரு குரல் இல்லையென்பது தெரிந்திருந்தும் அவன் பாடுவான். அதில் ஒரு கவர்சியிருக்கும்; அருகிலிருப்பவர்களை ஈர்க்கும்.

எப்போதும் எதிலும் கவனமில்லாத ஒருவனைப் போல பகிடி சொல்லித் திரிகின்ற மதன், தனது திறமையை வேலைகளின் போது செயலில் காட்டுவான். எங்களால் செய்யமுடியாமல் போகிற சில சில வேலைகளை, ஒரு காலை இலந்தவனாயிருந்தும் அவன் செய்து முடிப்பான். பெரும்பாலும் தவறுகள் செய்யாமலே இருக்கின்ற மதன், சக தோழர்கள் தவறு செய்யும் போது சொல்லித் திருத்துகின்ற போராளி.

மதனுக்கிருந்த இயல்பான குழ்படித்தனத்தால், வரதனோடு துவங்கிய ஒரு பகிடிச்சண்டை கடைசியில் சீரியசாக முடிந்தது. அந்த உயிர் நண்பர்கள் கதைக்காமல் பிரிந்துபோய்விட்டார்கள். அடுத்த 24 மணிநேரம் வெறுப்பூட்டுவதாகக் கழிந்தது. வரதன் குளிக்கப் போனான். எப்போதும் இருவரும் சேர்ந்தே போவார்கள்; இப்போது வரதன் தனியே. முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு மதன் ஒரு மரக்குத்தியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். “போ” என்று நட்புத் துண்டவும் தன்மானம் தடுத்தது. ஊன்று தடியுடன் துள்ளிக்கொண்டு முந்தி ஓடிப்போய் வாலியை எடுத்த , வரதனுக்கு குளிக்கவார்க்கத் தொடங்கினான் அவன். சேரனிடம் இதைச் சொல்லும் போது வரதனின் கண்கள் பனித்திருந்தன.

வரதன் அமைதியானவன் அதிகம் பேசத் தெரியாதவன். கதைகளை விட செயல்களிலே அதிக ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவன். “கதைக்கும் போதெல்லாம் இயக்கத்துக்குப் பயன்படக்கூடியதாய் ஏதுங்கதியுங்க்கோடா” என்று எங்களுக்கு புத்தி சொல்பவன். அது, வெளியில் தெரியாமல் தனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த ஓர் எரிமலை.

அம்மா அப்பாவைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து நீண்டகாலம். எங்கு இருக்கின்றார்களோ…..? ஆமிப்பிரசினைகளால் ஒடுக்கபட்டுத் திரிகின்றார்களோ….? வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதிப் பார்ப்பம் என்ற ஆவல் வரதனுக்கு எழுந்தது. வரதன் கடிதம் எழுதினான்; பதிலுக்காகக் காத்திருந்தான். அடுத்த தரம் எழுதினான்; காத்திருந்தான். பதிலில்லை. மூன்றாம்தரம் பதிலில்லை. நான்காவது கடிதமும் போனது: பதில் வரவே இல்லை.

இடம்பெயர்ந்து வந்து கிளாலியில் இறங்கிய உறவினர்கள் சிலரை எதிர்பாராமல் வரதன் சந்திக்க நேர்ந்தது. “ஒரு இரவு ஊருக்குள்ள ஆமி புகுந்து வெட்டியும், சுட்டும் நூற்றுக் கணக்கில் சனங்களைக் கொண்டவங்கள்…. தம்பி…. தப்பி ஓடிவந்து எங்களுக்குள்ள உன்ரை வீட்டுக்காரர் வரேல்லை… என்ன நடந்ததோ…..? கடவுளுக்குத்தான் தெரியும்!” வானத்தைப் பார்த்து கைகளை விரித்துச் சொல்லிவிட்டு, ஒரு பெருமூச்சோடு அவர்கள் போய்விட்டார்கள்.

காதுகளில் இடியென இறங்கிய செய்தியால் அவன் துடித்துப்போனான். ஏற்கனவே அவனுக்குள் வீசிக்கொண்டிருந்த புயல் ஆவேசம் கொண்டெழுந்தது. ஆனாலும் அது ஒரு வதந்தி மட்டுமே என்பது, கடைசிவரை அவனுக்குத் தெரியாமலே போய்விட்டது.

கிளாலியின் விரிந்த கடல்.

தமிழர்களின் இரத்தமே அலைகளாய் அசையும் 20 மைல் நீளச் செந்நீர்ப்பரப்பு.

இரத்தப்பசிகொண்டு அலையும் சிங்களப் படை. உயிர் விழுங்கும் துப்பாக்கி வாய்களோடு காத்து நிற்கும் மரணவலையம். அந்த மரண வளையத்திலும், கடலரண்களாய் கடற்புலிகள் காவல் நிற்க, எங்கள் மக்கள் துணிவுடன் அயநிக்கும் குடாநாட்டுக்கான தனியொரு பாதை.

நாகதேவன்துறையில் போருத்தபட்டிருக்கும் சக்திவாய்ந்த ராடர்களின் திரைகளில் புள்ளிகளாய் அசையும் எங்கள் படகுகளை, துல்லியமாக இனம் கண்டு தாக்கி மூழ்கடிக்க விரைந்து வரும் எதிரிப் படகுகளை, உள்ளங்கையைக் கூடப் பார்க்க முடியாத கும்மிருட்டிலும் கூட, கண்களை மட்டுமே நம்பி எதிர்கொண்டு விரட்டியடிக்கும் சாதனைக் களம்.

எதிரி தடை செய்த வலையத்தை எதிரிக்குத் தடைசெய்து வீர சாதனை படைக்கும் கடற்புலிகளின் போர்த்திறனையும், அதனைப் பிரமாண்டமான ஒரு வளர்ட்ச்சி நிலையை நோக்கி உயர்த்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் முயற்சியையும் ஆற்றலையும் உலக அரங்கில் பறைசாற்றிக் கொண்டிருந்த போர்முனை.

கிளாலிக் கடலில் மக்கள் போக்குவரத்துச் செய்யத்துவங்கிய நாளிலிருந்து அங்கு காவல் பணியாற்றிக் கொண்டிருக்குக்கும் கடற்கரும்புலிகளின் அணி, வரதனையும் மதனையும் கொண்டிருந்தது.

அந்தக் கடற்களத்தில் புலிகள் எதிரியைச் சந்தித்த ஒவ்வொரு சண்டையிலும், இவர்களின் கைகளிலிருந்து துப்பாக்கிகள் கனன்றிருக்கின்றன.

விடிகாலைகளில், பயணம் போன எம்மக்கள் செத்த பிணங்களாய்க் கரையொதுங்கிய போதெல்லாம், அவர்களுக்குள் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டெரியும்.

அவர்கள், துணிகரமான சண்டைக்காரர்கள். அவர்களுடைய வண்டிகளில், எதிரியின் படகுகளை மூக்குக்கு நேரே எதிர்கொண்டு அவனைத் திகைப்பிலாழ்த்துவார்கள். கண்ணைக்கட்டி இருளில் விட்டது போன்ற இருட்டிலும் எதிரியின் படகுகளை இனம் கண்டு, நல்ல வியூகங்களில் தளம்பலின்றி வண்டியைச் செலுத்தி, அவனைத் தாக்கித் திணறடிப்பார்கள். அந்த மயிர்க்கூச்செறியும் கணங்களில் எதிரி தலை தெறிக்க ஒட்டமெடுப்பான். அந்த நேரங்களில் அவர்கள் சொல்வார்கள்; “இப்பமட்டும் ஒரு சக்கை வண்டி இருக்குமெண்டால், இவங்களின்ரை கதை இதிலேயே முடியும்.”

அவர்கள் ஒரு கரும்புலித் தாக்குதலுக்காகக் காத்திருந்தார்கள். “எங்களின் மக்களைக் கொன்றொழித்தவர்களை இதே கடலில் வைத்துக் கொன்றொழிக்க வேண்டும்” என்ற வீர சபதம். அவர்களின் இதயங்களில் முழங்கிக்கொண்டிருந்தது. கரும்புலித் தாக்குதலை நடாத்தும் இரவை , அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்தார்கள்.

“ஏன் கரும்புலியாகப் போகின்றீர்கள்?” என்பதற்கு, ஒரு தத்து வார்த்த விளக்கத்தை அளிக்கக்கூடிய அறிவை அவர்கள் பெற்றிருக்கவில்லையாயினும், அதன் தேவையை, அதன் முக்கியத்துவத்தை, அதன் பலத்தை, உளப்பூர்வமாகவும் தெளிவாகவும் உணர்ந்து கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

வரதன் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பான். அருகில் போகிற நண்பனிடம் “தலைவர் சொன்னதையே நான் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருக்கிறன். எனது சிந்தனையெல்லாம் அதிலேயே இருக்கு. அந்த ஒரு நொடிப்போழுதுக்காக நான் எவ்வளவு காலமும் காத்துக் கொண்டிருப்பேன். என்றோ ஒரு நாள் கிளாலிக் கடலில ஒரு ‘வோட்டர் ஜெற்’ நொறுங்கும்” என்பான்.

மதனும் அப்படித்தான். அவன் அடிக்கடி சொல்லுவான், “எங்கட எவ்வளவு சனங்களின்ரை ரத்தம் இந்தத் தண்ணியோட கலந்தது. இதுக்கெல்லாம் ஒரு நாளைக்குப் பாடம் படிப்பிச்சே ஆகோணும். அதை நான் சாதிச்சே தீருவேன். அவனுகளையும் இந்தக் கடலிலேயே அழிக்கவேணும்.”

மதன் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். சீனிவாசன் சிவகுமார் என்பது அவனுடைய இயற்பெயர் 1975 ஆம் ஆண்டு, செப்ரெம்பர் திங்கள் 7 ஆம் நாள். அந்த வீரமைந்தனைப் பெற்றால் ஒரு வீரத்தாய். குடும்பத்தில் மூன்று அண்ணன்களுக்கும், ஒரு தங்கைக்கும் இடையில் அவன். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் 9ம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் பொது 1989 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு நாள், பள்ளிக்கூடத்துக்கேன்று புறப்பட்டுப்போனவன் திரும்பிவரவில்லை; “இயக்கத்துக்குத்தான் போயிருப்பான்….” என்ற வீட்டிலுள்ளவர்களின் ஊகிப்பும் பிழைத்துவிடவில்லை.

கிளாலியின் கடற்போர் முனை.

ஏறக்குறைய 60 நாட்கள் அலைகள் போல அசைந்து கடந்துவிட்டன.

அந்த உயரிய சாதனையை நிகழ்த்த அவர்கள் கடலிக்குப் போய்ப்போய்த் திரும்பிவரவேண்டியிருந்தது. நாட்கள் செல்ல செல்ல அவர்களுடைய உறுதி இறுகிக்கொண்டே போனதேயன்றி, இலகியதில்லை.

ஒவ்வொரு தடவையும் சண்டை துவங்கும். துப்பாக்கிக் குழாய்கள் சிவக்க எங்களது படகுகள் பகைவனை எதிர்கொள்ளும். ‘சக்கை’ வண்டி அவனை மின்னலென நெருங்கும். எதிரி ஒட்டமெடுப்பான். சக்கை வண்டி கலைக்க இடைவெளி குறுகும். எதிரியின் வேகம் கூடும். அதிகரித்த வேகத்தோடு சக்கை வண்டி அண்மிக்க, ஒரு அடி உயர நீரில் ஓடக்கூடிய தன் நவீன படகை எதிரி ஆழம் குறைந்த நீர்ப்பரபினூடு செலுத்துவான். சக்கைப் படகுகள் தரை தட்டும். தொடர்ந்தும் கலைக்க முடியாமல் கரும்புலிகள் திரும்ப வேண்டியிருக்கும்.

மறுநாள்….

முகாமின் ஒரு மூஇயில் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு இருப்பார்கள். இரவு தங்களால் இடிக்க முடியாமல் போய்விட்டதே என்பதற்காக , அவர்கள் கவலைப் பட்டுக்கொண்டிருப்பார்கள். 61 நாட்களும் இப்படித்தான் நகர்ந்தன.

25.08.1993.

வழமையான இரவு.

நிலவு உலா வராத இருண்ட வானம்.

சிலிர்ப்பூட்டும் குளிர்.

உடலுக்கு அசதியைத் தந்தாலும், உள்ளத்துக்கு உற்சாகமூட்டும் உவர்க்காற்று.

கடற்புலிகள் காவல் உலா வர, மக்களின் பயணம் துவங்கிவிட்டது.

சக்கை நிரப்பிய ‘புலேந்திரன்’, ‘குமரப்பா’வில் மதனும் வரதனும் தயாராக நின்றார்கள்.

கடந்துபோனவைகளைப் போல அல்லாமல் இந்த 62 ஆவது நாளின் இரவில், அவர்களின் முகங்களில் நம்பிககியின் தெறிப்பு; இனம்புரியாத பூரிப்பு.

அருகில் நின்ற கண்ணாளனிடம் குப்பியைக் கலர்ரிக்கொடுத்து விட்டு மதன் சொன்னான்; “இன்றைக்கு இடிச்சே தீருவேன். திரும்பி வரமாட்டேன்.”

நேரம் நாடு இரவைத் தாண்டியிருந்தது. நாகதேவன்துறைத் தளத்திலிருந்து அலைகளைக் கிழித்துக்கொண்டு முன்னேறினான் எதிரி. இன்று அவனது தாக்குதல் வடிவம் வித்தியாசமானதாக இருந்த்தது.

ஒவ்வொரு தடவையும் மாறுபட்டதாக இருக்கின்ற போதிலும் இன்று அவன் அமைத்து வந்த வியூகம் புதுவிதமானது. இரண்டு அணிகள். ஒன்று ஒருபுறத்தில் புலிகளைத் தடுக்க, மற்றையது மறுபுறத்தில் மக்களைத் தாக்கும்.

ஆனால் பகைவன் சற்றும் எதிர்பாராத விதமாக அவனை இருமுனைகளிலும் எதிர்கொண்டனர் கடற்புலிகள். துப்பாக்கி முனைகள் தீ உமிழ, வானம் விழாக்கோலமானது.

சண்டை உக்கிரமடைந்து கொண்டிருந்த ஒரு கட்டத்தில், காத்திருந்த ‘புலேந்திரன்’ படகை ‘வோக்கி’ அழைத்தது. மதன் ஆவலோடு பதில் கொடுத்து, கட்டளைக்குக் காதுகொடுத்தான்.

மக்களைத் தாக்கவந்த எதிரி, புலிகளிடம் சிக்கிப்போயுள்ள முதலாவது சண்டை முனையில்; ஏற்க்கனவே விளங்கப்படுத்தப்பட்டிருந்த தாக்குதல் திட்டத்தின் படி,‘வோட்டர் ஜெற்’ படகொன்றைத் தாக்குமாறு வோக்கி கூறியது.

சுற்றியிருந்த தோழர்கள் கண்கலங்க, சிரித்த முகத்தோடு மதன் புறப்பட்டான். மின்னல் கீற்றென நெருங்கிய கரும்புலிப் படகைக் கண்டு எதிரி தப்பி ஓட முயல, அதற்க்கு அவகாசமில்லாமல், மதன் அதன் மையப்பகுதியோடு மோதினான். பிரகாசித்தேழுந்த ஒளிவெள்ளம் மறைந்தது, இருளோடு இருளாகக் கரும்புகை கரைந்து கொண்டிருக்கும் போது, இரண்டாகப் பிளந்து மூழ்கிக்கொண்டிருந்த ‘P 115′ இலக்க ‘வோட்டர் ஜெற்’ றிலிருந்து புலிகள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

தான் நேசித்த கடலோடும்….. காற்றோடும்….. எங்கள் மதனும்…. அவனது ‘புலேந்திர’ னும்..…

அந்தக் கடற்களம் நீண்டுகொண்டிருந்தது. கடற்புலிகள் கடலில் சந்தித்த முதலாவது பெருஞ் சமர் அதுவாகத்தான் இருக்கமுடியும்.

புலிகளைத் தாக்க வந்த அணியை புலிகள் தாக்கிக்கொண்டிருந்த இரண்டாவது சண்டைமுனையிலிருந்து, ‘குமரப்பா’ படகிற்கு அழைப்பு வந்தது. காத்துக்கொண்டிருந்த வரதன், களத்திற்கு விரைந்தான்.

புலிகளின் சண்டைப் படகுகளால் வளைக்கப்பட்ட நிலையில், தப்ப வழியின்றி தளத்துக்குத் தகவல் அனுப்பிவிட்டு உதவி வரும் வரை சண்டையிடத் தீர்மானித்து விட்ட ஒரு ‘வோட்டர் ஜெற்’ படகு, வரதனின் இலக்கு. ‘வோக்கி’ அவனுக்குத் தாக்குதல் வழிமுறையை வழங்கியது. உதவி கிடைக்குமுன் அதனை உடைக்க வேண்டும்.

இருள், ஆளை ஆள் பார்க்க முடியாத இருள். வளைத்து நிற்கும் புலிகளின் படகுகளை அவதானித்து விலத்தி ஓடி, ‘வோட்டர் ஜெற்’றை சரியாக இனம் கண்டு; அது அவனுடையது தான் என்பதை உறுதிப்படுத்தி இடிக்க வேண்டும். தவறுதலாக எங்களுக்குள் முட்டுப்பட்டாலோ விளைவு விபரீதமானதாக மாறிவிடும்.

சரியான இலக்கை நோக்கி வரதன் நெருங்கினான்; அதிகரித்த வேகத்தோடு. திகைத்த எதிரி எதுவுமே செய்ய முடியாமல் மலைத்துப்போய் நிற்க, அடுத்த கணப்பொழுதில்…..! அந்தக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்….! எதிரியின் படகு…….

எங்கள் அன்பு வரதனும் ‘குமரப்பா’வும் தான்…..

நாகதேவன்துறையிலிருந்த கடற்படைத் தளத்தில் தகவல் தொடர்பு சாதனம், ‘P 121′ என்ற தங்கள் போர்ப்படகை அழைத்துக்கொண்டிருக்க, மூழ்கிக்கொண்டிருந்த அந்தப் படகிலிருந்து, கடற்புலி வீரர்கள் ஆயுதங்களை எடுத்து முடித்துவிட்டார்கள்.

ஒரே பாயில் படுத்து, ஒரே கோப்பையில் சாப்பிட்டு, ஆளுக்காள் தண்ணி ஊற்றி, ஊத்தை தேய்த்து ஒன்றாகவே குளித்து, ஒரே இலட்சியத்தோடு வாழ்ந்த அந்த உயிர் நண்பர்கள்; கிளாலிக் கடலில் நடந்த ஒவ்வொரு சண்டையின்போதும், ஒன்றாகவே நின்று, சிங்களப் பிணந்தின்னிகளை நெருப்பெனச் சுட்டெரித்தவர்கள். சாகும்போது கூட ஒன்றாகவே போனார்கள்.

எங்களுக்காக….. மக்களுக்காக…. மண்ணுக்காக….!

விடுதலைப்புலிகள் (புரட்டாசி, ஐப்பசி 1993) இதழிலிருந்து

கரும்புலி லெப் -கேணல் பிருதுவி / நற்புகழ்

கரும்புலியின் தடங்கள் தொட்டு ………..!Bt Lt Col Piruthuvi 2

தமிழீழ விடுதலைப்போரட்டத்தின் இக்கட்டான சூழல்கள் பலவற்றை மாற்றியமைத்து விடுதலைப்பயணத்தின் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிகளுக்கு வழிசமைத்துக் கொடுத்த தற்காப்புக்கவசங்கள் தற்கொடைப் போரளிகள். கரும்புலிகள் எங்கள் காவலர்கள். கரும்புலிப் படையணிகள் காலத்தை வென்று நிற்கும் பெரும்பலத்தின் தோன்றல்கள் ஈகத்தின் விளக்கமே இவர்கள் தானென்றால் அது மிகையாகாது –

கரும்புலிகள் ஒவ்வொருவரினதும் உள்ளக்கிடக்கைகளை ஒட்டுமொத்தமாய் உள்ளாய்ந்து உணர்ந்து அறிந்தவர் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள்தான்.உறுதியையும் தெளிவையும் தலைவரிடம் கற்றுக்கொண்டு உரிமையையும் உறவையும் அவரிடமே பெற்றுக்கொண்டு ஊருலகமறியாது உயரிய தியாக வடிவங்களாக ஒளிர்கின்ற கரும்புலிக்காவியர்கள் கற்பனைகளைக் கடந்துநிற்கும் விற்பன்னர்கள் .

அழகு மாணிக்கங்களாய் அல்ல அத்திவாரக் கற்களாய் மிளிர்கின்றார்கள் கரும்புலிப் போராளிகள் என்று தெரியாமலே அவர்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் பல எமக்கும் கிடைத்திருக்கின்றன . நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தி வாழும் அருமையான நாட்கள் கிடைத்திருக்கின்றன. அதுகூட ஒரு பெரும் பேறுதானென்றே நான் கருதுகின்றேன். அந்த வகையில் கரும்புலி லெப் கேணல் -பிருதுவி / நற்புகழ் என்னும் போராளி நடந்த தடங்களைத் திரும்பிப் பார்க்க விளைகிறேன் :

பலோரோடு நாம் பழகினாலும் சிலபேர் எம்மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றனர் . பிருதுவியும் அவ்வாறான மறக்கமுடியாத ஒருத்திதான் : மிகச்சிறந்த பண்புகளால் அனைவரையும் தன்பால் ஈர்த்துக் கொள்பவள். அமைதியான சுபாவம், அன்பான செயல்கள், கனிவான பேச்சு, பணிவான பக்குவம், சிரித்தபடியே எத்தனை கடினமான பணிகளையும் ஏற்றுச் செய்வது, இப்படி அந்தப் பட்டியல் இன்னும் நீளும்.

போராளிகள் என்றாலே தமது வாழ்வையும் பொருட்படுத்தாது பிறருக்காகாக வாழவும் , மக்களுக்காகப் போராடவும் தலைப் பட்டவர்கள்தான். அதிவேகமான செயற்பாடுகளாலும் சாதனைகளாலும் போர்த்திறனாலும் அறியப்படுபவர்களென்றால் அதற்கு எடுத்துக்கட்டாய்த் திகழ்பவள் பிருதுவி. 1980 ம் ஆண்டு கிளிநொச்சி மண்ணில் பிறப்பெடுத்த பிருதுவிக்கு பெற்றோர் இட்ட பெயர் “தியாகதேவி “. அந்தப்பெயரின் வடிவம் அவளேயானாள் என்பதே சாலப்பொருந்தியது.

இரு சகோதரர்களின் இடையே பிறந்த ஒரே பெண்பிள்ளை என்பதால் செல்லமாகவே வளர்ந்து வந்தாள். சிறுவயதிலே அதிக கெட்டித் தனங்களைத் தன்வசம் வைத்திருந்த சுட்டிப்பெண் .

1996 ம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்விப்பொது சாதாரண தரத்தில் கற்றுக் கொண்டிருந்த மாணவி நற்புகழை எமது தேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைச்சம்பவங்கள் வெகுவாகப் பாதித்தது. அத்தோடு தமிழீழ விடுதலைப்போர் வேகமெடுத்திருந்தது, விமானத்தாக்குதக்ல்கள், எறிகணை வீச்சுகள், மக்களின் அன்றாட வாழ்வை கேள்விக் குறியாக்கிக்கொண்டிருந்தன.

தான் பிறந்த தாய்நாட்டின் மேல் அளவற்ற பற்றுக் கொண்டிருந்தாள். ஒவ்வொருவருக்கும் தாய் மண்ணைக் காக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது எனும் கருத்தில் மிகத்தெளிவாக இருந்தால். கல்வியில் காட்டிய ஆர்வம் மேலாக இருந்தாலும், தானும் ஒரு போராளியாகி விடுதலைக்காய்ப் போராட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கவே அவள் உறுதியோடு புறப்பட்டாள்.

பெண்போராளிகளின் படையத் தொடக்கப் பயிற்ச்சிப் பாசறை” லீமா 4″ அவளை வரவேற்றது . கருப்பட்டமுறிப்பு காட்டுப்பகுதியில் அந்தப் பயிற்சி முகாம் மிக அழகாகவே அமைக்கப்பட்டிருந்தது. அங்கே தனது ஆரம்பப் பயிற்ச்சியை நிறைவு செய்தபோது தியாகதேவி “நற்புகழ் ” என்னும் பெயர் பெற்றிருந்தாள். லீமா 4 பயிற்சி அணியின் நிறைவு விழா நிகழ்விற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கும் கிடைத்திருந்தது .அன்றுதான் முதன்முதலில் நற்புகழ் என்னும் பிருதுவியை நான் பார்த்தேன் .

பல கலைநிகழ்வுகள் மேடையில் அரங்கேறிக் கொண்டிருந்தன .இடையிடையே பரிசில் வழங்கும் வைபவமும் இடம் பெற்றுக் கொண்டிருந்தது .எல்லா நிகழ்வுகளிலும் பிருதுவியை அடிக்கடி பார்க்ககூடியதாக இருந்தது. துரு துருவென எறும்பைப் போல சுறுசுறுப்பாய்த் தெரிந்தாள். அவ்வளவு போராளிகளிலும் தனியே தென்பட்ட அவளின் அழகைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை .

அப்போது அவளை அருகழைத்துப் பேசியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது . பயிற்சியை முடித்த குறுகிய காலப் பகுதியிலேயே நற்புகழ் சத்ஜெய இராணுவ நடவடிக்கை எதிர்சமரில் பங்கு கொண்டாள். ஆனையிறவிலிருந்து பரந்தனூடாக கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்கோடு இலங்கை இராணுவம் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையே சத்ஜெய என்பது குறிப்பிடத்தக்கது .

தொடர்ந்து மாலதி படையணியில் ஒரு போராளியாக ஜெயசிக்குறு எதிற் சமரில் மிகத் திறமையாகச் செயற்ப் பட்டாள். அப்படியே ஓயாத அலைகள் 3 இல் களமிறங்கினாள். இவ்வாறே நற்புகழின் தாக்குதல் அனுபவம் விரிவுகண்டது .

இவளது ஆற்றல்களை இனங்கண்ட மாலதிபடையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா அக்கா, இவளை மேலதிக விசேட பயிற்சிக்காக (master’s training) அனுப்பிவைத்தார்.

படையணிகளை வழிநடத்தும் பொறுப்பாளர்களை உருவாக்கும் ஓர் பட்டறைதான் அப் பயிற்சித்தளம். அங்கே பயிற்சித்திட்டங்கள் கடுமையானதாக இருப்பதோடு, பலரகப்பட்ட ஆயுதங்களைக் கையாள்வது பற்றியும் எதிரிகளின் தாக்குதல் நகர்வுகளை முறியடித்தல் , முகாம் தகர்புக்கள் எனப் பல்வேறு போர் தொடர்பான கற்பித்தற் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்ற. ஒரு பட்டறையாகவே விளங்கும் அத்தளத்தில் நற்புகழ் தனது மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்தினாள். அங்கே பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை இடம்பெற்ற தவறுதலான வெடி விபத்தில் அவளது வலது காலில் பெரிய காயம் ஒன்று ஏற்பட்டது . இதன் விளைவாக அவளால் பயிற்சியைத் தொடரமுடியவில்லை .காயம் குணமடைய சிலமாதங்களானது. அதன்பின்னர் ஊன்றுகோலின் உதவியுடனேயே அவள் நடக்கவேண்டியிருந்தது .

இவ்வேளை இவளின் பணி மாற்றங்கண்டது .அத்தோடு நற்புகழ் என்னும் அவளது பெயர் பிருதுவியாகியது .தமிழீழ விடுதலைப் புலிகளின் ராஜன் கல்விப்பிரிவுக்கு கற்கை நெறிக்காக அனுப்பிவைக்கப்பட்டாள் பிருதுவி .அரசியல், பொது அறிவு, உலகவியல், போர்க்கலை போன்ற விடயங்களைக் கற்றுத் தேர்ந்து வித்தகியாகத் திகழ்ந்தாள்.

இவளின் அசாத்தியத் திறமைகளுக்காய் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களிடமிருந்து பரிசில்களைப் பெற்றுக் கொண்டாள் .அனைத்துப் படையணிகள் மட்டத்தில் நடந்த பொதுஅறிவுப் போட்டியில் முதலிடம் பெற்றுக் கொண்டதற்காகவும், சிறந்த குறிபார்த்துச் சூட்டாளினியாய் வெற்றி பெற்றதற்காகவும் அவள் அப் பரிசில்களைப் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாது ராஜன் கல்விப்பிரிவின் 2வருட கற்கை நெறியை சிறப்பாக பூர்த்தி செய்ததற்கான சான்றிதழையும் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டாள்.

பிருதுவியின் முகத்தில் எப்போதுமே ஒரு புன்னகை இழையோடிக்கொண்டிருக்கும். கண்களில் குறும்புத்தனம் பளிச்சிடும் அதே நேரம் பார்வையில் தெளிவும் வெளிப்படும். படையணியின் ஒன்றுகூடல்கள், தலைவர் சந்திப்பு நிகழ்வுகள் போன்றவைகளில் மேடையேறும் பட்டிமன்றங்கள், கவியரங்குகள், நாடகங்கள் முதலியவற்றில் தூள்கிளப்புவாள் பிருதுவி.

அவள் ஊன்றுகோலை ஊன்றி நடப்பதும், புன்னகையோடு பேசுவதும் எங்கள் அரசியற் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணாவையே நினைவுபடுத்தும். அதனால் நாங்கள் அவளை புன்னகை மன்னி என்றும் தமிழ்ச் செல்வன் அண்ணாவின் தங்கச்சி என்றும் நக்கலடிப்போம். தோற்றத்தில் அவள் எடுப்பாகவும் எழிலாகவும் காணப்படுவதால் “பொறுப்பாளர் “என்று நான் அவளை அழைப்பதுண்டு .

எடுத்த செயலை நேர்த்தியாகச் செய்யும் கலை இவளுக்கேயுரியது .அதனால் தலைவர் அவர்களால் நேசிக்கப்படுகின்ற பாராட்டப்படுகின்ற பிள்ளைகளில் (அப்படித்தான் தலைவர் பெண்போராளிகளை அழைப்பார் )இவளும் ஒருத்தியானாள். பிரிக்கேடியர் விதுசாவுக்கும் மிகவும் பிடித்தமானவள் மட்டுமல்ல இவளோடு பழகும் அனைவருக்கும் இவள் விருப்பத்திற்குரியவளே .

மேலும் இவளது கற்பித்தற் பணி விரிவடைந்தது. மகளீரின் அனைத்துப் படையணிகளுக்கும் அரசியல், இராணுவ போர்த்தந்திரங்கள் தொடர்பான வகுப்புக்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பணிக்கப்பட்டாள். இவளின் நீண்டகனவு தன்னையும் கரும்புலியணியில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்பது . 2002ம் ஆண்டளவில் அதற்க்கான விருப்பத்தைத் தெரிவித்து அனுமதி வேண்டி தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினாள் பிருதுவி . இதற்குரிய அனுமதி 2008ம் ஆண்டிலேயே அவளுக்குக் கிடைத்தது . தமிழீழம் ஒன்றே உயிர் மூச்சாய் கொண்ட அவள் கரும்புலிப் படையனியில் ஒருத்தியாகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள்.

தனது உயிரைக்கொடுக்கத்தானே நேரம் குறிக்கக் காத்திருந்தாள். 30 வருடங்களுக்கு மேலான சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழின அழிப்பின் உச்ச அவலம் 2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் கட்டுக்கடங்காது போனது . நாலாபுறத்திலும் எறிகணைகளைப் பொழிந்தபடியும், விமானத்தாக்குதல்களை நடத்தியபடியும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை உபயோகித்தவாறும், துப்பாக்கிச் சூடுகளை சரமாரியாக நடத்திக்கொண்டும் இராணுவம் நகர்ந்து வந்தது .

நிமிடத்துக்கு நிமிடம் தமிழரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சுடுகாடாய்த் தோற்றம் பெற்றது வன்னிப்பெருநிலம் . இவ்வேளை மக்கள் முற்றுகையிடப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள் இன்னும் பலர் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வாழ்வோடும் சாவோடும் போராடும் மக்களைக் காக்க விடுதலைப் போராளிகள் தம்மாலான எதிர்சமரை மேற்கொண்ட வண்ணமிருந்தனர் .

இவ்வாறே மூங்கிலாறு ஊடாக உடையார்கட்டை நோக்கி முன்னேறிவந்த இலங்கைப் படையணிகளிடம் மாட்டிகொண்ட மக்களில் பெண்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு கொடூரமான பாலியற் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டார்கள் . நிர்கதியான அவர்களைக் காப்பற்ற கிருஸ்ணபரமாத்துமா வரப்போவதில்லையே .. அச்சமயம் பிருதுவி தனது கடமையை நிறை வேற்றத் தயாரானாள்.தானும் ஒரு சாதாரண பெண்ணைப்போலவே இராணுவத்தினரிடம் சரணடைந்தாள். கூட்டமாய் நின்ற அந்த மிருகங்களிடையே தன்னை வெடிக்கச் செய்தாள்.

அதன்மூலம் நுற்றுக் கணக்கான இராணுவ வெறியர்கள் கொன்றொழிக்கப் பட்டதுமல்லாது பெண்களை நெருங்குவதற்கு முயலும் அவர்களிடத்தே பேரச்சத்தை விளைவித்தாள் பிருதுவி என்னும் தியாகதேவி .

இச்சம்பவமானது வெளிவராத ஒரு வீரத்தின் மகுடம். துளியேனும் அச்சமின்றி தமிழீழ விடிவிற்காய் வெடிசுமந்து சென்ற தங்கை பிருதுவியின் தடங்களைத் தொட்டுத்தொடர்கிறோம்

.. தமிழீழம் தேடிய அவளது கனவுகளோடு …..

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

கலைமகள் 05.07.2015

Bt Lt Col Piruthuvi

2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகள் வீரவணக்க நாள்

katunayaka black tigers

தெய்வப் பிறவிகள்தான் கரும்புலிகள் – தேசியத் தலைவர் பிரபாகரன்

black_tigers
பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள்.

கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்.

ஒரு கரும்புலிவிரன் தன்னைவிட தன் இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்க்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்க்கு அப்பால் நிக்கும் மற்றவர்களின் நலன் பற்றியது. நல்வாழ்வு பற்றியது. மற்றவர்கள் இன்புற்று இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத்; துணிவது தெய்வீகத் துறவறம். அந்தப் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.

ஒரு புனித யாத்திரையில் அவர்கள் போனார்கள். கண்ணீர் வடித்து நிக்கும் எம் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு பிறக்கும் என்ற அசையாத நம்பிக்கையில் அந்தப் பயணத்தை தொடர்ந்தார்கள். அந்த புனிதர்களை எண்ணும் பொழுதெல்லாம் எனது நெஞ்சு புல்லரிக்கும். பல கரும்புலிகள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும், அவர்களது அற்புத சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்று வாழும்.

” கரும்புலிகள் ” என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்க்கும், உறுதிப்பாட்டுக்குமே நாம் குறிப்பிடுகிறோம். இன்னோரு பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்கு புலப்படாத ஊடகமான இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிக்கும். எனவே கரும்புலி எனும் சொல் பல அர்த்தங்களை குறிக்கும் ஆழமான படிவமாக அமையப் பெற்று இருக்கிறது. முகத்தையும் மறைத்து பெயரையும் புகழையும் வெறுத்து, இலடச்சிய மூச்சாக தமிழீழ விடுதலைக் காற்றுடன் கலந்து விட்ட இந்த சரித்திர நாயகர்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு : வே. பிரபாகரன்.

எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்…..!

” நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால் வருவேன் “

கரும்புலியாக செல்லுகின்ற கரும்புலிவீரர்களுக்கு, தலைவர் அவர்கள் கடைசியாக இப்படிச் சொல்லித்தான் வழியனுப்பிவைப்பார்.

இது வெறுமனே அவரது வாயில் இருந்து வருகின்ற வார்த்தை அல்ல. அந்த மாபெரும் தலைவரின்ஆத்மாவில் இருந்து எழும் குரல் அது.

” உண்மையிலே என்;றோ ஒருநாள் இதுதான் நடக்கும் ” என்று உறுதியோடு தன்னுள் சொல்லி நிற்பவர் எம் தலைவர். கரும்புலி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளச் செல்கின்ற எங்கள் தேசத்தின் குழந்தைகள் அதற்கு போவதற்கு முன்னதாக ஒரு நாளில், தலைவர் தனது பொழுதுகளை அவர்களுடன் கழிப்பார். இதனை அவர் எப்போதும் செய்வதுண்டு.

கரும்புலியாக செல்பவர்கள் தமது மனம் திறந்து பழகுவார்கள். எல்லாவற்றையும் பற்றி கதைப்பார்கள். பகிடிகள் சொல்லிச் சொல்லிச் சிரித்து மகிழ்வார்கள். தலைவரோடு ஒன்றாக இருந்து உணவருந்துவார்கள். அவரோடு சேர்ந்து நின்று படமெடுப்;பார்கள். தங்களது உள்ளக்கிடக்கைகளை எல்லாம் – உணர்வுகனை எல்லாம் பகிர்ந்து கொள்வார்கள்.

கடைசியில் தலைவரிடமிருந்து அவர்கள் விடை பெறுகின்ற போது சோகம் கலந்த பெருமிதத்தோடு அவர்களை கட்டியணைத்து வழியணுப்பி வைக்கையில், அந்தத் தலைவனின் குரல் உறுதியோடு ஒலிக்கும்.

” நீங்கள் முன்னால போங்கோ, நான் பின்னால வருவன் ”

பெயர் குறிப்பிடாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலிகள்

“பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்” – தமிழீழத் தேசியத் தலைவர் ,மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

எழுத முடியாத காவியங்கள் எ ப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரியில்லையோ அதேபோலத்தான் எத்தைகைய அறிவாலும், எத்தகையஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எடுதப்பட்டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே.

அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். அவர்களது சிந்தனைப் போக்கின் தன்மைகளைஉய்தறிந்து கொள்ளுங்கள் தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது தமதுடலோடு, தமதுயிரோடு ‘தம்மையே தியாகம் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள்.

ஓயாத எரிமலையாக சதா குமுறிக் கொண்டிருந்த நெஞ்சுக்குள் ஆற்ற முடியாத தாகமாக எழுந்து கொண்டிருந்த வேட்கையைத் தணிக்க, எதுவும் செய்யவும், எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள். ஒரு மாறுபாடன முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக எழுந்து கொண்டிருந்த வேட்கையை தணிக்க, எதுவும் செய்யவும் எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள்.

ஒரு மாறுபாடன முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக இவற்றை சாதித்துஇருப்பார்கள் என்பதை, ஆற அமர இருந்து, உள்ளத்தைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள். நெஞ்சு புல்லரிக்;கும், உயிர் வேர்க்கும். அவர்கள் கண்களுக்கு முன்னால் விரி;ந்து கிடந்த இன்றைய ஷநவீன நாகரீகத்தின் தாலாட்டில்தான் உறங்கினார்கள். புலிகளின் ஒழுக்க வாழ்வின் உயரிய மரபை மீறிவிடச் செய்யும் சூழ்நிலைக்குள் உலாவந்தார்கள்.

இவற்றுக்குள் வாழ்ந்தும் எதற்கும் அசையாத இரும்பு மனிதர்களாக நெருப்பைக் காவித்திரிய எப்படி அவர்களால் முடிந்தது. வெளிப்படையாக அந்த உல்லாச வாழ்வோடு கலந்து சீவித்தபோதும், உள்ளுக்குள் இதய அறைகளின் சுவர்களுக்குள் தாயக விடுதலையின் வேட்கையை மட்டுமே சுமந்து கொண்டு பகைவனின் அத்திவாரங்களைக் குறிவைத்துத் தேடி அலையும் அப+வமான நெஞ்சுரம் எங்கிருந்து இவர்களுக்;குள் புகுந்தது. பகைவனை அழிக்கும் தனது நோக்கினை அடைவதற்காக, தன்னையழிக்கவும் துணிந்ந இந்த அதிசய மனவுணர்வுவை எப்படிஅவர்கள் பெற்றார்கள்.

தாயகத்திற்காக செய்யப்படும் உயிர் அர்பணிப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதுதான் உண்மை. ஆனாலும் இங்கென்றால் வெடி அதிரும் கடைசி நொடிப்பொழுது வரை பரிப+ரணமான ஒரு போர்ச் சூழ்நிலை. அந்த வீரனது மனநிலையை அதே உறுதிப்பாட்டோடு பேணிக்கொண்டேயிருக்கும்.

ஆனால் அங்கு………… அது முற்றிலுமே ஒரு தலைகீழான நிலமை. மானிட இயல்புணர்வுகளைத் தூண்டி அவற்றுக்குத் தீனி போட்டு சுய கட்டுப்பாட்டை இழக்கச் செய்து மன உறுதிப்பாட்டைச் சிதைத்து விடக்கூடிய உல்லாசத்தின் மடி அது.

அதில் படுத்துறங்கி பகை தேடி வேவு பார்த்து ஓழுங்கமைத்து குறி வைத்து, வெடி பொருத்தி புறப்பட்டு, மனிதக்குண்டாகி………… எல்லாவற்றையும் தானே செய்வதோடு பகையழிக்கும் போது தன்னையழிக்கும் போதும் கூட தன்பெயர் மறுத்துப் புகழ் வெறுக்கின்ற தற்கொடை ஒரு அதியுயர் பரிமாணத்தை உடையது. உயிர் அர்பணத்தில் அது உன்னதமானது.

அவர்களை நெறிப்படுத்தி வளர்த்தது எது.? உண்மையில் இவையேல்லாம் மேனி சிலிர்க்கச் செய்யும் விந்தைகளேதான். நம்புதற்கரிய அற்புதங்கள்தான்… மன ஒருமைப்பாட்டோடு தங்களைத் தாங்களே வழிப்படுத்தி, எங்கள் இயக்கத்தின் உயரிய விழுமியங்களைக் காத்த அந்த புனிதர்கள், தான் அழியப்போகும் கடைசிப் பொழுதுகளிலும் நிதானத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றி, பகைவனின் இலக்குகளை அழிப்பதில் மட்டுமே குறியாக இருந்த அந்தக் கரும்புலிகள், ”முகத்தை மறைத்து, புகழை வெறுத்து, மனித தியாகத்தின் இமயத்தை தொட்டு விட்ட” பிரபாகரனின் குழந்தைகள்.

Up ↑