Search

Eelamaravar

Eelamaravar

Category

அடிக்கற்கள்

இலட்சிய நாயகன் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் .!

செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தி ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை வானில் சாரதியாக வேலை பார்த்தான். செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த வாகனத்தையும் மிகத் திறமையாக ஓட்டும் பயிற்சியைப் பெற்றிருந்த செல்லக்கிளி, ஆயுதங்களாகட்டும், மோட்டார் இயந்திரங்களாகட்டும் பழுதடைந்தால் தானே திருத்தி இயக்கக் கூடிய மிகச் சிறந்த தொழில் நுட்ப அறிவையும் பெற்றிருந்தான். காட்டுப்பாதைகளை அறிவதில் அதிசயிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்த செல்லக்கிளி தனது வாழ்க்கையை தான் வாழ்ந்த சூழ்நிலையை ஒரு கெரில்லாப் பயிற்சிக்களமாக ஆக்கிக்கொண்டிருந்தான். ஒரு தடவை உடையார்கட்டுக் குடியேற்றத் திட்டத்தில் காட்டுமரங்களை வெட்டி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் எதிர்பாராமல் வந்த இரண்டு பெரிய கரடிகளில் ஒன்றைக் கோடாரியால் வெட்டிக் கொன்றான். மற்றக்கரடி, கூட இருந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது.

ஒய்வு நேரங்களில் காட்டுப்பகுதிகளில் கட்டுத் துவக்குக் கட்டி மிருகங்களை வேட்டையாடுவது அவனது பொழுது போக்காகும். ஆரம்ப காலங்களில் காடுகளில் இயக்கத்திற்கான முகாம்களை அமைக்கு வேலை நடைபெறும் போதெல்லாம் முகாம்களுக்குத் தேவையான அமைப்புகளைக் கொண்ட மரங்களைத் தேடிக்கண்டு பிடித்து வெட்டுவது, கொட்டில் போடுவது, கூரை வேய்வது போன்ற செயல்கள் அவன் தலைமையில் அவன் மேற்பார்வையில் தான் நடைபெறுவது வழக்கம்.

சிறுவயதில் இருந்தே தனது பெரிய தாயாரின் வீட்டில் வாழ்ந்து வந்தவன் செல்லக்கிளி. அவனது பெரிய தாயாரின் மகன் செட்டி என்ற தனபாலசிங்கம் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் போராளியாக இருந்த போதிலும் பின் முழுமையான சுயநலவாதியாகவே மாறினான். அவனது துரோகத்தைக் கண்டு செல்லக்கிளி அவனை அண்ணன் என்று பாராது “அரசியலைத் துற அல்லது என் கையாலேயே நீ சாவாய்” என்று எச்சரித்தான். ஆனால் அவன் திருந்தவில்லை. செட்டியின் செயல் எல்லை மீறவே இயக்கத்தின் தலைவர் பிரபாகரனால் செட்டி சுடப்படுகிறான். செட்டி சுடப்பட்டதற்குப் பின்பும் இயக்கத்திற்கும் பிரபாகரனுக்கும் விசுவாசமாக முழுமையாக தன் உயிரையே தருகிற அளவிற்குச் செயலாற்றினான் செல்லக்கிளி. “செட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றுவது எனது கடமைதான். அதைவிட இயக்கத்திற்கு நான் ஆற்ற வேண்டிய கடமை பெரிது” இது செல்லக்கிளி உறுதியாக உதிர்த்த வார்த்தைகள்.

இயக்கத்தையும் அவனையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவனது பணி இயக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் பங்கு பற்றியவன் செல்லக்கிளி.

முதல் முதலில் இயக்கம் உளவுப்படை பொலிஸ் அதிகாரியான கருணாநிதியை அழித்த நிகழ்ச்சி, பொலிஸ் உளவுப்படை தலைமையகத்தைச் சேர்ந்த பஸ்தியாம்பிள்ளை குழுவினர் மீதான் தாக்குதல், உமையாள்புரம் இராணுவத்தின் மீதான தாக்குதல், பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி மீதான தாக்குதல், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் நடந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல் என்று இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் ஈடுபட்டுத் தன் தனி முத்திரையைப் பதித்தான் செல்லக்கிளி.

பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி விஜயவர்த்தனாவைச் இட்டுவிட்டு அவனிடமிருந்து எடுத்த ஜீப் வண்டியை குன்றும் குழியுமாயிருந்த வீதிகளினுடாக 15 மெயில் தூரத்தை 9 நிமிடத்தில் ஓட்டிச் சென்று அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இயக்க வீரர்களை இராணுவ முற்றுகைக்குள் படாது வெளிக்கொண்டு வந்த செயல் செல்லக்கிளியின் சாரதீயத் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். அவன் தலைமையேற்றுச் சிறப்புற நடத்திய இன்னுமொரு தாக்குதல் இரகசியப் பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை குழுவின் மீதான தாக்குதலாகும்.

07.04.1978 அன்று அதிகாலை 5.30 மணியளவில் முருங்கன் மடு வீதியின் உட்புறமுள்ள காட்டுக்குள் அமைந்திருந்த மரமுந்திரிகைத் தோட்டத்துக்குள் இருந்த விடுதலைப் புலிகளின் இருப்பிடத்தை முற்றுகையிட்ட உளவுப்படை பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை குழுவினர் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்புலி இளைஞர்களைச் சுற்றி வளைத்தனர். இயந்திரத் துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் சகிதம் வந்திருந்த பொலிஸாரிடம் பேச்சுக்கொடுத்து தன் புத்தி சாதுரியத்தால் அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறான் செல்லக்கிளி. பொலிஸார் சற்று ஏமாந்திருந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் அனைவரும் ஒன்றாகப் பாய்கிறார்கள் பொலிஸாரின் மேல். அடுத்தகணம் பொலிஸாரிடமிருந்த சில ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் கைகளுக்கு மாறுகின்றன. முதன்முதலாக அன்றுதான் கையிலெடுத்த எஸ்.எம்.ஜி. செல்லக்கிளியின் கைகளில் வேகமாக இயங்குகிறது. சில நிமிடங்களில் வேட்டுக்கள் தீர்க்கப்படுகிறன. புலிகளை வேட்டையாடவென வந்த பொலிஸ் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை, சப் இன்ஸ்பெக்ரர் பேரம்பலம், சார்ஜன்ட் பாலசிங்கம், கான்ஸ்டபிள் சிறிவர்த்தனா என ஒவ்வொருவராகச் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இறுதியாக பொலிஸார் கொண்டு வந்த ஆயுதங்களாலேயே அவர்கள் சுடப்பட்டதுடன் அவர்கள் வந்த காரையே எடுத்துக்கொண்டு விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றனர். மூன்று நாட்களின் பின்னர்தான் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினரின் முடிவு பற்றிய செய்தி வெளியே தெரிய வந்தது. செல்லக்கிளி தலைமையிலான இந்தத் தாக்குதல் நிகழ்ச்சியானது தமிழ்ப் போராளிகள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆபத்து வரும் வெளிகளில் நிதானமாகச் சிந்தித்து வேகமாகச் செயற்படும் தன்மை செல்லக்கிளிக்கு கூடவே பிறந்ததாகும். முன்பொரு தடவை செல்லக்கிளி இருந்த கிராமமான உடையார்கட்டுக்கு செல்லக்கிளியைத் தேடி சப் இன்ஸ்பெக்ரர் தாமோதரம் பிள்ளை சென்ற போது செல்லக்கிளியின் வீட்டிற்கு அண்மையில் செல்லக்கிளியிடம் செல்லக்கிளியைப் பற்றி விசாரித்தான். செல்லக்கிளியோ நிலைமையை உணர்ந்து சற்றும் தடுமாறாது “வாங்கோ ஐயா செல்லக்கிளியின் வீடு பக்கத்திலேதான் இருக்குது கூட்டிக்கொண்டு போய்க் காட்டுறன்” என்று தன் வீட்டுக்கே சப் இன்ஸ்பெக்ரரை அழைத்துச் சென்று காட்டிவிட்டு வேகமாக மறைந்துவிட்டான். அதன் பின்புதான் சப் இன்ஸ்பெக்ரர் செல்லக்கிளி தன்னை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றதைத் தெரிந்து ஆத்திரப்பட்டான்.

தனக்குச் சரி எனப்பட்டதை உதாரணங்கள், பழமொழிகளோடு விளக்கி வாதிடுவது செல்லக்கிளிக்கு கைவந்த கலை. சட்டம் படித்துவிட்டு தமிழினத்தையே ஏமாற்றிக் கொண்டிருந்த கூட்டணி எம்பிக்கள் மத்தியில் நின்று பள்ளிப் படிப்பையே முடிக்காத செல்லக்கிளி “ஆறு ஆண்டுகளாக நாம் காடு மேடு என்று அலைகின்றோம். நீங்கள் முப்பது ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?” என்று அவர்களின் பொது மேடையிலேயே ஏறி வினா எழுப்பினான். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அபேட்சகர்களைத் தேர்ந்தெடுக்க என தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் கூட்டம் கூட்டப்பட்ட இடத்திற்குச் சென்று தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி வாதிட்டான் செல்லக்கிளி. சுயநலமிகள் அவன் வார்த்தையை ஏற்கவில்லை. ஆனால் தமிழீழ மக்கள் செல்லக்கிளியின் கருத்தை உள்ளூராட்சித் தேர்தலை முற்று முழுதாகப் பகிஷ்கரிதத்தன் மூலம் முழுதாக ஏற்றுக் கொண்டனர்.

1983ம் ஆண்டு ஜீன் மாதம் 23ம் நாள் வடமாகாணத்தில் மிகப்பெரிய இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்குச் செல்லும் வீதியில் திருநெல்வேலி என்ற இடத்தில் ரோந்து வந்து கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இரண்டின் மீது செல்லக்கிளி தலைமையிலான பதின்நான்கு விடுதலைப் புலிகள் கொண்ட கெரில்லா அணுகி தனது தாக்குதலை ஆரம்பிக்கின்றது வேகமாக வந்த ஜீப் வண்டி, விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடி சரியான நேரத்தில் வெடித்ததால் மேலே தூக்கி எறியப்பட்டு கீழே வந்து விழுகிறது. அதில் வந்த சிங்கள இராணுவத்தினர் கீழே குதித்து தாம் வைத்திருந்த துப்பாக்கிகளைத் தூக்கியபடி ஓட முயல்கின்றனர். பின்னால் வந்த இராணுவ ட்ரக் வண்டியிலிருந்த இராணுவத்தினர் பீதியினால் ட்ரக் வண்டிக்குள்ளேயே பதுங்குகின்றனர். விடுதலைப்புலிகளின் துப்பாக்கித் தோட்டாக்களும் வெடிகுண்டுகளும் ட்ரக்கை விட்டு எழமுயன்ற இராணுவத்தினரின் உடல்களைச் சல்லடையாக்குகின்றன. தமிழீழத்தில் முதல் தடவையாக அதிக அளவு சிங்கள இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். இதைக் கண்டு உற்சாக மிகுதியினால் வெற்றிக் களிப்புடன் மறைவிடத்திலிருந்து தான் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கிரை இராணுவ வண்டியை நோக்கி இயக்கியபடி எழுந்து நின்று சுடத் தொடங்குகிறான் செல்லக்கிளி. அதேநேரம் ஜீப் வண்டிக்குள் இருந்த சிங்களச் சிப்பாய் ஒருவன் சுட குண்டு நேராகச் செல்லக்கிளியின் இதயத்தை ஊடுருவிச் செல்கிறது. சப்தமெதுவுமின்றிக் கீழே விழுகிறான் செல்லக்கிளி.

13 இராணுவத்தினரை வீழ்த்தி ஏராளமான ஆயுதங்களை எடுத்த உற்சாகத்தில் திளைத்த விடுதலைப் புலிகள் செல்லக்கிளியின் மறைவுச் செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியடைந்து சோகத்தில் ஆழ்கின்றனர். முதல் வாரத்தில் இரண்டு முன்னோடி வீரர்களை இழந்த விடுதலைப்புலிகள் களத்தில் செல்லக்கிளியையும் இழந்ததால் வெற்றிக்கான எக்களிப்பு சிறிதுமின்றி சோகமே உருவாகத் தம் இருப்பிடம் திரும்புகின்றனர். இயக்கம் வளர்ந்து வரும் நிலையில் இயக்கம் முன்னோடி வீரர்களுக்கு பொறுப்புக்களைக் கொடுத்து அவர்களுக்கு அனுபவப் பயிற்சியைக் கொடுக்கும் வகையில் அந்தத் தாக்குதலுக்கான தலைமையைச் செல்லக்கிளியிடம் ஒப்படைத்துவிட்டு தானும் ஒரு வீரனாகத் தாக்குதலில் கலந்து கொண்ட இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மறைவு பேரதிர்ச்சியைக் கொடுக்கிறது. எதிர்காலத்தில் செல்லக்கிளியிடம் ஒப்படைக்கக்கூடிய பொறுப்புக்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்த பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மரணம் இயக்கத்தில் ஒரு பெரிய தேக்கமாகப்படுகிறது. ஆம்! இயக்கத்துக்கு அவன் ஆற்றிய பணிகளைப் பற்றியும் பிரபகரனைவிட வேறு யாருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்க நியாயமில்லை.

இயக்கம் தொடங்கிய காலத்தில் சுழல் துப்பாக்கி இவைகளை ஈயத்தை உருக்கித் தயார் செய்த காலத்தில் கூட இருந்து உதவியதுடன் பின்னர் இயக்க வீரர்களுக்கு தானியங்கித் துப்பாக்கிகளை வைத்துப் பயிற்சி கொடுக்க வெளியில் இரவு பகலாக அலைந்து குறைந்த விலையில் ஏராளமான ஒரிஜினல் துப்பாக்கி ரவைகளை வாங்கி வந்து சேர்த்தது, இவையெல்லாம் செல்லக்கிளி இயக்கத்துக்குச் செய்த மறக்கமுடியாத் சேவைகளாகும். அன்று செல்லக்கிளி வாங்கி வந்து குவித்த துப்பாக்கி ரவைகளை வைத்தே இயக்கத்தின் முன்னணி வீரர்கள் எல்லாம் சுட்டுப் பயிற்சி எடுக்க முடிந்தது. ஏன் இயக்கத்துக்கென வாங்கப்பட்ட முதல் துப்பாக்கிகூட செல்லக்கிளிக்குச் சொந்தமான இரண்டு மாடுகளை விற்றுக்கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதுதான்.

படித்தவர்கள் குழம்பிய காலத்திலும் தான் குழம்பாது இருந்துவந்த செல்லக்கிளியின் கிராம வாசனை தொனித்த வயதுக்கு மீறிய வாதங்களையும், வார்த்தைப் பிரயோகங்களையும் கேட்ட இயக்க வீரர்கள் அவனை “அம்மான்” என்று அன்புடன் அழைத்து வந்தார்கள். அவனது திறமையான மதிநுட்பமான செயலாற்றல்கள் பல விடுதலைக்குப் பின் சரித்திரத்தில் மட்டுமே வெளிவர வேண்டிய செய்திகள். அவனது இறுதிக்காலமானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் திருப்புமுனை ஆம்! சரித்திரம் படைத்த செல்லக்கிளி சரித்திரமாகிய நாள், தமிழீழ விடுதலைக்கான அகிம்சைப் போராட்டமானது ஆணி வேரோடு பிடுங்கி எறியப்பட்டு ஆயுதப் போராட்ட சகாப்தம் உருவான நாள்.

-வெளியீடு : எரிமலை இதழ் –

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் மற்றும் 1983 யூலை 23ம் நாள் நள்ளிரவில் நடைபெற்ற திருநெல்வேலித்தாக்குதல் குறித்த நினைவுகளை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் “விவரிக்கையில்”

லெப். சீலன் , வீரவேங்கை ஆனந் வீரவணக்கம்

லெப். சீலன் ஒரு தனித்துவமான போராளி.!

“ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது.” இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும்.

லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர். சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப் படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது.

தமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார்.

இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது.

ஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார். 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை.

அவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன்.

1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது.

1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார்.

இத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை.

சிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ.தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது.

1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் சீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர்.

1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது.

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.

இதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது.

இந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார். திகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர்.

அதேபோல இம் மோதலில் ஆனந் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.

லெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது. இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்றும் வீறுநடை போட்டுச் செல்கின்றது.

வெளியீடு :- களத்தில் இதழ்

வீரவேங்கை ஆனந்த் !

1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந்த் என்னும் அருள்நாதன்இ உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன்.

நெஞ்சில் வழியும் இரத்தத்தோடுஇ ‘என்னைச் சுடடாஇ சுடு’ என்று சீலன் பிறப்பித்த கட்டளையை ஏற்றுப்இ பக்கத்திலே நின்ற மற்றுமொரு கெரில்லா வீரனின் துப்பாக்கிச் சன்னங்கள் சீலனின் தலையிலே பாய்வதைப் பார்க்கின்றான் ஆனந்த். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சிங்களக் கூலிப்படைகளின் துப்பாக்கிச் சன்னங்கள் ஆனந்தையும் வீழ்த்துகின்றன.

சீலனோ அந்தக் கெரில்லாப் படைத் தலைவர்இ அரசபடையால் வலைவீசித் தேடப் படுபவன்இ சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தாக்குதல் சம்வபவத்தில்இ சீலனின் தலைமையிலே அந்தக் கெரில்லாத் தாக்குதல் நடைபெற்றது. என்பதைச் சிங்களக் கூலிப்படைகள் தெரிந்து வைத்திருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த அங்கத்தவன் – சிங்களக் கூலிகளின் கரங்களில் அந்தக் காளை பிடிபடவே முடியாது.

சீலனுக்கு தன்னை மாய்த்துக் கொள்ளும் மனப்பாக்குவம் சிந்திப்பதற்கு அனுபவம் துணை புரிந்திருக்க வேண்டும். ஆனால்இ இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் பியிற்சி பெற்று ஏழுமாதங்கள் கூட நிரம்பாத நிலையில்இ இயக்க ரகசியத்தைக் காத்துக் கொள்வதற்குத் தன்னையும் சுட்டுவிடுமாறு சக வீரனைப் பணித்த ஆனந்தின் இலட்சியத் தூய்மைஇ நம்மைச் சிலிர்ப்படையச் செய்கிறது.

விடுதலைப் புலிகளின் புரட்சிகர ஆயுதப் பாதையில் நம்பிக்கையோடும் உறுதியோடும் கால் பதித்த அந்த இளைஞன்இ எத்தனையோ யுத்த களங்களைக் காண ஆசைப் படிருப்பான். ஆனால் அந்தச் சாதனைகளை எல்லாம் செயலில் காட்ட அந்த வீரமகனின் சின்ன ஆயுள் இடம் கொடுக்க வில்லை. பத்தொன்பது வயதிற்குள்ளேயே ஆனந்த் சாவை அணைத்துக் கொள்ள நேர்ந்தது துரதிர்ஷ்டமே.

ஆனந்திற்கு வயதை மீறிய வாட்ட சாட்டமான உடம்பு. அரும்பு மீசைஇ மேவித்தான் தலையிழப்பான். அடித் தொண்டையில்தான் கதைப்பான். யாரோடும் கோபிக்க மாட்டான். நண்பர்களோடு விட்டுக் கொடுக்கும் சுபாவமுடையவன். எந்த வேலையையும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் செய்பவன். சமையல் செய்வதிலிருந்துஇ கிணறு வெட்டுவது வரை அலுப்பில்லாமல் எதையும் செய்ய முன்நிற்பான்.

மெல்லிய நீலநிறத்தில் ஆடைகள் அணிவதில் அவனுக்கு விருப்பம் அதிகம். மயிலிட்டி மண் ஈந்த வீரமைந்தன் ஆனந்த்இ நீர்கொழும்பில் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றான். பின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிஇ மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் உயர்கல்வி கற்றான். க.பொ.த. உயர்தரப் பிரிவில் விஞ்ஞானம் பயின்ற ஆனந்த் அரசியலைப் பின்னாளில் வாழ்க்கையாக வரித்துக் கொண்டான்.

பாடசாலைக் காலங்களில் ஆனந்த் சிறந்த விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தான். பாடசாலை உதைபந்தாட்ட அணியில் சிறந்த கோல் காப்பாளராகப் பிரபல்யம் பெற்றிருக்கிறான். சிறந்த கிரிக்கெட் வீரனுமாவான். கராத்தேயும் கற்றிருந்தான். சகலவிதமான வாகனங்களையும் நேர்த்தியாகச் செலுத்தும் திறமை கொண்டவன்.

தனது குறுகிய ஆயுதப் பயிற்சிக் காலத்திலும் ஆயுதங்களின் நுட்பங்களை நிறையத் தெரிந்து வைத்திருந்தான். வெடிகுண்டுகள் தயாரிப்பதிலும் அவனுக்குப் போதுமான இரசாயண அறிவிருந்தது. துப்பாக்கிப் பயிற்சியின் போது மிகக் குறைந்த நேரத்தில் கூடிய இலக்குகளை குறிபார்த்து அடிக்கக் கூடியவன்.

சரியாக இலக்குக் குறிவைத்து அடித்துவிட்டான் என்றால் ‘ஹாய்’ என்று கைகளை உயர்த்திக் குலுங்கிச் சிரிக்கும்போதுஇ ஒரு பாடசாலை சிறுவனின் பெருமிதமே வெளிப்படும். (குறி தப்பாது சுடுகின்ற ஒரு கெரில்லா வீரனின் திறமையயை சாகஸங்கள் என்று கொச்சையாக அர்த்தப் படுத்திக் கொண்டு நாம் குழம்பிக் கொள்ள வேண்டியதில்லை) பலம் மிகுந்த அடக்குமுறை இராணுவத்திற்கு எதிராகக் குறைந்த அளவு ஆயுதங்களுடன் தொடுக்கப்படுகின்ற கெரில்லாத் தாக்குதலின்போதுஇ இத்தகைய திறமை வாய்ந்த கெரில்லா வீரர்கள் தனிமுக்கியம் வகிக்கின்றார்கள்.

நன்றி : விடுதலைப்புலிகள் குரல் 4 ஓகஸ்ட் 1984

இது மக்களின் போராட்டம் என பாடம் புகட்டியவர் கப்டன் ரஞ்சன் (லாலா).!

” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள்.

ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும்.

அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் என நினைத்து எங்களைத் தவிர எல்லோரும் கெரில்லாப் போராட்டத்தை கிண்டல் செய்து வந்த காலத்தில் நேரடியாக பொதுமக்களைத் கலந்து கொள்ளும் இராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன்.

பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத் தாக்குதல் மூலம் “இதுவும் மக்கள் போராட்டம் தான் புரிந்து கொள்ளுங்கள் ! ” என பாடம் புகட்டியவன் ரஞ்சன்.

இன்று இந்த மக்கள் எழுச்சிகளைக் காணும் போது உனது தியாகங்கள் வீண்போகவில்லை நாளைய தமிழீழ வரலாற்றில் உனது பெயரில் இன்றைய சிறுவர்களால் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டும் போல இருக்கும், கண்ணெதிரே நீ இல்லாவிட்டாலும் என் எண்ணங்களை என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உன்னிடம் பகிர்ந்துகொள்ள என்றுமே நான் தயங்குவதில்லை.

ஒவ்வோர் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியும் உன்னை எனக்கு ஞாபகப்படுத்தியே தீரும், இயக்கத்தின் முழுநேர போராளியாக எழுபத்தி எட்டாம் ஆண்டில் நீ அடியெடுத்து வைத்த நாள் அது தானடா. 78ஆம் ஆண்டு மார்கழியில் இயக்க ரீதியாக அறிமுகமான நீ துண்டுப் பிரசுரம் கொடுத்தல், இயக்கத்திற்கு ஆட்சேர்த்தல், எதிரியின் நடமாட்டங்களை எமக்குத் திரட்டி தருதல் போன்ற வேலைகளை அதுவரையில் செய்து வந்தாய்.

சிறு அசைவைக்கூட மிகவும் திட்டமிட்டே நடைமுறைப்படுத்த வேண்டிய அந்தக் காலகட்டத்தில் உனது பணி இயக்கத்திற்கு மிகவும் தேவையாக இருந்து. கட்டையான கறுவலான உனது உருவத்தை காணுபவர்கள் உன்னை இயக்கத்தைச் சேர்ந்தவன் என ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். உனது உருவஅமைப்பு இரகசியமான வேலைகளை உன் முலம் செய்து கொள்ளுவதற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.

விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக இணைந்துகொண்ட ஆரம்ப காலத்தில் நீ பட்ட கஷ்டங்களை இன்று விடுதலைப் பாதையில் காலடி எடுத்து வைக்க எண்ணும் அத்தனை போராளிகளும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள், அப்போது தான் சுதந்திரத்தின் பெறுமதி எத்தகையது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

நீயும் நானும் குறிப்பிட்ட அக்காட்டில் கொட்டில் அமைத்து பண்ணை வேலைகளை செய்வதற்காகப் புறப்பட்டோம். யாழ்பாணத்தில் இருந்து வாளியில் சில அத்தியாவசியப் பொருட்களுடன் அங்கே சென்றோம். மழையினாலும் புயலினாலும் அந்தப் பாதையில் சீர்குலைந்து காணப்பட்டது பலத்த சிரமத்தின் மத்தியில் எமது பிரயாணத்தை மேற்கொண்டோம். எமது பிரயாணத்தின் கடைசி எட்டு மைல்களையும் நடந்தே போகவேண்டியிருந்து இவ்வளவு தூரம் நடந்து போவது உனக்கு பழக்கமில்லாத விடயமாக இருந்தாலும் உனது ஆர்வம் கையில் வாளியையும் பொருட்களையும் மாறி, மாறித் துக்கிச் சென்று எமது பிரயாணம் முடியும் இடம் வரை கொண்டுபோக வைத்து. இரவு பத்து மணியளவில் நாம் சந்திக்க வேண்டியவரின் வீட்டுக்குச் சென்றதும் ‘அப்பாடா’ என்று நிம்மதியுடன் எமது நோக்கத்தைத் தெரிவித்தோம். ஆனால் நாம் எதிர்பாத்துச் சென்றவர் மனதில் என்னதான் குடியிருந்ததோ? கையை விரித்து விட்டார்.

மீண்டும் திரும்பி எட்டு மைல்கள் நடந்துவந்து பஸ் மூலம் யாழ்ப்பாணம் திரும்பி வந்தோம். பளையில் கிடுகு வாங்கிக்கொண்டு மீண்டும் அங்கே சென்றோம்.போக்குவரத்து மேற்கொள்ளவது சிரமமாகவே இருந்து. எமது பிரயாணம் முன்று நாட்கள் தொடர்ந்தது, இரவில் நடைபாதையே எங்கள் மஞ்சம். கொட்டும் மழையும் கிடுகிடுக்கும் பனியும் எங்கள் இலட்சிய உணரவை மீண்டும் பட்டை தீட்டின.

வாகனப் பிரயாண முடிவில் எட்டு மைல் தூரமும் மாறிமாறி கிடுகுக் கட்டைத் தூக்கிக்கொண்டு சென்றோம். எமக்கென ஒரு கொட்டில் போட்டு அதனுள்ளேயே படுத்து உறங்கிய அன்று ஏற்பட்ட உணர்வு அலாதியானது தான். ஒரு ஏக்கர் காணியை திருத்தத் தொடங்கினோம். இடையில் இயக்கத்தின் வேறு அலுவல்களுக்காக நான் யாழ்பாணம் வந்துவிட்டேன்.

உனக்குப் பின் வந்த வேறு சிலருடன் நீ இணைந்து நீ அந்தக் காணியை சிறந்ததொரு பண்ணையாக்கினாய். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு மிளகாய்ச் செய்கையைப் ப்ற்றி படிப்பிக்கக் கூடியளவு அனுபவம் உன்னை ஆக்கிவைத்தது.

‘சித்தாந்த வேறுபாடு’ என்ற பெயரில் இயக்கத்தை நாசஞ் செய்யப் புறப்பட்ட குழு உன்னையும் இயக்கத்தை விட்டு பிரிக்க பெருமுயற்சியெடுத்தது. நீ அவர்களுக்கே புத்திசொல்லி வந்த நீங்கள் வடிவாகச் சாப்பிட்டுவிட்டுப் போங்கோ என்று சாப்பாடு கொடுத்து அனுப்பிவைத் தாய். இவனுக்காக இவ்வளவு தூராம் அலைந்தோமே என்று புறுபுறுத்து விட்டுச் சென்றனர் அவர்கள். ‘தம்பி’யின் மீது நீ கொண்டிருந்த நம்பிக்கை தொடர்ந்து இயக்கத்தில் உன்னை இயங்க வைத்தது. மாவட்ட அபிவிருத்திச்சபை என்னும் மாயமான போராட்டத்தில் இடையே வேடிக்கைப் பொருளாகக் கொண்டு வந்தனர் கூட்டணியினர். கிராம யாத்திரை என்ற பெயரில் அவர்களது நாடகம் ஆரம்பமாயிற்று.

கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர் குழப்பவாதிகள், அரசின் கைக்கூலிகள் என்று முத்திரை குத்தினர் பதில் சொல்லத் தெரியாத கூட்டணியினர். நீயும் சங்கரும், சீலனும் உங்களுக்குத் தெரிந்த வழியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள்.S.S.O பதவிகளுக்காகவும் வேலை வங்கிப்படிவத்துக்காகவும் ஏங்கித் திரிந்த கூட்டணியின் தொண்(குண்)டர்கள் சீலனைக் கட்டிப்பிடித்தனர். கட்டிபிடித்தவரின் பின்னால் சென்று உனது சிலிப்பரை தூக்கி முதுகில் வைத்துக் “ஹான்ஸ் அப்” என்று நீ சொன்னதும் நிலை குலைந்தனர் அந்த வீராதிவீரர்கள். நீ வைத்திருப்பது என்ன என்பதை திரும்பியும் பார்க்காமல் தமது எஜமானர்களை நோக்கி ஒடித்தப்பினர். உனது சமயோசித புத்தி அன்று சீலனைக் காப்பாற்றியது.

நீரவேலி வங்கிப் பணத்தைக் காப்பாற்றுவதில் நீ எடுத்துக் கொண்ட சிரமங்கள் எழுத்தில் வடிக்கமுடியாதவை இராணுவத்தினர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் அதற்குக் கொஞ்சநேரம் முன்தான் நீ அங்கிருந்து அவற்றை அகற்றியிருப்பாய். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக இராணுவத்தினர் மீதான தாக்குதலை மேற்கொண்ட மூவரில் ஒருவன். மக்கள் நடமாட்டம் நிறைந்த யாழ் நகரில் சீலனின் தலைமையில் கைத்துப்பாக்கியுடன் அச்சாதனையைப் புரிந்தீர்கள்.

இராணுவத்தினரின் றைபிளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி வந்தபோது பக்கத்து வீட்டு அக்கா “சம்பவம் முடிந்து பெடியன்கள் சென்ற போது நான் கண்டேன்” என்று சொன்னா. என்னமாதிரி சம்பவம் நடந்தது என்று எதுவும் அறியாதது போல விசாரித்துத் தெரிந்துகொண்டாய். நல்லவேளை அவ பதற்றத்தில் இருந்ததாலும் நேடியாகக் காணாததாலும் அந்த இடத்தைவிட்டு மாறவேண்டிய நிலமை ஏற்படவில்லை.

பயிற்சிக்காக இந்தியா சென்றாய், பயிற்சி முகாமின் ‘கொத்துரோட்டி ஸ்பெசலிஸ்ட்’ நீ. ஏற்கெனவே உன்னிடம் இருந்த சுறுசுறுப்பு, துணிவு என்பவையும் கராட்டித்திறமயும் பயிற்சி முகாமில் உனது திறமையில் பளிச்சிட வைத்தன.

மீண்டும் புலேந்திரனுடன் தமிழீழம் வந்தாய், வரும் போது வள்ளக்காரர் உங்களைப் பேசாலைக் கரையில் இறக்கி விட்டனர். கரை இறங்கிய உங்களை அங்கே குடியிருந்த சிங்களக் காடையர் பிடித்துக்கொண்டனர். எமது மண்ணில் அண்டிப் பிழைக்க வந்தவர்கள் எம்மையே அதிகாரம் செய்து இந்த மண்ணிற்குச் சொந்தக்காரர்களான எம்மை அடிமைகளாக நடத்துகிறார்களே என அனைவரும் குமுறினோம்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் 30 காபைன் சகிதம் புகுந்து விளையாடினாய். தாக்குதல் முடிந்து வரும் போது காயமுற்ற ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து அழுதாய் உனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப பெருகியதை அன்றுதான் முதன்முறையாகக் கண்டேன்.

உமையாள்புரத் தாக்குதல், கந்தர்மடத்தாக்குதல் என்பனவும் உன் திறமையைப் பளிச்சிட வைத்தன. யாழ் கச்சேரியில் இராணுவத்தினருக்கும், கூட்டணியினரும் பாதுகாப்பு மகாநாடு கூட்ட இருந்த சமயத்தில் முதல் நாளிரவு மகாநாடு நடக்க இருந்த மண்டபத்திற்கு குண்டு வைத்துப் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவும் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். அன்று மண்டபத்தின் உட்சுவர்களில் பூவரசம் இலைகளாலும் பூக்களாலும் “பாதுகாப்பு மகாநாடு யாரை பாதுகாக்க” என்று எழுதியிருந்தாய், உனது கேள்வி மக்களைச் சிந்திக்க வைத்து பத்திரிகைகள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அன்று பாதுகாப்பு மகாநாடு கூடிய கூட்டணியினர் நீண்டகால இடைவெளிகளின் பின்னர் மெல்ல மெல்ல வந்து பதுங்கு குழியில் பாதுகாப்பைத் தேடிக் கொண்டனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் பருத்தித்துறையில் ஐ.தே கட்சியின் தலைமை வேட்பாளராக இருந்த இரத்தினசிங்கம் உனது ஆசிரியர். ஆனாலும் உனது பார்வையில் துரோகி என்றே இருந்தது. உரிய இடத்திற்கு அனுப்புவதற்கு உனது பங்கையும் வழங்கினாய்.

மீசாலையில் சீலனை இழந்த வேதனை சில நாட்களாக உன்னுள்ளத்தில் குடிகொண்டிருந்தது. உனது உணர்வுகளுக்கு வாய்ப்பளிக்க ‘திருநெல்வேலித் தாக்குதல்’ சந்தர்ப்பமளித்தது. மதிலுக்கு மேல் நடப்பது உனக்குத் தெரியாமலிருக்கும் என்பதற்காக சீமேந்துக் கற்களை உனது உயரத்திற்கு ஏற்றவாறு அடுக்கினாய் தனியே நின்று தலைவருக்கு அடுத்ததாக நின்றது நீ தான். தலைவருக்கு அருகில் கிறனைட் வீழ்ந்ததும் பதறி விட்டாய். தமிழ் மக்களின் அதிர்ஷ்டம் கைக்குண்டு சக்தியிழந்தது. அன்றைய தாக்குதலில் சுறுசுறுப்பாக எல்லா இடமும் திரிந்தாய். ஒரு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது அம்மானை இழந்ததால் இந்த வெற்றியினை நினைத்து பூரிக்கும் நிலையில் நாம் இல்லை.

தொடர்ந்து வந்த இனக்கலவரம் ஆயிரக்கணக்கில் இளைஞர்களை போராட்டத்தில் உள்வாங்கியது. கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு சில நூறு பேரை மட்டுமே நாம் எம்முடன் இணைத்துக் கொண்டோம். அப்போது நடந்த இரண்டு பயிற்சி முகாம்களில் முதாவதற்கு பொன்னம்மானும், இரண்டாவதற்கு நீயும் பொறுப்பாக விளங்கினீர்கள் பயிற்சி முகாம் முடிந்து வந்ததும் அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை பருத்தித்துறையில் நடத்தினாய். பருத்தித்துறை பொலிஸ் நிலையம் வரை அதிரடிப்படையினரை ஒட ஒட விரட்டினாய்.

அதன் பின்னே பருத்தித்துறை பொலிஸ் நிலையம் உனது தலைமையிலான பொதுமக்களின் போராட்டத்தில் உன்னிடம் வீழ்ச்சியடைந்தது. ஆயுதங்கள் பொலிஸ் நிலைய ஆவணங்களுடன் நீயும் நானும் பொலிஸாரிடம் பறிகொடுத்த மோட்டார் சைக்கிளும் எமது கையில் கிடைத்தன.

மோட்டார் சைக்கிள் பறிகொடுத்த அந்தச் சம்பவத்தை நினைக்கையில் உனது நிதானத்தை மேச்சிகொள்வேன். கடல்வழியாகப் பயணம் மேற்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நீயும் நானும் பயணமானோம் வழியில் போலிஸாரிடம் மாட்டிக்கொண்டோம் எமது பையை சோதனையிட்ட போலிஸார் “இதென்னடா கிறனைட்டோ” என்றுகேட்டபடியே எடுத்த பொருள் கிறனைட்டாக இருக்கவே அதிர்ச்சியடைந்து நின்ற அந்தக் கணநேரத்தில் போலிஸாரிடமிருந்து பிலிம் றோஸ், படங்களை என்பவற்றை பறித்துக்கொண்டு”ஒடிவா” என என்னையும் கூட்டிக்கொண்டு ஒடினாய். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்தான் எம்மால் பறிகொடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் எமது கையில் கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

போலிஸ் நிலைய ஆவணத்திலிருந்து கிடைத்த விபரங்களின் படி துரோகி நவரட்ணத்திற்கு உரிய தண்டனை வழங்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டாய்.

ஆனால் உனது சேவை நீண்டகாலம் தமிழினத்திற்குக் கிடைக்கக் கூடாது என்ற துரிஷ்டமோ விதி உன்னையும் எம்மையும் பிரித்துவிட்டது. வாகனத்தில் சீலனின் போஸ்டரை ஏற்றிவந்து கிட்டுவின் காருக்கு வழிகாட்டியாக நீ மோட்டார் சைக்கிளில் விக்கியுடன் வந்துகொண்டிருந்தாய், தொண்டமானாற்றில் அதிரடிப்படையினர் உன்னை வழி மறித்த போது நீ அவர்களை போக்குக் காட்டிவிட்டு தப்ப முயன்றாய் ஜீப்பினால் அதிரடிப்படையினர் உன்னை மோத முயன்றனர். வெட்டவெளிப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை நீ திருப்பி அது எதிர்பாராமல் சேற்றினுள் சிக்கியது. சேற்றிலிருந்து எழும்பி தப்பியோடினீர்கள். அதிரடிப்படையினர் சுட்டனர் தப்பி ஒடிய நீங்கள் ஒரு சைக்கிளை எடுத்தபோது சைக்கிள் உரிமையாளர் தடுத்தார். நிலைமையை விளக்கியபோதும் கொடுக்கவில்லை. முடிவு உங்களை நெருங்கி வந்தது. அதிரடிப்படையினர் துப்பாக்கி வேட்டுகளுக்கு நீ இரையானாய்.

உனது உயிரைக் கொடுத்து பின்னால் காரில் வர இருந்த அனைவரது உயிரையும் நீ காப்பாற்றினாய். உனது தியாகத்தை அர்த்தமுள்ளதாக்கி விட்டாய்.

உன் உயிரை பலியெடுத்த அதிரடிப்படையினர் நெடிய காட்டில் எமது கண்ணிவெடியில் பலியாகி விட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய நாட்குறிப்பொன்றில் உன்னைச் சுட்டது தானே என ஒருவன் குறிப்பிட்டிருந்தான்.

அனைவரது இதயத்திலும் “கட்டைக்கறுவல்” ரஞ்சன் நீக்கமற நிறைந்திருக்கிறான்.

நினைவுப்பகிர்வு:- அஜித்
வெளியீடு :களத்தில் இதழ்

Up ↑