‘இனி உங்களால் அவரை தேட முடியுமா?’
‘எனக்கு ஏலாது. மகளின் பிள்ளையளப் பார்க்கவேணும்’ – முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிக் களைத்து இறந்துபோன தாயொருவரின் சகோதரியின் பதில்தான் மேற்கண்டது.
மகன் எப்ப காணாமலாக்கப்பட்டவர்?
‘நினைவில்ல தம்பி. அவாவுக்குத் தான் எல்லா விபரமும் தெரியும். மகனைத் தேடிக்கொண்டிருக்கும்போதே ஹார்ட்அட்டாக்ல இறந்;திற்றா’
‘அவாவுக்குப் பிறகு தேடுறது யார்?’
யாருமில்ல தம்பி. மகன் வேலைக்குப்போறார். அவரைப் பார்க்கவேணும். வீடு, வளவு, ஆடு, மாடுகள் பார்க்கவேணும். இனி மகனைத் தேட யாருமில்லை – இது கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டக் களத்திலிருந்து வீடு திரும்பும்போது இதய நோயினால் இறந்துபோன தாயின் கணவனின் குரல்
இப்படியாக கடந்த வாரம் இரணைப்பாலையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஸின் தாயும் போராடிக் களைத்தே இறந்துபோனார். இந்த இறப்புக்கள் சாதாரணமானவையல்ல. இறுதிப் போரின் அவலங்களின் சாட்சியொன்றை, இனப்படுகொலையின் உயிர்ச்சாட்சியொன்றை இழந்துகொண்டிருக்கிறோம்.
காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடிப் போராட்டம்
2015 ஆண்டின் ஜனவரி மாதத்தில் காணமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் தெருவுக்கு வந்தனர். அதுவரை நீடித்துவந்த காட்டாட்சியில் அந்தத் தாய்மார் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். தெருவுக்கு இறங்கினாலே அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும், தேவையற்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுகளும், விசாரணைகளும் அவர்கள் மீது தொடரப்பட்டிருந்தன. அவர்கள் எங்கு சென்றாலும், எந்த வெளிநாட்டவரை சந்தித்தாலும் கண்காணிக்கப்படும் அச்சமிகு சூழலே நிலவியது. ஆனாலும் அவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தெருவில் இறங்கிப்போராடிக்கொண்டிருந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்தத் தாய்மார் பெரும் எதிர்பார்ப்போடு தெருவுக்கு வந்தனர். தொடர்ச்சியாகப் போராடினால் இந்த அரசாவது காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உரியதொரு தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கையை அதிகளவில் கொண்டிருந்தனர். அதன்படியே தான் வவுனியாவிலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலுமென போராட்டங்கள் ஆரம்பமாகின.
போராட்டங்கள் என்றால் ஒரு இடத்தில் கூடி கோசமெழுப்பிவிட்டு, மகஜர் கையளித்துவிட்டு செல்வதல்ல. இனிவரும் காலத்திற்கான தங்கள் வாழ்க்கையையே தெருவோரம் அமைக்கப்படும் போராட்டக்கூடாரத்துக்குள் செலவழிக்கப்போகும் வகையிலான போராட்டம். அங்கேயே தங்கியிருந்து, தெருவில் வருவோர் போவோர், வெளிநாட்டு ஊடகங்கள், வெளிநாட்டு தூதர்கள், இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், பிரமுகர்கள் என அனைவருக்கு முன்னாலும் தம் கண்ணீரைக் கொட்டி போராடும் களத்திற்கு அந்தத் தாய்மார் வந்தனர்.
இப்படியாக அவர்கள் இரவுபகலாகப் போராடத் தொடங்கி 3 வருடங்கள் கடந்துவிட்டன. இதற்குள் நடந்தவையெவை?
சர்வதேச ஊடகக் கவனம்
அதிகளவில் சர்வதேச ஊடகக் கவனத்தை காணாமலாக்கப்பட்டவர்களினால் ஈர்க்க முடிந்திருக்கிறது. அனேகமாக சர்வதேச ஊடகங்கள் என அடையாளப்படுத்தும் அனைத்துமே காணாமலாக்கப்பட்டோர் போராட்டத்தை நேரில் தரித்து அறிக்கைகள் வெளியிட்டுவிட்டன. செய்தியிடல்கள் செய்துவிட்டன. ஆவணப்படங்கள் வந்துவிட்டன. லிபியா போல, சூடான் போல, சேர்பியா போல இலங்கையிலும் காணாமலாக்கப்பட்டோர் விடயம் கொதிநெருப்பாக உள்ளதென்ற செய்தி உலகமயப்பட்ட நன்மை இதனால் நடந்திருக்கிறது. இந்த நன்மை இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் விடயத்தை சர்;வதேசமயப்படுத்தவே, அரசுக்கு ஏற்பட்ட பொறுப்புக்கூறல் நெருக்குதல்கள், ஓ.எம்.பியின் உதயத்திற்கு வழிவகுத்தது.
ஒரு துரதிஸ்டம்
ஆனால் துரதிஸ்டம் என்னவெனில், காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகானவென உருவாக்கப்பட்ட ஓ.எம்.பி மீது பாதிக்கப்பட்டவர்கள் அவநம்பிக்கைக் கொண்டிருந்தனர். கடந்தகாலத்தில் இதுபோன்று உருவாக்கப்பட்ட விசாரணைக்குழுக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கசப்பான அனுபவங்கள் இந்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஓ.எம்.பியின் ஒன்றுகூடலில் கலந்துகொண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், இதன் மீது தமக்கு நம்பிக்கையில்லை, வெறுமனே நன்கொடைகளும், நஸ்டஈடுகளும் மட்டும் காணாமாலாக்கப்பட்டவர்களை தேடியறிதலுக்கான வழிமுறையல்ல என்பதைத் தெளிவாகவே தெரிவித்துவிட்டனர். அந்த ஒன்றுகூடலுடன் ஓ.எம்.பியின் நடவடிக்கைகள் பெரியளவில் காணாமலாக்கப்பட்டவர்கள் மத்தியில் எடுபட்டதாகத் தெரியவில்லை.
சர்வதேச அமைப்புக்களது நிகழ்வுகள்
போராடும் மக்களின் பிரச்சினை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்கள், அம்னெஸ்டி இன்ரநெசனல், சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்புக்கள் போன்றவற்றின் கரிசனைக்கும் உள்ளாகின. கடந்த வருடம் காணாமலாக்கப்பட்டோர் தினத்தை கொழும்பில் பெரியளவில் நடத்திமுடித்தது அம்னெஸ்ரி இன்ரநெசனல் அமைப்பு. இதன்மூலம் குறித்த பிரச்சினை இந்நாட்டின் பெரும்பான்மையினருக்கும் எடுத்துச்செல்லப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமூக வலைதளங்களைத் தாண்டி, பெரியளவில் வெகுசன கவனிப்பை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தவில்லை. இலங்கையில் பெரும்பான்மையினர் மத்தியில் காணாமலாக்கப்படும் சம்பவங்கள் 1972 ஆம் ஆண்டு தொடக்கமே நிலவிவருவதால், ஆட்கள் காணாமலாக்கப்படுதல் என்பது சாதாரணமானதொரு விடயம் என்கிற உளவியலுக்கு பெரும்பான்மையின மக்கள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டனர்.
விசாரணைகள் அளவுக்கு முன்னேற்றம்
சமநேரத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளும், குற்றப்புலனாய்வினரின் விசாரணைகளும் இடம்பெற்றன. இவை கடந்த ஆட்சிக்காலத்தில் சாத்தியமற்றிருந்தது. தம் பிள்ளைகளைக் கடத்தியோரை உறவுகள் அடையாளம் காட்டியும் விசாரணைகள் இடம்பெறாமல் இருந்தன. போராட்டங்களின் விளைவாகவும், இந்த அரசுக்கு இருந்த பொறுப்புக்கூறலின் விளைவாகவும் கண்துடைப்புக்கேனும் விசாரணைகள் நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் இந்தப் பின்னணியில் எடுத்து நோக்கத்தக்கது. குறித்த விசாரணை தற்போதும் சூடுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான விசாரணைகளின் மூலம் கடத்தப்பட்டவர்களுக்கு நடந்ததென்ன? கடத்தலாளிகளின் பின்னாலிருக்கும் சூத்திரதாரிகள் யார்? கடத்தலின் நோக்கமென்ன போன்ற விடயங்கள் இதுபோன்ற விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டால், அந்த விடயங்களில் இப்போது தெருவில் இருந்து போராடிக்கொண்டிருக்கும் பல தாய்மார்களுக்குப் பதிலிருக்கும்.
பயன்படுத்திக்கொண்ட தொண்டு நிறுவனங்கள்
காணாமல் போனோரின் பிரச்சினையை, அவர்தம் தொடர் போராட்டத்தை உள்ள10ர், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இதனைப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களே தெரிவித்தும் வருகின்றனர். இலங்கையின் அரசியல்மாற்றங்களுக்கும், மேற்கு சார்ந்த அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கும் காணாமல் போனோரின் விடயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எப்பொழுதெல்லாம் இலங்கைக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்கவேண்டிய தேவை ஏற்படுமோ அப்போதெல்லாம் காணாமலாக்கப்பட்டவர்களது விடயம் தொண்டு நிறுவனங்களினால் கையிலெடுக்கப்படுகின்றன. போராடும் மக்களையே துண்டுதுண்டாகப் பிரித்துத் தங்கள் தேவைக்கு அவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளாலும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களாலும் முன்வைக்கப்படுகின்றது.
போராடும் மக்கள் எப்படியிருக்கின்றனர்?
இப்போது வவுனியாவைத் தவிர போராட்டம் தொடங்கிய இடத்தில், அதே கூடாரத்தில் யாருமே இல்லை. அனைவருமே இடம்மாறிவிட்டனர். கிளிநொச்சியில் போராட்டம் நடத்திய இடம் கந்தசுவாமி ஆலய முன்றலாக இருந்தமையால், ஆலய நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தின்காரணமாக, இப்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாக இடம்மாறியிருக்கின்றனர். முன்னரைவிட குறைவான மக்களே கலந்துகொண்டிருப்பதை இப்போது அவதானிக்கலாம். வவுனியாவில் போராடும் தாய்மார் தபால் நிலையத்துக்கு அருகில் அதே பாலை மரத்தடிக் கூடாரத்தில் தான் இருக்கின்றனர். அது பொது இடமாக இருப்பதனால் அவர்களுக்கு இடம்மாற வேண்டிய தேவை இருக்கவில்லை. சுழற்சி முறையில் போராடிக்கொண்டிருக்கின்றனர். முல்லைத்தீல் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கொட்டகை அமைத்துப் போராடத்தொடங்கிய தாய்மார், இப்போது முல்லைத்தீவு இந்து மகாவித்தியாலயத்தக்கு அருகில் இடம்மாறியிருக்கின்றனர். இந்த இடம்மாற்றங்களுக்கு உள்ள10ர்வாசிகளின் நெருக்குதல்களும் பிரதான காரணம். அந்தத்தந்தப் பகுதிகளுக்கு பிரச்சினைகளோ, தடங்கல்களோ வராதளவுக்குப் போராடும் மக்களின் இடங்கள் மாற்றப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். கிழக்கு மாகாணத்தில் போராடத் தொடங்கிய தாய்மார்களைப் பற்றிய செய்திகளே வருவதில்லை.
உளப்பாதிப்பு உண்டு
தெருவோரம் அமைக்கப்பட்ட கூடாரங்களுக்குள் போராடத்தொடங்கிய காலம் தொட்டு இந்த மக்கள் எதிர்கொள்ளும் உளச்சிக்கல் குறித்து யாரும் கரிசனைகொண்டதாகத் தெரியவில்லை. போராட்டத்துக்கு முன்புவரை, காணாமலாக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவுகளோடு (தாய், துணைவி, சகோதரி, தந்தை) அவர்தம் குடும்பத்தவர்கள் துணையாயிருந்தனர். காணாமல்போன தனது பிள்ளையின் ஃ கணவனின் நினைவுவரும்போதெல்லாம் அவர்களின் அருகிருந்து ஆற்றுப்படுத்தவும், நினைவை திசைதிருப்பவும் யாராவது ஒரு உறவினர் கூட இருந்தனர். ஆனால் போராடத்தொடங்கியபின்னர் அந்நிலமை முற்றிலும் தலைகீழாக மாறியிருக்கிறது. அவர்கள் தங்கியிருக்கும் முழுச்சூழலும் காணாமலாக்கப்பட்டவர்களின் நிழற்படங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. திருப்பித்திருப்பி காணாமலாக்கப்பட்டவர்களின் கதைகளே அந்தச் சூழலில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கதைகளுக்கு ஓய்வே இல்லை. புதிதுபுதிதாக வரும் ஒவ்வொருவருக்கும் தம் கதையை மீளமீள தளதளத்த குரலில் சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தாம் இறந்தாலாவது தமது பிள்ளைகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் போராடும் பல தாய்மார் மனதில் இருக்கின்றது. இப்படியாக ஒரே நினைவுடனும், அழுகையுடனும்தான் அந்தத் தாய்மார் தங்கள் மூன்றுவருடங்களைக் கடந்திருக்கின்றனர். அதற்குள் வாழ்ந்து, நினைவில் அமிழ்ந்து கடத்தல் என்பது அவ்வளவு இலகுவதானதல்ல. எனவே உளவுரண் சார்ந்து அவர்களை ஆற்றுப்படுத்தவும், பலம்பெற வைக்கவும் உரிய உளவளப்படுத்தல் வேலைத்திட்டங்கள் மிக அவசியமானவை.
ஏனைய நோய்கள்
போராடும் களம் தெருவோரமாக இருப்பதனால், தூசி, இரைச்சல் என நோய்த்தூண்டல் காரணிகள் அதிகமாக இருக்கின்றன. அத்துடன் போராடுபவர்களில் அனேகர் முதியவர்கள். ஏற்கனவே நீரிழிவு, சிறுநீரக நோய்கள், அல்சர், பிரசர் என முதுமைக்கேயுரிய பல்வேறு நோய்களும் அவர்களைப் பிடித்திருக்கிறது. போராடத்தொடங்கிய நாள்தொட்டு சரியான மருத்துவமின்மை, உரிய நேரத்தக்கு உணவு உட்கொள்ளாமை காரணமாக அந்த நோயின் அளவும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. போராட்டக் களத்திலிருந்து சிலர் அடிக்கடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் சந்தரப்பங்களும் ஏற்பட்டிருக்கிறது. மனஅழுத்தமும், வறுமையும், பிள்ளைகள் பற்றி எவ்வித பொறுப்புக்கூறலுமற்ற நிலையும் போராடுபவர்களை மேலும்மேலும் நோய்வாய்ப்படவைத்திருக்கிறது.
இதன் விளைவாக இதுவரை கிளிநொச்சி போராட்ட களத்தில் மட்டும் 14 பேர் இறந்திருக்கின்றனர். முல்லைத்தீவு போராட்டகளத்தில் அண்மையில் இரண்டு தாய்மார் இறந்திருக்கின்றனர். அதில் தாயார் ஒருவர் இறுதிப்போரின்போது காணாமலாக்கப்பட்ட தனது மகனை அவர் தேடியலைந்தார். மிகுந்த வறுமைக்கோட்டின் வாழும் அவரும், அவரது ஒரே மகளும், காணாமல்போன குடும்பத்தின் ஒரே ஆண்மகன் மீண்டாலே தங்கள் வாழ்வு மீளும் என நம்பியிருந்தனர். அதற்காகவே அந்தத் தாய் தன் நோய்நிலையும் மறந்துபோராடினார். இறுதியில் அவரும் இறந்துவிட்டார். அவரின் இறப்புக்கு;ப் பின்னர், அவரளவுக்கு தியாகித்துப் போராடுமளவுக்கு யாருமில்லை. எனவே காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடியலையும் ஒருவரின் இறப்பானது, ஒரு சாட்சியத்தின் இறப்பாகும். சாட்சியங்கள் இறந்துபோக அந்த விடயமும் கைவிட்டுப்போகும். இந்த நிலையைத்தான் காணாமலாக்கப்பட்டவர்களின் மூன்றாண்;டுப்போராட்டம் எட்டியிருக்கிறது என்பது துயரமான செய்தி.
எனவே இனப்படுகொலையின், மனித உரிமை மீறல்களின் சாட்சியமாக எஞ்சியிருக்கும் அந்தத் தாய்மாரைக் காப்பாற்றுவதற்கான அரசியல், பொருளாதார, சுகாதார பொறிமுறை ஒன்று அவசரமாக உருவாக்கப்படுதல் வேண்டும். அரசின் ஏமாற்று வார்த்தைகளும், செயற்றிட்டங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஒருபோதும் தீர்வாக அமையாது. ஆனால் போராடியேனும் அவர்தம் பிள்ளைகளைக் காணாமலாக்கப்பட்ட முகங்களை அரங்கின் முன் கொண்டுவர சாட்சியங்களின் உயிர்வாழ்வு அவசியமானதாகும். அதற்கான பொறிமுறை பற்றி தமிழ் சமூகம் சிந்தித்தல் வேண்டும்.
ஊறுகாய்| ஜெரா
—
சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடமிருந்து சிறிலங்கா ஜனாதிபதிக்கு ஓர் மடல்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது விடுதலையை துரிதப்படுத்துமாறும், தம்மீது குற்றம் இருப்பின் வழக்குத் தொடருமாறும், இல்லையேல் விடுதலை செய்யுமாறும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் அரசியல் கைதிகள் மீண்டும் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளனர் என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவரான அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலான குழுவினர் 07.08 அன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இதன் போது தம்மை ஏன் விடுதலை செய்யமுடியாது? என அரசியல் கைதிகள் கேள்வியெழுப்பியதாக அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எஸ்.ஏ.அசீம் மௌலவி அவர்கள் தெரிவிக்கையில், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் பிள்ளைகள் பலர் குடும்ப பொருளாதார நிலைமைகள் காரணமாக தமது கல்வியை இடைநடுவில் நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
—
ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கியும் கூட்டமையால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை -கோத்தா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். த.சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லைய” என்று கோத்தாபய ராஜபக்ஷ சித்தார்த்தனிடம் கூறியுள்ளார்.
Recent Comments