தமிழர்கள்தான் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள்? அதிலும் 2009 மே மாதத்தில்தானே அந்த இறுதி காட்சி வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது? என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனாலும் அந்த இறுதிக் காட்சி அரங்கேற முன்னர், அடிப்படையான அல்லது மூல காரணமான ஒரு சம்பவம் ஒரு நாளில், அதாவது இதே நாட்களில் பதினாறு வருடங்களுக்கு முன்னர் (9,10/06/2003) நடைபெற்றிருந்தது. தமிழர்களின் அரசியல் சாணக்கியத்தின் ஒரு புரிதல் அந்த சம்பவம்.

அப்படியென்ன சம்பவம் என்று நிச்சயமாக ஒருசிலரைத் தவிர தமிழர்கள் நாம் மறந்தே போய்விட்டோம். இந்த நாளில் சர்வதேசம் சத்தமின்றி யுத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற போதுதான், தமிழகளின் அழிவு அல்லது அழிப்புக்குரிய நிகழ்ச்சி நிரல்கள் தொடங்கப்பட்டன. தமிழர்களை புதைகுழிக்குள் தள்ளுவதற்கான வியூகங்கள் அமைக்கப் பட்டன. சர்வதேசம் தமிழர் தாயகத்தை சுற்றி வளைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கின. தமிழர்களின் பேரம் பேசும் சக்தியைச் சுற்றி ஆசிய மற்றும் தெற்காசியாவின் அதிகார மையங்களை ஒரே நேர்கோட்டில் இணைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டிருந்தன.

இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட நாளில் இருந்தே தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தமது அரசியல் இருப்பை தக்க வைக்க, அல்லது மீட்டெடுக்க விழுந்த அடிகளை தாள்பணிந்து வாங்கிக் கொண்டு அகிம்சைவழியில்தான் தமிழர்களுடைய போராட்டம் ஆரம்பமானது. அகிம்சைப் போராட்டம் முற்றுப் பெற்று ஆயுத வழியில் பயணிக்க தொடங்கிய எழுபதுகளில் இருந்து, கட்டம் கட்டமாக சர்வதேச நாடுகள், தமிழர்களுக்கும் ஆட்சியில் இருந்த பேரினவாத சிங்கள அரசுகளுக்கும் இடையில் வந்து போகத் தொடங்கிவிட்டன.

இதனால்தான் ஆரம்பத்தில் உள்வீட்டுப் பிரச்சனையாக இருந்த இலங்கை இனப்பிரச்சனை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது. வல்லரசுகள், வல்லரசுகளை தாங்கி நிற்கும் ஐ.நா, தகுதி இல்லா விட்டாலும் வல்லரசாகத் துடிக்கும் மற்றும் சில நாடுகள் இந்த இனப்பிரச்சனைக்குள்ளும், அல்லது மத்தியஸ்தத்துக்கும் என உள்ளே வந்து போயின.

இன்று தமிழர்கள்தான் வீழ்ந்தார்கள், தோற்றார்கள் என்று சொல்லப்படுகிற நிலையில், நாம் தொடர்ந்து வருபவற்றை தமிழர்கள் என்கிற பொது அடிப்படையில் புரிந்து கொண்டு செல்லவேண்டியது அவசியம். தமிழர்களின் இராணுவ படை பலம், மற்றும் படைநகர்த்தல் தந்திரோபாயம் பற்றி கேள்வியும் வியப்பும் கொண்ட சர்வதேச நாடுகள்; (வல்லரசுகள் உட்பட) அவர்களின் அரசியல் இராஜ தந்திரம் மற்றும் அரசியல் மேலாண்மை பற்றி முழுமையாக புரிந்தும் தெரிந்தும் கொண்டது மேலே குறிப்பிட்ட அந்த நாட்களில் தான். அந்த நாட்களில் என்னதான் நடந்தது? 2003 ம் ஆண்டு ஜூன் 9 மற்றும் 10 ம் திகதிகளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடை பெற்ற “இலங்கைக்கான அபிவிருத்தி மற்றும் மீள் கட்டுமான உதவி வழங்கும் மாநாடு”.(The Tokyo Conference on Reconstruction and Development of Sri Lanka ) ப்ப்பூஊ இதுதானா? என்று நீங்கள் கேட்கலாம். இதுதான். இதேதான். இதே மாநாட்டு முடிவில்தான் தமிழர்களை, தமிழர்களின் வலிமையை, பேரம்பேசும் சக்தியை அழிக்க மாநாட்டு முடிவில் சர்வதேசம் தமக்குள்ள தீர்மானித்ததாகச் சொல்லப்படுகிறது.

நீங்கள் கேட்கலாம், “தமிழர் தரப்பில் இருந்து இந்த மாநாட்டுக்கு யாருமே செல்லவில்லையே? அதனால் பிரச்சனை ஒன்றும் இல்லையே” என்று. ஆம் . தமிழர் தரப்பில் இருந்து யாருமே செல்ல வில்லை. செல்வதற்கான எந்த ஏற்பாடுகளும், முடிவுகளும் கூட தமிழர் தரப்பிடம் இருக்கவில்லை. ஆனால், மாநாட்டுக்கு போகாமல் விட்டதுதான் சர்வதேசத்துக்குப் பிரச்சனையாக இருந்தது. அதுதான் அவர்களுக்குள் உறுத்தலை ஏற்படுத்தியது. 51 உதவி வழங்கும் நாடுகள், 22 உதவி வழங்கும் சர்வதேச நிறுவனங்கள் அதன் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப் பட்ட இலங்கை அரசுடன் தமிழர் தரப்பு பிரதி நிதிகளும் கலந்து கொண்டே ஆகவேண்டும். அதற்கான அழைப்புகள் நிகழ்ச்சி நிரல்கள் அதற்கு முந்தய பேச்சு வார்த்தை மேசைகளிலேயே பேசப்பட்டாகி விட்டது.

சரி அந்த மாநாட்டில் என்னதான் நடக்கும்? என்னதான் நடந்தது? போரில் சம்பந்தப் பட்ட சமபங்குள்ள இரு பக்க பிரதி நிதிகளும் மாநாட்டுக்கு கட்டாயம் சமூகம் தருவதுடன், அந்த சர்வதேச பிரதிநிதிகளின் அரங்கத்திற்கு முன் அபிவிருத்திக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து இடவேண்டும். அப்படி கைச்சாத்து இட்டால் இலங்கைக்கான அபிவிருத்திக்கு பல கோடி ட்ரில்லியன் டொலர்கள் உதவித் தொகையாக வந்து சேர்ந்திருக்கும். சர்வதேசம் வழங்கியிருக்கும். ஒருதரப்பு அதில் கலந்து கொள்ளாமல் விட்டால் கூட முழுத்தொகையும் கிடைக்காது. (பயணச் செலவை வழங்குவார்கள் போல) அப்போது அதிகாரத்தில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள்தான் இலங்கை அரசு சார்பாக கலந்து கொண்டவர். கலந்து கொண்டதற்காக குறிப்பிட்ட தொகை வழங்கப் பட்டது. அந்த பணத்தில் நிலைமை பற்றி எந்த அதிகார பூர்வ தகவலும் கிடைக்கவில்லை.

தமிழர் தரப்பில் இருந்து யாருமே வரமாட்டோம் என்று ஒரே பிடியாக மறுத்து விட்டார்கள். தமிழர் தரப்பில் இருந்து அதற்காக கூறப்பட்டவை நொண்டிச் சாட்டுகள் என்று சர்வதேசத்திற்கும் தெரியும். அதற்கு முன் அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மாநாட்டுக்கு தம்மை அழைக்க வில்லை என்கிற குற்றச் சாட்டுடன், சரிசம பங்காளிகள் என்கின்ற வகிபாகத்தை சர்வதேசம் கவனமெடுக்கவில்லை என்றும், அது பக்க சார்பானது என்றும், ஏற்கனவே தமிழர் தரப்பு தற்காலிகமாக பேச்சு வார்த்தையில் இருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வரப்போகும் சர்வதேச உதவி வழங்கும் இந்த மாநாட்டையும், அதற்குள் அடங்கியிருக்கும் சூட்சுமப் பொறிகளையும் கருத்தில் கொண்டு, அதனை எப்படி புறக்கணிக்கலாம் என்று சிந்தித்த தமிழர் தரப்புக்கு கிடைத்த அல்வாதான் அமெரிக்காவில் நடந்த “இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு” தொடர்பான கலந்தாய்வில் அழைப்பு விடுக்கப்படாமையாகும். அமெரிக்காவில் உள்ள “விடுதலைப்புலிகள் மீதான தடை” தான் காரணமாகியிருந்தது.

பெரும் பொறிகளை மறைத்து வைத்து விட்டே சர்வதேசம் டோக்கியோவிற்கு தமிழரை அழைத்ததுதான் உண்மை. தமிழர் தரப்பு நிச்சயம் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று உள்ளூரிலேயே பலர் ஆசைப்பட்டிருந்தார்கள். ஏனென்றால் நினைத்துப் பார்க்கவே முடியாத அவ்வளவு தொகையான பணம் வரக் காத்திருந்தது. தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று இறுதி மணி நேரம் வரையும் சர்வதேசம் நம்பியது. எத்தனையோ தொலை பேசி அழைப்புக்கள் வன்னி மையத்தை நோக்கி பறந்தன. உலகத்தலைவர்கள்- தூதுவர்களின் வேண்டுகைகள் செய்திகள், பத்திரிகைகளில் பிரசுரமாகின.

நடுநிலையாளர்களின் கெஞ்சல்கள், சில முதலாளி நாடுகளின் வெருட்டல்கள், கண்டிப்புக்கள், கண்டனங்கள் இப்படிப்பல நாடகங்கள் ஜூன் 8 ம் திகதி அதாவது மாநாட்டுக்கு முந்தய நாள் வரையும் போட்டுக் காட்டினார்கள். அதற்காக கட்டுநாயகாவில் சிறப்பு விமானம் ஒன்றும் சிறப்பு கடமையில் விமானப் பணியாளர்களும் தமிழர் பிரதிநிதிகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் தமிழர் தரப்பு தானும் தன்பாடுமாக ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்களில் வரும் மஞ்சள் சோறும் கோழி இறைச்சிக் கறியோடு கத்தரிக்காய் பால்கறியையும் சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.

தமிழர் தரப்பு ஒரு விதமான மௌனத்தை கடைப் பிடித்தார்கள். யாருமே புரிந்து கொள்ள முடியாத அந்த மௌனத்தின் பின்னால் ஒரு ஆத்ம திருப்தியை தமிழர் தரப்பு பெற்றுக்கொண்டதே உண்மை என்பது அப்போது வெளியார் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு ஏன் இப்போதும் அதனை புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் கண்ணோட்டம் பலருக்கு இல்லை என்பதே உண்மை. அவர்களின் மௌனங்களுக்குப் பின்னால், கூட நின்று உயிரும் சதையுமாக களமாடிய மாவீரக்ள், போராளிகள் பொதுமக்களின் அர்ப்பணிக்கு இந்த உலகில் எதனையும் கொண்டு ஈடு செய்ய முடியாது என்பதே அன்றைய தமிழர் பிரதிநிதிகளின் மௌனத்துக்குக் காரணம். ஆனால், உலக நாடுகளுக்கும், முதலாளிகளுக்கும் மாமா வேலைபார்த்த யசூசி அகாசிக்கு ஏமாற்றமே மிஞ்சிப் போனது. சப்பை மூக்கு வீங்கிப் போனது.

அபிவிருத்தி என்கிற பெயரில் இதுவரை உலக போராட்டங்கள் பல நசுக்கப் பட்டிருக்கின்றன. அழிக்கப் பட்டிருக்கின்றன. உருத்தெரியாமல் போகச் செய்யப் பட்டிருக்கின்றன. தமிழர் தரப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கையொப்பம் இட்டிருந்தால் எந்த முடிவையும் தனித்து எடுக்க முடியாது என்பதுடன், பணம் கொடுத்த நாடுகள் காரணம் இன்றி இலங்கைக்குள் நுழையும். கால் பாதிக்கும், கண்காணிக்கும். கேள்வியே கேட்கமுடியாது. ஏற்கனவே சிங்கள பேரினவாததுக்குதான் அடிமை. கையொப்பம் இட்டிருந்தால் அனைத்து நாடுகளுக்கும் அடிமையாகப் போக வேண்டி வந்திருக்கும். தமிழர்களுக்கான தீர்வு என்ற சொல்லே இல்லாமல் போயிருக்கும். இப்பொழுது ஓரளவுக்காவது பேச்சில் தீர்வு பற்றி சொல்கிறார்கள்.

தமிழர்கள் மீளவே முடியாத, முன் வைத்த காலை திருப்பிக் கூட வைக்க முடியாத வரலாற்றுத் தடத்தில் போராட்டம் பயணித்திருக்கும். தொலைந்திருக்கும். தமிழர் விடுதலைப் போராட்டத்தை தவிர உலகில் நடந்த அத்தனை விடுதலைப் போராட்டங்களுக்கும் எதோ ஒரு குழு அல்லது நாடு உதவி செய்திருக்கும். செய்திருக்கின்றன. ஆனால் தமிழர் போராட்டம் மட்டும்தான் சொந்த மக்களின் துணையுடன் நடாத்தப்பட்டது. அவர்களின் பங்களிப்புடன் மட்டுமே கொண்டு நகர்த்தப்பட்டது. அவற்றை அடகு வைக்க தமிழர் தரப்பு ஒருபோதும் விரும்பவில்லை, எப்போதும் அதற்குத் தாயாருமில்லை என்பதும் காரணம். பணத்திற்கு அடிமையாகப் போக தமிழர் தரப்பும், தலைமையும் என்றுமே நினைத்ததுமில்லை.

அதனாலென்ன வெளிநாடுகள் இலங்கைக்குள் நுழைந்தால் என்ன? நுழைந்துவிட்டுப் போகட்டுமே? இங்கிருந்து கொண்டு போக அவர்களுக்கு என்ன இருக்கிறது இங்கே? என்றும் சிலர் கேட்டிருந்தார்கள். இங்கே என்ன இல்லை? என்பதுதான் தமிழர் பிரதிநிதிகளின் மறு கேள்வியாக இருந்தது. உள்ளே நுழையும் வெளிநாடுகள் மற்றும் முதலாளிகளின் இலக்கு தமிழர்களாகிய எமது வாழ்க்கையின் மீதான அக்கறையில்லை. எமது இழப்புகளுக்கு மருந்து கொண்டுவரப்போவதில்லை. மாறாக அவர்களுக்கு எமது வளங்கள் மீதுதான் கண். 2019 இன்று எமது வளங்கள் பங்கு போடப்பட்டிருப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

மன்னார் பேசாலையில் மசகெண்ணை, புல்மோட்டையின் கனிம மணல், தமிழர்களின் காட்டு வளம், மிகப்பெரிய பரப்பளவில் வடக்கு கடலின் மீன்வளம், பராமரிக்கப்பட்டால் வற்றாத நன்னீர்வளம், இயற்கையாகவே அமைந்த பல நீரேரிகளைக் கொண்ட துறைமுக கடற்கரைகள், எண்ணெய்க் குதங்கள், நிலத்தடி கனிமங்கள் என்று எம்மிடம் என்ன இல்லை? இந்த மண்ணின் வளங்கள் எமது மக்களின் பயன்பாட்டிற்கு அப்பால் யார்யாரோ இன்று கொள்ளையடித்துப் போகிறார்களே? இன்று இலங்கை அரசின் உதவியுடன் கொள்ளைபோகும் இந்த வளங்கள், அன்று நாம் கையொப்பம் போட்டிருந்தால் அன்றே கொள்ளையிடத் தொடங்கியிருப்பார்கள்.

அந்த மாநாட்டில் அவர்கள் தரும் பணத்திற்கு இந்த எமது இயற்கை வளங்கள் ஈடாகுமா? எதிர்கால சந்ததியின் வாழ்வைக் கருத்தில் கொண்டே தமிழர்கள் அந்த மாநாட்டை புறக்கணித்தார்கள். எதற்காகவாவது இனி ஒரு உலக யுத்தம் உலகில் எந்த மூலையில் ஏற்பட்டாலும் இலங்கையின் பெறுமதி உங்களுக்கு அப்போது புரிந்துகொள்ள முடியும். இன்று சீனம் வந்திட்டு, அரபி வந்திட்டு, ஹிந்தி வந்திட்டு என்று புலம்பும் நீங்கள் இன்னும் ஆழமாக வரலாறைப் படிப்பது அவசியமானது.

இந்த சர்வதேசத்தின் தோல்வியைப் பற்றி, மூக்குடைவைப் பற்றி சர்வதேசம் அமுக்கியே வாசித்தது. ஊடகங்கள் இது பற்றி பெரிதாக கணக்கெடுக்காத வண்ணம் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு ஆச்சரியம்! இந்த இடத்தில் இருந்து தமிழர் தரப்பு எப்படி தப்பிக் கொண்டது? (அவன் ஒருவனைத் தவிர யாருக்கும் இது தெரியாது) தப்பினார்கள் என்பதைவிட கற்றுக்கொண்டார்கள் என்பது பொருத்தமானது.

எந்த சலனமும் இல்லாமல் சர்வதேசம் பின்னிய, “அபிவிருத்தி” என்ற சூழ்ச்சி வலையில் சிக்காமல் தமிழர் தரப்பு தப்பிக்க கொண்டது. இத்தனை நாடுகளின் அரசியல் நகர்வுகளையும் அவர்கள் புரிந்து தெரிந்து வைத்திருந்தார்கள். இந்த சில்லிப் பையன்களிடமா இவ்வளவு வலிமை? அங்கேதான் அவர்களுக்கு ஆச்சரியம், தலைமையும் அவருடன் சேர்ந்து பயணிக்கும் பெரும் தலைகளும் காரணம் என்று புரிந்து கொண்டார்கள். சண்டை என்றால் அடித்து நசுக்கலாம். இது அரசியல். கத்தியில் நடக்க வேண்டும். அதுவும் ஒரு போராட்ட அமைப்பு இவ்வளவு முன்னேற்றகரமானதா? உலக அரசியலில் தெளிவு கொண்டதா? என்று சிந்தித்தது சர்வதேசம்.

இவர்களை வளரவிட்டால் இந்துசமுத்திரத்தை அமெரிக்காவும் மற்ற உலக நாடுகளும் ஆளுகை செய்வது கடினம். ஆகவேதான் அழிப்பிற்கான நிகழ்ச்சி நிரல்களை எழுதத் தொடங்கியது சர்வதேசம். அதனைப் புரிந்து கொண்ட தமிழர்களும் அடிபட்ட நாகம் கொத்தவரும் என்றும் தெரிந்திருந்தார்கள். அதனை எதிர்கொள்ள தம்மால் இயன்ற எதிர்நடவடிக்கைகளை செய்யத் தவறவில்லை. அடிமையாக மண்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல் என்று தமக்கான வழியை பலவலிகளோடு ஏற்று நடந்தார்கள்.

அபிவிருத்தி என்ற ஒன்றிற்குள்ளால் போனால் பல விடயங்களை கதைத்துப் பேசி பெற்றுக் கொள்ளலாம்தானே என்று பலர் அன்று கேட்டார்கள். ஒரு இராணுவ சமநிலைச் சக்தியாக நின்று அதுவரை பேசிய பேச்சுகளுக்கே எந்த அசைவும், தீர்வும், நம்பிக்கை வாக்குறுதிகளும் கிடைக்காத பொழுது இனி எதனை நம்பி அவர்களிடம் நாம் விட்டுக் கொடுத்துப் போக முடியும் என்று கேள்வி கேட்ட இவர்களுக்கு எப்படி புரியவைக்க முடியும்.

மாநாட்டுக்குப் போய் கையெழுத்து போட்டால் பணமாவது வந்திருக்குமே என்றும் கேட்கலாம். பணம் வந்திருக்கும். ஆனால் யாருக்கு வந்திருக்கும் என்ற கேள்வி முக்கியமானது. 2004 இல் நடந்த ஆழிப்பேரலை (tsunami) அனர்த்தங்களுக்கான மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்காக தமிழர் தரப்பும் இலங்கை அரசும் சேர்ந்து முன்னெடுத்திருக்க வேண்டிய ஆக்க குறைந்த சம அதிகாரமுள்ள “சுனாமிக் பொதுக் கட்டமைப்பு” என்கின்ற ஒன்றைக்கூட இலங்கை அரசும் மத அடிப்படைவாத அமைப்புகளும் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் அந்த பணம் தமிழர்களுக்காகவும் பயன்பட்டிருக்குமா? என்ற கேள்வி விசாலமானது.

முன்னர் இப்படிப் பல சம்பவங்களில் சிங்கள பேரினவாதத்தின் மனோநிலையை புரிந்து கொண்ட தமிழர்களின் பிரதிநிதிகள், “வரலாறு எமது வழிகாட்டி” என்கின்ற அடிப்படையிலேயே போராட்ட பாதையெங்கும் பல ஆரோக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது.

இந்த சம்பவங்கள் நடந்து ஐந்து வருடங்களில் தமிழர் அழிப்பிற்கான யுத்தம் பெருவீச்சில் தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அது முடிவுக்கட்டத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. விண்ணிலிருந்து, கடலின் தொலைவிலிருந்து, அருகே உபகண்டத்திலிருந்து பல நாடுகள், இரத்தம் சொட்டச் சொட்ட தமிழர் சந்ததி கருகி புதையும் பொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தன . வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தன. இன்றைக்கு மருந்து போட வந்திருக்கிறார்கள். எமது மக்களின் காயங்கள் ஆறாதவை என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. சுயநல வஞ்சக அரசியலில், தமிழர்களிடம் தோற்றுப் போன சர்வதேசம் ஒன்று கூடி, உயிரினங்களுக்கு எதிராக பயன்படுத்தவே கூடாத ஆயுதங்களையும் பயன்படுத்தி பலி(ழி) வாங்கிக் கொண்டது.

புதைக்கப் படுபவைகள் எல்லாம் விதைகளா? என்று எமக்குத் தெரியாது. ஆனால் மூளைத்திறன் உள்ள விதைகள் தூவப் பட்டுதான் இருக்கிறது. காலமழை பொழியும் பொழுது முளைவிட்டே ஆகும். முளைகள் வானுயர கிளை பரப்பியே ஆகும் என்கின்ற நம்பிக்கையில் நாமும்.

எழுதியது : புலர்வுக்காக .. ப.வித்யாசாகர்

எம் தேசத்தின் வளங்கள் இவை … இப்போது ?