‘தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் திட்டத்தை 1994ம் ஆண்டிலேயே சர்வதேசம் வகுத்திருந்ததாகவும், ஆனால் அந்த திட்டத்தில் விடுதலைப் புலிகள் வெற்றிபெற்று விட்டதாகவும்’ தெரிவித்திருக்கின்றார் பிரபல ஈழத்து எழுத்தாளரும், முன்னாள் போராளியுமான குணா கவியழகன்.

‘சமாதான ஒப்பந்தம் கூட இன்னொரு யுத்தத்திற்கான ஒரு முன்னோடித் திட்டமே’ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்பட இருக்கின்ற குணா கவியழகனின் படைப்புக்கள் தொடர்பாக IBC- தமிழ் தொலைக்காட்சிக்கு குணா கவியழகன் வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

(குணா கவியழகனின் முழுமையான நேர்காணல் இன்று இரவு பிரித்தானிய நேரம் 7.30 மணிக்கு ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெறும்)

தமிழீழ விடுதலை போரில் மட்டுமல்லாமல் தமிழீழ கலைத்துறையிலும் காத்திரமான பங்காற்றியிருந்த குணா கவியழகன் தற்போது இலக்கியத்தில் தனது அனுபவத்தின் மூலமும் எழுத்தற்றால் மூலமும் ஈழ மண்ணின் வாசனையையும் போராட்டத்தின் வடுக்களையும் இலகு மொழியில் கதைகளாக்கி வரலாற்றினை பதியவைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றார்.

அண்மையில் வெளிவந்த அவருடைய நூல்களான ‘கர்ப்ப நிலம்’, ‘போருழல் காதை’ ஆகிய இரு நூல்களின் வெளியிட்டு விழா 27.07.2019 சனிக்கிழமை மாலை 4.05 தொடக்கம் 7மணி வரை லண்டன் ஹரோவ் சிவிக் சென்டர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.

எழுத்தாளர் குணகவியழகன் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் விமர்சகர், எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர் வாசுதேவன்,விமர்சகர் கெளரி பரா, இலக்கிய விமர்சாகர் மாதவி சிவலீலன் ஆகியோர் மதிப்புரை வழங்க, ஊடகர் இளையதம்பி தயானந்தா தலைமையேற்று நிகழ்வை நடத்தவிருக்கிறார்.

நிகழ்வின்போது நியூசிலாந்தில் உருவான கவனி குறும்படம் சிறப்பு காட்சியாக காண்பிக்கப்படவுள்ளது. அத்துடன் எழுத்தாளரின் இந்த இரு நூல்களையும் அரங்கில் பெற்றுக்கொள்ள முடியும்.


“ஈழப்போர் பற்றி விசாரணை செய்வதே `போருழல் காதை’ நாவல்!” – குணா கவியழகன்

எமது நீதிக்குரல்கள் கேக்காதவாறு தங்கள் காதுகளை இந்த உலகம் அடைத்துக்கொண்டது. தங்கள் அதர்மம் தெரியாதவாறு கண்களைப் பொத்திக்கொண்டது. அறத்தைப் பேச மறுத்து வாயைக் கட்டிக்கொண்டது. எங்கள் நியாயம் கேட்கப்படவில்லை. நீதி பேசப்படவில்லை. அதர்மம் பார்க்கப் படவில்லை. வல்லமையுள்ள உலகு வஞ்சகமாய் எம்மைக் கருவறுத்தது. இந்தப் பின்னணியில் மக்களின் வாழ்வு என்னவாக இருந்தது என்பது வெளியே அறியப்படாதது. ஆனால், அறிய வேண்டியது.

“எழுத்து என்பது, ஒரு தேடல்; ஒரு விசாரணை; ஒரு தொலைதல்; ஒரு கண்டுபிடித்தல்; `இன்னும் எழுத்து என்பது ஒரு மண்ணும் இல்லை’ என்ற சலிப்பு வரும்வரை தன்னை ஒப்படைத்தலுக்கான ஒரு மோகம்” என்று சொல்லும் குணா கவியழகன், ஈழப்போரின் பாதிப்புகளைத் தொடர்ந்து படைப்புகளாகச் செய்துவருபவர். இன்று இருக்கும் தமிழக வரலாறும், பண்பாடும் இலக்கியத்திலிருந்து எழுதப்பட்டவைதாம். அப்படி இலக்கியம் என்பதும் வரலாற்றின் பக்கங்களைச் சுமந்து நிற்கும் மிக முக்கியமான ஆவணம். அந்த வகையில் எதிர்காலத்தில் ஈழத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள, குணா கவியழகனின் படைப்புகள் ஆதாரமாக இருக்கும். போர்ச்சூழலில் ஈழத்தில் நடைபெற்ற இடப்பெயர்வுகளை எழுதத் தொடங்கியிருக்கும் குணா கவியழகன், `கர்ப்பநிலம்’ நாவலைத் தொடர்ந்து `போருழல் காதை’ என்ற நாவலை எழுதியுள்ளார். நாவல் பற்றி குணா கவியழகன் பகிர்ந்துகொண்டவை…

“வாழ்வின் இடர்பாடுகளையும் அதன் கொண்டாட்டங்களையும் மறுகாட்சிப்படுத்திக் காணவைத்து, விசாரணையைத் தூண்டுவதில் `போருழல் காதை’யும் வாசகர்களுக்கு ஒரு கருவியாகும் என நம்புகிறேன்.

கர்ப்பநிலத்தின் `வனமேகு காதை’யை அடுத்து, `போருழல் காதை’ நாவல் வருகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதியில், உலகிலேயே மாபெரும் மனித இடப்பெயர்வைக் கண்டது ஈழமண். போர் துரத்த, தலைமுறை தலைமுறையாகத் தேடிவைத்த சொத்தையும் வாழ்வையும் கைவிட்டு, ஒற்றை இரவில் ஓடிய மக்களை மையக் கதைக்களமாகக்கொண்டது கர்ப்பநிலம் – வனமேகு காதை.

இப்போது, `போருழல் காதை’, யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்த மக்களின் வாழ்வை ஆதாரமாக்கிப் பேசுகிறது. பெரும்போரைக் கண்டது வன்னியின் வாழ்வு. அதன் செழுமை, அதன் சிதைவு, அதன் வீழ்ச்சி, வீழ்ச்சியைச் சகிக்க முடியாத மனத்தின் ஓர்மம் என வாழத்துடிக்கும் மக்களின் அலைச்சலும் கொண்டாட்டமுமாய் நாவல் விரிகிறது.

இலக்கியத்தை ஒரு தரிசனமாகக் கொள்ள வேண்டும் என்றால், அகச்சிக்கல்களை மட்டுமே ஆராய்வது என்பது எவ்வளவு அபத்தமான செயல்! அதற்குண்டான புறச்சூழலையும், அதை நிர்ணயிக்கும் அரசியல் அதிகாரத்தையும் ஆராயவேண்டியிருக்கிறது. அதன் ஒளிகொண்டு அனுபவத்தை அறிவாகத் திரட்டி எடுக்கவேண்டியிருக்கிறது. இதற்கான கருவி என்பதே வாழ்வின் மீதான விசாரணைதான். அத்தகைய ஒரு விசாரணைக்கான வெளிகளை உருவாக்கவே இந்த நாவலையும் முன்வைத்துள்ளேன்.

கர்ப்பநிலத்தின் காதைகள், அடிப்படையில் சிங்களத்தமிழ் இன முரண்பாட்டை ஆராயும் முயற்சி. ரத்னாயக்க என்கிற சிங்கள கிராமத்து மனிதரும், அரசுநாகன், பொன்னுக்கோனர் போன்ற யாழ்ப்பாண மனிதரும் ஒருகாலத்தில் நண்பர்கள். இந்தக் குடும்பங்களுக்கு இடையேயான தொடர்பு, அரசியல்வாதிகளால் கொண்டுவரப்பட்ட இனப்பகையால் அறுந்துபோகிறது. பிறகு அவர்களின் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் என்ன ஆனார்கள் என்ற கதைப் பின்னணியில் போரை விசாரணை செய்கிறது நாவல். இந்த விசாரணைக்கு உலக அரசியல் மற்றும் உள்நாட்டு அரசியலின் ஊடாட்டங்கள் பற்றிய உண்மை ஒளியாகப் பாய்ச்சப்படுகிறது.

எமது வலிமையை, அநீதியும் அதர்மமும் வஞ்சகமும்கொண்டு சிங்கள தேசம் உலக சக்திகளுடன்கூடி அழித்தது. எமது நீதிக்குரல்கள் கேட்காதவாறு தங்கள் காதுகளை இந்த உலகம் அடைத்துக்கொண்டது. தங்கள் அதர்மம் தெரியாதவாறு கண்களைப் பொத்திக்கொண்டது. அறத்தைப் பேச மறுத்து வாயைக் கட்டிக்கொண்டது. எங்கள் நியாயம் கேட்கப்படவில்லை. நீதி பேசப்படவில்லை. அதர்மம் பார்க்கப்படவில்லை. வல்லமையுள்ள உலகு வஞ்சகமாய் எம்மைக் கருவறுத்தது. இந்தப் பின்னணியில் மக்களின் வாழ்வு என்னவாக இருந்தது என்பது வெளியே அறியப்படாதது. ஆனால், அறியவேண்டியது. அந்தக் கதையைச் சொல்லிவிட்டுப்போகிறோம். ஏனெனில், அது மீண்டும் மீண்டும் உலகின் ஏதோ ஒரு மூலையில் படரக் காத்திருக்கும் நச்சுப் பதார்த்தம்.

ஒருவன், தன் வாழ்வுக்கு எழுத்தை சாட்சியாக நிறுத்த முடியாது. ஆனால், தன் எழுத்துக்கு வாழ்வை சாட்சியாக நிறுத்த முடியும். இதுவரையிலான என் எழுத்தைப்போலவே `போருழல் காதை’யும் வாழ்வை சாட்சியாக்கித் துணிந்ததுதாம்.

போரின் வேரையும் அதன் விழுதையும் ஆராயும் அதே நேரம், மனித வாழ்வின் உறவுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மனிதர்கள் சூழ்நிலையில் என்ன ஆகிறார்கள் என்பதையும் காண்கிறது நாவல். காதலும் காமமும் சூழ்ச்சியும் குரோதமும் அன்பும் காருண்யமும் பகையும் வெறுப்பும் எங்கும் இருப்பவைதாம். அவை குறிப்பிட்ட சூழலில் எவ்வாறு துலங்குகின்றன என்பதுதான் ஆச்சர்யங்களைத் தரவல்லது. அதற்கான தூண்டல் காரணி என்ன என்பதுதான் அறியப்படவேண்டியது. இந்தக் கதையில் வரும் ஆண்-பெண் மனங்களை அந்த ஒளிகொண்டே காண வேண்டும்.

குருட்டு வெளியில் வாழவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஈழத்து வாழ்விலிருந்து ஒரு வாசகர் இந்த நாவலில் பெறுவாராயின், அதுவே இந்த நாவலின் வெற்றிதான்.”