Search

Eelamaravar

Eelamaravar

Month

June 2019

போராளிகளின் பகிரப்படாத பக்கங்கள்- 22 களமுனைகளிலும் அரசியலை விதைத்த மேயர் மிகுதன் !

உத்தம குறிக்கோளாம் தமிழீழ விடிவுக்காக சொல்ல முடியாத துயரங்களை தம் தோழ்களில் சுமந்து நெருப்பாற்றை நீந்திக் கடந்தவர்கள் எங்கள் மாவீரர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சிந்திய குருதி இன்றும் பல ஆயிரம் நினைவுகளை எமக்குள்ளே விதைத்துச் சென்றதை மறுக்க முடியாது. அவ்வாறுதான் மாறன்-8 அடிப்படைப் பயிற்சி முகாமில் ஒரு புலி தயாராகிக் கொண்டிருந்தான். தேசக் கனவை தன் உள்ளத்தில் சுமந்தவனாக, நேரிய சிந்தனைகளும், தேசியத் தலைமை மீதான அடங்காத நேசமும், விடுதலைப் போராட்டத்தின் மீதான அடங்காத பற்றும் கொண்ட வேங்கையாக உருவெடுத்தான் மிகுதன்.

எதையும் செய்து முடிக்கு அசாத்திய துணிச்சல் கொண்டவன், எந்த விடயத்துக்காகவும் யாரிடமும் கறைபடியாத அளவுக்கு தன் சிந்தனைகளில் மட்டுமல்லாது செயற்பாடுகளிலும் நேரிய போக்குக் கொண்டவன். அச்சம் என்பதன் அர்த்தம் தெரியாதவன். களமுனைகளை மட்டுமல்ல மக்கள் பணிகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த பெரும் வேங்கை. அடிப்படைப் பயிற்சி முடிவடைந்த பின் அரசியல்துறை கல்விப்பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டு பணியாற்றத் தொடங்கினான்.

மிகுதன் கல்விப்பிரிவுப் போராளியாக இருந்த போது முதல் சண்டைக் களமுனை நோக்கி நகர்த்தப்படுகிறான். பூநகரி நோக்கிய சிங்களத்தின் படையெடுப்பான “சுழல்காற்று “ நடவடிக்கைக்கு எதிராக தடுப்புக் காவல் வேலியாக சண்டைக் களம் புகுந்தான். அன்றில் இருந்து இறுதி வரை அவன் சண்டைக் களங்களை பிரிந்திருந்தது குறைவு. அரசியல் பணிகளில் இருந்தாலும் சண்டைக் களங்களை நோக்கிய வீரானாகவே வாழ்ந்தான்.

பள்ளிக்கல்வியை க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவான நிலையிலும் அதைத் துறந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்த மிகுதன் எதையும் இலகுவில் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவன். அடிப்படையிலே ஆங்கில மொழியறிவைக் கொண்டிருந்தாலும் சிறப்பு ஆங்கிலப் பயிற்சிகள் மூலமாக இயக்கத்துக்குள்ளே தன்னை வளர்த்துக்கொண்டான். அதனாலோ என்னவோ சர்வதேச அரசியலையும், அரசியல் பொருளாதாரத்தையும் அல்லது உலக நாடுகளின் ஒழுங்குகளையும் அவர்கள் எதிர்காலத்தில் எம்மீது எவ்வாறான நிகழ்ச்சி நிரல்களில் நகர்வுகளை மேற்கொள்வார்கள் என்ற பலமுனை எதிர்வுகூறல்களைக் கூறக்கூடியவனாக நன்கு கற்றுத் தேர்ந்தான்.

அரசியல்துறையின் பரப்புரை நடவடிக்கைகள் தீவிரம் அடையும் போது சிறப்பு நடவடிக்கைகளுக்காக கல்விப்பிரிவுப் போராளிகளும் விசேடமாக களமிறக்கப்படுவர். அப்போது அக் காலத்தில் பாடசாலைகளில் அல்லது கல்வியாளர்களின் சந்திப்புகள் நடந்த போதெல்லாம், எதிர்வரும் கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கூறுவதனூடாக அல்லது தெளிவான விளங்கங்களை வழங்குவதனூடாக இயக்கத்தின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு பெரிதும் வழி வகுத்தவன்.

சில போராளிகளுக்கு பேச்சாற்றல் இருப்பதில்லை. ஆனால் அறிவுசார்ந்த கருத்துக்களால் சபையினை தம் கட்டுக்குள் கொண்டு வரும் அதி திறன் அவர்களிடம் இருக்கும். அவ்வாறான ஒரு திறனுடன் தான் விசேட பரப்புரைகள் நடக்கும் போதெல்லாம் ஒரு தூணாக மிகுதன் பயணித்தான்.

போராளிகளுக்கான அரசியல் தெளிவூட்டல்கள், வகுப்புக்கள் என பெரும் பணியை தனதாக்கிக் கொண்டான். ஒவ்வொரு களமுனையாக செல்வதும் அங்கே காவல் வேலிகளாக இருக்கும் போராளிகளுடன் தனித்தனியாகவும், இருவர் அல்லது மூவர் கொண்ட அணிகளாகவும், அல்லது 30 பேர்கொண்ட ஒரு அணியாகவும் தேசியத்தலைவரின் சிந்தனைகள், எதிர்பார்ப்புக்கள், உலக நிகழ்ச்சி நிரல்கள் , சமகால அரசியல் நகர்வுகள் , மக்களின் எதிர்பார்ப்புக்கள் என அறிவார்ந்த தெளிவூட்டல்களைச் செய்வான். அதற்காக அவன் நடக்காத காடுகள் இல்லை. அவனின் பாதம் பதியாத காவலரண்கள் இல்லை. சுற்றிச் சுற்றி தமிழீழ எல்லைக் காவலரண் போராளிகள் அனைவருடனும் நெருங்கி இருந்தான். அவர்களின் தேவைகளை, பிரச்சனைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை உரியவர்களூடாக பெற்றுக் கொடுத்தான்

பள்ளிக்கல்விக் காலம் தொட்டு கலை இலக்கியப் பணிகளில் முன்நிற்கும் மிகுதன் மற்றவர்களைக் கவரும் கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் வலம் வந்ததும் அவனின் பலங்களில் ஒன்று. அடிப்படைப் பயிற்சி முகாமில் நடக்கும் வாராந்த கலைநிகழ்வுகளை எடுத்துப் பார்த்தால் கலை இலக்கியப் பணியில் முதன்நிலையாக இருப்பது மிகுதன் என்றால் அது மிகையாகாது. தனது எண்ணங்களை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் பட்டிமன்றங்கள் மற்றும் நாடகங்களாகவும் வெளிக்கொண்டு வந்து தமிழீழ இலக்கியப் பரப்புக்குள் அவனும் நிமிர்ந்து நின்றான்.

இவ்வாறான காலத்தில் தமிழீழ அரசின் உத்தியோகபூர்வ நாளிதழான ஈழநாதம் நாளிதழின் பணிக்காக பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களால் அனுப்பப்பட்ட போது எவ் விதமான அடிப்படைக் கணினி அறிவும் அற்ற நிலையில் உள்ளே செல்கிறான். அங்கே பக்கவடிவமைப்புப் பிரிவுக்குள் தன்னை ஈடுபடுத்துகிறான். எதையும் ஆய்ந்து அறியும் ஆற்றல் கொண்ட மிகுந்தனால் அங்கே இருந்த கணனிகளை கையாள்வது என்பது குறுகிய காலத்தில் இலகுவான காரியமாகியது. நெஞ்சிலே விடுதலை வேட்கையும் எதையும் உடனடியாக கற்றுக்கொள்ளும் திறனும் ஒருங்கே கொண்ட மிகுதன் தன் விடா முயற்சியினால் அங்கிருந்த வடிவமைப்பாளர்கள் மற்றும் கணினித் தொழில்நுட்பவியலாளர்களின் உதவி கொண்டு சிறுக சிறுக கணினியில் தன் கரங்களைப் பதித்தான்.

வடிவமைப்பின் (Graphics Design) பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு மத்தியில் ஈழநாதம் நாளிதழ் பணியகத்தையும் தாண்டி அவனது வடிவமைப்பு பேசப்படுமளவுக்கு தன்னை மேம்படுத்திக் கொண்டான் மிகுதன். ஒரு கட்டத்தில் இங்கிருந்தவர்களுக்கு புது ஆலோசனைகளை வழங்குவது தொடக்கம் கற்றுத் தந்தவர்களைக்கே புதியவற்றைக் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு தன்னைப் புடம் போட்டான். “ ஈழநாதம் “ நாளிதழ், “வெள்ளிநாதம்” வார சிறப்பிதழ் மட்டுமல்லாது, விடுதலைப்புலிகள் மாதவிதழ், நாவல்கள் என மிகுந்தனின் வடிவமைப்புப் பணி அனைவரையும் வியக்கும் வண்ணம் மேம்பட்டிருந்தது.

இவ்வாறான பணிகளினூடாக தன் அரசியல் பயணத்தை தொடர்ந்த மிகுதனை கல்விப்பிரிவால் வெளியிடப்பட்ட மாதவிதழின் வடிவமைப்புத் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கத் தவறவில்லை. இதன் அடுத்த நிலையில் அவனை சமாதானச் செயலகம் உள்வாங்கிக் கொள்கிறது. சர்வதேச நாடுகளின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலில் உருவான ரணில் அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த சமாதான உடன்படிக்கைக் காலத்தில் விடுதலைப்புலிகளின் சமாதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவிருந்த பிரிவான சமாதானச் செயலகத்தில் தன் பணியை விரிவுபடுத்தி புலம்பெயர் நாடுகளுக்கும் அரசியல் பணிகளுக்காக சென்று வந்தான்.

இந்த நிலையில் எம் தாயகத்தை இயற்கையின் சீற்றமான சுனாமி பேரலை தாக்கி பெரும் இன்னல்களைத் தந்து சென்ற போது அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் கட்டமைப்புப் பணிகளுக்கான வடமராட்சிக்கிழக்குப் பகுதியில் பணியாற்ற அனுப்பப்பட்ட போது அவர்களுக்கான மீள் வாழ்வாதார கட்டுமானங்களை மட்டுமல்லாது அவர்களின் உளவியல் சார்ந்த தேவைகளையும் நிறைவேற்றுவதில் வெற்றி கண்டு பாராட்டுதல்களைப் பெற்றிருந்தான்.

இது நடந்து கொண்டிருந்த நேரம் திட்டமிட்டு எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சமாதான உடன்படிக்கை முறிந்து சண்டை தொடங்கிய காலத்தில் சமாதானச் செயலகத்தில் இருந்து பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களால் அவரது பிரத்தியேகப் பணிகளுக்காக அழைக்கப்படுகிறான். அவரது பிரத்தியேக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அதே வேளையிலும் சண்டைக் களங்களுக்குச் சென்று வந்தான் மிகுதன். போராளிகளோடு அரசியல் விழிப்பு செயற்பாடுகளை கதைத்தான். அவ்வாறு பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு நாளில் தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து இலங்கை வான்படையின் வான்கலங்கள் கிளிநொச்சி நகரில் இருந்த அவரது முகாமைத் தாக்குகின்றன.

தமிழீழ விடியலை தன் நெஞ்சிலே சுமந்து தமிழீழக் களங்கள் எல்லாம் அரசியல்பணிக்காக நடந்து திரிந்த பெரு வேங்கையான மிகுதன் தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த தன் பொறுப்பாளரை காத்துவிடும் துடிப்போடு முயன்றாலும் அவருடனும் தன் தோழர்களுடனும் வான்படையின் தாக்குதலில் விழி மூடி விதையாகிப் போனான்.

இ.இ.கவிமகன்
02.11.2018

போராளிகளின் பகிரப்படாத பக்கம் -21 வன்னியில் விழிப்புலனற்றவர்களுக்கும் கணனிக் கல்வி வழங்கிய அறிவியற்கழகம்.


அப்போதெல்லாம் அடிக்கடி “இளையோர் அறிவியற் கழகம் “ என்ற பெயர்பலகை நிமிர்ந்து நின்ற இடத்தை கடக்க வேண்டிய தேவை எனக்கு இருந்தது. அதைக் காணும் போதெல்லாம் எமது தேசியத் தலைவரின் எண்ணங்களைச் சுமந்து உருவாக்கப்பட்ட அத்தனை கட்டமைப்புக்களும், அதை எல்லாம் நிர்வகித்து வந்த தமிழீழ அரசும் தான் நினைவில் வந்து செல்லும். உண்மையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தனித்து ஆயுத வழிப் போராட்டமாகவோ அல்லது அகிம்சை வழிப் போராட்டமாகவோ மட்டும் நடக்கவில்லை. தாயகம் தழுவிய பிரதேசங்கள் எங்கும் நிழல் அரசை எமது விடுதலை அமைப்பு உருவாக்கி சமூக விடியலுக்கான போராட்டமாகவே நடத்தி வந்ததை அனைவரும் அறிந்த ஒன்று.

இவ்வாறான தமிழீழ அரசின் ஒரு செயற்பாடாகவே கல்வி மேம்பாடும் இருந்தது. அதற்காக பல செயற்றிட்டங்களை தமிழீழ அரசு நிறுவி இருந்தது. அவற்றை முழுமையாக இப் பகிரப்படாத பக்கத்துக்குள் கொண்டு வர முடியாது என்றாலும் அதன் ஒரு அங்கமான “இளையோர் அறிவியற் கழகம்”. என்ற கல்விச்சாலை பற்றி ஒரு பக்கத்தை பதிவிடுகிறது பகிரப்படாத பக்கங்கள்.

வசதிவாய்ப்பற்ற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவென்று உருவாக்கப்பட்ட இந்த அறிவியற்கழகம் விசுவமடு பிரதேசத்தை சார்ந்த பல ஆயிரம் மாணவர்களின் ஆதாரமாக இயங்கி வந்தது. சர்வதேச தரத்துடன் ஒப்பிடும் போது வசதிகள் குறைவாக இருந்தாலும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது அந்தக் கல்லூரி. கணனிகள் யாவும் உள்ளக வலையமைப்பில் இணைக்கப்பட்டிருந்தன. உயர் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கான அத்தனை வசதிகளையும் கொண்டிருந்தது அறிவியற்கழகம்.

அறிவியல் தொழில்நுட்ப உச்ச வளர்ச்சியில் உள்வாங்கலுக்குள் எமது இனமும் அடங்கியுள்ளது. அந்தவகையில் நாங்கள் இன்றொரு தேசத்தை நிர்மாணிப்பதற்காகவும் தேசத்தை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருந்தாலும் எங்களுடைய தேசம் நாளைக்கு விடுதலை அடையும் பொழுது உலகத்தின் ஒட்டத்தோடும், அதி உச்ச வளர்ச்சியோடும் நாங்களும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் உலகப்பந்திலே எங்களுடைய தேசமும் நிலைக்க கூடிய வாய்ப்பு ஏற்படும். அந்தவகையில் எங்களுடைய தலைவர் எவ்வளவு தூரத்தில் எதிரியை விரட்டி எங்களுடைய தமிழீழ தேசத்தை மீட்க அவருடைய கவனத்தையும் அக்கறையையும் அவருடைய ஈடுபாட்டையும் செலுத்துகின்றாரோ அதேபோன்று இளைய தலைமுறையையும் புதிய உலக மாற்றத்தோடும் உலகத்தின் வளர்ச்சிப் போக்கோடும் இணைத்து கொண்டு போகின்ற ஒரு போராட்டத்தையும் சம காலத்தில் அவர் கையிலேடுத்து செயற்படுத்தி வருகின்றார்.

அதனுடைய ஒரு செயற்பாடாகத்தான் இந்த அறிவியற்கழகத்தின் தோற்றம் இங்கே கருக்கொண்டிருக்கிறது. அதனடிப்படையில்

காலையில் இலத்திரணியல், அடிப்படை கணனிப் பயிற்சி , மின்சாரவியல் போன்ற அடிப்படை தொழில்சார் கல்விகளையும் அதாவது பணியுடனான கற்றல் செயற்பாடுகளையும் (பணிக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டது ), மாலை நேரத்தில் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளுடனான ( அரச பாடசாலைக் கல்வித்திட்ட பாடங்கள்) கணனிக் கல்விகளையும், ICT, GIT என்று இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருந்த முறையே சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நுட்பப் பாடங்களையும் மாணவர்களுக்காக கற்பித்து வந்தது. அத்தோடு அங்கு பாடசாலை மாணவர்களின் அறிவு மற்றும் கலை கலாச்சார வளர்ச்சிகளுக்கான செயற்றிட்டங்களையும் செயற்படுத்தினர். இவற்றை விட நேரடியாக மக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புனர்வு செயற்பாடுகளையும், கல்விக்கான அவசியத்தை உணர்த்தும் கருத்தரங்குகளையும் நடத்தி வந்தது.

இதை விட மிக முக்கியமான ஒரு செயற்பாட்டை அறிவியற்கழகம் ஆற்றி வந்ததை நான் முன்பே அறிந்துள்ள ஒரு விடயம். அதாவது வள்ளிபுனம் பகுதியில் இயங்கி வந்த விழிப்பலனற்ற இளையவர்களுக்கான இல்லமான இனியவாழ்வு இல்லத்தில் இருந்த மாணவர்களுக்கு கணனிக் கற்கைநெறி ஒன்றை செய்து வந்தது. அதற்காக அவர்கள் “Jaws “ என்ற மென்பொருளை கணனியில் நிறுவி அதன் மூலமாக எழும் ஒலி வடிவக் கட்டளைகளை கிரகித்து அதற்கு ஒலிவடிவக் கட்டளைகளை வழங்கி விழிப்புலனற்ற மாணவர்களும் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பத்தை கொடுத்தார்கள்.

உள்ளக பயிற்சி வகுப்புக்களில் கண்பார்வையற்ற பல போராளிகள் இக்கற்கையை பெற்றிருந்தாலும், ( நவம் அறிவுக்கூட போராளிகள்) மக்களுக்கான பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் இத் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுகொடுக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது அறிவியல் கழகம் என்றால் அதில் பொய்மை இல்லை.

இதற்காக புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த இளையோர் அமைப்பை சார்ந்த துறைசார் பயிற்சி பெற்ற இளையவர்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்து அறிவியற்கழகத்திற்கு வந்திருந்தார்கள். அதில் முக்கியமான ஒரு இளையவளை நான் அறிந்திருந்தேன். அந்த இளையவள் இப்போது எங்கே எப்படி இருக்கிறாள் என்பது தெரியாததால் அதைப் பற்றித் தொட்டுச் செல்வது நல்லதல்ல என்று கருதுகிறேன். ஆனாலும் அந்த இளையவளின் முயற்சியானது பல விழிப்புலனற்ற மாணவர்களுக்கு பெரிதும் பேறாக அமைந்தது என்பதை நான் குறிப்பிட முடியும்.

இச் செயற்பாடானது,

பயங்கரவாதிகள் என்று தமிழீழ விடுதலைப்புலிகளை கூறி வரும் சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் நிட்சயமாக ஒரு செய்தியை சொல்லி செல்லும். தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களுக்காக போராடினார்கள். அவர்களின் நலன்களுக்காக போராடினார்கள். அவர்களுடைய சுதந்திரமான சுவாசக்காற்றுக்காக தம்மை அர்ப்ணித்தார்கள். அதனால் தான் ஒவ்வொரு தமிழனும் பாகுபாடின்றி பயன்பெறும் வகையில் தமது நிர்வாக ஆட்சியை நிலைப்படுத்தினார்கள்.

விழிப்புலன்றறவர்களை தூக்கி எறிந்து அவர்களை கைவிடவில்லை. அவர்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுக்க என்று பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களுடனான இல்லம் ஒன்றை நிறுவி, அதை “இனியவாழ்வு இல்லம்” என்ற பெயருடன் நிர்வகித்த அதே நேரம் அவர்களும் மற்றப் பிள்ளைகளைப் போல தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதிலும் அக்கறையாக செயற்பட்டார்கள். அதனால் தான் பலவகையான இல்லங்கள் வன்னியெங்கும் இயக்கப்பட்டன.

அந்தவகையில் அறிவியற்கழகம் விடுதலைப்புலிகளின் கணனிப் பிரிவினால் இயக்கப்பட்டு வந்தாலும், இதனை நிர்வகித்து வந்தது அனைத்துலக தொடர்பகம் என்ற பிரிவு. தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணத்தில் எழுந்த இந்த செயற்றிட்டத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பை வழங்கியது அனைத்துலகத் தொடர்பகத்தினூடாக “சர்வதேச இளையோர் அமைப்பு.”

“சர்வதேச இளையோர் அமைப்பின் “ செயற்றிட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இக் கழகம் தனது பணியை சிறப்பாக செய்து கொண்டே வந்தது. இந்த நிலையில் சிங்கள அரசு ஒரு முறை இளையோர் அறிவியல் கழகத்தை இலக்கு வைத்து கிபிர் விமானத்தால் தாக்குதல் செய்த போதும் இங்கே யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாத வாறு அக் குண்டுகள் நிலத்துள் புதைந்து போயின. கிட்டத்தட்ட 4 குண்டுகளுக்கு மேல் வீசப்பட்டிருந்தாலும் ஒரு குண்டு மாத்திரமே வளாகத்திற்கு அருகில் விழுந்திருந்தது. அதுவும் வெடிக்காமல் புதைந்திருந்தது. மற்றைய குண்டுகள் தூரமாக வீழ்ந்து வெடித்தன. கல்வி கற்பிக்கும் பள்ளிகளையே இலக்கு வைக்கும் சிங்கள அரசு அறிவியற் கழகத்தை விட்டு வைக்கவா போகிறது?

சர்வதேச இளையோர் அமைப்பின் பெரும் கனவான இவ் விளையோர் அறிவியற் கழகம் இன்று எந்த நிலையில் உள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், வன்னியின் மக்கள் செறிந்து வாழ்ந்த விசுவமடுப் பிரதேசத்தில் பெரும் பேறாக இருந்த இக் கழகத்தை இன்று அழித்தொழித்திருக்கும் என்றே நம்புகிறேன். சர்வதேச மக்களைப் போல் எம் மக்களும் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணக்கருவோடு விழிப்புலன்றறவர்களுக்கும் தொழில்நுட்ப அறிவை வழங்கிய இளையோர் அறிவியற் கழகம் மீண்டும் செயற்கரு கொண்டு எழ வேண்டும் என்பதே தனது ஏக்கமாக பகிரப்படாத பக்கம் தன் மீது பதிவாக்கிக் கொள்கிறது.

இ.இ.கவிமகன்
13.10.2018

போராளிகளின் பகிரப்படாத பக்கம் -20 மேஜர் அல்லியும் மயக்க மருந்தும்…

பகிரப்படாத பக்கம் -20 தமிழீழ மகளிர் எழுச்சி நாளில் …. மேஜர் அல்லியும் மயக்க மருந்தும்…

கரை புரண்டோடும் வெள்ளக் காடாக காட்சி தருகிறது உடையார்கட்டுப் பகுதி. திரும்பும் இடமெங்கும் சன நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் முற்றிலும் நிறைந்து வழிந்தன. மறுபுறம் சாவடைந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறு வரிசையில் இருந்தது. அவ்வாறான ஒரு நிலையில் தான் வன்னியின் முக்கிய அரச மருத்துவமனையாக இருந்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை இடம் பெயர்ந்து வந்து வள்ளிபுனத்தில் இயங்கிக்கொண்டிருந்தது.

அங்கு அரச மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை தமிழீழ மருத்துவப்பிரிவுக்கு இருந்ததால் பல மருத்துவப் போராளிகள் மக்களுக்கான மருத்துவப் பணியில் இருக்கிறார்கள். அதில் அல்லி என்று அன்பாக அழைக்கப்படும் பெண் போராளியும் இருந்தாள்.

உடலமைப்பிலும் மற்ற மருத்துவர்களின் வயதோடு ஒப்பீட்டளவில் சிறியவளாக இருந்தாலும் மருத்துவ அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்திருந்தாள். தமிழீழ தாதியர் கற்கைகள் கல்லூரியில் தனது மருத்துவ கல்வியை முடித்த அல்லி மயக்க மருந்து ( General Anesthesia /அனஸ்தீசியா) வழங்கும் மருத்துவராக சிறப்பு பயிற்சி பெற்றாள். இதற்கான பயிற்சிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிறப்பு மருத்துவர்களிடம் இருந்து பெற்றிருந்தார். அதனால் அவளது மருத்துவப் பணியின் பெரும் பங்கு சத்திரசிகிச்சை அறைகளிலையே அமைந்திருந்தது. சத்திரசிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு நம்பிக்கையும் விருப்பமுமான போராளியாக அல்லி இருந்தாள்.

மருத்துவத் துறையில், அதுவும் சத்திரசிகிச்சைப் பிரிவில் அதி முக்கியம் வாய்ந்த பணி என்றால் மயக்க மருந்து கொடுப்பது. அது அனைவரும் அறிந்த ஒன்று. கொடுக்கப்படும் அளவில் சிறு தவறு நடந்தாலும் அல்லது நேர விகிதங்களில் தவறு ஏற்பட்டாலும் உயிர் பிரியும் அபாயத்தைத் தர வல்லது General Anesthesia /அனஸ்தீசியா என்ற மருந்து. தற்காலிகமாக உடலியக்கத்தை நிறுத்தி வைக்கும் இம் மருந்து சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டியது முக்கியமானது. தவறின் உயிர் காப்பது கடினமாகும்.

இதற்காக அரச மருத்துவமனைகளிலும் சரி வெளிநாட்டு மருத்துவமனைகளிலும் சரி சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களே பயன்படுத்தப்படுவார்கள். அதுவும் சத்திரசிகிச்சை முடிவடையும் வரை ஒரு நோயாளிக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாசாரத்தில் பணியாற்றுவர். சில வேளைகளில் சத்திரசிகிச்சையின் தன்மையைப் பொறுத்து ஆளணி எண்ணிக்கை மாறுபடும். ஆனால் எமது தமிழீழ தாதிய பயிற்சிக் கல்லூரி ஒன்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற அல்லி அவர்கள் அனைவரையும் தாண்டி மருத்துவப் பணியாற்றியிருந்தாள்.

ஒரு சத்திரசிகிச்சை அறையில் சம நேரத்தில் நடந்த இரண்டுக்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகளுக்கு தனி ஒரு மயக்க மருந்து சிறப்பு மருத்துவராக ( General Anesthesia Specialist ) தனது உதவியாளர்களை ஒவ்வொரு நோயாளர்களுக்கும் தனி ஒருவர் விகிதம் நேரடியாக மயக்கமருத்து உதவியாளராகப் பயன்படுத்தி பணியாற்றி இருந்தாள். ஒரு வினாடி அளவில் கூட ஏற்படும் தவறு குறித்த நோயாளிகளை சாவடைய வைக்கும் வல்லமை பொருந்தியது. ஆனாலும் அந்த வல்லமையை உடைத்தெறிந்து தமிழீழ மருத்துவத் துறையில் தன் உதவியாளர்களினூடாக புதிய ஒரு தடத்தை பதித்திருந்தாள் அல்லி.

உண்மையில் அனைவரையும் வியக்க வைக்கும் இந்த பணியானது அல்லி என்ற பெண் போராளியால் செய்ய முடிந்தது என்பது தமிழீழ வரலாற்றில் பகிரப்படாத ஒற்றைப் பக்கம்.

பரதநாட்டியத்தில் அதீத ஈடுபாடும் கல்வியில் அக்கறையும் கொண்ட அல்லி க.பொ.த உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது தன்னை விடுதலைப் போராளியாக மாற்றிக் கொண்டார். இருப்பினும் விடுதலைப்புலிகள் அமைப்பு அல்லி உட்பட்ட சில போராளிகளை பள்ளிக்கல்வி கற்பதற்காக அனுமதித்திருந்தது. அதனால் அவர்கள் போராளிகளாக இருந்து கொண்டு பள்ளிக் கல்வியை தொடர்ந்தார்கள் உயர்தர பரீட்சையில் நல்ல பெறுபேற்றினை பெற்றிருந்தாலும் அரச பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர கூடிய பெறுபேறு கிடைக்கவில்லை அதனால் அல்லி விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டு மருத்துவக் கற்கையை கற்பதற்காக பணிக்கப்படுகிறார். அதன் பின்பான காலங்கள் பெரும்பாலும் மருத்துவமும் மருந்துகளுமே அவரது வாழ்க்கையாகிப் போனது.

கள மருத்துவத்துக்காக முன்னணி மருத்துவ நிலைகளிலும் களமுனைகளிலும் பயணித்துக் கொண்டிருந்த அல்லி மயக்க மருந்து தொடர்பான சிறப்புப்பயிற்சி பெற்றதன் பின் பெரும்பாலான நாட்களை சத்திரசிகிச்சை அறைகளிலையே கடக்க வேண்டி இருந்தது. அதுவும் மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையின் சத்திரசிகிச்சை அறைகளில் தான் அதிகமாக கடமை செய்தார். அவரது நீண்ட நாள் அனுபவம் சத்திரசிகிச்சை அறைகளில் சக மருத்துவர்களின் பணியை இலகு படுத்துவது வழமை.

25.01.2009 அன்று அல்லி மூத்த மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்களுடன் வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரச மருத்துவமனையில் பணியில் இருந்தாள். அப்போது சிங்கள அரச பயங்கரவாதம் மக்களுக்கான மருத்துவமனை என்பதை அறிந்தும் கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுக்கிறது. ஆட்லறி எறிகணைகள் மருத்துவமனை வளாகத்தில் வீழ்ந்து வெடிக்கின்றன.

இலகுவில் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனை கூரையில் சிவப்பு நிறத்திலான சக (+) அடையாளம் மருத்துவமனைக் குறியீடாக வரையப்பட்டிருந்தும் சிங்கள இனவழிப்பு வெறியர் மருத்துவமனை மீது தாக்குதலைத் தொடுக்கிறார்கள். இங்கே மிக முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய ஒரு விடயம் ஒன்றுள்ளது. இந்த மருத்துவமனையின் ஆள்கூறு மற்றும் மருத்துவமனை பற்றிய விபரங்கள் அனைத்தும் சர்வதேச உதவி நிறுவனமான செஞ்சிலுவைச் சங்கத்திடம் மருத்துவமனை பொறுப்பதிகாரியால் வழங்கப்பட்டிருந்தது. அந்த விபரங்கள் மருத்துவமனை பாதுகாப்பு வலய ஏற்பாடுகள் தொடர்பாக சிங்கள அரசிற்கு செஞ்சிலுவை சங்கம் வழங்கி இருந்தது. இவ்வாறு மருத்துவமனை பற்றிய விபரங்களை அவர்களிடம் இருந்து பெற்ற பின்பே சிங்களம் திட்டமிட்டு தாக்குதலை நடாத்தி இருந்தது. இது முதல் தடவை நடந்ததல்ல இதற்கு முன்பும் அதன் பின்பும் பல இடங்களில் நடந்திருந்தன.

அத்தாக்குதலில் அவசர சத்திரசிகிச்சை ஒன்றை செய்து கொண்டிருந்த மருத்துவர் அல்லி படுகாயம் அடைகின்றார். சிகிச்சை பெற வந்திருந்த நோயாளரின் நிலையோ மேலும் மோசமாகியது. சத்திரசிகிச்சை அறை சிதைந்து போய் இருந்தது. அதனால் அங்கே வைத்து சிகிச்சையை தொடர முடியாத நிலையில் உடனடியாக காயப்பட்டிருந்தவர்கள் உடையார்கட்டுப் பகுதியில் அமைந்திருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். ஆனால் அங்கும் உடனடியாக சிகிச்சை வழங்க முடியவில்லை அங்கும் அவசர சிகிச்சைப் பிரிவு நிறைந்து கிடக்கிறது.

ஏனெனில் அது ஒரு இராணுவ மருத்துவமனையாக இருந்தாலும் போராளிகளுக்கான மருத்துவம் மட்டுமன்றி மக்களுக்கான மருத்துவத்தையும் போராளி மருத்துவர்களே செய்ய வேண்டி இருந்தது. ஏனெனில் அங்கே அரச மருத்துவ வளம் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்தளவிலே இருந்தது. அதனால் தமிழீழ மருத்துவப்பிரிவு மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் இணைந்தே பணியாற்ற வேண்டிய நிலையில் இருந்தார்கள். அதனால் அங்கு இருந்த சத்திரசிகிச்சைப் பிரிவிலும் அதிகளவான காயப்பட்டவர்களுக்கான சகிச்சை வழங்க வேண்டிய நிலை இருந்தது.

இது ஒரு புறம் இருக்க பாதுகாப்ப வலயம் என்ற பெயரில் சிங்களத்தால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டிருந்த கொலை வலயத்தில் குவிந்து கொண்டிருந்த மக்கள் தொகையை மறுபுறம் கட்டுப்படுத்த முடியாது இருந்தது. அதை விட முதலாவது பாதுகாப்பு வலயத்தில் கொலை வெறித் தாண்டவமாடி தலை உயர்த்த முடியாத அளவுக்கு தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது சிங்களப் பேரினவாதம்.

பனங்குற்றிகளால் சுற்றி பாதுகாக்கப்பட்டிருந்த சில அறைகளை சத்திரசிகிச்சை அறைகளாக மாற்றி இருந்த மருத்துவர்கள். காயப்பட்ட மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருப்பதால் பாதுகாப்புக்கள் எதுவுமற்று சத்திரசிகிச்சைகளை செய்ய முயன்றார்கள். ஒவ்வொரு தாக்குதல்கள் நடக்கும் போதும் நிலத்தில் குந்தி இருப்பதும் மீண்டும் எழுந்து நோயாளிக்கான சிகிச்சையைத் தொடர்வதுமாக அவர்கள் சாவோடு போராடும் காயப்பட்டவர்களை காக்க வேண்டும் என்ற துடிப்போடு போராடினார்கள். அவ்வாறான நிலையில் தான் அல்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.

சத்திரசிகிச்சை பிரிவில் காயப்பட்ட மக்கள் அதிகமாக காணப்பட்டதாலும் அல்லியின் காயம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்ற எண்ணமும் அவரை சிகிச்சைக்காக உள் எடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியது. அதனால் உடனடியாக மருத்துவ உதவியாளர்களால் முதலுதவி சிகிச்சையை மட்டும் வழங்கப்படுகிறது.

அல்லி காயப்பட்டதை அறிந்த அல்லியின் எதிர்கால வாழ்க்கைத் துணைவனாக வர இருந்த போராளியும் அங்கு வருகிறார். ( அல்லிக்கும் அந்தப் போராளிக்கும் திருமணம் செய்வதற்கான ஒழுங்குகளை திருமண ஏற்பாட்டுக் குழு செய்திருந்தது ஆனால் சூழல் அவர்களை திருமணப்பந்தத்தில் இணைய விடவில்லை) தன் கண்முன்னே தனது வருங்கால துணைவி காயப்பட்டிருந்த நிலையை பார்க்க முடியாது நின்றார் அந்தப் போராளி. அல்லியின் உயிர் அந்த போராளியின் கண்முன்னாலே கொஞ்சம் கொஞ்சமாக பிரியத் தொடங்கி இருந்ததை அவரும் அறியவில்லை.

ஒருபுறம் சிங்களத்தின் தாக்குதல்கள் மறுபுறம் காயமடைந்து வந்த மக்கள் என தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் விரைவில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்தும் மக்களின் உயிர் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்த மருத்துவர்கள் தமது சக மருத்துவரை தாமதமாகவே சத்திரசிகிச்சை அறைக்கு உள்ளே எடுத்தார்கள். ஆனால் ஏற்கனவே முழங்காலின் பின் பகுதிக்குள்ளால் உள் நுழைந்திருந்த எறிகணைத் துண்டு தொடை வழியாகப் பயணித்து வயிற்றுக்குள் சென்ற நிலையில் வயிற்றுப் பகுதியில் உள்ளக குருதிப்பெருக்கத்தை (Internal Bleeding ) ஏற்படுத்தி இருந்தது. (Septicemia) அதைக் கண்டு பிடித்து அதற்கான சிகிச்சையை ஆரம்பித்த மருத்துவர்கள் உண்மையில் தோற்றுப் போனார்கள்.

காயப்பட்ட உடனே அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அல்லி உயிர் தப்பி இருப்பாளோ என்ற எண்ணம் அவர்களிடையே எழுந்தது. ஆனால் மருத்துவமனையில் நிறைந்திருந்த காயப்பட்ட மக்களும் சிங்களத்தின் தொடர் தாக்குதல்களும் அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை தர மறுத்திருந்தது.

சத்திரசிகிச்சை அறைக்கு எடுக்கப்பட்டு அல்லிக்கு தீவிர சிகிச்சையை மேற் கொள்கின்றனர் மருத்துவர்கள் ஆனால் சிகிச்சை பலனற்றுப் போகிறது. அல்லி யாருக்காக வாழ்ந்தாளோ அந்த மக்களுக்காக இறுதி வரை வாழ்ந்தாள். ஒரே நேரத்தில் தனது உதவியாளர்களினூடாக இரண்டுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கான மயக்க மருந்தை கொடுத்து அவர்களின் சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக முடிப்பதற்கு பெரும் துணையாக நின்ற மருத்துவ வேங்கை தனது வருங்கால துணைவனாக தான் ஏற்க இருந்த போராளிக்கு முன்னால் மண்ணுக்குள் மேஜர் அல்லியாக உறங்குகிறாள்.

இ.இ. கவிமகன்
10.10.2018

மரணம் என்பது மரணிக்கும் வரை இம் மறவர்களது வீரம் பார் முழுக்க ஓங்கி ஒலிக்கும்.

போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 18 கண்முன்னே பிள்ளை சாக… செய்வதறியாது விழி கரைந்த தந்தை

“தம்பி இந்தியா என்ட பிள்ளையை காப்பாத்துமா?அல்லது என் கண்ணுக்கு முன்னாலையே பிள்ளையை சாகடிக்குமா தம்பி…? நல்லூரான் முன்றலில் அடிக்கடி புரட்சிக் கவிஞர் காசியானந்தனையும் அங்கே இருந்த தேவர், வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறி போன்ற போராளிகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறார் தியாகதீபம் திலீபனின் அன்புத் தந்தையான இராசையா ஆசிரியர்.

அவர் கண் முன்னே அவர் பெற்ற பிள்ளை பசிப் போர் புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக சாவடைந்து கொண்டிருந்த கொடூரத்தை எமது தேச வரலாறு பதிவு செய்து கொண்டது எவ்வளவு கொடியது.

உண்மையில் ஒரு நேர உணவை தனது பிள்ளை உண்ண வில்லை என்றால் கூட நெஞ்சில் நெருப்பேந்தி நிற்கும் தந்தைகளுக்கு மத்தியில் பசிப் போரால் இந்திய வல்லாதிக்க சக்திகளை எதிர்த்து நின்ற தியாகதீபம் திலீபனின் தந்தை எவ்வளவு மனவுறுதி இருந்திருந்தால், தன் பிள்ளை சாவதற்காக காத்திருந்த ஒவ்வொரு நொடியும் அந்த மேடைக்கு அருகில் இருந்தருப்பார்? பிள்ளை செத்துக் கொண்டிருந்ததை விழி கரைய பார்த்துக் கொண்டிருப்பார்?

பூமி உயிருடன் இருக்கும் வரை எந்த தந்தையாலும் செய்ய முடியாத தியாகம் இது. மாவீரர்கள் மட்டும் அல்ல அவர்களைப் பெற்றவர்களும் தியாக வேள்வியில் தம்மை ஆகுதி ஆக்கியவர்கள் என்பதற்கு திரு இராசையா ஆசிரியர் ஒரு சாட்சியம். ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் அந்த தந்தையின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்? தன் மகன் செத்து விடுவானோ என்ற ஏக்கம் ஒருபுறம் கனன்று கொண்டிருக்கும். மறுபுறம் இந்திய அரசு எப்பிடியாவது பிள்ளையை காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருக்கும். நல்லூர் கந்தன் கைவிட மாட்டான் என்று நம்பிக்கை இருந்திருக்கும். அடிக்கடி முருகனை கையெடுத்து வணங்கி இருப்பார்.

தாய் இல்லாத நிலையிலும் தனி ஒருவனாக வளர்த்து மருத்துவபீட மாணவனாக உயர்நிலையை பெற வைத்த அந்த தந்தை இந்த தருணத்தை எவ்வாறு அனுபவத்திருப்பார்? இருந்தாலும் அவர் தன் கண்முன்னே பிள்ளை செத்துக்கொண்டிருந்ததை தாங்கிக் கொண்டிருந்தார்.

இந்து சமயப் பற்றும் தமிழ் மீதான பற்றுதலும் பண்ணிசைகளும், விபூதி சந்தனம் என்று சிறுவயதில் அமைதியாக வளர்ந்த பிள்ளை தீ ஏந்தி பெரும் போர் வீரனாக மாறியது யாரால்? இன்று தன் வயிற்றில் பசித் தீயை மூட்டிவிட்டு சாவுக்கே வீரம் உரைத்து படுத்திருந்தது யாரால்? என்பவை எல்லாம் எம் மீது வல்லாதிக்கங்களை கட்டவிழுத்து விட்டிருந்த எதிரிகளுக்கு புரிந்திருக்கும். அதனால் தான் அமைதியாக பெரு வீரனை சாகடித்தது இந்திய தேசம்.

நெஞ்சை உருக்கும் அந்த சந்தர்ப்பத்தை உருவாக்கிய இந்திய தேசத்தை நாம் என்னவென்று கூற? தமிழீழ விடியலுக்காக களம் கண்ட தமிழீழ விடுதலைப்புலிகளை முடக்கி விட வேண்டும் என்ற அப்போதைய சிங்களத்தின் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை இடையே யூலை 29, 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் என்று கூறப்பட்ட “இலங்கை இந்திய” ஒப்பந்தத்தை வைத்து இந்திய வல்லாதிக்கப்படை இலங்கைக்குள் அமைதிப்படை என்ற பெயரில் கால் வைத்தது.

இந்திய வல்லாதிக்கத்தின் கபடத்தை புரிந்து கொண்டார்கள் விடுதலைப்புலிகள். அதனால் தான் ஆயுதவழிப்போர் முறையில் யாரிடம் இருந்து தம்மை மேம்படுத்தினார்களோ அவர்களுக்கு எதிராகவே அவ்வாயுதத்தை திருப்பி அவர்களுடன் சண்டையிட முடிவெடுத்திருந்தது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் தலமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.

இக் காலகட்டத்தில் தான் பயங்கரவாதிகள், ஆயுதவிரும்பிகள் என விடுதலைப்புலிகளை குறிவைத்து சர்வதேசப் பரப்புரை ஒன்றை முன்னெடுக்கத் தொடங்கிய சிங்களத்துக்கு நாம் ஆயுதவிரும்பிகள் இல்லை என்பதை காட்ட வேண்டிய தேவை எழுந்தது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக தந்தை செல்வாவினால் மேற்கொள்ளப்பட்ட அறவழிப்போராட்டம் தோற்ற நிலையில் ஆயுதவழிப் போராட்டத்தை எம் மீது திணித்த சிங்கள அரசுக்கு எதிராக ஆயுதவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தாலும் அறவழியில் இருந்து நாம் இன்னும் வெளியில் போகவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையும் எழுந்த போது திலீபன் என்ற புனிதன் அதற்கு தயாராகினார்.

அந்த தருணத்தில் தான் புரட்சிக் கவிஞர் காசியானந்தன் தேசியத் தலைவரை சந்திக்க யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்போது,

“அண்ண இது தான் திலீபன். “

என அறிமுகப்படுத்தி அன்புக் கட்டளை ஒன்றையும் வழங்குகிறார். திலீபனோடு இணைந்து பணியாற்றுமாறு கட்டளையிட்ட தலைவர் தன் பணியில் மூழ்கி விடுகிறார். தியாக தீபம் திலீபனுடனான குறுகிய நாள் பயணத்தில் ஆற்றல்மிக்க ஒரு இளைஞனை தான் கண்டு கொண்டதாக குறிப்பிடுகிறார் கவிஞர் காசியானந்தன்.

இந்நிலையில்,
வவுனியாப் பகுதியில் நடந்த சண்டை ஒன்றில் வீரச்சாவடைந்த இரு போராளிகளின் வித்துடல்களை மக்களின் வணக்கத்துக்காக தாயக பிரதேசம் எங்கும் கொண்டு செல்லுமாறு திலீபன் பணிக்கிறார். அப்பணியை ஏற்றுக்கொண்டு தாயகம் எங்கும் பயணித்து மீண்ட காசியானந்தனுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அந்த தருணத்தில் தான் உண்ணாநிலைப் போராட்டத்துக்கான முடிவெடுக்கப்பட்டிருந்தது.

எங்கட விடுதலைப்போராட்டத்தின் அடுத்த நகர்வு ஒன்றாக இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் தார்ப்பரியங்கள் விளக்கப்பட்டு திலீபனின் உண்ணாவிரத்ததை ஆரம்பித்து வைக்க தலைவரால் பணிக்கப்படுகிறார் கவிஞர் காசியானந்தன். அப்போது கூட இது நடந்தால் திலீபனை இழந்து விடுவோம் என்று உள்மனம் கூறினாலும் இலட்சியப் பற்றில் விடாத கொள்கை கொண்ட திலீபனின் முடிவை மாற்ற யாராலும் முடியவில்லை.

உண்ணா நிலைப் போராட்டத்துக்கான ஏற்பாடுகள் நிறைவு கண்டன. 15 ஆம் நாள் புரட்டாதி 1987 ஆம் ஆண்டும் பிறந்தது. பிறந்திருக்கக் கூடாது என்று நினைக்கக் கூடிய கொடிய நாள் பிறந்தது. உண்ணாநிலைப் போருக்கு தயாராகி மேடையில் ஏற வந்தவரை இடை மறித்த தாய் ஒருத்தி வீரத்திலகமிட்டு அனுப்புகிறாள். இது திலீபனின் மனதில் இன்னும் அதிகமான பற்றுதலை ஏற்படுத்தியது. ஒருவேளை பெற்ற தாய் இருந்தருந்தால் கூட இவ்வாறு தான் திலகமிட்டு அனுப்பி இருப்பார். தந்தையைப் போலவே மேடையை சுற்றி சுற்றி வந்து தன் பிள்ளையை இந்தியா காப்பாற்றுமா என வேண்டியிருப்பார். ஆனாலும் திலீபனின் முடிவினை எதிர்க்கவோ தடுக்கவோ முயன்றிருக்க மாட்டார். ஏனெனில் அந்த வீரத்தாயின் வயிற்றில் பிறந்தவனே இவ்வாறான தியாகத்தின் உச்சமாக இருக்கும் போது எவ்வாறு தாய் மட்டும் கோழையாக இருக்க முடியும்? திலீபன் தன் தாயை நினைத்தாரோ என்னவோ புன்னகை புரிந்த படி திலகமிட்ட தாயையும் தன் மக்களையும் பார்க்கிறார்.

இந்தியாவுக்கு எதிராக 5 வகை கோரிக்கையை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்ட நீர்கூட அருந்தாத உண்ணாநிலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை அருகில் அமைக்கப்பட்ட மேடையில் வைத்து சர்வதேசத்துக்கு தெளிவு படுத்துகிறார்கள் பிரசாத் தலமையிலான போராளிகள். மக்களும் போராளிகளும் சுதந்திரப்பறவை பெண்களும் என மாறி மாறி மேடைகளில் கவிதைகளாகவும் பேச்சுக்களாகவும் தியாக தீபத்துக்கு இன்னும் உரமேற்றியும், வேண்டாம் அண்ணா இதை கைவிட்டு எம்மோடு உயிரோடு இரு அண்ணா என்றும், இந்தியத்தை கெஞ்சி மன்றாடியும், நல்லூரான் கந்தனை மன்றாடியும் என நிகழ்வுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன. எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இராசையா ஆசிரியரோ விழிகளில் இருந்து ஓடும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் மேடைக்கு அருகிலும், பின்னாலும் முன்னாலும் என்று அலைந்து கொண்டே இருக்கிறார். வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி போராளிகள் கொடுக்கும் உணவில் எப்போதாவது ஒரு தடவை கொஞ்சமாக உண்டார். தூக்கமில்லை. துவண்டு கொண்டருக்கும் தன் பிள்ளையை நினைத்து நினைத்து செய்வதறியாது இருந்தார்.

இந்திய அரசோ அல்லது படைகளோ தியாக தீபத்தை காப்பாற்றும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போய் இனி எதுவுமே நடக்கப்போவது இல்லை என்ற நிலைப்பாடு புரிந்த போது மெழுகுவர்த்தியாக உருகிக் கொண்டிருந்த அந்த உத்தமன் தனது உயிரை பசிப் போரில் ஆகுதியாக்கி விட்டிருந்தான். அப்போது மருத்துவர் பரிசோதித்துவிட்டு திலீபனின் பாதங்களை தொட்டு வணங்கிய போது தன் கண்முன்னே தான் பெற்றவன் வீரச்சாவடைந்ததை கண்ட அதி உச்ச வலியோடு பார்த்தீபனின் ( திலீபன்) தந்தை மேடைக்கு ஓடி வருகிறார். தன் மகன் கிடந்த கோலத்தை ஒவ்வொரு வினாடியாக பார்த்துக் கொண்டிருந்த தந்தையால் அந்தக் காட்சியை காண முடியவில்லை. இறுதிவரை மகனை இந்திய அரசு காப்பாற்றுவார்கள் என்று நம்பி இருந்த அவரின் நம்பிக்கையை உடைத்தெறிந்து துரோகம் இழைத்தது இந்திய வல்லாதிக்க அரசு.

இந்த நிலையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தனது பாதுகாப்பு போராளிகள் மற்றும் புரட்சிக் கவிஞர் காசியானந்தன் ஆகியோருடன் முகாம் ஒன்றில் இருந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். திலீபன் வீரச்சாவடைந்துவிட்டதாக தலைவருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. உண்ணா நிலைப் போராட்டத்தின் முடிவெடுக்கப்பட்ட நாளில் இருந்தே தியாக தீபம் திலீபனை நினைத்து வாடிக் கொண்டிருந்த தேசியத் தலைவரின் விழிகள் கண்ணீரை சொரிகிறது. எதற்கும் அஞ்சாத பெரு வீரனின் விழிகள் அன்று திலீபன் என்ற ஒற்றை புனிதத்துக்காக கலங்கி நின்றது.

மகனின் வித்துடல் தாங்கிய ஊர்தியோடு இறுதிவரை பயணித்த தந்தை தாங்க முடியாத வேதனைகளை மனதுக்குள் புதைத்து விட்டு வீரப் புதல்வனுக்காக வணக்கம் செலுத்துகிறார். இன்றும் எங்கள் மனங்களில் தியாக தீபம் திலீபனைப் போலவே அவரின் தந்தையும் நிலைத்து விட்டார். அவர் மட்டுமல்ல இந்திய தேசமும் தான்.

அவர் மட்டுமல்ல இந்திய தேசமும் தான்.

நன்றி புரட்சிக் கவிஞர் காசியானந்தன்.
இ.இ.கவிமகன்
19.09.201

அப்பா … கத்திக் கத்தி அழைக்கும் என் குரல் கேட்கவில்லையா…?

என் தந்தையின் வலி சுமந்த நினைவுகள் என் வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் பொக்கிசமாகின்றது இன்று. வரிப்புலியுடையில் சீறுகின்ற புலியாகி, சிங்களப்படையோடு பொருதிய பெரும் வீரன். அப்பா! என் தாய் உங்களைப் பற்றியும், உங்களின் உணர்வுகள் பற்றியும் எனக்கூட்டிய விடயங்களின் மூலம் உங்களின் ஈழப்பற்றை நான் உணர்ந்து கொண்டேன் அப்பா. கொட்டிடும் வெடி மழைக்குள்ளே அச்சம் இன்றி பணி புரிவீர்களாம்.

எப் பணியிருப்பினும் அப்பணி முடித்து என்னை பார்க்கவென்று ஓடி வருவீர்களாம்.

“ அண்ண செல்லடிக்கிறான் காலைல போங்கோவன் “

என்று தாங்கள் மறித்தாலும்

“மகன் பாவமடா “

என்று சொல்லி விட்டு வீடு வருவீர்களாம். உங்களோடு வாழ்ந்த உங்களின் நண்பர்கள் சொல்வார்கள்.

இரவு பன்னிரண்டு என்றாலும், என் முகம் பார்த்து முத்தம் ஒன்றை தந்து தான் திரும்பி பணிக்கு செல்வீர்களாம். அம்மா அடிக்கடி சொல்லுவா.

ஒட்டிசுட்டான் பகுதியை சிங்கள எதிரிகள் கைப்பற்றிய போது, களமுனையில் இருந்து வந்து, களமுனை உடையோடே எனக்கு புதுக்குடியிருப்பில் வைத்து ஏடு தொடக்கினீர்களாம். தொடக்கி குறுகிய நேரத்தில் மீண்டும் களமுனை நோக்கி சென்று விட்டீர்களாம். ஏனப்பா? என்னையும் தமிழீழத்தையும் இரு கண்களாகவா வைத்திருந்தீர்கள். அதனால் தான் இரண்டையும் நேசித்தீர்களோ?

வலைஞர்மடம் என்ற இடத்தில் பதுங்ககழிக்குள் என் அன்னையுடன் இருந்த போது, விளையாட்டு விமானம் ஒன்றை பறக்க விட்டு காட்டி விட்டு,
“என் மகனும் ஒரு நாள் தமிழீழ விமானியாவான் “என்று கூறினீர்களாம்.

முள்ளிவாய்க்காலில் முட்டை கிடைப்பது என்பது அரிது. அவ்வாறு கிடைத்த ஒரு முட்டையை எங்கோ இருந்து கொண்டோடி வந்து எனக்கு ஊட்டி விட்டு, மீண்டும் களம் நோக்கி சென்றதாக அம்மா கூறினார். இப்போதும் முட்டை உண்ணும் நேரங்களில் எல்லாம் உங்களின் நினைவு தான் அப்பா.

விளையாடும் போது உங்களின் ஏற்கனவே காயப்பட்டு வலியோடு இருந்த ஒற்றைக் கண்ணில் நான் தவறுதலாக குத்திய போது, வலி தாங்காமல் துடித்தாலும், என் மகனுக்காக நான் உயிரையும் குடுப்பேன் என்றீர்களாம். இப்போ எனக்காகவா நீங்கள் காணாமல் போனீர்கள்? எங்கே நீங்கள் என்று தினம் தினம் ஏங்கும் என்னை தவிக்க விட்டு எதற்காக போனீர்கள்.?

“ விடுதலை வீரனின் இறுதி பேச்சு அவன் மூச்சு இருக்கும் வரை தான்” என்பதைப் போலவே உங்களின் பயணமும் தமிழீழம் நோக்கியே இருக்கும் என்பீர்களாம் அப்பா. எம்மினம் சுற்றி நிற்கும் சிங்கள காடையர்களால் சாம்பல் மேடானாலும், மகனை காப்பாற்று என்பீர்களாம். எப்பிடியாவது அவனைக் காப்பாற்றி வளர்த்து எங்கள் கனவுகளை ஊட்டி விடு என்று நீங்கள் சொன்னீர்களாம். அதற்காகவே உரிமையின் உணர்வுகளை ஊட்டி என் தாய் என்னை வளர்க்கின்றா.

அப்பா பத்து ஆண்டுகள் கடந்து செல்கின்றன. உங்களுடன் வாழ்ந்த இரண்டு வருடகாலம் போல மீண்டும் உங்களின் வசந்தம் எனக்கு வேண்டும் அப்பா.

அப்பா நீங்கள் என்னை உப்பு மூட்டை தூக்கிய நினைவுகள், பசுமரத்தாணி போல பசுமையாக கிடக்குதப்பா. உங்கள் மார்பில் ஏறி தவன்று விளையாடிய போது எனக்குத் தெரியவில்லை, நீங்கள் என்னை இப்படி தவிக்க விடுவீர்கள் என்று. தெரிந்திருந்தால் சிலவேளை உங்கள் கூடவே வந்திருப்போம் நானும் என் தாயும். அப்பா,
முள்ளிவாய்க்காலில் எனக்கு காய்ச்சல் வந்து துடித்த போது கண்ணில் நீர் வடிய தூக்கிக் கொண்டு ஓடிச் சென்று மருந்தெடுத்து தந்துவிட்டு களம் நோக்கி சென்ற நீங்கள் எவ்வாறு வருந்தி இருப்பீர்கள்…? ஆனாலும் தளராது களத்தில் நின்ற அந்த பொழுதுகளை எனக்கு அம்மாவின் கண்ணீர் அடிக்கடி நினைவூட்டுகிறது அப்பா. இறுதியாக என்னை விட்டு நீங்கள் பிரியும் போது உங்களின் மனம் எந்த நிலையில் இருந்திருக்கும் அப்பா? மீண்டும் என்னிடம் வருவீர்கள் என்று தானே எண்ணி இருப்பீர்கள்? ஆனால் எங்கே அப்பா நீங்கள் மீண்டும் வராது எங்கே போனீர்கள்…? காத்திருக்க வைத்துவிட்டு?

கூட இருக்கும் நண்பர்கள் தந்தையரோடு பாசம் காட்டி பழகும் போதும், தந்தைமார் பிள்ளைகளோடு சேர்ந்து நடந்து வரும் போதும் வெற்று வானத்தை பார்த்தபடி உங்களின் முகத்தினைத் தான் தேடுகிறேன். என் அப்பா இருந்திருந்தால் அவர் கைகளை கோர்த்தபடி, வானத்தில் மினுமினுக்கும் நட்சத்திரங்களை எண்ணியபடி, மழலை மொழியில் அப்பாவை மகிழ்வித்தபடி, ஊஞ்சலாடும் தூக்கணாங்குருவிகளின் இசை போல தந்தை அன்பை நுகர்ந்தபடி நானும் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் என்ற இயல்பான ஆசையை மட்டும், வெறுமையான வானத்தில் அங்கங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்களின் ஒற்றை வெளிச்சத்துக்கு சொன்ன படி காலத்தை போக்குகிறேன் நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு…

இன்று உங்களின் பிறந்தநாள் அப்பா. இன்று என்னவோ எல்லாம் எழுத துடிக்கிறது. ஆனால் உங்களை இழந்து விட்ட என் மனமோ கவலையில் தடுமாறுகிறது. இரண்டு வருடங்கள் மட்டுமே கிடைத்த உங்களின் அணைப்புடனான மகிழ்வை மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்று ஏங்குகிறது மனது. அப்பா என்று கதைக்க அன்று என்னால் முடியவில்லை. இன்று அழைத்து அழைத்து அழுகின்றேன் யாருக்கும் அது கேட்கவில்லை. அழுகின்ற என் குரலை செவிகளில் வாங்கி, உணர்வுகளில் புதைந்து கிடக்கும் கனவுகளோடு என்னிடம் நீங்கள் வருவீர்கள் என்று முள்ளிவாய்க்காலில் தொலைத்த நாளில் இருந்து தேடுகிறேன் அப்பா.

மீண்டும் ஓர் பிறப்பு வேண்டும். அதிலும் உன் மகனாய் பிறத்தல் வேண்டும். நாள் முழுக்க உன்னோடு வாழ வேண்டும். இப்பிறவியில் தொலைத்தவற்றை அதில் என்றாலும் நான் மீண்டும் பெற்று மகிழ வேண்டும். காத்திருக்கின்றேன் அப்பா…

வலி மிகுந்த உன் மகன் இவ் வரிகளோடு…

நம்மாலும் கைவிடப்பட்ட அரசியல் கைதிகள் !

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து, சர்வதேச ஊடகம் வெளியிட்ட விபரணம் ஒன்றில் செல்லப்பிள்ளை மகேந்திரன் குறித்து, தெரிவிக்கப்பட்ட விடயங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. மகேந்திரனுக்கு திருமணம் ஆகி ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக் கழகத்தை அண்மித்த பகுதியில் நடந்த சுற்றி வளைப்பொன்றில், அவர் கைது செய்யப்பட்டார். 1993 ஆம் ஆண்டில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இன்றைக்கு 26 வருடங்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து சில காலம் இயங்கிய மகேந்திரன், இயக்கத்தை விட்டு, விலகி தனிப்பட்ட வாழ்வில் இருந்தபோதே கைதாகியுள்ளார்.

இவருக்கு எதிராக அப்போது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்துடன் 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இராணுவத்தினருடன் இணைந்து துரோகமிழைத்த ஆள்காட்டி ஒருவரே மகேந்திரனை காட்டிக் கொடுத்திருப்பதாக அழுதுலர்ந்து சிவந்த கண்களுடன் அவரது மருமகள் மெரீனா அந்த ஊடகத்தில் குறிப்பிடுகிறார்.

இப்போது ஆட்காட்டிகள் எல்லோரும் கைதிகளின் விடுதலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். போராளிகளைக் காட்டிக் கொடுத்த டக்ளஸ் தேவானந்தாக்களும் பாராளுமன்றத்தில் முன்னாள் போராளிகளின் தற்போதைய வாழ்க்கை குறித்து அழுது கண்ணீர் வடிக்கிறார்கள்.

உண்மையில் இதுவொரு விசித்திர காலம். ஆட்காட்டிகள் ஏன் தலையை ஆட்டினார்கள் என்று தெரியவில்லை. எத்தனையோ அப்பாவிகள் அன்றைக்கு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள். சுகயீனமான அம்மாவுக்கு மாத்திரைகள் வாங்கச் சென்ற மகனை, இராணுவத்தினர் குண்டு வைத்திருந்தான் என கைது செய்தனர். மட்டக்களப்பில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர், வீடு திரும்பவில்லை.

இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று அம்மாவுக்கு தகவல் கிடைத்தது. திருமணம் செய்த எல்லா ஏற்பாடுகளும் நடந்த நிலையில் திடீரென பிள்ளை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். எத்தனையோ தாய்மாரின் இருதயங்கள் நொருங்கி உடைந்து போயின. எத்தனை மனைவிமாரின் நெஞ்சங்கள் வெடித்துப்போயின. எத்தனை குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்கள் உருகிவிட்டன. எமது தெருக்களில் எத்தனை நாட்கள், தாய்மார்கள் போராட்டம் நடாத்தியிருக்கிறார்கள். வீதிகளில் விழுந்து புரண்டழுது தமது பிள்ளைகளை விடுதலை செய்யக் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் அத்துலிய இரத்தின தேரர் கண்டியில் போராட்டம் நடத்திய போதே சிங்கள தேசம் மாத்திரமல்ல, சிங்கள அரசே ஆடியது. இரத்தின தேரரின் கோரிக்கை சிங்களத்தின் கோரிக்கையானது. ஆனால் எமது தாய்மார்களும் குழந்தைகளும் பெண்களும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கச் சொல்லி எத்தனை போராட்டங்களை செய்துவிட்டனர். ஆனந்த சுதாகரனின் மனைவி, அவரை தேடித் தேடியே நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்.

கதைகளிலும் காவியங்களிலும் கேட்டதுபோலொரு மரணம். சிங்களமும் அசையவில்லை. நாமும் அசையவில்லை. அவரது பிஞ்சுக் குழந்தைகள் சிறைச்சாலை வண்டியில் ஏறிய கொடூரக் காட்சியை பார்த்து உலகத் தமிழர்களே கண்ணீர் விட்டனர். சிங்கள தேசத்திற்கு இரக்கம் வரவே இல்லை. தமது தந்தையை விடுவிக்குமாறு தாயை இழந்த குழந்தைகள் கோரிக்கை விடுத்தனர். 2018 சித்திரை வருடப் பிறப்பில் தந்தை வீட்டுக்கு வருவார் என்று சொல்லி அனுப்பட்டார்கள் அந்தக் குழந்தைகள்.

இன்றைக்கு ஒரு வருடமும் கடந்து விட்டது. இன்னும் மைத்திரியின் நெஞ்சம் இரங்கவில்லை. இன்னும் ரணிலின் இருதயத்தில் ஈரம் வரவில்லை. இதுவே ஓர் சிங்களக் குழந்தை எனில், சிங்கள அரசு தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பதுபோல் துடித்திருக்கும். தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் ஈழத் தமிழ் மக்கள் என்ற பாராமுகம் ஒருபுறம். மற்றைய புறத்தில் அவர்களை புலி என்று கூறி அரசியல் செய்கிற கொடுமையும் நடக்கிறது. மைத்திரி புலிகளை விடுவிக்கப் பார்க்கிறார் என்று மகிந்த ராஜபக்ச பிரசாரம் செய்கிறார். மறுபறுத்தில் தமிழ் அரசியல் கைதிகளை – பயங்கரவாதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது என்று மைத்திரிபால சிறிசேன சொல்லி அரசியல் நடத்துகிறார்.

மகிந்த என்ற கொடுங்கோலனின் அரசாட்சி மிகவும் கொடுமையானது என்றும் சர்வாதிகாரமானது என்றும் இந்த உலகமே அறியும். எனினும் தனது அரசியலுக்காகவும் சர்வதேச அரசியலை சமாளிக்கவும் 12ஆயிரம் விடுதலைப் புலிகளை விடுவித்த மகிந்தவைக் காட்டிலும் மைத்திரிபால சிறிசேன – ரணில் அரசாங்கம் கொடுமையானது என்பதை புரிந்துகொள்ளுகின்ற இடம் இதுதான். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பொறுப்பற்ற விதத்திலும் பேரினவாத அரசியலுக்கு தீனி போடுகிற விதத்திலும் பேசி, அப்பாவிகளை தண்டிக்கும் இந்த அரசு எத்தகைய கொடுமையான அரசாக இருக்க வேண்டும்?

கருணா அம்மானும், கேபியும் வெளியில் உள்ள நிலையில், அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரம் ஏன் சிறையிருக்க வேண்டும்? விடுதலைப் புலிகளுக்கு தண்ணீர் கொடுத்தவர்களும் அப்பாவிகளும் ஏன் அநியாயமாக தண்டிக்கப்பட வேண்டும். போரில் விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு என்று அரசு அறிவித்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு என்று கூறி தடுப்பில் வைத்திருந்து விடுவித்ததுபோல அவர்களையும் விடுவித்திருக்க வேண்டுமல்லவா? அப்படியில்லாமல் இவர்களை மாத்திரம், ஏன் வஞ்சிக்க வேண்டும்? இதனால் எத்தனை மக்கள், எத்தனை குடும்பங்கள் கண்ணீர் வடிக்கின்றன?

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கொழும்பு மகசீன் சிறைச்சாலை சென்றுள்ளார். அங்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 95 சிறைக்கைதிகள் உள்ளனர். அவர்களில் இரண்டு பேர் ஆயுள் கைதிகள். தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில், தம்மை போராட்டங்களை கைவிடுமாறு கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உள்ளிட்டவர்கள் பின்னர் அங்கு வருவதில்லை என்றும் தம்மை கவனிப்பதில்லை என்றும் தமது விடுதலை தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமிழ் அரசியல் கைதிகள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், பாரிய உண்ணாவிரதப் போராட்டங்கள் சிறைகளில் முன்னெடுக்கப் பட்டது. அப்போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், கால அவகாசத்தை வழங்கி கைதிகளின்போராட்டத்தை முடிவுபடுத்தி வைத்தார். எனினும் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட நெருக்கடி ஒன்று தீர்த்து வைக்கப்பட்டதே தவிர, தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலையும் கிடைக்கவில்லை. நீதியும் கிடைக்கவில்லை. வழமை போன்று கள்ள மௌனத்தால் தமிழ் அரசியல் கைதிகளையும் தமிழ் மக்களையும் மைத்திரி ஏமாற்றியுள்ளார். இங்கும் சாதுரியமற்ற செயற்பாடுகள் அவர்களை தொடர்ந்து சிறையிலடைத்தது.

இன்று இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் தமிழ் தலைமைகள், அரசியல் கைதிகளின் விடுதலையையும் ஒரு முக்கிய நிபந்தனையாக முன்வைத்து அவர்களின் விடுதலையை சாத்தியப்படுத்தியிருக்க வேண்டும். மகிந்த ராஜபக்சவின் காலத்தைப் போலவே பாராளுமன்றத்தில் நின்று அரசியல் கைதிகளின் விபரத்தைக் கூறி, அரசை இறைஞ்சுகின்ற படலம் இன்னும் எதுவரையில் தொடரப் போகின்றது? அதற்கு ஏன் அரசிற்கு ஆதரவளிக்க வேண்டும்? ஒன்றில் அரசுக்கு ஆதரவு கொடுத்து, இவற்றை சாதிக்க வேண்டும். அல்லது அரசை எதிர்த்து சர்வதேச அரங்கில் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதன் மனித உரிமை பின்னணி குறித்து எடுத்துரைக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் பெரும் மனித உரிமை மீறலானது என்று மங்கள சமர வீர இதே அரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது ஐ.நாவில் கூறினார்.

அதே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்று தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீதியான சர்வதேச விசாரணையற்ற நிலையில், பயங்கரவாத சட்டங்களும் மனித உரிமை மீறல்களும் அரசில் கைதிகளின் விடுதலை மறுப்பும் தொடர்கின்ற சூழலில் இலங்கை அரசுக்கு கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுப்பது தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைவாசத்தை நாமே பரிசளிப்பதேயாகும். அரசால் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாமும் கைவிட்டிருக்கிறோம் என்பதை தான் இந்த விசித்திரகாலம்
உணர்த்துகிறது

– தீபச்செல்வன்

எந்த அரசியல்வாதியும் அக்கறையுடன் செயற்படவில்லை – காணாமல் ஆக்கப்படோரின் உறவுகள்

எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் உண்ணாவிரதம் இருக்கவுமில்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன் கலந்துகொள்ளவுமில்லை என முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்றுடன் (27) 842 ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.இந்நிலையில் நேற்றையதினம் (26.06.19 ) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள் .

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி கருத்து தெரிவிக்கையில் ,

இன்னும் சில நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு நடைபெற்றவிருக்கின்றது . கடந்த 40 ஆவது அமர்விலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை நாங்கள் இந்த போராட்டத்தினை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை அனைவரும் உணரவேண்டும் .

அந்தவகையில் எதிர்வரும் 30 .06 ஞாயிற்று கிழமை அன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தினை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடாத்தவுள்ளோம் . அன்றையதினம் காலை 10 மணிக்கு நடைபெறும் கவனயீர்ப்பில் எமக்காக குரல்கொடுக்கக்கூடிய அனைத்து தரப்பினரையும் ஆதரவுக்காக வேண்டிநிற்கின்றோம் .அனைவரும் வருகைதந்து போராட்டத்தில் பங்குபற்றி எமக்கான நீதியை பெற்றுத்தருவத்துக்கு குரல்கொடுக்குமாறு வேண்டுகின்றோம் .

நாங்கள் இன்று பத்து ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி வருகின்றோம். எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகழும் உண்ணாவிரம் இருக்கவும் இல்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன் கலந்துகொள்ளவும் இல்லை எங்களைப்பற்றி எடுத்து கதைப்பதற்கு கூட நாதியற்றவர்களாக நாம் இருக்கின்றோம்.

இந்நிலையில், அண்மையில் கல்முனை பிரதேசத்தில் பிரதேச செயலக உயர்வுக்காக யாராரோ போராடி இருக்கின்றார்கள். இந்த நிலையில் எங்கள் அரசியல் பிரமுகர்கள் அந்த பிரச்சனையினை கையில் எடுத்து பேசினார்கள்.பிரதமருடன் பேசி அவர் சொன்ன தீர்வை பெற்றுக்கொண்டு கல்முனைக்கு ஓடினார்கள் அதேபோன்று ஏன் 10 ஆண்டுகளாக நீதியை கோரியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டத்தினையும் மேற்கொண்டுவரும் எமக்காகவும் எமது போராட்டத்துக்காகவும் இதே பிரதமருடனும் அரசுடனும் பேசி போராட்டத்திற்கான நீதியினை அரசிடம் இருந்து ஒரு சின்ன பதிலாவது பெற்றுக்கொண்டு எம்மிடம் எமது பிரதிநிதிகள் வரவில்லை ?? எமது உறவுகள் வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளார்கள்,படையினரிடம் ஒப்படைத்துள்ளோம்,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று பலதரப்பட்ட வித்தல் எங்கள் உறவுகள் காணப்படுகின்றார்கள்.

இவை அனைத்தும் எங்கள் அரசியல் தலைமைகளுக்கு தெரியும் அவர்கள் ஒரு சின்ன ஆறுதல் கூட எங்களுக்கு கூறவில்லை ஆனால் அவர்கள் சொல்கின்றார்கள் அதற்காகத்தான் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் கொண்டுவந்துள்ளோம் என்று சொல்கின்றார்கள் அரசின் நிகழ்ச்சி நிரலில் வந்த அந்த அலுவலகம் எம்மை ஏமாற்றுவதற்க்காகவும் உலகை ஏமாற்றுவதற்க்காகவும் கொண்டுவரப்பட்டது அதற்குள் எங்களை கொண்டுசென்று திணிக்ககூடாது.

உண்மையாக எங்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் எம்மையும் கவனியுங்கள் எங்கள் வலியுடனும்,வேதனையுடனும் இதனை தெரியப்படுத்துகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போராளிகளின் பகிரப்படாத பக்கம் -17 லெப்டினன் கேணல் சிவம்.

பகிரப்படாத பக்கம் -17 பல வருடங்கள் கழித்து கொடுத்த மகிழ்வை பறித்து சென்ற தமிழீழ காவலன்.

லெப்டினன் கேணல் சிவம்.


தென்னை வளத்தால் மேன்மை கொண்டிருக்கும் தென்மராட்சியின் ஒரு கிராமம் அது. 2000 ஆம் ஆண்டின் பங்குனி மாதத்தின் 26 ஆம் நாள் குடாரப்புப் பிரதேசத்தில் நடந்த மாபெரும் தரையிறக்கத்தின் தொடர் வெற்றிகளால் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பின் மீண்டும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது அந்த கிராமம். அக் கிராமத்தில் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்ட மக்களின் ஒரு தொகுதியினர் வன்னிக்கு நகர்த்தப்படாமல் இருந்தார்கள். அவ்வாறான நிலையில் பூநகரி ஊடாக நகர்ந்து வந்த போராளி ஒருவரால் வீட்டுக் கதவு ஒன்று தட்டப் படுகிறது. திடீர் என்று தட்டப்பட்ட ஒரு வீட்டின் கதவினைத் திறந்த இளம் பெண் ஒருத்தி தனது கண் முன்னே நின்ற போராளியைக் கண்டு எதையும் பேச முடியாதவளாக வாய் மூடி நின்றாள்.

அவள் உடல், உயிர், ஆவி அனைத்தும் ஒடுங்கிப் போகும் அளவுக்கு மகிழ்ச்சி பொங்கி பிரவாகித்தது. எதிர்பார்த்து நீண்ட காலமாக காத்திருந்த அவளது உயிர் எதிர்பார்க்காத நேரத்தில் கண்முன்னே வந்தி நின்றதை அவளால் நம்ப முடியவில்லை. கிட்டத் தட்ட 10 வருடங்களுக்கு மேலான காத்திருப்பு. கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கம். அனைத்தையும் தாண்டி இன்று கண் முன்னே கிடைக்கும் என்று பதிலளித்தபடி நிற்கிறது அவளின் உயிர்.

அவரும் அப்படித் தான் கிட்டத்தட்ட 1990 ( சரியாக ஆண்டு நினைவில்லை) ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் வடமராட்சிப் பகுதியில் இந்தியத்துக்கு எதிராக போராடிய குறிப்பிட்ட சில போராளிகளுள் அவரும் ஒருவர். இந்திய இராணுவத்தின் தாக்குதல் ஒன்றில் கால் தொடையில் காயப்பட்டு படகு மூலமாக இந்தியாவுக்கு சிசிக்கைக்காக செல்கிறார். அங்கே உடைந்து கிடந்த தொடை எலும்புக்கான சிகிச்சையை தமிழகத்தின் ஈழ உணர்வாளர்கள் செய்கிறார்கள். கடுமையான முயற்சியின் பின் அவரின் கால் துண்டாக்கப்படாமல், எலும்பு சீரமைக்கப்படுகிறது. உண்மையில் அக்காலம் இந்தியாவில் பல சிரமங்களுடன் தான் இச்சிகிச்சைகளை தமிழின உணர்வாளர்கள் செய்தார்கள். ஏனெனில் யார் இடத்தில் பயிற்சிகளைப் பெற்று எம்மை மெருகேற்றினமோ? அவர்களுக்கெதிரான சண்டையில் காயப்பட்ட போராளியை அவர்களின் இடத்தில் வைத்து காப்பாற்றுவது என்பது எவ்வளவு கடுமையான சிக்கல்களை உருவாக்கும் என்பது வெளிப்படையானது.

இவ்வாறான நிலையில் சிகிச்சை முடிந்து கொஞ்சம் உடல்நிலை தேறி இருந்தவரை தமிழக காவல்துறை கைது செய்யது வேலூர் வேறு சில போராளிகளுடன் சேர்த்து அடைத்தது. போராளிகளால் சிவம் அண்ணை என்று அன்பாக அழைக்கப்படும் அப்போராளியின் சண்டை முறைகள் சொற்களில் சொல்ல முடியாத வீரம் செறிந்தவை. அதனால் சிறைக்குள் இருந்த போதிலும் கட்டுக்கடங்காத இனவுணர்வை தன் மனதுக்குள் வளர்த்து தன்னைப் புடம் போட்டுக் கொண்டவர்.

பல ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தியாவின் வேலூர் சிறையில் இருந்து சிறையுடைத்துத் தப்பித்து தாயகம் வந்து சேர்ந்தார். அப்போது உண்மையில் எமது விடுதலை இயக்கம் பல பரினாம வளர்ச்சிகளை தன்னகத்தே கொண்டு வானம் தொட்டு நின்றது. இனம் மானம் குன்றாமலும், விடுதலை பெற வேண்டும் என்ற வீச்சு குறையாமலும் சிறையில் இருந்து மீண்டு வந்த சிவம் அவர்களை விடுதலைப்புலிகளின் சண்டைக்கான வாகனப்பகுதி தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கிறது.

நெடுங்கேணி பிரதேச வாகனப்பகுதிப் பொறுப்பாளராக இயங்கத் தொடங்கிய அந்த மூத்த போராளி தன்னுடைய பணியில் கொஞ்சமும் தளர்ந்ததில்லை. சண்டை அணிகளுக்கு மிக முக்கியமான பணியாக இருந்தவை காயப்படும் போராளிகளை பின்நகர்த்துவது அல்லது வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களை பின்நகர்த்துவது. அதற்காக நிதிப்பிரிவின் கீழ் இயங்கி வந்த வாகனப்பகுதியே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. அதை விட FDL என்று சொல்லப்படுகின்ற எல்லை வேலியில் காவல் காக்கும் போராளிகளுக்கான உணவு வழங்கலையும் அவர்களே செய்து வந்தார்கள். அதில் இவ்வாறான இரு பெரும் பணிகளை தமிழீழத்தின் எல்லை வேலிகள் அனைத்திலும் வாகனப்பகுதிப் போராளிகள் செய்து வந்தார்கள். அவர்களில் ஒரு பகுதிப் பொறுப்பாளராகவே சிவம் அவர்களும் இயங்கினார்.

இந்த நெடுங்கேணிப் பிரதேச எல்லை வேலியில், சோதியா படையணியின் ஒரு தொகுதிப் போராளிகள், தளபதி லோரன்ஸ் தலமையில் சிறுத்தை படையணியின் ஆண் பெண் அணிகள், தளபதி லெப் கேணல் ஸ்ரான்லி தலமையில் ஜெயந்தன் படையணியின் ஒரு தொகுதி அணி ஆகியன தரித்து நின்றன. இவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் பால்ராஜ் இருந்தார். இக் களமுனை எல்லையை மிகவும் இறுக்கமாக வைத்திருக்க வேண்டிய தேவை எழுந்தது. ஏனெனில் அப்போது இருந்த எல்லை வேலியை இராணுவம் உடைத்து முன்னேறுமாக இருந்தால் முள்ளியவளை, முல்லைத்தீவு என்பவற்றை இலகுவாக கைப்பற்றி விடுவான் எதிரி. அதனால் பல வியூகங்களைக் கொண்டு நிமிர்ந்து நின்றது அக் களமுனை.

அப்போது இத்திமடு பகுதியில் பிரதான மருத்துவநிலையை போராளி மருத்துவர்கள் அமைத்திருந்தார்கள். அதில் மருத்துவர் தணிகை, மருத்துவர் பௌலின், மருத்துவப் போராளி மாறன், உதவி மருத்துவர் தில்லை, இம்ரான் பாண்டியன் படையணியின் மருத்துவப் போராளிகள் இருவர், மருத்துவப் போராளி தேவிகா ஆகியோர் பணியில் இருக்கின்றனர்.https://eelamaravar.files.wordpress.com/2010/09/lt-col-sivam.jpg

அம் மருத்துவ நிலை ( இம் மருத்துவ நிலை மட்டுமல்ல பெரும்பாலும் எல்லா இடமும் இதே நிலை தான்) 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும் இடர் ஒன்றை சந்தித்தது.

அக்காலப்பகுதியில் வன்னியில் பெரும் தொற்று நோய்களாக விளங்கிய மலேரியா (Malaria) , வட்டக்கடி (Ringworm) , நெருப்புக்காச்சல் (Typhoid ), செங்கண்மாரி (Jaundice ), சொறி சிரங்கு( Scabies ) போன்ற தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்திருந்தது. இதனால் மக்கள் மட்டுமல்ல பல நூறு போராளிகளும் அடிக்கடி பாதிக்கப் பட்டார்கள்.

இதில் குறிப்பிட்ட அனைத்தும் தொற்று நோய்களாலும் பல இடர்களை சந்தித்தார்கள் போராளிகள். இதில் வட்டக்கடி என்று சொல்லப்படுவது ஒரு தோல் வருத்தம். அவ்வருத்தம் உடனடியாக பரவும் அபாயம் நிறைந்தது. அதுவும் களமுனை எல்லைகளில் நிற்கும் போராளிகளுக்கு பரவும் வேகம் அதிகரித்திருந்தது. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மிக முக்கிய காரணமாக எல்லை வேலிகளில் தூய்மையை பேணுவதில் எழும் சிக்கல்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

குளிப்பதற்கோ அல்லது உடை மாற்றுவதற்கோ ஒழுங்கான நேர அட்டவனை கிடைப்பதில்லை. உறக்கமோ உணவோ சரியாக கிடைப்பதில்லை. அவ்வாறு இருக்கும் எல்லை வேலிகளில் வாரத்துக்கு ஓர் இரு முறைகள் தான் குளிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். இவ்வாறு இருக்கும் நிலையில், வட்டக்கடி பரவுதலை தடுக்க முடியாத நிலை மருத்துவர்களுக்கு எழுந்தது. ஆண் போராளிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவது பெண் போராளிகளே. ஏனெனில் அவர்களின் களமுனை வாழ்க்கை என்பது வார்த்தைகளால் கூற முடியாதது. வளங்கல் பிரிவால் கொடுக்கப்பட்ட மாற்றுடையை சண்டைகளினால் இழந்து ஒற்றை உடையோடு காவல் இருக்கும் அவர்களுக்கு மாற்றுடை வரும் வரை உடை மாற்றுவது என்பது வினாக்குறியே. இவ்வாறு களமுனைகளில் இருந்தவர்களுக்கு தொற்று நோயின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்து பார்க்க முடியுமா? ஆனாலும் லெப் கேணல் சிவம் போன்ற போராளிகளால் அவர்கள் நலமடைந்து வாழ்ந்ததை மறுக்கவோ மறக்கவோ முடியாது.

பெரும்பாலான போராளிகள் இந்த தோல் நோய் தொற்று ஏற்பட்டவர்களை தனித்துவமாக சிகிச்சை வழங்க வேண்டிய நிலைக்கு வந்திருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்துப்படும் மாத்திரையான GRISOVIN பயங்கர வலுவான காரணத்தால் பசுப்பாலுடன் சேர்த்தே அம் மருந்தை உட்கொள்ள வேண்டி இருந்தது.

அதைப் போலவே மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்ட போராளிகளையும் தனிமைப்படுத்த வேண்டி வந்தது. அவர்களுக்கு சத்துணவுகளை கொடுக்க வேண்டி நிலை வந்தது. ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மாத்திரைகளான Chloroquine, Primaquine என்பனவும் வலுவானவையாக இருந்தன. அதனால் அவ் வலுவான மாத்திரைகளை தாங்கும் சக்தியை அவர்களின் உடல் கொண்டிருக்க வேண்டி இருந்தது.

இவ்வாறான நிலையில், அக்காலத்தில் உணவு வழங்கலை செய்வதே பிரச்சனையாக இருந்தது. ஒரு நெகிழ்வுப் பையில் ( Shopping Bag) மூன்று பேருக்கான சோறும் கத்தரிக்காய் கறியும் தான் பெரும்பாலும் கிடைக்கும். அதுவும் சில வேளைகளில் சாப்பிட முடியாத நிலையில் களமுனை அதிர்ந்து கொண்டிருக்கும். இப்படியான நேரத்திலும் இராணுவ மருத்துவமனைகளில் விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு பால் முட்டை மற்றும் இறைச்சி போன்ற சத்துணவுகள் வழங்கப்பட்டு வந்தாலும், முன்னணி நிலைக்கு வழங்குவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. அதனால் மருத்துவர்களுக்கு அம் மருந்தைக் கொடுப்பதில் சிக்கல்கள் நிறைந்திருந்தது.

அந்த நேரத்தில் திடீர் என்று பெரிய பரல்களில். பசுப்பாலை கொண்டு வந்து காச்சி அவற்றை மருத்துவ நிலைகளுக்கு வழங்குவார்.

கிரிசோவின் குடிக்கிறதென்றா பால் வேணுமல்ல இத பெடியளுக்கு குடுங்கோ என்பார். அல்லது திடீர் என்று காட்டு மிருகங்களை வேட்டையாடி அவற்றை உணவாக்கி அப் போராளிகளுக்கு வழங்குவார்.

அப்போது,
“அண்ண எப்பிடியண்ண தெரியும் இந்த மாத்திரைக்கு பால் கட்டாயம் தேவை என்று? “

போராளி மருத்துவர் வினவுகிறார்.

டொக்டர் இப்பத் தான் மருத்துவப்பிரிவு, உணவுப்பிரிவு, வாகனப்பிரிவு, அரசியல்துறை, நிதி, நிர்வாகம் எல்லாம் தனித்தனி அலகுகளாக பிரிக்கப்பட்டு நிர்வாகம் இயங்குகிறது. எங்கட காலத்தில நாங்கள் தான் டொக்டர், நாங்கள் தான் இராணுவம், நாங்கள் தான் அரசியல். ஆக மொத்தத்தில் எல்லாமே செய்ய வேண்டியவர்களாக இருந்தோம். அதனால் தான் இவ்வாறான செயற்பாடுகளை பட்டறிவால் அறிந்து கொண்டோம். என்கிறார்

உண்மையில் எமது போராளிகளை தேசியத்தலைவர் அவ்வாறு தான் வளர்த்தார். அனைத்தையும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரது எண்ணம். சில போராளிகள் துறை சார்ந்த சிறப்பு வல்லுனர்களாக வளர்க்கப்பட்டாலும் அத்துறை சாராதவர்களுக்கும் அது பற்றிய பட்டறிவு நிட்சயமாக கொடுக்கப்பட்டிருக்கும். இது நியமானதே. இது இவ்வாறு இருக்க உணவில் இப்போதெல்லாம் அடிக்கடி காட்டு விலங்குகளின் இறைச்சி அதிகமாக சேர்க்கப்பட்டதன் காரணத்தையும் வினவுகிறார் மருத்துவர்.

அப்போது புத்தம் புதிய இரட்டை குழல் சொட்கன் (Double Barrel Shotgun) என்ற வகை ஆயுதத்தை எடுத்துக் காட்டி லீமா தந்தவர். அவருக்கு அண்ணை பிரத்தியேகமாக கொடுத்தவராம் அதை எனக்கு தந்தவர். இது தான் வேட்டைக்கு உதவுது. அவர் என்னை மதிப்பளிக்கத் தந்த இந்த ரைபிள் பெடியளுக்கு சாப்பாட்டுக்கு உதவுது என்ற படி புன்னகைக்கிறார் மூத்த போராளி சிவம். நகைச்சுவை உணர்வு மிக்க அவர் போராளிகளையும் மக்களையும் எப்பவும் சிரிக்க வைத்து மகிழ்வதைப் போல அவர்கள் தேவையை அறிந்து அதை நிவர்த்தி செய்தும் மகிழ்விப்பார்.

இவ்வாறாக வாகனப்பகுதி பொறுப்புநிலைப் போராளியாக வாழ்ந்த மூத்த போராளி சிவம் அவர்களின் நெஞ்சத்துள் குடி கொண்டிருந்த சண்டை ஆர்வம் தனது பொறுப்பாளரிடம் சண்டைக்கு செல்வதற்கான அனுமதிக்கு அடம்பிடிக்க வைக்கிறது. அனுமதி கிடைத்து சண்டையணிக்கு செல்கிறார். பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் தலமையிலான சண்டையணி ஒன்றின் பகுதித் தளபதியாக வட போர்முனையை நோக்கி செல்கிறார். தனது நுன்னறிவுப் பார்வையால் சண்டைக் களங்களை அளவிடத் தொடங்கினார்.

அவரது சண்டையணி சிறப்பாக செயற்படத் தொடங்கிய காலப்பகுதியில், குடாரப்பு தரையிறக்கம், அனையிறவு படைமுகாம் மீதான முற்றுகை மற்றும் யாழ்ப்பாணத்தில் செறிந்திருந்த சிங்களப்படைகளை முற்றுகையிட்டு முடக்குவது போன்ற பெரும் இலக்குகளுடன் பல பகுதிகளூடாக பல படையணிகள் களம் இறங்கின. இந்த சந்தர்ப்பத்தில், பூநகரி ஊடாக தனங்கிளப்பு சென்று அதனூடாக மிருசுவில், கைதடி என நகர்ந்து யாழ்ப்பாண நகரை சென்றடையும் இலக்கோடு ஒரு அணி நகர்ந்தது. அதில் பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் கட்டளையின் கீழ் அவரது அணியும் இருந்தது. அவர்கள் இலக்கை வெற்றியடைந்து கொண்டு யாழ்ப்பாணத்தை நோக்கி செல்கிறார்கள்.

அவ்வாறான வெற்றிச் சமர் ஒன்றை செய்து தென்மராட்சிப் பகுதிக்குள் உள் நுழைந்திருந்த மூத்த போராளி சிவம் தலமையிலான அணி தமது முன்னிலை வேலியை இறுக்கமாக போட்டிருந்தது. இந்த நிலையில் தான் தென்மராட்சியில் இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த அப் பிரதேசத்தில் அமைந்திருந்த 10 வருடத்துக்கு மேலாக நேசித்த அவ்வுறவின் நினைவு மேலெழுந்து அவ்வீட்டுக் கதவை தட்டி இருந்தார் சிவம்.

அவர் நினைத்து வந்தது. தான் காதலித்த தன் உயிரானவள் இன்னும் ஒரு ஆடவனை திருமணம் செய்து இரண்டு மூன்று குழந்தைகளின் தாயாகி இருப்பாள் என்றே. ஆனால் தான் காதலித்தவனுக்காக 10 வருடங்களுக்கு மேல் வருவான் வருவான் என காத்திருந்த அப் பெண்ணைக் கண்டதும் கட்டித் தழுவி முத்தமிட வேண்டும் போல் தோன்றியது அவருக்கு. ஆனாலும் அவர் முதுநிலை போராளி. விடுதலைப்புலிகளின் இயக்க விதிகளை மீற அவரால் முடியாது. எண்ணங்களுக்கு கடிவாளமிட்டு விட்டு தனது காதலியிடம் நலமா என வினவுகிறார்.

அவளால் எதையும் பேச முடியவில்லை. விழிகள் கலங்கி அருவியாய் கண்ணீர் ஓடத் தொடங்கியது.

அழாதையுங்க இது என்ன சின்னப் பிள்ளை போல அழுது கொண்டு…?

அவர் அவளை ஆற்றுப் படுத்துகிறார். ஆனால் அவளால் பேச முடியவில்லை. தான் நேசித்தவன் இருக்கிறானா இல்லையா என்ற எந்த தொடர்புகளுமற்று வாழ்ந்து வந்த காலம் அத்தனைக்கும் இன்று தன் முன்னே பெரும் மகிழ்வாக வந்து அவனே நிற்பதை அவளால் உணர முடியவில்லை. அவள் பேச்சற்று இருந்த போது அவளை உடனடியாக வன்னிக்கு செல்லுமாறும் அங்கே தான் வந்து சந்திப்பதாகவும் விபரங்கள் கூறி வழியனுப்புகிறார். அதன் பின் தன் கடமைக்காக களத்துக்கு சென்று விடுகிறார்.

குறித்த சில காலங்களில் அவருக்கும் அவளுக்கும் இடையிலான மகிழ்வான தருணங்களை அமைப்பின் திருமண ஏற்பாட்டுக் குழு செய்யத் தயாராக இருக்கும். அதற்கான அனுமதியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்குள் எழுந்தது. ஆனால் அனுமதி கிடைத்தாலும் அம் மகிழ்வான தருணங்களை அவர் அடைய முடியாத நிலையில் தமிழீழ விடியலுக்காக பல கனவுகளைச் சுமந்து வாழ்ந்த அப் போராளி வித்துடலாக தென்மராட்சி மண்ணின் கைதடி பாலம் தாண்டிய பகுதியில் ( சரியான இடம் தெரியவில்லை) விதையாக வீழ்ந்திருந்தார்.

சிவமண்ண என்று அன்பாக அழைக்கும் போராளிகளை லெப்டினன் கேணல் சிவம் என்ற மாவீரன் என்று அழைக்க வைத்துவிட்டு அவர் நிம்மதியாக உறங்குகிறார்.

தமிழ்லீடர்

மருத்துவர் தணிகையுடன்
இ.இ. கவிமகன்
29.08.2018

போராளிகளின் பகிரப்படாத பக்கம் -16 சாவடைந்தும் சாகாத வீரம் கேணல் ராயூ.

பகிரப்படாத பக்கம் -16  சாவடைந்தும் சாகாத வீரம் கேணல் ராயூ.

“அப்பா போட்டு வாறம் …” இந்த வார்த்தைகளை சிறுத்தைப் படையணிப் போராளிகள் சண்டைக்குச் செல்லும் போது தமது தளபதியான கேணல் ராயூவுக்கு சொல்லி செல்லும் வார்த்தைகள் இவை. உண்மையில் ஒரு மகளிர் சிறப்புப் படையணியை உருவாக்குதல் என்ற திடமான முடிவை தேசியத்தலைவர் எடுத்த போது அதற்கான பொறுப்பை முதலில் எடுக்க மறுத்த கேணல் ராயூ பின் நாட்களில் அப்படையணியின் அப்பாவாக அம்மாவாக அண்ணனாக என அனைத்துமாக மாறி இருந்த நிலையை எம் வரலாறு பதிவாக்கத் தவறவில்லை.

சிறுத்தைப் படையணியின் மகளிர் பிரிவின் போராளிகள் கேணல் ராயூ அவர்களினால் புடம்போடப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். சின்னச் சின்ன விடயங்களை கூட மிகவும் கருத்தில் எடுத்து கவனிக்கும் கேணல் ராயூவின் எண்ணமெல்லாம் மகளிர் சிறுத்தைப் படையணியை பெரும் வரலாறுகள் படைக்கும் அணியாக வளர்க்க வேண்டும் என்பதே. அவ்வாறான பயிற்சிகளே அவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இராணுவப் பயிற்சியிலும் இது சிறப்பு பயிற்சி. சிறப்பு அணிகளின் அதி உயர் தாக்குதல் பயிற்சி. அதனால் இறுக்கமான கட்டுப்பாடுகளும், அதி திறன்வாய்ந்த பயிற்சிகளும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

அப்படியான பயிற்சியின் ஒரு நிலையில் கப்பியில் கடக்கும் பயிற்சிக்காக போராளிகள் கூடி நிற்கிறார்கள். அதில் ஒரு போராளி கடந்து கொண்டிருந்த போது கப்பி அறுந்து விடுகிறது. எல்லோரும் கீழே விழுந்து கொண்டிருக்கும் போராளி இறந்து விடுவாள் என்று நினைத்து சத்தமாக குழறுகிறார்கள். ஆனால் நிதானம் கொண்ட கேணல் ராயூ அவளை பக்கவாட்டாக விழு என்று கத்துகிறார். முன்பக்கமாகவோ அல்லது பின்பக்கமாகவோ விழுந்தால் விழுகின்ற வேகத்தில் உடலுறுப்புக்கள் பாதிப்படையும் வாய்ப்புக்கள் அதிகம். அதனால் சாவடைய வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தது. ஆனால் பக்கவாட்டாக விழுவதனூடாக சாவைத் தவிர்க்கலாம் என்று அவர் கருதினார். அதனால் அவளை உடனடியாக அதை செய்யுமாறு பணிக்கிறார்.

அது அதிஸ்டவசமோ அல்லது அவளின் முயற்சியோ தெரியாது அவள் விழுந்தது பக்கவாட்டாகவே அதனால் அவளின் இதயமோ நுரையீரலோ அல்லது உடலின் உள்ளுறுப்புக்களென எதுவுமோ பெரிதளவில் பாதிப்படையவில்லை. எலும்பு முறிவுகள் தான் ஏற்பட்டிருந்தது. அவள் உயிர் தப்பி இருந்தாள். இங்கு அந்தப் போராளி உயிர் தப்பியது ஒரு புறமிருக்க அந்த நேரத்தில் உடனடியாக அவரின் வாய் ஐயோ என்று கத்தவில்லை அவளை காப்பாற்றக் கூடிய வகையைத் தான் மொழிகிறது.

அவர்களை தன் பிள்ளைகளைப் போல பார்த்து வந்த கேணல் ராயூ கடுமையும் கண்டிப்பும் நிறைந்த தளபதி. சின்னச்சின்ன விடயங்களில் அதி கவனமாக போராளிகளை வளர்த்தார் அவர். சிறுத்தைப் படையணியைப் பொறுத்தவரை அனைத்து வகைகளிலும் மேன்மை மிக்கவர்களாக சிறப்பணியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் திடமாக இருந்தார். அதனால் பயிற்சி, பயிற்சி, பயிற்சி இதைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு இருந்தது குறைவு.

இன்னொரு நாள் காட்டுப் பயிற்சியை எடுத்துக் கொண்டருந்த ஒரு போராளி காட்டுக்குள் இருந்த பழமான “ பேக்குமட்டி “ என்ற பழத்தை உண்டு விடுகிறாள். அப் பழம் நச்சுத் தன்மை நிறைந்தது. அதனால் அந்தப் போராளி சாவடைந்து விடுகிறாள்.

இந்த சாவு கேணல் ராயூவையும் அவர் சார்ந்தவர்களையும் பல முடிவுகளை எடுக்கத் தூண்டியிருந்தது. காட்டு மரங்கள் பற்றிய பயிற்சிகளோ அறிவோ அப்போது அவர்களிடத்தில் இருக்கவில்லை. அதனால் உடனடியாக அந்த காடு முழுவதும் அலைந்து திரிந்து பலவகையான பழங்களை சேகரித்து அதன் தன்மைகளை ஆராய்கிறார் கேணல் ராயூ. அவரின் ஆய்வுத்திறன் தன்மையாலும் மருத்துவப் போராளிகளின் உதவிகளோடும் காட்டில் உள்ள மரங்கள், பழங்கள், இலைகுழைகள் என அனைத்தும் எவை உணவுக்கேற்றவை, எவை நஞ்சுத்தன்மை பொருந்தியவை என்று இனங்காணப்படுகிறது.

அதன் பின்நாட்களில் போராளிகளுக்கு அவை தொடர்பாக கற்பிக்கப்படுகிறது. எவை உண்பதற்கு உகந்தது என்றும் எவை உணவுக்கு ஏற்பற்றவை என்றும் பயிற்சியளிக்கப்படுகிறது. இதன் பின்னர் பழங்களை உண்டு சாவடைந்ததான வரலாறு தமிழீழத்தில் இருக்கவில்லை.

இவ்வாறு ஒன்றை ஆய்தலும் அவற்றை கற்றுக்கொள்ளுதலும் முக்கியம் என்பதை உணர்ந்த அவர், தான் மட்டுமல்ல தன் போராளிகளும் அவ்வாறே வளர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். போராளிகளிடையே வாசிப்புத் திறனை ஊக்கிவிப்பதும். புதிய விடயங்களை கற்றுக் கொள்வதும் அவரால் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இரவு பகல் என்று ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அந்த போராளியின் கண்கள் ஓய்வைக் கண்டது மிகக் குறைவு. எப்போதும் கற்றலும் தேடலுமாகவே அவர் இருப்பார். ஒரு விடயத்தை அறிந்து கொள்வதற்காக தேடல்களில் ஈடுபட்டால் அவருக்குத் தூக்கம் என்பது வராது. Nes Coffee என்று சொல்லப்படும் கோப்பியை அடிக்கடி குடிக்கும் கேணல் ராயூ அவர்கள் உணவைப் பற்றியும் அதிகம் கவனமெடுப்பதில்லை.

இவ்வாறான ஒரு பயிற்சியில் ஒரு குளத்தினூடாக நகர வேண்டிய அணி அக்குளத்தில் முதளை இருப்பதாக அறிந்து தயங்கி நின்றது. எப்போதும் போலவே அப் போராளிகளுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடும் கேணல் ராயூ முதளைகள் இருக்கும் அக் குளத்தை கடப்பது எவ்வாறு என்பதை முதலாவது போராளியாக கடந்து காட்டி கற்பித்தார். அதன் பின் அப் போராளிகளுக்கு முதளை மீதிருந்த பயம் விலகி இருந்தது. அவ்வாறு தான் காட்டுப் பயிற்சியில் யானையை கண்டு தயங்கியவர்களை யானைகள் நடமாடும் பகுதிக்குள்ளையே தங்கி இருந்து பயிற்சியை மேற்கொள்ள வைத்து அதன் மீதிருந்த பயத்தையும் அவர் போக்கி இருந்தார்.

இவ்வாறாக ஒவ்வொரு விடயங்களிலும் கவனம் எடுத்து செயற்படும் கேணல் ராயூ அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் உள்வரும் எந்த வகை ஆயுதங்களாக இருந்தாலும் சரி அதன் பொறிமுறைகளை, செயற்பாடுகளை கண்டறிந்து அவற்றை செயற்படுத்துபவராக இருப்பார். அது சாதாரண தர கைத்துப்பாக்கி என்றாலும் சரி ஆட்லரி எறிகணை செலுத்தியாக இருந்தாலும் சரி அவரது கை பட்ட பின்பே முதல் குண்டை செலுத்தும். அவ்வாறான அறிவாற்றலும் ஆய்வுத் தன்மையும் நிறைந்த கேணல் ராயூவால் வளர்க்கப்பட்ட போராளிகளும் பெரும் சாதனைகளை நிலைநாட்டியவர்கள் என்றால் அது மிகையில்லை.

இவ்வாறான தளபதியின் இன்னொரு முகத்தையும் இங்கே பதிவிட வேண்டியது அவசியமாகிறது. சிறுத்தைப்படையணி ஒரு சிறப்பணியாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் வெளித் தொடர்புகள் அற்றவர்களாகவே வளர்க்கப்பட்டிருந்தார்கள். அதனால் குறித்த பயிற்சிக் காலம் நிறைவு பெறும் வரையில் பெற்றவர்களையோ உறவுகளையோ சந்திக்க அனுமதி இருந்ததில்லை. அதே போல கடிதப் பரிமாற்றங்களும் மறுக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் கேணல் ராயூ அவர்களின் தங்கையும் போராளியுமான கோமதி இவருக்கு அவசர மடல் ஒன்றை அனுப்பி இருந்தார். ஆனால் அம்மடல் உடைக்கப்படவும் இல்லை வாசிக்கப் படவும் இல்லை. அம்மடல் மேசையின் ஒரு இழுவைப் பெட்டியில் ( லாட்சி) அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது.

அவரின் பொறுப்பில் இருந்த போராளிகள் எந்த வெளித்தொடர்புகளும் இல்லாது இருக்கும் போது தான் மட்டும் எவ்வாறு தங்கையின் கடிதத்தை வாசிப்பது என்ற சிந்தனை அவரை கட்டுப்படுத்தி இருந்தது. அச்சிந்தனை ஒன்றே அவரது தந்தையை உயிருடன் பார்ப்பதற்கு வழிதராமல் போனது. ஏனெனில் அக்கடிதத்தில் தங்கை அவர்களது தந்தை அவசர சிகிச்சை பெற்று வருவதைப் பற்றியே அவசர மடல் அனுப்பி இருந்தார். அக்கடிதத்தை பார்த்திருந்தால் கூட தந்தையை போய் பார்த்திருப்பாரா என்பது வினாக்குறியே ஆனாலும் தந்தை பற்றிய செய்தியையாவது அறிந்திருப்பார். ஆனால் அவர் அப் போராளிகளுடன் அவர்களைப்போலவே வாழவேண்டும் என்ற சிந்தனையில் இருந்ததால் அக்கடிதத்தை கண்டுகொள்ளவே இல்லை.

சிறுத்தைப் படையணி பெரும் சாதனைகளின் ஆரம்பப் புள்ளியாக வளர்க்கப்பட்டது. தொட்டுணர முடியாத வீரத்தின் உச்சத்தை அப்போராளிகள் கொண்டிருந்தார்கள். அவ்வாறான சிறுத்தைப் படையணிப் போராளிகளுக்கு அப்பாவாக, அண்ணாவாக, அம்மாவாக என பல வடிவங்களில் ஒன்றிப் போயிருந்த கேணல் ராயூவை தமிழீழ தேசத்தை சிங்களப் படைகள் ஆக்கிரமித்ததைப் போல கொஞ்சம் கொஞ்சமாக புற்றுநோய் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. சாதாரண வயிற்றுவலி என்று அதற்கு சாதாரண வலிநிவாரணிகளை சாப்பிட்ட படி பணி தொடர்ந்தார் கேணல் ராயூ. ஆனால் புற்றுநோய் உச்சம் தொட்டுவிட்டது. பல சிகிச்சைகளை எம் விடுதலை அமைப்பு செய்திருந்தது. ஆனால் ஆரம்பகட்டத்தை தாண்டி விட்டிருந்த புற்றுநோய்த் தாக்கம் அவருக்கு உச்ச நிலையைத் தொட்டிருந்தது.

அப்போது கூட தான் வளர்த்த போராளிகளுக்கு தமிழீழத்தை வெல்லுவதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார். முழுவதும் இயலாத நிலையிலும் முழுமையான மருத்துவக்கண்காணிப்பில் இருந்த நிலையிலும் கேணல் ராயூ தனது படைய அறிவியலை போராளிகளுக்கு வழங்க தயங்கவில்லை. கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்கான வெடிபொருள் தொகுதியைப் பற்றிய தொழில்நுட்பத்தை கடற்புலி அணிக்கு தெளிவாக சொல்லிக் கொடுக்கிறார். அவ்வாறாக வாழ்ந்த கேணல் ராயூ சிகிச்சை பலனின்றி தன் இறுதி மூச்சை இந்த தேசத்துக்காக விட்டார்.

கேணல் ராயூ/ குயிலன் என அழைக்கப்படும் எமது விருட்சம் ஏழாலையில் திருதிருமதி அம்பலவாணன் தம்பதியின் மகனாக பிறந்து தனது சகோதரிகளுடனும் துணைவியுடனும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இறுதிவரை உழைத்தவர். 25.08.2002 ஆம் ஆண்டு உறுதியன் உறைவிடமாக மண்ணுக்குள் விதையாகிவிட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் பீரங்கிப் படையிணி, வெடிபொருள் உருவாக்கப்பிரிவு, தொலைத்தொடர்பு புரிவு, என பல பிரிவுகளின் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்த கேணல் ராயூ, வெடிபொருள் அறிஞனாக, தொலைத்தொடர்பு தொழில்நுட்பவியலாளனாக, இலத்திரணியல் துறை வேங்கையாக என வாழ்ந்தார். இறுதிவரை தனது பணியை அவர் நிறுத்தவே இல்லை. அதனால் தான் ஒரு சந்திப்பில் வைத்து தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர்களிடம் “ நீங்கள் எல்லாரும் சேர்ந்தாவது கேணல் ராயூவின் வெற்றிடத்தை நிரப்புங்கள் “ தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கோரிக்கை வைத்தார்.

இவ்வாறாக வாழ்ந்த பெரு விருட்சம் சாவடைந்த பின்னும் போராளிகளுக்கு அறிவியலை ஊட்டிக் கொண்டிருந்தது. அவர் தனது பங்கினை அறிவிலாளர்களாக போராளிகள் ஆவதற்கு பணி செய்தார். பல ஆயிரம் தொழில் நுட்பப் பொறிமுறைகளாக கேணல் ராயூ நிமிர்ந்து நின்றார். இன்றும் நிமிர்ந்து நிற்கிறார்.

இ.இ.கவிமகன்.
26.08.2018
( இப்பதிவு எழுதப்பட்டிருந்தாலும் சில இடர்கள் தாண்டி வெளியில் பதிவிட முடியவில்லை. ஆனாலும் பகிரப்படாதபக்கங்கள் இடர்கள் தாண்டியும் தொடரும்…)

போராளிகளின் பகிரப்படாத பக்கங்கள் -15 படைய ஆசான் கேணல் வசந்த் நினைவுகளோடு…

தமிழீழத்தின் வீர படைய ஆசான்களில் முக்கியமானவரான கேணல் வசந்த் நினைவுகளோடு…


சுனாமி வீட்டுத்திட்டத்தடியில் இருந்து உண்டியல் சந்திக்கு…வசந்த் மாஸ்டரோட

நாங்கள் நந்திக்களி என்ற இடத்துக்கு 2009 ஆண்டின் நேற்றைய நாள் இரவு நகர்ந்திருந்தோம். எல்லாப் பக்கமும் இராணுவம் சூழ்ந்து கொண்டு எமது இறுதிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கில் வந்து கொண்டிருந்தது. இறுதியாக இருந்த முள்ளிவாய்க்கால் மாவீரர் நினைவு மண்டபம் மற்றும் மாஞ்சோலை மருத்துவமனை எல்லாம் சிங்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. நாங்கள் சுனாமி வீட்டுத் திட்டம் இருந்த இடத்தில் நந்திக்கடல் பக்கமாக முள்ளிவாய்க்கால் இரணைப்பாலை வீதியில் இருந்தோம்.

எமக்கு அருகில் வசந்த் மாஸ்டரோட படையப் பொருள் களஞ்சியம் இருந்தது. அது வெளியில் தெரியாதவாறு உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தாலும் துரோகிகளால் சூழ்ந்திருந்த தமிழீழ மண்ணில் அதை அவர்களால் இனங்காணுவது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. அதனால் அந்தப் பகுதி பெரும் அவலத்தை அன்றும் சந்தித்ததை மறுக்க முடியாது.

அப்போது சாப்பாடு என்பது பூச்சிய நிலை. நாம் சாப்பிட்டு இரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்தன. ஆனாலும் அந்த படையக் களஞ்சியத்துக்குள் குறிப்பிட்ட சில போராளிகள் படைய பொருட்களை சீர்ப்படுத்துவதிலும் அவற்றை துப்பரவாக்குவதிலும் மும்முரமாக இருக்கின்றனர். அதனால் பசியைப் பற்றியெல்லாம் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை பசி தாகம் எல்லாமே அவர்களுக்கு ஒன்றாகவே இருந்தது. எப்படியாவது இந்த இக்கட்டான சூழலில் இருந்து நாம் வெளியில் வந்து சிங்களத்தை வெல்ல வேணும். எம் மண்ணை மீட்க வேண்டும் என்பதாகவே இருந்தது.

இந்த நிலையில் நாங்கள் தங்கி இருந்த பதுங்ககழிக்கு சற்றுத் தள்ளி நிறுத்தி வைக்கப் பட்டிருந்த எனது உந்துருளி முதல் நாள் காணாமல் போயிருந்தது. நான் அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை. நடந்து திரியவே முடியாத இடத்தில் எமக்கு எதற்கு உந்துருளி என்ற நிலை அதனால் எதற்கு அந்த நினைப்பு? என்ற கேள்வி எழுந்ததால் உந்துருளியைப் பற்றி சிந்திக்காமல் என் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அடுத்தநாள் எனது நண்பன் ஒருவனை சந்தித்த போது அவன் அதைப்பற்றி என்னோடு பேசினான்.

“மச்சான் உன்னோட வண்டி நேற்று வெடிச்சிருக்கும் என்று நினைக்கிறன்டா. “

என்றான். நான் புரியாமல் என்னடா என்று வினவினேன். அப்போது தான் எனக்கு தெளிவாக கூறுகிறான்.

“இல்ல மச்சான் …….. அண்ணையாக்கள் உன்னோட வண்டில சக்கை ஏற்றினவங்கள். நான் கண்டனான். உன்னோட வண்டி தானடா “

என்றான்.( குறிப்பிட்ட போராளியின் இருப்பு என்ன நிலை என்பது தெரியவில்லை அதனால் அவரின் பெயரைத் தவிர்க்கிறேன்.)

எனக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லாமே முடிந்து விட்டது என்று எங்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இனி என்ன செய்தும் எம்மால் மீள முடியாது என்றே நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் இவர்களால் மட்டும் எப்படி முடிகிறது? இறுதி நேரத்தில் கூட தமிழீழத்தை நேசிக்க அந்த மனிதர்களால் மட்டும் எப்படி முடிந்தது? நான் சிந்தித்துக் கொண்டிருக்க நண்பன் என் எண்ணத்தைத் திசை திருப்புகிறான்.

“பசிக்குது அண்ண எதாவது சாப்பிட கிடைக்குமா என்று பார்ப்பம் வா. “

சாப்பிட எதுவுமே இல்லை என்று தெரியும் ஆனாலும் தேடிப் பார்த்துவிட்டு தோற்றுப் போன நிலையில் வீதியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறோம். மாலை 6 மணி இருக்கும் என்று நினைக்கிறேன். ( சரியான நேரம் நினைவில் இல்லை) முல்லைத்தீவு பரந்தன் வீதியில் இருந்து திடீர் என்று ஒரு தானியங்கி டொங்கான் தாக்குதலை சிங்கள இராணுவம் செய்தது.

திட்டமிட்டு வசந்த் மாஸ்டருடைய படையக்கல களஞ்சியம் மீது அத்தாக்குதல் செய்யப்பட்டிருந்தது. அதுவும் காட்டிக் கொடுப்பாளர்களால் இனங்காணப்பட்டிருந்த அம் முகாம் மீது சிங்களப் படையின் தாக்குதலாளன் தாக்கியிருந்தான்.

பகைவன் அடித்த தானியங்கி 40 mm எறிகணை ஒன்று (Auto dongan ) அவரது களஞ்சிய எரிபொருள் கலன் மீது விழுகிறது. எரிபொருள் கலன் சிதறி தீ அனைத்து இடங்களிலும் பரவுகிறது. அந்த தீயை அணைக்க முடியாத நிலை..

போராளிகளும் வசந்த் மாஸ்டரும் முயன்று கொண்டே இருக்கிறார்கள். தீ பரவி களஞ்சிய முழுவதுக்கும் பரவுகிறது. கரும்புகை மூட்டம் வானைத்தொடுகிறது. கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வெடிபொருள் களஞ்சியத்தின் ஏனைய பகுதிகளும் தீயால் சூழ்கிறது. கட்டுக்கடங்காமல் சூழல் இவர்களுக்கு பாதகமாகி கொண்டு போன நிலையில் ஆயுதம் துடைக்கும் துணி (சிந்தி) மீது தீ மூள்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலை அடுத்தது வெடிபொருள்கள் மீது பரவப் போகிறது நடப்பை புரிந்த வசந்த் கட்டளை இடுகிறார்.

“ஓடு, ஓடுங்கோடா எல்லாரும் வெளீல ஓடுங்கோடா…. டேய் எல்லாரும் ஓடுங்கடா “

அனைவரும் வெளியேறி விடுகின்றனர். அருகிருந்த மக்கள், காயப்பட்ட போராளிகள் என அனைவரும் பாதுகாப்பாக அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் வசந்த் தனது பொறுப்பில் இருந்த அந்த வெடிமருந்து களஞ்சியம் தன் முன்னே எரிந்து கொண்டிருப்பதை கூட மறந்து மீண்டும் உள் நோக்கி ஓடுகிறார்.

“மாஸ்டர் வேண்டாம்… நெருப்பு எல்லா இடமும் பரவீட்டுது இனி ஆபத்து போகவேண்டாம் “

போராளிகள் மறித்தார்கள், கெஞ்சினார்கள் ஆனால் வசந்த் மாஸ்டர் கேட்கவே இல்ல. தடுத்தவர்களுக்கு தனது தெளிவான நிலைப்பாட்டை விளக்குகிறார்.

” தமிழீழ படைக்கல பொறுப்பாளர் நெருப்புக்கு பயந்து தனது உயிரை காத்து கொள்ள தன்னுடைய கைத்துப்பாக்கியை விட்டிட்டு ஓடிட்டாராம்” என்று என் எதிர்காலம் பேசக்கூடாது. இந்த இழி சொல் எனக்கு வேண்டாம். அதை விட இத்தனை காலமாக நான் பயிற்சி குடுத்த போராளிகளுக்கு நான் எதை கண்டிப்பாக போதித்தனோ அதை இனிவரும் காலங்களில் புதிய போராளிகளுக்கு எப்படி போதிப்பேன்…? படைகல பாதுகாப்பு பற்றிய கட்டுக்கோப்பான போதனைகளை நான் போராளிகளுக்கு வழங்கும் போது அவர்கள் என்னிடமே கேள்வி கேட்க மாட்டார்களா? “நெருப்புக்கு பயந்து தானே அன்று நீ உன்னோட பிஸ்டல விட்டிட்டு ஓடினி” இன்று உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்க மாட்டாங்களா? இதை எல்லாத்தையும் விட இது எனக்காக அண்ண பிரத்தியேகமா தந்த கைத்துப்பாக்கி. இதை விட்டிட்டு அவரிடம் எப்படி போவது…? அவரிடம் எந்த முகத்தை வைத்து பிஸ்டல நெருப்புக்க விட்டிட்டு வந்திட்டன் என்று சொல்வது. என் உயிரிலும் மேலான எனது ஆசிரியத்துவத்தையும் எனது படைக்கல பாதுகாப்பையும் நானே பாதுகாக்க வேண்டும். நில்லுங்கடா நான் எடுத்து கொண்டு ஓடி வாறன்.

போனவர் திரும்பி வரவே இல்லை. படைக்கலக் களஞ்சியத்துக்குள் இருந்த லோ வகை ஆயுதங்கள் தொடக்கம் உள்ளே இருப்பில் இருந்த அத்தனை ஆயுத தளவாடங்களும் வெடித்து எரிந்தன.

மக்கள் தொடக்கம் போராளிகள் அனைவரும் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப் பட்டிருந்தார்கள். அல்லது வெளியேறி இருந்தார்கள். எமக்கும் வசந்த் மாஸ்டருக்கு என்ன நடந்தது என்பது தெரிந்திருக்கவில்லை நாமும் அந்த இடத்தை விட்டு வெளியேறி இருந்தோம்.

அப்போது தான் இறுதியாக எமக்காக வீழ்ந்த மாவீரர்களை விதைத்த துயிலுமில்லத்தடியில் கணினிப் பிரிவை சேர்ந்த வில்லவன் என்ற போராளியை சந்தித்தோம். அவருக்கும் பின் நாட்களில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனாலும் அந்த உயர்ந்த இராணுவ மிடுக்குள்ள அவரை இறுதியாகக் கண்ட போது மீண்டும் சந்திக்க மாட்டோம் என நாம் நினைக்கவில்லை. அவருடன் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிய நாம் உண்டியல் சந்தியை வந்தடைந்திருந்தோம்.

அம்மா அப்பா என என் உறவுகள் அனைவரையும் அங்கே ஓரிடத்தில் அமர வைத்து விட்டு நானும் என் நண்பனும் மைத்துனனுமாக மீண்டும் நாம் இருந்த இடத்துக்குச் சென்ற போதே வசந்த் மாஸ்டருடைய படையக்கல களஞ்சியம் முற்று முழுதாக எரிந்து முடிந்திருந்ததும் இடுப்புக்கு கீழ் முழுவதுமாக அவர் எரிந்த நிலையில் தனது கைத்துப்பாக்கியை இறுகப்பற்றிய படி வீரச்சாவடைந்திருந்ததையும் அங்கே நின்றவர்கள் கூற நாம் அறிந்தோம். அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து விட்டு வெளியில் வரும்போது எதிரி தொடர்ந்து களஞ்சியம் மீது ஏவிய எறிகணைகளின் துண்டுகள் அவரை வீழ்த்தியிருக்கிறது. அவரால் காயத்துடன் வெளியேற முடியவில்லை அவர் முயன்று கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் அவரது உடலத்தை துளைத்து வெளியேறிய இரும்புத் துண்டுகள் அவரை நிலத்தில் சாய்த்து விட்டது. எறிகணை குண்டுகளால் வீரச்சாவடைந்த பின் தான் தீயின் நாக்குகள் அவரை தீண்ட முடிந்தது… அதுவும் அவரை முழுமையாக அல்ல குறையாகவே தீண்டி சென்றிருந்தது நெருப்பு.

மனம் வெறுத்தது. எம் மூத்த தளபதிகள் ஒவ்வொருவரையும் இழந்து நாம் ஒன்றுமே இல்லாதவர்களாக போகப்போகிறோம் என்பது புரிந்து போனது. அங்கே எதுவும் இல்லை. தாக்குதல் பலமாக நடந்து கொண்டிருந்ததால் அங்கே நிற்பது உயிராபத்தைத் தரும் என்று அஞ்சினோம். நாம் நேசித்தவர்கள் தம்மை வெடியாக்கி காற்றோடு கலந்து போக, எதிரியை அழித்து மண்ணில் வீழ்ந்து போக நாங்கள் உயிருக்குப் பயந்து மீண்டும் உண்டியல் சந்திக்கு வந்து சேர்ந்தோம் …

கவிமகன்.இ
10.05.2018

Up ↑