Search

Eelamaravar

Eelamaravar

Month

May 2019

தமிழீழ பிரச்சனையை சிக்கலாக்கியவர்; மோடியின் வெளியுறவுத்துறை அமைச்சரானார்!


தெற்காசிய பிராந்தியத்தில் நிகழும் புவிசார் அரசியலின் அனைத்து நிகழ்ச்சிநிரல்களிலும் தமிழர்களாகிய நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபடுத்தப்பட்டுள்ளோம். அதன்பொருட்டு, தமிழீழத்தில் ஒரு இனப்படுகொலையை சந்தித்துள்ளோம். நாம் வாழும் இந்த பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் கடல் பகுதி தான் இன்றைய அமெரிக்க-சீனா போட்டியிடும் களம். அப்படியென்றால் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை பாகிஸ்தானை மையமாக கொண்ட காலம் இனி இருக்கப்போவதில்லை. அமெரிக்கா-அமெரிக்க ஆதரவு நாடுகள், சீனா-சீன ஆதரவு நாடுகள் என்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் என முடிவுசெய்யப்படும். இப்படிப்பட்ட வெறியுறவுக் கொள்கைகளை இனி கையாளப்போகிறவர் தான் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர்.

தமிழரென்று சிலரால் சொல்லப்படும் இந்த ஜெய்ஷங்கர், தனது பணிக்காலத்தில் முதன்முதலாக பெற்ற மிகப்பெரிய பொறுப்பு என்றால் அது, ராஜிவ்காந்தி காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதி காக்கும் படையை வழிநடத்தியது. IPKF படையின் முதன்மை செயலாளராகவும், அரசியல் ஆலோசராகவும் இருந்துள்ளார். இவரது ஆலோசனையின் படி தான் IPKF ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்றுகுவித்தது. ஆனாலும் இந்தியாவின் மிகப்பெரிய படையை விடுதலைப்புலிகளின் சிறு படை தோற்கடித்து ஓட செய்தது. தமிழர்களுக்கு எதிரான கொள்கையை வகுத்து, தமிழீழ பிரச்னையை சிக்கலாக்கி, இந்தியாவிற்கு தோல்வியை பெற்று தந்தவர் தான் இந்த ஜெய்ஷங்கர்.

கடந்த 2011ம் ஆண்டு சீனாவிற்கான இந்திய தூதராக பணியாற்ற சென்ற இவர், 5 ஆண்டு காலம் அங்கு நீடித்தார். இவர் சீனாவில் இருந்த காலத்தில் தான், சீனா, BRI (Belt and Road Initiative) எனப்படும் ஆசிய-ஐரோப்பிய-ஆப்பிரிக்க நாடுகளை தனது வணிக வளையத்திற்குள் கொண்டுவரும் திட்டத்தை பெரிய அளவில் முன்னெடுத்து சென்றது. முதல்பத்தியில் சொல்லப்பட்ட சீனா-அமெரிக்காவின் புவிசார் அரசியல் இதனை மையமாக கொண்டதே. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டம் குறித்து இந்தியா புரிந்துகொள்ளவோ, சீனாவின் ஆதிக்கத்திற்கு மாற்றாக சமாளிக்கக் கூடிய திட்டங்களை இந்தியா உருவாக்கவோ வேண்டுமெனில் அதில் சீனாவின் தூதரான ஜெய்ஷங்கரின் பங்களிப்பு கண்டிப்பாக தேவைப்பட்டிருக்கும். இந்தியா அதில் தோல்வியுற்றதிற்கு மிகமுக்கிய காரணமும் இந்த ஜெய்ஷங்கர் தான்.

மோடியின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் மிகமோசமான வெளியுறவுக்கொள்கை தோல்வி என்றால், இந்தியா நேபாளம் நாட்டின் மீதான தனது கட்டுப்பாட்டை இழந்தது தான். நேபாளத்தில் புதிதாக வந்து ஒலி தலைமையிலான இடதுசாரி ஆட்சி, புதிய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்க அதை இந்தியா எதிர்க்கிறது. பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்தப்பட்டிருக்க வேண்டிய இந்த விசயம், இறக்குமதிக்காக இந்தியாவின் கடல் எல்லையை பயன்படுத்தும் நேபாளத்திற்கு பொருட்களை கொண்டுசெல்ல எல்லையில் தடைவிதிக்கிறது. உள்நாட்டில் இந்தியாவிற்கு எதிராக பெரிய கலவரங்கள் வெடிக்க, சீனா தனது பொருட்களை ஏற்றுமதி செய்து காப்பாற்றுகிறது. இந்தியாவின் தேவை இனி தேவையில்லை என்று முடிவுக்கு வந்த நேபாளம் இன்று சீனாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. இப்படிப்பட்ட இந்த நேபாள விவகாரத்தை கையாண்டது இந்த ஜெய்ஷங்கர் தான். பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் நேபாளத்தை சீனாவின் பக்கம் தள்ளியது ஜெய்ஷங்கரின் தவறான கொள்கை தான்.

அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி தேவயாணி கோபர்கடே என்பவர் போலியான ஆவணங்கள் கொண்டு விசா வழங்கிய பிரச்சனையையும், சீனாவுடனான டோக்லாம் பிரச்சனையையும் சுமுகமாக தீர்த்து வைத்ததாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றனர். உண்மையில் இரு பிரச்சனைகளிலும் காலில் விழுந்தும், இந்தியாவின் சந்தையை அந்நாட்டு வணிக நிறுவங்களுக்கு திறந்துவிட்டும், அணுஉலைகள், ஆயுத கொள்முதல் என, எப்படி எடப்பாடி அரசு மோடி அரசுடன் பேரம் பேசுகிறதோ, அதே போல் பேரங்கள் பேசி இந்தியாவை அடமானம் வைத்து பிரச்சனைகளிலிருந்து இந்தியா தப்பியது. இதில் இந்தியாவின் செல்வாக்கை கூட்டும் வகையில் எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை.

இவையெல்லாம் ஊடகங்கள் சொல்ல மறந்த அல்லது தவறாக சொல்லிய ஜெய்ஷங்கரின் பரிதாபங்கள். இப்படிப்பட்ட ஒருவர், தமிழினத்தை சூழ்ந்துள்ள வெளியுறவுக்கொள்கைகளை தீர்மானிக்க போகிறார் என்றால் நாம் கவனமாக இருக்க வேண்டிய சூழல் இது. தமிழினத்தை பலியிடவும் தயங்கமாட்டார்கள் என்பது தான் உண்மை.

Ashok Kumar Thavamani

#Delhi #Tamil Nadu #Narendra Modi

இந்தியாவில் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்ற நிலையில், அதில் அமைச்சராக பதவியேற்ற ஜெய்சங்கர் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது அவர் இலங்கையில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலின் முடிவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இதில் பிரதமர் பதவியேற்பு விழா நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இதில் கடந்த முறை அமைச்சர்களாக இருந்த சிலர் இந்த முறை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமைச்சரவையில் இடம் பெறவில்லை, குறிப்பாக கடந்த முறை நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தானாக முன்வந்து தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று விலகினர்.

இதனால் சில அமைச்சர்கர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சில புதியவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

இதில் தமிழகத்தில், தேனி தொகுதியில் வெற்றி பெற்ற பன்னீர்செல்வம் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கடைசியில் அது இல்லாமல் போனது.

இந்நிலையில் இதை எல்லாம் தாண்டி நேற்றைய பதவி ஏற்பு விழாவில் மிகவும் பெரிய அளவில் பேசப்பட்ட நபர் என்றால் அது ஜெய்சங்கருக்கு கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவி தான். இவர் யார்? இவருக்கு எப்படி அமைச்சர் பதவி என்று பலரும் யோசித்து கொண்டிருக்கும் நிலையில், அவரைப் பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளது.

இவர், ஐ.எப்.எஸ் அதிகாரியாக இவர் உலகின் அனைத்து நாடுகளிலும் அறியப்பட்டவர். 1955-ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டவர்.

இவரின் தந்தை சுப்பிரமணியம் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாக பணியாற்றியவர். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.

டெல்லியில் இருக்கும், ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

டெல்லி ஜே.என்.யு -வில் பி.ஹெச்.டி பெற்ற இவர் 1977 -ஆம் ஆண்டு ஐ.எப்.எஸ் அதிகாரியாகத் தேர்வாகி பணியாற்றத் தொடங்கினார்.

பின்னர் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.

அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளராக 1985 முதல் 1988 வரை பணியாற்றியுள்ளார்.

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் இலங்கையில் பணியாற்றிய இவர், அப்போது இந்திய அமைதிப்படைக்கு அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இது தவிர இந்தியாவின் வெளியுறவுத் துறை தொடர்பாக ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி இருக்கிறார்.

2007 முதல் 2009 வரை சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையராக பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து சீனாவுக்கான இந்திய தூதர் ஆன இவர், சுமார் நான்கரை ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார்.

சீனாவுக்கான இந்தியத் தூதராக செயல்பட்ட காலத்தில்தான் மோடிக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அதாவது மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, முதன் முறையாக சீனாவுக்கு சென்றுள்ளார்.

அப்போது இருவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக 2013 -ஆம் ஆண்டு முதல் செயல்பட்டார்.

மோடி 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்கிறார். குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த கலவரம் காரணமாக மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துவந்தது. அதுமட்டுமின்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடியை உரையாற்றச் செய்யும் சவாலான பணியைச் செய்து முடித்தார்.

இதனால் அன்று மோடியின் மனதில் இடம் பிடித்த இவர், தற்போது அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்.

மேலும் பாஜகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத ஒருவருக்கு மோடி இப்படி கேபினேட்(வெளிவிவகரத் துறை) பதவி வழங்கியிருப்பது பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும், இந்த முடிவில் உலகநாடுகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏனெனில் இப்படி வெளியுறவுத்துறை தொடர்பான பல விஷயங்களைச் செய்த அனுபவமிக்க ஒருவரை நியமித்தது தான் இந்த மகிழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட யாருக்கும் இன்னும் இலாக்காக்கள் ஒதுக்கப்படவில்லை. எனினும் வெளியுறவுத் துறையில் உள்ள அனுபவம் காரணமாக இவருக்கு வெளியுறவுத் துறை இலாகாதான் ஒதுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் !

  ‘இதன் எழுபது ஆண்டுகள் வரலாற்றில் ஐநா அமைப்பு மனித குலத்தின் நம்பிக்கை விளக்காக போற்றப்பட்டிருக்கலாம் – ஆனால் அதே நேரத்தில் அது ஒரு வெட்கக்கேடான சர்வாதிகாரமாகவும் திட்டப்பட்டிருக்கிறது. அதனுடைய அளவுக்குமீறிய நிர்வாக கட்டுப்பாடு, ஊழல்களை மறைக்கும் செயற்பாடுகள், அதன் பாதுகாப்புச் சபையின் சனநாயகமற்ற செயற்பாடுகள் யாவும் பலரையும் ஆத்திரமடையச் செய்கின்றன. சமாதானம் என்ற பெயரில் அது போருக்கு போகிறது. அதே நேரத்தில் கொடூரமான இனவழிப்பை கைகட்டி நின்று பார்க்கிறது. இக்காலத்தில் ஐநா ஒரு ரிலியன்கள் (மில்லியன் மில்லியன்) டொலர்களை செலவு செய்திருக்கிறது….. பலரும் சொல்வது போல ஐநா என்ற ஒரு அமைப்பு இல்லாவிட்டால் அதை நிறுவ வேண்டிய கட்டாயம் இருக்கும். அதில் பல குறைபாடுகள் உண்டு அதுவும் எல்லோருக்கும் தெரிந்ததே’

இவ்வாறு சொன்னது வேறு யாரும் இல்லை – பிரித்தானியாவின் கார்டியன் செய்தித்தாள்.

இந்த ஐநாவின் வேறு ஒரு பிரபலமான அமைப்புத்தான் யூனிசெப். இதன் தலைவரின் சம்பளம் என்ன தெரியுமா? மாதத்திற்கு 10 மில்லியன் ரூபா. ‘அரசசார்பற்ற’ தொண்டு அமைப்புக்களின் தலைவர்களின் சம்பளத்தில் மிகவும் அதிகம் சம்பளம் பெறுபவராக இதன் தலைவர் இருக்கிறார். அதுமட்டுமல்ல யூனிசெப் அமைப்பு ஐ-அமெரிக்காவினது என்பதற்கும் எழுதப்படாத ஒரு சட்டம் உண்டு. அதன் தலைவர்கள் எப்போதும் – அன்றிலிருந்து இன்றுவரை – ஐ-அமெரிக்கர்களாகவே இருப்பார்கள். யுனிசெப்பின் மூலம் ஐ-அமெரிக்கா தனது பூகோள ரீதியான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இதுவும் ஒரு வழி.

இந்த யூனிசெப் சிறுவர் நலனுக்காக என்று பிரபலப்படுத்தப்படுகிறது. அதன் ஒரு நெருக்கமான கார்பரேட் எது தெரியுமா? குழந்தைகளுக்கு நப்கின் உற்பத்தி செய்யும் ‘பம்பேர்ஸ்’ நிறுவனம் தான். ‘பம்பேர்ஸ்’ போன்ற நப்பின்கள் சூழலை எந்த அளவுக்கு மாசு படுத்துகிறது என்பது சூழலில் கரிசனை உள்ளவர்களுக்கு தெரியும். ‘பம்பேர்ஸ்’ நிறுவனம் ‘பம்பேர்ஸ்’ விற்பனையில் ஒரு சிறு பகுதியை யூனிசெப்புக்கு கொடுக்கிறது. இது ‘பம்பேர்ஸ்’க்கான விளம்பரம். அதற்கு விளம்பரத்தை யார் செய்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும்.

இதே யூனிசெப் நிறுவனம் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எத்துணை தீமை செய்தது என்று பார்ப்போம்.

பொது மக்களிடையே விடுதலைப்புலிகள் அமைப்பைப் பற்றிய எண்ணத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் 1980களில் விடுதலைப்புகளின் சீருடை அணிந்த ஏழு வயதுச் சிறுவர்களின் படங்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டார்கள். கவனிக்கப்படாது விடுபட்ட சிறுவர்களை எடுத்து அவர்களுக்குக் கல்வி கொடுத்து அவர்களைச் சமூகம் மதிக்கும் ஒரு போராளி ஆக்குவதை ஒரு நல்ல காரியமாகவே விடுதலைப்புலிகள் அக்காலத்தில் நோக்கினர்.

விடுதலைப்புலிகளின் இச்சிறுவர் இணையும் கலாசாரம் கலாச்சாரம் 1980களில் உருவாகி வளர்ந்தது. இக்காலத்தில் சிறுவர் போராளிகள் பற்றிய சர்வதேச சாசனமாக ஜெனீவா சாசனம் மட்டுமே இருந்தது. இதில் படையில் இணைக்கப்படுவோரின் வயது 15க்கு மேலிருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சிறுவர் போராளிகள் பற்றிய ஐநா சாசனங்களோ ஐநா திட்டங்களோ ஐநா நடவடிக்கைகளோ எதுவும் 1980களில் இருக்கவில்லை. ஐநாவின் சிறுவர் உரிமை பற்றிய சாசனம் 1987ம் ஆண்டிலேயே பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தச் சாசனத்தில் கூட படையில் இணைக்கப் படுவோர் 15 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் வளர்ச்சியோடிணைந்த அதன் சிறுவர் போராளிகள் என்னும் விடயம் அதுபற்றிய சர்வதேச சாசனங்களோ அக்கறைகளோ இல்லாத ஒரு காலத்தைச் சேர்ந்தது என்பதே இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது.

2001ம் ஆண்டிலேயே ஐநாவின் சிறுவர் உரிமைகளுக்கான சாசனத்திற்கு மேலதிகமாக சேர்க்கப்பட்ட இணைப்பில் அரசசார்பற்ற ஆயதக்குழுக்கள் மட்டும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களையே தமது அமைப்பில் சேர்க்கலாம் என்ற உறுப்புரை முதன்முதலில் சேர்க்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறுவர் போராளிகள் என்னும் அத்தியாயத்தில் உள்ள இப்பாரிய கால முரண்பாட்டை மறைத்து யூனிசெப்பின் தலைமையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரம் முடக்கிவிடப்பட்டது.

அதே நேரத்தில் அரசுகள் 18 வயதுக்கு குறைந்தோரை இணைப்பதை இந்த ஐநா சாசனம் அனுமதித்தது. இன்றும் உலகில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் 18 வயதுக்கு குறைந்தோரை பாடசாலைகளுக்கு சென்று இராணுவத்தில் இணைக்கிறார்கள். இச்சாசனத்தின் நோக்கமே ஆயுத விடுதலைப் போராட்டங்களை நலிவடையச் செய்வது என்ற கருத்தை இது வலுவாக்குகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பினுள் இருந்த பல முதுநிலை உறுப்பினர்களும், தமிழ்செல்வன் உட்பட, சிறுவர் போராளிகளாகவே இணைந்திருந்தனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பல முதுநிலைத் தளபதிகள் சிறுவர் போராளிகளைப் பற்றிய சர்வதேச பிரச்சாரம் தமக்கெதிராகப் பழிவாங்கும் நோக்குடன் செய்யப்படுகிறது என்றே சரியாகவே கணிப்பிட்டார்கள். இதில் உண்மை இருப்தை இச்சர்வதேச அமைப்புக்களின் பிற்கால நடத்தைகள் உறுதிப்படுதின. 2008இல் சிறிலங்கா அரசு சர்வதேச அமைப்புக்களை வன்னியிலிருந்து வெளியேற சொன்னது. அப்போதே அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூட ஒரு இனவழிப்பு நடக்கப்போகிறது என்ற சந்தேகம் இருந்தது. அப்படியிருக்க மறு பேச்சில்லாமல் அத்தனை அமைப்புக்களும் வெளியேறின.

விடுதலைப்புலிகள் பற்றிய யூனிசெப்பின் மேலும் சில நடவடிக்கைகளை இப்போது பார்ப்போம்.

யூனிசெப்பின் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருக்கும் சிறுவர் போராளிகள் பட்டியலில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மிகவும் வயது குறைந்த பல சிறுவர்களின் பெயர்கள் இருந்தன. அவர்களை செஞ்சோலை, அறிவுச்சோலை என்ற இரண்டு சிறுவர் இல்லங்களில் இருந்தார்கள். 2004ம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து மட்டக்களப்பில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் ஒரு கிளை ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரு மாவட்டங்களிலும் பராமரிப்புக் கிடைக்காத சிறுவர்களை விடுதலைப்புலிகள் இச் செஞ்சோலைக் கிளையில் இணைத்தார்கள்.

பின்னர் விடுதலைப்புலிகள் மட்டக்களப்பைக் கைவிட்டபோது இச்சிறுவர்கள் வன்னிச் செஞ்சோலைக்கு மாற்றப்பட்டார்கள். இச்சிறுவர்களை இவர்களின் பெற்றோரிடம் இணைக்கும்வரை சிறுவர் போராளிகள் பட்டியலிலிருந்து இவர்களை நீக்குவதற்கு யூனிசெப் அமைப்பு மறுத்தது.

ஆனால் யூனிசெப் அமைப்பாலோ அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தாலோ இச்சிறுவர்களை அவர்களின் பெற்றோருடன் இணைக்க முடியவில்லை. சில சிறுவர்களின் குடும்பங்களையே இவ்வமைப்புக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுனாமி அழிவின் பின் சில குடும்பங்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. குடும்பங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவர்களைக்கூட கிழக்கிற்கு அழைத்துச்செல்ல சிறிலங்கா அரசு அனுமதி கொடுக்கவில்லை.

இதனால் விடுதலைப்புலிகளின் கடும் முயற்சியின் பின்னரும் யூனிசெப்பின் பட்டியலின்படி ‘விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த மிகவும் வயது குறைந்த சிறுமிக்கு 7 வயது’. இவர் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்தார். 2007ம் ஆண்டில் கூடச் சர்வதேச ஊடகங்கள் யூனிசெப்பின் கூற்றாக ‘இவ்வுண்மையை’ வெளியிட்டன.

மூளை வளர்ச்சி சிறிது குன்றிய 9 வயதுச் சிறுமி ஒருத்தி தன் வீட்டில் துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். அவள் சென்ற பாடசாலையின் ஆசிரியர்கள் இச்சிறுமியின் குழப்பதை அவதானித்தனர். ஒரு நாள் இரவு இச்சிறுமி வீடு திரும்பாமல் தனது வகுப்பறையிலேயே தங்கிவிட்டாள். அப்பிரதேசத்தின் விடுதலைப்புலிகள் பொறுப்பாளர் சிறுமியை ஒரு சிறுவர் இல்லத்தில் தங்க வைத்தார். சிறுமியின் குடும்பத்தினர் எவரோ இதுபற்றி யூனிசெப்பிடம் முறையிட்டனர்.

சிறுமியின் பின்னணி எதையும் விசாரிக்காமல் அவளும் யூனிசெப்பின் சிறுவர் போராளி பட்டியலில் இணைக்கப்பட்டாள். இச்சிறுமிக்குப் பாதுகாப்பான குடும்பச் சூழல் இல்லாததால் இறுதி வரையும் இச்சிறுவர் இல்லத்திலேயே அவள் பராமரிக்கப்பட்டாள். கடும் முயற்சியின் பின்னரே இச்சிறுமியை யூனிசெப்பினர் தமது பட்டியலில் இருந்து எடுத்தனர்.

விடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பிரிவில் ஒரு 17 வயது வாகன ஓட்டுனர் பணியாற்றினார். இவர் 2007 ஆண்டில் சிறிலங்கா ராணுவத்தின் ஒரு கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் குடும்பத்தில் இவரே மூத்த பிள்ளை. தாயுடன் பல தம்பி தங்கைகளையும் கொண்ட அக்குடும்பத்துக்கு வருமானம் ஈட்டும் ஒரே நபர். அவரின் குடும்பத்துக்குத் தொடர்ந்தும் விடுதலைப்புலிகளிடமிருந்து கொடுப்பனவு செல்வதற்காக என்றே விடுதலைப்புலிகள் அவரைப் பணியிலிருக்கும் போது கொல்லப்பட்ட ஒரு துணைப்படை வீரர் என்று அறிவித்தனர்.

இந்த அறிவிப்பை மட்டும் வைத்துக் கொண்டு, இதன் பின்னணியை அறியாமல் – அறிய விரும்பாமல் – யூனிசெப் அவரை கொல்லப்பட்ட ஒரு சிறுவர் போராளி என்றே அறிக்கை விட்டனர்.

சிறுவர் போராளிகள் அமைப்பிலிருப்பதை நிறுத்துவதற்கு விடுதலைப்புலிகள் தீவிரமாக வேலைசெய்து முழு வெற்றியும் கண்ட காலமான 2007 ஆண்டுப் பிற்பகுதியில் நியூசிலாந்து ஹேஇரால்ட் என்ற பத்திரிகையில் யதார்த்தத்திற்குப் புறம்பான ஒரு மோசமான கட்டுரை வெளிவந்தது.

இக்கட்டுரையை நியூசிலாந்து யூனிசெப் அமைப்பு வெளியிட்டது. ஐநாவின் யூனிசெப் அமைப்போ தமக்கும் நியுசிலாந்து-யூனிசெப் அமைப்பிற்கும் தொடர்பில்லை என்றார்கள். வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள யூனிசெப் அமைப்புக்கள் நிதி திரட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டன என்றும் அவர்கள் சுதந்திரமாச் செயற்படுபவர்கள் என்றும் சொன்னது ஐநா-யூனிசெப். சிறுவர் போராளிகள் என்னும் கவர்ச்சியான விடயம் நிதி திரட்டலுக்கு எவ்வளவு உதவுகிறது என்பதையும் இதனூடாக புரிந்ததுகொள்ளலாம்.

இவ்வாறு மறைமுகமாக எம்மை அழித்த ஐநாவை நோக்கி நாம் எவ்வளவு வளங்களை விரயமாக்குகிறோம். உண்மையில் யஸ்மின் சுலூகா, ஃபிரான்சிஸ் ஹரிசன் போன்றவர்களும் சுதந்திரமாக இயங்குபவர்களாக ஒரு தோற்றத்தை காட்டிக்கொண்டு ஐநாவின் அதாவது ஐ-அமெரிக்காவின் கொள்கைக்கு இசைவாகவே நடப்பார்கள். உலகில் இனவழிப்பு பற்றி ஆய்வு செய்பவர்களில் பலர் ஈழத்தமிழர் இனவழிப்பை ஏற்று அது பற்றி எழுதியும் வரும் போது யஸ்மின் சுலூகா போன்றவர்கள் மட்டும் எதற்காக ஈழத்தமிழர் இனவழிப்பை பகிரங்கமாக ஏற்றவில்லை என்று நாம் சிந்தித்தோமா? இவர்கள் அவ்வாறு ஏற்றால் இவர்களுக்கு நிதி கிடைப்பது உடனே நின்றுவிடும் என்பதால் தான். சிந்திப்போம். போராடுவோம்.

<ஐ. நா பற்றி -மேஜர் பாரதி-அன்றே சொன்னாள்>

“..கோழிச் செட்டைக்குள்
குஞ்சுகள்தான் பாதுகாக்கப்படும்
ஆனால் இங்கே பருந்துகள் தானே
பாதுகாக்கப்படுகின்றன…
……..
உலக சமாதானம் – இந்த
உன்னத கோட்பாட்டிற்குள்
தலையைப் புதைக்கும் தீக்கோழி நீ
முகம் தெரியாவிட்டாலும் – சீ…
முழு உடலும் அம்மணமாய் தெரிகிறது…”

–ந.மாலதி

சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

சிறிலங்கா துடுப்பாட்ட அணியைத் தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதனை விவரிக்கிறது இந்த செய்தி ஆய்வு.

அரசியலும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள்.

ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதனை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும்.

இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள். தாரகம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்பது பலராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமானாலும், அது ஒன்றோடு ஒன்று பிணைந்தே இருக்கிறது என்பதனையும் எவரும் மறுப்பதற்கில்லை.

உலக வரலாற்றில் அரசியலும் விளையாட்டும் இணைந்து செயற்பட்ட சந்தர்ப்பங்கள் அநேகம்.

உலகக்கிண்ண சுற்று இறுதிப் போட்டியை காண்பதற்காக மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்றிருக்கும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவை கேலி செய்து வீரகேசரி வெளியிட்ட கேலிச்சித்திரம்

தென்னாப்பிரிக்க இனவாத அரசியலை ஒழிப்பதற்கு அந்நாட்டின் விளையாட்டுப் புறக்கணிப்பு மிகவும் துணைபோனது அண்மையில் உலகில் மிகவும் பிரபல்யமாக நடந்தேறிய ஒரு விடயம்.

அதுவும் முக்கியமாக மேல்நாடுகளில் இந்த புறக்கணிப்பு பரவலாக விவாதிக்கப்பட்ட விடயம். இங்கு அரசியலும் விளையாட்டும் கலந்து ஒரு நன்மையான முடிவை தந்தமையானது, விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்ற விவாதத்தை வலுவற்றதாகச் செய்துள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டின் இனவாத அரசியலுக்கு எதிரான புறக்கணிப்பு பல அரங்குகளில் நடைபெற்றது. மொன்றியோல் நகரில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஒலிம்பிக் போட்டியை 22 ஆப்பிரிக்க நாடுகள் புறக்கணிப்புச் செய்தன.

அங்கு ஒலிம்பிக்கில் தென்னாப்பிரிக்காவோடு விளையாட்டுப் போட்டிகள் நடத்திய நியூசிலாந்து நாடும் பங்கு பற்றியதனையே ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்தன. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவோடு ஏனைய நாடுகள் விளையாட்டுத் தொடர்புகளை வைத்திருப்பதில்லை என்று 1977 இல் கிலெனீகல் என்ற இடத்தில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இது போல் வேறு பல அரசியல் காரணங்களுக்காக விளையாட்டுத் தொடர்பை வெவ்வேறு நாடுகளும் துண்டித்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் பல உள்ளன.

உதாரணமாக 1980 ஆம் ஆண்டில் மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா புறக்கணிப்புச் செய்தது. மொஸ்கோ ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பாகவே இதனை அமெரிக்கா செய்தது. தாரகம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

ஈராக் நாடு 1990 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்வதனை ஆசிய ஒலிம்பிக் குழு தடை செய்தது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தனை எதிர்த்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தென்னாப்பிரிக்காவின் இனவாதமற்ற விளையாட்டுக் குழுவின் தலைவரான ஜோ இபிரகிம் விளையாட்டுப் புறக்கணிப்புக்கூடாக எப்படி அரசியலை மாற்றலாம் என்பதனை பின்வருமாறு கூறுகிறார்,

“விளையாட்டுப் புறக்கணிப்பு ஒரு நாட்டை அது பாராமுகமா இருக்கும் அதனுடைய அரசியல் விடயங்களில் மாற்றங்கள் செய்ய செய்வதற்கு மிகவும் உதவக்கூடியது ஒன்று. உலகில் பல இடங்களில் இப்படியான புறக்கணிப்பு நியாயமானதாக இருக்கும்”.

தென்னாப்பிரிக்க விளையாட்டுப் புறக்கணிப்புப் பற்றி இன்று பல புத்தகங்கள் வெளிவந்திருப்பதும் இதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

ஒரு நாட்டின் விளையாட்டு அந்நாட்டின் அரசியலோடு எப்படி சார்ந்திருக்கிறது என்பதனை பல கோணங்களில் இருந்து ஆராயலாம்.தாரகம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

ஒரு நாட்டின் தேசியம் எப்படி விளையாட்டின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றது என்பது அரசியலுக்கும் விளையாட்டுக்கும் உள்ள பிணைப்பை சுட்டிக்காட்டும் ஒரு விடயம். இன்னும் ஆழமாக பார்க்கப் போனால், அரசியலுக்கும் விளையாட்டுக்கும் உள்ள பிணைப்பு பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானிகள் ஆராயும் விடயமாக மாறி வருவதனை அவதானிக்கலாம். தாரகம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

இது, உலக அரங்கில் விளையாட்டும் அரசியலும் எவ்வாறு பிணைந்திருக்கின்றது என்பதனையும் அது எவ்வளவு முக்கியதான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது என்பதனையும் காட்டுகிறது.

“போட்டிக்கு அப்பால்: விளையாட்டும் அரசியலும்” (More Than a Game: Sports and Politics by Martin Barry Vinokur) என்ற புத்தகத்தில் மாட்டின் வினோகர் பின்வருமாறு கூறுகிறார்,

“நாடுகள் விளையாட்டின் மூலம் தேசியத்தை வளர்த்து எடுக்கின்றது. விளையாட்டு ஒரு நாட்டின் பரப்புரைக்கான முக்கிய கருவியாகப் பயன்படுகின்றது”.

மேல் நாடுகளில் விளையாட்டு இன்று மிகவும் முக்கிய ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆகையால் இது ஒரு அரசியல் கருவியாக உபயோகிக்கப்படும் சந்தர்ப்பங்களும் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் விளையாட்டு பிரேயோகிக்கப்படும் விதங்களை மேல்நாட்டவர் அங்கும் அரசியலும் விளையாட்டும் பிணைந்துள்ளது என்ற அதே கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பார்கள்.

இலங்கைத்தீவில் துடுப்பாட்ட விளையாட்டு இன்று எடுத்துள்ள முக்கியத்துவத்தை இந்தப் பின்னணியில் ஆராந்து பார்க்கலாம். முக்கியமாக சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியின் அண்மைய வெற்றிகளை தமிழர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதனை மேல்நாட்டவர் அவதானிக்கும் போது அவர்கள் தமிழ்த் தேசியத்தை தவறாக மதிப்பிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.தாரகம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

பிரபல எழுத்தாளரான மாமனிதர் சிவராம்; (தராக்கி) ஒரு கட்டுரையில் சிறிலங்கா துடுப்பாட்டம் தமிழ்த் தேசியத்திற்கு எப்படி ஆபத்தானதாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

அண்மையில் பல அனைத்துலக ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அணியின் வெற்றிகளையும், சில தமிழர்கள் அந்த அணிக்குக் கொடுக்கும் ஆதரவையும் மிகைப்படுத்தி இது தமிழ்-சிங்கள ஒற்றுமைக்கு வழிவகுக்குமா என்ற கேள்விகளை எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர்.

இதன் மூலம் மேல் நாட்டவர், தமிழர் இந்த அணிக்கு கொடுக்கும் ஆதரவை எப்படி நோக்குவார்கள் என்பதனையும், சிங்களவர் எப்படி கிரிக்கட் மூலம் தமிழ் தேசியத்தை மறைக்கலாம் என்று சிந்திக்கிறார்கள் என்பது பற்றியும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இவ்வாறே ஆழிப்பேரலையால் ஏற்பட்ட அழிவுக்குப் பின்னரும் தமிழ், சிங்கள சமூகங்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அனைத்துலக சமூகம் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்ன என்பது வரலாறு.

அரசியலும் விளையாட்டும் ஒன்றுடனொன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள். ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும்.

இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள்.

[ 28 ஏப்ரல் 2007] [கலாநிதி என்.மாலதி]

https://www.facebook.com/bslcc/

ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்தவர்கள் யார்?

விடுதலைப் புலிகளின் பிளவு மட்டக்களப்பில் வசித்த இரண்டு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக அமைந்திருந்தது.

அதில் ஒருவர் கொழும்பில் இருந்து செயற்பட்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்கள் அடுத்தது மட்டக்களப்பில் இருந்து பணியாற்றிய ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன்.

இருவரும் எந்த மக்களின் விடுதலைக்காக தங்களது ஊடகப் பணியை அர்ப்பணித்தார்களோ தமிழ் மக்களின் விடுதலைக்காக யாருடன் கூடுதலான உறவு வைத்திருந்தார்களோ அவர்களாளேயே இவர் கொல்லப்பட்டார்கள் என்பதே கசப்பான உண்மைகள்.

விடுதலைக்கான பயணத்தில் இருந்து விலகியவர்கள் முதலில் பயந்தது துப்பாக்கிகளுக்கு அல்ல தங்களுடன் கூடவே இருந்த பேனாக்களுக்கே .

என்னதான் தங்களது பிளவை நியாயப்படுத்தினாலும் தங்களுடன் தொடர்பில் இருந்த ஊடகவியலாளர்களுக்கு முழுவதும் தெரியும் அவர்கள் உண்மையை எழுத தொடங்கிவிட்டார்கள் அவர்கள் எமக்கு எதிராக சவால் விட்டு எழுதுகிறார்கள் அவர்களின் எழுத்திற்கு பதில் சொல்ல தெரியாத ஒரு படையை நடத்திய தளபதி தங்களது வீரத்தை காட்டிய விதமே ஐயாத்துரை நடேசனின் படுகொலை என அந்த நேரத்தில் பலராலும் சொல்லப்பட்ட விடயம்.

நடேசன் யாருக்காக எழுதினார்? எதற்காக எழுதினார்? அவர் கடைசியாக யாரை குறிவைத்து எழுதினார்? போன்ற வினாக்களுக்கு விடை தேடும் போது அவரை கொலை செய்தவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இன்நிலையில் மட்டக்களப்பில் உள்ள இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அது இன்று வரை தொடர்கிறது.

கருணா அம்மான் மற்றும் அவருடன் சேர்ந்தியங்கிய பிள்ளையான் ஆகியோரே ஊடகவியலாளர் நடேசனின் படுகொலைக்கு பின்னால் உள்ள சூத்திரதாரிகள் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு இது வரை பகிரங்கமான மறுப்புக்கள் வெளியாகவுமில்லை. குறித்த கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் இல்லை.

எனவே ஊடகவியலாளர் நடேசனின் கொலை தொடர்பான உண்மைகள் கடந்த 13 வருடங்களாக மறைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த கொலை தொடர்பான விசாரணைகளை இன்று வரை அரசாங்கம் ஆரம்பிக்க வில்லை

நடேசனை கொலை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்கிற சிவநேச துரை சந்திரகாந்தன் அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதை நேரம் ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்த சம்பவத்தில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர் அந்த நேரத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தனர்.

மட்டக்களப்பு எல்லைவீதியில் மே மாதம் 31ஆம் திகதி காலை ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் தனது அலுவலகத்திற்கு செல்லும் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நடேசன் தனது அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடேசனை சுட்டுக்கொன்றனர்.

மோட்டார் சைக்கிளிலில் வந்தவர்களில் ஒருவர் பிள்ளையான் என தெரிவிக்கப்படுகிறது.

அக்காலப்பகுதியில் பிள்ளையானும் சகாக்களும் இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கியிருந்ததாகவும்

நடேசன் இறந்த பின் சற்று நேரத்தில் அப்பகுதியில் இருந்த ஆஞ்சநேயர் மரக்காலை சுற்றுமதிலுக்கு அருகில் பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர்.

கொலையாளிகள் பின்னர் அம்மக்களுடன் நின்று நடக்கும் சம்பவங்களை அவதானித்து கொண்டிருந்தனர் என தற்போது மட்டக்களப்பில் இருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஊடகவியலாளர் நடேசனின் கொலை யாருடைய தேவைக்காக நடத்தப்பட்டது என்பது இன்றும் மர்மமாக உள்ளது.

மரணத்தை கண்டு அஞ்சாத நடேசன்!

ஊடகவியலாளர் பராபிரபா அவர்கள் நடேசன் குறித்து தனது பதில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அதாவது பத்திரிகையாளர் மரணத்தை எதிர்பார்த்த வேளையிலும் பேனாவை கீழே வைப்பதற்கு மறுத்தவர் நடேசன்.

“நான் செத்தாலும் பரவாயில்லை. புற முதுகில் சூடுபட்டுச் சாகக் கூடாது. நெஞ்சில் குண்டு பாய்ந்து வித்தாக விதைக்கப்படுவதையே விரும்புகின்றேன்” என்பது நடேசனின் வாசகங்கள்.

அந்த வாசகம் பகிடியாகக் கூறப்பட்டதல்ல என்பதே தனது மரணத்தின் மூலம் பதிவு செய்தவர் நடேசன். நடேசனின் இன்னுமொரு பகிடிக் கதையும் நிதர்சனமாகியது இங்கு பதிவு செய்வது பொருந்தும்.

“பத்திரிகையாளன் குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மரணித்தால் அது செய்தியாக ஒரு கிழமை உலாவரும். பிறகு மறந்து விடுவார்கள். மறந்து விடுவது என்பது மரணித்த பத்திரிகையாளனை மாத்திரமல்ல. அவர்களது குடும்பத்தையும்தான். மரணித்த பத்திரிகையாளன் இல்லாது அவனது குடும்பம் சோகத்தில் இருந்து மாத்திரமல்ல பொருளாதார ரீதியிலும் மீள முடியாத நிலையை அடைந்து விடும். இது பற்றி எவருமே கவலைப்படுவதில்லை என்பதுதான் நடேசனின் ஆதங்கமாகிறது.

நடேசனின் இந்த கருத்து நிதர்சனமானது என்பது தமிழ் பத்திரிகை உலகம் பின்னர் கண்ட உண்மை.

மறைந்த மூத்த பத்திரிகையாளன் எஸ்.நடராஜா தமிழ் பத்திரிகை உலகம் குறித்த அடிக்கடி கூறும் வாசகம் இது

“நாங்களெல்லாம் கூலிகள். கூலிகளாகவே தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கணிக்கப்படுகின்றார்கள்” என்பதுதான் அவரது ஆதங்கம்.

தமிழ்த் தேசியத்திற்காக எழுதியவர்களையும் உழைத்தவர்களையும் வைத்து வியாபாரம் நடத்திய பத்திரிகை உலகத்திற்கு அதற்காக உயிர் நீத்த பத்திரிகையாளர்களையும் அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் ஏறெடுத்துப் பார்ப்பதற்குக் கூட மனம் வருவதில்லை என்பதை பதிவு செய்திருந்தார்.

நாட்டு பற்றாளர் நடேசன்!

படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் நடேசனுக்கு கிடைத்த ஒரே அங்கிகாரம் நாட்டுப்பற்றாளர் என்று அந்தஸ்தினை விடுதலைப்புலிகள் இயக்கம் வழங்கியிருந்தது.

விடுதலைப் புலிகள் அல்ல அந்த நேரத்தில் எந்த அமைப்பாக இருந்தாலும் நடேசன் அவர்களின் ஊடகப் பணிக்கு உயரிய அந்தஸ்தை வழங்கும் அளவுக்கு தமிழ் ஊடகத்துறைக்கு அந்த காலப்பகுதியில் துணிவுடன் எழுதிய பத்திரிகையாளர் அவர்.

அவரது துணிச்சல் கருணாவை நேரடியாக விமர்சித்து எழுதும் அளவுக்கு சென்றிருந்தது.

நடேசன் அவர்களின் மரணம் குறித்து அப்போது மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர் இரா துரைரெட்ணம் எழுதியவற்றில் இருந்து சிலவற்றை இங்கு தொகுத்து தருகின்றோம்

2004 மே 31ஆம் திகதி. நடேசன் படுகொலை செய்யப்பட்ட நாள். தான் வாழ்ந்த சமூகத்தின் நீதிக்காக அரசியல் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த பத்திரிகையாளன் ஒருவனுக்கு அதற்கு பரிசாக நடு வீதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள்.

கிழக்கு பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் தம்பையாவின் படுகொலை பற்றி அந்த கொலை நடந்த அடுத்த ஞாயிறு தனியார் பத்திரிகை ஒன்றில் நடேசன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது. மிக காரசாரமானதும் துணிச்சலோடு பல விடயங்களையும் சொல்லிய கட்டுரையாக அது அமைந்திருந்தது.

அந்த கட்டுரையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது.

இந்த சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றிய தம்மையாவின் படுகொலையை வெறும் செய்தியாக பார்த்து விட்டு மௌனமாக இருக்க போகிறோமா?

இத்தகைய கொலைகளுக்கு எதிராக வெகுஜனரீதியாக திரண்டெழுந்து இதை தடுக்கவில்லை என்றால் ஒரு தம்பையாவை போன்ற பல கல்விமான்களை அறிஞர்களை சமூக பணியாளர்களை இழக்க வேண்டி வரும்.

அந்த இழப்புக்களை பார்த்து வெறும் கண்ணீரை விடும் சமூகமாக இருக்கப்போகிறதா அல்லது அராஜகவாதிகளுக்கு எதிராக தங்கள் சக்தியை காட்டப்போகிறார்களா? என கேள்வி எழுப்பியிருந்த நடேசன் கட்டுரையின் இறுதியில் அராஜகவாதிகளின் அடுத்த இலக்கு யார் என்ற கேள்வியுடன் முடித்திருந்தார்.

அடுத்த இலக்கு தன் மீதுதான் என்பதை தெரிந்து கொண்டுதான் இதை எழுதினாரா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனால் தம்பையாவின் படுகொலையை ஒத்த கொலைகள் தொடரப்போகிறது என்ற ஆரூடத்தை அக்கட்டுரை சொல்லியிருந்தது.. ஆனால் அந்த கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே தங்களின் அடுத்த இலக்கு யார் என்பதை கொலையாளிகள் வெளிப்படுத்தி விட்டார்கள்.

சில தினங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து விட்டு ஞாயிறு இரவு வீடு திரும்பியிருந்தோம்.

ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து நடேசனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இன்று ஞாயிறு என்ர கட்டுரை பார்த்தியா என கேட்டான். இல்லை என்றேன்.

இந்த படுகொலைகளையும் அராஜகங்களையும் எத்தனை நாட்களுக்கு இந்த சமூகம் பொறுத்துக் கொண்டிருக்க போகின்றது. தம்பையாவின் படுகொலை பற்றி காரசாரமான கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறேன். வாசித்து பார் என சொன்னான்.

2004 மே 31 திங்கட்கிழமை. சரியாக தம்பையா சுட்டுக்கொல்லப்பட்டு ஒருவாரம்.வழமை போல மனைவியை அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தேன்.அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வந்தது.

நடேசன் பணியாற்றிய அலுவலகத்தில் இருந்துதான் ஒருவர் பேசினார். நடேசனை சுட்டுவிட்டார்கள். அவரின் மனைவிக்கு அறிவித்து விட்டோம். எங்கள் அலுவலகத்திலிருந்து சற்று தள்ளித்தான் இச்சம்பவம் நடந்திருக்கிறது என்றும் தாங்கள் அந்த இடத்திற்கு போகவில்லை என்றும் சொன்னார்கள்.

அந்த தகவலை சொல்லிவிட்டு அவர் தொலைபேசியை வைத்த மறுகணம் மீண்டும் தொலைபேசி மணி அடித்தது. மறுமுனையில் தனியார் வானொலியிலிருந்து நண்பர் குருபரன் பேசினார்.நடேசனை சுட்டுவிட்டார்கள். நாங்கள் பிறேக்கிங் நியூஸ் இப்ப போட்டிருக்கிறம் என்றார். என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது. காயங்களுடனாவது தப்பி விட வேண்டும் என மனதிற்குள் எண்ணிய எனக்கு குருபரனே பதில் சொன்னார்.

ஆள் முடிஞ்சுதாம். அவரின்ர அலுவலகத்திற்கு போற றோட்டிலை தான் பொடி கிடக்காம் என குருபரன் சொன்னார்.

அலுவலகத்திற்கு புறப்பட்ட மனைவிக்கு விடயத்தை சொல்லிவிட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு செல்வதற்கு புறப்பட்ட போது அச்சத்தால் அங்கு போவது ஆபத்தில்லையா என என்னை தடுத்தார்கள்.

இப்படியான விடயங்களில் தடுத்தாலும் நான் கேட்பதில்லை என அவர்களுக்கு தெரியும். அவர்களின் பேச்சை கேட்கும் நிலையிலும் அப்போது நான் இருக்கவில்லை. உடனடியாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு எல்லை வீதிக்கு சென்றேன்.

சம்பவம் நடைபெறுவதற்கு முன் தாண்டவன்வெளி திருமலை வீதியில் பத்திரிகையாளர் உதயகுமாருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு அலுவகத்தை நோக்கி சென்ற போதுதான் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

எல்லை வீதி வழியாக நடேசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நேர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே கைத் துப்பாக்கியால் நடேசன் மீது சுட்டிருக்கின்றனர். நான் சென்ற போது இரத்தம் கொப்பளித்தவாறு நடேசனின் உடல் வீதி ஓரத்தில் கிடந்தது. மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்தது.

இராணுவத்தினரும் பொலிஸாரும் நின்றனர். தூரத்தில் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் நடேசனுடன் நெருங்கிய நண்பர்களாக பழகிய சிலரும் நின்றிருந்தார்.

அந்த நேரத்தில் சடலத்திற்கு அருகில் வர பலரும் அஞ்சினார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த தனியார் பத்திரிகையாளர் சந்திரபிரகாஷ் அண்ணன் இங்கு நிற்கவேண்டாம். சுட்ட ஆக்களும் இங்கதான் நிக்கிறாங்கள். நீங்கள் நிற்பது ஆபத்து போய்விடுங்கள் என கூறினார்.

அங்கு வந்த பொலிஸார் சுடப்பட்டவரை தெரியுமா என்று கேட்டனர். தெரியும் அவர் எங்கள் சக பத்திரிகையாளர் என கூறிய போது சடலத்தை அடையாளம் காட்டி பொறுப்பேற்க முடியுமா என கேட்டனர். நான் ஆம் என்றேன்.

எனக்கு ஏற்கனவே தெரிந்த பறங்கி இனத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தான் இச்சம்பவம் நடந்தது. அவர் வீட்டில் நின்று அவதானித்து கொண்டிருந்தார்.

அவரிடம் சென்று நடந்த சம்பவத்தை கேட்டேன். சொல்வதற்கு தயங்கினார்கள். அந்த வீட்டுக்கார வயோதிபர் என்னுடன் நெருங்கிய பழக்கம் என்பதால் தனியாக அழைத்து சென்று சில தகவல்களை சொன்னார்.

இருதயபுரம் இராணுவ முகாமில் இருக்கும் கருணா குழுவை சேர்ந்த இருவர் தான் மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டார்கள். அவர்கள் சுட்டு விட்டு திருமலை வீதிப்பக்கம் சென்று விட்டு சில நிமிடங்களில் திரும்பி வந்து இறந்து விட்டாரா என பார்த்துச் சென்றனர் என கூறினார்.

5 நிமிட இடைவெளியில் பிள்ளையானும் வந்து பார்த்து சென்றதாக அவர் சொன்னார். அவருக்கு இயக்கத்தில் இருப்பவர்களை பெரும்பாலும் தெரியும். அவரின் மகனும் முன்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்.

என்னிடம் காவல்துறையினரும் பின்னர் மரண விசாரணை நடத்திய நீதிபதியும் வாக்கு மூலங்களை எடுத்தனர். அப்போது கொலையாளி இருவரின் பெயர்களையும் அவர்களிடம் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீதிபதி சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்த்து விட்டு வைத்தியசாலைக்கு கொண்டுவருமாறு சொன்னார். வேன் ஒன்றை ரெலோ பிரசன்னா கொண்டுவந்திருந்தார். சடலத்தை தூக்கி வானில் ஏற்ற வேண்டும்.

நான் ஒருபக்கம் பிரசன்னா மறுபக்கம் தூக்கினார். நடேசன் மிக உயரமானவர். எங்களால் தூக்க முடியாது கஷ்டப்பட்டோம். உதவிக்கு வருமாறு சற்று தூரத்தில் தள்ளி நின்றவர்களை அழைத்தோம். யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இறுதியில் அங்கு நின்ற பொலிஸ்காரர் ஒருவரே வானில் சடலத்தை ஏற்ற உதவினார்.

இச்சம்பவத்தை அறிந்த மட்டக்களப்பு தமிழ் பத்திரிகையாளர்கள் அனைவரும் அச்சத்தால் உறைந்து போய் இருந்தார்கள். வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு போனதும் அங்கு தவராசா வந்து சேர்ந்தான்.

மனதுக்கு ஆறுதலாக இருந்தது. அந்த நேரத்திலிருந்து சடலத்தை யாழ்ப்பாணம் கரவெட்டிக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வரை என்னுடன் கூட இருந்த ஒரே ஒரு மட்டக்களப்பு பத்திரிகையாளர் தவராசா மட்டும் தான். சடலத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதே நல்லது என நடேசனின் குடும்பத்தினருக்கு கூறிய போது அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.

அன்றிரவு தமிழ் செல்வன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் வவுனியாவில் வைத்து தாங்கள் சடலத்தை பொறுப்பெடுத்து யாழ்ப்பாணம் வரை ஊர்வலமாக கொண்டு செல்வதென்று தீர்மானித்திருப்பதாகவும் சொன்னார்.

இந்த விடயத்தை நான் நடேசனின் குடும்பத்திற்கு கூறவில்லை. சடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு முதல் காலையில் நடேசனின் மட்டக்களப்பு வீட்டில் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

அஞ்சலி செலுத்த வந்த மட்டக்களப்பு அன்பர் ஒருவர் என்னிடம் சொன்னார். நடேசனோ அல்லது நீங்களோ யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியாது. இன்றுதான் தெரிந்து கொண்டேன் என சொன்னார். விடுதலைப்புலிகளின் நகரப் பொறுப்பாளர் சேனாதி தலைமையிலான சிலர் அஞ்சலி செலுத்தி விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை போர்த்தி சென்றார்கள்.

நெல்லியடியிலிருந்து வந்திருந்த நடேசனின் அக்கா அந்த கொடியை தூக்கி எறிந்து பிரச்சினை ஏற்படுத்தினார். புலிக்கொடியுடன் சடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு போக மாட்டோம் என கூறினார். அவ கடும் புலி எதிர்ப்புவாதி போல தெரிந்தது. மறுநாள் காலையில் நடேசனின் குடும்பம் மற்றும் நான் தவராசா உதயகுமார் ஆகியோர் மூன்று வேன்களில் யாழ்ப்பாணம் புறப்பட்டோம்.

நாங்கள் புறப்பட்டு சில மணி நேரத்தில் மன்னம்பிட்டியை கடந்து சென்று கொண்டிருக்கும் போது தனியார் பத்திரிகை ஒன்றின் அலுவலகத்திலிருந்தும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிலிருந்தும் தொலைபேசி எடுத்தார்கள்.

நடேசனின் சடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு போகவிடாது இராணுவம் தடுத்து வைத்திருக்கிறதாமே புலிக்கொடியுடன் சடலத்தை கொண்டு சென்றதால் நீங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என தகவல் வந்திருக்கிறது என கேட்டார்கள்.

பிழையான தகவல் ஒன்றை யாரோ கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள். பின்னர் அந்த பொய் தகவலை பரப்பியவர்கள் கருணா குழு என அறிந்து கொண்டேன்.

வவுனியா எல்லையில் வைத்து புலித்தேவன் தலைமையில் வந்த விடுதலைப்புலிகள் பூதவுடலை கையேற்றார்கள்.

பெரிய அளவில் வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் அஞ்சலி நிகழ்ச்சிகளை விடுதலைப்புலிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பதை நடேசனின் அக்கா முதல் அவர்களின் குடும்பத்தினர் அறிந்து கொண்டனர். மட்டக்களப்பில் புலிக்கொடியை தூக்கி எறிந்த நடேசனின் அக்கா வன்னியில் மௌனமாக இருந்தார்.

வவுனியா எல்லையில் விடுதலைப்புலிகள் நடேசனின் பூதவுடலை பொறுப்பேற்றதும் எங்களுடன் கூட வந்த உதயகுமார் தான் தொடர்ந்து வரவிரும்பவில்லை என கூறி மட்டக்களப்புக்கு திரும்பி சென்று விட்டார்.

எனக்கு கவலையாக போய்விட்டது. அப்போது தவராசா சொன்னான் அண்ணன் நான் கடைசி வரைக்கும் உங்களுடன் வருவேன். வருவது வரட்டும் என துணிச்சலுடன் யாழ்ப்பாணம் வந்தான்.

மறுநாள் கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த நாள் நெல்லியடியில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நடேசன் படித்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கொழும்பிலிருந்து சுதந்திர ஊடக அமைப்பை சேர்ந்த சுனந்த தேசப்பிரிய உட்பட சிங்கள ஊடகவியலாளர்களும் வந்திருந்தனர்.

நெல்லியடி சுடலையில் தகனம் செய்யப்பட்ட பின் சுனந்த தேசப்பிரிய என்னை சந்தித்து மட்டக்களப்புக்கு செல்ல வேண்டாம் என ஆலோசனை கூறினார். கொழும்புக்கு வருமாறும் மாற்று ஏற்பாடு ஒன்றை செய்வதாகவும் கூறினார்.

மட்டக்களப்புக்கு திரும்பி சென்ற தவராசா அங்கு தொடர்ந்து இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து கொண்டு கொழும்புக்கு வந்து சேர்ந்தார். என நடேசனின் நண்பர்களில் ஒருவரான ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம் அவர்கள் நடேசனின் படுகொலை சம்பவம் பற்றிய கட்டுரையில் எழுதி உள்ளார்.

நடேசன் மட்டும் அல்ல இலங்கையில் சுமார் 45 ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நீதி விசாரணைகளை இன்றுவரை அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை.

ஆனால் ஊடகவியலாளர் நடேசனின் படுகொலையில் நேரடியாக கருணா, பிள்ளையான் ஆகியோரின் தொடர்பு குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்கிறது. இதற்கான பதிலை அவர்கள் முழு உலகிற்கும் சொல்லவேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

நடேசனை அன்று படுகொலை செய்தது கருணா, பிள்ளையான் இல்லை என்றாலும் அவரின் படுகொலை குறித்த உண்மைகள் அவர்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது. எனவே அது குறித்த உண்மைகளை வெளியிடுவது அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும்.

S.நிலாந்தன்

இளைய தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டிய காலம் !

அவர்கள் நந்திக்கடலை ஒரு கோட்பாடாக/ போராட்டத்தின் தொடர்ச்சியாக/ வெற்றியின் உள்ளடக்கமாகப் பார்ப்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது.

இளைய தலைமுறையினர் தந்த பெரும் நம்பிக்கைகளுடன் தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவு நாட்கள் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

தோல்வியையும்/ அவலத்தையும் முன்னிறுத்தும் அரசியல் எம்மை எப்போதும் நீதியை நோக்கி நகர்த்தாது. அத்தோடு அது ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாகவும் உருத் திரளாது.

நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் இதுதான்.

இந்தப் பத்தாவது ஆண்டு நினைவையொட்டி எழுதப்பட்ட ஆய்வுகள்/ கட்டுரைகள்/ பேச்சுக்கள்/ உரைகளில் கூட விதிவிலக்கில்லாமல் ஒரே ஒப்பாரி. தோல்வி உளவியல் அப்படியே வெளிப்பட்டது.

இதிலிருந்து பெற்றுக் கொள்ளவோ/ கற்றுக் கொள்ளவோ எதுவுமில்லை.

ஆனால் இளைய தலைமுறையிடம் இறுதிப் போர் குறித்து எந்தப் புகாரும் இல்லை.

அவர்கள் முள்ளிவாய்க்காலிலிருந்து விலகி நந்திக்கடலிலேயே தமது கவனத்தைக் குவித்ததால் வந்த தெளிவு அது.

அவர்கள் நந்திக்கடலை ஒரு கோட்பாடாக/ போராட்டத்தின் தொடர்ச்சியாக/ வெற்றியின் உள்ளடக்கமாகப் பார்ப்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது.

2009 தமிழின அழிப்பு நேரத்தில் 16 வயதே நிரம்பிய சிறுவன் மிகத் தீவிரமாக புலத்தில் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு இன அழிப்பை தடுத்து நிறுத்த முடியாததன் காரணமாக பலரையும் போன்று மிகவும் சோர்ந்து போயிருந்தான்.

பிறகு திடீரென்று காணாமல் ஒதுங்கிப் போய்விட்டான்.

கிட்டத்தட்ட அப்படி ஒருவன் இருப்பதையே நானும் மறந்தே போயிருந்தேன்.

திடீரென்று சில மாதங்களுக்கு முன்பு தொடர்புக்கு வந்து நந்திக்கடல் குறித்து எனக்கே வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.

‘அது சரி இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய் ?’ என்று நான் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலில் வந்த பெருமிதம் எனக்கு இன்னும் அடங்கவில்லை.

‘அண்ணே தொடர்ந்து சிந்தித்ததில் தலைவர் காட்டிய வழியின் படி அடுத்த கட்டப் போராட்டம் என்னவென்று தெளிவாகத் தெரிந்து விட்டது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற அம்மாவின் கனவை தூக்கி எறிந்து விட்டு ‘ international relations’ கற்கை நெறிக்கு பதிவு செய்து படித்து தற்போது Self – determination (சுய நிர்ணய உரிமை) இல் PhD செய்கிறேன் என்றான்.

அது மட்டுமல்ல, வேறு சக நண்பர்கள் international criminal law/ National security / Peace and War conflicts / International human rights போன்ற பல துறைகளில் PhD செய்வதாகச் சொன்னபோது மிரண்டே போனேன்.

சத்தமில்லாமல் எவ்வளவு தூரம் நகர்ந்து விட்டார்கள்.

இங்கு பத்து வருடங்களாக அமைப்புக்களை உருவாக்கி வைத்து கொண்டு ‘நண்டுப் பண்பாட்டு’ அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழின அழிப்புக் குற்றவாளிகளை / அவர்களுக்கு உடந்தையாக இருந்த அனைத்துலக சதியாளர்களை ஒரு நாள் இவர்கள் அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி நீதி கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஆனால் அதற்கு முன்னையவர்கள் வழி விட வேண்டும்.

அடுத்து அண்மையில் சுவிசில் வெளியிடப்பட்ட தமிழீழ நடைமுறை அரசு குறித்த ‘Structures of Tamil Eelam: A Handbook’ என்ற ஆங்கில நூலை எழுதிய மாணவிக்கு வயது இருபது.
இவரும் சட்டத்துறையில் Double degree செய்பவர்தான்.

இவர் தமிழின அழிப்பு நேரம் பத்து வயது சிறுமி. இடையில் என்னவொரு பாய்ச்சல்.!

நந்திக்கடல் கோட்பாடுகளை கிரமமாக உள்வாங்கியதால் எல்லோரையும் போல் ஒப்பாரி வைக்காமல் நடை முறை அரசை ஆவணப்படுத்துவதன் அரசியல் புரிந்து அதை சக நண்பர்களுடன் சேர்ந்து ஆவணப்படுத்தியுள்ளார்.

எமது நீதிக்கான பயணத்தில் இது ஒரு பாய்ச்சல் என்று துணிந்து சொல்வேன்.

பழைய பஞ்சாங்கம் பாடுபவர்கள் இளைய தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. இனியும் ஒதுங்காது முரண்டு பிடித்தால் வரலாறு உங்களை வேறு விதமாகத்தான் பதிவு செய்யும்.

முதல் தசாப்த நினைவுகூரல் !

தமிழ் சமூகத்தில் இறந்தவரை நினைவுகூரல் என்பது ஒரு பண்பாடு. இந்தப் பண்பாடு சங்ககாலத்திற்கு முந்தைய பெருங்கற்கால பண்பாட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. தம் சமூகத்திலிருந்து இறந்தவர்களுக்கு மறுவாழ்வு உண்டு. அவர்கள் இறந்தபின்னும் இன்னொரு உலகத்தில் வாழ்கிறார்கள் என்கிற நம்பிக்கையோடு அவர்தம் உடலை ஈமத்தாழிகளில் வைத்து, அதற்குள் பொன் பொருள் முதலானவற்றை இட்டுப் புதைத்துப்பாதுகாக்கும் மரபைத் தமிழர் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம், வன்னி, பொன்பரிப்பு எனப் பல இடங்களிலும் இதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இந்தப் பண்பாடு காலமாற்றம் பெற்று, இன்று பல்வேறு விதமாகவும் இறந்தவர்களை கடவுளுக்கு நிகராக வைத்து வணங்கும் முறை தமிழ் சமூகத்தில் இயங்குநிலையில் இருப்பதை அவதானிக்க முடியும். இவ்வாறாக இறந்தவர்களைப் புனிதர்களாகக் கருதும், அதனைப்போற்றி வணங்கும் உயரிய பண்பாட்டுப் பழக்கத்தைத் தமிழ் சமூகம் தனக்குள்வைத்திருக்கிறது.

இலங்கையில் இடம்பெற்ற முப்பதாண்டுகால ஆயுதப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அவை அனைத்தும் அவலச் சாவு என்ற வகையறாவுக்குள் வைத்துப் பார்க்கப்படுபவை. இந்த ஆத்மாக்கள் அலைந்து திரிபவை என்ற நம்பிக்கை கூட சிலர் மத்தியில் உண்டு. 2009 மே 18 வரை இடம்பெற்ற போரென்பது அவலங்களுக்கும், குரூரங்களுக்கும் மேலால் நிகழ்ந்ததுதான். அதுவும் இறுதிப்போர் நாட்களான குறித்த மூன்றுமாத காலங்களுக்குள்ளும் இறந்தவர்களின் எண்ணிக்கையை யாருமே கணக்கிடவில்லை. மகனாக, மகளாக, தங்கையாக, தமக்கையாக, தாயாக, தந்தையாக எல்லாம் கடந்து குடும்பமாக மாண்டுபோனார்கள். அவர்தம் உடல்கள் எந்தப் புனிதமுமற்று பசித்தலைந்த நாய்களுக்கும், காகங்களுக்கும், வல்லுறுகளுக்கும் பசிதீர்க்கவே பயன்பட்டன. தசைப் பிண்டங்களாக சிதறிவிட்ட மனித உடல்களைக் கூட்டாக ஒரு பெட்டியில் அள்ளி பெரியதொரு குழியில் கொட்டி மூடிவிடும் நிலமைகளும் ஏற்பட்டிருந்தன.

எனவே தமிழ் சமூகம் மரபாக பின்பற்றிவந்த இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் முறைகள் இங்கு சாத்தியப்பட்டிருக்கவில்லை. போர் அமைதிக்குத் திரும்பிய பின்னர் அதனைச் செய்யத்துணிந்தனர். கூட்டாகப் பலரும் முள்ளிவாய்க்கால் என்கிற துயர்நிலத்தில் கொல்லப்பட்டமையால் அவ்விடத்தில் இறந்த அனைவருக்கும் வணக்கம் செலுத்துவதே பொறுத்தமானதாக இருந்தது.

இவ்வாறு முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் இறந்தவர்களை நினைவுகூரல் கடந்த பத்தாண்டுகளுக்குள் பெரும் சவால்மிக்கதாகவே இருந்துவந்திருக்கின்றது. முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் நினைவுகூரல் செய்வதே பயங்கரவாதமாகப் பார்க்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூரலுக்கு தடையில்லை என அரசு அறிவித்திருந்தாலும், நீதிமன்றத்தினூடாகவும், பொலிஸாரின் ஊடாகவும் கட்டுப்படுத்தி வந்தது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு விக்கினம் நிகழ்ந்திருக்கிறது. தடை இருந்திருக்கின்றது. அச்சமும், கதறியழக்கூட சுதந்திரமற்ற நிலையிலுமே துணிந்தவர்கள் மட்டும் கூடி அனுஷ்டிக்கும் நிகழ்வாக இது இடம்பெற்று வந்துள்ளது.

இம்முறையும் அதே நிலைமைதான். போர் நிறைவுற்று பத்தாண்டுகள் கடந்திருக்கின்றன. எனவே இந்த ஒரு தசாப்தத்தை பல்லாயிரக்கணக்கான தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அணிதிரட்டி, பேரவல நினைவுநாளை உணர்வுபூர்வமாக நிகழ்த்தவே தமிழர்கள் திட்டமிட்டிருந்தனர். கடந்த வருடங்களில் நிகழ்ந்த அரசியல் குழப்பங்கள் போலல்லாமல், இம்முறை நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்கி அவர்களின் தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து செய்வதற்காகவே உரையாடல்கள் ஆரம்பித்திருந்தன.

ஆனால் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் நாட்டு நிலைமைகளைத் தலைகீழாக்கியது. மீண்டும் பயங்கவரவாதத் தடைச்சட்டமும், அவசரகாலத் தடைச்சட்டமும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. குறித்த சட்டங்கள் நாட்டின் ஏனைய பாகங்களைவிட வடக்கில் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்ற விமர்சனம் பரவலாகவே முன்வைக்கப்படுகிறது. அதற்கு உதாரணமாக, இறுதிப்போர்க்கால பேரவல பதாகைகளையும், விடுதலைப் புலிகளின் தலைவரினது படத்தையும் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான பல்கலைக்கழக மாணவர்களின் சம்பவத்தை அனைவரும் எடுத்துப்பேசினர்.10

குறித்த கைது சம்பவங்கள் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு தினத்தின் மீதான எழுச்சியைக் குறைப்பதற்கான பொறியாகவே தமிழர்கள் பார்த்தனர். கடந்த வருடம் இடம்பெற்ற பேரவல நினைவு நிகழ்வை யாழ். பல்கலைக்கழக மாணவர்களே முன்னின்று நடாத்தியிருந்தனர். இம்முறையும் நினைவுகூரலுக்கான பொதுகட்டமைப்பு உருவாக்கத்திலும், மக்களை அணிதிரட்டுவதிலும் அவர்களின் பங்களிப்பு பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் கைதானது நினைவை அனுஷ்டிக்கத்தயாரான மக்களிடையே அச்சவுணர்வை ஏற்படுத்தியது. அத்துடன் வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கவும் வாய்ப்புண்டு எனப் பலரும் கருதி முள்ளிவாய்க்காலுக்கு நினைவுகூரலுக்காக செல்லும் திட்டத்திலிருந்தே பின்வாங்கிவிட்டனர்.

ஆனாலும் நினைவுகூரல் இடம்பெற்றது. முல்லைத்தீவைச் சேர்ந்த நினைவுகூரலுக்கான பொதுக்கட்டமைப்பு என்கிற அமைப்பின் சார்பில் ஏற்பாடுகள் இடம்பெற்றன. மே 18 ஆம் திகதிக்கு மூன்று தினங்களுக்கு முன்பதாக, நினைவேந்தல் குறித்த நிகழ்வொழுங்குகளை குறித்த அமைப்பு வெளியிட்டது. அதற்கு ஏற்றாற்போல இராணுவத்தின் சார்பிலும், இறந்தவர்களை நினைவுகூர தடையில்லை என்ற அறிவிப்பு வந்தது. ஆனாலும் நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள வருபவர்கள், பயணிக்கும் வாகனங்கள் தீவிரமாக சோதனைக்குட்படுத்தப்பட்டன. முள்ளிவாய்க்காலுக்கு வருமொருவர் குறைந்தபட்சம் 6 இடங்களிலாவது இராணுவ சோதனையை எதிர்கொண்டார். இவ்வளவையும் தாண்டி மே.18 2019 அன்று பேரவல நினைவுகூரல் நிகழ்வுகள், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றன.

குறித்த நாளில் காலை 10.30 மணிக்கு இறந்தோருக்கான அகவணக்கத்துடன் இடம்பெற்ற நிகழ்வில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். தாம் இழந்த உறவுகளை நினைத்து கதறியழுதனர். ; தன் தாயையும், தன் ஒற்றைக் கையையும் இழந்த சிறுமி வலிததும்பிய கண்களோடு பொதுத்தீபத்தை ஏற்றினாள். அனல்கொதிக்கும் வெயில் கால் உருக நின்று தீப்பந்தங்களை ஏற்றி அஞ்சலித்தனர். போரில் கூட்டாக அஞ்சலிக்கும்போது கிடைக்கும் ஆரத்தழுவல்களைப் பெற்று ஆறுதலடைந்தனர். நிகழ்வின் பிரகடனத்தை சமயப்பெரியார்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வாசித்தனர். அந்தப் பிரகடனத்தில் அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் சமூகம் சார்பில் சொல்லப்படவேண்டிய செய்தியிருந்தது.

நிகழ்வு திடீரென ஏற்பாடாகியிருப்பினும், ஒழுங்குகள் சிறப்பானதாக இருந்தன. ஒவ்வொரு தீப்பந்தத்தின் கீழம் வைக்கப்பட்டிருந்த தென்னை, தேக்கு மரக்கன்றுகள் இறந்தோர் நினைவாக வீடுகளில் நடுகை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்தன. இறந்தவரின் பெயரில் புதிய விதையொன்றை மீள நடுதல் என்கிற நிலைப்பாட்டில் இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டிருக்கலாம். அனைத்து மரக்கன்றுகளையும் மக்கள் தம் கையோடு எடுத்துச்சென்றமை குறித்த நினைவு நிகழ்வின் அடையாளமாகவே அன்றையநாளில் இருந்தது. சோதனைச் சாவடிகளில் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வுக்கு சென்றுவருபவர்களை அடையாளம் காண்பதற்கும் இலகுவாக இருந்தது.

நினைவு நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்பட்ட உணவும் கலந்துகொண்ட அனைவருக்குமே பகிரப்பட்டது. இறுதிப்போர் நாட்களில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. வாரக்கணக்கில் கிடைக்கின்ற நீரை மட்டுமே அருந்தி உயிர்வாழ்ந்தவர்களும் இருக்கின்றனர். இவ்வாறான வேளையில் கிடைக்கின்ற சொற்ப அரிசியில் நீரையும், உப்பையும் சேர்த்து கஞ்சி சமைத்து வழங்கும் முறையொன்று முள்ளிவாய்க்காலில் பின்பற்றப்பட்டது. அதனை மக்கள் வரிசையில் நின்று வாங்கிப் பருகி பசிபோக்கினர். இவ்வாறு கஞ்சிக்காக வரிசையில் நின்றபோது எறிகணைத்தாக்குதல்களில் சிக்கி பலர் இறந்துபோன சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. அந்தக் கஞ்சியை மறக்ககூடாது என்பதற்காக இம்முறை முள்ளிவாய்க்கால் கஞ்சி வெளியிடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு, நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு அது ஒருவித அவல உணர்வை ஏற்படுத்தியது.

கொதிக்கும் வெயிலில் வியர்வையும், கண்ணீரும் பெருக்கெடுக்க, சுடு மணலில் காலணியற்ற கால்களை புதைத்து – இதைவிட வெம்மையான பொழுதொன்றில் இனப்படுகொலையான லட்சக்கணக்கான தமிழர்களை நினைவுகூருதல் மிகவும் கனதியானது. உயிர்ப்பானது. வலிமிகுந்தது. கொன்றொழித்த சிப்பாயையும் குற்றவுணர்வால் மனங்கொதிக்க வைப்பது. அங்கு வழங்கப்பட்ட மரங்களும், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரும் மர்னுட அவலத்தை – இனப்படுகொலையை சந்ததி கடத்துபவை.

ஊறுகாய்| ஜெரா

முள்ளிவாய்க்காலிருந்து ஒரு பகிரங்க அறைகூவல் !

mதமிழ்த் தேசிய இனத்தின் விடிவிற்கான உரிமைக்குரல் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் ஒரு கட்டமைப்புசார் இனப்படுகொலையுடன் தமிழர்களின் நியாயமான ஆயுத போராட்டம் மே 18 இல் மௌனிக்கச் செய்யப்பட்டது.

27 சர்வதேச நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் சிறீலங்காவின் ஆட்சியாளர்களுடன் கை கோர்த்து இனப்படுகொலை அரங்கேற்றத்திற்கு அச்சாணியாக இருந்தன. இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டு பத்தாண்டுகளாகிவிட்டன. ஆனால் இன்றும் கட்டமைப்பு சார் இனவழிப்பு செவ்வனே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழனம் எழுபது ஆண்டுகளாக போராடுகின்றது. சனநாயக ரீதியில், ஆயுத ரீதியில் என்பதையெல்லாம் கடந்தே வந்திருக்கின்றது.

2009ஆம் ஆண்டு மே 18 மௌனிப்புக்கு பின்னர் எம் தமிழினத்தின் விடுதலையை தன் தோளில் சுமக்கும் பொறுப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எடுத்தது.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் நாங்களே என்று சிங்கள பெருந்தேசியவாதிகளின் முன்னிலையில் மார்பு தட்டினீர்கள். வெளிநாடுகள் உட்பட எங்கு சென்றாலும் உங்கள் மீது தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற முத்திரையையே பதித்தீர்கள். அதுமட்டுமா, 2009 இலிருந்து 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 பாராளுமன்ற தேர்தல் வரையில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழ் மக்களிடத்தில் இன்னுயிர்களை ஈகம் செய்தவர்களையும், உறவுகளைத் தொலைத்தவர்களையும், சிறையில் வாடிக்கொண்டிருப்பவர்களையும் பிரதானப்படுத்தி ஆணை கேட்டீர்கள். பாதிக்கப்பட்ட நாமும் பெரும் நம்பிக்கையில் பெருவாரியாக வாக்குகளை அள்ளி வழங்கினோம்.

எமது நியாயமான கோரிக்கைளையும், உரிமைகளையும் பெற்றுக்கொடுத்து அபிலாசைகளை பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் ஏகப்பிரதிநிதித்துவ அந்தஸ்து வழங்கிய கூட்டமைப்பினரான நீங்கள் அல்லவா இதற்கான அனைத்துப் பொறுப்பினை ஏற்க வேண்டும். தற்போது உறவுகள் மறக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு மன கிலேச்சத்துடன் அன்றாட பொழுதை நகர்த்த வேண்டிய மிக மோசமான நிலைக்குள் அல்லவா நாம் இருக்கின்றோம். ஆனால் தெற்காசியாவின் சாணக்கியன் என்று பெயர் பூத்திருக்கும் சிரேஸ்ட தலைவர் சம்பந்தன் ஐயா எமது நலன்களை மறந்து அரசாங்கத்துடன் தேனிலவு அல்லவா கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்.

இத்தனை காலம் சென்றும் தென்னிலங்கையை நம்பிக்கொண்டிருக்கும் உங்களின் பெரும் தன்மையை என்னவென்று சொல்வது. அன்று, முள்ளிவாய்க்கால் எனும் ஒரு குறுகிய நிலப்பரப்பில் வன்னி மாவட்ட மக்களாகிய நாம் முடக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நன்கறிந்திருந்த ஐயா சம்பந்தரும் அவருடைய பரிவாரங்களும் எம்மை விடுவிக்கும்படி ஒரு உரத்த குரலை உங்களால் முன்வைக்க முடியாமல் போனதேனோ?

முள்ளிவாய்க்காலில் விதையாகிப்போன தேசிய இன விடுதலையை நேசித்த ஒவ்வொரு ஜீவனினதும் ஏக்கங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உள்ளிட்ட ஒவ்வொரு பிரதிநிதியினதும் மனச்சாட்சியை தட்டவில்லையா?

யுத்தம் என்ற பெயரில் எம்மீது நடாத்தப்பட்ட கொடூரத்தாக்குதல்கள் முடிவிற்கு வந்ததன் பின்னர் நாம் அனைவரும் வவுனியா மெனிக்பாம் திறந்தவெளி சிறைச்சாலைக்கு வந்தபொழுது அரசாங்கம் எங்களைப் பார்ப்பதற்கு உங்களுக்கு அனுமதி மறுத்திருந்தது.

எங்களை திறந்தவெளி சிறைச்சாலையில் வைத்திருந்து சனாதிபதித் தேர்தலையும், 2010ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலையும் அரசாங்கம் நடத்தியிருந்தது. அப்பொழுதும் நாங்கள் எங்களின் உயிர்களைத் துச்சம் என நினைத்து நீங்கள் கைகாட்டிய சனாதிபதி வேட்பாளருக்கும், நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கும் வாக்களித்தோம். சம்பந்தன் ஐயா அவர்களே, பொதுத்தேர்தல் முடிந்த பின்னர், மீள்குடியேற்றம் ஆரம்பித்திருந்த வேளையில், அப்பொழுதுதான் மீள்குடியேறியிருந்த எங்களை நீங்களும் உங்களது நாடாளுமன்ற குழுவினரும் எங்களை வந்து எமது இடங்களில் சந்தித்தீர்கள்.

மீள்குடியேற்றம் என்ற பெயரில் நாங்கள் எப்படி ஒரு வெட்டவெளி காணியிலும் புல்மண்டியிருந்த பற்றைகளிலும் இரவோடு இரவாக இறக்கிவிடப்பட்டிருந்தோம் என்பதை நீங்கள் நேரில் கண்டறிந்தீர்கள்.இடிந்த பாடசாலை கட்டிடங்களையும், மரங்களின் கிளைகளில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஏணைகளையும் கண்டு உங்கள் குழுவினர் கலங்கி நின்றதையும் நாங்கள் அவதானித்தோம். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை எடுத்துச் சொன்னதை நீங்களும் குறிப்பெடுத்துக் கொண்டீர்களே நினைவிருக்கா உங்களுக்கு?ஆண் துணையின்றி கொடுத்த தகரங்களையும், இரும்புக் கம்பிகளையும் கொண்டு தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளை மரக்கிளைகளில் கட்டிய ஏணையில் கிடத்தி பெண்கள் ஒன்று திரண்டு கொட்டில்கள் அமைத்ததைக் கண்ணுற்றபோதும் உங்களது இதயங்கள் வலிக்கவில்லையா?

எவ்வளவு பேர் தங்களது இன்னுறவுகளைக் காணவில்லை என்று உங்களிடம் ஓலமிட்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் இவ்வளவுபேர் இறந்துள்ளனர் என்றும் இவ்வளவு பெண்கள் கணவனை இழந்துள்ளனர் என்றும் எத்தனைபேர் உங்களிடம் புள்ளி விபரம் வழங்கினர். நீங்கள் எடுத்த நடவடிக்கையை வெளிப்படுத்துவீர்களா? எத்தனை பாடசாலை அதிபர்கள் உங்களிடம் இந்தப் பாடசாலையில் குறைந்த பட்சம் இத்தனை மாணவர்கள் இறந்துள்ளனர் என்று முறையிட்டிருப்பர்? அவற்றை நீங்கள் கணக்கெடுத்ததுண்டா?

மக்கள் தெரிவித்த கருத்துக்களையும் வேதனைகளையும் செவிமடுத்து மீண்டும் வந்து ஆவணப்படுத்துவதற்கான தரவுகளைப் பெற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்தீர்களே இன்றுவரை அதனைச் செய்யாததன் காரணமென்ன? இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினரும், தொல்பொருள் திணைக்களத்தினரும், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களமும், வனப்பாதுகாப்பு திணைக்களமும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையும் கையகப்படுத்திய காணிகளின் மொத்த அளவும் மக்கள் போராட்டத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவும் எஞ்சிய காணிகளின் அளவும் உங்களிடம் இருக்கிறதா?

வடக்கு-கிழக்கின் நிலத்தொடர்பை நிரந்தரமாகப் பிரித்து, எமது வாழிடங்களிலேயே எம்மை இரண்டாந்தரக் குடிகளாக மாற்றும் நோக்கில் வலிந்து சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் அரசின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தீர்களா? உங்களால் புதிதாக அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவர்களுக்கு எம்மினம் பட்ட துன்பங்களை எடுத்துரைத்து அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினீர்களா? எமது விடுதலைப் போராட்டம் பற்றியும் நாம் கடந்துவந்த பாதை பற்றியும் கொஞ்சமாவது அவர்களுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டியிருப்பார்களா?எமது உறவுகள் தெரிவித்த கருத்துக்களை வைத்து அறிக்கை தயாரித்து இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் கொடுத்திருந்தீர்கள். அதன் தொடர்ச்சியாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிடுவீர்களா?

கிடைத்தற்கரிய துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி இராஜதந்திர அணுகுமுறையை மேற்கொண்டு எம்மினத்தின் விடுதலையை வென்றெடுப்பீர்கள் என்பதற்காகத்தானே நீங்கள் மூடிமறைத்த விடயங்களையும் திரைமறைவில் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் சகித்துக்கொண்டோம்.உங்களது அணுகுமுறை தற்போது சர்வதேச உதவிகளையும் கேள்விக்குட்படுத்திவிட்டதே. அரசாங்கத்துடன் ஒத்தூதி சகல தென்னிலங்கை ஆளும் வர்க்கத்தினரையும் காப்பாற்றிவிட்டீர்கள். அடுத்தநொடியே உங்களுக்கே பிரதிபலன் கிடைத்தாகிவிட்டது. இப்படியிருக்க எம் விடுதலை வேட்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கருதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பத்தாவது ஆண்டு வருகிறது.

உறவுகளை நினைவு கூருவதை யாரும் தடுக்கமுடியாது என்று அறிக்கை விடுவீர்களா? இல்லை அடுத்து தேர்தல்கள் என்பதால் நீங்களே முள்ளிவாய்க்கால் திடலுக்கு நேரில் வருவீர்களா என்று தெரியவில்லை. அது உங்களின் இராசதந்திரம்.

இப்போது வரையில் நாங்கள் நம்பிக்கெட்டவர்களே! உங்களின் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. தீவிரவாதத்தின் பேரால் எமது உரிமைப்போராட்டமே முற்றாக முடங்கும் அபாய நிலையில் இருக்கின்றோம். ஆகவே உங்கள் தலைமையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எந்தவொரு நபரும் புனிதம் நிறைந்த முள்ளிவாய்க்கால் திடலில் காலடி பதிப்பதை தவிர்ப்பதே சிறந்தது. அரசியலுக்காக நீலிக்கண்ணீர் வடியுங்கள். ஆனால் ஆஃகுதியானவர்களின் நெஞ்சில் ஏறி நின்று உங்கள் நாடகத்தினை அரங்கேற்றாதீர்கள் என்பதே எமது தயவான கோரிக்கை. ஆகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ‘நினைவேந்தல் நிகழ்வு’ என்ற கோட்பாட்டில் நடைபெறுவதற்கு வழிசமைத்து ஒதுங்கிவிடுவதே சாலச்சிறந்தது

– கணிதன்-

முள்ளிவாய்க்காலும், தமிழர் ஆவணப்படுத்தலும் !


இன்று தமிழர் வாழ்வியலில், அரசியலில் அனைத்துமே முள்ளிவாய்க்காலுக்கு முன், முள்ளிவாய்க்காலுக்குப் பின் என்றே ஆகிவிட்டது. இவ்விடயப்பரப்பில் ஆய்விற்கு உள்ளாக வேண்டிய, பல விடயதானங்கள் தமிழர் வாழ்வியலிலும், தமிழர் அரசியலிலும், தாயகத்திலும், புலம்பெயர் வாழ்விலும் தமிழரிடையே நிறைந்து பரவிக் கிடக்கின்றன. இது குறித்த ஆய்வும் அதனூடான தீர்வுகளுமே அப்பரப்புகளை தொடர்ந்தும் ஆக்கபூர்வமான திசையில் இயக்கவல்ல இயங்கு சக்தியாகினும், இன்றைய நிலையில் அது குறித்த முனைப்புகள் அருகியேயுள்ளன. இந்நிலையில் அதில் ஒரு முக்கிய அங்கமான தரவுகளும், ஆவணப்படுத்தலும் குறித்து இங்கு பார்ப்போம்.

தமிழர் வாழ்வியல் உரிமைப் போராட்டத்தின் பலமான இயங்குநிலைகளில், லிடுதலை இயக்கத்தால் ஆரம்பத்தில் இருந்தே வலுப்பெற்று வந்த ஒரு முக்கிய பரப்புத் தான் ஆவண சேகரிப்பும், அவணப்படுத்தலும். அதில் காணொளி, ஒலிவடிவம், பதிப்பு, சர்வதேச ஒழுங்குமுறையிலான ஆவணம் என பல வடிவங்களில் அவற்றின் வீச்சு தொடர்ந்தும் வலுப்பெற்று முன்நகர்த்தப்பட்டது. தமிழர் அவலங்களையும், உரிமை மறுப்புகளையும், இனவழிப்பையும், அதற்கான பரிகாரங்களை நோக்கிய சர்வதேச நகர்வுகளிலும் இவற்றின் முக்கியத்துவம் சொல்லி மாளாது. தமிழருக்கு எதிரான தரப்புகளும் இவ்வாறான ஆவண முறைமை கொண்டே நீதியான தமிழர் வாழ்வியல் போராட்டத்தை மலினப்படுத்தும், பயங்கரவாதம் எனச் சித்தரிக்கும் கைங்கரியத்தை மேற்கொண்டு வந்தன, வருகின்றன.

இங்கு தாயகத்தில் முள்ளிவாய்காலுக்கு முன் வடிவமைக்கப்பட்டு, வலுப்பெற்ற பல வடிவங்களை இங்கு ஒருமுறை கவனத்தில் கொண்டோம் என்றால், இன்றைய எம் நிலை துல்லியமாக புலப்படும். ஆவணப்படுத்தல், பதிப்பித்தல், வெளியீட்டுப்பிரிவு. அரசறிவியற் கல்லூரி, அனைத்துலகச் செயலகம், நந்தவனம் – வெளிநாட்டு தமிழருக்கான தாயக தொடர்பாடல் சேவை மையம், தொடர்பகம். ஒளிப்படப்பதிவுப்பிரிவு – திரைப்படவெளியீட்டுப்பிரிவு, நிதர்சனம் – திரைப்படத் தயாரிப்பு, தர்மேந்திரா கலையகம் – திரைப்பட கலைகள் சம்பந்தமானது. விடுதலைப்புலிகள் மாதாந்த செய்தி இதழ், சுதந்திரப் பறவைகள் – பெண்கள் செய்தி இதழ், ஈழநாதம் – நாட்செய்தியிதழ், பத்திரிகை. வெளிச்சம் – மாத சஞ்சிகை, நாற்று மாத சஞ்சிகை. பொற்காலம் வண்ணக்கலையகம், அருச்சுனா – புகைப்பட கலையகம், புலிகளின் குரல் வானொலி, தமிழீழ வானொலி, தமிழீழ தேசியத் தொலைக்காட்சி, சமூக செய்தி இணையத்தளங்கள், தமிழ்மொழி காப்பகம் என தரவுகளின சேர்க்கைக்கும், ஆவணப்படுத்தலுக்கும் கருவிகளாக பல வடிவங்கள் உருவகம் கண்டு பெரு வளர்ச்சி கண்டு நின்றன.

இந்நிலையில் தொடர்ந்தும் வியாபித்து வலுப்பெறவேண்டிய ஆவணப்படுத்தில் நடைமுறை, முள்ளிவாய்காலுக்குப் பின்னரான காலத்தில், அதற்கு முன் கொண்டிருந்த ஆவணங்களை கூட இழந்து வருவது மட்டுமின்றி, புதிய ஆவணப்படுத்தலுக்கான எத்ததைய முன்னெடுப்பும் அதற்கான பார்வையும் அற்று வேறு இருக்கிறது. எந்தச் சக்திகள் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் நின்றனவோ, அதே சக்திகள் தான் ஏற்கனவே இருக்கக்கூடிய ஆவணங்களை கூட இல்லாதொழிப்பதில், கடந்த 10 ஆண்டுகளாக அதேமுனைப்புடன் உள்ளன என்பது தான் யதார்த்தமான உண்மையாகும். இதற்கு நம்மவர்களும் துணைபோகின்றனர் என்பது தான் பெருவலி தரக்கூடிய விடயமாகும்.

நிசோர் என அமைந்த வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் செயலகம், ஈழத்தமிழர் மனித உரிமைகள் மீறல்களை சர்வதேச நியமத்தில் பதிவிற்குள்ளாக்கியது. அத்தகைய முயற்சி முள்ளிவாய்க்காலின் பின் எவ்வித வடிவத்தையும் பெறவில்லை. அதனால் தமிழர் மீதான தொடரும் மனித உரிமைகள் மீறல்கள் கவனத்தில் கொள்ளப்படாத விடயமாகிறது. இவ்வகையில் 2012 மார்ச் மாதம் கனடிய அரசினால் அனுப்பப்பட்ட மூவர் அடங்கிய குழு சிறீலங்காவிலான நிலைமைகளை நேரடியாக கண்டறியச் சென்று திரும்பியது. அது பலதரப்பட்ட தமிழர்களையும் சந்தித்தது. அவர்கள் முதன்மைப்படுத்திய விடயங்களை குறிப்பெடுத்துக் கொண்ட அவர்கள், பின்னர் அனைத்தையும் சேர்த்து எவை முக்கிய விடயங்கள் என பார்க்க முற்ப்பட்டபோது, ஒரே விடயத்தை பலரும் சொல்லாதது அவதானிப்பப்பட்டது. இது ஒருங்கிணைப்பு, தரவு சேகரிப்பு, அது குறித்த ஆய்வின் அடிப்படையிலான முடிவுகள் என பல விடயங்களில் இருந்த மோசமான சறுக்கல் நிலையை வெளிப்படுத்தியது. அதுமட்டுமன்றி தம்மிடம் விடயங்களை பகிர்ந்து கொண்ட தமிழர் தரப்புகளிடம் அதற்கு ஆதாரமான ஆவணங்களையும் அவர்கள் வினாவியுள்ளனர். மன்னார் ஆயர், இராயப்பு ஜோசப் ஆண்டகையைத் தவிர எவரும் ஆதாரமாக எத்தகைய ஆவணத்தையும் வழங்கும் நிலையில் இருக்கவில்லை. அதாவது வாயால் வடை சுடுவதிலேயே இன்றைய வல்லமை இருக்கிறது.

இது இன்றைய தமிழர் தரப்புகளின் ஆவணப்படுத்தலில் உள்ள மோசமான பின்தங்கல் நிலையைப் புடம் போட்டுக்காட்டுகிறது. இதன் பாதகத்தன்மையை நாம் ஏனோ இன்றுவரை புரிந்து கொள்வதாக தெரியவில்லை. பொக்கிசமாக முள்ளிவாய்ககாலுக்கு முன்னரான காலம் ஏற்படுத்தித் தந்துவிட்ட ஆவணங்களைக் கூட குறிவைத்து அழித்துவிடுவதிலும், அதற்கான சமூக ஊடகப்பரப்பை முடக்கிவிடுவதிலும் பல சக்திகள் முனைப்புடனும் ஆள், அணி வலுகொண்டும் நாளும் இயங்கிவரும் நிலையில், அவற்றை பாதுகாத்து தக்கவைத்துக் கொள்ளும் எவ்வித முனைப்பும் இன்றி ஈழத்தமிழினம் இன்று அநாதரவாக நிற்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஜெனீவா கூட்டத்தொடரில் கூட, 88 சதவீதத்திற்கு அதிகமான அரச காணிகளையும், 92 சதவீதத்திற்கு அதிகமாக தனியார் காணிகளையும் தாம் இராணுவத்திடம் இருந்து விடுவித்துவிட்டதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மாரப்பன கூசாது பொய் சொன்னார். ஆனால் அவர் சொல்வது பொய் என அங்கேயே போட்டுடைக்க எம்மிடம் அவ்வித தரவும் ஆவணமும் இல்லை. பின்னர் மைத்திரி கூட்டிய ஒரு கூட்டத்திலும் தாம் பல்லாயிரம் ஏக்கரில் விடுவித்த காணிகள் என இராணுவத் தளபதி முரசறைந்த போது, இல்லை அது பொய் என ஆவணத்தை தூக்கிப் போடமுடியாமல், இது குறித்து ஒரு வருடமான விபரம் கேற்கின்றோம் தாருங்கள் என இரந்து கேட்டோமே அன்றி, தரவுகளும் ஆவணங்களும் இன்றி இன்றும் நடுவீதியில் தானே உள்ளோம்.

ஆவணங்களைக் கொண்டிருந்த பல தாயக இணையத்தளங்களை நிர்வகித்த புலத்தில் உள்ளவர்கள், முள்ளிவாய்க்காலுக்குப் பின் அவ்விணையத் தளங்களின் பதிவை புதுப்பிக்க தவறியபோது, அதற்காகக் காத்திருந்த சக்திகள் அதன் முகவரிகளை கையகப்படுத்தி அவற்றை அழித்துவிட்டனர். இவ்வாறு தான் சமாதான செயலகத்தின் இணையத்தளம் இழக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் இழக்கப்பட்டது மட்டுமன்றி, அதைக் கையகப்படுத்தியவர்கள் அதை ஒரு ஆபாச தளத்தை நோக்கி திருப்பிவிட்டனர். இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் அற்ற பெரும்பகுதியினர் முன் தமிழர் சமூகம் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை இதனால் எழுந்தது. இவ்வாறு தான் வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் உயரிய இணையத்தளமும் இழக்கப்பட்டுள்ளது. புலத்தில் ஈழத்தமிழர் குறித்த ஆய்வுத் தளமான அமைந்த ஆங்கில தமிழ்நேசன் இணையத்தளமும் இவ்வாறே குறிவைக்கப்பட்டது.

எம்மிடம் உள்ள கல்வியளாலர்கள் கூட இவ்விடயத்தில் பெரிதாக எதனையும் செய்வதாக தெரியவில்லை. பேராசிரியர் மணிவண்ணன் என்ற தமிழக சகோதர உறவு, ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து முயன்று அதற்கான ஆதாரங்களை சேகரித்து, 1000 பக்கங்களில் தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை தான் என ஆங்கிலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தினூடாக வெளியிட்டு கல்வியல், ஆராய்ச்சி சார்ந்த அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தார்;. இவ்வாறான காலத்தின் தேவை கருதிய முயற்சிகள் எம் கல்வியளாலர்களிடம் ஏன் இன்றும் எழவில்லை? எமது தேசமும் மக்களும் சிந்திய குருதிகள், எய்திய அர்ப்பணிப்புகள் இந்நாட்களில் எம் கண்முன் விரிந்து எம்மைக் கேள்வி கேட்டால், அதற்கு எம் மனச்சாட்சி எம்மையே துன்புறுத்தினால், ஆவணப்படுத்தலின் அத்தியாவதியத்தையும், அதற்கான முனைப்புகளிலும் நாம் இந்த 10 ஆண்டுகளைக் கடந்தாவது இறங்கியாக வேண்டும். இல்லையேல் நீதி வேண்டிய எம் பயணங்கள் மேலும் சவால் நிலையையே எதிர்காலத்தில் எட்டும் என்பதே கசப்பான உண்மையாகும்.

நேரு

சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பகிரங்க மடல்!!

சாக்கு போக்கு சொல்லாமல் அரசியல் கைதிகளை விடுவிக்க மைத்திரிக்கு சம்மந்தன் அதிரடி என்ற தலைப்பில் அண்மையில் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்தது. இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியதன் பொறுப்பு எமக்கு உள்ளது என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர் இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது

சம்பந்தன் ஜயா ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் அரசியல் கைதிகள் என்பவர்கள் தமிழர் விடுதலைக்கு தங்களது வாழ்வை தந்தவர்கள் மற்றவர்கள் அப்பாவிகள் சந்தேகத்தகன் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் இன்று அரசியல் கைதிகளின் குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளில் வாழந்து கொண்டிருக்கிறார்கள்.

தந்தை முகம் தெரியாத குழந்தை, பொருளாதார நெருக்கடி, சமூகத்தில் இருந்து புறக்கணிப்பு என பல இன்னல்களை அரசியல் கைதிகளின் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பொறுப்புள்ள பதவியில் உள்ள நீங்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் தாங்களும் தங்களது கட்சியும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கும் பொழுது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்காமல் அரசுக்கு ஆதரவு வழங்கியமையை அரசியல் கைதிகளின் இந்த சிக்கலான நிலைக்கு காரணம்

இனிவரும் காலங்களில் மக்களை ஏமாற்றும் வேலைகளை செய்யாது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவேடிக்கை எடுக்க வேண்டும்.

அதைவிடுத்து பிச்சைக்காரன் புண்ணை மாற்றாமல் இருப்பது பிச்சை எடுப்பதற்கு என்பது போல இக் கைதிகளின் துன்பத்தை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்வது பிச்சை கார அரசியல் ஆகும் இது நீங்கள் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்திற்கு செய்யும் துரோகம் ஆகும்

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவடைந்த பின் மேய்பவன் அற்ற தமிழினத்தை காக்க வந்த ரட்சகர் போல மக்கள் முன் தோன்றினீர்கள் இன்று 10 வருடங்கள் கழிந்த நிலையில் நீங்கள் சாதித்தது என்ன தமிழ் இனத்திற்கு பெற்றுக் கொடுத்தது என்ன?இந்த வருடத்தில் தீர்வு நாளை தீர்வு என போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை ஏமாற்றியதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

அண்மையில் கன்னியா வென்னீர் ஊற்று பிரச்சினை என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் பிரச்சினை இந்த விடயத்தில் ஒரு பெண் தனியாக நின்று நீதி கேட்டுப்போரடியபொழுது தங்கள் மௌனமாக கொழும்பில் இருந்ததற்கான காரணம் என்ன தொகுதியில் இருக்க வேண்டிய தங்களை திருகோணமலை மக்கள் உங்களை கொழும்பில் சந்திக்க வேண்டிய நிலையில் உங்களுக்கு வாக்களித்த மக்கள் இருக்கிறார்கள்.

இனிவருங்காலங்களில் நீங்கள் உங்கள் பொறுப்புகளையும் கடமைகளையும் உணர்ந்து நடக்கவில்லை என்றால் இனி வருங்காலத்தில் தமிழ் சமுகத்தை தந்தை செல்வா கூறியது போல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Up ↑