இன்றைய சமகால உலக இராணுவங்களின் படைத்துறை உத்தி என்பது புலிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.

இதை நந்திக்கடல் ‘பிரபாகரன் சட்டகம்’ (Prabaharan’s paradigm) என்றழைக்கிறது.

தமிழர் போராட்டம் / தாயகம் தொடர்பாக எத்தகைய அங்கீகாரங்கள் வரும் காலங்களில் கிடைக்கும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது, ஆனால் இப்போது மறைத்தாலும் வரலாற்றில் ‘பிரபாகரன் சட்டகம்’ அதற்கான உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறும்.

காரணம், சென்ற நூற்றாண்டு இறுதிவரை உலக இராணுவங்களின் உத்தியாக இருந்தது நியூட்டன் சட்டகம் (Newton’s paradigm).

புலிகள் அதை ஒரு தோல்வி உத்தியாக நடைமுறையில் நிறுவிக் காட்டினார்கள்.

இதில் ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் ‘பிரபாகரன் சட்டக’ உத்தியை பிரயோகித்துத்தான் புலிகள் வீழ்த்தப்பட்டார்கள். இது தலைவர் பிரபாகரன் சற்றும் எதிர்ப்பார்க்காத உச்சத் திருப்பம்.

ஆனால் தலைவர் சுதாரித்துக் கொண்டு தனக்கேயுரிய பாணியில் தானே உருவாக்கிய சட்டகத்திற்கு எதிர் சட்டகங்களை உருவாக்கினார்.

அதுதான் 2006 – 2009 வரை புலிகள் நடத்திய எதிர்ப்புச் சமரில் வெளிப்பட்டது.

இறுதியில் புலிகள் உருவாக்கிய எதிர் சட்டகத்தை எதிரிகளால் எதிர் கொள்ள முடியவில்லை. விளைவாக வழமை போல் பயங்கரவாத அரசுகளின் இன அழிப்பு உத்தியை பிரயோகித்து இறுதி வெற்றியை அடைந்தார்கள் எதிரிகள்.

படை வரலாற்றாய்வாளர்களுக்கு புலிகளின் அந்த இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை.

இந்த உத்தி என்ன? அதை புலிகள் எப்படி உருவாக்கினார்கள்?

இத்தகைய உத்திகளுடன் ஒரு வலுவான இயக்கம் தோன்றினால் அதை எதிர் கொள்வது எப்படி? என்பவை தெரியாமலே/ சொல்லப்படாமலேயே புலிகள் மறைந்து போனார்கள்.

வழி நடத்திய படைத் தளபதிகளும் இல்லை / முதன்மைப் போராளிகளும் இல்லை/ இருப்பவர்கள் பேசும் நிலையில் இல்லை/ எஞ்சியுள்ள சில தாக்குதல் போராளிகளின் வாக்கு மூலங்களிலிருந்து தலைவர் தண்ணீரின் பண்புகளை உத்தியாக வைத்து அந்த எதிர் சட்டகத்தை வகுத்துள்ளதை நம்மால் கணிக்க முடிகிறது.

அது நந்திக்கடலின் ‘தண்ணீர் கோட்பாடுகளாக’ வரலாற்றில் இடம் பிடித்துள்ளன.

வரலாற்றாய்வாளர்களுக்கு ஒன்றை அங்கீகரிக்காமல் அது குறித்த தேடலையோ/ ஆய்வுகளையோ தொடர முடியாது.

எனவே ‘பிரபாகரன் சட்டகத்தை’ அங்கீகரித்து விட்டே தலைவர் அதற்கு எதிராக உருவாக்கிய எதிர் சட்டகத்தை கண்டறியும் நிலை உள்ளது.

எனவே வேலுப்பிள்ளை பிரபாகரனை தற்காலிகமாக வரலாற்றின் ஓர வஞ்சனைக்குள் தள்ளி அவரை வரலாற்றிலிருந்து மறைக்க இந்த உலகம் எத்தனிக்கலாம்.

ஆனால் அது நிரந்தரம் கிடையாது. அவர் தனது கோட்பாடுகளின் வழியே ஒரு சுயம்பு போல் வெளிப்பட்டுக் கொண்டேயிருப்பார்.

Parani Krishnarajani