மகாவலி ஆற்றுத்திட்டம் தமிழர் இருப்பை அவர்கள் தாயகப் பூமியில் அழிக்க உருவாக்கப்பட்ட திட்டம் என்பது அவ்அவ்போது ஏனோ எம்மவர்களுக்கு மறந்து போகிறது. தமிழர் தம் வாழ்வுரிமைகளுக்காக தம் தாயக இருப்பின் உரிமையை முன்னிறுத்தி போராட ஆரம்பித்ததும்இ இனவாத அரசியலே சிங்களத்தின் இதயநாத அரசியலானதும் 50களின் கதை. ஏனோ எம்மவர்களுக்கு அவ்அவ்ப்போது ஏற்படும் அம்னீசியாவால் அனைத்தும் மறந்துபோவது வாடிக்கையாகிவிட்டது. பின்னர் வரலாறு எவ்வாறு எமக்கு வழிகாட்டியாகும்?? வரலாறு எம்மை விடுவிக்கும்???

1961இல் சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரால் கருக்கொண்டது தான இவ்மகாவலி ஆக்கிரமிப்புத் திட்டம். அதற்கு ஐ.நா அபிவிருத்தி நிதிபெறப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு அதனூடு திட்டங்கள் வரையப்பட்டு திட்ட அமுல் 1970இல் சிறிதாக தொடங்கப்பட்டது. ஆனால் 1977 இல் அமைந்த nஐயவர்த்தனா ஆட்சியின் கீழ் 30 வருடத் திட்டம் துரித அபிவிருத்தித் திட்டமாக மாற்றப்பட்டு 6 வருடத் திட்டமாக விரைவுபடுத்தப்பட்டது. இதன் பிரதான பிதாமகன் சாட்சா நம் ரணில் ஐயா தான். சமீபத்தில் அன்றைய தன் சாதனையை ஐயா கிலாகித்து வேறு பேசியுள்ளார். அப்போது மகாவலி அபிவிருத்தி அமைச்சு என்று ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சராக்கப்பட்ட்வர் தான் எம் யாழ் நூலக எரிப்புப் புகழ் நாயகன் காமினி திசநாயக்கா ஐயா அவர்கள்.

அவரின் இனவாதம் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையிலான ஆக்கிரமிப்பில் ஏவ்வாறிருந்திருக்கும் என்பதை குறும்படம் போட்டுக் காட்டியா நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்??? என்ன அம்னீசியா காரர்களுக்கு வேண்டுமா? நித்திரையில் இருப்பது போல் நடிப்பவர்களுக்காக ஏன் அந்ந விரயம்?? இன்று போல் அன்றும் ரணில் ஐயா லாவகமாக சர்வதேச சமூகத்தை தன் சாணக்கியம் கொண்டு வளைத்துப் போட்டார். Nஐர்மனி கனடா அமெரிக்கா சுவீடன் இங்கிலாந்து சௌதி அரேபியா உலகவங்கி என அணிவகுக்கப்பட்டன. இன்று போல் அன்றும் எம் தமிழ்த்தலைமைகள் சர்வதேச அணுகுமுறையில் அவர்களுடனான தொடர்பாடலில் மோசமாக சொதப்பினர். இவ்விடயத்தில் கனடா எவ்வாறு தானாகவே விழித்துக் கொண்டு விலகியது என்பதை கனடாவில் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வினூடாக கீழே தந்துள்ளேன்.

1983 இனக்கலவரமும் அதன் பின்னரான தமிழர் தற்காப்பு ஆயுதப் போராட்டமும் மகாவலி முயற்சிளை அன்றைய பொழுதில் முடக்கியது மட்டுமன்றி சர்வதேச பங்காளிகளை வெளியேறவும் வழிகோலியது. பின்னர் அம்மையார் சந்திரிக்கா அற்றும் ஐயா ராஐபக்சவின் கீழ் மகாவலி விடயத்தை அதிகம் கையாண்டவர் வேறு யாரும் அல்ல சாட்சா நம் மைத்திரி ஐயா தான். பொலநறுவையின் மைந்தன் தன் இருப்பிற்காக வாய்ப்பை விடுவாரா?? ஐயா வெளுத்துக்கட்டுகிறார். தன் இருப்பை மேலும் வலுப்படுத்த ஐயா துணைப் பாதுகாப்பு அமைச்சராக தன் பகுதியில் உருவாக்கியது தான் ஊர்காவல் படைகள் கட்டுமானம். இதனால் எல்லையோர தமிழ் கிராமங்கள் பட்ட மகா வலி அவலங்கள்… எமக்குத் தான் அங்கிருந்தவர்கள் சொந்நதமில்லையே!!! எமக்கென்ன கவலை!!!

எங்களுக்கும் கவலையில்லை எம் இன்றைய அரசியல் தலைமைகளுக்கும் கவலையில்லை… ஏனென்றால் அவர்கள் வேற்றுலக வாசிகள் இல்லையா!!! எங்கள் இன்றைய நிலையை ஒருமுறை உங்கள் மனக்கண் முன்னால் காட்டுகிறேன்…

மகிந்தா ஒரு சர்வாதிகாரி – சரி மாற்றுக்கருத்தில்லை… அதனால் அவர் வரவு செலவுத் திட்டங்களை வெளிப்படையாகவே பாராளுமன்றத்தில் எதிர்த்து நம்மவர்களும் வாக்களித்தீர்கள். ஆனால் நாம் கொண்டு வந்த ஆட்சி என மைத்திரி – ரணில் 2016 2017 2018 வரவு செலவுத் திட்டங்களை எவ்வித கேள்வியும் இன்றி முழுமையாக ஆதரித்தீர்களே… உங்கள் வாக்குகளில்லை என்றாலும் இலகுவாக அவை நிறையேறியிருக்கும் என்பது வேறுவிடயம்.. இந்நிலையில் ஆதரித்த தமிழரசுக்கட்சி ரெலோ ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒரு பகிரங்க கேள்வி. யார் ஐயா உங்களிடம் சொன்னது ஈழத்தமிழர்களை இரட்சிக்க வந்த மேய்ப்பன்கள் மைத்திரியும் ரணிலும் என்று??? சுமந்திரனுக்கு புரியும் மொழியில் கேட்டிருக்கிறேன்.

2015இல் மைத்திரி தமிழர் தயவில் சனாதிபதியானதும் மீண்டும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்ற அமைச்சை உருவாக்கி அதை தன்வசமாக்கியும் கொண்டார். அதற்காக கடந்த மூன்று வரவு செலவுத் திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகை வருமாறு..

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு
2016 வரவு செலவுத்திட்டம் – 6949 கோடியே 58 இலட்சத்து 7 ஆயிரம்
2017 வரவு செலவுத்திட்டம் – 5762 கோடியே 34 இலட்சத்து 65 ஆயிரம்
2018 வரவு செலவுத்திட்டம் – 4561 கோடியே 11 இலட்சத்து 54 ஆயிரம்

அதாவது தாம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பெரும் தொகை 2016இல் ஒதுக்கி மகாவலியின் கீழானான பொலநறுவையை அண்டிய முல்லைத்தீவு வவுனியா திருகோணமலை நோக்கிய திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டன. இதுவே இன்று அதிகம் பேசப்படும் எல் வலயத்திட்டத்தின் மூலம். 2016இல் அதிகரித்த தொகையின் மூலம் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டதாலேயே பின் இரு ஆண்டுகளிலும் ஒதுக்கப்பட்ட தொகையில் சற்று வீழ்ச்சி காணப்பட்டது. சமீப காலமாக பூர்த்தியாகியுள்ள இத்திட்டங்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுகின்றன. மகிந்தா தன்னை உறுதிப்படுத்த அம்பாந்தோட்டையை துரித அப்விருத்தி செய்தார். மைத்திரி தன்னை என்றும் நிலைப்படுத்த பொலநறுவையூடாக தமிழர் தாயகத்தை களீபரம் செய்கிறார். இப்போது சொல்லுங்கள் தமிழர்களை காக்க வந்த மேய்ப்பன் சரியா காக்கிறாரா? இல்லையா??

தாம் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம். தமிழர் தாயக இருப்பை இல்லாதொழிக்கவே இம் முயற்சி. தேசிய இனஅடிப்படையில் மகாவலி திட்டத்தின் கீழ் 7 இலட்சத்து 50 ஆயிரம் பேரை குடியேற்றுவதே திட்டம். இதன் பிரகாரம் 74 சதவீத சிங்களவர் அதாவது 5 இலட்சத்து 50 ஆயிரம் சிங்களவரும் 12 சதவீத இலங்கைத்தமிழர்கள் அதாவது 90 ஆயிரம் தமிழரும் 6 சதவீத மலையகத் தமிழர் 6 சதவீத முஸ்லீம்கள் என அதாவது தலா 45 ஆயிரம் பேரும் குடியேற்றப்படுவார்கள் என்றார்களாம். உங்களுக்குத் தெரியும் இதுவரை 100 சதவீதம் சிங்களவரே குடியேற்றப்பட்டனர். இது தவறு என்பதை பின்னர் புரிந்து கொண்டு அவ்மாவட்ட இனவிகிதாசார அடிப்படையிலேயே மக்கள் குடியேற்றப்படவேண்டும் என தாம் அப்போது வலியுறுத்தியதாக கனடா தெரிவிக்கிறது. இது எம் அரசியல்வாதிகள் யாருக்கும் இன்று தெரியுமா? இதை வலுநிலையாகக் கொண்டு என்ன செயற்பாடு இவர்களிடம் இருக்கிறது?? என்ன புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் என்கிறீர்களா?? கனடாவில் இருப்பவர்களுக்கே இது தெரியாது! மற்றவர்கள்??

இத்துடன் வடக்குக்கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கூக்குரல்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கீழே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள ஊர்காவல் படைகளுக்கு ராஐபக்க ஒதுக்கிய நிதியையும் மைத்திரி – ரணில் கூட்டு ஒதுகியுள்ள நிதியையும் கீழே தந்துள்ளேன். ஏதாவது புரிகிறதா? இதற்கும் நம்மவர்கள் ஆதரித்தே வாக்களித்தனர் மறந்துவிடாதீர்கள். மைத்திரி ஐயா 2015 இறுதியில் இவர்களுக்கான தலைமையகத்தை தன் பொலநறுவை மாவட்டத்தின் கபறத்துனையில் வேறு திறந்து வைத்தார். இதில் 41 ஆயிரம் பேர் மாதாந்த சம்பளத்தில் தமிழர் தாயகத்தில் முன்பள்ளி நடாத்துகிறார்கள் சிவில் பாதுகாப்பு வழங்குகிறார்கள் விவசாய மற்றும் கைதொழில் பண்ணைகளை நடாத்துகிறார்கள். கூடவே குடியேறவும் செய்கிறார்கள். ஊர்காவல் படைகளே இன்னும் வீட்டுக்கு போகவில்லை. இந்த லட்சணத்தில் படைகள்!! சும்மா கொமடி செய்யாதைங்கோ ஐயா!!!

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் என்ற போர்வையில் உள்ள ஊர்காவல் படைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை

ராஐபக்ச அரசு
2014 வரவுசெலவுத்திட்டம் – 1044 கோடியே 44 இலட்சம்
2015 வரவு செலவுத்திட்டம் – 1206 கோடியே 19 இலட்சத்து 20 ஆயிரம்

மைத்திரி – ரணில் அரசு
2016 வரவு செலவுத்திட்டம் – 1774 கொடியே 72 இலட்சத்து 92 ஆயிரம்
2017 வரவு செலவுத்திட்டம் – 1694 கோடியே 74 .லட்சத்து 52 ஆயிரம்
2018 வரவு செலவுத் திட்டம் – 1758 கோடியே 31 இலட்சத்து 20 ஆயிரம்

ஊர்காவல் படைகளுக்கே ஆயிரம் கோடிகளில் நிதிஒதுக்கீடு.. 2018 வரவுசெலவுத் திட்டத்தை ஏன் ஆதரித்தீர்கள் என கூட்டமைப்பின் கனடிய பிரச்சார பீரங்கியிடம் ஒரு வானொலியில் கேட்டேன். ஐயா சொன்னார் தமிழர் பகுதிகளில் 14 அபிவிருத்தித் திட்டங்களுக்காக முதல்முறையாக 80 கோடிகளை ஒதுக்கியுள்ளார்களாம் என்றார். இவ்வாண்டின் மொத்த செலவீனம் 3 இலட்சத்து 90 ஆயிரம் கோடிகள். இதில் 80 கோடிகள் எவ்வளவு பெரிய காசு எண்டு என்டை மரமண்டைக்கு இன்னும் புரியுதில்லைங்கோ!!! இன்னும் ஒன்று சொன்னார் 50 ஆயிரம் வீடுகளுக்காக அவ் 80 கோடிகளில் 70 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதாவது ஒரு வீட்டுக்கு 1400 ரூபா. முடிந்தால் இதற்கு ஒரு மீனை எனக்கு வாங்கித்தரச் சொல்லுங்கோ… ஏமாளிகளும் கோமாளிகளும் இருக்கும் வரை… இலகுவாக ஏமாற்றப்படுபவர்கள் இருக்கும் வரை… சேடம் இழுக்கும் தமிழினத்திற்கு மகா வலியாகத் தான் இருக்கும்…

– நேரு குணரத்தினம் –