Search

Eelamaravar

Eelamaravar

Month

June 2018

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா படைகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்தார்கள் !

விடுதலைப் புலிகளுடனான சண்டைகளின் போது சிறிலங்காப் படைகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்து வருகின்றது என்கின்ற உண்மையை தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக இந்த விடயங்களை ஐ.பீ.சி. தமிழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தது.

சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில் சிறிலங்கா அரச படையினர் யுத்தக் களத்தில் இரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பில் பிரகீத் எக்னலிகொட என்கின்ற சிங்கள ஊடகவியலாளர் பல தளங்களில் செய்தி வெளியிட்டதுடன், அவ்வாறு அவர் செய்தி வெளியிட்ட காரணத்தினால் அவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும்; குறிப்பிடத்தக்கது.

தமிழ் இனத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மிகவும் கொடிய வகை ஆயுதங்களான இரசாயண ஆயுதங்களை சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் பயன்படுத்தியதை கண்டுபிடித்திருந்த ஒரே காரணத்திற்காகவே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளதார்.

சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில் சிறிலங்கா அரச படையினர் யுத்தக் களத்தில் இரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பில் மேற்குலகமும் நன்கு அறிந்திருந்ததாகவும் பிரகீத் எக்னலிகொட ‘இனவாத யுத்தமும் – இரசாயண ஆயுதங்களும்’ என்ற தனது புலனாய்வு ஆய்வறிக்கையில் கண்டுபிடித்திருந்ததாகவும் சந்தியா எக்னெலிகொட அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலமான 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், கேலிச் சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னெலிகொடவிற்கு நீதிகோரி கடந்த பத்து வருடங்களாக போராடிவரும் அவரது மனைவியான சந்தியா எக்னெலிகொட, தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் பொதுபல சேனா அமைப்பினர் உட்பட சிங்கள பௌத்த பிக்குகளால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்து கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

இதன்போதே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினர் முன்னெடுத்திருந்த 30 வருடகால யுத்தத்தின் போது பல்வேறு கட்டங்களில் இரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை பிரகீத் கண்டுபிடித்திருந்ததாகவும்இ அந்த உண்மைகள் வெளியில் வந்துவிடும் என்பதற்காகவே பிரகீத்தை முன்னாள் ராஜபக்ச ஆட்சியில் கடத்தி காணாமல் ஆக்கியிருப்பதாகவும் சந்தியா குற்றம்சாட்டினார்.

இது குறித்து மேலும் தெளிவுபடுத்திய சந்தியா எக்னெலிகொட…..

‘ பிரகீத் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி காணாமல்போனதை அடுத்து 2015 ஆம் ஆண்டு வரை அந்த சம்பவம் மூடிமறைக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது. பிரகீத்தை ஏன் காணாமல் ஆக்கினார்கள் என்பது தொடர்பில் அதுவரை எவருக்கும் தெரியாத புதிராக இருந்து வந்தது. பிரகீத் என்ன செய்தார் என்பதும் இந்த சமூகத்தில் எவரும் அறிந்தும் இருக்கவில்லை.

பிரகீத் செய்த முக்கிய பணிகள் சில இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ராஜபக்சவினருக்கு எதிராக கட்டுரைகளை எழுதியமை. ராஜபக்சக்களினால் இழைக்கப்பட்ட குற்றங்களை அம்பலப்படுத்தியமை. அதேபோல் சரத் பொன்சேகாவிற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசணைக் குழுவின் ஊடாக அவரது தேர்தல் நடவடிக்கைகளில் இணைந்துகொண்டமை.

அதனைவிட பிரகீத் எழுதிய இந்த ஆவணம். இன அடிப்படையிலான யுத்தமும் – இரசாயண ஆயுதங்களும் என்ற இந்த ஆவணம் தொடர்பில் இலங்கையிலுள்ள மற்றும் சர்வதேச தரப்பினருக்கும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த ஆவணத்தின்படி இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அது எந்தகாலப்பகுதிகள் என்பதையும் பிரகீத்தின் புலனாய்வு அறிக்கையில் கோடிகாட்டியுள்ளார்.

யாராவது ஒரு தரப்பு இரசாயண ஆயுதங்களை பயன்படுத்துகின்றது என்றால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு குழுவினரை அழிப்பதற்கு அல்ல ஒட்டுமொத்த இனத்தையும் அழித்துவிடுவதற்காகவே இரசாயண ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் என்பதை பிரகீத் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

இந்த அரசுகள் செய்யும் இவ்வாறான கொடூரங்களை மேற்குலகம் அறிந்திருக்காதிருக்க வாய்ப்பில்லை என்றும் பிரகீத் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கை போன்ற நாடுகளை பலம்வாய்ந்த நாடுகள் பரிசோதனைக் களமாக பயன்படுத்தி வருவதும் கவலைக்குறிய விடையம் என்றும் பிரகீத் தனது ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் இந்த ஆவணத்தை பகிரங்கப்படுத்த நான் தயாராகவே இருக்கின்றேன். ஏற்கனவே இந்த ஆவணம் பகிரங்கப்படுத்தப்பட்டும் இருக்கின்றது’ என்றும் சந்தியா எக்னெலிகொட மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ‘இனவாத யுத்தமும் – இரசாயண ஆயுதங்களும்’ என்ற பிரகீத்தின் இந்த புலனாய்வு அறிக்கை முதன்முறையாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவ சமசமாஜக் கட்சியின் ஒஸ்வின் தொழிலாளர் கல்விக்கூடம் என்ற நவ சமசமாஜ கட்சியின் கல்வி நிலையத்தினால் 2008 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 22 ஆம் திகதி ஏற்பாடுசெய்திருந்த கருத்தரங்கில் பிரகீத் எக்னலிகொட வெளியிட்டு உரையாற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா படைகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்திருந்தார்கள் எப்பது தொடர்பாக ஐ.பீ.சி. தமிழில் ஜுன் 2016 இல் வெளியான ஆதாரங்கள்:

பிரபாகரன் இல்லாமையால் தாயகத்தில் கொடுமைகள் அரங்கேறுகின்றனவா?

முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்?

தமிழர் தரப்புகளை கொதி நிலைப்படுத்திய சிறுமி றெஜினாவின் படுகொலை விவகாரம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

கலைக்கும், கலாச்சாரத்திற்கும் சிறந்த எடுத்து காட்டாக இருந்த யாழ்ப்பாணம் இன்று கொலைக்கும், கொள்ளைக்கும் எடுத்து காட்டாக இருப்பது கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.

கடந்த 25ஆம் திகதி மாலை கிணறு ஒன்றில் இருந்து சிறுமி றெஜினாவின் சடலம் மீட்கப்பட்டது.

சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவி பாடசாலைக்குச் சென்று மதியம் வீடு திரும்பியுள்ளார். மாணவி வீட்டிற்கு வந்த நேரத்தில், தாயார் சமூர்த்தி வங்கிக்குச் சென்றுள்ளார்.

தகப்பனார் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். மதியம் 3.00 மணியளவில் வீட்டிற்கு வந்த தாயார் மகளைக் காணவில்லை என தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று தேடியுள்ளார்.

எனினும், அங்கும் இல்லை, இதனையடுத்து குறித்த சிறுமியை உறவினர்கள் ஒன்று சேர்ந்து தேடியுள்ளனர்.

விடயத்தினை அறிந்த அந்த பகுதி இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கிராமம் முழுவதும் தேடியுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆள் நடமாட்டம் அற்ற இடத்தில் உள்ள கிணற்றில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது.

சிறுமியைச் சடலமாக கண்ட இளைஞர்கள் சிறுமியின் தாயாருக்கு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் உறவினர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் சிறுமியின் சடலத்தினை மீட்டுள்ளனர். சிறுமி சீருடைகள் அற்ற நிலையில் அரை நிர்வாணமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் கழுத்தில் கயிற்றால் நெருக்கிய தடயம் காணப்பட்டுள்ளது. அத்துடன், சிறுமி அணிந்திருந்த தோடும் காணாமல் போயுள்ளது.

கடந்த 26ஆம் திகதி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தந்தை உட்பட நால்வரை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதன் பின்னர் தொடர்ந்தும் இருவர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொலிஸார், சுழிபுரம் சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தோம்.

இதன்போது பிரதான சந்தேக நபர் ஒருவரை அடையாளங்கண்டு அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டோம். அந்த விசாரணைகளின் ஊடாக, சிறுமியின் சீருடை மறைத்து வைத்திருந்த இடத்தை கண்டு பிடித்தோம். எனினும், சிறுமியின் தோடை மீட்க முடியவில்லை.

பிரதான சந்தேக நபர், தான் இந்த கொலையை தனியாகவே செய்ததாக, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஏனைய ஐந்து பேரிடமும் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, இருவர் நேரடி சாட்சியமாக உள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், பிரதான சந்தேகநபருடன் இணைந்து மற்றுமொரு நபரும் கொலைச் சம்பவம் நடந்த அன்று மாலை, குறித்த சிறுமியை அழைத்து சென்றதைக் கண்டுள்ளதாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரதான சந்தேக நபருடன் சிறுமியை அழைத்து சென்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர்.

அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சிறுமியின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பரவலாக முன்வைக்கப்பட்டது.

கடந்த 27ஆம் திகதி பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்ட சிறுமியின் மரண பரிசோதனை அறிக்கை வெளியானது இதில், குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க இந்த சிறுமியின் படுகொலை சம்பவத்தை போலவே கடந்த 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி காணாமல் போயிருந்த 8 வயதுச் சிறுமி ஏழு நாட்களின் பின்னர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சுழிபுரம் பாண்டாவெட்டை காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் கற்ற கிருஷ்ணமூர்த்தி சாலினி என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த சிறுமியின் சடலம் அவரின் வீட்டில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டு வளவில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தது.

அதேபோல் தான் சடலமாக மீட்கப்பட்ட றெஜினா என்ற சிறுமியும், அவருடைய வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

இதேவேளை, மர்ம முறையில் உயிரிழந்த இரு சிறுமிகளும் அரை நிர்வாணமாக இருந்ததுடன், அவர்களது உடல்களில் காயங்களும் காணப்பட்டது.

இந்த சிறுமிகள் செய்த குற்றம் தான் என்ன? பாவைகளை வைத்து விளையாடும் வயதில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் படுகொலை சம்பவத்தை கண்டித்து தமிழ் பகுதி எங்கும் போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தை பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் போராட்டங்களுக்கு அரசியல் வாதிகளோ கல்வித்துறை சார் அதிகாரிகளோ, சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளோ குரல் கொடுக்கவும் வில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதை போல தமிழ் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பிர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளோர் தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவார் என்று கோசம் எழுப்பியுள்ளனர்.

உண்மையில் விடுதலை புலிகளிகளின் காலத்தில் இவ்வாறு சிறுமிகளுக்கோ பெண்களுக்கோ மோசமான வன் கொடுமைகள் இடம்பெறவில்லை, பெண்களையும், சமூகத்தையும் சீரழிக்கும் நபர்களுக்கு அவர் கொடுக்கும் தண்டனையும் இதற்கு காரணம்.

தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்கவே வைத்தவர்.

ஒரு நாட்டின் வரலாற்றை மாத்திரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் என்று கூறினாலும் மிகையாகாது.

ஒரு கட்டுக் கோப்பான சமூக அமைப்பு பிரபாகரன் காலத்தில் இருந்தது என்பது உண்மை. அன்று யாழ். மண்ணில் குண்டு மழை பெய்திருந்தாலும் ஈழ மண்ணில் பெண்களுக்கு இருந்த பாதுகாப்பு இன்று இல்லை.

அன்று ஹிரிஷ்ணவி, வித்தியா என்று கொடூரர்களுக்கு இரையானது போதாது என்று இன்று றெஜினா வரை நீண்டு கொண்டு போகின்றது, இதற்கு முடிவு கட்ட வேண்டிய நிலையில் ஒவ்வொரு குடிமகனும் உள்ளனர்.

குற்றவாளிக்கு பொலிஸாரும், அரசும் தண்டனை பெற்று கொடுக்கும் என்று எண்ணுவது ஒருபுறம் இருந்தாலும், இதற்கு என்ன அடிப்படை காரணி என்பதை மக்கள் உணர வேண்டும்.

தொடர் கதையாக தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த இலங்கையில் வலுவான சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
பொலிஸார் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் மட்டுமன்றி அயலவர்களும் கவனம் செலுத்த வேண்டும். இன்று அயல் வீட்டு பிள்ளைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை நாளை எமது வீட்டிலும் ஏற்படலாம்.
இவ்வாறான கொடுமைகள் தொடர போதைப்பொருள் பாவனையும் பிரதான காரணமாக மாறியுள்ளது. இதனை முற்றாக ஒழிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் மாணவியை திட்டமிட்டு பழிவாங்கிய கல்விச்சமூகம்!

கண்ணீரில் தவிக்கும் மாணவி

வவுனியா – கற்குழியில் தந்தையற்ற நிலையில் தாயின் அரவணைப்பில் வசித்து வரும் 17 வயதுடைய சன்முகஆனந்தம் நிதர்சினி என்ற பாடசாலை மாணவிக்கு வவுனியாவின் பிரபல பாடசாலைகளில் அநீதி இடம்பெற்றுள்ளது.

வவுனியா – கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் குறித்த மாணவி கல்வி கற்று வந்துள்ளார். இதன் போது பழுதூக்குதல் போட்டியில் ஆர்வமுடையவர் என்பதனால் அவரது பாடசாலையின் விளையாட்டு பொறுப்பாசிரியர் அந்த மாணவிக்கு பயிற்சிகளை வழங்கி வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு நேரமின்மையினால் அவ் மாணவியை தனியார் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பயிற்சினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல உடற்பயிற்சி நிலையத்திற்கு மாணவியின் தாயார் சென்று தனது மகளுக்கு பழுதூக்குதல் பயிற்சி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்றுவிற்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆண்கள் பயிற்சி பெறும் நிலையத்தில் பெண்கள் பயிற்சி பெறுவதை விரும்பவில்லை. பின்னர் மாணவியின் மாகாண மற்றும் தேசிய மட்ட சான்றிதழ்கள், பதக்கங்களை பார்வையிட்டதன் பின்னர் அவர் பயிற்சினை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அந்த மாணவி தனியார் உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை பெற்று சுமார் 60 கிலோ எடையினை தூக்கும் ஆற்றலை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் பல சிரமங்களுக்கு மத்தியில் தேசிய மட்டத்திற்கு மாணவி சென்ற போது, 58 கிலோவை பாடசாலையின் உடற்பயிற்சி பொறுப்பாசிரியர் தூக்க வைத்துள்ளார்.

இதனால் தேசிய மட்டத்தில் மூன்றாவது இடத்தினை பெற்ற வேண்டிய மாணவி 4ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

தொடர்ந்து அடுத்த வருடம் நடைபெற்ற திறந்த விளையாட்டு போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

அந்த மாணவியின் நண்பிகளுக்கு பாடசாலையின் உடற்பயிற்சி பொறுப்பாசிரியர் செல்லுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் குறித்த மாணவிக்கு தெரிவிக்கவில்லை

இதனை கேள்வியுற்ற மாணவியின் தாயார் பொறுப்பாசிரியருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். இதன் போது நான் செல்லவில்லை உங்களுக்கு விரும்பமில்லை என்றால் செல்ல வேண்டாமென தெரிவித்துள்ளார்.

பின்னர் மாணவி யாழ்ப்பாணத்திற்கு சென்று பழுதூக்குதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அதன் பின்னர் வடமாகாண விளையாட்டு போட்டிக்கு குறித்த மாணவியின் பெயரை பாடசாலையின் பொறுப்பாசிரியர் வழங்கவில்லை.

அதனையடுத்து ஏன் எனது பெயரை வழங்கவில்லை என மாணவி பொறுப்பாசிரியரிடம் வினாவிய போது எனக்கு தெரியாமல் சென்று போட்டிகளில் கலந்து கொள்கின்றீர்கள் நான் ஏன் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பான மாணவியின் பெற்றோர் பாடசாலை அதிபரிடம் முறையிட்ட சமயத்தில் அவரும் இவ் விடயத்தில் கரிசனை காட்டவில்லை.

இதனையடுத்து பெற்றோர் மாணவினை வேறு பாடசாலைக்கு மாற்றுவதற்கு தீர்மானித்தனர். வவுனியாவில் இரு பாடசாலைகளிலேயே பழுதூக்குதல் போட்டிக்குறிய ஆசிரியர்கள் காணப்படுவதினால் வவுனியா நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலைக்கு மாற்றியுள்ளார்.

மாணவியினை குறித்த பெண்கள் பாடசாலையில் இணைக்கின்ற சமயத்தில் முன்னைய பாடசாலையில் இடம்பெற்ற விடயங்கள் அனைத்தையும் அதிபரிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதன் போது மாகாண மட்ட போட்டிகளுக்கான பெயர் பட்டியல் அனுப்பிவிட்டோம் தேசிய மட்டத்திற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்.

நாளை மறுதினம் திருகோணமலை கந்தளாய் பகுதியில் தேசிய மட்ட பழுதூக்குதல் போட்டி இடம்பெறவுள்ளது. ஆனால் இதுவரையில் அவ் மாணவியின் பெயர் இணைக்கப்படவில்லை

இதற்கு மாறாக நான்கு மாணவிகளின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மூவர் மாகாண மட்டத்தில் பங்கு பற்றியவர்கள், மாகாண மட்ட போட்டிகளிலேயே பங்கு பற்றாத மாணவியும் ஒருவர்.

அவ்வாறெனின் தேசிய, மாகாண மட்ட போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்ற இந்த மாணவியின் ஆற்றல்களுக்கு வாய்ப்புகளை யார் வழங்குவார்?

ஏன் இவ்வாறான சம்பங்கள் இவ் மாணவிக்கு இடம்பெற்றது. என பல கோணங்களில் தேடிய சமயத்தில் ஆரம்பத்தில் குறித்த மாணவி கல்வி கற்ற பாடசாலையின் ஆசிரியரின் மனைவியே தற்போது அவ் மாணவி கல்வி கற்கும் பாடசாலையின் உடற்பயிற்சி பொறுப்பாசிரியர் ஆவர்.

இதன் அடிப்படையிலியே தனது மகளை அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டு இவ்வாறு செயற்படுவதாக மாணவியின் தாயார் தெரிவித்தார்.

ஏழை மாணவிக்கு நீதி கிடைக்குமா? வலயக்கல்வி பணிப்பாளரே இது உங்களின் கவனத்திற்கு…

தமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசியத் தலைவரும் மின்னூல்கள்

Pdf  தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழீழத் தேசியத் தலைவரும்

**

http://anyflip.com/xaxc/tqms/

http://online.anyflip.com/xaxc/tqms/

————–viduthalaiperoli-history of prabakaran

pdf–விடுதலைப்பேரொளி

http://anyflip.com/xaxc/ryqq

http://online.anyflip.com/xaxc/ryqq/

—————————

Pdf prabhakaran-a-leader-for-all-season-book

தமிழில்

http://online.anyflip.com/xaxc/eift/

PDF : எனது இலட்சியப் பாதை

http://anyflip.com/xaxc/awad

http://online.anyflip.com/xaxc/awad/

————-

pdf –பிரபாகரன் பற்றி பொட்டு

http://online.anyflip.com/xaxc/flnq/

http://www.eelamview.com/2011/11/17/a-histroy-ofprabhakaranism/

கடற்புலிகளின் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் ,மேஜர் தசரதன் வீரவணக்க நாள்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் 29.06.2001 அன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன், கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர்.

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லெப்.கேணல் கங்கையமரன், 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு ஊடுருவியிருந்த சிறிலங்கா படையினரின் ஆழஊடுருவித் தாக்கும் படைப்பிரிவினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இத்தாக்குதலின்போது மேஜர் தசரதன் (தசா) (சந்திரன் சுபாகரன் – கீரிமலை, யாழ்ப்பாணம்) என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.

“கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில்

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையையே தமிழ் மக்கள், விரும்புகிறார்கள் என்ற போதும், அது உயரிய கொள்கை வழியிலான ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று நடைபெற்ற ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் ஏற்புரையை வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“எமது சிறப்பு அதிதியான சம்பந்தன், காலம் தாழ்த்தி எம்முடன் இணைய சம்மதித்திருந்தாலும் அவர் வரவு எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்வையும் ஊட்டி உள்ளது.

என்னை இந்த முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்தவர் அவரே. இதுவரையில் அவருக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே நான் நடந்து வந்துள்ளேன்.

கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டு வராது இருக்க முடியாதவன் நான்.

அதனால் எனக்கும் கட்சிக்கும் இடையில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பினும், எனது நிலையைப் புரிந்து, நடவடிக்கைகளில் இருந்து இறங்கி வந்தவர் சம்பந்தன்.

ஆனால் சிலர், என்னை கட்சியில் இருந்து வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்

சம்பந்தனின் வருகையாலோ என்னவோ, கூட்டமைப்பைச் சேர்ந்த பலர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற வந்துள்ளனர். அவருக்கும் அவ்வாறான பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அரசியல் ரீதியாக எமது எல்லாக் கட்சிகளின் ஒற்றுமையையே, தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். ஒற்றுமையானது கொள்கை ரீதியிலேயே அமைய வேண்டும்.

தம்பி பிரபாகரன், தனது இயக்கத்துக்கு எதிராக நடந்து கொண்ட கட்சிகள் பலவற்றை ஒன்று சேர்த்து, ஓர் அரசியல் கட்சியை உருவாக்கினார்.

அப்போது கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட கட்சிகள் சில இன்று வெளியிலே நிற்கின்றார்கள். அது கொள்கை முரண்பாடுகள் காரணமாக இருக்கலாம். தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இருக்கலாம்.

ஆனால், ஓர் ஏற்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையும் சேர்த்து, கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது.

மத்தியில் கூட்டாட்சி, மாகாணத்தில் தன்னாட்சி என்று கூறிவிட்டு, மத்தியின் முகவர்களாக நடந்து கொண்டு வந்திருப்பவர்கள் எமது பயணத்துக்கு இடையூறு விளைவிக்கக் கூடியவர்கள்.

அதேபோல், தேசியக் கட்சிகளின் அங்கத்தவர்கள் மத்தியின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் எமது உறவுகளாக இருந்தாலும் எமது பயணத்தில் சேரக்கூடியவர்கள் அல்ல.

சிலர் என்னைத் தீவிர போக்குடையவர் என்று கூறுகின்றார்கள். அவர்களை எமது கட்சியின் தேர்தல் அறிக்கைகளை வாசிக்கக் கோருகின்றேன்.

சிலர் மக்களின் வாக்கெடுக்க அப்படித்தான் தேர்தல் அறிக்கைகளில் போடவேண்டும். ஆனால், நாங்கள் அரசியல் செய்ய வேண்டுமென்றால் அவற்றையெல்லாம் புறம்தள்ளி வேலைசெய்ய வேண்டும் என்கிறார்கள்.

அவ்வாறானவர்கள் தான் என்னைத் தீவிர போக்குடையவர் என்று கூறுகின்றார்கள். அவ்வாறான போக்கை நான் கண்டிக்கின்றேன்.

மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவது பாவம் என்பதே எனது நிலைப்பாடு. தேர்தல் அறிக்கைகளில் கூறியிருப்பதை அசட்டை செய்வதாக இருந்தால் அவற்றை மாற்றி மக்களிடம் இருந்து பிறிதொரு முறை அவர்கள் ஆதரவைப் பெறுவது அவசியம்.

அண்மையில் கட்சி நலம் சார்ந்து பல உடன்படிக்கைகள், உள்ளூராட்சி மன்றங்களில் எட்டப்பட்டன. கொள்கை ரீதியாக அவை நடைபெறவில்லை. பதவி ஆசையே முக்கிய குறிக்கோளாக இருந்தது.

இவ்வாறான கொள்கை அடிப்படை தவிர்ந்த உடன்பாடுகள் விரைவில் , சுய இலாபங்களுக்காக முரண்பாடுகளை வருவிப்பன என்று எதிர்பார்க்கலாம்.

விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறி எம்மை நாம் விற்கும் நிலைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால், சுய கௌரவத்துடனான இணைந்த அரசியலே மத்தியிலும் மாகாணத்திலும் கடைப்படிக்க வேண்டியுள்ளது.

வெளியார் குடியேற்றம், பௌத்த விகாரைகள்கட்டப்படுதல் போன்ற எல்லாவற்றுக்கும் சுய கௌரவத்துடனான இணைந்த அரசியலை நாம் நாடாததே காரணம்.

தமிழ் மக்களின் அரசியல் நிலை இன்று பரிதாபகரமானதாக மாறியுள்ளது, கட்சி ரீதியாக நாம் பிரிந்துள்ளோம்.

ஆனால் எமது பல்வேறு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் காணும் உள்ளடக்கங்களில் உள்ள முரண்பாடுகள் மிகச்சொற்பமே.

2013ஆம் ஆண்டு வெளிவந்த எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அடிப்படையாக வைத்தே நான் எனது கருத்துகளைத் தெரியப்படுத்தி வந்துள்ளேன்.

வெவ்வேறு மனோநிலைகள் கொண்ட இவர்கள் யாவரையும் ஒன்றிணைத்துச் செல்வது அவ்வளவு இலேசான காரியமல்ல.

ஆனாலும் இன்றைய எமது தமிழ் மக்களுக்கு ஒற்றுமை அவசியம். ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியம்.

உயரிய கொள்கைகளை உள்ளடக்கி அவற்றின் அடிப்படையில் சுயநலம் களைந்து முன்னேறுவதே இன்று தமிழ் மக்களுக்கிருக்கும் ஒரேயோர் அரசியல் பாதையாகும்” என்று தெரிவித்தார்.

இலங்கையின் மூத்த குடி தமிழரே – விக்கினேஸ்வரன்

இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என வரலாற்றுச் சான்றுகளை ஆதாரமாக்கி கருத்து வெளியிட்டிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் இவற்றைக் கூறுவதால் சிங்களவர்களுக்கு கோபம் வந்துவிடும் என உண்மைகளை மூடி மறைக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவரால் வெளியிடப்பட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை வருமாறு,

கேள்வி – இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டு வருகின்றீர்களே! சிங்களப் பேராசிரியர்கள் இதுவரை கூறிவந்ததை முற்றாக மாற்றும் வண்ணம் உங்கள் கருத்து அமைந்துள்ளது. உங்கள் கூற்று சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் அல்லவா?

பதில் – உண்மையை சில தருணங்களில் கூறாது விடுவது பொருத்தமானதாகும். சில தருணங்களில் அதனை இடித்துக் கூற வேண்டியுள்ளது.

ஒருவர் சிலரால் வாள் தடிகளுடன் துரத்தப்பட்டு வருகின்றார். அவர் உங்கள் வீட்டினுள் நுழைந்து ஒளிந்து கொள்கின்றார். வந்தவர்கள் அவரின் அடையாளங்களைக் கூறி “வந்தாரா?” என்று கேட்கின்றார்கள். “ஆம்” என்று அவரைப் பிடித்துக் கொடுத்தால் ஒளிந்தவரின் உயிர் உங்கள் முன்னிலையிலேயே பிரிய சந்தர்ப்பம் உண்டு.

நீங்கள் முடியுமெனில் மௌனம் காக்கலாம் அல்லது “இல்லை” என்று கூறலாம். “பொய்மையும் வாய்மை இடத்தே புரைதீர்ந்த–நன்மை பயக்கும் எனின்” என்று பொய்யாமொழியினராகிய வள்ளுவரே கூறியிருக்கின்றார்.
அதாவது பொய்யான சொற்கள் குற்றமற்ற நன்மையைப் பிறர்க்கு நல்குமாயின் அச் சொற்கள் வாய்மைச் சொற்கள் போன்ற நிலையை அடைவன என்றார். அவ்வாறான சொற்களானது பிறர்க்கு நன்மை பயக்க வேண்டும். தனக்கு நன்மை தருவதாக இருந்தால் அது சுயநலம் ஆகிவிடும். ஆகவேதான் “புரை தீர்ந்த” என்றார் வள்ளுவர். குற்றம் அற்ற என்பது பொருள்.

ஆனால் உண்மையானது சில தருணங்களில் வெளிக்கொண்டுவரப்படாது நம்மால் மௌனம் காக்கப்பட்டால் பொய்மைகள் நாடுபூராகவும் உலாவத் தொடங்கி விடுவன. இன்று அவ்வாறான ஒரு நிலையே எழுந்துள்ளது. பத்தாம் நூற்றாண்டில் சோழர் படையெடுப்பின் போது வந்தவர்களே இலங்கைத் தமிழர்கள் என்று கூறி வருகின்றார்கள் பெரும்பான்மையினர். உண்மை அதுவல்ல. இலங்கையின் மூத்த குடிகள் நாகர்கள் என்று அழைக்கப்பட்ட தமிழர்களே என்பது இப்பொது வரலாற்று ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. என்றாலும் சுயநலம் கருதி, சிங்கள அறிஞர்கள் உண்மையைத் தெரிந்தும் அதைத் திரிபுபடுத்தி சொல்லி வருகின்றார்கள். அவர்களின் பொய்மைகள் வாய்மைக்குள் அடங்கமாட்டா.

உங்களைப் போலவே ஒரு சிங்கள அன்பர் ஆத்திரத்துடன் எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். உண்மைக்குப் புறம்பான தகவல்களை நான் பரப்பி வருகின்றேன் என்றார். அதற்கு உடனே நான் பதில் இறுத்தேன். எனது வரலாற்று அறிவின்படி தமிழரின் வரலாறு பற்றிய சில விடயங்களைச் சரியென்று ஏற்றுக்கொண்டுள்ளேன். அவற்றைப் பிழையென்று கூறக்கூடிய மேம்பட்ட அறிவு உங்களுக்கிருந்தால் உங்கள் கருத்தைக் கூறுங்கள். நான் நூல்களை வாசித்தறிந்து, எமது வரலாற்றுப் பேராசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து எனது தரவுகள் சரியா நீங்கள் கூறுபவை சரியா என்ற முடிவுக்கு வருகின்றேன் என்று கூறி பின்வரும் ஐந்து விடயங்களை மின்னஞ்சல் மூலம் அவர்முன் வைத்தேன்.

1. இலங்கையில் திராவிடர்கள் புத்த பெருமானின் பிறப்புக்கு முன்னரே இருந்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
2. ஒரு முழுமையான மொழி என்ற முறையில் சிங்கள மொழி பரிணாமம் பெற்றது கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. அதற்கு முன் சிங்கள மொழி என்று ஒன்று இருக்கவில்லை.
3. நவீன DNA சோதனைகள் தற்போதைய சிங்கள மக்கள் பண்டைய திராவிடரின் வாரிசுகளே என்பதை உறுதிப்படுத்துகின்றன. திராவிடர் என்ற சொல்லும் தமிழர் என்ற சொல்லும் தமிழரையே குறிப்பிடுகின்றன. சமஸ்கிருதம் பேசிய மக்களுக்கு தமிழர் என்று உச்சரிக்க முடியாததால் அவர்களே தமிழர்களைத் திராவிடர் என்று அழைத்தார்கள்.
4. சிங்கள மொழியானது தமிழ், பாளி மற்றும் அக் காலத்தைய பேச்சு மொழிகளில் இருந்தே உருப்பெற்றது.
5. சிங்களவர் என்ற முறையில் வட மாகாணம் பூராகவும் எந்தக் காலகட்டதிலும் சிங்கள மக்கள் இங்கு வாழவில்லை. தமிழ் மக்கள் வாழ்ந்த பண்டைய இலங்கையில் பின்னர் ஒரு கட்டத்திலேயே சிங்கள மக்கள் உருவெடுத்தார்கள். அவர்கள் தற்போதைய வட மாகாணத்தின் தெற்குப் பக்கமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர் எனது கூற்றை மறுத்து தனது தரவுகளை சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார். எனது கூற்றுக்களே அவர்களைக் கோபமடையச் செய்து சிந்திக்கவும் வைத்துள்ளது. உண்மை நிலையை உணர்த்தினால் சிங்கள மக்கள் சீற்றமடைவார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் சிங்கள மக்கள் இதுவரையில் நிர்மாணித்துள்ள பொய்மையான வரலாற்றை எதிர்ப்பவன். உண்மை வெளிவர வேண்டும் என்ற விருப்பம் உடையவன்.

ஒரு திருமணம் நடக்கவிருந்தது. ஒரு வீட்டுக்குக் குடியிருக்க வந்த ஒரு குடும்பத்தவர் தாங்கள் அந்த வீட்டுச் சொந்தக்காரரின் உறவினர் என்று கூறி தமது வாரிசுக்கு திருமணமும் நிச்சயித்து விட்டார்கள். ஆனால் இரு குடும்பங்களுக்குமிடையில் எதுவித சொந்தமுமில்லை. குலம் கோத்திரம் பின்னணி எல்லாம் வெவ்வேறு. வீட்டுச் சொந்தக்காரருக்கு இது தெரிய வந்தது. ஆயிரம் பொய் சொல்லி என்றாலும் பெண்பிள்ளை ஒருவளைக் கரை சேர்க்க வேண்டும் என்று எம் மக்கள் பேசி வந்துள்ளதை அவரும் அறிந்திருந்தார். அவர் மௌனம் காத்திருக்கலாம். ஆனால் பொய் சொல்லிக் கல்யாணம் நடக்கின்றதே. அது எதிர்காலத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் யோசித்துப் பார்த்தார். தனது கடமை உண்மையை உள்ளவாறு கூறிவைப்பதே என்பதை உணர்ந்தார். மாப்பிள்ளை வீட்டார்கள் சொந்தம் பற்றி வேறு நபர்கள் மூலம் வினாவிய போது உண்மையைக் கூறினார். எந்தவித சொந்தமுமில்லை அவர்கள் குடியிருக்க வந்தவர்கள் என்பதைத் தெளிவுபடுத்தினார். இதனால் நிட்சயதார்த்தத்துடன் திருமணம் தடைப்பட்டது.

இந்த நிலையை ஏற்படுத்தியமை பிழையென்று கூறுவோரும் உண்டு. சரியென்று அடித்துக் கூறுவோரும் உண்டு. எது எவ்வாறிருப்பினும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஊரில் உலாவவிட்டது குடியிருப்பாளரின் தவறு! தான் தவறைச் செய்து விட்டு, பொய்யைப் புனைந்துரைத்து விட்டு, உண்மையை வெளிக்கொண்டு வந்தவரின் மீது சீற்றமடைவது குடியிருப்பாளரின் பிழை. அதை உணராமல் பேசுவது பொய்மையை உண்மையாக்குவது போலாகும். திருமணமானபின் உண்மை வெளிவந்தால் தம்பதியினரிடையேயும் குடும்பத்தினரிடையேயும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை நாங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். பொய்மையை உண்மை என்று சித்தரித்து ஒரு சாரார் நன்மைகளைப் பெற்று வரப் பார்ப்பதும் கருத்துக்கெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான நிலையில்த்தான் பொய்மைகளை விமர்சித்து வருகின்றேன்.

பொய்மைகளின் வழிநின்று சீற்றமடைபவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவது பிழையன்று. அவ்வாறு செய்யாவிட்டால் பொய்மையை எப்ப வேண்டுமானாலும் பலாத்காரமாக நிலைநிறுத்தலாம் என்றாகிவிடும். உண்மைக்கு ஒரு பலம் உண்டு. அதுபற்றி ஆதிசங்கரரின் குருவின் குருவான கௌடபாதர் என்பவர் கூறியுள்ளார். உண்மையானது ஆயிரம் பொய்மைகளுக்கு மத்தியிலும் சுடர் விட்டுப் பிரகாசிக்கக் கூடியது என்றார். அதன் சக்தி அது. எனவே உண்மையைக் கூறினால் மற்றவர்கள் ஆத்திரப்படுவார்கள் என்று எக்காலத்திலும் மௌனம் சாதிக்க வேண்டும் என்று எண்ணுவது மடமை.

பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான “இலங்கைத் தமிழர்வரலாறு – கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300” என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் XIV) பின்வருமாறு கூறுகிறார் –

“இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கிவிட்டனர் என்றும் சொல்லக் கூடிய காலம் வந்துள்ளது. நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதாலும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டைப் பிரதானமாக அவர்களே இலங்கையிற் பரப்பினார்கள் என்பதாலும் கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலைபெற்றுள்ளமை உய்த்துணரப்படுகின்றது. தமிழ் மொழியின் தொன்மை பற்றி தமிழ்நாட்டுத் தொல்பொருட் சின்னங்களை ஆதாரமாகக் கொண்டு நிர்ணயிக்க முடியாதவற்றை இலங்கையிற் கிடைக்கின்ற தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களின் அடிப்படையிலேயே சொல்ல முடிகின்றமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்”.

ஆகவே இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று சொல்வதில் தவறு ஏதும் இருப்பதாகக் கூறமுடியாது. ஸ்ரீலங்கா கார்டியன் என்ற பத்திரிகையின் 25.01.2013ந் திகதியப் பிரதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது –

“சிகல” என்ற சொல் (பாளி மொழியில் சிங்கம்) முதன் முதலில் தென்படுவது தீபவன்ச என்ற நூலில் (கி.பி. 4-5ம் நூற்றாண்டுகளில்). இந்த நூலில் “சிகல” என்ற சொல்லானது ஒரு முறையே தென்படுகிறது. சிங்கம் என்ற சொல்லின் காரணமாகவே இந்தத் தீவு “சிகல” என்று அழைக்கப்பட்டது. 5ம் 6ம் நூற்றாண்டு காலத்தைய நூலாகிய மகாவம்சத்தில் “சிகல” என்ற சொல் இருமுறையே குறிப்பிடப்படுகிறது.

ஆனால் கிறீஸ்துவுக்கு முன்னைய இராமாயணத்தில் இத்தீவு இலங்கை (லங்கா) என்றே அழைக்கப்பட்டுள்ளது. தீபவன்ச இவ்வாறான சொற்களைப் பாவிப்பதற்கு முன்னர் இலங்கையில் சிங்கள இனம் என்று ஒன்று இருக்கவில்லை. கி.பி. 4ம், 5ம் நூற்றாண்டுகளில் கூட பின்னர் சிங்கள மொழி என்று அழைக்கப்பட்ட மொழி வழக்கிற்கு வரவில்லை. தீபவன்ச, மகாவன்ச என்ற நூல்களை அம்மொழியில் எழுதும் அளவுக்கு அம்மொழி வெளி வந்திருக்கவில்லை”.

ஆகவே அந்தக் காலத்தில் சிங்களம் பேசாதவர்களை சிங்களவர் என்று அடையாளப்படுத்துவது தவறானது. எனவே இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்பதற்கு தற்போது போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. இதுவரை சிங்கள அறிஞர்களால் குறிப்பிட்டு வரப்பட்ட வரலாறு பிழையானது. உண்மையை உள்ளவாறு உரைப்பது தவறாகாது. சினமூட்டுதல் தவறு என்றால் எமது உண்மை வரலாறு எஞ்ஞான்றும் வெளிவராது போய்விடும். சினமூட்டியேனும் உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதே எனது விருப்பம். – என்றுள்ளது

ஈழத்தமிழர்களின் மதவெறித்தனம் ! பக்தியா ? பயமா ?

தமிழ் தேசிய மதம் !

வெளிநாடொன்றிலிருந்து கைது செய்யப்பட்டு சிறிலங்காவுக்கு கடத்தி செல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரை சகல விசாரணைகளுக்கும்  உட்படுத்தி முடிந்த காலப்பகுதியொன்றில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச சந்தித்து பேசினாராம். அப்போது அந்த முக்கிய உறுப்பினரிடம் சில முக்கிய விடயங்களை பேசிவிட்டு -‘போர் முடிந்துள்ள தற்போதைய – அமைதியான – காலப்பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழர்களுக்கு அள்ளி வழங்கி அவர்களது மனதில் போர் குறித்த நினைவுகளையும் புலிகள் பற்றிய எண்ணத்தையும் முற்றாக துடைத்தெறியப்போகிறோம். இவற்றைவிட தமிழ் மக்களின் மனங்களில் லாவகமாக இடம்பிடிப்பதற்கு வேறு என்ன வழி” – என்று கோத்தபாய கேட்டாராம்.

அதற்கு சாதுவான புன்னகையோடு பதிலளித்த அந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் –

“மக்களின் மனங்களில் இடம்பிடிப்பதற்கு என்ன செய்வது என்பதை யோசிப்பதற்கு முதல், எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். தமிழ் மக்களை பொறுத்தவரை, கோயில்கள் – காணிகள். இந்த இருவிடயங்களும் அவர்களும் மிகவும் முக்கியமானவை. உணர்வுபூர்வமானவை. இவற்றில் நீங்கள் கை வைத்தீர்களானால் அதற்கு பிறகு நீங்கள் எதை செய்தாலும் அவர்களின் மத்தியில் அவை எடுபடப்போவதில்லை”

– என்று கூறினாராம்.

இந்த சம்பாஷணையில் உள்ள யதார்த்தத்தினை கோத்தபாய புரிந்தாரோ இல்லையோ, புலிகள் தங்களின் ஆட்சிக்காலம் முழுவதும் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள்.

விடுதலைப்புலிகளது ஆட்சியின் எந்தக்காலப்பகுதியிலும் அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த மக்களின் வெறித்தனமாக மத நம்பிக்கை, அதன் வழி நீண்ட கோயில் கலாச்சாரங்கள், மத ரீதியான மூட நம்பிக்கைகள், அதன் வழியாக வீண் செய்யப்பட்ட பல லட்சக்கணக்கான பணம் என்பவற்றை அவர்களால் கட்டுப்படுத்தவே முடிந்திருக்கவில்லை. மாறாக, விடுதலைப்புலிகளின் தலைவரையே முருகனுக்கு உருவகித்து பாடல் பாடுமளவுக்குத்தான் சைவ சமயம் என்பது போராட்டத்தை சுற்றிவளைத்து வைத்திருந்தது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் இது வெளிப்படையாக தெரியும் விடயமாக இல்லாவிட்டாலும், அகவயமாக வியாபித்துக்கிடந்த உண்மை.

இன்னொரு விதத்தில் கூறப்போனால், உலகின் மிகப்பலம்வாய்ந்த மக்கள் இராணுவங்களில் ஒன்றாக பல்வேறு தரப்பினராலும் வியந்து போற்றப்பட்ட விடுதலைப்புலிகளினால்கூட தங்களது கட்டுப்பாட்டிலிருந்த – தீவிரமான மத நம்பிக்கையில் ஊறிப்போய் கிடந்த – மக்கள் கூட்டத்தின் விசர் கூத்துக்களை ஒருபோதும் நேர் சீரான வழிமுறைகளுக்குள் கொண்டுவரமுடியவில்லை.

அப்போதே அந்த நிலையென்றால், இப்போது?

போர் முடிந்து இன்னமும் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றே தெரியாத ஒரு மண்ணில் இன்றைக்கும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி கோயில் கும்பாபிஷேகம் நடத்துகின்ற ஒரு இனமாக திமிரோடு நிற்பதும் –

ஒரு இனத்தின் மிகப்பெரிய விடுதலைக்காக போராடிய அமைப்பின் போராளிகள் இன்னமும் சமூகத்தின் தீண்டப்படாதவர்களாக நடத்தப்படுகின்ற மண்ணில் அவர்களிலும் பார்க்க மேலான கடவுள் தமக்குள்ளார்கள் என்று அதே மண்ணில் காவடிகள் எடுக்கும் பக்திமான்கள் வாழ்வதும் –

தமிழர் தாயகத்தில் மாத்திரம்தான் சாத்தியமாகிக்கிடக்கிறது..

என்னைப்பொறுத்தவரை, ஈழத்திலுள்ள சைவ நம்பிக்கையும் அதற்காக எமது மக்கள் காண்பிக்கும் வெறித்தனமான பக்தியும் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் அட்டகாசங்களைவிட பயங்கரமானது. ஆனால், அந்த அரியண்டங்களிலிருந்து ஈழத்தின் மத நம்பிக்கை தனித்து தெரிவதற்கு காரணம், எம்மவர்கள் பிற மதங்களின் மீது ஆக்கிரமிப்பு செய்வதில்லை. பிற மதங்களின் மீது வன்முறைகளில் இறங்குவதில்லை. தங்களது வெறித்தனமான பக்தியை கலாச்சார அடையாளமாகவும் பண்பாட்டுக்கூறாகவும் காலம் காலமாக பேணிவருவதால் பெரியளவிலான வரலாற்று பாதகங்கள் எதுவும் நிகழவில்லை. வேறுவகையில் சொல்லப்போனால், ஈழத்திலுள்ள சமய நம்பிக்கை – பிற மதங்களை காயப்படுத்தாத – இராஜதந்திர ரீதியான பக்தியில் நிலைநிற்கிறது. அது எமது மக்களுக்குள் கலந்து கிடக்கும் வடிவமே வேறு.

இந்த மத நம்பிக்கையானது பன்னெடுங்காலமாக மக்களாலேயே வரைவிலக்கணப்படுத்தப்பட்டு ஊறிப்போய் கிடப்பதும் சமரசம் செய்யமுடியாத அகவயமான கூறுகளோடு பயணிப்பதும் எம்மினத்தில் அமிழ்ந்து கிடக்கும் அதிசயங்களில் ஒன்று.

மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் திட்டம் போடுவதுபோல இந்த சமய நம்பிக்கையின் வழியாக புதிதாக எதுவும் செய்துவிடவும் முடியாது. அதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் தயாராகவும் மாட்டார்கள்.

‘புதினம்’ இணையத்தளத்துக்காக அனிதா பிரதாப்பினை செவ்வி கண்ட பின்னர், அடுத்ததாக நான் பா.ஜ.க.வின் இல. கணேசனை செவ்வி கண்டிருந்தேன். அப்போது அவர், “விடுதலைப்புலிகள் மாத்திரம் தங்களது போராட்டத்தினை இந்து மத போராட்டமாக அறிவித்திருந்தால், பா.ஜ.க. எப்பவோ ஆதரவளித்திருக்கும்” என்றார். “அவரது கருத்து குறித்து என்ன நினைக்கிறீர்கள்” – என்று தமிழ்ச்செல்வன் அவர்களிடம் கேட்டபோது – அவர் வழக்கத்தைவிட அதிகமாக சிரித்தார்.

ஆக, தமிழர் தாயகம் இந்து மதத்தினை தங்களின் மீது திணிக்கப்படுகின்ற அடையாள அழிப்புக்கு எதிரான கருவியாக பயன்படுத்துவதற்கு நினைத்திருந்தால் அது எப்பவோ நடந்திருக்கும். அது அன்றைக்கும் நடக்கவில்லை. இன்றைக்கும் நடக்கவில்லை. என்றைக்கும் நடக்கப்போவதில்லை.

தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தின் பலமே அதுதான்.

தமிழ் தேசியத்திலிருந்து எந்த மதத்தினை தூக்கி வெளியே போட்டாலும் அது போராட்டத்திற்கு எந்த பங்கத்தையும் ஏற்படுத்தாது.

ஆனால், சிங்கள தேசியத்திலிருந்து பௌத்தத்தினை தூக்கி வெளியில் போட்டுப்பாருங்கள். அவர்களது தேசியம் சிரிக்கத்தொடங்கிவிடும்.

இதை புரிந்துகொள்ளாத, மறவன்புலவு சச்சிதானந்தம் இப்போது மாட்டு இறைச்சியை menu கார்ட்டிலிருந்து அகற்றுவதற்கு மூலம் எங்களது சனங்களுக்கு தான் நினைத்தவாறு சாமத்திய வீடு செய்யலாம் என்று நினைப்பது படு முட்டாள்தனம்.

ப. தெய்வீகன்

http://www.eelamview.com/2018/06/03/cast/

http://www.eelamview.com/2018/06/03/siva-sena-sachi/

http://www.eelamview.com/2018/06/07/varani-cast/

தேசியத் தலைவரின் வீரச்சாவும் ! தேவைப்படுவோரின் தேவைகளும் !

புலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ண பத்திரிகை ஒன்றில் “சத்திய சோதனை” எனும் ஆக்கத்தில் எழுதிய விடயம் ஒன்று தற்போது நினைவுக்கு வந்தது.

காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் அரிச்சந்திர மயான காண்டம். நடிக மணி வி.வி.வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார்.

‘சோகசோபித சொர்ணக்குயில்’ இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக நடித்தனர். இந்த இசை நாடகத்தைப் பின்னர் பிரபல எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் மேடையேற்றினார்.

‘மயானத்தில் மன்னன்’ என்ற பேரில் அரியாலையைச் சேர்ந்த பொன்னையா சண்முகலிங்கம் என்பவரால் நடிக்கப்பட்டது. இந்த அரிச்சந்திரன் கதா பாத்திரம் மகாத்மா காந்தியின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அரசுரிமை, மனைவி, மகனை இழந்த போதும் சத்தியத்துக்காக நிலைகுலையாத மன்னன் அரிச்சந்திரனின் வரலாறு அது. மகாத்மாகாந்தி தனது சுய சரிதையை சத்தியசோதனை என்ற பெயரிலேயே எழுதினார்.

தமிழர் தம் வரலாற்றிலும் இதேபோன்ற நிலை எழுந்தது. உணர்வுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் ‘அவர்’ உயிருடன் வாழவேண்டும் எங்காவது தப்பித்து இருக்க வேண்டும் என மனதார விரும்புகின்றனர்.

ஆனால் அவர் இல்லை என்பதே யதார்த்தம். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சாத்திரிமாரை அணுகும்போது அவர் ஓரிடத்தில் உள்ளார்; மறை பொருளாகக் காட்டுகிறது என்றே சொல்லுவர்.

உண்மையில் அவர்களுக்குத் தெரியும் ஆள் இல்லையென்று. அதைச் சொன்னால் அன்று கிடைக்கும் வருமானத்துக்குப் பின் எதுவும் கிடைக்காது. ஆகவே இருக்கிறார் – இருக்கிறார் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.

இதையொத்த நிலைதான் 2009 மே 18இற்கு பின் ஏற்பட்டது. சுமார் முப்பத்தையாயிரம் மாவீரர்களை வழிநடத்தியவர் மாவீரராகிவிட்டார். அவரை மாவீரர் பட்டியலில் சேர்க்கத் தயாரில்லை புலம்பெயர்வாசிகளை வழிநடத்துவோர்.

அவரின் அண்ணன் மனோகரன் ‘சிலர் மண்ணில் தேடுகிறார்கள், சிலர் விண்ணில் தேடுகிறார்கள்’ என ஒரு ஊடகத்தினரின் கேள்விக்குப் பதிலளித்தார். வேறு எப்படித்தான் பதிலளிப்பது? அவர் தமிழரின் மனங்களில் வாழ்கிறார் என்பதே உண்மை.

குலம் அண்ணா அவருக்கு விளக்கேற்றி தமது உணர்வை வெளிப்படுத்த முயன்றார். அதற்கு தடை விதிக்கப்பட்டது. அவர் உயிரோடு உள்ளார் என்று மற்றவர்களுக்கு சொல்லலாம்.

குலம் அண்ணருக்கே சொல்ல முடியுமா? தலைவருக்கு விளக்கேற்ற அனுமதிக்காத இடத்தில் எனக்கென்ன வேலை? என நினைத்தார். ஒரு மாபெரும் பொய்யை வழிமொழிய அவர் தயாராக இருக்கவில்லை.

இதற்காக அல்பிரட் துரையப்பா, கருணா போன்றோருக்கு கொடுத்த பட்டத்தை வாய்மொழியாகவும், சமூகவலைத் தளங்களிலும் பரப்பினர். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு 2009இற்கு பின்னர் மாவீரர் நாளில் ஒரு சாதாரண தமிழ் மகனாக ஒரு மூலையில் நின்று சுடரேற்றி விட்டுத் திரும்புகிறார்.

‘ஒரு விளக்கேற்ற வேண்டுமென்று துடிக்கிறார்கள்’ என்றும் ஒரு பிரகிருதி இவரது நிலைப்பாட்டைக் கொச்சைப்படுத்தினார். 2009 இல் ‘எமது ஆயுதப்போராட்டம் மௌனித்து விட்டது’ என்று அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் உத்தியோகபூர்வமாக அறிவித்தாயிற்று.

2011 ஜனவரி 11இல் சுவிஸ் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர்கள் 7 பேரை சுவிஸ் அரசு கைது செய்தது. இவர்கள் உட்பட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

சுவிஸிலுள்ள தமிழர்களிடம் பலாத்காரமாக நிதி சேகரிக்கப்பட்டது என்றொரு குற்றச்சாட்டு. இப்பணம் குற்றவியல் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டது என்றுமொரு குற்றச்சாட்டு.

வங்கியை ஏமாற்றினர் என்றும் ஒரு குற்றச்சாட்டு. இறுதி யுத்தத்தின் தேவைகளுக்கென தனி மனிதர்களின் பெயர்களில் கடன் பெற்று இயக்கத்துக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அங்குள்ள அப்போதைய மற்றும் தற்போதைய தலைமை மௌனம் காத்தது. அவர்கள் வேண்டிய காசு அவர்களே கட்டட்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு.

இந்தக் காசு எங்கே போனது என்பதும் சந்தேகமறத் தெரியும். அந்தப் பொய்யை தொடர்ந்து சொல்ல விடாமல் குலம் அண்ணா போன்றோர் தடுக்கிறார்கள் என்பதே அவர்களின் கோபம்.

சுவிஸில் உள்ள தமிழர்களிடம் நாம் மனம் விரும்பியே நிதி வழங்கினோம் என்றொரு ஆவணத்தைச் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் வழங்கினால் வழக்கை முடிக்கலாம் என்றொரு நிலை இருந்தது.

மாவீரர் நாள் நிகழ்வு மற்றும் ஆலயங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் மக்களிடம் கையெழுத்து வாங்க முயன்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த 14ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் குலம் அண்ணர் இந்த விடயத்தை உலகுக்கு வெளிப்படுத்தினார். உலகெங்கும் உள்ள ஆர்வலர்கள், உணர்வாளர்கள் சம்பந்தப்பட்டோரின் செயல் குறித்து கடும் சீற்றமடைந்தனர்.

எனினும் பூப்புனித நீராட்டு விழா, திருமணம் போன்ற வைபவங்களில் இந்த விடயத்தை தெரியப்படுத்திய எஸ்.ரி.ஏ எனும் அமைப்பினர் மக்களிடம் படிவத்தை வழங்கிக் கையொப்பம் பெற்றனர்.

இச் செய்தியை குலம் அண்ணரின் வாயால் கேட்டதும் மிகவும் ஆறுதல். இவ்வாறு கையெழுத்திட்ட 5069 உணர்வுத் தமிழர்களே! உங்கள் அனைவரையும் ஒவ்வொரு போராளியாக நான் மதிக்கிறேன், என் நண்பர்களாக ஏற்கிறேன்.

எனது நட்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மன்னிக்கவும்! எனது தலைவன் யார் காலிலும் விழக்கூடாது என்றுதான் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். இன்றோ போராடிய இனம் யார் யாரோ காலிலெல்லாம் விழுகிறது. அவர் இருக்கிறார் திரும்பி வருவார் என்று சொல்வதன் மூலம் தமக்கான கடமையை நாசூக்காக நிராகரிக்கின்றனர்.

யுத்தம் முடிந்தபின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்யவேண்டிய கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கும், வெளிநாட்டில் முதலீடுகளை வைத்திருப்போருக்கும், ஏனைய புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் உள்ளது.

மூன்றாம் தரப்பினர் ஏதோ தம்மாலான உதவிகளை செய்கின்றனர். மலைபோல் உள்ள தேவைக்கு இது மிகவும் அற்பமே. இருக்கும் பணத்தை நாட்டில் தேவை உள்ளோருக்கு அனுப்பாமலிருக்க தீர்மானித்த இரண்டாம் தரப்பினர் இந்த முதலீடுகளை எப்படி மேலும் பெருக்கலாம் என எண்ணுகின்றனர்.

அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு எப்போதுமே அடுத்த தேர்தல் பற்றிய சிந்தனைதான். ஆளுமையுள்ளவர்கள் எவரும் அருகில் வந்துவிடக்கூடாது. அவர்களுக்கு தேவை எடுபிடிகளே.

இந்த நிலையில் தமக்கு சமூக அங்கீகாரமும், வாழ்வாதாரமும் வழங்கும் சக்திகளின் பின்னால் பாதிக்கப்பட்டோர் இழுபட்டுப் போவது தவிர்க்க முடியாதது. ஒரு மனிதனை ‘நூறாண்டு காலம் வாழ்க!’ என்றே வாழ்த்துகிறோம்.

இப்போதிருந்தால் அவருக்கு 64 வயது. இன்னும் 36 வருடங்களுக்கு இப்படியே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்களா? இன்று இவர்கள் சொல்லும் சொல்லை பலர் நம்புகின்றனர். இவர்களின் பிள்ளைகள் 36 வருடங்களுக்குப் பின்னும் இதே பொய்யைச் சொல்லப்போகிறார்களா?

அப்போது எமது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இந்தக் கதையைக் கேட்க வேண்டி வருமா? ஒவ்வொருவரும் யாருக்காகச் சுடரேற்றப் போகிறீர்களோ அத்தோடு மனதில் அவரையும் நினைத்துச் சுடரேற்றுங்கள்.

இன்று முன்னாள் போராளிகள், போராட்டத்துடன் நீண்ட காலம் ஒத்துழைத்தோர் யாசகம் கேட்கின்றனர். மனதை உலுக்கும் செய்தி இது. இன்னொரு விடயம் ஒரு ஆண் எந்த வயதிலும் தந்தையாகலாம்.

ஆனால் பெண்ணின் நிலை அப்படி அல்ல. பெரும்பாலும் 35 வயதுக்குப்பின் தாயாக முடியாது. (விதிவிலக்காக சிலர் 40 வயதிலும் குழந்தை பெறுகின்றனர்) அவர் வளர்த்த செஞ்சோலைப் பிள்ளைகள் பலருக்குத் திருமணமாகவில்லை.

ஒரு பகுதியினர் வவுனியா டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் உள்ளனர். இன்னொரு பகுதியினர் அகிலாண்டேஸ்வரி இல்லத்தில் உள்ளனர். இவர்கள் பற்றிச் சீரியஸாகச் சிந்திக்க வேண்டும்.

வயது வந்த ஆண் பிள்ளைகள் உள்ள தமிழர்கள் இந்தப் பிள்ளைகளை மருமக்களாக ஏற்கத் துணியவேண்டும். அது அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும். நாங்கள் உறவுகள் இருக்கிறோம் என நம்பிக்கையூட்ட வேண்டும்.

இந்த விடயத்தில் ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பை வழங்க வேண்டும். டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தை நிர்வகிக்கும் அருட்சகோதரி குடிகாரனாக இல்லாமல் இருந்தால் அதுவே போதும் என்கிறார்.

வெளிநாட்டில் சண்டித்தனம் புரிவோருக்கு இவ்வாறான விடயங்களில் அக்கறை இல்லை. முள்ளிவாய்க்காலில் எல்லாத்தரப்பையும் ஒற்றுமையாக்கி விட்டாலும் இவர்கள் விடுவதாய் இல்லை. தனியே சுடரேற்ற ஏற்பாடு செய்தார்கள்.

பிரதேச வேறுபாடு காட்டுகிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்தத் துணை நின்றார்கள். பிரான்ஸில் மாவை கலந்து கொண்ட மாநாட்டில் கண்ணீர்ப்புகையடிக்க ஏற்பாடு செய்தார்கள்.

எமது மொழியின் பெயரால் யாழ்ப்பாணத்தில் மாநாடு நடந்தாலும், பிரான்ஸில் நடந்தாலும் கண்ணீர் புகைக்குண்டுதானா? அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணீர்ப்புகைக்குண்டு தாக்குதலைத் தொடர்ந்து ஒன்பது பேர் உயிரிழக்க நேர்ந்தது.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆயுத வழியை இளைஞர் நாடினர். ஏற்கனவே தமிழ் இளைஞர் பேரவையில் அங்கம் வகித்தவர்களில் குலம் அண்ணரும் ஒருவர்.

‘இந்தப் போராட்ட வரலாற்றில் எம்மைப் பாதுகாத்தவர் நீங்கள். உணவு தந்தவர் நீங்கள். நோயுற்ற வேளையில் பராமரித்தவர்கள் நீங்கள். தேவை என்றால் இரத்தம் தந்தீர். மீட்பு நிதி என்றதும் நகையைத் தந்தீர். இறுதிப் போர் என்றதும் பிள்ளைகளைத் தந்தீர்.

இன்று தலைவன் இல்லாத நிலையில் உங்களுக்கு மட்டுமே நாம் விசுவாசமாக இருக்க வேண்டும். ஆயிரம் தடவை சொல்கிறோம் அவர் எங்கள் மனதில் மட்டுமே வாழ்கிறார்.

தமிழகத்தில் வைகோவிடம், அவரைத் தமிழினம் இழந்துவிட்டது என்று சொன்னதும் விம்மி விம்மி அழுததாக எனது நெருங்கிய நண்பர் எனக்குச் சொன்னார்.

அவரையும், நெடுமாறன் ஐயாவையும், காசி அண்ணாவையும் ஏமாற்றி விட்டனர். அவர்கள் அனைவருக்கும்தான் இந்த வருத்தமான செய்தியை உறுதிப்படுத்துகிறேன். என் மீது மேற்கொள்ளப்படும் எந்தச் சேறடிப்பையும், செருப்படியையும் ஒரு பொருட்டாக மதிக்கப்போவதில்லை.

உண்மையையா, எமக்கு விருப்பமானதையா என்ற கேள்வி வரும்போது உண்மையின் பக்கம் நிற்போர் எங்களுடன் கைகோத்துக் கொள்ளுங்கள். இது சத்தியசோதனை தான்! விடுதலைப் புலிகளை ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல எனத் தெரிவித்தமைக்காக சுவிஸ் அரசுக்கு நன்றி சொல்வோம்.

தண்டனை கிடைக்க வேண்டுமென எதிர்பார்த்த சக்திகளுக்குள் சில ஊடகங்களும் அடக்கம். அவர்களுக்கு ஏமாற்றம்தான்… அவ்வாறான ஏமாற்றம் தொடரட்டும்.

யார் இந்தக் குலம் அண்ணர்?

இயற்பெயர் – செல்லையா குலசேகரராஜசிங்கம்

சொந்த இடம் – புன்னாலைக்கட்டுவன்

பிறந்த திகதி – 1955 ஏப்ரல் 17

‘சுருக்கமாகச் சொன்னால் ஈழத்துக் காமராஜர். இருவருக்குமிடையில் வழிமுறைகள் மாறுபட்டபோதும் அவரைப்போலவே திருமணமாகாதவர். எளிமைக்கும், யோக்கியத்துக்கும் இவரேயே உதாரணம் காட்டுவர்.

‘புதிய தமிழ்ப் புலிகள்’ இயக்கத்தில் இருந்த சுமார் பத்துப் பேரில் ஒருவர். தமிழ் உணர்வாளர்களைத் தேடித் திரிந்த தலைவர் பிரபாகரன் 1975இல் இவரை இனங்கண்டார்.

துரையப்பாவின் சம்பவத்துக்குப் பின்னர் தலைவரைப் பாதுகாத்தவர்களில் இவரும் ஒருவர். ஒரு தேவைக்காக தலைவருடன் அச்சுவேலிக்குப் போய் வருகையில், வேறொரு விடயமாக வீதிச் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் இவர்களை மறித்தனர்.

அவ்வேளை தலைவர் வானத்தை நோக்கித் துப்பாக்கி பிரயோகம் செய்யவே பொலிஸார் சிதறி ஓடினர். அவரின் துணிச்சலை நேரடியாகக் கண்ட குலம் சரியான தலைவனின் தொடர்பு கிடைத்ததற்காகப் பெருமைப்பட்டார்.

தீவிரவாத இளைஞர்களைத் தேடித் திரிந்த இன்ஸ்பெக்டர் சம்பந்தனுக்கு, துரோகி ஒருவர் இவரை இனங்காட்டினார். பொலிஸாரால் கைதான இவர் மோசமான சித்திரவதைக்குள்ளானார்.

பல்வேறு இடங்களுக்குக் கொண்டு திரிந்த பொலிஸார் பின்னர் கொழும்பு நாலாம் மாடியில் தடுத்து வைத்திருந்தனர். 1978 செப்டெம்பரில் இரத்மலானையில் இடம்பெற்ற அவ்ரோ விமானக் குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி வழக்குத் தாக்கல் செய்தனர்.

அதன் பின் ‘அவ்ரோ குலம்’ என்றே எல்லோராலும் குறிப்பிடப்பட்டார்.

அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம் வாதாடி இவரை விடுவித்தார். 1980 மே மாதம் இயக்கத்தில் பிளவு உண்டானது. இரு பகுதியினரையும் ஒன்றிணைக்க ராஜா என்பவர் லண்டனிலிருந்து வந்திருந்தார்.

1980 ஓகஸ்ட் மாதம் ஊர்காவற்றுறை கரந்தனில் இணைப்புச் சம்பந்தமாகக் கலந்துரையாடல் நடைபெற்றது. இரு பகுதியினரதும் கருத்துக்களை குலம் அண்ணரே பதிவு செய்தார். சமரச முயற்சி வெற்றிபெறவில்லை.

செல்லக்கிளி அம்மான், காந்தன் முதலியோரைப்போல இவரும் தற்காலிகமாக ஒதுங்கி இருக்க முடிவு செய்தார். எனினும் 1981இல் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டதும் இவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

விமானம் மூலம் பலாலியிலிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டோரில் இவரும் ஒருவராக இருந்தார். பனாகொடை முகாமில் குட்டிமணி, தங்கத்துரைக்கு நிகழ்ந்தது போன்றே கடுமையான சித்திரவதை இவருக்கும்.

1982இல் சந்திரஹாசன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மூலம் விடுதலையானார். எனினும் பிரதி வாரம் பொலிஸில் கையெழுத்திட வேண்டியிருந்தது. பின்னர் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார்.

மண் வீடு, வறுமை, திருமணமாகாத மூன்று சகோதரிகள். வேறு வழியில்லை. 1984இல் இந்தியாவுக்குச் சென்றார். தலைவரை சந்தித்த பின் 1985இல் சுவிற்சர்லாந்துக்குச் சென்றார்.

இவரது புகலிடக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. சுவிஸில் செங்காளன் மாநிலத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகளுக்குத் தலைமை தாங்கினார்.2000ஆம் ஆண்டிலிருந்து சுவிஸ் முழுவதற்குமான பொறுப்பை ஏற்றார். 2009இல் யுத்தம் முடிவடையும் வரை இப்பொறுப்பில் இருந்தார்.

கே.பியின் அறிவித்தலுக்கு அமையவும் ஜீ.ரீ.வி (GTV) (தமிழ் தொலைக்காட்சி) தகவல் அடிப்படையிலும் அலுவலகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தலைவர் இருக்கிறார் என ஒரு பகுதியினரும், அவர் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்று இன்னொரு பகுதியினரும் முரண்பட்டுக் கொண்டார்கள்.

இந்நிலையில் முரண்பாட்டைத் தவிர்த்துக் கொள்வதற்காக அலுவலகத்தை விட்டு வெளியேறினார். இறுதி யுத்தத்தில் தலைவரின் இழப்பு இவருக்கு வேதனையைக் கொடுத்தது. மக்களினதும், தமதும் மனங்களில் தலைவர் வாழ்கிறார் என்றார் இவர்.

அவர்களோ மண்ணிலும் வாழ்கிறார் என்று சொன்னார்கள். இவரால் ஏற்கமுடியவில்லை. பல்வேறு பட்டங்கள் கிடைத்தன. 1975இல் விடுதலை இயக்கத்தில் இணைந்த தனக்கு, சுமார் இரண்டு தசாப்தங்களின் பின்னர் இணைந்தவர்கள் வழங்கும் பட்டங்கள் குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.

‘என் கடமை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணி செய்து கிடப்பதே…’ என்பது அவரது நிலைப்பாடு. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு உதவி வருகிறார்.

தன்னுடையதும் தனது சகாக்களின் விடுதலை என்பதைவிட ‘விடுதலைப் புலிகள் என்பது குற்றவியல் அமைப்பு அல்ல’ என நீதிமன்றம் தெரிவித்ததே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்.

தனக்காகவும், 1994ஆம் ஆண்டிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்புக்காகவும் வாதாடிவரும் தமது சட்டத்தரணி மார்சல் பெஸோநெற் (Marcel Bosonee) அவர்களுக்கு நன்றி கூறுகிறார்.

எழுத்தாளர் டயஸ்

leader prabakaran tribute 4

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

leader prabakaran tribute


  1. Prabhakaran’s Death Revisited
  2. Dissecting the Prabhakaran Death Story and profiling the liars
  3. Confronting the Death of Prabhakaran !

Up ↑