Search

Eelamaravar

Eelamaravar

Month

April 2018

தமிழ் தேசியத்தில் இருந்து விலகியுள்ள தமிழரசுக் கட்சி…?

அரசியல் அரங்கில் புதியதும், நூதனமானதுமான ஒரு தேர்தல் முறையை உருவாக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றி அதனூடாக 60 வீத வட்டார முறையையும், 40 வீத விகிதாசார அடிப்படையிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி இலங்கை அரசாங்கம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இதில் மற்றொரு சிறப்பம்சமாக நடைமுறை சாத்தியமற்ற வகையில் 25 வீதம் பெண்கள் அவைகளில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற அம்சமும் உள்ளடங்கும். சட்டத்தரணிகளின் வல்லமையுடன் உருவாக்கப்பட்ட இந்த நூதன சட்டமானது அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சிகள் கூட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியாமல் போனமை மேலும் ஒரு சாதனை. இந்த சட்டத்தை உருவாக்குவதற்கும், அதனை நிறைவேற்றுவதற்கும் தமிழ் தலைமைகளும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தது. நடந்தைவைகளைப் பார்க்கின்ற போது ஒரு குறைநத்தபட்ச பொது அறிவு கூட இல்லாமல் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதோ என்ற கேள்வி பலரது மத்தியிலும் தற்போது எழுந்திருப்பதை உணரமுடிகிறது. தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட இந்த சட்டத்தை உருவாக்கியவர்களுக்கே இது சாதமாக அமையவில்லை என்று தெரிவித்திருப்பதன் மூலம் மேற்சொன்ன கருத்து நிரூபணமாகிறது.

பல்வேறு பத்தி எழுத்தாளர்களும், அரசியல் விமர்சகர்களும் இந்தச் சட்டத்தின் சாதக, பாதகங்களை எடுத்துக் கூறி தேர்தல் பிரச்சார மேடைகளில் அவதானமாக செயற்படுமாறு விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிட்டு, அவரவரர் தாம் தாம் நாட்டு பற்றாளர் போலவும், தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுப்பவர் போலவும் கருதிக் கொண்டு கடந்தகால செயற்பாடுகளை வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்து வந்தனர். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நிறைவேறிய கையோடு இந்த சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உள்ளூராட்சி சபைகளில் 60 இற்கு 40 அதேபோன்று மாகாண சபைக்கும் 60 இற்கு 40 என்று இருந்த சட்ட மூலத்தில் உள்ளூராட்சி சபைகளை அப்படியே ஏற்றுக் கொண்ட மனோகணேசன், ஹக்கீம், றிசாட் போன்றவர்கள் மாகாணசபைக்கு 50 இற்கு 50 வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதில் வெற்றியும் ஈட்டி அதனை சட்டமாக மாற்றியிருந்தனர். அதனுடைய பலாபலன்கள் இன்று அனைத்து கட்சிகளாலும் உணரப்படுகிறது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நோக்குகின்ற போது தமிழ், சிங்கள ஆளும் வர்க்கங்கள் ஏற்கனவே திட்மிட்டு ஒரு நிகழ்ச்சி நிரலை உருவாக்கி அதன் அடிப்படையிலேயே இந்த தேர்தல் சட்டத்தை இயற்றி அதன் மூலம் தமிழ் தேசிய இனத்தின் அடையாளத்தையும், அதன் இருப்பையும் சவாலுக்கு உட்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தனவா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் சிங்கள குடியேற்றங்கள், பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த விகாரை நிர்மாணிப்புக்கள் வடக்கு மாகாண சபையினராலும், ஈபிஆர்எல்எப் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆகியோரினாலும் காட்டப்பட்டு வரும் எதிர்ப்புக்களை தமிழரசுக் கட்சி சரியாக கையாளாமலும், பாராளுமன்றத்தில் தனக்குரிய எதிர்கட்சித் தலைவர் பதவியை முறையாக பயன்படுத்தி அதனை தடுக்காமலும் விட்டதுடன், ஜனாதிபதி வடக்கிற்கு வந்திருந்த போது அவரால் வழங்கி வைக்கப்பட்ட குடியேற்ற காணிகளுக்கான உறுதிகளை அவர்களும் இணைந்து வழங்கியதில் இருந்து அந்த நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சிக்கும் தொடர்பு இருக்கிறதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

தற்போது வடக்கில் தமிழ் தேசிய உணர்வுடன் உள்ள அரசியல் சக்திகளின் துணையுடன் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருந்த போதிலும், பொறுப்பற்ற தன்மையில் ஒரு பொதுவான விளக்கத்தை கொடுத்துவிட்டு தென்னிலங்கை அரசியல் சக்திகளின் துணையுடனும், அதனுடன் ஒத்திசைந்து செயற்படும் சக்திகளுடனும் இணைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருப்பதில் இருந்து அந்த நிகழ்ச்சி நிரலுக்காக தமிழரசுக் கட்சியின் ஈடுபாடும் இருந்திருக்குமா என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் இணைந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சியினருக்கு தென்னிலங்கையின் நிகழ்சி நிரலை மீறி தீர்மானங்களை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மேலும் அரசியல் தீர்வு, மற்றும் நாளாந்த பிரச்சனைகள் தொடர்பில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக சொல்லியிருக்கும் தமிழரசுக் கட்சியுடன் இந்தக் கட்சிகள் கைகோர்க்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

குறைந்தபட்ச ஆசனங்களை கொண்டுள்ள போதிலும் அந்தக் கட்சியினர் முன்வைக்கின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் தமிழரசுக் கட்சி தான் நினைத்தவாறு பணிகளை மேற்கொள்ள முடியுமா..? தேசிய சுயநிர்ணய உரிமை விடயத்தில் உள்ளூராட்சி அமைப்புக்கள், அதன் உறுப்பினர்கள் எத்தகைய தாக்கமான ஈடுபாட்டையும், செயற்பாடுகளையும் தமிழரசுக் கட்சியின் கீழ் முன்னெடுக்கப் போகின்றனர். அதற்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க முண்டு கொடுத்துள்ள தென்னிலங்கை கட்சிகளும், அதனுடன் இணைந்து செயற்படும் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்குவார்களா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

பாராளுமன்றத்தில் அரசியல் ரீதியான விடயங்களை முன்வைத்து தேசிய இனப்பிரச்சனையை தீர்க்கமான முறையிலும், தமிழ் மக்களின் அபிலாசைகளையும், உரிமைகளையும் நிறைவேற்றக் கூடிய வகையிலும் செயற்படுவதற்காகவே விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக பலம் பெற்று தேசிய இனப்பிரச்சனையை கையில் எடுத்து செயற்பட்டு இருந்தவரை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய பணியானது பாராளுமன்றத்திற்குள் மட்டும் முடங்கியிருந்தது. 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் தேசிய இனப்பிரச்சனையை பாராளுமன்றத்திற்குள்ளும், அதற்கு வெளியிலும், சர்வதேச மட்டத்திலும் எடுத்துச் சென்று அனைத்து தரப்பினருக்கும் தமிழ் தேசிய இனத்தின் உரிமையை வென்றெடுப்பதற்கான நியாயத்தை எடுத்துச் சொல்லி, அவர்களை இணங்க வைத்து, அந்த கோரிக்கையை வெற்றியடையச் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தானாகவே வந்து சேர்ந்திருந்தது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய காலத்தில் இருந்து தமிழ் மக்கள் வழங்கி வந்த ஆதரவே காரணமாகும்.

2010 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் இந்த பாரிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இருந்து தமிழரசுக் கட்சி மெல்ல மெல்ல நழுவி கூட்டமைப்பை பலப்படுத்துவது என்ற பெயரில் தமிழ் தேசியத்தை சிதைத்து தனது கட்சியை பலப்படுத்திக் கொள்வதிலும், அங்கத்துவக்கட்சிகளை ஒவ்வொன்றாக வெளியேற வைப்பதிலுமே கவனம் செலுத்தி வருகின்றது. ஒரு புறம் தமிழரசுக் கட்சி தன்னிச்சையான முடிவுகளை எடுத்து விட்டு அதனையே கூட்டமைப்பின் முடிவாக அறிவித்து தவறுகளை ஒட்டுமொத்த கூட்டமைப்பின் மீது பழிபோடுவதில் இன்று வரை அந்தக் கட்சி வெற்றியடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். நான்கு கட்சிகளைக் கொண்டிருந்த கூட்டமைப்பில் ஒரு கட்சியினர் மட்டுமே தமிழரசுக் கட்சியினுடைய தன்னிச்சையான செயற்பாடுகளையும், தவறான கொள்கைகளையும் விமர்சித்து வந்தனர். ஈற்றில் அந்தக் கட்சியும் கடுமையான கொள்கை முரண்பாட்டின் காரணமாக வெளியேறி விட்டது. இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைமையில் உள்ள சிலரது தான்தோன்றித்தனமான செயல்பாடுகளினால் தேசியம் சிதைக்கப்படுவதை உணர்ந்து கொண்ட அந்தக் கட்சியை சேர்ந்த உண்மையான சக்திகள் தலைமைக்கு எதிராக தமது குரலை மெல்ல உயர்த்தத் தொடங்கியுள்ளனர்.

கட்சித் தலைமைக்குள்ளேயும் ஒரு புரிந்துணர்வு அற்ற, ஒருங்கிணைந்த செயற்பாடற்ற தன்மையும், அண்மைக்கால அறிக்கைகள் மற்றும் சம்பவங்கள் மூலம் தெரியவருகிறது. இது தமிழரசுக் கட்சியின் தலைமை தனது கட்சியையே வழிநடத்த முடியாமல் இருப்பதை புலப்படுத்துகிறது. இந்த நிலையில் தேர்தலை மையமாக வைத்து புதிதாக உள்ளூராட்சி சபை தேர்தலின் ஊடாக கட்சிக்குள் உள்வாங்கப்பட்டவர்கள் எப்படி கட்சியுடன் இணைந்து செய்பட போகிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இதுவரை காலமும் அரசியலில் நேரடி தொடர்பு அற்றவர்கவே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதனால் அந்தக் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

தற்போதுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட விதிகளின் படி அரசாங்கத்திற்கு மாதம் தோறும் முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு செலவுகள் அதிகரித்துள்ளது. ஏறத்தாழ அங்கத்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதே இதற்கு காரணம். அத்துடன் ஜனாதிபதி ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் 5 மில்லியன் ரூபாய் நிதியை அபிவிருத்திக்காக வழங்குவதாகவும் தெரிவித்து இருக்கிறார். நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இவைகள் எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. ஒரு புறம் இது சாத்தியமானலும் கூட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தேவையற்ற மனக்கசப்புக்களையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதுடன் கிராமங்களில் உள்ள பொது அமைப்புக்கள் அவர்களை தவறாக கையாள்வதற்கும் வழிவகுத்து பொது அமைப்புக்களின் தத்தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கும் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கும்.

ஒட்டுமொதத்தத்தில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலானது நாட்டிற்கு செலவுகளை அதிகரித்து இருப்பதுடன், கட்சிகள் தமது கொள்கைகளில் இருந்து விலகுவதற்கும் ஆட்சியை கைப்பற்றிக் கொள்வதற்காக தவறான அணுகுமுறைகளை மேற்கொள்வதற்குமே வித்திட்டுள்ளது. தமிழ் தேசிய இனத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் பெரிதும் நம்பியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழரசுக் கட்சியின் ஒரு சிலரினால் முன்னெடுக்கப்படும் தவறான கொள்கை முடிவுகள் மற்றும் அணுகுமுறைகளின் காரணமாக அதன் அபிலாசைகளும்
இதுவரை காலமும் அது போராடி வந்திருக்கின்ற உரிமைக் கோரிக்கையும் கைவிடப்பட்டு விடுமோ என்ற அச்சம் வெகுவாக எழுந்துள்ளது. தற்போது இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய இரண்டு கட்சிகளையும் தமிழ் தேசிய இனம் கொள்கை சார்ந்து முடிவு எடுக்கப் போகிறார்களா அல்லது தற்காப்பு அரசியலில் ஈடுபட்டு தமிழரசுக் கட்சியின் தயவில் தொங்கி இருக்கப் போகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்போம்.

நரேன்-

யார் துரோகிகள் ?

வடக்கு மாகாணத்திலுள்ள பல உள்ளூராட்சி சபைகளிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியான ஈ.பி.டி.பி. யின் ஆதரவைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருவது தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. பல உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்த போதும், அதில் பெரும்பான்மை பலத்தை பெறமுடியாத காரணத்தினால், தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையேற்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அடுத்தபடியாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் காங்கிரஸ் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குமிடையிலான நீயா? நானா? போட்டி காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் செயலாளரான டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணாகதியடைந்தது. இதையடுத்தே அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கைப்பற்றிய சாவகச்சேரி , பருத்தித்துறை நகர சபைகளைக் கூட ஈ.பி.டி.பி. யின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஈ.பி.டி.பி.க்கும் இடையிலான இந்த திடீர் இணக்கப்பாடு, நட்புறவு, விட்டுக்கொடுப்புகள் அனைத்துக்கும் காரணமாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சிலரது வரட்டுப் பிடிவாதமும் கௌரவப் பிரச்சினையுமாகவேயுள்ளது. எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற நினைப்பிலேயே அவர்கள் கட்சியை வழிநடத்துவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்தும் தமிழ் மக்களின் மனங்களிலிருந்தும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றது.

அரசியலையும் அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் பொறுத்தவரையில் நிரந்தர எதிரியும் கிடையாது நிரந்தர நண்பனும் கிடையாது என்று கூறப்படுவதுண்டு. ஆனால், அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஏதோவொரு கொள்கை நிச்சயம் இருந்தேயாக வேண்டும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அந்தக் கொள்கைகூட காணாமல் போய்விட்டது. ‘பசிவந்தால் பத்தும் பறந்து போய்விடும்’ என்பது முன்னோர் கூற்று. ஆனால், பதவிக்காக கட்டிய கோவணத்தையும் கழற்றி வீசும் நிலையிலேயே தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுள்ளது.

அரசியலைப் பொறுத்தவரையில் எதிரியாக இருந்தவர்கள் நண்பர்களாவதும் நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாவதும் வழமை. ஆனால், இந்த வரையறைக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஈ.பி.டி.பி. யையும் உள்ளடக்க முடியாது. ஏனெனில், இருவரின் பாதைகளும் வெவ்வேறானவை. கொள்கைகள் முரண்பாடானவை. செயற்பாடுகள் ஒத்துவராதவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, தமிழ்த் தேசியம், தமிழே எங்கள் மூச்சு , தமிழர் உரிமையே எங்கள் பேச்சு, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாங்களே, இணைந்த வட, கிழக்கிற்குள் தீர்வு என்றெல்லாம் படம் காட்டிக் கொண்டிருப்பவர்கள். ஆனால், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவோ இதற்கு முற்றிலும் எதிர்மாறானவர். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையைக் கொண்டவர்.

அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஈ.பி.டி.பி. ஒரு தமிழின துரோகக் கட்சியாகவே இன்றுவரை அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. டக்ளஸ் தேவானந்தாவை தமிழினத் துரோகியென்றே தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர். பாராளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் அவ்வாறே பேசுகின்றனர். அதுமட்டுமன்றி அவரை இராணுவ ஒட்டு குழுத் தலைவரெனவும் விடுதலைப் போராட்டத்தில் காட்டிக் கொடுத்தவரெனவும் தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமல் போகவும் கடத்தப்படவும் கொல்லப்படவும் பாலியல் வல்லுறவுகளுக்குள்ளாக்கப்படவும் சித்திரவதை செய்யப்படவும் காரணமாக இருந்தவர், உதவியாகவிருந்தவர் அனுசரணை வழங்கியவர் என்றும் பாராளுமன்றம் உட்பட பல இடங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. க்கள் பகிரங்கமாக்க் கூறியுள்ளனர்.

அதேபோன்று, காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்றவற்றினால் கூட மனித உரிமை மீறல்களிலும் தமிழ் இளைஞர், யுவதிகளின் கடத்தல் மற்றும் கொலைகளுடனும் ஈ.பி.டி.பி. யினருக்கு தொடர்புண்டென கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக குற்றஞ்சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி.யினருடன் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே கைகோர்த்துக் கொண்டு வடக்கிலுள்ள பல உள்ளூராட்சி சபைகளிலும் ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு ஆட்சியமைத்திருப்பதே பெரும்பாலான தமிழ் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.

தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமல் போனமை , கடத்தப்பட்டமை, கொல்லப்பட்டமை போன்றவற்றுடன் தொடர்புள்ளதாக நீங்களே குற்றஞ்சாட்டிவிட்டு அதே தரப்புடன் நீங்கள் இணைந்து ஆட்சியமைப்பது, ஆதரவைக் கோருவது எந்தவகையில் நியாயம் என்பதே தமிழ் மக்களின் கேள்வியும் கோபமும் ஆகும்.அத்துடன், இதுவரை ஈ.பி.டி.பி. மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்றும் கேட்கின்றனர்.

அதுமட்டுமன்றி தனது கொள்கைகளை கைவிட்டு ஈ.பி.டி.பி.யுடனேயே கூட்டுச் சேர்ந்த இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்தில் ஐ.தே.க.வுடன் கூட்டமைத்துக் கொண்டு அமைச்சு, பிரதி அமைச்சப் பதவிகளை பெற்றுக்கொள்ளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையென்றும் மக்கள் கூறுகின்றனர்.

இதில் முக்கிய விடயம் என்னவெனில், எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் நீங்கள் ஆட்சியமைக்க நான் ஆதரவு தருகிறேன் வாருங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை டக்ளஸ் தேவானந்தா கேட்கவில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே முகத்துடன் கோபித்துக்கொண்டு மூக்கை அறுப்பது போல், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கோபித்துக் கொண்டு டக்ளஸ் தேவானந்தாவின் காலில் விழுந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆதரவு கோரி பேசியதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், மாவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மட்டுமே டக்ளஸ் தேவானந்தாவிடம் தொலைபேசி மூலம் கூறியதாகவும் எந்தவொரு கட்டத்திலும் ஆட்சியமைப்பதற்காக டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆதரவு கோரவில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் எம்.பி. கூறியுள்ளார். ஆனால், எதனையும் ஆதாரம் வைத்துக் கொண்டே பேசும் டக்ளஸ் தேவானந்தா இதனைக் கேட்டு தனக்கு நெருக்கமான சிலரிடம் ‘மாவை எம்.பி. என்னிடம் பேசிய தொலைபேசி உரையாடல் பதிவு இருக்கிறது. அதில் அவர் என்ன கேட்டார் என்பதும் தெளிவாக இருக்கிறது. தேவையானால், தேவையான நேரத்தில் அதனை நான் வெளியிடுவேன்’ என்று கூறியதாகவும் தெரியவருகிறது.

ஈ.பி.டி.பி.யுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டாக ஆட்சியமைத்திருப்பது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவை தமது பரம எதிரியாக கருதும் கூட்டமைப்பின் சரவணபவன் எம்.பி.யோ, சிறீதரன் எம்.பி.யோ இதுவரைக்கும் வாய்திறக்கவில்லை. எடுத்ததற்கெல்லாம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.யை தமிழினத் துரோகி, தமிழின விரோதி , எட்டப்பன், ஒட்டுக்குழுத் தலைவர் என்றெல்லாம் வசைபாடும் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்த தமிழ்க் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி. இணைந்த ஆட்சி தொடர்பில் தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விடவும் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்கு நன்மையான விடயங்களை செய்திருக்கின்றார். பெருமளவு தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு கடந்த ஆட்சியில் அவர் அரச வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்ததை மறுத்துவிட முடியாது. அதுமட்டுமன்றி தற்போது கூட டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண தொண்டராசிரியர் நியமன விடயங்களிலும், வடக்கு , கிழக்கிலுள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள்,அடிப்படைத் தேவைகள் தொடர்பிலும் பல முன்னெடுப்புகளை பாராளுமன்றத்தினூடாகவும் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி, பிரதமரூடாகவும் செய்து வருகின்றார் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

ஆனாலும், டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சிக்கு தமிழ் மக்கள் பெருமளவில் ஆதரவளிக்காமைக்கு அவரையும் அவரது கட்சியையும் விடுதலைப் புலிகள் தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்தியமையும் அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் முன்னெடுத்து வந்தமையுமே காரணம். போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகள் அவ்வாறு அடையாளப்படுத்தியமைக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. ஆனால், போர் மௌனிக்கப்பட்ட பின்னர் நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன. இன்று அரசுடன் கூடி உறவாடுபவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே உள்ளனர். அவர்கள் பாராளுமன்றத்திலும் ஜெனீவாவிலும் அரசின் ஊதுகுழல்களாகவே செயற்படுகின்றனர். டக்ளஸ் தேவானந்தாவுக்கு மைத்திரி ரணில் நல்லாட்சி அரசு அமைச்சுப் பதவி ஒன்றை வழங்கவிருந்தபோதும் அதனை தாங்களே தடுத்து நிறுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு அரசுடனான உறவுகள் பலமாக இருந்தன. அதுமட்டுமன்றி அரசைப் பாதுகாக்கும் ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என தமிழ் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கூறும் அளவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. ஆனால், டக்ளஸ் தேவானந்தா இன்றும் எதிர்க்கட்சி வரிசையில் எம்.பி.யாக உள்ளார்.

இவ்வாறான நிலையில், டக்ளஸ் தேவானந்தாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்பட முடியுமானால் , இனிவரும் காலங்களில் ஏன் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மட்டும் வாக்களிக்க வேண்டும். தாமும் ஈ.பி.டி.பி.யும் ஒன்றேயென்றால் எப்படி தங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எதிர்காலத்தில் கோரமுடியும். ஈ.பி.டி.பி.யை எப்படி விமர்சிக்க முடியும்? இதுவரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ்த் தேசிய உணர்விற்காக வாக்களித்த தமிழ் மக்கள் இனி அதே உணர்வுடன் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் வாக்களிக்க முடியுமல்லவா? ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கூட்டு வைக்கும் அளவிற்கு ஈ.பி.டி.பி. தமிழ்த் தேசிய உணர்வுடன் செயற்படுகின்றது என்றே கருத இடமுண்டு. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தப் பதவி ஆசைக்கான கொள்கைப் பிறழ்வால் ஏற்படப்போகும் விளைவுகளை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்கொள்ள நேரிடும். அதேவேளை, ஈ.பி.டி.பி. கட்சிக்கு எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரணாகதியினால் சிறந்த பெறுபேறுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவேயுள்ளன. எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டுமென்பதற்காக தனது மூக்கை அறுத்துக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே அமையப்போகின்றது.

தாயகன்

புதிய கட்சி அமைத்து போட்டியிடும் சமிக்ஞயை வெளியிட்டார் விக்னேஸ்வரன்

நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியலை முன்னெடுக்க அழைப்பு

புதிய கட்சி அமைத்து முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் சமிக்ஞயை வெளியிட்டார் விக்னேஸ்வரன்: நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியலை முன்னெடுக்க அழைப்பு
தனது அரசியல் பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும் என்று கூறியிருக்கும் வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் அடுத்த வட மாகாண சபை தேர்தலில் முதலமைச்சராக போட்டியிடுவதற்கான தனது முடிவை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஊடகவியலாளர்களின் வாராந்த கேள்விகளுக்கு அளித்துள்ள பதிலில் இவாறு தெரிவித்துள்ள முதலமைச்சர் ஆரம்பத்தில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று இல்லை என்றும் அவ்வாறான நிலையில் எவ்வாறு கூட்டமைப்பிடம் இருந்து தேர்தலில் போட்டியிட தனக்கு அழைப்பு வரும் என்றும் பதில் அளித்துள்ள அவர் ” ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம். ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எவர் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும் “இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமை” என்ற கோட்பாட்டையும் நீதிக்கான போராட்டத்தையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ள விக்னேஸ்வரன் திட்டங்களுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஒரு அரசியலை மேற்கொண்டு எமது அபிலாஷைகளை வென்றெடுக்க சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள், மகளிர், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அளித்துள்ள பதிகளின் முழு விபரமும் வருமாறு:

1. எம் மக்களுக்குச் சொல்லும் புது வருடத்திற்கான உங்கள் செய்தி என்ன?
பதில்: எல்லோரும் இவ்வருடம் இன்பமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்று இறைவனை யாசிக்கின்றேன். எமது மக்களின் உரிமை மற்றும் நீதிக்கான போராட்டம் இந்த வருடம் வெற்றிபெறவேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

2)அரசியல் ரீதியாக இந்த வருடம் உங்களுக்கு முக்கியமான ஒரு வருடம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உங்களை எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது உங்கள் எல்லோருக்குந் தெரிந்த விடயம். அதன் ஆரம்ப காலத்தில் அதனை உருவாக்கப் பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. வடகிழக்குக் தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே அக்கட்சியாகும். அந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்களிடம் நாம் வாக்குக் கேட்டோம். மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்றுத்தந்து என்னையும் முதலமைச்சராக்கினர். அதே கொள்கையுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா? இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன? அப்படி ஒரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும்?

3) எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் உங்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த விருப்பம் இல்லாதது பற்றி திரு.சுமந்திரன் அவர்கள் கூறியுள்ளார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: என்மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற மனோ நிலையில் என் மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளார். அதன் முழுத்தாற்பரியத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். 2013ம் ஆண்டு தேர்தலில் நிற்க முடியாது என்று நான் தொடர்ந்து கூறிய போது என்னை சமாதானப்படுத்தி தேர்தலில் நிற்க வைப்பதற்காகப் பல மாற்று யோசனைகள் முன் வைக்கப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு மட்டும் நில்லுங்கள் பிறகு இன்னொருவர் ஏற்றுக் கொள்வார் என்று சிலர் கூறினார்கள். ஒரு நண்பர் “உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நாங்கள் தான் இருக்கின்றோமே” என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்ததும் வெளிநாடு சென்று விட்டார். இவ்வாறான கூற்றுக்களை சட்டத்தில் வுசயனநச’ள Pரகக என்று அழைப்பார்கள். வியாபாரத்திற்கான பசப்பு வார்த்தைகள் போன்றவை அவை. “குடிகாரன் பேச்சு விடிந்தால்ப் போச்சு” என்பது போல் காரியம் முடிந்ததும் அக் கூற்றுக்களுக்கு மதிப்பில்லை. தேர்தல் முடிந்த போது அதுவும் 133000க்கு மேலான மக்கள் வாக்குகள் கிடைத்த பின்னர் எவருமே அதுபற்றிப் பேசவில்லை. முடுக்கி விட்ட இயந்திரப் பொம்மைகள் முடுக்கியவர் முன்மொழிவுகளுக்கு ஏற்ப வடமாகாண சபையில் கூத்தாட்டத்தில் ஈடுபட்ட போது இவ்விடயம் முதன் முதலில் பேசப்பட்டது. ஆனால் அப்பொழுதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மத்தியில் குடிகொண்டிருந்த சர்வாதிகாரப் போக்கு வெளி வந்திருந்தது. கூட்டமைப்பு கூட்டாகத் தீர்மானங்களை எடுத்ததைக் காண்பது அரிதாக இருந்தது.நான் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதன் தலைமைத்துவத்தின் பிழையான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டவே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளேன்.

அரசியலுக்கு வருவேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் இறை செயலால் நான் அரசியலுக்குள் வந்துவிட்டேன். வந்த பின் எனது மக்களின் பேராதரவும் அன்பும் என்னை நெகிழ வைத்துவிட்டன. இதுவரை என்னால் முடிந்தளவுக்கு செய்யக்கூடியவற்றை செய்துள்ளேன். பல விடயங்களை செய்யமுடியாமல் அதிகார வரையறை, ஆட்சி அமைப்பு முட்டுக்கட்டைகள், குழிபறிப்புக்கள் என்று பல தடைகளை எதிர்கொண்டுள்ளேன். அதிகாரம் ஓச்சும் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு சிலர் பல விடயங்களை நாம் செய்ய விடவில்லை. ஏன்! அடுத்த ஆறு மாதங்களினுள் எமது மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாமா? முடியாது. பழைய பாணியில் எமக்கு மீண்டும் கடுமையான எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படுவன. அடுத்து உள்ளூராட்சி சபைகளிலும் இந்தவாறான நடவடிக்கைகளை எதிர் பார்க்கலாம். இது எங்கள் சுபாவம் போல்த் தெரிகின்றது.

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாதிருக்கின்றது. உண்மையை உலகம் உணர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் இயலுமானளவு செயற்பட்டிருக்கின்றேன். ஏகோபித்த வடமாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானம் இதற்கொரு உதாரணம். எமது மக்களுக்கான குரலாக நீதிவேண்டி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தொடர்ந்து குரல் கொடுத்துவருவதுடன் முடிந்தளவு அவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளைப் பல தடைகளுக்கு மத்தியில் எடுத்து வருகிறேன். உதாரணமாக, எமக்கான உதவிகளை சிங்கள ஆட்சியாளர்கள் செய்துதர முன்வராமையால் எம் புலம்பெயர் சொந்தங்களிடம் எமக்கான உதவிகளைப் பெற்று போரினால் நலிவுற்றிருக்கும் எம்மக்களின் துயர்களை துடைக்க முதலமைச்சர் நிதியம் ஒன்றுக்கான ஒப்புதலைத் தரும்படி 4 வருடங்களாக வேண்டி நிற்கிறோம். மாகாண சபையின் ஆயுட்காலமும் முடிவுக்கு வருகிறது. ஆனால் இன்று வரை அதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் செயற்படும் எமது எந்த தமிழ்த் தலைவராவது இதனை வலியுறுத்தி இருக்கின்றார்களா? போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றுங் கிடைக்காது போனாலும் பரவாயில்லை தனியொருவனுக்குப் பெயர் வந்து விடக்கூடாது என்ற மனோபாவத்தின் வெளிப்பாட்டை நான் அவதானிக்கின்றேன்.

இணைந்த வடக்கு – கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு என்ற எமது தீர்வுக் கோரிக்கையை இல்லாமல் செய்து தமிழ் தேசிய கோட்பாட்டைச் சிதைக்குந் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்க்கும் நிலைக்கு நான் கடந்த 4 வருடங்களில் தள்ளப்பட்டிருந்தேன். இவ்வாறான சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக என்னால் முடிந்தளவுக்குச் செயற்பட்டு “இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமை” என்ற அரசியல் கருத்து வினைப்பாட்டை சர்வதேச சமூகம், இலங்கை மத்திய அரசு மற்றும் எமது மக்கள் மத்தியில் மீள நிலைநிறுத்தியுள்ளேன். எவர் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும் இவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர்கள் சுயநலமொன்றே குறிக்கோளாக வைத்திருப்பின் எமது போராட்டம் பிசு பிசுத்துப் போய்விடும். ஆலைகளுக்கும் சாலைகளுக்கும் ஆசைப்பட்டு அடிப்படை உரிமைகளைத் தவறவிட்டு விடுவோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதுவே எனது பிரார்த்தனை. எமது மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. தற்போது பொருளாதார ரீதியாகப் பல செயற்திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன். நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும். இந்தப் பின்னணியில் நான் என்ன செய்ய? மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துக்களுமே முக்கியம். கட்சிகளின் அனுமதி பெறாத கரவான கருத்துக்களைக் கொண்டோரின் கருத்துக்களைக் கேட்டுக் கலவரம் கொள்ளத் தேவையில்லை?

ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்கள் இரத்தினபுரி கிரிமினல் வழக்கொன்றில் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்டவரை அவர் விடுவித்துக் கொடுத்தார். உடனே விடுதலையான அந்த நபர் ஜீ.ஜீயிடம் சென்று “சேர்”! இனி எந்த வழக்கு வந்தாலும் உங்களிடமே நான் அதைக் கொண்டு வருவேன்” என்று மகிழ்ச்சியாகக் கூறினார். ஜீ.ஜீக்கு இது பிடிக்கவில்லை. “என்ன சொன்னாய் நீ? எனக்கு நீ வழக்கு கொண்டு வருவாயோ? எடே! வழக்குகள் என்னைத் தேடி வருமடா! தேடி வரும்” என்றார். ஆகவே பதவிகள் வருவதாக இருந்தால் அவை தேடி வருவன.

உள்ளூராட்சியில் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு என்னையே காரணம் காட்டுகின்றார்கள். சிலர் தம்மைத் தாமே கண்ணாடியில் பார்த்துக் காரணங்களைக் கண்டு பிடிக்காமல் என்னை வைகின்றார்கள். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம். ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன்.

எமது அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பயணப்பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை இதுவரை காலமும் முன்னெடுத்திருப்போமானால் எம்மிடையே பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது, தெற்கில் எவர் வரப்போகின்றார் என்ன நடக்கபோகின்றது என்ற மனக்கிலேசங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்திருக்காது. நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்கவேண்டி வந்திருக்காது. எமது பிரதேசங்கள் தொடர்ந்தும் திட்டமிட்ட குடியேற்றங்களால் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்காது. திட்டங்களுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஒரு அரசியலை மேற்கொண்டு எமது அபிலாஷைகளை வென்றெடுக்க சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள், மகளிர், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Battle of Aanandapuram

**

ஆனந்தபுரம் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

  

*

*

Up ↑