வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபை களைக் கைப்பற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியெல்லாம் நடந்து கொள்கிறது என்பதை நினைக்கும் போது ஏதோவொரு அழிவு ஏற்படப் போகிறது என்பதை மட்டுமே உணர முடிகிறது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை எப்படியெல்லாம் தூற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சி இப்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெற்று உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கக்கூடாது என்று தடுத்தவர்கள் தமிழரசுக் கட்சியினர்.

கூடவே தேசிய அரசியல் கட்சிகள் வடக்கில் வேரூன்ற விடக் கூடாது என்று தமிழ் மக்களு க்கு அறிவுரை கூறியவர்களும் அவர்களே.ஆனால் இப்போது பதவி என்றதும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைத் தமிழ் மக் கள் பார்த்து அறிந்திருப்பர்.

ஒருமுறை தீவகத்து நாரந்தனைப் பகுதியில் தங்களை ஈபிடிபியினர் தாக்கினர் என்று குற்றஞ்சாட்டிய தமிழரசுக் கட்சியினர் அதனை வைத்தே பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர்.

இவ்வாறான தாக்குதல் நடத்தியவர்களை இந்த மண்ணில் இருந்து துரத்த வேண்டும் என தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான ஊடக மொன்று அடிக்கடி எழுதி வந்தது.

ஆனால் அந்த ஊடகத்தையும் உதறித் தள்ளி விட்டு, நாரந்தனையில் படுகாயமடைந் தவர்களையும் உதறி எறிந்து விட்டு, எம் பதவிக்காக ஈபிடிபியை எதிர்க்க வேண் டும் என்றால் எதிர்ப்போம்.

மாறாக ஈபிடிபியை அணைத்தால் தான் பதவி கிடைக்குமென்றால் அதனையும் திறம்படச் செய்வோம் என்பதை தமிழரசுக் கட்சி செய்து காட்டியுள்ளது.

இச்செயலை அக்கட்சியின் தலைமை தமது இராஜதந்திர வியூகம் என நினைத்துக் கொள்ளலாம்.ஆனால் நிலைமை அதுவல்ல என்பதைக் காலம் நிச்சயம் போதித்து நிற்கும்.

இது ஒருபுறம் இருக்க, ஈபிடிபியிடம் பொது மக்கள் சென்றால், ஈபிடிபியிடம் வேலைவாய்ப்புப் பெற்றால், ஈபிடிபியினர் வழங்குகின்ற உதவித் திட்டங்களை மக்கள் நாடினால் அவர்கள் எல்லாம் தமிழினத்துக்கு எதிரானவர்கள் என்று கூறிய தமிழரசுக் கட்சியினர், இன்று என்ன செய்துள்ளனர்.

தமிழ்த் தேசிய முன்னணியினர் வெற்றி பெற்ற இடங்களையும் கபளீகரம் செய்வதற்காக கொள்கையை விற்று, தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உதாசீனம் செய்து; தமிழ் மக்களை ஏமாற்றி பதவி தேவையென்றால் தென்பகுதியில் உள்ள தேசிய அரசியல் கட்சிகளுடனும் கூட்டுச் சேருவோம் என்பதை வெளிப்படையாகக் காட்டியுள்ளனர்.

கூட்டமைப்புத் தலைமையின் இச்செயல் கட்சிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்தாலும் வாய் திறப்பதற்கு யாருளர்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அமைந்தால் ஒழிய, கூட்டமைப்பின் போக்கை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை.

துரோகி என்ற வாயால் தோழா என்று பாடுக

(சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சிவப்பரம் பொருளுக்கும் நடந்த சம்பாசணைபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி (ஈபிடிபி)க்குமிடையில் உள்ளூ ராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சம்பாசணை நடந்தால், எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தோம். அந்தக் கற்பனையை நீங்களும் படித்தறிக)சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறு அனை வரும் அறிந்ததே.

திருமண மண்டபத்தில் வைத்து சுந்தரர் தன் அடிமை என்று கூறிய வேதியரைப் பித்தா என் றார் சுந்தரர்.
வந்திருப்பது வேதியர் அல்ல சிவனே என்ற றிந்தபோது, சுந்தரர் வேதனையுற்றார். சுவாமி தங்களைப் பித்தா என்று செப்பிவிட்டேனே என்று விம்மி அழுதார்.
சுந்தரரின் பரிதாபம் கண்ட சிவன் அசரீரி யாக சுந்தரா! பித்தா! என்ற வாயால் என்னைப் புகழ்ந்து பாடு என்றார்.

இது அன்று நடந்த சம்பவம். இன்று தமிழ் அரசியலில் என்ன நடக்கிறதுஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலா ளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழி னத்தின் துரோகி என்று தமிழரசுக் கட்சி கூறி வந்தது.தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான ஊடகங் கள் அதனை முதன்மைப்படுத்திப் பிரசுரித்தன.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப் பாண மாநகர சபை, சாவகச்சேரி நகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி யைக் கைப்பற்றும் ஆசையில் டக்ளஸ் தேவா னந்தாவின் உதவியை தமிழரசுக் கட்சி நாடியது.

இதோ சம்பாசணை (கற்பனை)

சேனாதி: ஐயா! நீங்கள் உதவி செய்தால்; ஆத ரவு தந்தால் நாங்கள் யாழ். மாநகர சபையிலும் சாவகச்சேரி நகர சபையி லும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.
தேவா: தமிழரசுக் கட்சியின் தலைவர்களே! நீங்கள் என்னைத் துரோகி என்றீர் கள். என் கட்சிக்காரர்களை ஈபிடிபி என்று வெறுப்பாகப் பேசினீர்கள். இதன் பின் எப்படி உங்களை நாம் ஆதரிக்க முடியும்.

சேனாதி:ஐயனே! மன்னித்தருள்க. காலசூழ் நிலை அப்படியாகச் செய்துவிட்டது. இப் போது அதற்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்கிறோம்.
தேவா: அப்படியா! துரோகி என்ற வாயால் தோழர் என்று பாடுக.

சேனாதி:ஐயனே! ஒருமுறையல்ல பலமுறை பாடுவோம்.தோழர் எனும் நாமம் கொண்ட தேவா! நமக்குத் தேவை எனும் போது ஆதரவு தரும் நாதா…
அன்று பித்தா என்ற பிழை போல் இன்று நாம் செய்த பிழை பொ றுத்தருளியாழ். மாநகர சபை முதல்வர் பதவி நமக்கே ஆக தந்திடுக தேவா
நின் ஆதரவைத் தந்திடுக நாதா.

தேவா: நல்லம் நல்லம். தந்தோம். தந்தது தெரியாமல் தந்தோம். நம் ஆதரவு உமக்கே என்பது மக்களுக்குப் புரியா மல் தந்தோம். ஆதரவு பெற்றிடுக நம் அன்பன் சட்டத்தரணி போட்டியிட்டே உன்னவரை முதல்வர் ஆக்குவார். காப்பார். அருள் தருவார்.

நன்றி :வலம்புரி

———–

ஈ.பி.டி.பி.யுடன் இணைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சுரேஸ் விசனம்

ஈபி.டி.பி மற்றும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்து வருவது தொடர்பில் ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இந்த நடவடிக்கைகள், தமிழ் மக்களின் ஆணையை கைவிட்டுவிட்டு, தமது பதவிகளுக்காகவும் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் ஏனையோரிடம் மண்டியிட்டுவிட்டார்கள் என்பதை நிரூபணமாகியுள்ளதாகவும் ஈபிஆர்எல்எப் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈபிடிபியை ஒட்குக்குழு, தமிழ் மக்களுடைய எதிரி, துரோகி, போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்றெல்லாம் சொல்லி வந்த கூட்டமைப்பினர் தாம் ஆட்சியமைப்பதற்காக ஈபிடிபியுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தி அவர்களது ஆதரவைப் பெற்று சபைகளில் ஆட்சியமைத்து வருவதாக சுரேஷ் பிறேமசச்ந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல ஆளுந்தரப்பில் இருக்கக் கூடிய ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளினதும் ஆதரவையும் பெற்றுள்ளதையும் அவர் கண்டித்துள்ளார்.

வடகிழக்கில் அமைக்கப்படுகின்ற உள்ளுராட்சி சபைகள் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபி, ஐக்கியதேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டு ஆட்சியாகவே அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவர்களுக்கிடையேயான ஒற்றுமை நிலைக்குமா நிலைக்காதா என்பதைவிட, முன்னர் பெரிய கொள்கைப் பிடிப்பாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டவர்கள் தங்களது கொள்கைக்கும் ஈபிடிபிக்கும் ஒத்துவராது என்று சொன்னவர்கள், ஈபிடிபியுடன் காரசாரமான விமர்சனங்கள் எல்லாவற்றையும் முன்வைத்தவர்கள் இன்றைக்கு இதற்கு மேலதிகமாக அரசாங்கத் தரப்புடன் எல்லாம் இணைந்து தான் இந்தச் சபைகளை உருவாக்குகின்றார்கள் என்பது வெட்கக் கேடான விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளுராட்சி சபைகளில் தாங்களே ஆட்சிமையக்க வேண்டுமென்ற காரணத்திற்காக ஈபி.டிபி போன்றவர்களது ஒத்துழைப்புகளைப் பெற்றுக் கொள்வதென்பது இதுவரையும் அவர்கள் கூறி வந்த கொள்கை, கோட்பாடு சகலதையும் கைவிட்டு விட்டார்கள் என்பதும் நிரூபணமாகியுள்ளதாகவும் சுரேஷ் தெரிவிக்கின்றார்.

அதேவேளை அரசாங்கத்துடன் கடந்த மூன்று வருடங்களாக இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வந்தவர்கள் என்ற அடிப்படையில் தற்போது முழுமையாகவே ஆளும்தரப்போடும் ஈபிடிபியோடும் இணைந்து இந்தச் சபைகளில் ஆட்சியமைப்பதன் ஊடாக, தமிழ் மக்கள் முன்வைத்த அல்லது தமிழ் மக்கள் கொடுத்த ஆணைகள் எல்லாத்தையும் கைவிட்டுவிட்டு தமது பதவிகளுக்காகவும் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் ஏனையோரிடம் மண்டியிட்டுவிட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.