Search

Eelamaravar

Eelamaravar

Month

March 2018

சிறப்புத் தளபதிகள் கேணல்கோபித்,கேணல் அமுதாப் வீரவணக்கம்

கேணல் கோபித்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி

கேணல் அமுதாப்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி

**

 

குடாரப்பு தரையிறக்கம்: தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை..!


ஆனையிறவு படைத்தள வெற்றி: ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.
குடாரப்பு தரையிறக்கச் சமர்

ஈழப்போராட்டவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது.

சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி.

ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது.

26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம்.

தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.

மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணி ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குற்படகுகள் சண்டை செய்தன.

கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு வினியோகப் படகுகளும் வெற்றிகரமாகக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர்.

தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத்தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்.balaraj

சிதைக்கப்பட்ட கவசத்தின் மேல் வெற்றி வீரர்களாக……

புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வினியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை.

கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த்தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.

வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வினியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வினியோகத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது.

இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வினியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள்.

அதுவரை சரியான வினியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவாகனங்கள், ஆட்லறிகள், படையணிகள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான்.

கவசப்படைக்குரிய பல வாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவானங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர்.

வரலாற்றுப்புகழ் வாய்ந்த மாமுனைத் தரையிறக்கத்தில் நீருக்குள்ளால் 120 mm கனரகப் பீரங்கியை இழுத்துச்செல்லும் பெண்புலிகள்…..

தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர்.

முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான்.

சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.

கரும்புலி அணியினரால் தகர்க்கப்பட்ட ஆட்லறிகள்…. பளை ஆட்லறித்தளத் தகர்ப்பு

26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன.

குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்லறித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்லறித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள்.

குறிப்பிட்ட ஆட்லறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. ஆட்லறித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர்தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள்.

சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்லறித்தளத்தைப் பாதுகாத்துநின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டடமெடுத்துவிட்டனர். ஆட்லறித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து.

ஆட்லறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்லறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கயழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்லறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்லறிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் ஆட்லறித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது.

தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.

பளை ஆட்லறித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது.

குடாரப்பில் தரங்கி நீரேரியை கடக்கும் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடன் போராளிகள்…..   

தாக்குதலின் பின்னணி

குடாரப்புத் தரையிறக்கம் – ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள்.

குடாரப்புத் தரையிறக்க மோதல் – குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.

குடாரப்புத் தரையிறக்கத்தின் போது முதல் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள் விதைத்த புனிதமாக்கப்பட்ட இடம்….

கண்டி வீதியில் நிலை கொள்ளல் – குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பளை ஆட்லெறித் தள உள்நுழைவு – கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.

தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு – வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.

இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் – தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி – இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் – வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர்.

காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் – இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

ஆனையிறவு படைத்தளத்தில் வெற்றியில் தமிழீழ தேசியக்கொடியை தாக்குதல் ஒருங்கிணைப்புத் தளபதி கேணல் பானு அவர்கள் ஏற்றிவைத்தார்.

ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை – இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.

ஒரு பெண் போராளியின் கதை

காயத்திரி தனது வாழ்வு தொடர்பாக அதிருப்தியடைந்திருந்தார். இவர் தன்னைத் தானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதற்காக இணையத்தளத்தில் ‘உன்னத தலைவர்களால்’ ஆற்றப்பட்ட உரைகளைப் பார்ப்பதெனத் தீர்மானித்தார்.

ஆனால் இணையத்தளமும் செயற்படவில்லை. இது இவருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காயத்திரி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டு தலைமை தாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுதந்திர தமிழீழத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டது.

இந்த யுத்தமானது தமிழீழ விடுதலைப் புலிகள் 2009ல் சிறிலங்கா இராணுவத்தினரால் தோற்கடிக்கப்படும் வரை தொடர்ந்தது. இந்த யுத்தத்தில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் காவுகொள்ளப்பட்டனர். பிரபாகரனும் அவரது போராளிகளும் சுதந்திர நாட்டைப் பெற்றுக் கொள்ளவில்லை.

பருத்தித்துறையிலுள்ள ஒரு சிறிய கரையோரக் கிராமம் ஒன்றில் பனைமரம் ஒன்றின் கீழ் அமர்ந்திருந்த காயத்திரி, தலைமுடி குறுகியதாக வெட்டப்பட்டு புலிகள் அமைப்பின் சீருடை அணிந்தவாறு இருந்த தனது பழைய ஒளிப்படம் ஒன்றை தனது செல்பேசியில் காண்பித்தார்.

இன்று காயத்திரியின் தோற்றம் மிகவும் மாறிவிட்டது. அதாவது அவரது நகங்களில் பூச்சுப்பூசப்பட்டுள்ளதுடன், நீண்ட தலைமுடியும் வளர்ந்து காயத்திரி முற்றிலும் வெளித்தோற்றத்தில் மாறியிருந்தார்.

ஆனாலும் இவர் யுத்த களத்தில் போரில் ஈடுபட்ட போது முகத்தில் ஏற்பட்ட காயத்தின் வடு மட்டும் இன்னமும் ஆறாமல் உள்ளது. இது அவரது பழைய வாழ்வு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது.

‘புலிகள் அமைப்பிலிருந்த ஏழு ஆண்டுகால எனது வாழ்வானது மிகவும் மகிழ்ச்சிகரமானது’ என காயத்திரி கூறினார்.

2002ல் காயத்திரி புலிகள் அமைப்பில் இணைந்த போது இவர் தமிழீழ நாட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான யுத்தத்தில் மட்டும் பங்குகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கவில்லை. அத்துடன் ஆண்களுடன் சமாந்தரமாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். தமிழ் சமூகத்தின் பாரம்பரிய நெறிமுறைகளில், பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே பிரதானமாக ஆற்றவேண்டும் என்கின்ற முறைமை காணப்பட்டது.

அத்துடன் தமிழ்ப் பெண்கள், வயதுபோனவர்கள் மற்றும் கணவன்மார்களுக்கு கீழ்ப்படிந்தும் அடிபணிந்தும் நடக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டனர்.

காயத்திரி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்ததன் மூலம் அவர் தனது சமூகத்தில் பெண் என்ற வகையில் செய்ய முடியாத பல செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பெண் போராளியான காயத்திரி பல பாரிய யுத்தங்களில் பங்கெடுத்தார்.

அத்துடன் சாதாரண போராளியாக இருந்த இவர் பின்னர் தன் சக ஆண் மற்றும் பெண் போராளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும் ஒரு போராளியாக உயர் நிலையை எட்டியிருந்தார்.

‘புலிகள் அமைப்பில் சமத்துவம் பேணப்பட்டது. அதாவது அனைத்து பெண் போராளிகளும் ஆண் போராளிகள் செய்கின்ற அதே செயற்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவையிருந்தது. பெண் பயிற்சியாளர்களை ஆண் போராளிகள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அவர்கள் ‘நீ ஒரு பெண்’ எனக் கூறி எம்மை தம்மிலிருந்து வேறுபடுத்தவில்லை’ என காயத்திரி கூறினார்.

2009ல் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், காயத்திரியின் வாழ்க்கை முற்றிலும் மாறியது. இவர் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டுகள் ‘புனர்வாழ்வு முகாமில்’ தனது வாழ்வைக் கழித்தார்.

2009ல், சிறிலங்கா முழுவதும் 22 புனர்வாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டன. நிலையான சமாதானம், புனர்வாழ்வு, சமூக ஒத்துழைப்பு மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குதல் போன்ற நோக்கத்திற்காகவே புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தால் புனர்வாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மையங்களில் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த ஆண் மற்றும் பெண் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டது.

புனர்வாழ்வு மையத்தில் இருந்த போது காயத்திரி தையல், கேக் ஐசிங் பயிற்சிகளைப் பெற்றிருந்த போதிலும் போருக்குப் பின்னர் தனது வாழ்வை பொருளாதார ரீதியில் நிலைநிறுத்தக் கூடிய அளவிற்கு இவர் போதியளவு தொழிற்பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை. காயத்திரி புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டது.

இவர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுவதற்காகச் சென்றிருந்த போதிலும், இதற்காக வழங்கப்பட்ட சம்பளத்தைக் கொண்டு இவரால் தனியொரு பெண்ணாக வாடகைக் குடியிருப்பில் தங்கி வாழ்வதற்கான ஏதுநிலை காணப்படவில்லை. ஏனெனில் இவருக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனால் இவர் அந்த வேலையை விட்டு விட்டு மீண்டும் பருத்தித்துறையிலுள்ள தனது வீட்டிற்குத் திரும்பி விட்டார்.

தனது பெற்றோர்களிடம் காயத்திரி திரும்பி வந்த பின்னர், இவருக்கு பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. யுத்த காலப்பகுதியில், தமது மகள் ஒரு போராளி என காயத்திரியின் பெற்றோர்கள் பெருமையுற்றிருந்தனர்.

ஆனால் தற்போது காயத்திரி இந்த சமூகத்தின் நெறிமுறைகளுக்கு தவறாக புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதை நினைத்து இவரது பெற்றோர்கள் அவமானமடைகின்றனர். அத்துடன் காயத்திரியின் சகோதரர்கள் காயத்திரியை கட்டுப்படுத்துகிறார்கள்.

‘நீ ஆண்களுடன் கதைக்கக்கூடாது, ஆறு மணிக்குப் பின்னர் வெளியே செல்லக் கூடாது என எனது சகோதரர்கள் கூறுகின்றனர். இவ்வாறான ஒரு கட்டுப்பாட்டிற்குள் வாழ்வதென்பது மிகவும் கடினமானதாகும். எனக்கேற்றவாறு அவர்களை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் அவர்களுக்கு ஏற்றவாறு மாறவேண்டியுள்ளேன்’ என காயத்திரி கூறினார்.

காயத்திரியின் வாழ்வானது அவரைப் போன்ற முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வு எவ்வாறுள்ளது என்பதைப் பிரதிபலிக்கின்றது. யுத்தத்தின் இறுதியில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த 3000 வரையான பெண் போராளிகள் இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டதாக 2011ல் அனைத்துலக நெருக்கடிகள் அமைப்பால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிலங்கா இராணுவத்தால் நிர்வகிக்கப்பட்ட புனர்வாழ்வு மையங்கள் முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீண்டும் ஒன்றித்து வாழ்வதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதற்கு தவறிவிட்டதாக முன்னாள் போராளிகள் மற்றும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘முன்னாள் போராளிகள் பல பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர் என்பது தெளிவாகும். இவர்கள் இராணுவத்திடம் சரணடையும் போது அல்லது இராணுவத்தால் கைது செய்யும் போது தமது வாழ்வை முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையிலிருந்தனர்’ என அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவிற்கான மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்தார்.

முன்னாள் போராளியான கிளிநொச்சியைச் சேர்ந்த 46 வயதான அன்னலக்ஸ்மி 2002ல் ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் காயமடைந்திருந்தார். இவரது கணவரும் போராளியாகச் செயற்பட்டதுடன் 2009ல் இராணுவத்திடம் சரணடைந்து அவர்களது தடுப்பில் வைக்கப்பட்டிருந்த போது இறந்தார்.

போரின் பின்னர், அன்னலக்ஸ்மி கோழி வளர்ப்பிற்காக தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் கடன் பெற்று தனது தொழிலை ஆரம்பித்தார். ஆனால் மிருக வளர்ப்புத் தொடர்பாக இவர் அதிகம் அறிந்திருக்கவில்லை. இதனால் கோழிக்குஞ்சுகள் இறக்கத் தொடங்கின. இதனால் இவர் தனது வருவாயைப் பெற முடியவில்லை.

‘புனர்வாழ்வு முகாங்களில் வாழ்ந்த போது இவர்களது நாட்கள் வீணாடிக்கப்பட்டன. பொருளாதார ரீதியில் பயனளிக்கக் கூடிய தொழிற்பயிற்சிகளை இவர்கள் பெற்றிருக்கவில்லை’ என அலன் கீனன் தெரிவித்தார்.

‘பொருளாதாரம் சிதைவுற்ற நிலையை இவர்கள் சந்தித்ததுடன் முன்னாள் போராளிகள் என்கின்ற பெயரால் சமூகத்தில் பல்வேறு தடைகளையும் சுமைகளையும் இவர்கள் சுமக்க வேண்டிய நிலை காணப்படுகிறது’ என அலன் கீனன் தெரிவித்தார்.

சிறிலங்காவின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணமானது பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளது.

தனது கிராமத்தில் வாழும் மக்கள் தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காண்பிப்பதாகவும், ஏனெனில் இராணுவத்தினர் தொடர்ந்தும் தான் அங்கிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி தனது பெற்றோர்களின் வீட்டிற்கு வருவதாலேயே மக்கள் தன்னுடன் கதைப்பதற்கு தயக்கம் காண்பிப்பதாகவும் காயத்திரி கூறினார். ‘நான் தொடர்ந்தும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் தொந்தரவு செய்யப்படுகிறேன்’ என காயத்திரி கூறினார்.

காயத்திரி மற்றும் அன்னலக்ஸ்மியின் அனுபவங்கள் சாதாரணமானவையல்ல என அலன் கீனன் தெரிவித்தார்.

‘முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் சிறிலங்கா காவற்துறையினரால் கண்காணிக்கப்படுகின்றனர். நான் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு முன்னாள் போராளி ஒருவரை சந்தித்தால் நானும் காவற்துறையினரால் கண்காணிக்கப்படுவேன். இது எனக்கு இடையூறையே ஏற்படுத்தும்’ என கீனன் தெரிவித்தார்.

காயத்திரி என்னுடன் கதைத்துவிட்டு வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டார். இவர் புறப்படுவதற்கு முன்னர், தனது கடந்த காலம் மற்றும் தனது முகத்திலுள்ள வடு காரணமாக, தனது பெற்றோரால் தனக்கான கணவனை தேடிக்கொள்ள முடியவில்லை எனக் கூறினார்.

‘ஆனால் ஒரு நாள் எனக்கு பிள்ளைகள் பிறப்பார்கள். நான் அவர்களுக்கு எனது முகத்திலுள்ள வடுவைப் பற்றிக் கூறுவேன். அப்போது அவர்கள் தமது தாய் ஒரு போராளி என்பதை அறிந்து கொள்வார்கள்’ என காயத்திரி தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் – Martin Bader

வழிமூலம் – News deeply-Tamil Tiger Rebel Fighters Left to Drift After Sri Lanka’s Civil War

மொழியாக்கம் – நித்தியபாரதி

– Puthinappalakai

காற்றில் கரைந்த த.தே.மக்கள் முன்னணியின் தமிழ்த் தேசியம்!

சமீபத்தில் நெஞ்சைத் தைத்தது ஒரு பதிவு. “1990 முஸ்லிம்களை வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு (ethnic cleansing) தான். இல்லை என்போர் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை genocide) எனக் கூறும் யோக்கிதை அற்றவர்கள்” என்பதாக அந்தப் பதிவு அமைந்தது. இந்தப் பதிவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் அதனைக் கூறியிருப்பவர் சட்டத்துறையின் தலைவர் – அதுவும் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரிடம் இருந்து இத்தகைய பதிவை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், பதிவிட்டவர் அவரேதான் குமாரவடிவேல் குருபரன் – யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் தலைவர்.

பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைமைப் பதவி என்பது சாதாரணமானதல்ல. மதிநுட்பம் மிக்கவர்களாலேயே அதற்கு அருகில் வரமுடியும். அப்பதவியில் அமர்வது என்றால் – அதுவும் இளவயதிலேயே அமர்வது என்றால் அதற்கு எத்தகைய அறிவாற்றால் தேவை என்பதை இங்கு சொல்ல வேண்டியதில்லை. குருபரன் 33 வயதுக்குள் இதனை சாத்தியப்படுத்திக் கொண்டார் என்றால் அவரது அறிவாற்றலையும் – சட்டத்துறையில் அவருக்கு இருக்கும் திறமையும் எத்தகையது என்பதை எவரும் சொல்லாமலே புரிந்து விடுவார்கள்.

குருபரனின் தந்தைதான் பேராசிரியர் குமாரவடிவேல். 2004 இல் துணைவேந்தராக இவரை நியமிக்க விடுதலைப் புலிகள் ஆதரவு வழங்கியிருந்தனர். ஆனால் அரசியல் காரணங்களால் அவருக்குப் பதவி கிட்டவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் தங்கள் ஆதரவை அவருக்குப் பகிரங்கமாக தெரிவித்ததன் மூலம் குமாரவடிவேல் அவர்களுக்கு வேண்டியவர் என்பதை தெரியப்படுத்தினர். இந்நிலையில், விடுதலைப் புலிகளை – அவர்களின் தேசியக் கோட்பாட்டை ஆதரித்த குடும்பப் பின்னணியில் வந்த குருபரன் பதிவு செய்திருக்கும் இந்த வார்த்தைகள் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பற்றி சாதாரணமானவர்கள் கொண்டுள்ள அறிவையே அவரும் கொண்டுள்ளாரா என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒரு சொல்லுக்கான வரைவிலக்கணத்தை பொத்தம்பொதுவாக அனைத்துக்கும் பொருத்திவிட முடியாது. தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசும் அதன் படைகளும் செய்த அழிப்பை இனவழிப்பு என்று தமிழர்கள் கூறுகிறார்கள். ஆனால் சிங்களப் படைகளுடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படைகள் கிழக்கின் உடும்பன்குளம், கொக்கட்டிச்சோலை (இரு தடவைகள்) , திராய்க்கேணி, கல்முனை, சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை எனப் பல இடங்களில் தமிழர்கள் படுகொலைகளைப் புரிந்தனர். அப்படியாயின் அவர்கள் செய்தவற்றை எல்லாம் “இனவழிப்பு” என்று வகை சொல்வதுதானே நியாயம். ஆனால் சட்டமறிந்த வரைவிலக்கணங்களைக் கரைத்துக் குடித்த நம் சட்டத்துறைத் தலைவரே முஸ்லிம்கள் செய்தது “தவறு” என்று ஒற்றைச் சொல்லில் கூறிக் கடந்து விடுகிறார். முதல் வேலையாக அவர் “தவறு” என்ற சொல்லுக்கு அகராதியில் பொருள் தேடிப் படித்துவிட்டு அதற்கும் பிற்குறிப்பு ஒன்றை இடுவது பொருத்தம்.

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை எவருமே நியாயம் என்பதை வலியுறுத்தவில்லை – புலிகள் உள்ளடங்கலாக. விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியபோது அந்த உறுப்பினர்கள் பலர் அவர்களை மீண்டும் சந்திப்போம் என்று கூறியே திரும்பினர். இதேபோன்று முஸ்லிம் மக்களில் பலரும் தாங்கள் மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கையிலேயே சென்றிருந்தனர் என்பதை அவர்களில் பலர் இன்றும் கூறுவர். சில இனவாத சக்திகள் மட்டுமே தமிழர் – முஸ்லிம்கள் என்று பிரிந்து நின்று சண்டையிட்டுக் கொண்டனர். இவ்வாறு பிரிந்து நிற்பவர்களுக்கு முஸ்லிம் மாவீரர்களின் தியாகம் தெரியாது என்பதே உண்மை – குருபரன் உட்பட.

ஜூனைதீன் என்ற இயற்பெயர் கொண்ட கப்டன் ஜோன்சன் 1985 நவம்பர் 30 ஆம் தமிழீழத் தாயகத்துக்கு உரமாக முதல் இஸ்லாமியத் தலைவனாக வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வரை 41 முஸ்லிம்கள் மாவீரர்களாக வீழ்ந்தனர். புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவர் முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர் மரணம் அடையும் வரை அவரது மனைவி தனது மதத்தைப் பின்பற்ற எந்தத் தடையையும் அவர் விதித்திருக்கவில்லை. இத்தகைய சமய – இனப் பொறை கொண்டவர்களாகவே விடுதலைப் புலிகள் இருந்தார்கள்- இதற்கான சாட்சிகள் இன்றும் உளர்.

இலங்கையின் சட்டத்தைக் கரைத்துக் குடித்திருக்கும் குருபரன் – தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ நாட்காட்டியைத் தயாரித்த போது ஹஜ் பெருநாளையும் விடுமுறை தினமாக அறிவித்தனர் என்பதை அறியாதிருக்க வாய்ப்பில்லை என்று நம்பலாம். 2002 இன் பின்னர் முஸ்லிம்கள் யாழ்ப்பாணம் மீண்டபோது புலிகள் அவர்களை வரவேற்றிருந்தனர். இந்த மீள்குடியேற்றம்தான் பின்னாளில் வடக்கு முழுவதும் முஸ்லிம்கள் மீள்குடியேறக் காரணமாக அமைந்தது. இந்தப் பின்னணியில் – புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின்னால் – அவர்கள் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் வழிவந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் முஸ்லிம்கள் வெளியேற்றம் இனச் சுத்திகரிப்புத்தான் என்று கூறினார்.

அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ அன்றி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ கண்டித்திருக்கவோ அல்லது அது அவரது தனிக் கருத்து என்றோ கூறவில்லை. இதனால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகவே நோக்கப்பட்டது. இதை அன்று – குருபரன் முக்கிய செயற்பாட்டாளராக இருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் கூட்டம் போட்டுக் கண்டித்திருந்தனர். ஆனால் இன்று நிலைமை என்ன? குருபரனின் கருத்தை அது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறக்கூடத் திராணியற்றவர்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரும், செயலாளர் கஜேந்தரனும் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கின்றனர்.

எல்லா வரைவிலக்கணங்களும் எல்லா நேரங்களிலும் – எல்லாவற்றுக்கும் – எல்லா இயக்கங்களுக்கும் பொருந்துவதில்லை. அதுபோன்றே இனச் சுத்திகரிப்பு என்ற சொல்லும் முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்குப் பொருந்தாது. அப்படிக் கூறினால் கிழக்கில் பல தமிழ்க் கிராமங்களில் தமிழர்களை துரத்தி விட்டு இன்றுவரை அந்தக் கிராமங்களில் ஏகபோக உரிமைகளை அனுபவித்து வரும் முஸ்லிமகளையும் அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் அமைச்சர்களையும் என்ன வகைக்குள் அடக்குவது என்று சட்டம் படித்தவர் கூற வேண்டும்.

பிற்குறிப்பு ஒன்று இடுவதன் மூலம் மன்னிப்பு இன்றித் தவறைச் சரியாக்கி விடலாம் என்ற அடிப்படையில் “பி. கு. 09/03/2018 அன்று என்னால் இத்திரியில் இடப்பட்ட பின்னூட்டத்தை இத்துடன் இணைக்கிறேன்: வெளியேற்றம் தவறு என ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் ‘இனச்சுத்திகரிப்பு’ என்று அதனை வரையறுப்பது தவறு எனக் கூறுவோரின் வாதத்தில் உள்ள நியாயங்களை விளங்கிக் கொள்கிறேன். I think it is possible to be reasonably pluralist on this issue. எனவே இனச்சுத்திகரிப்பு என்று ஏற்றுக்கொண்டால் தான் இனப்படுகொலை என்று சொல்ல யோக்கிதை எமக்குள்ளது என்று நிபந்தனை விதிப்பது முறையல்ல என ஏற்றுக்கொள்கிறேன்.” எனப் பதிவிட்டதன் மூலம் அவர் நியாயத்தின் வழியில் தவறி விட்டார் என்றே பொருள் கொள்ளமுடியும்.

சிறுபான்மை இனம் ஒன்றின் மீதான அடக்குமுறைகளை – உரிமை மறுப்புகளை – அழிப்புகளை – இழப்புகளை – பிரிவுகளை – துயரங்களை – துன்பங்களை – ஆழ்ந்து அனுபவித்தது நம் தமிழினம். இத்தகைய பின்னணியைக் கொண்ட தமிழர்கள் எவரும் கண்டிக் கலவரத்தில் முஸ்லிம்கள் மீதான வன்முறையை விரும்பியிருக்கவில்லை. ஏனெனில் இழப்புகளின் வலியை நன்குணர்ந்த – அனுபவித்த எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்துக்கு நடக்கும் அதே கொடுமைகளை விரும்பாது. மாறாக வெகு சிலரின் பதிவுகள் அத்தகைய பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் உண்மையில் எந்த ஒரு தமிழ்த் தேசயவாதியும் சிறுபான்மை இனத்தின் மீது – முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியதில்லை. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசியவாதிகளை இனவாதிகளாக குருபரன் சித்திரித்திருப்பது கண்டனத்துக்குரியது.

தமது நெருங்கிய செயற்பாட்டாளரான குருபரனின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்காது – கண்ணை மூடிக் கொண்டிருக்கும் – தமிழ்த் தேசியக் கட்சி என்று தன்னைப் பிரகடனப்படுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாளாதிருப்பது ஏன்?

-தமிழ்லீடருக்காக வித்தகன் –

இனம் இனத்துடன் தான் சேரும்: தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு!

வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபை களைக் கைப்பற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியெல்லாம் நடந்து கொள்கிறது என்பதை நினைக்கும் போது ஏதோவொரு அழிவு ஏற்படப் போகிறது என்பதை மட்டுமே உணர முடிகிறது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை எப்படியெல்லாம் தூற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சி இப்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெற்று உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கக்கூடாது என்று தடுத்தவர்கள் தமிழரசுக் கட்சியினர்.

கூடவே தேசிய அரசியல் கட்சிகள் வடக்கில் வேரூன்ற விடக் கூடாது என்று தமிழ் மக்களு க்கு அறிவுரை கூறியவர்களும் அவர்களே.ஆனால் இப்போது பதவி என்றதும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைத் தமிழ் மக் கள் பார்த்து அறிந்திருப்பர்.

ஒருமுறை தீவகத்து நாரந்தனைப் பகுதியில் தங்களை ஈபிடிபியினர் தாக்கினர் என்று குற்றஞ்சாட்டிய தமிழரசுக் கட்சியினர் அதனை வைத்தே பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர்.

இவ்வாறான தாக்குதல் நடத்தியவர்களை இந்த மண்ணில் இருந்து துரத்த வேண்டும் என தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான ஊடக மொன்று அடிக்கடி எழுதி வந்தது.

ஆனால் அந்த ஊடகத்தையும் உதறித் தள்ளி விட்டு, நாரந்தனையில் படுகாயமடைந் தவர்களையும் உதறி எறிந்து விட்டு, எம் பதவிக்காக ஈபிடிபியை எதிர்க்க வேண் டும் என்றால் எதிர்ப்போம்.

மாறாக ஈபிடிபியை அணைத்தால் தான் பதவி கிடைக்குமென்றால் அதனையும் திறம்படச் செய்வோம் என்பதை தமிழரசுக் கட்சி செய்து காட்டியுள்ளது.

இச்செயலை அக்கட்சியின் தலைமை தமது இராஜதந்திர வியூகம் என நினைத்துக் கொள்ளலாம்.ஆனால் நிலைமை அதுவல்ல என்பதைக் காலம் நிச்சயம் போதித்து நிற்கும்.

இது ஒருபுறம் இருக்க, ஈபிடிபியிடம் பொது மக்கள் சென்றால், ஈபிடிபியிடம் வேலைவாய்ப்புப் பெற்றால், ஈபிடிபியினர் வழங்குகின்ற உதவித் திட்டங்களை மக்கள் நாடினால் அவர்கள் எல்லாம் தமிழினத்துக்கு எதிரானவர்கள் என்று கூறிய தமிழரசுக் கட்சியினர், இன்று என்ன செய்துள்ளனர்.

தமிழ்த் தேசிய முன்னணியினர் வெற்றி பெற்ற இடங்களையும் கபளீகரம் செய்வதற்காக கொள்கையை விற்று, தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உதாசீனம் செய்து; தமிழ் மக்களை ஏமாற்றி பதவி தேவையென்றால் தென்பகுதியில் உள்ள தேசிய அரசியல் கட்சிகளுடனும் கூட்டுச் சேருவோம் என்பதை வெளிப்படையாகக் காட்டியுள்ளனர்.

கூட்டமைப்புத் தலைமையின் இச்செயல் கட்சிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்தாலும் வாய் திறப்பதற்கு யாருளர்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அமைந்தால் ஒழிய, கூட்டமைப்பின் போக்கை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை.

துரோகி என்ற வாயால் தோழா என்று பாடுக

(சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சிவப்பரம் பொருளுக்கும் நடந்த சம்பாசணைபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி (ஈபிடிபி)க்குமிடையில் உள்ளூ ராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சம்பாசணை நடந்தால், எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தோம். அந்தக் கற்பனையை நீங்களும் படித்தறிக)சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறு அனை வரும் அறிந்ததே.

திருமண மண்டபத்தில் வைத்து சுந்தரர் தன் அடிமை என்று கூறிய வேதியரைப் பித்தா என் றார் சுந்தரர்.
வந்திருப்பது வேதியர் அல்ல சிவனே என்ற றிந்தபோது, சுந்தரர் வேதனையுற்றார். சுவாமி தங்களைப் பித்தா என்று செப்பிவிட்டேனே என்று விம்மி அழுதார்.
சுந்தரரின் பரிதாபம் கண்ட சிவன் அசரீரி யாக சுந்தரா! பித்தா! என்ற வாயால் என்னைப் புகழ்ந்து பாடு என்றார்.

இது அன்று நடந்த சம்பவம். இன்று தமிழ் அரசியலில் என்ன நடக்கிறதுஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலா ளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழி னத்தின் துரோகி என்று தமிழரசுக் கட்சி கூறி வந்தது.தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான ஊடகங் கள் அதனை முதன்மைப்படுத்திப் பிரசுரித்தன.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப் பாண மாநகர சபை, சாவகச்சேரி நகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி யைக் கைப்பற்றும் ஆசையில் டக்ளஸ் தேவா னந்தாவின் உதவியை தமிழரசுக் கட்சி நாடியது.

இதோ சம்பாசணை (கற்பனை)

சேனாதி: ஐயா! நீங்கள் உதவி செய்தால்; ஆத ரவு தந்தால் நாங்கள் யாழ். மாநகர சபையிலும் சாவகச்சேரி நகர சபையி லும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.
தேவா: தமிழரசுக் கட்சியின் தலைவர்களே! நீங்கள் என்னைத் துரோகி என்றீர் கள். என் கட்சிக்காரர்களை ஈபிடிபி என்று வெறுப்பாகப் பேசினீர்கள். இதன் பின் எப்படி உங்களை நாம் ஆதரிக்க முடியும்.

சேனாதி:ஐயனே! மன்னித்தருள்க. காலசூழ் நிலை அப்படியாகச் செய்துவிட்டது. இப் போது அதற்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்கிறோம்.
தேவா: அப்படியா! துரோகி என்ற வாயால் தோழர் என்று பாடுக.

சேனாதி:ஐயனே! ஒருமுறையல்ல பலமுறை பாடுவோம்.தோழர் எனும் நாமம் கொண்ட தேவா! நமக்குத் தேவை எனும் போது ஆதரவு தரும் நாதா…
அன்று பித்தா என்ற பிழை போல் இன்று நாம் செய்த பிழை பொ றுத்தருளியாழ். மாநகர சபை முதல்வர் பதவி நமக்கே ஆக தந்திடுக தேவா
நின் ஆதரவைத் தந்திடுக நாதா.

தேவா: நல்லம் நல்லம். தந்தோம். தந்தது தெரியாமல் தந்தோம். நம் ஆதரவு உமக்கே என்பது மக்களுக்குப் புரியா மல் தந்தோம். ஆதரவு பெற்றிடுக நம் அன்பன் சட்டத்தரணி போட்டியிட்டே உன்னவரை முதல்வர் ஆக்குவார். காப்பார். அருள் தருவார்.

நன்றி :வலம்புரி

———–

ஈ.பி.டி.பி.யுடன் இணைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சுரேஸ் விசனம்

ஈபி.டி.பி மற்றும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்து வருவது தொடர்பில் ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இந்த நடவடிக்கைகள், தமிழ் மக்களின் ஆணையை கைவிட்டுவிட்டு, தமது பதவிகளுக்காகவும் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் ஏனையோரிடம் மண்டியிட்டுவிட்டார்கள் என்பதை நிரூபணமாகியுள்ளதாகவும் ஈபிஆர்எல்எப் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈபிடிபியை ஒட்குக்குழு, தமிழ் மக்களுடைய எதிரி, துரோகி, போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்றெல்லாம் சொல்லி வந்த கூட்டமைப்பினர் தாம் ஆட்சியமைப்பதற்காக ஈபிடிபியுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தி அவர்களது ஆதரவைப் பெற்று சபைகளில் ஆட்சியமைத்து வருவதாக சுரேஷ் பிறேமசச்ந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல ஆளுந்தரப்பில் இருக்கக் கூடிய ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளினதும் ஆதரவையும் பெற்றுள்ளதையும் அவர் கண்டித்துள்ளார்.

வடகிழக்கில் அமைக்கப்படுகின்ற உள்ளுராட்சி சபைகள் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபி, ஐக்கியதேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டு ஆட்சியாகவே அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவர்களுக்கிடையேயான ஒற்றுமை நிலைக்குமா நிலைக்காதா என்பதைவிட, முன்னர் பெரிய கொள்கைப் பிடிப்பாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டவர்கள் தங்களது கொள்கைக்கும் ஈபிடிபிக்கும் ஒத்துவராது என்று சொன்னவர்கள், ஈபிடிபியுடன் காரசாரமான விமர்சனங்கள் எல்லாவற்றையும் முன்வைத்தவர்கள் இன்றைக்கு இதற்கு மேலதிகமாக அரசாங்கத் தரப்புடன் எல்லாம் இணைந்து தான் இந்தச் சபைகளை உருவாக்குகின்றார்கள் என்பது வெட்கக் கேடான விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளுராட்சி சபைகளில் தாங்களே ஆட்சிமையக்க வேண்டுமென்ற காரணத்திற்காக ஈபி.டிபி போன்றவர்களது ஒத்துழைப்புகளைப் பெற்றுக் கொள்வதென்பது இதுவரையும் அவர்கள் கூறி வந்த கொள்கை, கோட்பாடு சகலதையும் கைவிட்டு விட்டார்கள் என்பதும் நிரூபணமாகியுள்ளதாகவும் சுரேஷ் தெரிவிக்கின்றார்.

அதேவேளை அரசாங்கத்துடன் கடந்த மூன்று வருடங்களாக இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வந்தவர்கள் என்ற அடிப்படையில் தற்போது முழுமையாகவே ஆளும்தரப்போடும் ஈபிடிபியோடும் இணைந்து இந்தச் சபைகளில் ஆட்சியமைப்பதன் ஊடாக, தமிழ் மக்கள் முன்வைத்த அல்லது தமிழ் மக்கள் கொடுத்த ஆணைகள் எல்லாத்தையும் கைவிட்டுவிட்டு தமது பதவிகளுக்காகவும் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் ஏனையோரிடம் மண்டியிட்டுவிட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘பிரபாகரனியம்’ என்பது இந்த நூற்றாண்டின் ஒரு பிரளயம்.

அரசியல், இராஜதந்திர, சமூக, பண்பாட்டு தளத்திலும் ‘பிரபாகரனியம்’ என்பது இந்த நூற்றாண்டின் ஒரு பிரளயம்.

திமுக அல்லக்கைகளுக்கு எதிரான கடைசி பதிவாக இது இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். முடியலை.

நாகர்கோயிலிலிருந்து முகமாலை மற்றும் கிளாலி வரை நீண்டிருந்த தெற்காசியாவின் மிக நீண்ட இராணுவ வேலியை எதிரிகள் உடைக்க முடியாத யுக்திகளுடன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் பிரிகேடியர் தீபன்.

முழங்காவில், பரந்தன், கிளிநொச்சியை விட்டு புலிகளின் அணிகள் விலக நேர்ந்ததால் வேறு ஒரு இராணுவ திட்டத்தை வரைவதற்காக பிரிகேடியர் தீபனை தலைமை பின்வாங்குமாறு பணித்தபோதே அது எதிரியின் கைக்கு போனது. அதுவரை அந்த இராணுவ வேலியை உடைக்கவே முடியவில்லை.

இது இந்த நூற்றாண்டின் ஒரு போரியல் சாதனை. சம காலத்தில் வாழ்வதால் நம்மால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் வரலாற்றில் இவை ஒரு பாடமாக இருக்கும்.

இப்படி எண்ணற்ற சாதனைகளை புரிந்து விட்டுத்தான் புலிகள் ஓய்ந்திருக்கிறார்கள். இதுவே உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளாக முகிழ்ந்திருக்கின்றன.

எனவே இந்த பின்புலத்தில் தீபனை ஒரு ‘தளபதி’ என்று வர்ணிக்கலாம்.

ஆனால் சட்டசபையில் நிற்க முடியாமல் தனது சட்டையை தானே கிழித்துவிட்டு நாலு நல்லி எலும்பு தெரிய தெறிச்சு ஓடிவந்த ஸ்டாலினை ‘தளபதி’ என்பது என்ன வகையானது என்பதை 200 ருபா தம்பிகள்தான் சொல்ல வேண்டும்.

இறுதி போர் ஆரம்பாகியதும் சிங்களம் இதுவரை கால இராணுவ யுக்திகளை மாற்றியமைத்தது வெளிப்படையாகவே எமக்கு தெரியும். ஆனால் பலருக்கு தெரியாதது அவன் எப்படி அதை கையாண்டான் என்று..
அங்கு உருவானதுதான் எதிரியின் ‘ தண்ணீர் ‘ கோட்பாடு.

அதாவது புலிகளின் அணிகளுடன் ஒப்பிடும்பொழுது எதிரியின் படை பல மடங்கு பெரியது. எனவே அவன் தண்ணீர் போல பல முனைகளில் படைகளை திறந்து விட்டான். தண்ணீர்போல் படைகள் தமிழர் நிலத்தில் வழிய புலிகள் எதிர்த்தாக்குதல், ஊடறுப்புத் தாக்குதல் என்பவற்றை செய்ய முடியாது தடுப்பு சமரை மட்டும் செய்ய வேண்டிய நிலை. தண்ணீர் என்பது ஒழுகும் தன்மை கொண்டது. அது எப்படி அடைத்தாலும் ஏதோ ஒரு வகையில் கசிந்து உட்புகுந்து விடும். எதிரிகள் தமிழர் நிலத்தில் புகுந்த கதை இதுதான்.

தலைவர் இதை கணித்தார். குறியீட்டுரீதியாக எதிரிக்கு அதை புரிய வைத்தது மட்டுமல்ல பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எதிர்த் தாக்குதல்களை நடத்தி பல மறிப்பு சமரை நடத்தி தண்ணீர் கோட்பாட்டின் எதிர்த்தாக்குதலை அந்தக் களத்திலேயே அறிமுகம் செய்தார். ‘நந்திக்கடலின்’ தண்ணீர் கோட்பாடு அப்போதே உருவாகி விட்டது.

எதிரிகளுக்கு படைத்துறை ஆலோசனை வழங்கிய அனைத்துலக சக்திகள் மிரண்டு போய் போரியல் விதிகளை மீறும் ஆலோசனைகளை வழங்கியதன் ( இராசயணக் குண்டு, கொத்தணி குண்டு, மக்களை தாறுமாறாகக் குறி வைத்தல், மக்களுக்கான மருத்துவ மற்றும் உணவு வழங்கல் பாதைகளை தடைசெய்தல் இன்ன பிற..) நிமித்தமே புலிகள் பின்னடைய நேரிட்டது.

ஆனால் வரலாற்றில் ‘பிரபாகரனியம’; மற்றும் ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளை எதிரிகளே ஒரு நாள் புகழ்ந்து ஏற்றுக் கொள்ளும் நிலை வரும்.

இது இராணுவ பரிமாணம் சார்ந்த உதாரணம் மட்டுமே..

அரசியல், இராஜதந்திர, சமூக, பண்பாட்டு தளத்திலும் ‘பிரபாகரனியம்’ என்பது இந்த நூற்றாண்டின் ஒரு பிரளயம். அது இதுவரை கால மனித குல வரலாற்றின் ஒரு திருப்பம்.

அதை வரலாறு சான்றாக்கும்.

நிலைமை இப்படியிருக்க திமுக செம்புகள் ‘பிரபாகரனை ஏற்க மாட்டோம்  என்று பிதற்றுவதை என்னவென்று சொல்வது

Parani Krishnarajani

துரோகிகளுக்கு சிலை வைக்கும் கூத்தமைப்பு !

இது துரோகிகள் தியாகிகளாகும் காலம்!

முதலில் துரையப்பாவுக்கு சிலை வைத்தார்கள்.

அடுத்து அமிர்தலிங்கத்திற்கு சிலை வைத்துள்ளார்கள்.

இனி லக்ஸ்மன் கதிர்காமருக்கும் சிலை வைப்பார்கள்

இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில்

இது, துரோகிகள் தியாகிகளாகவும்

தியாகிகள் துரோகிகளாகவும் ஆகும் காலம்!

திரிபுராவில் லெனின் சிலை தகர்த்ததுபோல் நாளை

உரும்பராயில் சிவகுமாரின் சிலை தகர்க்கப்படலாம்

அல்லது நல்லூரில் திலீபன் நினைவிடம் அகற்றப்படலாம்.

ஏனெனில் இது துரோகிகள் தியாகிகளாகவும்

தியாகிகள் துரோகிகளாகவும் ஆகும் காலம்!..

இப்ப என்ன ம- – -க்கு அமிர்தலிங்கம் சிலை?.

ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்றுகூறிய சம்பந்தர் அய்யா தனக்கு பதவியும் சொகுசு பங்களாவும் பெற்றுக்கொண்டார்.

சம்பந்தர் அய்யா தீர்வோடு வருவார் என்று தமிழ் மக்கள் காத்திருக்க அவரோ அமிர்தலிங்கம் சிலையோடு வந்திருக்கிறார்.

காணாமல் போனவர்களின் உறவுகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போராடி வருகிறார்கள்.

கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை கோரி ஒரு வருடமாக வீதியில் உட்கார்ந்து போராடுகிறார்கள்.

சிறையில் உள்ளவர்கள் விடுதலையின்றி செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இனப்பிரச்சனைக்கு தீர்வுதான் பெறவில்லை. ஆகக்குறைந்தது சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காவது குரல் கொடுத்திருக்கலாம்.

தந்தை சிறையில். தாய் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகள் பெற்றார் இன்றி அனாதையாக நிற்கின்றனர்.

முழுத் தமிழ் இனமே இந்த குழந்தைகளின் அவல நிலைக்காக வருந்தி கண்ணீர் வடிக்கின்றனர்.

ஆனால் நமது தலைவர் சம்பந்தர் அய்யா இந்த குழந்தைகளின் தந்தையின் விடுதலைக்கு குரல் கொடுக்காதது மட்டுமன்றி அவர்களுக்கு ஆதரவாக நாலு வார்த்தை கூறவும் விரும்பவில்லை.

தமிழ் மக்கள் கேட்டது தீர்வு. அமிர்தலிங்கத்தின் சிலை அல்ல என்பதை தயவு செய்து யாராவது இந்த சம்பந்தர் அய்யாவுக்கு கூறுங்கள்.

செய்தி- தாயின் மரணத்திற்கு சிறையில் இருந்து வந்த தந்தையுடன் செல்ல விரும்பிய சிறுமி.

ஜனாதிபதி அங்கிள்!

நீங்கள் ரொம்ப நல்லவர் என்று சுமந்திரன் மாமா கூறுகின்றார்.

நீங்கள் ரொம்ப எளிமையானவர் என்று சம்பந்தர் தாத்தா கூறுகின்றார்.

உங்களை கொல்ல வந்தவரையே நீங்கள் மன்னித்து விடுதலை செய்ததாக பத்திரிகை மாமாக்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமன்றி நீங்கள் உங்கள் வீட்டு சாப்பாட்டை உங்கள் கையாலே சாப்பிடுகின்றீர்களாம்.

இந்தளவு நல்லவாரன, எளிமையானவரான, அன்பு உள்ளம் கொண்ட நீங்கள் என்னையும் என் அப்பாவுடன் சேர்த்து சிறையில் அடைத்து விடுங்கள் பிளீஸ்.

நீங்கள் ஒருபோதும் என் அப்பாவை உயிருடன் விடுதலை செய்யப்போவதில்லை என்று எனக்கு தெரியும்.

ஏனெனில் நேற்றுகூட சிறையில் இருந்த ஒரு மாமாவை இறந்த பின்பு பிணமாகத்தானே வெளியில் விட்டுள்ளீர்கள்.

இப்போது என் அம்மாவும் இறந்துவிட்டார். நான் அப்பாவுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.

சம்பந்தர் தாத்தாவின் மகள் அவருடன் கூட இருந்து ஒவ்வொரு நாளும் தன் தந்தையை பார்க்கிறார்.

சுமந்திரன் மாமாவின் பிள்ளைகள் அவருடன் ஒன்றாக கூட திரிந்து மகிழ்கிறார்கள்.

மாவை சேனாதிராசா மாமாகூட தன் பிள்ளையை தன்னுடன் வைத்து பிரதேசபை உறுப்பினராக்கியுள்ளார்.

சரவணபவன் மாமாவின் மகள் பிறந்தநாளுக்கு நீங்களே வந்து கேக் ஊட்டுகின்றீர்கள்.

நானும் அவர்களது பிள்ளைகள் போல் என் அப்பாவுடன் சேர்ந்து இருக்க விரும்புகிறேன்.

நானும் என் அப்பாவின் கை பிடித்து பாடசாலை செல்ல விரும்பினேன். அது நடக்கவில்லை.

நானும் அப்பாவின் முதுகில் எறி உப்பு மூட்டை விளையாட்டு விளையாட விரும்பினேன். அதுவும் நடக்கவில்லை.

நான் சிறையில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் என் அப்பாகூட இருக்க விரும்புகிறேன்.

என் விருப்பத்தை நிறைவேற்றுவீர்களா அங்கிள்?

நான் என்ன தவறு செய்தேன். எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை?

தமிழ் இனத்தில் அதுவும் ஏழையாக பிறந்தது என் குற்றமா அங்கிள்?

குறிப்பு- இந்த சிறுமியின் தந்தை இதுவரை விடுதலை செய்யப்படாதது மட்டுமன்றி மரணசடங்கில் கலந்துகொள்ள வெறும் 3 மணி நேரமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுமை குறித்து இதுவரை ஒரு தமிழ் தலைவர்கூட குரல் கொடுக்கவில்லை.

செய்தி- வவுனியாவைச் சேர்ந்த தமிழ் அரசியல்கைதி ஒருவர் சிறையில் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் குரல் அற்றவர்களா?

இவர்களுக்காக ஏன் நம் தலைவர்கள் குரல் கொடுப்பதில்லை?

இவர்களுடைய மரணம்தான் இவர்களுக்கான விடுதலைக்கு ஒரே வழியா?

இவர்கள் அத்தனை பேரும் சிறையிலேயே இறந்து போகட்டும் என்று விட்டுவிடப் போகிறார்களா?

இவர்கள் தமது இறுதிக்காலத்திலாவது தமது உறவுகளுடன் சேர்ந்து வாழ எம் தலைவர்களால் எதுவும் செய்ய முடியாதா?

இவர்களைக்கூட விடுவிக்க முடியாத நம் தலைவர்கள் இனப் பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருவார்கள் என்று எப்படி நம்புவது?

வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவர் வெலிக்கடை சிறையில் மரணமடைந்துள்ளார். அவர் வயது 70.

புலிகளுக்கு வாகனம் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இரண்டு வருட தண்டனையை பெறுவதற்காக இவர் 10 வருடம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இனியாவது விடுதலை கிடைத்துவிடும் என நம்பியிருந்தவேளை கடந்த மாதம் புதிதாக இன்னொரு வழக்கு இவர் மீது போடப்பட்டுள்ளது.

இனி ஒருபோதும் விடுதலை பெற முடியாது என்று விரக்தியடைந்த வேளை நோய் அவரை வாட்டியது.

அவர் மீது தொடர்ந்து வழக்குபோட்டு சிறையில் அடைத்து வைக்க அக்கறைகாட்டிய அரசு அவருக்கு சிகிச்சை வழங்க அக்கறை காட்டவில்லை.

இறுதியாக அவர் மரணமடைந்து சிறையில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.

சிறையில் உள்ள அரசியல் கைதிகள் யாவரும் மரணமடைந்து விடுதலை பெறட்டும் என நல்லாட்சி அரசு நினைத்து விட்டது போலும்.

இதனையே எம் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர்போலும் . ஏனெனில் இவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்காதது மட்டுமல்ல இவர்கள் மரணமடைந்த பின்னரும்கூட ஒரு கண்டனத்தை இவர்களால் தெரிவிக்க முடியவில்லை.

என்னே அவலம் இது!

Balan tholar

எதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்…!

அண்மையில் லண்டனில் “கழுத்தை வெட்டி கொல்லுவோம் ” என்று சைகை மூலமாக மிரட்டல் விடுத்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்கவின் மனிதமற்ற செயலை பலர் கண்டித்தார்கள். பலர் “அதில் என்ன இருக்கு இதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாமே…, ” என்றார்கள். “புலி சீறிய தெருவில் ஒரு சிங்கம் சைகை தானே காட்டியது. ” என்று பிதற்றினார்கள் சிலர். “புலிக் கொடியை ஏன் தூக்கிப் பிடித்தார்கள் அதனால் தானே இவ்வாறு அந்த சிங்கள இராணுவத் தளபதி மிரட்டல் விட்டார் ” என்று கொல்வேன் என்று மிரட்டியவனுக்கே பரிந்து பேசினார்கள் சிலர்.

என பலவாறு பல கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய கொடூர முகத்தைக் கொண்ட சிங்களப் படைகளை எதிர்த்து நின்ற எம் வீரத்தளபதிகளின் மனிதமும் உயிர்கள் மீதான உயிர்ப்புள்ள பிடிப்பும் ஒப்பிட முடியாதவை.

“ஜூலியட் மைக்” (Juliet mig ) இந்த குறியீட்டுப் பெயருக்கு சொந்தக்காறனை பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அவரை பலர் காணாமல் கூட இருக்கலாம். ஆனால் அவரின் செயற்பாடுகளை, வீரத்தை, தமிழீழம் மீது கொண்ட பாசத்தை அறிந்து கொள்ளாதவன் எதிரியாக கூட இருக்க முடியாது என்றே நான் கூறுவேன். அவ்வளவு மனவலிமையும் உறுதியான தேசப்பற்றும் கொண்ட மூத்த தளபதி. விசேட வேவுப் பிரிவின் பொறுப்பதிகாரி. மன்னார் களமுனையின் நீண்ட நாள் நண்பன், தளபதி, பொறுப்பாளர், சண்டைக்காறன் என பல நூறு நிலைகளை வகித்தவர். இப்போது இந்த சங்கேத பெயரின் சொந்தக்காறன் பிரிகேடியர் ஜெயம் என்பது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

மூத்த தளபதி ஜெயம் அவர்களின் சண்டைகள், வேவுகள், கட்டளைகள் என பலரும் அவர் சார்ந்த பலவற்றை அறிந்தாலும், பகிரப்படாத மென்மையான பக்கமும் அவருக்கு உண்டு என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த உயர்ந்த இராணுவ மிடுக்கு கொண்ட திடமான மனிதன் மிகவும் மென்மையானவர் எளிமையானவர் என்பதை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

நான் அவரை முதன் முதலாக கண்ட காட்சி இன்றும் மனத் திரையில் பதிந்துள்ளது.

2000 ஆம் ஆண்டு காலப்பகுதி, நானும் என் நண்பனும் புத்துவெட்டுவான் கொக்காவில் வீதியூடாக முறிகண்டி சென்று அதனூடாக புதுக்குடியிருப்பு போவதற்காக கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரத்தடியில் போய்க் கொண்டிருந்தோம். அப்போது கொக்காவில் பகுதியில் எதிரே ஒரு MD90 உந்துருளி வந்து கொண்டிருக்கிறது. வெள்ளை நிற சாறமும் பழும்பு மஞ்சள் நிற சட்டையும்( Shirt ) போட்டுக் கொண்டு உயரமான ஒருவர் தனது நண்பனுடன் ( பாதுகாவலனுடன்) வந்து கொண்டிருக்கிறார். எம்மைக் கண்டவுடன் கையைக் காட்டி நிறுத்திய போது நான் எதுவும் விளங்காமல் முழிக்கிறேன்.

ஆனால்

“நிப்பாட்டு மச்சான் நிப்பாட்டுடா… ”

என்று கத்துகிறான் என் நண்பன்.

“நில்லுடா வாறன் …”

என்று கூறிச் செல்கிறான். போனவன் 10 நிமிசமாக அவருடன் சிரித்து கதைத்தபடி நின்றான். எனக்கும் அவர்களுக்குமிடையே 40-50 மீட்டர் இடைவெளி இருந்ததால் எனக்கு எதைக் கதைத்தார்கள் என்று எதுவும் விளங்கவில்லை. இறுதியாக அவர் இவனின் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டியது மட்டும் புரிந்தது.

நண்பன் அவரை வழியனுப்பி விட்டு வந்தான்.

மச்சான் யார் என்று தெரியுமா?

இல்லையே….

மச்சி ஜெயம் அண்ணைடா…

என்னடா சொல்லுறாய்…?

நான் அதிர்ந்து போனேன். எமது விடுதலை அமைப்பின் மூத்த தளபதி. எந்த பாதுகாப்பும் இன்றி சாதாரணமாக எம்மைப் போல பயணம் செய்ததை என்னால் நம்பவே முடியவில்லை. பாதுகாப்புக்கு இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கி மட்டும் தான் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் வேறு எந்த ஆயுதங்களையும் நான் காணவில்லை. பாதுகாப்பு போராளியிடமும் எந்த ஆயுதங்களும் இருந்ததுக்கான அறிகுறி இல்லை.

அவ்வாறான எளிமை மிக்க எம் தளபதி வேவினூடாகவும் சண்டைகளின் ஊடாகவும் சாதித்தவை கொஞ்சமல்ல. அவற்றை பல இடங்களில் பலர் பகிர்ந்து கொண்டாலும், அவரது மென்மையான பக்கங்களை இப்போது பகிர வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. ஏனெனில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என உலகத்திடம் பரப்புரை செய்யும் நல்லாட்சி என்று தம்மைக் காட்டிக் கொண்ட இனவழிப்பு அரசுக்கு புரியாத புதிராக இருப்பது இவர்களிடம் எப்படி இத்தனை மென்மையான இதயம் என்பது மட்டுமே.

ஏனெனில் இன்றும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பல நூறு பொதுமக்கள் இன்றும் விடுதலை செய்யப்படாது அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த இராணுவம் குறுகிய நாட்களில் தனது வீடுகளுக்கு விடுதலையாகிச் சென்றது வரலாறு. அதை விட அவர்கள் மீது விடுதலைப்புலிகள் என்றும் அடாவடித்தனத்தை பிரயோகித்தது இல்லை. கைதியாக சிறைகளில் இருந்தார்களே அன்று சித்திரவதைகளை அனுபவித்ததில்லை. ஆனால் எம் பொது மக்களையும் போராளிகளையும் இந்த அரசு எத்தனை கொடூரமாக வைத்திருந்தது என்பதை பல ஆவணங்கள் வெளிக் கொண்டு வந்திருந்தன.

அந்த நிலையில் தான் தளபதி ஜெயம் அவர்களின் மென்மையான இதயத்தை இங்கே குறிக்க வேண்டிய தேவை வருகிறது.

1999 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் ஒரு நாள். ( திகதி சரியாக தெரியவில்லை) ஓயாத அலைகள் 3 இன் தொடர் வெற்றியில் மகிழ்ந்திருந்த எம் தேசத்தில் மன்னார் களமுனை தனது போராளிகளுடன் மகிழ்வாக இருக்கிறது. அங்கு நடந்த ஒரு சண்டை ஒன்றில் சிங்களத்தின் ஊர்காவற்படையைச் சேர்ந்த இரண்டு பொதுமக்கள் ஜெயம் அவர்களின் கட்டளைக்குக் கீழ் நின்ற போராளிகளால் கைது செய்யப்படுகின்றனர். அதில் ஒருவர் சிறு காயங்களோடு தப்பி வந்திருந்தார். தனக்குத் தானே பச்சிலைகளை கசக்கி மருந்திட்டு காயத்தின் குருதிப் பெருக்கை கட்டுப்படுத்தி இருந்தார்.

கைதாகியவர்கள் சாகப் போகிறோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வகையில் அவர்களை பொதுமக்கள் என்று கூறவும் முடியாது. அதே வேளை இராணுவம் என்றும் சொல்ல முடியாது. அவர்களும் எங்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்பவர்கள் தான். ஆனாலும் மக்கள் அதனால் அவர்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கும் போது கவனமாக எடுக்க வேண்டிய தேவை இருந்தது. விடுதலைப்புலிகள் கைதானவர்களை கைதிகளாக வைத்திருப்பார்கள் அல்லது உடனடியாக விடுதலை செய்வார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல காலங்கள் பதிவாகிய நிகழ்வுகள்.

ஆனால் சில போராளிகள் அந்த ஊர்காவற்படையைச் சேர்ந்த இருவரும் எமக்கெதிராக சண்டை போட்டவர்கள். இவர்களால் கூட எம் பல போராளிகளை நாம் இழந்திருக்கிறோம். அவர்களை எதற்காக உயிருடன் வைத்திருக்க வேண்டும்? என்று கொதித்தார்கள்.

அப்போது வன்னி மேற்குப் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெயம் அவர்கள் அமைதியாக போராளிகளுடன் கதைக்கிறார்.

“அவர்கள் பொதுமக்கள் அதுவும் இப்போது எம் கைதிகள் அவர்களை சுட்டுக் கொல்வது மனிதம் அற்ற செயல். அவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டும். எங்களுடைய மக்களைப் போலத் தான் இவர்களும். ஆனால் ஒரு வித்தியாசம் எங்கட மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். இவர்கள் எங்கட உரிமைகளை பறிக்க வந்திருக்கிறார்கள். என்றாலும் அவர்களை உயிருடன் அனுப்ப வேண்டியது எமது கடமை. அதனால் அவர்கள் மீது எந்த விதமான தண்டனைகளும் வழங்க வேண்டாம் உடனடியாக அரசியல் துறை மூலமாக குடும்பங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

என்று அறிவுறுத்துகிறார்.

போராளி மருத்துவர் தணிகையை அழைத்த தளபதி உனடியாக இருவருக்கும் மருத்துவசிகிச்சை செய்யும் படி பணித்தார். எதிரி எனிலும் உயிரைக் காக்க வேண்டும் என்ற மேன்நிலை நோக்கத்தோடு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கினார் இராணுவ மருத்துவர் தணிகை.

அப்போது “யூலியட் மக் ” சண்டையில் எவ்வளவு உக்கிரமமான தளபதி என்றாலும் மக்கள் மீதும் போராளிகள் மீதும் எவ்வளவு பாசத்தை வைத்துள்ளார். அதே நேரம் எதிரிகளின் உதவிக்காக வந்திருந்தவர்களைக் கூட இவ்வாறு நேசிப்பது என்பது எந்த நாட்டிலும் எந்த இராணுவத் தளபதியாலும் செய்ய முடியாத பெரும் மென்நடவடிக்கை என்பதையும் அவர் எவ்வளவு மென் உள்ளம் படைத்த தளபதி என்பதை அந்த ஊர்காவற் படையை சேர்ந்தவர்களும் அன்று உணர்ந்திருப்பர். மருத்துவர் தணிகை மற்றும் மூத்த போராளி மார்ஷல் ஆகியோரை அழைத்த தளபதி ஜெயம் கைதியாக இருந்த இரு ஊர்காவற் படை உறுப்பினர்களையும் பொறுப்பளிக்கிறார்.

“கவனமாக கொண்டு போங்கோ … கல்விளானில் இருக்கும் அரசியல் துறை நடுவப்பணியகத்தில் ஒப்படையுங்கள்” என்று கட்டளையிடுகிறார்.

கட்டளையை ஏற்று போராளி மருத்துவர் தணிகையும், மார்ஷலும் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு மன்னாரில் இருந்து எமது பொது மக்களின் வாகனம் ஒன்றை உதவிக்கு வரு மாறு அழைத்துக் கொண்டு கல்விளானுக்கு வருகிறார்கள். அப்போதெல்லாம் இயக்கத்திடம் வாகனப்பற்றாக்குறை இருந்த காரணத்தால் மக்களின் வாகனங்களே அதிகமாக பயன்படுத்தப்படுவது வழமை. அதுவும் சாரதிகளும் பெரும்பாலும் மக்களாகவே இருப்பார்கள். போராளிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எம் மக்கள் பிரிக்கப்படாத அளவுக்கு பிணைந்திருந்தற்கு இந்த வாக சாரதிகளும் ஒரு சான்றாகின்றனர்.

கல்விளானுக்கு மக்களின் உதவியோடு வந்த போராளிகள் இருவரும் ஊர்காவற்படையின் இரு உறுப்பினர்களையும் அரசியல்துறையின் மக்கள் தொடர்பகப் பிரிவில் பொறுப்பாக இருந்த போராளி தயா மாஸ்டரிடம் ஒப்படைக்கிறார்கள்.

மரணம் வரும் தருவாயை எதிர்பார்த்து பயந்து இருந்த சிங்களத்தின் ஊர்காவற்படையை சேர்ந்த இருவரும் தமக்கு என்ன நடக்கிறது புரியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு பின் சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகள் வந்து அவர்களைப் பொறுப்பெடுப்பார்கள். அப்போது தான் அந்த அப்பாவி ஊர்காவற்படை உறுப்பினர்களுக்கு நிம்மதியாக இருந்திருக்கும். அவர்கள் தமது குடும்பங்களுடன் இணைவதற்கான நடவடிக்கைகளை எம் மொழி பெயர்ப்பு போராளிகள் அவர்களுக்கு விளங்கப்படுத்தி இருப்பார்கள். அதன் பின்னான நாள் ஒன்றில் அவர்கள் நிட்சயமாக விடுதலை செய்யப்பட்டு இன்றும் எங்கோ ஓர் இடத்தில் வாழ்வார்கள்.

உண்மையில் அவர்கள் புரிந்திருப்பார்கள். தம்மை உயிருடன் விடுவித்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் மென்மையையும் தமது சிங்களத் தளபதி பிரியங்காவின் கொலை வெறியையும். அதோடு மட்டுமல்லாது, தான் நேசித்த தமிழீழ மண்ணை அள்ளி நெஞ்சில் அணைத்தபடி தன்னைத் தானே சுட்டும், குப்பி கடித்தும் தனது உயிரை மண்ணுக்காக வித்தாக கொடுத்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் புகைப்படத்தைப் பார்த்து கட்டாயம் விழி கலங்கியிருப்பர். எம்மைக் காத்த தெய்வம் தமது கண்முன்னே தான் நேசித்த மக்களுக்காக வீழ்ந்து கிடப்பதை உணர்ந்திருப்பர்.

எந்த விடுதலை இயக்கமும் சரி, இராணுவக் கட்டமைப்பும் சரி அதிலும் சிங்கள அரச படைகள் தன் எதிரே துப்பாக்கியுடன் நிற்கும் எதிரிகளை மட்டுமல்ல அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க வேண்டும் என்பதையே தம் நிலைப்பாடாக கொண்டிருப்பர். ஆனால் விடுதலைப் புலிகளின் தளபதிகளோ போராளிகளோ அவ்வாறானவர்கள் இல்லை. மனிதமும் உயிர்களை நேசிக்கும் உயரிய பண்பையும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ள எந்த சிரமமும் இருக்கவில்லை.

சிங்கள இராணுவத் தளபதி இறுதி யுத்தம் என்ற பெயரில் இனவழிப்பை நிறைவேற்றி முடித்தது காணாது என்று, இன்றும் தமிழர்களை கொல்வதற்காகவும் தமிழ் நிலங்களை அபகரிப்பதற்காகவும் தயாராகவே இன்றும் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறார்கள். ஆனால் எம் போராளிகளோ அவ்வாறு இல்லை என்பதை நிரூபித்தார்கள். அவர்கள் எதிரியையும் எதிரிகளின் உயிரையும் மதிக்கத் தவறியதில்லை. இதை எம் தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களும் நிரூபிக்கத் தவறவில்லை…

நினைவுப் பகிர்வு- “கவிமகன்.இ”
[10.03.2018]

ஓ… சங்கீதா… நீ என்ன குற்றம் செய்தாய்…?

கருவில் இருக்கையிலேயே தந்தையைப் பிரிந்தாய்… தாயின் அரவணைப்பில் மட்டுமே மகிழ்ந்திருந்தாய்… இப்போது தாயையும் இழந்து பரிதவித்து நிற்கின்றாய்… உண்மையில் நீ… செய்த குற்றம் என்ன…? ஈழத் தமிழ்க் குழந்தையாகப் பிறந்ததைத் தவிர…

அமானி ராயிதா, தினுல்யா சனாதி பிறந்த இனத்தில் பிறந்திருந்தால் தந்தையின் மடியில் தவழ்ந்திருப்பாயே… அவரின் மார்பிலேயே தூங்கி வளர்ந்திருப்பாயே…! அண்ணனும் நீயுமாக போட்டிபோட்டு தந்தையைத் தூக்கக் கேட்டு அடம்பிடித்திருப்பீர்களே…! உங்கள் தாய்க்காக இந்தளவு சிறிய வயதில் கொள்ளிக்குடத்தை அண்ணன் தூக்கி நடந்திருக்க மாட்டானே…

பாவியரின் வன்செயல்களால்தானே தந்தை ஆயுதத்தைத் தூக்கினார். அதனால்தானே செய்யாத குற்றத்துக்காக உனது தந்தையை சிறையில் அடைத்தார்கள்… இதனால்தானே உனது தாயும் நோயுற்றாள்…! அதனால் சாவையும் அழைத்தாள்…

அரசியல் கைதியான ச.ஆனந்தசுதாகரனின் 10 வயதேயான மகள் சங்கீதா தாயின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள வந்த தந்தையின் பின்னால் சென்று சிறைச்சாலை வாகனத்தில் ஏறி சிறை செல்ல முயன்றாள். இந்தச் சம்பவத்தை அறிந்து நெஞ்சம் கரையாதவர்கள் இல்லை. ஆனால் இந்தச் சிறுமியின் பரிதவிப்பை – அநாதரவு நிலையைக் கண்டும் – அறிந்தும் நெஞ்சம் கரையாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்… அப்படி நெஞ்சம் இல்லாதவர்களும் இருக்கிறார்களா என்று எண்ணவும் கூடும்… இருக்கிறார்கள்… ஒரு சாரார்… ஈவிரக்கமற்ற இலங்கையின் ஆட்சியாளர் கூட்டம். இரண்டாவது சாரார் நம் அரசியல்வாதிகள் – ஆம் நம் தமிழ் அரசியல்வாதிகளேதான்.

ஆட்சியில் இருப்பவர்கள் நினைத்திருந்தால் தந்தையைப் பிரிந்த அந்தப் பிஞ்சின் துன்பத்தை – சோகத்தை – துயரத்தை – கவலையை உடனடியாகவே தீர்த்திருக்க முடியும். கொலைக் குற்றவாளிக்குக்கூட இரக்கம் காட்டி அதிக பிணைநேரம் வழங்க இடமளித்த இலங்கைச் சட்டம். அரசியல் கைதி ஒருவருக்கு ஆக வழங்கியது மூன்றே மூன்று மணி நேரம்தான். ஆனந்த சுதாகரனுக்கு வழங்கப்பட்ட அந்த 3 மணி நேரப் பிணையை அதிகரித்து இருக்க முடியும். ஆனால் அவர்தான் தமிழராக இருந்து விட்டாரே! எவ்வாறு பிணை நேரத்தை அதிகரித்து வழங்குவது என்று சட்டம் நிதானித்து இருக்ககூடும்.

தன்னைக் கொல்ல வந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி சி.ஜெனிவனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார். ஆனால் அந்த மன்னிப்பின் மூலம் தன்னைக் கொல்ல வந்தவரையும் மன்னித்தவர் என்பதால், உலகம் தன்னைக் கடவுளாகக் கொண்டாடும் என்று எண்ணினாரே தவிர வேறு எதுவும் செய்யவில்லை. வாய்கிழிய நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கைதிகளை விடுவிப்பதிலும் நல்லிணக்கம் தங்கியிருக்கிறது என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை.

தேர்தல் பிரசாரக் காலத்திலும், பாடசாலை நிகழ்வுக்கு சென்ற போதும் நண்பிகளாகிப் போன அமானி ராயிதா, தினுல்யா சனாதி என்ற சிறுமிகளின் வீட்டுக்குச் சென்று அவர்களின் மழலைப் பேச்சில் மகிழந்திருந்த ஜனாதிபதிக்கு, தமிழ்ச் சிறுமியான சங்கீதாவின் அழுகை மொழி இனிக்காதுதான். அதனால்தான் தாயை இழந்து தந்தையைப் பிரிந்து அநாதரவாக நிற்கும் சிறுமி சங்கீதாவின் குரல் அவரின் காதை எட்டவில்லை. தன்னைக் கொல்ல முயன்றவருக்கும் மன்னிப்பு அளித்த ஜனாதிபதியால் தாயை இழந்து, தந்தையைப் பிரிந்து அநாதைகளாக நிற்கும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்காக பொது மன்னிப்பு வழங்க முடியாதா என்ன?

துரோகிக்கும் சிலை திறக்கும் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டியவர்கள் என்று ஏன் வலியுறுத்தி சொல்லத் துணியவில்லை. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டம் நடக்கிறது என்றவுடன் உடனடியாக ஜெனிவாவுக்கு பறந்த அதிகாரத்தில் உள்ள – இல்லாத அரசியல்வாதிகளுக்கு இன்னமும் அரசியல் கைதிகள் உட்பட வருடம் தாண்டியும் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்கூட கண்ணுக்குத் தெரிவதில்லை. நாடாளுமன்றம் சென்று வலுவாகக் குரல் எழுப்பி – அரசுடன் ஒத்துப் போகும் இந்தத் தருணத்தில் அதை மிரட்டிக் காரியம் சாதிக்கத் துப்பில்லாதவர்கள் ஜெனிவா சென்று சாதிக்கப் போவது எதை?

மனிதாபிமானப் போர் என்ற போர்வையில் ஈவிரக்கமற்ற அரசும் – அதன் இயந்திரமான முப்படைகளும் பொலிஸூம் நடத்திய கொடூரங்கள் உலகறியும். அவை இப்போது முடிந்த கதை – வேறு கதை. நல்லிணக்கத்தை ஏற்படுத்த தியாகங்களை சுமந்து நிற்கிறோம் என்று நாடகமாடும் அரச பரிவாரங்கள் முதலில் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்க சமிக்ஞையை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் தந்தையின் வருகைக்காக சங்கீதாக்கள் காத்திருக்கின்றனர்…!

வித்தகன்

Up ↑