இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் அதிகம் அழுத்தம் கொடுத்தால் அது மோசமான ஆட்சியாளர்கள் வருவதற்கு இடம் வைத்துவிடும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை. சேனாதிராசா அவர்கள் கூறியுள்ளார்.

அதேவேளை இந்த அரசாங்கம் எமது பிரச்சினைக்கு தீர்வு காணத்தவறினால் எங்களுக்கு சர்வதேசம் உதவி செய்யும் என்பதும் அவரின் உரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லாட்சிக்கு அழுத்தம் கொடுத்தால் அது பொல்லாத ஆட்சியினர் வருவதற்கு வழிவகுக்கும் என்பது மாவை.சேனாதிராசாவின் கருத்து. இக் கருத்து எந்தவகையிலும் அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கமுடியாது. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகவே இதனைக் கொள்ளவேண்டும்.

அப்படியானால் நல்லாட்சி நிலைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நாங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கக்கூடாது என்பது அவரின் கருத்தெனப் பொருள் கொள்ள முடியும்.

இந்த அரசாங்கத்தை நல்லாட்சி என்று நாம் கூறுவது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று. இந்த அரசாங்கம் நல்லாட்சியா இல்லையா என்பதை அதன் ஆட்சிக்கால நிறைவிலேயே சொல்ல முடியும்.

எனினும் நல்லாட்சி என்ற சொற்பதம் வழக்கத்திற்கு வந்து விட்டது. அதிலும் நல்லாட்சி என்பது யுத்தத்தால் பாதிக்கப்படாதவர்கள் சொல்லமுடியுமேயன்றி யுத்தத்தால் பாதிப்புக் குள்ளானவர்கள் இதனை நல்லாட்சி என்று சொல்வார்களா? என்பதை பொறுத்தும் நல்லாட்சி என்ற பதம் பயன்படுத்தக்கூடியது.

எது எவ்வாறாயினும் தங்கள் சொந்த நிலங்களை படையினரிடம் பறிகொடுத்து விட்டு இரவல் இடங்களில் தங்கள் வாழ்க்கையை கழிப்போர், காணாமல்போன தங்கள் உறவுக ளைத் தேடுவோர், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் அவர்களின் உறவுகள் என யாரும் இவ் அரசை நல்லாட்சி என்று கூற மறுப்பர்.

இதற்கு காரணமும் உண்டு. அதாவது போரி னால் தமக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்திக்காத அரசை நல்லாட்சி என்று சொல்வதற்கு அவர் கள் ஒருபோது உடன்படமாட்டார்கள் என்பது நியாயமானதே.

எனவே ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் ஆகியோரின் அரசாட்சி நல்லாட்சியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இது ஒருபுறம் இருக்க நல்லாட்சிக்கு இது வரையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுத் ததான தகவல்கள் எதுவும் இல்லை.

அழுத்தம் கொடுத்தால் நல்லாட்சி போய்விடும் என்றால் அழுத்தம் கொடுக்காமல் தமிழ் மக்கள் தாம் அனுபவிக்கின்ற அவலங்களோடு தொடர்ந்தும் வாழவேண்டும் என்று பொருள் கொள்வதிலும் தவறிருப்பதாக தெரியவில்லை.

எங்களை ஏமாற்ற நினைத்தால் மகிந்த ராஜபக்ச­விற்கு நேர்ந்த கதிதான் இந்த அரசுக்கும் ஏற்படும் என்பது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரின் கருத்து.

அதேவேளை இலங்கை அரசு ஏமாற்ற நினைத்தால் சர்வதேசத்துடன் ஒரு உடன்பாட்டிற்கு நாம் வர நேரிடும் என்று மாவை.சேனாதிராசா அவர்கள் புங்குடுதீவில் ஆற்றிய உரை நல்லாட்சிக்கான எச்சரிக்கை.

இவையெல்லாம் சரி. இப்போது நமக்கு ஏற் படுகின்ற சந்தேகம், நாம் அழுத்தம் கொடுத்து பொல்லாத ஆட்சி வந்தால் அவர்களை சர்வதேசம் பார்த்துக்கொள்ளாதா? அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் சர்வதேசத்துடன் உடன்பாட்டிற்கு வரமுடியாதா? என்பது தான்.

அட, நல்லாட்சிக்கான அழுத்தம் என்பது தமிழ் மக்கள் இப்போது நடத்துகின்ற தொடர் போராட்டங்கள் மட்டுமே. இந்தப் போராட்டங்கள் எங்கள் அரசியல் தலைமைக்கு இடைஞ்சலாக இருக்கிறதோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

*

மக்களின் தொடர் போராட்டமே காணி விடுவிப்புக்கு காரணம்

காணி விடுவிப்புத் தொடர்பில் எவரும் அரசியல் இலாபம் தேடுவதை முற்றுமுழுதாகக் கைவிட வேண்டும்.

போர் முடிந்து எட்டு ஆண்டுகளாகிவிட்ட போதிலும் காணி விடுவிப்புத் தொடர்பில் அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மக்கள் தங்கள் காணிகளை எப்படியும் விடுவிப்புச் செய்வதென முடிவு செய்தனர்.
அதற்காக இரவு பகல் என்று பாராது வெயில் குளிர் என்று நோவாது தொடர் போராட்டம் நடத்தினர்.

மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அவர்களின் காணிகளை விடுவிக்க வேண் டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.

எனினும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தாம் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையாலும் ஜனாதிபதித் தேர்தலின் போது செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாகவுமே நில விடுவிப்பு நடப்பதாக பச்சைப் பொய் கூறுகின்றனர்.

இவ்வாறு கூறுவது மிக மோசமான ஒரு செயலாகும். எல்லாவற்றிலும் அரசியல் இலாபம் தேட நினைப்பது அவ்வளவு நல்லதல்ல.

உண்மையில் காணி விடுவிப்பு என்ற விடயம் ஓரளவு வெற்றி அடைவதற்கு தமிழ் மக்கள் நடத்திய தொடர் போராட்டமே மூல காரணமாகும்.

தாமாக உணர்ந்து இனியும் பொறுக்க முடியாது என்ற கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலத்தை மீட்பதென முடிவு செய்தனர்.

இம்மக்களின் நியாயமான போராட்டத்துக்கு மனிதநேயமுள்ளவர்கள் தமது ஆதரவை வழங்கினர்.
தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் மக்கள் நடத்திய போராட்ட பக்கமே தலைவைக்கவில்லை.
இதுவே நிலைமையாக இருக்கையில்,

தங்களால்தான் காணி விடுவிப்பு நடந்தது என உரிமை கோருவது மிகப்பெரும் துரோகத்தனமாகும்.
மக்கள் போராட்டம் நடத்தி நிலத்தை மீட்டெடுத்தனர் என்றால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அந்த மக்களைப் பாராட்டுவதே நியாயமானதாகும்.

இதைவிடுத்து ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவித நிபந்தனையும் இன்றி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வழங்கி விட்டு நில மீட்புத் தொடர்பில் ஏலவே உடன்பாடு உண்டு எனக் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைப்பதற்கு ஒப்பானதாகும்.

ஏலவே உடன்பாடு இருந்தால் அதை ஏலவே செய்யாதது ஏன்? ஏற்கெனவே செய்யப்பட்ட உடன்பாட்டில் மக்கள் தங்களை வருத்தி போராட்டம் நடத்தினால்தான் அவர்களின் நிலத்தை விடுவிப்போம் என்ற உடன்பாடுகளும் இருந்தனவா என்ன?

ஆக, போரில் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்த மக்கள் தம்மளவில் ஒன்றுபட்டு நடத்திய தொடர் போராட்டமே நில விடுவிப்புக்கு காரணமாகும்.

இதில் பலர் உரிமை கோர நினைத்தாலும் அது உரிமை கோருபவர்களுக்கு மிகப்பெரும் பாதகமாக அமையும் என்பதே உண்மை.

கூட்டமைப்புத் தலைவர்களிடம் ஒரு வித்தியாசம் தெரிகிறது

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இரா.சம்பந்தர்,

மாவை.சேனாதிராசா ஆகியோரின் உரைகளிலும் நடவடிக்கைகளிலும் ஒரு மாற்றம் தெரிவதைக் காணமுடிகிறது.

புங்குடுதீவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய மாவை.சேனாதிராசா அவர்கள் அரசாங்கம் ஏமாற்றினால் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்மானத்தை எடுக்கும் எனக் கூறியுள்ளார்.

அட! இது நல்ல கதையாக இருக்கிறதே! அந்தத் தீர்மானம் என்னவாகவிருக்கும் என்று அறிய மனம் அவாப்பட்ட போது,

அந்தத் தீர்மானம் என்ன என்பது எங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும்தான் தெரியும் என்றும் மாவை.சேனாதிராசா அவர்கள் கூறியுள்ளார்.

குறித்த தீர்மானம் இலங்கை அரசுக்குத் தெரிய வந்தால் அது தீர்மானத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அவர் தீர்மானம் என்ன என்பதை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

எதுவாயினும் இலங்கை அரசாங்கம் எங்களை ஏமாற்றினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேச சமூகமும் ஒரு வலுவான தீர்மானத்தை வைத்துள்ளன என்பது நம்பிக்கை தருகிறது.

இலங்கை அரசாங்கம் எங்களை ஏமாற்ற நினைத்தால், ஐயா! நீங்கள் கூறிய அந்தத் தீர்மானத்தை செய்யுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவை தமிழ் மக்கள் கேட்கக்கூடிய ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.

ஆனால் அந்தத் தீர்மானம் என்ன என்பது குறித்து நாம் ஆராயாமல் விட்டாலும் அப்படியொரு தீர்மானத்துடன் இருக்கக்கூடிய நம்பிக்கையைத் தந்த மாவை.சேனாதிராசாவுக்கு நாம் நன்றி கூறிக்கொள்ள வேண்டும்.

இதேபோன்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் தமிழ் மக்களின் நிலத்தை விடுவிக்கும் படி படைத்தரப்பை சந்தித்துள்ளார்.

அச்சந்திப்பில் ஜனாதிபதி உத்தரவிட்டால் தமிழ் மக்களின் நிலத்தை விடுவிப்பதில் படையினருக்கு எந்த இடைஞ்சலும் இல்லை என்று கூறியுள்ளனராம்.

அப்படியானால் தமிழ் மக்களின் நிலத்தை படையினர் விடுவிக்காமல் இருப்பதற்கு ஜனாதிபதி தான் காரணம் என்பது போல விடயம் அமைகிறது.

ஆக, படையினர் கூறியதை சம்பந்தர் ஐயா, முற்றுமுழுதாக நம்பியுள்ளார் என்றே கருத வேண்டும்.
மக்களின் நிலங்களை விடுவிக்க முடியாது என்று படை அதிகாரிகள் கூறிய செய்திகள் ஊடகங்களில் ஏற்கெனவே வெளிவந்துள்ள போதிலும் இது தொடர்பான தகவல்கள்,தரவுகள் எதுவுமின்றி படையினரைச் சந்தித்தால், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்கவேண்டியதைத் தவிர வேறு வழியில்லை எனலாம்.

எதுவாயினும் படையினரைச் சந்தித்த சம்பந்தர் ஐயா, அடுத்து அவசர அவசரமாக ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும்.

அவரைச் சந்தித்து தமிழ் மக்களின் நிலங்களை விடுவிக்க படையினர் தயார், நீங்கள் தான் உத்தர விடவில்லையாம் என்று கூற வேண்டும்.

அப்போது தான் ஜனாதிபதியும் படைத்தரப்பும் முறுகிக்கொள்ளும் நிலைமை வரும். இதை சம்பந்தர் ஐயா உடனடியாகச் செய்வார் என நம்பலாம்.

வலம்புரி