சிறிலங்காவில் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தம் நிறைவு பெற்று எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது பெரும்பாலான மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதுடன் தமது வாழ்விடங்களையும் மீளக்கட்டியெழுப்பி வருகின்றனர்.

‘எமது அயலிலேயே எங்களது வீடு தான் மிகப் பெரிய வீடாகக் காணப்பட்டது’ என தற்போது கிளிநொச்சியில் இடிந்த நிலையில் காணப்படும் தமது வீட்டின் தளத்தில் நின்றவாறு ஆர்.கந்தசாமி மற்றும் கே.சிவமலர் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த வீட்டின் அடிப்பகுதி மட்டுமே இடிபாடுகளிலிருந்து தப்பிக் காணப்படுகிறது. இந்த வீட்டின் சுவர்கள் எங்கிருந்தன என்பதை அடையாளங் காண முடியவில்லை. கிளிநொச்சியில் இவர்களது தோட்டம் மட்டுமே தற்போது வெறுமையாகக் காணப்படுகிறது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகராகக் காணப்பட்ட கிளிநொச்சியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அங்கிருந்த பெரும்பாலான வீடுகள் அழிக்கப்பட்டன.

‘எமது வளவில் மாமரம் மட்டுமே எஞ்சியுள்ளது. நாங்கள் எமது வீட்டை விட்டு இடம்பெயர்ந்த போது இந்த மரம் மிகச் சிறியதாகக் காணப்பட்டது. அதாவது மூன்று மாம்பழங்கள் மட்டுமே பழுத்திருந்தன. தற்போது இந்த மரம் மிகப் பெரிதாக வளர்ந்து விட்டது’ என கே.சிவமலர் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இரண்டு பத்தாண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்த இத் தம்பதியினர் தற்போது தமது சொந்த இடத்திற்குத் திரும்பியுள்ளனர். ஆர். கந்தசாமி ஒரு நீரிழிவு நோயாளியாவார். இவரால் இந்தியாவில் தனக்கான மருத்துவச் செலவை ஈடு செய்ய முடியவில்லை. இந்தியாவில் அகதிகளாக வாழ்வோருக்கு அடிப்படை மருத்துவப் பராமரிப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தியாவின் தெற்கு மாநிலமான தமிழ்நாடானது சிறிலங்காவின் வடக்கில் வாழும் தமிழ் மக்களுடன் மொழி மற்றும் கலாசாரத் தொடர்பைப் பேணி வருகிறது. தற்போதும் தமிழ்நாட்டில் 100,000 இற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் வாழ்கின்றனர்.

‘சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் வாழ்ந்த 8000 பேர் தமது சொந்த நாடான சிறிலங்காவிற்குத் திரும்பியுள்ளனர். பலர் தற்போதும் சிறிலங்காவில் இடம்பெறும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு திரும்பிச் செல்வதில் தயக்கம் கொள்கின்றனர்’ என இந்தியா மற்றும் சிறிலங்காவில் வாழும் அகதிகளுக்கு ஆதரவளிக்கும் நிறுவனமான OfERR நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.சுதர்சன் தெரிவித்தார்.

யுத்தமானது சிறிலங்காவின் வடக்கின் பெரும்பகுதியை அழித்துள்ளது. குறிப்பாக 2009ல் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தமானது பெரும் அழிவிற்குக் காரணமாக உள்ளது. அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் புலிகள் அமைப்பிற்கு எதிராக யுத்தம் மேற்கொள்ளப்பட்ட போது புலிகளின் யுத்த வலயத்தில் அகப்பட்ட பொது மக்கள் பல அழிவுகளைச் சந்தித்தனர். போர் வலயத்திலிருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு புலிகள் அனுமதிக்கவில்லை. இதனால் இந்த மக்கள் செறிவான எறிகணைத் தாக்குதல்களால் இலக்கு வைக்கப்பட்டனர். இந்த யுத்தத்தில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டது.

யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்த போதிலும் யுத்த வடுக்களை சிறிலங்காவால் ஆற்றுப்படுத்த முடியவில்லை. 2015ல் சிறிலங்காவில் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட போது, யுத்த மீறல்கள் தொடர்பில் நீதி வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த மீறல்கள் தொடர்பில் நீதியை எட்டுவதில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தாமதம் காண்பிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

‘யுத்த மீறல்கள் தொடர்பில் தீவிர நடவடிக்கை எடுத்தால் ராஜபக்சவின் ஆட்சி மீளவும் நிலைபெறலாம் என மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அச்சம் கொள்கிறது. அரசாங்கத்தின் கைகள் கட்டப்பட்டால் அதில் எவ்வித பயனுமில்லை’ என மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரிசா டா சில்வா தெரிவித்தார். போரின் போது வீடுகளை இழந்த மக்கள் தற்போது தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். இதுவரை 50,000 வீடுகள் மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆனால் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் வாழ்வோரில் 137,000 குடும்பங்கள் வீடற்றவர்களாக உள்ளனர். தமது வீடுகளை மீள நிர்மாணிப்பதில் இந்த மக்கள் பெரும் இடர்ப்படுகின்றனர்.

‘எமது அயலை நாங்கள் ‘குட்டிச் சிங்கப்பூர்’ என்றே கூறுவோம். எமது அயலில் நாம் மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழ்ந்தோம். எமது வாழ்வு சிறப்பாக அமைந்திருந்தது. அகதி வாழ்வு ஆரம்பிக்கப்படும் வரை நாம் சிறப்பான வாழ்வை வாழ்ந்தோம்’ என ஆர்.கந்தசாமி தெரிவித்தார்.

ஜான்சி கபூர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியா கல்லூரியின் அதிபராவார். ஒஸ்மானியா கல்லூரி என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லீம் மாணவர்கள் கல்வி கற்பதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜான்சி கபூரின் தந்தையாரும் அதிபராகவே கடமையாற்றினார். ஆனால் 1990ல் வடக்கில் வாழ்ந்த முஸ்லீம்கள் அவர்களது சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இந்தப் பாடசாலை மூடப்பட்டது.

‘புலிகள் எமது வீட்டு வாசல்களில் துப்பாக்கிகளுடன் நின்றனர். அவர்கள் எமது வீடுகளிலிருந்து நாங்கள் வெளியேறுவதற்கு இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே அவகாசம் தந்தனர். நாங்கள் எமது வீடுகளிலிருந்து எந்தப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் அவர்கள் எமக்கு அனுமதி வழங்கவில்லை. நாங்கள் அனைத்தையும் இழந்தே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறினோம்’ என கபூர் தெரிவித்தார். வடக்கில் தனியாட்சியை நிறுவுவதற்கான புலிகள் அமைப்பின் முயற்சியின் ஒரு பகுதியாகவே வடக்கில் வாழ்ந்த 65,000 வரையான முஸ்லீம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் முடிவுற்ற நிலையில் தற்போது முஸ்லீம்கள் மீண்டும் தமது சொந்த இடத்திற்குத் திரும்பியுள்ளனர்.

‘நிலத்தை மீளப் பெறுவதென்பது பாரிய பிரச்சினையாக உள்ளது’ என பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர் ஜன்சிலா மஜீட் தெரிவித்தார். ‘நிறைய மக்களிடம் ஆவணங்கள் காணப்படவில்லை. ஏனெனில் அவர்கள் தமது நில ஆவணங்களை இடப்பெயர்வின் போது தொலைத்திருந்தனர். ஆனால் முஸ்லீம்கள் மற்றும் தமிழ் சமூகங்களிடையே புதிய தொடர்பை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம்’ என ஜன்சிலா மஜீட் தெரிவித்தார்.

2015ல் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிய கபூர் மற்றும் அவருடைய பெற்றோர்கள் தமது வீட்டின் உட்பகுதியைத் திருத்தியுள்ளனர். இவர்கள் வாழும் வீதியிலுள்ள பல வீடுகள் இன்றும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து காணப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனால் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த 2500 முஸ்லீம் குடும்பங்களில் 500 குடும்பங்கள் மட்டுமே மீளவும் யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளன.

‘இடம்பெயர்ந்து சென்ற இடங்களில் மக்கள் புதிய வாழ்வை அமைத்துள்ளனர். புதிய தலைமுறையினர் தமது பெற்றோர்களின் சொந்த இடத்திற்குத் திரும்பி வர விரும்பவில்லை’ என வடக்கில் வாழும் இடம்பெயர்ந்த மக்களுக்காகப் பணியாற்றிய இடா சுகன்யா ஜேசு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் பிறிதொரு பகுதியான சுன்னாகத்தில் வாழ்ந்து வரும் வி.பத்மாவதியும் தனது சொந்தக் கதையைப் பகிர்ந்து கொண்டார். இவரது குடும்பம் 1990ல் இடம்பெயர்ந்தது. இதனால் இவர் வாழ்ந்த வீடும் ஏனைய வீடுகளைப் போல சிறிலங்கா இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

’27 ஆண்டுகளாக நாங்கள் எமது சொந்த நிலத்தைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இராணுவத்தினர் எமது வீட்டைப் பயன்படுத்துகின்றனர். எமது நிலமானது பயிர் செய்வதற்குச் சிறந்த நிலமாகும். நாங்கள் இங்கு திரும்பிச் சென்றாலும் கூட அங்கு வாழ்வது சிரமமானது. ஏனெனில் எமது நிலம் சிறியது. ஆனால் எமது குடும்பம் விரிவடைந்து விட்டது. நாங்கள் எமது சொந்த இடத்தை விட்டு வெளியேறிய போது எனது மூத்த மகனுக்கு 12 வயதாக இருந்தது. ஆனால் தற்போது அவனுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்’ என பத்மாவதி தெரிவித்தார்.

பத்மாவதியின் தற்போதைய வீடானது இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில் உள்ளது. இந்த முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு இடையிலான பாதையானது மிகக் குறுகியதாகக் காணப்படுகிறது. இந்த முகாமிற்குள் பிரவேசித்த போது சலவைத் தூள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்படும் மிளகாய் போன்றவற்றின் வாசனைகள் காற்றுடன் கலந்திருந்தன. இந்த முகாமைச் சேர்ந்த சிறுவர்களால் அமைக்கப்பட்ட அழகான பட்டம் ஒன்று வானத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. அந்த முகாமில் வாழும் அனைத்து மக்களும் மயிலிட்டி என்ற இடத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களாவர்.

‘இந்த மக்கள் தமது சொந்த இடத்தில் வாழ்ந்த போது மிகவும் செல்வச் செழிப்போடு வாழ்ந்தனர். ஆனால் இவர்கள் இடம்பெயர்ந்த பின்னர் வாழ்வதற்கு மிகவும் துன்பப்படுகின்றனர். நிலத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது’ என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆய்வாளரான நியந்தினி கதிர்காமர் தெரிவித்தார்.

கேப்பாப்பிலவைச் சேர்ந்த மக்கள் தம்மைத் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி கடந்த பெப்ரவரி மாதம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கமானது போரின் பின்னர் வழங்கிய தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி பரவலான ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது தனது கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ஒரு பகுதி நிலத்தை விடுவித்துள்ளது. ஆனாலும் 12,750 ஏக்கர் நிலங்கள் இன்னமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மக்களின் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து சில நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கேப்பாப்பிலவு மற்றும் மயிலிட்டி போன்ற இடங்களில் பெருமளவான நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர்.

இராணுவமயமாக்கல் என்பது சிறிலங்காவில் மிகப்பாரியதொரு பிரச்சினையாக உள்ளது. இதனால் இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான நல்லிணக்கத்தை உருவாக்குவதில் இடர்கள் ஏற்பட்டுள்ளன. சித்திரவதை என்பது தொடர்ந்தும் ‘பொதுவான பிரச்சினையாகக்’ காணப்படுகிறது. பாதுகாப்புப் படையினரால் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் இன்னமும் விசாரிக்கப்படவில்லை. வடக்கில் தொடர்ந்தும் பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினர் தங்கியுள்ளனர். இராணுவத்தினர் அனைவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் தமிழர்கள் என எவரும் இல்லை.

பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களில் சிறிலங்கா இராணுவத்தினரால் தற்போது விடுதிகள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் நடத்தப்படுகின்றன. இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் அதாவது முல்லைத்தீவுக் காட்டிற்குள் புலிகள் பயிற்சி பெற்ற நீச்சல் தடாகம் ஒன்று காணப்படுகிறது. தற்போது இந்தப் பகுதியானது சிறிலங்கா இராணுவத்தினரால் சுற்றுலா மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு தற்போது சிறிய உணவகமும் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளன.

‘தென் ஆசியாவில் அதி தீவிரமாக இராணுவமயமாக்கப்பட்ட நாடாக சிறிலங்கா காணப்படுகிறது. அதாவது பத்து பொது மக்களுக்கு ஒரு இராணுவத்தினர் என்ற விகிதாசாரத்தில் இராணுவத்தினர் உள்ளனர். ஆகவே இவ்வாறான நிலைமையானது யுத்த மனநிலையிலிருந்து அமைதி நிலைக்குக் கொண்டு செல்வதற்கு தடையாக உள்ளது’ என உளவியல் நிபுணரும் சிறிலங்காவில் நல்லிணக்கத்தை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட செயலணியில் அங்கம் வகிப்பவருமான தயா சோமசுந்தரம் தெரிவித்தார்.

வடக்கு கரையோரத்திற்கு அருகிலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையில் உள்ள திறந்த வெளியில் சிறிலங்கா இராணுவத்தினரால் வீடுகள் கட்டப்படுகின்றன. இது ‘நல்லிணக்கபுரம்’ அல்லது ‘நல்லிணக்க கிராமம்’ என அழைக்கப்படுகிறது. இந்த வீட்டின் உட்பகுதியில் அதிபர் சிறிசேனவின் ஒளிப்படம் காணப்படுகிறது. ‘பச்சை உடையிலுள்ளவர்கள் எப்போதும் நண்பர்களாவர்’ என இராணுவ வீரர் ஒருவர் கூறும் வார்த்தையும் இங்கு காணப்படுகிறது.

‘எம்மைப் பொறுத்தளவில் எமக்கென வீடொன்று இருப்பது நல்லது. ஏனெனில் நாங்கள் 25 ஆண்டுகளுக்கு மேல் முகாமிலேயே வாழ்ந்துள்ளோம். ஆனால் இங்கு வேலை வாய்ப்பில்லை. சந்தையில் மீன் வாங்கி அவற்றை மக்களுக்கு விற்பதற்காக நான் நாள்தோறும் ஈருருளியில் சந்தைக்குச் சென்று வருகிறேன்’ என யுத்தத்தின் முன்னர் மயிலிட்டியில் வாழ்ந்த ஆர்.டனிஸ்ரன் தெரிவித்தார்.

‘நாங்கள் மீண்டும் எமது சொந்த இடத்திற்குச் செல்ல முடியும் என நான் நினைக்கவில்லை. இதற்குப் பதிலாக நாங்கள் எமது வாழ்வை இங்கேயே வாழவேண்டியேற்படும்’ என டனிஸ்ரன் தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் – Jenny Gustafsson*
வழிமூலம் -The national
மொழியாக்கம் – நித்தியபாரதி

Jenny Gustafsson* லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை தளமாக கொண்ட ஊடகவியலாளராவார்.

Advertisements