இன்றை தினமான புதுவருடத்தை கறுப்பு கொடிகள் ஏற்றி துக்கதினமாக அனுஸ்டிக்கவுள்ளதாக வடக்கில் நிலவிடுவிப்பிற்காகவும் ,காணாமல் போனோருக்கு நீதி கோரியும் போராடிவரும் மக்கள் அறிவித்திருந்ததுடன் அதனை அமுல்படுத்தியுமுள்ளனர்.மக்களின் போராட்டங்கள் மாதக்கணக்கில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் தெருவோரங்களில் அநாதைகளாக விடப்பட்டுள்ள தாம் சித்திரை வருடப்பிற ப்பை கறுப்பு தினமாக அனுஸ்டிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

அவ்வகையினில் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் இன்றைய தினம் கறுப்பு சித்திரைப் புத்தாண்டு தினமாக அனுஸ்டித்துள்ளனர்.

கறுப்பு உடைகள் அணிந்து, இராணுவ தலைமையகத்தை நோக்கி தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கறுப்புடை அணிந்தும் கைகளினில் கறுப்பு கொடிகளை தாங்கியவாறும் கறுப்பு சித்திரைப் புத்தாண்டை அனுஸ்டித்துள்ளனர். அத்துடன் மரணகிரியைகளை நினைவுபடுத்தும் தோரணங்களும் தொங்கவிடப்பட்டிருந்தது.

இதனிடையே சிவில் உடையினில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை படையினர் வருகை தந்து சந்தித்து புத்தாண்டுவாழ்த்து தெரிவித்தனர்.அப்போதும் தமது காணிகளை விட்டு வெளியேறினால் மட்டுமே புத்தாண்டென அவர்கள் படையினரிடம் தெரிவித்தனர். இதனிடையே காணாமல் போன தமது உறவுகளை தேடிபோராட்டத்தினில் ஈடுபட்டுள்ளோரும் கறுப்பு ஆடைகளை அணிந்து புத்தாண்டை கரிநாளாக அனுஸ்டித்துக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ் புத்தாண்டை புறக்கணித்த தாயக மக்கள்! கிளியில் கருப்புக்கொடி போராட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை 54 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்திரை புதுவருட பிறப்போடு தங்களுக்கு நல்தொரு செய்தி கிடைக்க வேண்டும் என்றும். அடுத்த வருடத்திலாவது தங்களின் உறவுகளோடு புதுவருட நிகழ்வை கொண்டாடுவதற்கு வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட எங்களுடை அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்கவேண்டும்.

எங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையினர் எங்களோடு வந்து இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.

இன்று சித்திரைபுதுவருட பிறப்பில் அனைவரும் தங்கள் தங்கள் குடும்பங்களோடு வருடப் பிறப்பு நிகழ்வை கொண்டாடிக்கொண்டிருக்க நாங்கள் எங்களின் உறவினர்களுக்காக வீதியில் போராடிக்கொண்டிருகின்றோம் இந்த நிலைமை மாறவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisements