சிறிலங்காவானது தனது நாட்டில் பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான கொடூரமான சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் வரை, பல ஆண்டுகளாகக் காத்திருக்கும், 100,000 வரையான காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கும் வரை நாட்டில் இடம்பெறும் வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வரமுடியாது.

இவ்வாறு அனைத்துலக மன்னிப்புச் சபையால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நீதி மட்டுமே எம்முடைய காயங்களை ஆற்றும்’ என்ற அனைத்துலக மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் சலீல் செற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போரின் போது இடம்பெற்ற பல்வேறு வடுக்களையும் இந்த உலகம் மறந்த போதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் வடுக்களுடன் வாழ்வதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கு நீதியும் உண்மையும் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகளைச் செலவிட்டு வரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்பாக குறிப்பாக பெரும்பாலான பெண்களின் நிலை தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச் சபையால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தமக்கு நீதி வேண்டிப் போராடும் போது பல்வேறு தடைகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தமது அன்புக்குரியவர்கள் எங்கிருக்கின்றனர் என்பது தொடர்பான பிழையான தகவல்களைப் பெற்றிருக்கின்றனர். அத்துடன் இவர்களுக்கு எதிராக பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசாரணைகள் மேலும் காலந்தாழ்த்தப்படுதல் போன்ற பல்வேறு தடைகளை காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சந்தித்து வருகின்றனர்.

‘பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது அன்புக்குரியவர்கள் திரும்பி வரமாட்டார்களா என்கின்ற ஏக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். சிலர் பல பத்தாண்டுகளாகவும் நீதி கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் வரை, இவர்களின் காயங்களை ஆற்றுவதற்கும் எதிர்காலத்தில் மேலும் வாக்குறுதிகளை வழங்குவதற்கும் சிறிலங்காவால் எவ்வித நகர்வையும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாது’ என அனைத்துலக மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் சலீல் செற்றி குறிப்பிட்டுள்ளார்.

பலவந்த காணாமற் போதல்களுடன் தொடர்புடைய குற்றங்களைக் குறைப்பதாக அனைத்துலக சமூகம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில், மனிதாபிமானத்திற்கு எதிரான இக்குற்றச் செயலானது சிறிலங்காவில் திட்டமிட்ட மற்றும் பரவலாக இடம்பெற்றுவருகிறது. இவ்வாறான வழக்குகள் தொடர்பாக விசாரணை செய்வதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்கின்ற உண்மையைக் கூறுவதிலும் சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனை விதிப்பதிலும் சிறிலங்கா அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெறும் பலவந்தக் காணாமற் போதல் சம்பவங்களுக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டமே காரணமாகும். இத்தடைச் சட்டமானது வெளித் தொடர்புகளற்ற, இரகசிய தடுப்பு முகாங்களை வைத்திருப்பதற்கு அனுமதிக்கிறது. இச்சட்டமானது மக்கள் மனித உரிமை மீறல்களால் அதிகம் பாதிக்கப்படுவதற்கும் குறிப்பாக சித்திரவதை மற்றும் பலவந்தக் கடத்தல்கள் உட்பட பல்வேறு மீறல்களுக்கு ஆளாவதற்கு வழிவகுக்கிறது.

‘பாதிக்கப்பட்ட மக்கள் வடுக்களிலிருந்து மீளெழுவதற்கான மீளிணக்க முயற்சிகளை சிறிலங்கா மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. இந்த மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் செவிசாய்ப்பதுடன் அவற்றை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கையையும் முன்னெடுக்க வேண்டும். நாட்டில் குற்றச்செயல்களை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதை தற்போதைய அரசாங்கம் உணர்ந்து அதற்கான சில நகர்வுகளை முன்னெடுத்து வருகிற போதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் காத்திருப்பதற்கு அரசாங்கம் வழிவகுக்கக் கூடாது’ என சலீல் செற்றி குறிப்பிட்டுள்ளார்.

‘பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே நீண்ட காலமாகக் காத்திருக்கிறார்கள். கடந்த கால மீறல்களிலிருந்து வெற்றிகரமாக மீளவேண்டுமாயின், பாதிக்கப்பட்ட மக்களால் முன்வைக்கப்படும் நீதி, உண்மை போன்றவற்றை சிறிலங்கா நிலைநாட்டுவதுடன், இவ்வாறான மீறல் சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாது என்பதற்கான உறுதியையும் வழங்க வேண்டும்’ என சலீல் செற்றி தெரிவித்துள்ளார்.

அனைத்துலக மன்னிப்புச் சபையால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் சந்தியா எக்னலிகொட தொடர்பான வழக்கும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது கணவரான பிரகீத் 24 ஜனவரி 2010 அன்று வீட்டிலிருந்து புறப்பட்ட பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை.

பிரகீத் எக்னலிகொட அரசியல் சார் கேலிச்சித்திர வடிவமைப்பாளராகச் செயற்பட்டார். அப்போதைய அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு ஊழல் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் பல்வேறு கேலிச்சித்திரங்களை இவர் துணிச்சலுடன் வெளியிட்டிருந்தார்.

சந்தியா எக்னலிகொட தனது கணவர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விடாமுயற்சியுடன் செயற்பட்டு வருவதுடன் சிறிலங்கா இராணுவத்தினரே தனது கணவர் பலவந்தமாகக் காணாமற்போனமைக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் கருதுகிறார். இது தொடர்பாக சந்தியா எக்னலிகொட முறைப்பாடு செய்திருந்ததன் காரணமாக குறைந்தது 90 தடவைகள் வரை இவர் நீதிமன்றுக்குச் சென்றுள்ளார்.

இவர் நீதிமன்றிற்குச் செல்லும் ஒவ்வொரு தடவையும் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார். கடந்த ஆண்டு கொமகமவிலுள்ள நீதிமன்றுக்குச் சென்ற போது பௌத்த தேசிய அமைப்பான பொது பல சேனவின் முக்கிய உறுப்பினர் ஒருவரும் வேறு பௌத்த பிக்குகளும் தனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அனைத்துலக மன்னிப்புச்சபையிடம் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். இந்த அமைப்பால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் சந்தியா ஒரு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர் எனச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

பிரகீத் எக்னலிகொட கடத்தப்படவில்லை எனவும் இவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று விட்டதாகவும் முன்னாள் சட்டமாஅதிபர் , 2011ல் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நீதிமன்றில் கேள்வியெழுப்பிய போது, பிரகீத் எக்னலிகொட வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார் என்கின்ற தகவலைத் தனக்கு வழங்கியது யார் என்பதை மறந்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

தனது கணவர் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல தடவைகள் எழுத்து மூலமாக சிறிலங்கா தலைவர்களுக்கு சந்தியா தெரிவித்துள்ளதுடன் பல்வேறு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். இவரது இந்த வழக்கானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடமும் சமர்ப்பிக்கப்பட்டது. பிரகீத் இராணுவ முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக 2015ல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இது தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

1980களிலிருந்து சிறிலங்காவில் 100,000 இற்கும் மேற்பட்ட பலவந்த காணாமற் போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை மதிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் சிங்கள இளைஞர்களும் அடங்குகின்றனர். 1989 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற இடது சாரித்துவ கிளர்ச்சியின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் பல சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலர் காணாமற் போயினர்.

இதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா காவற்துறையினர், இராணுவத்தினர் மற்றும் ஆயுதக்குழுக்களால் பல தமிழ் மக்கள் கடத்தப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர். இவ்வாறு காணாமற் போன மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களுள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தொழிலாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மற்றும் முன்னணி சமூகத் தலைவர்கள் ஆகியோரும் அடங்குவர்.

காணாமற் போன சம்பவங்கள் தொடர்பாக 65,000 வரையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார். இந்த எண்ணிக்கையானது 100,000 வரை உயர்வடையலாம் என அனைத்துலக மன்னிப்புச்சபை மதிப்பிட்டுள்ளது. சிறிலங்காவில் அரச சார்பற்ற தரப்பினராலும் இவ்வாறான கடத்தல்கள் மற்றும் பலவந்த காணாமற்போதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த காலத்தில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உண்மை, நீதி மற்றும் உறுதிப்பாட்டை வழங்குதல் போன்றன தொடர்பில் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாக சிறிலங்கா அரசாங்கத்தால் 2015 ஒக்ரோபர் மாதம் வாக்குறுதி வழங்கப்பட்டது.

பலவந்த காணாமற் போதல்களிலிருந்து அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்கான அனைத்துலக சாசனத்தில் கைச்சாத்திடுவது தொடர்பான சட்டமூலம் ஒன்று கடந்த ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. ஆனால் சிறிலங்கா குற்றவியல் நீதிமன்றில் பலவந்த காணாமற்போதலை குற்றமாக்குவதன் மூலம் இச்சாசனத்தை அமுல்படுத்துதல் தொடர்பாக இன்னமும் விவாதிக்கப்படவில்லை.

‘காணாமற் போனவர்களுக்கான அலுவலகம்’ ஒன்றை அமைத்தல் தொடர்பான சட்டமூலம் ஒன்று 2016ல் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்தச் சட்டமூலம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுடனும் சிவில் சமூகத்துடனும் ஆலோசிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டது. இதனைச் சட்டமாக்குவதற்கு சிறிலங்கா அதிபர் இன்னமும் கையொப்பம் இடவில்லை.

நீதி, உண்மை, உறுதிப்பாட்டை வழங்குதல் தொடர்பான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களுடன் ஆலோசிக்கப்பட்ட போது இது தொடர்பில் 7000 இற்கும் மேற்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் பெரும்பாலானவை காணாமற் போனவர்களின் குடும்பங்களிடமிருந்து வழங்கப்பட்டன. ஆனால் இவற்றைக் கண்டறிவதற்கும் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட செயலணியிடம் இவற்றைச் சமர்ப்பிப்பதிலும் அதிகாரிகள் பெரிதளவில் ஆர்வம் காண்பிக்கவில்லை .

வழிமூலம் – Amnesty International-Sri Lanka – Victims of disappearance cannot wait any longer for justice
மொழியாக்கம் – நித்தியபாரதி

Advertisements