புலம்பெயர் தேசத்தில் கடந்த 2009ம் ஆண்டின் பின்னர் TCC எனும் முன்னாள் புலிகளின் ஆதரவு கட்டமைப்பை இரகசியமாக சிறைப்பிடித்த இலங்கைப் புலனாய்வாளர்கள், அதன் இரண்டாம் மூன்றாம் நிலைத் தலைவர்களை பயன்படுத்தி {நந்தகோபன், இரும்பொறை} புலம்பெயர் தேசத்திலும் மற்றும் தாயகத்திலுமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பாணியில் பல பொய்யான செய்திகளை தொடர்ந்தும் கட்டவிழ்த்து வருகிறார்கள்.

மேலும் இலங்கை புலனாய்வாளர்கள் தாமே இப்படியான பொய்யான அறிக்கைகளை உருவாக்கிவிட்டு அதை புலம்பெயர் ஊடகங்கள் ஊடாகவும், தாயக ஊடகங்கள் ஊடாகவும் கட்டவிழ்த்து, விடுதலைப் புலிகளின் மக்கள் செல்வாக்கை அவர்களுக்கெதிராக திருப்பி தற்போதுவரை உறுதியாக இருந்துவரும் புலிகளின் அரசியல் ரீதியான மக்கள் பலத்தினை சிதைக்கவேண்டுமென்ற ஒரேயொரு நோக்கத்திற்காகவே அது கடந்தசில வருடங்களாக மிகக் கடுமையாக செயற்பட்டுவருகின்றது.

இந்த அடிப்படையில் அண்மைக்காலமாக இலங்கைப் புலனாய்வாளர்களால் “விடுதலைப் புலிகளின் பாணியில்” அவர்களின் சின்னம் பொறிக்கப்பட்ட போலியான அறிக்கைகளை பல்வேறு கோணங்களில் எமது மக்களை குழப்பும் வகையில் அது வெளியிட்டு வருகின்றது.

இத்தனைக்கும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர்27ம் நாளன்று மாவீரர் நாள் அறிக்கை தலைமைச் செயலகத்தால் உத்தியோக பூர்வமாக விடப்பட்ட பின்னர் அதாவது 25-03-2017 இன்றுவரை விடுதலைப் புலிகளின் எந்தவொரு உத்தியோக பூர்வ அறிக்கைகளும் அவர்களால் எந்தச்சந்தர்ப்பத்திலும் வெளியிடப்படவில்லை என்பதனை அதன் தற்போதைய உயர்மட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த உண்மையை இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

மேலும் இந்த உண்மைத் தகவல்களின் அடிப்படையில் அண்மைக்காலங்களாக புலிகளின் சின்னம்தாங்கி வெளிவந்த அறிக்கைகளும், தற்போது அதாவது தமிழக திரைப்பட “நடிகர் ரஜனிகாந்” தொடர்பாக 24-03-2017திகதியிடப்பட்டு நேற்றைய தினம் தமிழ்வின் இணையதளம் ஊடாக வெளிவந்துள்ள “விடுதலைப் புலிகளின் விசேட அணி”என்று வெளிவந்த எந்தவொரு அறிக்கைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ அறிக்கைகள் இல்லை என்பதனை எமது தாயக மக்களும்,புலம்பெயர் மக்களும் இதை தாங்கள் தெரிந்திருப்பது மிகவும் அவசியமானது.

எனவே கடந்த 2016 மாவீரர் நாளின் பின்னர் தொடர்ச்சியாக இலங்கைப் புலனாய்வாளர்களால் திட்டமிட்டு எமது மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும்வகையில் அவர்களால் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் எந்தவொரு புலிகள்சார்ந்த பொய்யான அறிக்கைகளுக்கும் “தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ செயலகம்” இதுவரை தாம் பொறுப்பேற்கவில்லை என்பதை எமது மக்கள் அனைவரும் உணர்ந்து மேலும் இதுபோன்ற பொய்யான தகவல்களை சிறிதளவும் தாங்கள் கருத்திலெடுக்காது, தொடர்ந்தும் எமது தேசிய விடுதலைக்காக நாம் அனைவரும் ஓரணியில் நின்று விழிப்புடனும், உறுதியுடனும் பிரயாணிக்கவேண்டியதே நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

-கழுகுவிழியன்-

ரஜினியை இலங்கைக்கு அழைத்து வருமாறு யாழில் ஆர்ப்பாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கண்டன போராட்டம் இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் யாழ். நல்லூரில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈழத்துக் கலைஞர்கள் எனக் குறிப்பிடப்பட்டு யாழ் .குடாநாட்டின் முக்கிய இடங்கள் உட்படப் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டியில் ரஜினியின் படம் பொறிக்கப்பட்டு “இலட்சக் கணக்கான தமிழ்மக்கள் உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றோம். வா தலைவா வா!!!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘திருமாளவா..வேல்முருகா.. ஈழத் தமிழனை வைத்துப் பிழைப்பு நடாத்தாதே!, சுயநலவாதிகளே ஈழத்தமிழனின் விடயத்தில் தலையிடாதே, திருமாளவா..வேல்முருகா.. கலைஞர்களைக் கலைஞர்களாக வாழவிடு, எமது தலைவன் எம்மைக் காணத் தடுக்க நீங்கள் யார்?, மகிந்தவிற்குக்கரங் கொடுத்த உங்களுக்குத் தலைவனைத் தடுக்க என்ன தகுதி?’ போன்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

*
லைக்கா நிறுவனம் திடீர் முடிவு! பத்துக் கோடியோடு நிபந்தனையற்ற மன்னிப்பு

பத்துக் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு லைக்கா நிறுவனம் மனு அனுப்பியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய வேல்முருகன், லைக்கா நிறுவனத்திற்கும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக லைக்கா நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் அருணாச்சலம் மனு அனுப்பியுள்ளார்.

லைக்கா நிறுவனத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் தொடர்பு எதுவும் இல்லை. இதேவேளை, இலங்கை அரசாங்கத்துடனும் எந்தத் தொடர்பும் கிடையாது.

ஆனால் தமிழக கட்சிகள் தவறான தகவலை வெளியிட்டு தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எமது நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார். எனவே 10 கோடி ரூபாய் நஷ்ஈடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிர, தனது கருத்திற்காக வேல்முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மன்னிப்பு கோரும் பேச்சுக்கே இடம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements