உலக வல்லரசுகளின் கைப்பாவை அமைப்பான ஐநா ஒரு போராடும் இனத்தை எப்படி கையாளும் என்பதில் போதிய அறிவிருந்தும் நாம் அந்த கோணத்தில் ஐநாவை அணுகவில்லை.

பிரச்சினை இங்கு அதுவல்ல. 2009 இற்கு பிறகு நீதி வேண்டி நிற்கும் ஒரு தரப்பாக நாம் எப்படி ஐநா வை அணுகினோம் என்பதுதான் இங்கு பிரச்சினையே!

ஐநாவை ஒரு குற்ற தரப்பாக நாம் அணுகத் தவறிவிட்டோம்.

ஈழத்தில் நடத்தப்பட்டது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான, அமைதிக்கெதிரான குற்றம். இதுவே இன அழிப்பாக மாறியது. இது ஐநாவின் பூரண அறிவுடன் நடத்தப்பட்டது.

எனவே ஐநாவை குற்றவாளியாக்குவதனூடாகத்தான் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என்ற கள யதார்த்தத்தை – நிலவரத்தை நாம் மறந்து விட்டோம்

விளைவு, இன்று மீண்டும் ஜெனிவா களத்தை இழந்து வீடு திரும்புகிறது தமிழினம்.

எஞ்சியுள்ள தமிழர்களையும் அழிக்க இன அழிப்பு அரசிற்கு 2 ஆண்டு கால அவகாசம் .

Parani Krishnarajani


ஐக்கிய நாடுகள் சபைக்கு விடுதலைப்புலிகள் மனு ஆபத்தான பாதை

பனிமலர் பங்குனி 1993 இதழில் வெளியான சிறு கட்டுரை காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.

“தமிழ்த்தலைவர்களில் ஒருவரான சதாசிவம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்களான ஒன்பது பேரும் இந்து மகா சமுத்திரத்தில் மரணமடைவதற்கு இந்திய அரசாங்கம் காரணமாக இருந்தது” இக்குற்றத்தை விசாரிக்க “ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்துக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபை, விசாரணை மன்றமாகச் செயற்படக்கூடிய விசேட குழு ஒன்றினை அமைக்குமாறு ” தமிழீழ மக்களின் சார்பில் விடுதலைப்புலிகள் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையைக் கோரியுள்ளது

வளைகுடா யுத்தம், சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி ஆகிய இரு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் சர்வதேசிய அரசியற் சூழ்நிலை மாறிவிட்டது. இதற்கு முன் உலகைப்பங்கு போட்டுக்கொள்ள போட்டியிடும் இரு ஏகாதிபத்திய வல்லரசுகளாக அமெரிக்காவும் ரஷ்யாவும் இருந்தன. இவற்றின் தலைமையில் அரசியல் பொருளாதார இராணுவக் கூட்டணிகள் இருந்தன. இவ்வாறு உலகம் இரு ஏகாதிபத்திய முகாம்களாகப் பிளவுண்டிருந்தது.

இம்முகாம்களுக்கிடையில் எழும் பிணக்குகளின் மையமாக ஐ நா சபை விளங்கியது. உறுப்புநாடுகளின் பொருளாதார வலிமை அதற்கமையக் கிடைக்கும் வாக்குப் பலம் ஐ. நா சபையின் தீர்மானங்களைத் தீர்மானிப்பதாயிருந்தது.

இன்று நிலைமை மாறிவிட்டது. உலக மேலாதிக்கத்திற்காக போட்டியிட்டுக் கொண்டிருந்த இரு மேல்நிலை வல்லரசுகளின் தலைமையிலான இரு ஏகாதிபத்திய கூட்டணிகளில் சோவியத் சமூக ஏகாதிபத்திய அணி வீழ்ச்சியடைந்து விட்டது. இன்று சர்வதேச அரசியல் அரங்கில் பிரதான சக்திகளின் சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஜெர்மன் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய அரசுகள் ஏற்க மறுக்கின்றன. ஏகாதிபத்திய கூட்டணிகள் புதிதாக உருவாகும் சூழ்நிலைமையையும் உலகம் எதிர் கொண்டிருக்கின்றது. ஆகையால் இன்று உலகம் மாறும் நிலையிலுள்ள ஒரு கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது.

இக்காலப்பகுதியின் குணாம்சங்களிலொன்று அமெரிக்காவின் தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் ஐ. நா சபையை ஏகபோக முதலாளித்துவத்தின் அரசியல் அடக்குமுறைக்
கருவியாகப் பயன்படுத்துவதாகும்.

ஈராக்கிலும் யூகோஸ்லாவியாவிலும், சோமாலியாவிலும் இதனையே காண்கின்றோம் . இன்று அமெரிக்காவுக்கும் ஐ்நா சபைக்கும் இடையேயான உறவு “ஐ. நா சபை வரும் முன்னால் – அமெரிக்கப்படை வரும் பின்னால்” என்பதாக உள்ளது.

மறுபுறம் வளைகுடா யுத்தத்தில் இருந்து இன்றுவரை உலகின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதன் ஒரு பகுதியாக இந்தியாவை தனது ஆதிக்கத்துக்கு உட்படுத்த அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகளுக்கெதிராக இந்திய ஆளும் வர்க்கம் தனது சுண்டு விரலைத் தானும் அசைக்கவில்லை. மாறாக ஈராக் யுத்தத்தில் ஈடுபட்ட அமெரிக்கப் போர்விமானங்களுக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பியது.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படைகளுக்கு இடமளித்துள்ளது. IMF , உலகவங்கி ஆணைக்கு கட்டுப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து நிர்வாணமாக நிற்கின்றது.

தெற்கு ஆசியாவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கர்ணாஜி அறக்கட்டளையைச் சேர்ந்த அமெரிக்க அறிஞர்கள் வற்புறுத்துகின்றார்கள்.முன்நிபந்தனை விதிக்காமல் தெற்கு ஆசியாவில் இந்தியாவுக்கு முதன்மை அளிக்கக் கோருகின்றார்கள்.இந்தியாவையும், சீனாவையும் சமனாக நடத்த வேண்டும். பாகிஸ்தானுடனான இராணுவ உதவி ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும். இந்தியாவுக்கான கடனின் அளவை அதிகரிக்க வேண்டும் எனக் கோருகின்றார்கள்.

இந்த ” தென்னாசியாவின் முக்கியத்துவம்என்பது என்ன? இப்பிராத்தியத்தின் ஏகாதிபத்திய ஏஜெண்டாக இருந்து, பிராந்திய நாடுகளின் விடுதலைக்கும் ஜனநாயகத்துக்குமான இயக்கங்களை நசுக்கி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது தானே. இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ” இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவ உறவு தென்னாசியாவின் பதற்ற நிலைக்கு காரணமான சக்திகள் என அமெரிக்கா கருதுகின்றவற்றை அகற்ற உதவும்.இதன் மூலம் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் நன்மையடையும்.” எனக் கூறியிருப்பதும் காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யா உட்பட தனது கூட்டணி நாடுகள் தலையிடல் கூடாது என அமெரிக்கா ஆணையிட்டிருப்பதும் இதையே காட்டுகின்றன.

எனவே, இன்றைய சர்வதேசியச் சூழ்நிலையில் உலக மேலாதிக்கத்துக்கான போட்டியில் அமெரிக்கா தனது ஏகபோகத்தை -” புதிய உலக ஒடுக்குமுறையின் கருவியாக ஐ நா சபையிருப்பதையும், தென்னாசியாவின் நாடுகள் மீதான நவீன காலனியாதிக்கத்துக்கு இந்திய ஆளும் வர்க்கத்தை காவலாளியாக கருதுவதையும் காண்கின்றோம்.

இச்சூழ்நிலையில் ஏகாதிபத்திய மற்றும் விஸ்தரிப்புவாத நலன்கள் காரணமாக , தமிழீழப் போராட்டத்தை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டி நிற்கும் இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கும் அநீதிகளுக்கும் , விடுதலைப்புலிகள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கும் ஐ நா சபையிடமிருந்து நீதி கிடைக்கும் என எதிர் பார்க்க முடியுமா? இது ஐ நா சபை மீது தமிழ்மக்களுக்கு தவறான நம்பிக்கையை ஏற்படுத்துவது ஆகாதா?

“இந்திய மத்தியஸ்துவத்தை நம்பி பட்டபாடு போதாதா?

இன்னொரு ஐ. நா மத்தியஸ்துவம் பற்றிப்பேசி இரத்தத்தால் விலை கொடுக்கப் போகிறோமா?

“தமிழீழ மக்கள் தமது முறைப்பாடுகளை எடுத்துக்கூற ஐ நா சபையைத் தவிர வேறு ஸ்தாபனம் எதுவும் இல்லை ” என்கிறார்கள் விடுதலைப்புலிகள்.
இது எதிரிகளுக்குடையிலான முரண்பாட்டை கணக்கில் எடுத்துக் கொண்டு போராடுவதற்குப் பதிலாக அவர்களைச் சார்ந்து நின்று போராடுவது என்பதைக் குறிக்கின்றது.

அதே நேரத்தில் “வேறு ஸ்தாபனம் எதுவும் இல்லை” என்பது உலகெங்கும் தமது விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்படுகின்ற மக்களையும் அவர்களுக்கு தலைமை தாங்கும் ஸ்தாபனங்களையும் நிராகரிக்கின்றது.

இணைத்துப் பார்த்தால் , விடுதலைப் போராட்டத்துக்கு நேரடியாக உதவும் சக்தியாக அல்ல, மாறாக, எதிரிகளுக்கிடையிலான முரண்பாடு மறைமுகமாக மட்டுமே உதவமுடியும். அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர அவற்றைச் சார்ந்து நின்று போராடி விடுதலையை வென்றெடுக்க முடியாது.

விடுதலைப்புலிகள் அமைப்பு இதுவரையிலும் எதிரிகளுக்குப் பணிந்து தமிழீழ இலட்சியத்தை விட்டுக் கொடுத்து விடவில்லை என்றாலும்கூட அவர்கள் கடைப்பிடிக்கும் மேற்கண்ட பாதை அந்த இலட்சியத்தை அடைவதற்குப் பொருத்தமற்றதாக- எதிரானதாக இருக்கின்றது.

ஆசிய , ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளெங்கும் தேசியவிடுதலைப்போராட்டங்கள் நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றன.

இந்நாட்டரசுகளின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சாதிகாரத் தன்மை காரணமாகவும்,உலகை மறுபங்கீடு செய்து கொள்வதற்காக ஏகாதிபத்திய நாடுகள் பின்பற்றும் தந்திரங்கள் காரணமாகவும் இப்பிராந்திய நாடுகளில் போராட்டங்கள் மேன்மேலும் தீவிரமடையும்.

ஏகாதிபத்திய ஒடுக்குமுறையையும் , உள்நாட்டுக் கொடுங்கோண்மையையும் சுட்டெரிக்கும் வல்லமை ஒடுக்கப்படும் தேசங்களின் மக்களுக்கே உண்டு. ஈழத்தமிழ்மக்கள் தங்கள் “முறையீடுகளை” இந்த மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.தமது நட்புறவை இவர்களோடு வளர்த்துக் கொள்ளவேண்டும். தமது நம்பிக்கையை தம்மீதும் இம்மக்கள் மீதும் வைக்கவேண்டும். ஐக்கியநாடுகள் சபையிடம் அல்ல. ஈழத்தமிழினத்தின் தேவை வெறும் பிரிவினை அல்ல. அவர்களுக்கத் தேவை விடுதலை பெற்ற மக்கள் குடியரசு. இதை அடைவது ஏகாதிபத்தியங்களை எதிர்த்த போராட்டங்களில்தான் அடங்கியுள்ளது.

——————-

Advertisements