உலகில் அனைத்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையும் பொதுவான வர்ணனைச் சொற்பதம் கொண்டு மேலை நாடுகளால் அழைக்கப்படுகிறது, அது தான் மென்மையான அரசுகள் (Fragile States ). தமது சொந்த மக்களுக்கே அடிப்படை அளவிலான சேவையையும் பாதுகாப்பையும் கொடுக்க கூடிய வலிமையற்ற அரசுகளாக அவை காணப்படுவதாலேயே இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.

வெறும் வார்த்தை அளவில் சர்வதேச அரங்கில் தத்தமது நாடுகளின் அரச வலிமை குறித்தும், அரசியல் நிறுவனங்களின் உறுதித்தன்மை குறித்தும் அபிவிருத்தி அடைந்த வரும் நாடுகளின் அரச ஊழியர்கள் பேசி கொள்கின்றனர்.

ஆனால் கட்டமைப்பு ரீதியாக அவர்களின் பலவீனமான நிலையை மேற்கு நாடுகளின் இராசதந்திரிகள் நன்கு தெரிந்து கொண்டுள்ளனர்.சர்வதேச ஆட்சி அணிகளின் சுயநலன்கள் கருதி அவற்றைக் குறித்து வெளிப்படையாக பேசாது விட்டு விடுவது இராசதந்திர பண்பாக பார்க்கப்படுகிறது.

மனிதாபிமான தலையீடு என்பது வல்லரசுகள் நலன்களின் அடிப்படையை மையமாக கொண்டது. குறிப்பாக மேலைத்தேய சர்வதேச அரசியல் தலைமைத்துவத்தை பேணும் போக்கை கொண்டதாக இருப்பது பொதுப்பண்பாகும், என்பது கடந்த கட்டுரையில் காணப்பட்டது

மனிதாபிமான தலையீடு போலவே வோஷிங்டன் கருத்தொற்றுமை உடன் பாடும் மேலைத்தேய தலைமைத்துவத்தை மையப்படுத்தியதாகும். சிறிய நாடுகள் மீது தாராள பொருளாதார அரசியலை உள்நாட்டு பொருளாதார கொள்கையை கொண்டிருக்கும் படியான அழுத்தம் செலுத்தும் கருவியாக உபயோகிக்கப்படுகிறது.

இந்த பொருளாதார தலையீடு குறித்து அறிந்து கொள்வதன் முக்கியத்துவம் என்னவெனில், மனிதாபிமான தலையீட்டை தமது பிரதான இராசதந்திர கருவியாக பயன்படுத்தும் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபைக்கு என வருடா வருடம் பத்து பில்லியன் டொலர் பணத்தை செலவு செய்து வருகிறது. ஆனால் மனித உரிமை சபையின் செயற்பாடுகளில் அமெரிக்க சார்பு நாடான இஸ்ரேலுக்கு எதிராக கடும் போக்கை கொண்டிருப்பதை எதிர்த்து வருகிறது. மேலும் மனித உரிமைக்கு மேலை நாடுகளுக்கு இணையாக மதிப்பளிக்காத சீனா, எகிப்து, சவுதி அராபியா போன்ற நாடுகளும் உறுப்பு நாடுகளாக இருப்பது குறித்தும் அதிருப்தி கொண்டுள்ளது.

இத்தகைய போக்கு மனித உரிமை சபையால் தொடர்ச்சியாக பேணப்படும் இடத்து தாம் மனித உரிமை சபையிலிருந்து விலகி கொள்ளப் போவதாக மிரட்டி வருகிறது

புதிய அமெரிக்க தலைமைத்துவத்தை சுயநல பொருள் முதல்வாத போக்கை கொண்ட தற்பெருமைத் தேசியவாத தலைமைத்துவமாக அமெரிக்க பத்திரிகைகளே வர்ணித்து வருகின்றன. இந்த வகையில் பொருளாதாயத்தை மையமாக கொண்ட திட்டங்களே அதிக அளவில் புதிய டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகையில் ஏற்கனவே கையாளப்பட்ட வோஷிங்டன் கருத்தொற்றுமை உடன்பாடு குறித்து அறிந்து கொள்வது அவசியமாகப் படுகிறது. பத்து பிரதான கொள்கை உடன்பாட்டு அம்சங்கள் கொண்ட வோஷிங்டன் கருத்தொற்றுமை உடன்பாடு

  • அரச நிதி செலவுகளை கட்டுப்படுத்தல்
  • பொது செலவீனங்களை புதிய திருப்பத்திற்கு உள்ளாக்குதல், பொருளாதார மீள்வருவாயை தரக்கூடிய வகையில் முதலீடுகள் செய்தல். உதாரணமாக நல்வாழ்வு கொடுப்பனவுகளுக்கு பதிலாக சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை கல்வி, அரச கட்டமைப்புகளில் அதிக கவனம் செலுத்த பரிந்துரைத்தல்.
  • வரிச்சீர்திருத்தம்
  • வருமான வட்டியை அரசாங்கம் தீர்மானிப்பதிலும் பார்க்க சந்தையே தீர்மானிக்க வைத்தல்.
  • நாணய மாற்று விகிதத்தை உலக பொருளாதாரத்தில் மிதக்கவிடல்.
  • தாராள வர்த்தக முறையை கொண்டிருத்தல். அதாவது சுங்கவரியை குறைத்தல், வர்த்தக தடைகளை நீக்குதல்.
  • வெளிநாட்டு நேரடி முதலீடுகளை தாராள மயமாக்கல்.
  • உள்நாட்டு வர்த்தகத்தில் கட்டுப்பாடுகளை நீக்கல்.
  • தனியார் மயப்படுத்தல்
  • சொத்துரிமையை பாதுகாத்தல்

என பத்து விதமான அம்சங்களை உள்ளடக்கிய இந்த பொருளாதார கொள்கையை John Williamson 1989என்பவர் முதலில் வகுத்திருந்தார்.

தென் அமெரிக்க நாடுகளை மையப்படுத்தி இந்த கொள்கை ஆரம்பிக்கப்பட்டது. தனியார் மயமாக்கலை அதிகரித்த அதேவேளை அரச தலையீடுகளையும் படிப்படியாக குறைத்து வந்தது.  இந்த வரட்டுத்தனமான முதலாளித்துவ பொருளாதார பரிந்துரையை வலியுறுத்துவதன் மூலம் மக்கள் மீதான அரசுகளின் ஆளுமை குறைவது கருத்தில் கொள்ளப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டது.

மேலும் அதே காலப்பபுகுதியில் தனியார் அரச கூட்டு முதலீட்டு நடவடிக்கைகள் சீனா போன்ற நாடுகளில் பெரு வெற்றியை கொடுத்திருந்தது. இதனால் 1999ஆம் ஆண்டிற்கு பின்பு திருத்தி அமைக்கப்பட்ட கருத்தொற்றுமை உடன்பாடுகள் சிறிய அரசுகளை உதவி வழங்கும் நாடுகள் மேற்பார்வை செய்வதற்கும் தமது மூலோபாய தேவைகளுக்கு ஏற்றாற்போல வழிநடத்தவதற்கும் ஏதுவான வகையில் உருவாக்கப்பட்டது.

இதிலிருந்து தற்போதைய சர்வதேச அரசியல் நிலைமையிற்கு எற்ப அரசு என்னும் நிறுவனம் சர்வதேச ஆட்சி என்ற வகையில் முன்பு இருந்ததை விட மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பொருளாதார தலையீடுகளின் ஊடாக சிறிய அரசுகளை கையாளும் பொறிமுறைகள் வகுக்கபப்பட்டாலும், சிறிய அரசுகளின் உண்மைப் பற்றிலும் நம்பிக்கையிலும் பெரும் குறைகள் காணப்படுகிறது.

இதன் பொருட்டு சிறிய நாடுகள் மீது மேலைத்தேய யதார்த்தவாதத்தை நிலை நிறுத்த பொருளாதார தலையீட்டுடன் மனிதாபிமான தலையீடும் தேவைப்படுவதாக மேலைத்தேய யதார்த்தவாத கோட்பாட்டாளர்களின் பார்வை உள்ளது.

அதேவேளை நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கட்டுரை ஒன்றில் அதிபர் ட்ரம்ப் அவர்கள் அமெரிக்காவின் அதிகார தோரணையை தேய்வடைய செய்வது குறித்து பயம் கொண்டுள்ளதாக கூறி இருந்தது. அந்த கட்டுரையிலே அண்மையில் இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட வருடாந்த அறிக்கையில் வழமை போல மற்றைய நாடுகளை கடுமையாக தாக்கி இருந்தது. ஈரான் சமய சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் கட்டுபடுத்துவது குறித்தும், ரஷ்யா சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் எரித்திரியாவில் இடம்பெறும் வதைகள் குறித்தும் பல்கேரியாவில் இடம் பெறும் இடம்பெயர் மக்களுக்கு எதிரான தாக்குதல்களையும் மற்றும் பல நாடுகளையும் கண்டித்திருந்தது.

ஆனால் இம்முறை தவறவிடப்பட்டிருப்பது என்னவெனில், இராஜாங்கச் செயலரின் பத்திரிகையாளர் மகாநாடு ஆகும். கடந்த கால அரசுகள் தமது மனித உரிமை அறிக்கைகளை மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் பண்பு இந்த அரசிடம் இருக்கவில்லை. புதிய இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லசன் அவர்கள் பத்திரிகையாளர் மாநாட்டிற்கு சமூகம் தராமையானது, அமெரிக்காவின் சர்வதேச கொள்கையில் காட்டும் அதிகார தோரணை கொண்ட பண்பாடு அற்றுப் போயிருப்பதாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச அரங்கில் சனநாயக விதிகளை மேன்மைப்படுத்தும் தன்மையும் அதன் அடிப்படை பெறுமானமும் பாதுகாப்பும் அருகிப் போவதை உணர்வதாக நியூயோர்க் ரைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.

இந்த உணர்வு குறித்து முன்னாள் இராஜதந்திரிகள், பேராசிரியர்கள், மனித உரிமை சட்டத்தரணிகள், சர்வதேச அரசியல்வாதிகள் ஆகியோருடனான கலந்துரையாடலில்  வெளியிடப்பட்ட கருத்துகளின் சாரமாக அதிபர் ட்ரம்ப் அவர்களின் தலைமையில் அமெரிக்கா உலக அரசியல் பாத்திரத்தை இழந்து வருவது மட்டுமல்லாது ஒரு உதாரண தேசமாக இருக்கும் தரத்தையும் இழந்து வருகிறது எனவும் கூறப்பட்டது.

அதேவேளை வோஷிங்டன் எக்சாமினர் என்ற பத்திரிகையின் செய்திக்கட்டுரை ஒன்றில் பலம் பொருந்திய நாடுகளாகும் ஆர்வம் கொண்ட ரஷ்ய, சீன தன்னார்வ நடவடிக்கைகள் ஒபாமா அரசாங்கத்தை பரீட்சித்துப் பார்த்தன. இந்த நிலை மேலும் அதிபர் ட்ரம்ப் காலத்திலும் தொடரும் நிலை உள்ளது. ஆனால் ட்ரம்ப் அவர்கள் சர்வதேச அரசியலில் கவனம் செலுத்தாத இடத்தில் இந்த சவாலை அதிபர் அவர்களுக்கு விட்டு வைக்காது.

ஒரு சில காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு தமது கைகளிலே எடுத்து கையாள்வதாக குறிப்பிடப்பட்டதுடன், சீன ரஷ்ய புவிசார் மேலாண்மைக்கான சாத்தியகூறுகளை கையாளும் பொருட்டு கிழக்கைரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு சென்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் சென்ற நாடுகளிலே சிறிலங்காவும் ஒன்று ஆகும். (இது குறித்த செய்தியும் புதினப்பலகையிலே ஏற்கனவே வந்திருந்ததை காணக் கூடியதாக இருந்தது.) இந்த பயணத்திற்கு தலைமை தாங்கி சென்ற ல்லினோய் மாநில காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் ரொஸ்கம் என்பவர் குறிப்பிட்ட விடயங்களில் அடிப்படையில் யாப்பு மாற்றம் கொண்டு வர வேண்டிய தேவை குறித்தும்,  அதிகாரப்பகிர்வினை சிறிலங்கா தவிர்க்க முடியாது என்றும் கூறி இருப்பது முக்கியமானதாகும்.

ரொஸ்காம் அவர்களின் கருத்தில் சிறிலங்கா அதிகாரப் பரவலாக்கல்களில் இருந்து விலக முடியாது அதிகாரப் பரவலாக்கல் செய்து கொள்ளப்படாது போனால் உடனடி யுத்த நிலை தோன்றாது போனாலும், யுத்த கள நிலைகளுக்கு முன்பிருந்த அதே காலப்பகுதிக்குள் மீண்டும் பிரவேசிக்க வேண்டிய தேவை ஏற்படும் என்று கூறி உள்ளது குறிப்பிட்டிருந்தது. இங்கே தமிழ் மக்களின் பலம் தொக்கி நிற்கிறது.

தமிழ் அரசியல் தலைவர்கள் முடிந்த அதிகாரத்தை தாருங்கள் என்பது போன்ற கொழும்புச் சம்பளம் பெற்று கொள்ளும் சிந்தனைக்குள் இருந்து பார்ப்பது, தமிழ் மக்களை மீண்டும் அடிமைகளாக்க எண்ணுவதற்கு சமனாகும்.

இன்று சர்வதேச அரசியலில், அண்மைய தேர்தலின் பின்பு அமெரிக்காவில் இடம்பெற்றிருக்கும் புதிய திருப்ப அரசியல் சுயநல பொருள்முதல்வாத வரட்டு தேசியவாதத்தின் கைகளில் சிக்கி உள்ளது என்பது ஆய்வாளர்கள் பார்வை.

இந்த நிலையில் இதர வல்லரசுகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளும் தன்மையை கொண்டுள்ளன. இதனால் உலக அதிகாரத்தில் சவால் விடும் வல்லரசுகளையும், அரசசார்பு நிறுவனங்களையும் கண்காணிப்பதில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும் கொள்கை ஆய்வாளர்களும் ஏற்கனவே உள்ள யதார்த்தவாத பொறிமுறைகள் அடிப்படையில் செயலாற்றி வருகிண்றன.

தெற்காசியப் பகுதியில் தமிழர்களின் பலம் யதார்த்தவாத சர்வதேச அரசியல் முறைமையை நிலை நிறுத்துவதில் எவ்வளவு முக்கிய பங்கு வகித்து வருகிறது என்பதை அரசியல் தலைமைகள் உணர்ந்தால் தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு குறித்து வியூகங்கள் வகுப்பதற்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன. சிறிலங்காவில் பெரும்பான்மை கொந்தளித்து விடும் என்று சிந்தித்தால் தமிழ் பொங்க முடியாத நிலையே ஏற்படும்

மேலிருந்து கீழான அதிகார பொறிமுறையை உருவாக்குதல் என்ற வகையில் வலிய நாடுகள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் பார்கின்றன. மென்மையான பலவீனமான அரசுகள் என்ற பெயரில் வறுமை ஒழிப்பு திட்டம், பொருளாதார மனிதாபிமான உதவி அபிவிருத்தியின் தனியுரிமை என் பல்வேறு பெயர்களில் தாராள பொருளாதார கொள்கையை ஏற்று செல்லும் நாடுகளின் அரசுகளை திடப்படுத்துதல் வல்லரசுகளுக்கு முக்கியமானதாகும்.

இது அரசுகளின் மீது மக்கள் தங்கி இருப்பதை உறுதிப்படுத்தும் பணி என்பது முக்கியமானதாகும். சுகாதாரம், கல்வி, கிராம அபிவிருத்தி, வீதி கட்டமைப்புகள், சக்திவளம் என்பன அரசுகளுடாக செயற்படுத்தப்படுகிறது. இதற்கு உதாரணமாக மிலேனியம் சவால் ஒத்துழைப்பு திட்டத்தின் ஊடான செயற்பாடுகளை குறிப்பிடலாம். இவை நிச்சயமாக மக்களுக்கு தேவையானவையே. ஆகவே பொருளாதார பரம்பல் என்ற வகையில் ஏற்று கொள்ளத்தக்கதும் கூட. ஆனால் இது தாயக கோட்பாட்டிற்கு ஒத்திசைவானவையாக தெரியவில்லை

பலவீனமான அரசை கொண்டுள்ள சமுதாயம் ஒட்டுமொத்த சனத்தொகையில் சட்ட அங்கீகாரம் இல்லாத, ஆளும் உரிமை அற்ற நிலையை கொண்டிருக்கிறது. இது அந்த சமுதாயத்தை  ஆயுதப் போராட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய அபாய சூழ்நிலைகள் உள்ளன. இது பல்வேறு சமூக ஒழுங்கீனங்களை உருவாக்குவதுடன் பின் தங்கல்களையும் கொண்டு வருகிறது. அதனால் அபிவிருத்தி மூலம் அரசுகளை திடப்படுத்துவதற்கான முதல் காரணியாகிறது.

கீழிருந்து மேலான அரசியல் பொறி முறைகளை உருவாக்குவதன் மூலம். அரசுகளை சனநாயக விதிகளின் பால் ஒழுக வைப்பதுடன், வாக்குரிமை, நிர்வாக செயற்பாடுகள் ஆகியவற்றை கீழிருந்து மேலாக அரசை நோக்கிய மக்களை உருவாக்க முடிவதுடன் சமுதாயங்களுக்கு நம்பிக்கையை ஊட்ட முடியும். இந்த வகையில் சர்வதேச அரசியல் ஆட்சிக் கூட்டணிக்குள் சிறிய அரசுகளை வைத்திருப்பதன் மூலம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பூகோள நலன்களை வல்லரசுகள் பெற்று கொள்ளக் கூடியதான நம்பிக்கை எழுந்துள்ளது.

சர்வதேசத்தில் தற்காலிக அரசியல் அதிகார தளம்பல் நிலை எழுந்துள்ள போதிலும் சிறிலங்காவில் தாராள பொருளாதார கொள்கை கொண்ட திடமான அரசை அமைப்பதில் மேலைத்தேய வல்லரசுகள் முனைந்து நிற்கின்றன. சிறிலங்காவின் தேவைக்கு ஏற்ற வகையில் இணங்கி செல்லவும் தயாராகவும் உள்ளன. ஆனால் சிறிலங்காவின் சமூக வேறுபாட்டை தமது பலமாகவே பார்க்கின்றன. தமிழ் மக்களிடம் அதிகாரம் பரவலாக்கப்படுவதிலிருந்து சிறிலங்கா தப்ப முடியாது. ஏனெனில் தமிழர்களின் கேள்வி நியாயமானது.

இப்பொழுது கொழும்பு கொடுப்பதை யாழ்ப்பாணம் ஏற்று கொள்ளபோகிறதா அல்லது துணிவுடன் அதிகாரங்களை கேட்கப் போகிறதா என்பது முக்கியமானதாகும்.

இந்த கட்டுரை எழுதி முடிந்த தறுவாயில் பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து பிரிந்தால் ஸ்கொட்லாந்து நிலை என்ன என்பது குறித்த விவாதத்தில் ஸ்கொட்லாந்து முதல் மந்திரி நிக்கோலாஸ்ரூஜஒன்  அவர்களின் பேச்சை கவனத்தில் கொள்வது முக்கியமானதாக படுகிறது.

2014 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதா- இல்லையா என்ற கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் சேர்ந்திருப்பது என்ற தெரிவு செய்தனர். இப்பொழுது பிரித்தானியா ஐரோப்பாவிலிருந்து பிரிவதாக முடிவாகியதன்பால், ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் பிரித்தானியாவுடன் இணைந்து இருப்பதா அல்லது பிரிதானியாவிலிருந்து பிரிந்து ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து கொள்வதா என்பது குறித்து முடிவை எடுக்கும் பொறுப்பை ஸ்கொட்லாந்து மக்கள் கையிலேயே விட்டு விடுவதாக தீர்மானித்திருக்கிறார்.

ஸ்கொட்லாந்து தேசிய கட்சி பெரும்பான்மை அரசாக இருந்த போதிலும் எதிர்காலம் குறித்த முடிவை எடுப்பதற்கு அரசியல்வாதியாக என்னால் முடியாது. அது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் ஒரு கருத்து கணிப்பு வாக்கெடுப்பிற்கு கேட்டு கொண்டுள்ளார் என்பது முக்கியமானதாகும்.

பிரித்தானியா இதனை மறுத்திருக்கிறது. தொடரும் விவாதங்கள்  மேலைத்தேய நாடுகள் பிரிவினையை எவ்வாறு கையாளுகின்றன என்பதற்கு நல்ல உதாரணங்களாக அமைய உள்ளன.  இங்கே தமிழ் அரசியல் தலைவர்களுக்கு நிச்சயமாக முக்கிய செய்தி ஒன்று இருப்பதை காண கூடியதாக உள்ளது.

– லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

கட்டுரையாளருக்கு கருத்துக்களை நேரடியாக அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி – loganparamasamy@yahoo.co.uk

Advertisements