ஒரு இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, அந்த இனத்தில் எஞ்சி இருக்கும் சாட்சியங்களில் முக்கியமானவர்கள் அவர்கள், இறுதி யுத்தத்துக்கு முன்பே அதாவது சமாதான உடன்படிக்கை சாவு நோக்கி பயணிக்கும்போதே அவர்கள் அழுவதற்கு தொடங்கி விட்டார்கள், சிலர் சமாதான உடன்படிக்கைக்கு முன்பிருந்து கண்ணீர் சிந்தி வருகின்றனர். அவர்கள் தான் காணாமல் போனவர்களின் உறவினர்கள்.

போராட்டமே வாழ்க்கையாகிபோன அவர்கள் சந்திக்காத அரசியல் வாதிகள் இல்லை, சந்திக்காத அதிகாரிகள் இல்லை, சந்திக்காத மனித உரிமை அமைப்புக்கள் இல்லை, கொடுக்காத மனுக்கள் இல்லை வழங்காத சாட்சியங்கள் இல்லை, செய்யாத போராட்டங்கள் இல்லை, ஆயினும் அவர்களின் கண்ணீரை யாரும் உளமார கண்டுகொள்ளவில்லை, அழுகுரல்களை உருக்கமாக இதுவரை செவிமடுக்கவில்லை. ஆயினும் அவர்கள் நம்பிக்கையை கைவிடவில்லை இப்பத்தி எழுதும் கணத்திலும் அவர்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பயங்கரவாத அரசான சிறிலங்காவின் இராணுவ இயந்திரத்தால் கடத்தப்பட்ட இருவரின் கதை இது.

சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு அவர்கள் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டார்கள், ஆம் 8 . 1 .2007 அன்று தைப்பொங்கலுக்கு சாமான் வாங்குவதற்காக உதயகுமாரனும் , பேரின்பராசாவும் அவர்களின் ஊரான கல்மடு ஏத்தனில் இருந்து உதயனின் LML மோட்டச்சைக்கிளில் வவுனியா நகருக்கு போகிறார்கள். தங்கள் வேலைகளை முடித்துவிட்டு மதியம் போல திரும்பி வருகிறார்கள். அப்போது தான் அந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. அந்த கல்மடு, கிடாச்சூரி , பம்பைமடு மண்ணில் குடிகொண்டிருந்த இராணுவம் , மற்றும் புலனாய்வு துறையினர் வன்புணர்ந்து கொலை செய்வதோடு பலரை சுட்டும் , பலரை கடத்திக்கொண்டும் இருந்த பயங்கரமான நாட்கள் அவை. அந்த அரக்கர்களின் பயங்கரத்திற்குள் இவர்களும் அகப்பட்டுக்கொண்டனர்.

இருவரும் கடத்தப்பட்ட விதம்,

செய்மதிப்படத்தில் காட்டப்படும் பிரதேசம் தாண்டிக்குளம் – பாலம்பிட்டி வீதியில் அமைந்திருக்கும் ஈச்சங்குளத்தினதும் கல்மடு ஏத்தனினதும் ஒரு பகுதி பிரதேசம். A என்று குறிப்பது ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு அருகில் உள்ள சந்தி , B ஈச்சங்குளத்துக்கும் ஏத்தனுக்கும் இடைப்பட்ட பகுதி வழமையாக இராணுவம் காவலுக்கு நிற்கும் இடம் , C ஏத்தன் பிரதேசம் தொடங்குற இடம்.

2007 ஆண்டு கல்மடுவோடு தாண்டிக்குளம், பாலம்பிட்டி பாதை நிறுத்தப்பட்டிருந்தது அதற்கு அங்கால போக முடியாது இராணுவ உயர்பாதுகாப்பு வலயம். அதனால் அந்த வீதியில் அவ்வளவு சன நடமாட்டம் இல்லை.

உதயனும், பேரின்பராசாவும் மதியம் போல அந்த வீதியால் வருகிறார்கள் அப்போது A என்று குறிப்பிடப்படுகிற ஈச்சங்குளம் சந்தியில் இராணுவம் திடீர் என்று செக் பண்ணிக்கொண்டு இருந்திருக்கிறார்கள், அதே சமயத்தில் கல்மடு பேருந்து வந்திருக்கிறது , பேருந்தையும் அதால வந்த நபர்களையும் மறித்து விட்டு உதயனும் பேரின்பராசாவும் வந்த மோட்டார் வாகனத்தை செல்வதற்கு இராணுவம் அனுமதித்திருக்கிறது.

அவர்கள் வருகிற வழியில் B என்கிற இடைப்பட்ட இடத்தில் இராணுவம் அவர்களை நிறுத்தி இருக்கிறது, அதனை C என்னும் இடத்தில் வைத்து அந்த வழியால் மாட்டை தண்ணிக்காக அவிட்டுக்கொண்டுபோன உதயனின் சகோதரி கண்ணால் நேரில் பாத்திருக்கிறார் . வழமையாக அதில் நிற்கும் இராணுவம் கோல்ட் லீப் பெட்டி வாங்குறதுக்காக அதால வார ஆட்களை மறிக்கிறது, அதற்காக தான் தன் சகோதரனை மறிக்கிறார்கள் என்று அவர் மாட்டை கொண்டு வீட்டுக்கு போய் விட்டார்.

அதன் பின்பு உதயனும், பேரின்பராசாவும் வீட்டுக்கு வரவே இல்லை, இன்று வரையிலும் வரவில்லை

அவர்கள் இருக்கிறார்கள்,

அண்மைய காலங்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ரகசிய வதை முகாம்கள் தொடர்பாக அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இவை ஊகங்கள் என்பதை தாண்டி அவ்வப்போது அடர்ந்த காடுகளுக்குள் இருக்கும் ரகசிய முகாம்கள் தொடர்பாக சாட்சியங்கள் ரகசியமாக வெளிவந்த வண்ணம் தான் உள்ளது.

இராணுவத்தால் நடாத்தப்படும் மிகப்பெரும் பண்ணைகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொத்தடிமைகளாக நடாத்தப்படுவதற்கான ஆதாரமாகவே உதயன் தொடர்பான தகவல் அமைந்திருக்கிறது. கடத்தப்பட்ட இருவரும் கொல்லப்படவில்லை , நீண்ட நாட்கள் வவுனியா ஜோசெப் இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்திருக்கின்றனர். இத்தகவல் அன்று அவர்கள் கடத்தப்பட்ட சூழலில் வவுனியாவின் மிக முக்கியமான புலனாய்வு துறை நபரின் ஊடக வெளி வந்திருந்தது.

(இயக்க கட்டுப்பாட்டுக்குள் கல்மடு படிவம் மூன்று இருக்கும் போது ஒரு சிங்கள குடும்பம் அங்கு வசித்து வந்தது அவர்களில் ஒருவர் விடுதலைப்புலிகள் உறுப்பினராகவும் இருந்து விலத்தி இருந்தார், பொருளாதார தடையால் ஏற்பட்ட வறுமை காரணமாக அவர்கள் 1996 ஆண்டு இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வெள்ளைக்கொடியோடு வந்துவிட்டார்கள், அக்குடும்பத்தில் ஒருவர் வவுனியாவின் மிகவும் பலமான ஸ்ரீலங்கா புலனாய்வு துறை நபராக இருந்தார் அவரூடாகவே இந்த தகவல் வெளி வந்திருந்தது).

அதன் பின்பும் உதயன் இருப்பது நேரடி சாட்சியம் ஊடாக உறுதிப்படுத்த முடிந்தது. 2011 முற்பகுதியில் உதயனின் உறவினர் ஒருவர் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் 2010 இறுதிப்பகுதியில் சிறையில் இருந்த போது அனுராதபுரம் காட்டுக்குள் உள்ள இராணுவத்தின் மிகப்பெரிய தென்னந்தோப்பு ஒன்றுக்குள் வேலைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கிறார், அங்கு உதயன் தேங்காய் உரித்துக்கொண்டிருப்பதை தன் கண்களால் நேரடியாய் பாத்திருக்கிறார். ஆனால் கதைக்க முடியாது, தெரிந்தவர்கள் போல அறிமுகம் செய்து கொள்ள முடியாத சூழல், இதனை அவர் வெளியில் வந்த பிற்பாடு சொல்லியிருக்கிறார்.

அதே போல அனுராதபுரத்தில் இருக்கும் ரகசிய முகாம் தொடர்பில் அங்கிருந்து தப்பித்து வந்த சாட்சியம் ஒன்றும் கிடைத்தது, அதாவது குறித்த நபர் 2010 ம் ஆண்டில் முற்பகுதி வரை அனுராதபுரம் ரகசிய முகாமில் இருந்திருக்கிறார், அதாவது 2009 இல் தாம் ஜநூறு ஜநூறு பேராக பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், தன்னோடு ஜநூறு பேர் அனுராதபுரம் காட்டுக்குள் உள்ள ரகசிய முகாமில் இருந்ததாகவும் அப்போது ஸ்ரீலங்கா இராணுவத்தோடு சேர்ந்து இயங்கி வந்த புளட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் அங்கு வந்து செல்வதாகவும் அவரின் உதவியோடு(பணம் வழங்கி) அங்கிருந்து அவர் தப்பித்து வெளியில் வந்து மன்னார் வழியாக இந்தியாவுக்கு சென்றதாகவும் அறிய முடிகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இன்றும் இருப்பதாகவே அவர்களின் உறவினர்கள் நம்புகிறார்கள், உண்மையில் அவர்களில் அநேகமானவர்கள் இருக்கிறார்கள், மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள், பெருந்தோட்டங்களில், பண்ணைகளிலும், தோப்புக்களிலும் வேலை வாங்கப்படுகிறார்கள், ஆனால் அதனை வெளிப்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை. ஒருவேளை இழப்பீடு தொகை வழங்கினால் அது அவர்கள் மேற்குறித்த இடங்களில் உழைக்கும் உழைப்பின் சம்பளமாகவே இருக்க முடியும்.

அதே வேளை அதனை வெளிப்படுத்துவதற்கான நெருக்கடியை கொடுக்க கூடிய அளவுக்கு அரசியலை தமிழர் தரப்பு மேற்கொள்ளவும் இல்லை. அவர்களின் பிரச்னையை சம்பிரதாயத்துக்கான ஒரு விடயமாக கையாளுவது போலவே தோன்றுகிறது. எதிர்கால பாதுகாப்பு தொடர்பாக அதிகம் முக்கியம் கொடுக்கும் தமிழர் பிரதிநிதிகளின் ராஜதந்திரம்,கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் இந்த விடயத்தில் கரிசனை காட்டாமல் இருந்தால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

(2011 முற்பகுதியில், காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமை அமைப்புகளுக்கு அறிக்கை சமர்பிப்பதற்காக தகவல் சேகரித்த போது கிடைத்த தகவல்கள்.)
– இளையவன்னியன்

Advertisements