தேசியதலைவரிடம் 2002-ம் ஆண்டு நேர்காணலில் கேட்ட கேள்வி இது.

கேள்வி :தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?” -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது.

பதில் : “எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”.

…தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்…!

எமது தலைவன் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த புரட்சியாளன் மட்டுமல்ல, தலை சிறந்த கோட்பாட்டாளனும் கூட..

அண்மைக்காலமாக கொழும்பை தளமாகக் கொண்ட ஆங்கில ஊடகங்களில் எழுதுகிறேன்.

அவர்களில் ஒரு சிங்கள நண்பர் நேற்று கேட்டார்.

‘ பிரபாகரன் தலை சிறந்த புரட்சியாளன். அதில் சந்தேகம் இல்லை, ஆனால் எப்படி அவரை கோட்பாட்டாளன் என்கிறீர்கள் ?’

இது நம்மவர்கள் சிலரது கேள்வியும் கூட..

அவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.

இதன் வழி தனித்துவமான ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான பிரபாகரன் நந்திக்கடலில் வைத்து ஒரு நவீன கோட்பாட்டாளனாகவும் தன்னை மறு அறிமுகம் செய்கிறார்.

முள்ளிவாய்க்கால் வரை புரட்சியாளனாக பயணித்த அவர் நந்திக்கடல் நோக்கி பயணித்தபோதே அந்த வடிவ மாற்றம் நிகழ்ந்து விடுகிறது.

இதன் வழி ஈழத்தமிழ்ச் சமுகம் குறித்து பிரபாகரன் என்ற மனிதர் கண்ட கனவின் வடிவம்தான் ‘பிரபாகரனியமாக ‘ நம்முன் கிடக்கிறது.

இசங்களை வெறுத்த, கோட்பாடுகளை குலைக்கும் ஒரு புதிர் நிறைந்த பாத்திரத்தை வகித்த ஒரு அதி மனிதன் நந்திக்கடலில் வைத்து ஒரு கோட்பாட்டை உலகிற்கு விட்டுச் சென்ற கதையின் தத்துவ பின்புலம் இதுதான்.

ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான ஒரு அதி மனிதனை ‘நந்திக்கடல்’ ஒரு கோட்பாட்டாளனாக மறு அறிமுகம் செய்த கதையும் இதுதான்.

எனவே எமது தலைவன் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த புரட்சியாளன் மட்டுமல்ல, தலை சிறந்த கோட்பாட்டாளனும் கூட

– பரணி கிருஸ்ணரஜனி

Advertisements