யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிறபகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் தெரிவித்தார் .

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலுள்ளவர்கள் கடுமையான நிபந்தனைகளுடன் ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும் என நேற்றைய தினம் கூடித் தீர்மானித்திருப்பது அவர்கள் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக இலங்கைக்குக் கால அவகாசம் வழங்குவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதே அர்த்தம்.kajan

இலங்கை அரசாங்கத்தின் கைகளில் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற தீர்மானத்தை அரசாங்கத்திற்குக் கால அவகாசம் வழங்குவதன் ஊடாக மாத்திரமே அமுல்படுத்த முடியும்.

இல்லையெனில் அதனை அமுல்படுத்த முடியாது. ஆகவே, அமுல்படுத்த வேண்டும் என இவர்கள் கோருவது அரசாங்கத்திற்குக் கால அவகாசம் கொடுங்கள் என்ற தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக எடுத்து அறிவித்திருக்கிறார்கள் என்பதே பொருளாகும்.

நாட்டினுடைய ஜனாதிபதியும், பிரதமரும் ஒரு பொழுதும் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று கூறியிருக்கின்ற நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தவிதமான நீதி விசாரணைகளோ அதற்கான முன்னெடுப்புக்களோ,

முயற்சிகளோ மேற்கொள்ளப்படாததொரு நிலையில், மாறாகக் குமாரபுரம் படுகொலைக் குற்றவாளிகளும், ரவிராஜ் படுகொலைக் குற்றவாளிகளும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டிருக்கின்ற சூழலில், இராணுவத்தினரைப் பாதுகாப்பதற்கான முழுமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழலில்,

உள்ளக விசாரணை ஒருபோதும் சாத்தியமில்லை என்பது மிகவும் நன்றாகத் தெரிந்திருக்கின்ற சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான முடிவை எடுத்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறான முடிவானது இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதும், தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரைப் பாதுகாப்பதும் ,அவற்றிற்கும் மேலாக இராணுவத்தினரை யுத்தத்தில் ஈடுபடுத்தித் தமிழ்மக்களுக்கெதிரான மோசமான இனப்படுகொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகள்,மனித குலத்திற்கெதிரான குற்றங்களை நேரடியாகத் தலைமை தாங்கிச் செயற்படுத்திய மகிந்த ராஜபக் ஷவையும், கோத்தபாய ராஜபக் ஷவையும் பாதுகாப்பதற்கானதொரு முயற்சியாகத் தான் சம்பந்தன், சுமந்திரனின் நேற்றைய கூட்ட அறிவிப்பானது அமைந்திருக்கின்றது.

இந்த இரண்டு பிரதான போர்க் குற்றவாளிகளையும் தப்பிக்க வைப்பதுடன் , பாதுகாக்கின்ற செயற்பாடாகவும் தான் இவ்வாறான முடிவை அவர்கள் கங்கணம் கட்டிஎடுத்திருக்கிறார்கள்

மகிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட போர்க் குற்றவாளிகள் மற்றும் இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தான் தமிழ்மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பிற்கு வாக்களித்தமைக்கான பிரதான காரணமாகும்.

ஆனால், நேற்றைய தினம் அவர்கள் கூடி எடுத்திருக்கின்ற முடிவானது தமிழ்மக்களின் நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கியுள்ளது. ஒரு போதும் ஐ. நா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படப் போவதில்லை.

இது சுமந்திரனுக்கும் நன்றாகத் தீர்மானம் நிறைவேறுவதை விரும்பவுமில்லை. கடுமையான கண்காணிப்பு என்ற சொல்லைச் சுமந்திரன் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கான காரணம் எங்கள் மக்களை ஏமாற்றுவதற்கானதொரு பசப்பு வார்த்தை மட்டுமே.

எதிர்காலத்தில் தமிழ்மக்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கான பொறிமுறைகள் தவறிப் போகுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் கூட்டமைப்பினர் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தத் தலைவர்களுக்கு ஒத்துழைத்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இந்தத் துரோகத்தனத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

**

துச்சாதனா! நின் செயல் கொடுமை! என்றுரைக்க ஒருவர் இல்லையே!

பாஞ்சாலி சபதம் என்று தனித்துவமாகக் கவி படைத்தவன் பாரதி.
மகாபாரதம் என்ற இதிகாசத்தைப் படித்த பாரதியாரால் திரெளபதிக்கு நிகழ்ந்த கொடுமையைத் தாங்க முடியவில்லை.

யுகம் கடந்தும் துரியோதனனின் கொடுமையும் துச்சாதனனின் பாதகச் செயலும் திரெளபதி பட்ட வேதனையும் பாரதியைக் கடுமையாகப் பாதித்தது.

இப்பாதிப்பில் இருந்து விடுபட முடியாத பாரதி பாஞ்சாலி சபதம் என்பதைப் படைத்தான். அந்தப் படைப்பு பாரதியின் உணர்வுகளை ஆற்றுப்படுத்தியது.

ஆடை குலைவுற்று நிற்கிறாள் அவள் ஆ என்று அழுது துடிக்கிறாள் வெறு மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மைகுழல் பற்றியே இழுக்கிறான்… எனப் பாரதியின் இதயக் கொதிப்பு மொழி வரிகளாக வெடிக்கின்றன.

பாரதியின் இக்கடுப்புக்கு அடிப்படைக் காரணம், ஒரு பெரும் சபையில் திரெளபதியை அழைத்து அவளின் ஆடையைக் களையத் தலைப்பட்ட போது,

அப்பெரும் சபைதனில் வீற்றிருந்த வீஷ்மர், துரோணர், அசுவத்தாமன் போன்றவர்கள் மெளனமாக இருந்தனரல்லவா. இதுவே பாரதிக்கு கோபத்தைக் கொடுத்தது.

கதைக்க வேண்டியவர்கள் கதைக்கத் தவறினால் நீதி அழியும். அதர்மம் ஓங்கும்.
நல்லவர்கள் செயலற்றவர்களாக இருந்தால் அதனால் எவருக்கும் எந்தப் பயனும் கிடையாது. மாறாக அக்கிரமமும் அநியாய மும் கோலோச்சும் என்பதே உண்மை.

பாரதப் போர் ஏற்படவும் கெளரவர் சேனை அழியவும் காரணம் திரெளபதியின் துகிலை துச்சாதனன் பற்றி இழுத்த போது அதைத் தடுக்காமல் – தவறு என்று இடித்துரைக்காமல் மந்திரிகளும் மாகாணசபை உறுப்பினர்களும் இருந்ததுதான்.

துரியோதனனின் சபையில் மெளனம் காத்தது போல, நேற்றைய தினம் வவுனியாவில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் இலங்கை அரசுக்குக் கால அவகாசம் வழங்குதல் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது பலரும் மெளனம் காத்தனர்.

அந்தோ! என்னே அநீதி செய்கிறீர்கள். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் துடிதுடித்து இறந்த கொடும் செயல் கண்டும் நீவிர் மனம் திருந்தவில்லையோ! இலங்கை அரசுக்குக் கால அவகாசம் கொடுப்பது முறையோ! நீதியோ! உங்களுக்கு போரில் அழிவு ஏற்பட்டால் இதைப் பொறுப்பீரோ!

அந்தோ! தமிழ் மக்களுக்கு அநீதி செய்து உமக்கும் உம் சந்ததிக்கும் ஏன்தான் பழி சுமக்கிறீர். போகும் வயதிலும் இப்படியயாரு கொடூரமோ.

இலங்கை அரசுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இக் கொடுமை செய்கிறீரோ என்றுரைக்க வவுனியாக் கூட்டத்தில் ஒருவர் இல்லையே.

இறைவா! என்செய்வோம் நீயேனும் இக் கயவரை தண்டிக்க மாட்டீரோ என்று தமிழ் மக்கள் மனம் குமுறுகிறார்கள்.

இங்கோ பதவி ஆசை பிடித்தவர்கள் உண்மை தெரிந்தும் மெளனமாய் இருக்கிறார்கள். இஃது அழிவுக்கே அன்றி வேறு எதற்குமல்ல. இது சத்தியம்.

வலம்புரி

Advertisements