மிகமிக அற்புதமான காட்சி அது. மிகவும் உணர்வுநிறைந்த காட்சியும் அது. நெல்சன் மன்டேலாவே தனது சுயசரிதையில் இருண்டவருடங்கள் என வர்ணித்த அந்த காலத்து காட்சிஅது.

உண்மையிலேயே இந்த காட்சியையும் அதன் சரியான பாரத்தையும் உணரவேண்டுமானால் ஒன்றில் சிறைக்குள் இருந்திருக்க வேண்டும்.அதிலும் மிகவிரும்பிய உறவு மிகநீண்ட காலத்துக்கு பிறகு சிறைக்கு வரும் அந்த கணத்தின் வலியை அனுபவித்திருக்க வேண்டும். அல்லது வெளியில் இருந்து மிக நீண்ட காலத்துக்கு பின்னர் சிறையில் இருக்கும் உறவை பார்க்கபோன அனுபவம் இருந்திருக்க வேண்டும்.இது இரண்டும் இருந்திருந்தாலே மட்டும் இந்த காட்சியை உணரமுடியும்.
ஆனால் Long Walk To Freedom படத்தில் அதன் இயக்குநரும், மன்டேலாவாக நடித்த இபிஸ்ம் அந்த காட்சியை பார்க்கும் அனைவரையும் அதன் உணர்வுக்குள் நீந்தும்படி செய்துவிட்டார் அதுவே அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி.

மேலும் அந்த காட்சி எத்தகையது. வளர்ந்தவளாக வந்த பின்னரே சிறையில் இருக்கும் தந்தை மன்டேலாவை பார்க்க அனுமதிப்போம் என்று சிறை நிர்வாகம் கூறிவிட்டது.பதினாறுவருடங்களுக்கு பிறகு தந்தையை பார்க்க ரொபின்தீவு சிறைக்கு மகள் வருகிறாள். பார்த்த முதல் கணத்திலேயே இருவரின் கண்களும் ஆயிரம் மொழிகளை காட்டிவிடுகின்றன.அற்புதம் நெகிழ்ச்சி என்றால் என்ன என்பது இதுதான். மகளுக்கும் தந்தைக்குமான உரையாடல் வார்த்தைகளைவிட உணர்வுகளாலேயே நிறைந்திருக்கிறது.

‘அம்மா இப்போது அவர்களுக்கு எதிராக போராடுகிறாள்’” என்று மண்டேலாவின் மகள் சொல்கிறாள்.

‘அப்போ நீ’

‘ நான் உங்கள் மகளளல்லவா.நான் போராளி’

இந்த நேரத்தில் குறுக்கிட்டு சிறைஅதிகாரி ‘இங்கு அரசியல் பேசக்கூடாது’ என்கிறான். கண்கள் முழுக்க வெஞ்சினமும் காலகாலமாக நிலவும் வன்மமும் நிறைத்தபடியே மன்டேலாவின் மகள் சிறைஅதிகாரியை பார்த்து கூறுகிறாள். ‘இது அரசியல் அல்ல.இதுதான் எங்கள் வாழ்க்கை’என்று.

இன்று தமிழர் பரப்பில’; எங்கு நோக்கினும் சொல்லப்படும் ///வார்த்தை.அரசியல்வேண்டாமப்பா// என்பதுதான். அடிமைப்படுத்தப்பட்ட ஒரு இனத்துக்கு அரசியல் என்பது ஒரு வாழ்வுதான்.

அரசியலே வாழ்வாக வாழ்வே போராட்டமாக நகர்வதுதான் அவர்களின் வாழ்வு என்பதை முகத்தில் அறைந்ததுபோல சொன்ன அந்த செய்தி நீண்டநாட்களாக காதுகளுக்குள் ரீங்காரமிட்டபடியே சுற்றிவந்தது-

இப்படியான பல காட்சிகளில் ஒரு அற்புதமான வாழ்வுடன் நாமும் பயணப்படும் அனுபவம் ஒன்றை தந்திருந்தது இந்த திரைப்படம். மன்டேலாவின் சுயசரிதையில் இருந்தே இந்த திரைப்படத்துக்கான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பமும் அந்த சுயசரிதை நூலில் இருப்பதுபோலவே…

அவருடைய மபசா ஆற்றங்கரையும் அதன் அருகிலான மலைக்குன்றுகளும் மரங்களே அற்ற மலைகளுமான என்று அவர் சுயசரிதையில் வர்ணித்த அவரது சிறுபிள்ளை பராயத்து கிராமத்தை காட்டுவதில் இருந்து ஆரம்பிக்கின்றது சுதந்திரத்துக்கான நீண்ட பயணம்.

மிகநீண்ட காலமாகவே வெள்ளைஇனத்தவரின் நிறவாத ஆட்சிக்கு உட்பட்டிருந்தாலும் அதன் வெம்மை மன்டேலாவை ஜோகன்ஸ்பேர்க் வந்திருந்தபோதே அதிகமாக தாக்குகின்றது. அவருக்குள் இருந்த ஆத்மத்தை, அந்த தாகத்தை வோல்டர் சிசிலு என்ற உன்னதமனிதன் வடிவமைத்து அவரை வெளிக்கொண்டுவரும் இடம் அருமையாக நகர்த்தப்பட்டிருக்கிறது.

நிறவாதஅரசின் போக்குவரத்து பேரூந்துகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் அவர் மெதுமெதுவாக தன்னை அந்த கூட்டத்துள் நுழைத்துக்கொள்வதும் எல்லோருடனும் இணைந்து சுதந்திருத்துக்கான- உரிமைகளுக்கான குரலை தானும் உணர்த்துவம் மன்டேலா இதோ வந்துவிட்டார் போராட்ட களத்துக்கு என்பதை காட்டும் இடமும் அருமை.

ஒரு சாதாரணமான மனிதனை எவ்வாறு வரலாறு ஆட்கொள்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. நிறவெறி அரசுக்கெதிரான ஒத்துழையாமை,சட்டமறுப்பு ஆகிய அமைதிவழிகளில் போராடும் மன்டேலாவை செபர்வில்லே வில் 1960 மார்ச்21ம்திகதி நடந்த கறுப்பினமக்களின் படுகொலை நிறவெறி அரசுக்கெதிரான ஆயுதப்போராட்டத்தில் குதிக்கவைக்கிறது.

அந்த காட்சி திரைப்படத்தில் மிகவும் நேர்த்தியாக கூர்மையாக சொல்லப்பட்டவிதம் நன்றாக இருக்கிறது. தனது சாத்திவீகபோராட்டங்களை இத்துடன் முடிவுக்கு கொண்டுவருகிறேன் என்றபடியே அவர் தனது பயணம் ஒன்றுக்கு தயாராவதை அவருக்கும் மனைவி வின்னி க்குமான உரையாடல்மூலமே காட்டி இருக்கும் இடமும் முக்கியமானது.

அதில் அவர்கூறும் ஒரு வசனம் ஒரு சாதாரண மனிதன்,மிகவும் தூரத்தே மலைகள் அடர்ந்த வெளிகளில் இருந்து நகருக்கு வந்தவன்.நிறவெறிக்கு எதிரான சாத்வீகமுறையில் போராடிக்கொண்டிருப்பவன் எவ்வாறு ஆயுதம் ஏந்துதல் என்ற அடுத்த கட்டத்துக்கு செல்கிறான் என்பதை We no longer accept the authority of a state that wages war on its own people,”என்ற ஒரு வசனம்மூலம் சொல்லி இருக்கிறார்கள்.மிகநன்று.

பொருளாதாரகேந்திரங்கள் தகர்க்கப்படுகின்றன. மன்டேலா மிகவும் தேடப்படும் ஒருவராகின்றார். தேடப்படும் காலங்களில் சேவ் செய்ய மறந்த முகமும் தாடியுமாக போராளிகளுக்கே உரிய உடல்மொழிகளுடன் மன்டேலா.

இதில் முக்கியமானது இந்த திரைப்படத்தில் மன்டேலாவாக நடித்திருக்கும் இட்ரீஸ் இல்பாவின் உடல்மொழி வசனம் அவர் கதைக்கும்முறை எல்லாமே மன்டேலாவை மனக்கண்முன் நிறுத்துகிறது

அதிலும் மரணதண்டனையே கிடைக்கலாம் என்ற நிலையிலும் தனது பிரகடனத்தை ரிவேனியா நீதிமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக உறுதிநிறைந்த குரலில் கூறும் இடத்தில் if it needs be, it is an ideal for which I am prepared to die.” //’சுதந்திரமான ஒரு வாழ்வுக்காக நான் இறக்கவும் தயாராக இருக்கிறேன்’// விடுதலைக்காக போராடும் அனைத்து மக்களுக்குமான ஒரு உந்துதலாக அந்த காட்சி இருக்கிறது..

மன்டேலா தனது சுயசரிதையில் தலைப்பிட்டிருப்பதுபோல-ரொபின்தீவுசிறை-இருண்டவருடங்கள் என்பதற்கு முழுக்கமுழுக்க சாட்சியமாகவே அந்த நாட்கள்-அந்த வருடங்கள் திரைப்படத்திலும் காண்பிக்கப்பட்டிருப்பது பெரிய ஒரு சிறப்பாகும்.

எல்லாவிதமான அழுத்ததுல்களுக்குள்ளும் ஏதோ ஒரு சின்னப்பூக்கள் மலர்ந்துகொண்டே இருக்கும் என்பதற்கமைய ஒருநாள் காலை மலசலகூடசந்திப்பு ஒன்றில் தோழர்களுக்கு சொல்கிறார்.’

இங்கே எமது போராட்டத்தை இனி தொடரவேண்டும்’ என்று.. எப்படி என்ற கேள்விக்கு எனது அடுத்த கோரிக்கை ‘கைதிகளுக்கு கால்பாதம் வரையிலான நீளகாற்சட்டை வழங்கப்படவேண்டும் என்பதே.என்கிறார். சிரித்துக்கொண்டே.

சிறைக்குள் இருக்கும்போது வரும் தந்தியில் மன்டேலாவின் மூத்தமகன் விபத்து ஒன்றில் மரணமாகி இருக்கும் செய்தி வருகின்றது.ஒரு தந்தையாக தனது மகனை இழந்து அவர் காட்டும் நுண்ணிய அவஸ்த்தை சோகம் பிரிவுத்துயர் எல்லாம் அற்புதம்.மன்டேலாவாக நடித்திருப்பது இட்றீஸ் இபா வாக இருந்தாலும் எந்த இடத்திலும் நடிகர் கண்ணுக்கு தெரியவே இல்லை.மன்டேலா-மன்டேலா-மன்டேலாதான்.

இதுதான் இயக்குநரின் வெற்றி.

இறுதியாக மன்டேலா தனது சுயசரிதையில் ‘எதிரியுடன் பேசுதல்’ என்ற தலைப்பு முடிவாக இருக்கிறது. உலகமெங்கும் நிறவெறி அரசுக்கு எதிராக கிளர்நத போராட்டடங்கள்,தென்ஆபிரிக்காவில் எழுந்த பேரெழுச்சி,ஆபிரிக்கதேசங்களின் ஒருங்கிணைந்த ஆதரவு க்கு என்ற நிலையால் உடைந்துபோன வெள்ளைஅரசு தேர்தெடுக்கும் வியுகம்தான் ‘மன்டேலா’.

மன்டேலாவை விடுவிப்பதும் அவருக்கூடாக ஒரு பல்இன அரசை நிறுவதும்தான் அவர்களின் நோக்கம். மன்டேலாவுடன் நீண்ட சிறைக்கொட்டடிக்குள் இருந்தவர்களின் எதிர்ப்பையும்மீறி மன்டேலா பேச செல்கிறார்.அதற்குதான் ‘எதிரிகளுடன் பேசுதல்’ என்ற தலைப்பை பின்னாளில் தான் எழுதிய சுயசரிதைக்கு கொடுத்துள்ளார்.(மன்டேலா வெள்ளைஅரசுடன் பேசியதும்,பின்னர் உண்மைக்கும் இணைவாக்கத்துமான ஆணையத்தை நிறுவியதும் நீண்ட விமர்சனங்களுக்கும்,கேள்விகளுக்கும் உள்ளாக்க வேண்டியது.ஆயினும் இது திரைப்படம் பற்றிய ஒரு பார்வை மட்டுமே என்பதால் அதனை விடுவோம்.)

எந்த கறுப்புஇனமக்களுடன் ஒன்றாக பேரூந்துகளிலும் பொதுஇடங்களிலும் அமரவே மாட்டோம்.அப்படி அமர்வது பெருங்குற்றம் என்று சட்டம் இயற்றிவைத்திருந்த வெள்ளைநிறவெறி அரசின் தலைவர் கிளார்க்கின் அலுவலகத்துள் மன்டேலா நுழையும்போது பின்னணி இசையும் மன்டேலாவாக நடித்திருக்கும் இட்றீஸ்இபாவின் நடையும் வொவ்..அற்புதம்.

தனது மக்களின் சுதந்திரமான வாழ்வு என்ற இலட்சியத்துக்காக பயணித்த ஒரு மனிதனின் கதை.அவரே எழுதிய சுயசரிதையின்படி படமாக்கப்பட்டுள்ளது..நிறைவான ஒரு வரலாற்றுக்குள் நின்ற உணர்வு ஒன்று ஏற்படும் படம் பார்த்து முடித்தபோது…

ஆயினும் மனதில் ஒரு குறை..தென்ஆபிரிக்காவின் விடுதலை என்பது ஒலிவர் தம்போ என்ற மனிதன் இல்லாதுவிட்டால் இன்னும் சில காலம் தாமதமாகி இருக்கும்.மன்டேலாவும் ஆபிரிக்க காங்கிரஸின் முக்கியதலைவர்களும் சிறைக்குள் நீண்டகாலம் இருந்தபோது வெளியில் இருந்து விடுதலைக்காக பெருந்தவம் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர் தம்போ.

புதிதாக விடுதலைஅடைந்த ஆபிரிக்கநாடுகளுக்கு சென்று தென்ஆபிரிக்கவிடுதலைக்கு ஆதரவு சேர்த்தது, மேற்குலகில் வெள்ளை நிறவெறிழ அரசுக்கேதிரான மக்கள்போராட்டங்களை ஒருங்கிணைத்தது என்று ஒலிவர் தம்போவின் பங்களிப்பு ஒரு இரண்டு பந்திகளில் எழுதிவிடக்கூடியதல்ல.
அவரது இடம் இந்த திரைப்படத்தில் எவ்வாறு தவிர்க்கப்பட்டது என்று தெரியவில்லை.

ஆயினும் சுதந்திரத்துக்கான நீண்ட நடை எனபது ஒரு திரைப்படம்போன்று இல்லாமல் நாமும் மன்டேலாவுடன் அவரது சுதந்திரநடையில் சேர்ந்திருந்த உணர்வே வருகிறது.விடுதலைக்கு போராடும் மக்களான எமக்கு விடுதலைக்காக தளர்வின்றி நடப்பதற்கான ஒரு சிறு பலத்தை இந்த திரைப்படம் தருமேயானால் அதுவே அதன் வெற்றி என்பேன்.

தரும் நிச்சயமாக!!

பாருங்கள்..இதுவரை பார்க்காது விட்டிருந்தால்..!

– ச.ச.முத்து-

Advertisements