“கிரேக்கர்களின் பரிசுப் பொருட்களையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள், அவை அழகிய வடிவில் ஆபத்தை தரக்கூடியவை” – கசேந்திரா

சிங்களத் தலைவர்களினது வாக்குறுதிகளும், பரிசுப் பொருட்களும் கசேந்திரா கூறியுள்ள மேற்படி தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு ஒப்பானவை.

கிரேக்கர்கள் மரத்தாலான அழகிய ரோயன் குதிரை ஒன்றை ரோய்க்கு பரிசளிப்பார்கள் என்றும் அதற்குள் இருந்து வாள்களும் கேடயங்களும் வெளியே நிழும், தீப்பந்தங்கள் எழும், ரோயன் அரண்மனையும், நகரமும் சாம்பலாய் போகும் மக்கள் அழிவார்கள்.

சாம்ராஜ்யம் வீழும் என்று கசேந்திரா முன்கூட்டி பல ஆண்டுகளுக்கு முன்னே கூறிய போதிலும் அவள் சபிக்கப்பட்டவள் என்பதால் யாரும் அவளின் தீர்க்கதரிசனத்தை நம்பவில்லை.

ஆரம்பத்தில் புராணக்கதையென்று நம்பப்பட்டு பிற்காலத்தில் வரலாற்று உண்மைகளுடன் கூடிய கதையென்று கண்டறியப்பட்ட ரோய் அரசின் மன்னனது பெயர் பிறியம்.

அவரது மகளே இளவரசியான கசேந்திரா. கசேந்திரா மீது அப்பல்லோ கடவுள் காதல் கொண்டதனால் அவளுக்கு எதிர்காலத்தை முன்கூட்டியே உரைக்கக்கூடிய தீர்க்கதரிசனத்தை வரமாக வழங்கினார்.

ஆனால் அவ்வரத்தைப் பெற்றுக் கொண்ட கசேந்திரா பின்பு அந்த கடவுளுக்கு மாறாகவும், எதிராகவும் செயற்பட்டதனால் அவளுக்குக் கொடுத்த வரத்தை சாபமாக்கினார் அப்பல்லோ கடவுள்.

அதன்படி அவள் தீர்க்கதரிசனம் உரைப்பாள். ஆனால் அதனை அவளது தாய் தந்தையரோ, சகோதரர்களோ, உறவினர்களோ, அரண்மனை அமைச்சர்களோ, மொத்தத்தில் மக்களோ யாரும் நம்பமாட்டார்கள்.

அதனால் அவள் விரக்தியடைந்து, அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து அழிந்து போவாள் என்பதாய் அந்த சாபம் அமைந்தது. தற்போது ஈழத் தமிழரின் அரசில் வாழ்வில் வரம் சாபமாகும் படலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஈழத் தமிழரின் அரசியல் வாழ்வில் வரங்கள் சாபமாவது இது ஒன்றும் முதற்தடவையல்ல. ஆயினும் முள்ளிவாய்க்கால் அனுபவத்தின் பின்னும் அந்தப் பேரவலத்தின் பின்னும் தமிழ் மக்களின் வாழ்வில் கிடைத்துள்ள வரம் சாபமாவது வியப்பிற்கும், வேதனைக்கும், ஆற்றாமைக்கும் உரியது.

வாய்ப்புக்களைத் தவறவிடுவோர் வரலாற்றில் வெற்றி பெறுவதில்லை. அத்துடன் வாய்ப்புக்களை சிதைப்போர் சந்தி சந்தியாக வரலாற்றினதும், மக்களினதும் எதிரிகளாய் காட்சியளிப்பர்.

“புழுதிபறக்க செடில் எடுத்தான். ஆனால் ஒரு குத்தில் குப்புற வீழ்ந்தான்” என்று குத்துச் சண்டை தொடர்பாக ஒரு கூற்றுண்டு.” தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை தமிழ்த் தலைவர்களின் அரசியல் இப்படித்தான் இழுத்துச் செல்கிறது.

முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களுக்கு பேரழிவைக் கொடுத்தது என்பது உண்மைதான். ஆனாலும் அந்தப் பேரழிவுடன் கூடவே அது வரங்களையும் கொடுத்திருந்தது.

அதாவது முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களுக்கு பேரழிவாய் அமைந்த வேளை அந்த பேரழிவை ஏற்படுத்திய இலங்கை அரசுக்கும், இராணுவத்திற்கும் உலக அரங்கில் நெருக்கடிகளையும், அவமானங்களையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியது.

16ஆம் நூற்றாண்டில் இலங்கை இயற்கையான திருகோணமலை துறைமுகத்தால் உலகப் பேரரசுகளின் மத்தியில் அறியப்பட்டது. பின்பு அது தேயிலையால் அறியப்பட்டது. அதன்பின்பு அது துடுப்பாட்டத்தால் உலகில் அறியப்பட்டது.

ஆனால் அது முள்ளிவாய்க்காலோடு தமிழ் மக்கள் மீதான பாரிய படுகொலைகளால் உலக அரங்கில் இரத்தக்கறை படிந்த நாடாய் அறியப்பட்டது.

ஒருபுறம் முள்ளிவாய்க்காலால் தமிழ் மக்கள் இழப்பிற்கு உள்ளான போதிலும் மறுவளம் அவர்களின் தேசிய இனப்பிரச்சனை அத்துடன் கூடவே அதிகம் பிரபலம் அடைந்தது.

இத்தகைய சர்வதேச பிரபலமும் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட சர்வதேச நெருக்கடிகளும், போர்க்குற்றம், மனிதஉரிமை மீறல்கள், பாலியல் வல்லுறவுகள், காணாமல் ஆக்கப்பட்டோர், இராணுவத்தால் காணி பூமி ஆக்கரமிக்கப்பட்டோர் என்பதன் வாயிலாக தமிழ் மக்களுக்கு சர்வதேச அரங்கில் மிகவும் சாதகமான களம் ஒன்று வரமாய் பிறந்தது.

அந்த வரத்தைச் சுற்றி பன்னாட்டு அரசுகள் வட்டமிட்டன. ஈழத் தமிழர் உலகில் கவனத்திற்குரிய மக்களாயினர். உலகம் தமிழ் மக்கள் மீது ஒருபுறம் அனுதாபத்தையும், மறுபுறம் இலங்கை அரசின் மீது கண்டனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் சுமத்திய சூழ்நிலையானது தமிழ் மக்கள் தமக்கான நீதியையும் தமக்குத் தேவையான அரசியல் தீர்வையும் பெற ஏதுவான வரங்களாய் அமைந்தன.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரத்தைக் கையில் எடுத்தது. கூடவே தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலின் பேரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பதவிகளையும், அதிகாரங்களையும் பரிசளித்தனர்.

அதேவேளை புதிதாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் அரியணையில் மூன்றாவது பெரிய தூணான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கூட்டணித் தலைவர்களுக்கு மகுடங்களைச் சூடியதுடன், புகழாரங்களையும் கூறி வாக்குறுதிகளை அளித்தனர்.

மேற்படி புதிதாக பதவிக்கு வந்த சிங்களத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களுக்கு ரோயன் குதிரைகளை பரிசளித்தனர்.

தமிழ்த் தலைவர்கள் அந்த ரோயன் குதிரைகளுக்கு சில்லுப்பூட்டி தமிழ் மண்ணிற்கு இழுத்துவந்து மக்களிடம் காட்சிப்படுத்தினர். குதிரையைப் பற்றிய புகழாரங்களை தமிழ்த் தலைவர்கள் உதிர்த்தனர்.

1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்பு அன்றைய தமிழ்த் தலைவர்கள் கறுப்புக் கொடிகளை கையில் ஏந்தினர். தமிழ் மண்ணில் அமைச்சர்களின் வரவுகளைப் புறக்கணித்தனர். அப்படிப்பட்ட தருணங்களில் எல்லாம் கர்த்தால், கதவடைப்பு, பகிஸ்கரிப்பென தமிழ் அரசியல் நகர்ந்தது.

குறிப்பாக 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியில் முன்னணிப் பிரச்சாரக்காரர்களாய் திருவாளர்கள் மாவை சேனாதிராஜா, உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன் என்போர்களுடன் கூடவே மடலேறு – அடலேறு ஆலாலசுந்தரம் போன்றோர் என அப்பட்டியல் நீண்டு அமைந்தது.

தேர்தல் மேடைகளில் பகவத்சிங்குகளே எழுக, தமிழ்த் தாய் உங்களை அழைக்கிறாள். விடுதலை வீரன் கரிபால்டி உங்களை அழைக்கிறான். இளைஞர்களே எழுக என்று அந்த மேடைகளில் ஆயுதப் போராட்டங்களுக்கான அழைப்பு இளைஞர்களுக்கு விடப்பட்டது.

இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள திரு. மாவை சேனாதிராஜா தலையில் சிவப்புத் துண்டு அணிந்தவாறு புரட்சி வீரனின் தோற்றத்தில் மேடைகளில் காட்சியளித்து வானதிர உரை நிகழ்த்துவார்.

(2014ஆம் ஆண்டு வவுனியாவில் நிகழ்ந்த தமிழரசுக் கட்சி மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய திரு. மாவை சேனாதிராஜா அத்தலைமையுரையை ஒரு சிறு பிரசுரமாக வெளிட்டார். அந்த வெளியீட்டின் அட்டைப் படத்தில் மேற்படி தலையில் சிவப்புத் துணி அணிந்த புகைப்படம் பதிக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.)

அக்காலத்தில் திருகோணமலை தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவரான திரு.ஆர்.சம்பந்தன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக மட்டுமன்றி எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார்.

இத்தகைய 1977ஆம் ஆண்டு தேர்தல் மேடைகளில் மின்னல் இடிமுழக்கங்கள் என்பவற்றைக் கண்டு இளைஞர்கள் கொதித்தெழுந்தார்கள். தேர்தலில் போட்டியிட்ட தலைவர்களுக்கும், முன்னணி பிரச்சாரக்காரர்களுக்கும் இளைஞர்கள் தங்கள் விரல்களை கீறி இரத்தத் திலகமிட்டு விடுதலைக்காக உறுதி பூண்டார்கள். ஆயுதந்தரிக்கத் தொடங்கினார்கள்.

மேற்படி அன்று தேர்தலில் போட்டியிட்ட தலைவர்களிலும் முன்னணி பிரச்சாரக்காரர்களிலும் காசி ஆனந்தன் போன்ற மிகச் சிலரைத் தவிர மற்றைய அனைவரும் வார்த்தை தவறிவிட்டனர். கொண்ட கொள்கை மாறிவிட்டனர்.

மேற்படி 1977ஆம் ஆண்டு காலகட்டத்தில் சிங்கக் கொடிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டியோரும், கறுப்புக் கொடி காட்டக் கோரியோரும் 2015ஆம் ஆண்டு தேர்தல்களின் பின் சிங்களத் தலைவர்கள் கொடுத்த ரோயன் குதிரைகளை தமிழ் மக்கள் மத்தியில் இழுத்துவந்து காட்சிப்படுத்துவதுடன் கறுப்புக் கொடிக்குப் பதிலாக சிங்கக் கொடிகளை ஏந்தத் தொடங்கினர்.

அன்று வெளியிட்ட “அமைச்சர்களே திரும்பிப் போ” என்ற கோசங்களுக்கும், சுவரொட்டிகளுக்கும் பதிலாக இன்று அமைச்சர்களுக்கு செங்கம்பளம் விரிக்கும் படலம் ஆரம்பமானது. இவை தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட தெளிவான நேரெதிர் முரண்பாடுகள்.

மேற்படி சிங்களத் தலைவர்கள் 2015ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிகளின் பின்பு பரிசளித்த ரோயன் குதிரைகளைப் பற்றி தமிழ் மக்கள் தரப்பில் இருந்து இடித்துரைக்கும் குரல்கள் எழத் தவறவில்லை. அந்தக் குரல்கள் ஆபத்தானவை என்ற தீர்க்கத்தரிசனங்களும் எழத் தவறவில்லை.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், முன்னாள் ஜனாதிபதி அம்மையார் சந்திரிகா பண்டாரநாயக்கவையும் தாம் முழுதுமாக நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான திரு.ஆர். சம்பந்தன் உறுதிபடக் கூறினார்.

தனது ஆட்சிக் காலத்தின் போது நவாலி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த தங்கியிருந்த இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் மீது தமது விமானப்படையினர் குண்டு வீசி நூற்றுக்கணக்கான மக்களை படுகொலை செய்ததைக் கண்டு தான் கண்ணீர்விட்டு அழுததாக சந்திரிகா பண்டாரநாயக்க தமிழ் மக்களை கவரும் வகையில் கூறினார்.

ஆனால் தனது ஆட்சியின் கீழ் நிகழ்ந்த அவர் கண்ணீர் வடித்த அந்த படுகொலைக்கு எதிராக விமானப்படையினர் மீது அவர் ஏன் விசாரணை நடத்தவில்லை? ஏன் ஒருவரைக்கூட தண்டிக்கவில்லை? என்ற கேள்விகள் சாதாரண பொது அறிவு கொண்ட எந்தொரு தமிழ் மகனின் மனதிலும் எழமுடியும்.

முதலை கண்ணீர் வடிப்பது தான் கொல்லும் அந்த இரைப்பிராணியின் மீதான கருணையினால் அல்ல.

மாறாக அந்த இரையை வலுவாக கடிக்கும் போது அப்படி வலுவாக கடிக்கப்படுவதன் வெளிப்பாடாக அதற்கு கண்களில் இருந்து நீர் சொரியும். எனவே முதலை கண்ணீர் விடுவது இரக்கத்தால் அல்ல. அது உணவை உட்கொள்ளும் தொழிற்பாட்டின் ஒரு பகுதியாகும்.

2016ஆம் ஆண்டு தைப் பொங்கல் அன்று பிரதமர் யாழ்ப்பாணத்தில் உரையாற்றுகையில் காணாமல் போனோரில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

கடந்த மாதம் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று சந்திரிகாவின் பின்வரும் கருத்தைத் தாங்கி வந்தது. அதாவது புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட பின் போர்க்குற்றம் பற்றிய விசாரணைகளுக்கு நீதிமன்றங்களை அமைக்க வேண்டிய தேவையிருக்காது என்றவாக அது அமைந்தது.

பெப்ரவரி 26ஆம் தேதி பொலனறுவயில் ஜனாதிபதி நீதிமன்றத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்து உரையாற்றுகையில்

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் தான் அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார் என்று பிபிசி தமிழோசை அன்றைய இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

அரசு என்ற ரீதியில் உள்நாட்டு நீதித்துறை மற்றும் நீதிபதிகள் தொடர்பாக தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறியதுடன் “வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க நான் ஒருகணமும் தயாரில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனை தான் ஐநா பொதுச்செயலாளரிடமும், ஐநா மனிதஉரிமைகள் ஆணையரிடமும், உலகின் பிரதான நாடுகளின் தலைவர்கள் உட்பட சகலருக்கும் தான் இதுபற்றி கூறியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

ரோயன் குதிரையின் வயிற்றில் இருந்து மேற்படி மூன்று தலைவர்களினதும் பேச்சுக்கள் வாள்களையும், ஈட்டிகளையும், கேடயங்களையும் வெளிக்கொணர்ந்துள்ளன.

இலங்கை அரசு சர்வதேச கலப்பு நீதிபதிகளைக் கொண்ட போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்க இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் கொடுக்க வேண்டுமென தற்போது ஜெனிவாவில் கூடியுள்ள ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கோரவுள்ளதான செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேற்படி நிலைப்பாட்டைக் கண்டு தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் எழுந்த பின்னணியில் இலங்கை அரசுக்கு நிபந்தனையுடன் கூடிய குறுகியகால காலஅவகாசம் கொடுக்கலாமென சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

காலஅவகாசம் பெறுவது என்பதுமட்டுமே இலங்கை அரசின் ஒரே நோக்கம். அது இப்போது கூடியுள்ள ஜெனிவா மாநாட்டின் ஒரு தத்தை கடக்க வேண்டும். அது குறுங்காலமோ, நீண்டகாலமோ என்பதல்ல முக்கியம் தத்தைக் கடந்தால் போதும்.

எனவே மேற்படி குறுங்கால அவகாசம் என்பதும் இலங்கை அரசின் திட்டத்திற்கு இரையாகும் செயல்தான்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வாயிலாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த சர்வதேச சூழலை வரமாகக் கொண்டு, அதனை முதலீடாகக் கொண்டு இலங்கை அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதன் வாயிலாக தமிழ் மக்களுக்கான நீதியையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான வாய்ப்பு இப்போது சாபமாக ஆக்கப்பட்டுவிட்டதெனத் தெரிகிறது.

இன்று அரசாங்கத்திற்கு நிபந்தனையுடன் கூடிய குறுகியகால காலஅவகாசம் என்று கூறும் தலைவர் சம்பந்தன் 2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தின் போது ஏன் அப்படிப்பட்ட நிபந்தனையுடன் கூடிய காலவரைறையை ஏற்படுத்தத் தவறினார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

தமிழ் மக்களின் இன்றைய அரசியல் அவலத்தை தமிழ் மக்களின் கடந்தகால அனுபவங்களுக்கு ஊடாகவும், சர்வதேச அரசியலில் காணப்படும் வாய்ப்புக்களுக்கு ஊடாகவும் எடைபோட வேண்டியது அவசியம். சுதந்திரத்திற்கு முன்னான காலத்திலிருந்து தமிழ்த் தலைவர்களின் அழைப்புக்களை தமிழ் மக்கள் எப்போதும் ஏற்று தலைவர்களின் பின் திரண்டுள்ளனர்.

வாக்களிக்குமாறு கேட்டபோதெல்லாம் வாக்களிக்கத் தவறவில்லை. தேர்தல்களை புறக்கணிக்க கேட்டபோதெல்லாம் புறக்கணிக்கத் தவறவில்லை. சப்பாணிகட்டி இருக்கச் சொன்னபோதெல்லாம் சத்தியாகிரகத்தில் இருக்கத் தவறவில்லை.

இடம்பெயரச் சொல்லி கேட்டபோதெல்லாம் இடம் பெயரவும் தவறவில்லை. பொன்னை-பொருளை, தங்கள் புதல்வர்களையெல்லாம் போர்க்களம் அனுப்பத் தவறவுமில்லை. தலைவர்கள் கேட்டதையெல்லாம் மக்கள் செய்யத் தவறவில்லை.

“ஏற்பட்ட இடிமுழக்கத்தின் அளவைவிடவும் பெய்த மழை சிறிது” என்று ஒரு முறை சோக்ரட்டீஸ் கூறியிருந்தார். 1977ஆம் ஆண்டு மேடையில் எழுந்து வானத்தில் வெடித்த இடிமுழக்கங்கள் தமிழ் மக்களின் வாழ்வில் பூமிக்கு இன்னும் மழையைக் கொண்டுவரவில்லை.

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகளாகப் போகும் நிலையில் தமிழ்த் தலைவர்கள் மத்தியிலிருந்து அப்படுகொலைக்கு எதிரான அரசியலையும், நீதிவிசாரணையையும் ஏற்படுத்துவதற்கான ஒரு செயல் அணியை தமிழ்த் தலைவர்கள் வடிவமைக்கத் தவறிவிட்டனர்.

தமிழ் மக்களின் ஒருநூற்றாண்டுகால அரசியல் பாரம்பரியத்தில் இத்தவறுக்கான பாரம்பரியம் உண்டு. இன்றைய தமிழ்த் தலைவர்கள் சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும், நிபுணத்துவம் கொண்டோரையும் உள்ளடக்கி இதற்கான ஒரு செயலணியை உருவாக்கியிருக்க வேண்டும்.

இதில் அவர்களுக்கு உண்மையாகவே ஈடுபாடு இருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய பொறுப்பற்ற அரசியல் தமிழ் மக்களுக்கு முள்ளிவாய்க்காலைவிடவும் பெருந்தோல்விகளை அளிக்கவல்லவை.

எப்படியோ வரம் சாபமாக்கப்பட்டுவிட்ட துயரம் கண்ணில் தெரிகிறது. முள்ளிவாய்க்கால் தோல்வியினதும், துயரத்தினதும் பின்னணயிலுங்கூட தமிழ் மக்களுக்கு ஒரு வரத்தைக் கொடுக்க தவறவில்லை. அந்த வரத்தின் பேரால் தமிழ் மக்கள் தமிழ்த் தலைவர்களுக்கு நாடாளுமன்றப் பதவிகளை பரிசளித்தனர்.

ஆனால் சிங்களத் தலைவர்களின் பரிசுகளான ரோயன் குதிரைகள் களத்தில் இறங்கி எல்லா வரங்களையும் சாபமாக்கும் அரசியலில் வெற்றி பெற்றுவிட்டன.

கசேந்திரா எதிர்வு கூறியது போல கிரேக்கரின் ரோயன் குதிரை களத்தில் இறங்கிய போது ரோய் எரியத் தொடங்கியது. அதீனா ஆலயத்துள் கசேந்திரா ஒளிந்து கொண்டாளாயினும் அவள் சிறைபிடிக்கப்பட்டு மன்னனும் கிரேக்கத் தலைமைத் தளபதியுமான அகமனனின் பாலியல் அடிமையாக்கப்பட்டாள்.

அந்த வேளையிற்கூட அகமனனிடம் கசேந்திரா தீர்க்கத்தரிசம் உரைக்கத் தவறிவில்லை. அவள் அகமனனிடம் இப்படிக் கூறினாள். அதாவது “நீயும் நானும் உனது மனைவியாலும், மனைவியின் கள்ளக்காதலனாலும் வாளுக்கு இரையாக்கப்படுவோம்” என்றாள்.

ஆனால் அவள் பெற்றிருந்த சாபத்தின் பலனாய் அப்போதுங்கூட அவளது தீர்க்கதரிசனத்தை அகமனன் எள்ளி நகையாடினான். அகமனன் கசேந்திராவோடு மகிழ்ச்சி பெருக்கெடுக்க படுக்கை அறையில் இருந்த வேளை அகமனனது மனைவியினதும், அவளின் கள்ளக்காதலனிதும் வாளின் முன் படுக்கையறை கொலைக்களமாய் மாறியது.

கசேந்திராவின் தீர்க்கத்தரிசனம் பலித்தது கூடவே அவளுக்கு அளிக்கப்பட்ட சாபமும் பலித்தது. அகமனனது மனைவியினதும், அவளது கள்ளக்காதலனினதும் கையில் இருந்த வாள்களுக்குப் பதிலாக தமிழ் மக்களிடம் வள்ளுவரின் எழுதுகோலும், சிலம்பேந்திய ஆயிரமாயிரம் கண்ணகிகளும் தமிழ் மண்ணில் எழுவார்கள் என்பதை உலகின் பல பகுதிகளிலும் அண்மைக் காலங்களில் எழுந்த மக்களின் சனநாயக வழிப் பேராட்டங்கள் நிரூபித்து வருகின்றன.

மகா பாரதத்தில் பார்வைப்புலனற்றிருந்த திருதராட்டினனுக்கு சஞ்சயன் களத்தில் நிகழந்து கொண்டிருந்த 18 நாள் யுத்தத்தை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் தமிழ் மக்களின் அரசியல் பாரம்பரியத்தில் தலைவர்களின் கண்களை திறக்கவல்ல இடித்துரைப்போரோ அல்லது அப்படி இடித்துரைப்போர் இருந்தாலும் அதனை செவிமடுத்தவல்ல தலைவர்களோ இல்லையென்பதை நூற்றாண்டுக்கால வரலாறு படம் போட்டுக் காட்டுகிறது.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.

என்ற திருக்குறளைக் கருத்தில் கொண்டு அறிஞர்களும், பத்திரிகைகளும் மற்றும் ஊடகங்களும் இடித்துரைக்கும் பணியை நெஞ்சுறுதியுடனும், நேர்மைத்திறனுடனும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இங்கு இக்கட்டுரை யாரையும் திட்டித் தீர்ப்பதையோ, சபிப்பதையோ நோக்கமாகக் கொண்டதல்ல.

வரலாற்றுக் கண்ணாடிக்கு ஊடாக கடந்தகால, நிகழ்கால சரி, பிழை, நல்லது, கெட்டது என்பதை தரிசிப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் எதிர்காலத்திற்கான ஒரு நல்ல பாதையை வடிவமைக்க முடியும்.

எப்படியோ இன்றைய நிகழ்காலம்வரை தமிழரின் கடந்தகால பாதைகள் அனைத்தும் பொய்த்துவிட்டன என்பதால் ஒரு புதிய மதிப்பீட்டுடன் தமிழ் மக்கள் அறிவுபூர்வமான பண்பாட்டு முன்னுதாரணம் மிக்க ஒரு புதிய வழியைத் தேடவேண்டியது வரலாற்றின் கட்டளையாக உள்ளது.

நகரீக வளர்ச்சியும், பண்பாட்டுச் செழுமையும் கொண்ட இலங்கைத் தமிழர்களை தோற்கடிக்க முடியாதென 1950களின் மத்தியில் டாக்டர் என்.எம்.பேரேரா கூறிய எதிர்வு கூறலை தமிழ் மக்கள் நிரூபிக்க வேண்டிய காலம் அவசர அவசரமாய் எழுந்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் தந்த வரம் சாபமாகியுள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன என்பதை அறிஞர் பெருமக்களும், ஊடகவியலாளர்களும், கலை இலக்கிய கர்த்தாக்களும், மக்களும் இணைந்து தீர்மானிக்க வேண்டும்.

வரம் சாபமானதிலிருந்து சாபத்தை விமோசனமாக்குவதற்கு மிக நீண்ட தூரம் நீதியின் பேராலும், தர்மத்தின் பேராலும், உன்னதமான பண்பாட்டின் பேராலும் பயணிக்க வேண்டியுள்ளது என்பது மட்டும் உண்மை.

: மு.திருநாவுக்கரசு

Advertisements