காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் நன்கு உணர்ந்து கொண்டுள்ள போதிவும், தமக்கு சார்பாக செயற்படாமல், அரசாங்கத்திற்கு சார்பாக அவர் செயற்படுவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடனடியாக பதில் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பாக பதில் வழங்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியிலும் கடந்த 12 நாட்களாக தொடர் போராட்டம் இடம்பெறுகின்றது.

இந்த நிலையிலே, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பாக பதில் வழங்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று 8 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

காணாமல் போனோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு தீர்வு வழங்குமாறு கோரி 2 ஆயிரத்து 750 கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisements