ஈழத்தின் புரட்சிப் பாடகர் சாந்தன் காலமானார்
ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய “மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.

தொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.

எண்பதுகளின் இறுதியில் “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற பாடலில் ஆரம்பித்து “களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்….”, “ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..”, “கரும்புலிகள் என நாங்கள்…”, “எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்” முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.

போராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.

கடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ எனும் பாடலின் மூலம் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த சாந்தன் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் புகழ்கூறும் “பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார் கொக்கட்டிச்சோலையிலே உருவானார்”

மற்றும் அம்பிளாந்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் புகழ் கூறும் தோரணம் இசைப்பேழையில் உள்ள மூன்று பாடல்கள் என பல பாடல்களை பாடி தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

***


எஸ். ஜி. சாந்தன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ஜி. சாந்தன் ((குணரத்னம் சாந்தலிங்கம், இறப்பு: 26 பெப்ரவரி 2017) ஈழத்துப் பாடகரும், நாடகக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது.

கலைப்பயணம்

இவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம். அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக இதுவே அமைந்தது. இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.

குடும்பம்

இவரது இரு மகன்கள் மாவீரர்கள். மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர். இரண்டாவது மகன் இசையரசன்
இவர் பாடிய பாடல்களில் சில

பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்
ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா

கலைஞர்கள் எல்லோருக்கும் சொந்தமானவர்கள் – மதுரக் குரலோன் சாந்தன்

“கலைஞன் எல்லோருக்கும் சொந்தக்காரன் அவன், இவர், இவருக்குரியவன் என சுட்டுவது தவறானது. கலைத்துறை ரம்மியமானது. இதில் போட்டியிருக்கலாம். அது பொறாமையாக மாறிவிடக்கூடாது. பொறாமை ஏற்பட்டால் எமது அடுத்த சந்ததி வளர முடியாத நிலைமை ஏற்படும். நம் நாட்டுக் கலைஞர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதுவே எமது தனித்துவத்தை நிலை நாட்டுவதற்கான ஆதாரம்” இவ்வாறு தனது கணீரென்ற மதுரக்குரலால் தற்கருத்தை முன்வைத்தார் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன்.

கே: உங்களைப் பற்றி முதலில்…

எனது அப்பாவுக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அத்துடன் எங்களுக்குச் சொந்தமாக ஒரு அறையும் இருந்தது.

யாழில் எங்களுக்கு பாடசாலை விடுமுறை கொடுத்ததும் நாங்கள் கொழும்புக்கு போய் அப்பாவுடன் நிற்போம். இப்படி ஒருமுறை கொழும்பில் நிற்கும் பொழுது செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது இதனை பார்க்கச் சென்றிருந்தேன் அப்போது அங்கு பாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

“மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை பாடினேன். பாடி முடிந்ததும் நல்ல கைதட்டல் கிடைத்தது. இதனையே நான் எனது ஆரம்பமாக கருதுகிறேன். இது 1972 இல் நடந்தது. அதுதான் எனது முதல் மேடை அனுபவம். அதன் பின் நான் வீதியில் சென்றாலும் என்னை அழைத்து தம்பி அந்த “மருதமலைப் பாடலை” பாடு என்பார்கள் நானும் பாடுவேன்.

இந்நிலையில் அந்தத் தெருவில் பழம் சாப்பிடவரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் என்னை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அப்போது சிறுவர் மலரை பத்மநாதன் மாமா என்பவரே நடத்தி வந்தார். தொடர்ந்து இந்த வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடித்தேன்.

கே: இதன் பின்னர் உங்களது மேடை இசைத்துறை பயணம் எவ்வாறு இருந்தது?

இப்போது இருக்கும் அப்சராஸ் இசை குழுவை ஆரம்பிக்கும் முன் சித்ராலயா என்ற இசைக் குழுவை செல்லத்துரை அண்ணன் ஆரம்பித்தார். அவர் தற்போது கொழும்பில் பாடுகிறார் என நினைக்கிறேன். அந்த நேரம் நான் சித்ராலயாவில் பாட ஆரம்பித்தேன். அப்போது எனக்கு ஓரளவு தாளம், சுருதி என்பவற்றை முதலில் சொல்லித்தந்த மனிதர் என்றால் அது செல்லத்துரை அண்ணன் தான். அவரை என்னால் மறக்க முடியாது.

அவர் துணிந்து மேடை ஏறியதால் தான் என்னை அறியாமலே இந்த இசை துறையில் தடம் பதிக்க ஆரம்பித்தேன்.

முத்துசாமி மாஸ்டரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் காண்பேன். என்னைத் தட்டிக் கொடுப்பார். நாராயணன் என்ற சங்கீத வித்துவானும் பாடு எனத் தட்டிக் கொடுத்தார். இவ்வாறாக எனது பயணம் தொடர்ந்தது.

கே: இந்நிலையில் நீங்கள் கொழும்பிலிருந்து இடம்பெயர நேர்ந்தது ஏன்?

எனது அப்பாவின் கடை நஷ்டமாகி விடவே அவர் 1977 ஆம் ஆண்டு கிளிநொச்சி வந்தார் நாம் 1979இல் கிளிநொச்சி வந்து ஆர்மோனியத்தோட பாட ஆரம்பித்த நான், 1981 ஆம் ஆண்டு கண்ணன் கோஷ்டியில் சேர்ந்து பாட ஆரம்பித்தேன்.

எனினும் என்ன பிரச்சினையோ 1982 ஆம் ஆண்டு கண்ணன் மாஸ்டர் இசைக் குழுவை நடத்துவதை கைவிட்டார். இந்நிலையில் நான் “சாந்தன் இசை குழு” என்ற ஒரு மெல்லிசை இசைக் குழுவை ஆரம்பித்து பாடிவந்தேன். அப்படியே வாழ்வு வேறொரு கட்டமைப்புக்குள் வந்தது. அங்கு பாடிய நான் மீண்டும் பக்திப் பாடல், சினிமாப் பாடல் என பரிமாணம்… பாட வந்துவிட்டேன்.

கே: மேடை நிகழ்ச்சிகளில் எவ்வாறான பாடல்களை இப்போது பாடி வருகிறீர்கள்?

இடைக்காலம் சினிமாப் பாடல்களைப் பாடுவதை, விட்டு தத்துவபாடல்களையும் பக்திப் பாடல்களையும் பாடுகின்றேன். பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் பாடல் கேட்டிருக்கிறீர்களா அதுதான் என்னை பிரபல்யப்படுத்தியது. இது மட்டுமின்றி முத்துவிநாயகர், ஆதிகோவில் என்பவற்றுக்கு பாடி வருகிறேன்.

எனக்கு பக்திப் பாடல் என்றால் மிகவும் விருப்பம். எனது ஆத்ம திருப்திக்காக பாடும் பாடல்கள் என்றால் அது பக்திப்பாடல் தான்.

கே: சமகால சினிமாப் பாடல்களைத் தாங்கள் பாடுவதில்லையா?

தற்போது எனக்கு சினிமாப் பாடல்களை பாடமுடியாது என்றல்ல, பாட முடியும். இருந்தாலும் கருத்து மிக்க பழைய பாடல்களையும், இடைக்காலப் பாடல்களையும் பாடுகிறேன். புதிய பாடல்களை தற்போது எனது பிள்ளைகள் பாடுகின்றனர். அவர்களுக்கு நாங்கள் விலகி நின்று இடமளிக்கின்றோம்.

கே: அன்றைய பாடல்களுக்கும் இன்றையப் பாடல்களுக்கும் இடையிலுள்ள இசை வேறுபாடுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பழைய பாடல்கள் பாடல்கள் இசை என்பன மனதில் நிலைத்து நிற்க கூடியவை இதனை உருவாக்க இசையமைப்பாளர்கள் அதிக நேரத்தை பயன்படுத்தினர். ஆனால் இப்போது இசைக் கருவிகள் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளதால் பாடல்களை உருவாக்குவது வேகம் பெற்றுள்ளது. வசன அமைப்புக்கள் மெல்ல பின் தள்ளப்பட்டு இசைக் கருவிக்கு முதலிடம் வழங்கப்படுவதாக நான் கருதுகிறேன்.

கே: இசைத்துறையில் உங்களுடைய சாதனையாக எதை நினைக்கிறீர்கள்?

“கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” இது குறித்து நாங்கள் யாரோடும் போட்டி போட முடியாது.

ஏனென்றால் இசை என்பது சத்திரத்திற்கு ஒப்பானது இதன் அடி நுனியை காண்பது என்பது இலகுவானது அல்ல என்னைவிட மற்றவன் திறமைகளையே நான் சாதனையாகக் கருதுகிறேன். அவரவரது திறமைகளை சாதனைகளை இரசிகர்களே தீர்மானிக்கிறார்கள்.

இருப்பினும் நாங்கள் செய்யும் தொழிலை சுத்தமாக செய்வதற்கு முனைய வேண்டுமே தவிர, யாரோடும் போட்டி போடுவது அல்லது பொறாமைப்படுவதும் முறையல்ல.

கே: இத்துறையில் போட்டி மனப்பான்மை இருப்பது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?

போட்டி இருக்க வேண்டும் ஆனால் அது பொறாமையாக மாறக் கூடாது. மாறினால் அடுத்த சந்ததி வளராமல் அழிந்து போகும் நிலை ஏற்படும். எமது இசை மக்களுக்கு சலித்துவிடாமல் பின்னால் முன்னேறி வருபவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும். அவர்கள் முன் செல்ல வழி செய்ய வேண்டும்.

அந்த எண்ணம் எல்லா கலைஞர்களுக்கும் இருக்க வேண்டும். எவரேனும் நன்றாக செய்தால் அவரை முன் உதாரணமாக எடுத்துக் கொள்வேனே தவிர, அது திறம் இது திறம் என்ற கொள்கை என்னிடத்தில் இல்லை.

கே: இப்பொழுது உங்கள் பெயரில் ஓர் இசைக்குழுவை ஆரம்பித்துள்ளீர்கள். உங்களுக்குப் பின் இந்த இசைக் குழுவைக் கொண்டு செல்வது யார்?

அப்படி ஒரு நியதியை வைத்து இந்த இசைக் குழுவை நான் தொடங்கவில்லை நானிருக்கும் வரை செய்வேன். எனக்கு இந்தத் தொழிலில் 39 வருடகால அனுபவம் உள்ளது.

சில சந்தர்ப்பங்களில் இந்தத் தொழிலை விடலாமா என்று கூட சிந்தித்து இருக்கின்றேன். அந்த அளவிற்கு கஷ்டப்பட்டிருக்கிறேன்.

“பேச்சு பல்லக்கு தம்பி கால்தடை” என்பர். அதுபோல ஊரெல்லாம் பேசுவார்கள் சாந்தன் இப்படிப் பாடுறார் அப்படிப் பாடுறார் என்று ஆனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தேன். இருப்பினும் கலையிலுள்ள பற்றும் அன்பும் மக்கள் ஆதரவும் இதிலிருந்து ஒதுங்கிவிடாது செய்துள்ளது.

இந்நிலை எனது பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடாது. அவர்கள் பொருளாதார ரீதியில் வளர வேண்டும். என்பதையும் என்னால் தீர்மானிக்க முடியாது அதை இறைவன் கொடுக்க வேண்டும்.

கே: தங்களது பிள்ளைகள் இத்துறையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது குறித்து எதை உணர்கிறீர்கள்?

நல்ல வரவேற்பு இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது நான் மேடையில் பாடிவிட்டு வரும் போது எனது அப்பா சந்தோஷமாக சொல்வார் “என்ர மகனை போல பாட யாருமில்லை; நல்லா பாடுறான்” அதே நிலையிலேயே இன்று நானும் இருக்கிறேன்.

கே:இப்போது தங்களது தனித்துவமான இசை முயற்சிகள் எவ்வாறுள்ளன?

இறுவட்டுகள் பலவற்றில் பாடி வருகிறேன். பல கோயில்கள் குறித்த இறுவெட்டுக்களும் வெளிவந்துள்ளன.

திருகோணமலை சண்டிலிப்பாய் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சில ஆலயங்களுக்கான பாடல்கள் இதில் அடங்குகின்றன. இது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

கே: உங்களது இசைப்பயணத்தில் நெகிழ்ச்சித்தரும் நிகழ்வாக அமைந்தது எது?

ஒரு காலத்தில் தென் இந்திய பாடல்களை மட்டும் பாடிக் கொண்டிருந்தோம் எங்களுடைய இசையில் சுயமாக எனது குரலில் சொந்தப் பாடல்கள் பாடும்போது நெகிழ்திருக்கின்றேன்.

கே: விரைவில் அதாவது எதிர்வரும் 11ஆம் திகதி உங்கள் இசை நிகழ்ச்சியன்று கொழும்பில் நடைபெறுவதாக அறிகிறோம். இதுகுறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்.

ஆம். பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முழுமையாக எனது இசைக்குழுவினர் இந்நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர். நம்நாட்டிலுள்ள திறமைமிக்க கலைஞர்களை இம் மேடையில் நீங்கள் சந்திக்கலாம். நம்மவர்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை இந்நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்து மகிழலாம்.

**

ஈழ புரட்சிப் பாடகர் எஸ்.ஜி சாந்தனின் உயிர்பிரிந்தது. மேடையில் இறந்தாலும் பறவாயில்லை பாடல் தான் என்னுடைய உயிர் மூச்சு.
எஸ்.ஜி.சாந்தன்

**

தேசப்பாடகனுக்கு எமது இரங்கல் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

விடுதலைக் குயிலே எங்கு சென்றாய்!

விடுதலைக் குயிலே எங்கு சென்றாய்! எங்கள்
வேங்கையின் குரலே எங்கு சென்றாய்!
ஈழத்தின் விடுதலை கூவிய குயிலே
ஈழக்காற்றினில் கலந்தாயோ…

இந்த மண் எங்களின் சொந்தமண் – என்று
எங்கினும் உன் குரல் கேட்குதையா!
எங்கள் தேசத்தின் அடையாளக் குரலாக ஒலிக்கின்ற
வீரியம் எம்மை ஆளுதையா!

மேடையில் புலியாகி நீ நின்றால் – எம்
நரம்புகள் புடைத்துமே நிற்குமையா – ஈழ
மேன்மையை உன் குரல் பாடி நின்றார்
எதிரிகள் அடிவயிறும் நடுங்குமையா

உலகெங்கும் சென்றுமே குரல் கொடுத்தாய் – எங்கள்
விடுதலை வேள்வியில் தீ வளர்த்தாய்
நீ பெற்ற மைந்தரை ஈழம் தந்தாய் – எம்
நெஞ்சத்தின் மூலத்தில் வீற்றிருப்பாய்.

குரலெனும் ஆயுதம் ஏந்தி அனல் குயிலாய்
போர்புரிந்த மறவன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

**

எஸ்.ஜி.சாந்தன்

“செந்தூருக்க கோலம் வானத்துல பாரு
வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு”

உரும்பிராய்ப் பக்கமிருக்கும் வானத்தை நோக்கித் தன் விரலால் காட்டி விட்டுக் கூடப் பாடும் சேவியர் சுகுமாரனைக் காதலோடு பார்த்துப் பாடுகிறது அந்தக் குரல்
“சேரும் இள நெஞ்சங்களை வாழ்த்துச் சொல்லக் கோர்த்தார்களா ஊருக்குக்குள்ள சொல்லாததை வெளியில் சொல்லித் தந்தார்களா?”

கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயில் முன்றலில் கே.கே.எஸ். றோட்டை மறித்துப் போடப்பட்ட தற்காலிக திடலில் மக்கள் திரண்டிருக்க, கோயிலின் வெளிப்புற மதிலை ஒட்டிய பக்கம் போடப்பட்ட மேடையில் இருந்து ஒலிக்கிறது அந்த கணீர்க் குரல். ஜிப்பாவும், வேட்டியும் கட்டி, முறுக்கேறிய அந்த அழகிய உருவத் தோற்றமே தென்னிந்திய சினிமா நட்சத்திரமொன்று எங்கள் முன்னால் நிற்பது போல ஒரு பிரமை. குரலுக்குச் சொந்தக் காரர் வேறு யாருமல்ல, அந்த எவரைப் பற்றிய அந்தப் பசுமையான நினைவுகளை எழுதும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு மெய் சிலிர்க்கின்றனவே அவர் தான் எஸ்.ஜி.சாந்தன்.

1991 ஆம் ஆண்டென்று நினைக்கிறேன் அதுதான் சரியாகப் பொருந்திப் போகிறது. எங்கள் அயலூர் கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயிலின் இரவுத் திருவிழாவுக்கு அருணா கோஷ்டி வருகிறது என்ற செய்தி வந்தவுடன், என் சகோதரனும் நண்பனுமான சுதாவோடு சைக்கிள் போட்டுக் கோயிலுக்குப் போகிறோம். நாச்சிமார் கோயிலடி ஐயரின் ஶ்ரீதேவி வில்லிசைக் குழு நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்த போது சாமப் போர்வையில் நட்சத்திரப் பதக்கங்கள் மின்னிக் கொண்டிருந்தது.

அடுத்தது அருணா இசை குழு தான் என்ற உற்சாகத்தில் சனம் தம்மை ஆசுவாசப்படுத்துகிறது. ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று நேரம் கடந்தாலும் கூட்டம் அசையவில்லை. அப்போது தான் ஒரு மொறிஸ் மைனர் கார் வந்து நிற்க, பின்னால் ஒரு வானும் சேர்ந்து கொள்கிறது. கூட்டத்தின் ஒரு பகுதி எட்டிப் போய் அந்தக் காரையும் வானையும் மொய்த்து விட்டு வந்து கடலைச் சரை போட்டுக் குறி வைத்த தம் இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறது.

“அளவெட்டியில இருந்து கச்சேரி முடிச்சு வருகினமாம், தொடர்ச்சியா மூண்டு கச்சேரி பார்வதி சிவபாதத்துக்குத் தொண்டை கட்டிப் போச்சாம் பெண் பாடகிக்கு என்ன செய்யப் போகினமோ” என்று உச்சுக் கொட்டியது வேவு பார்த்து விட்டு வந்த சனம்.

அருணா இசைக்குழு கடகடவென்று தம் வாத்தியங்களை மேடையில் பரப்ப, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் பாட்டுக் கச்சேரி தொடங்கி விட்டது.
“தேவன் கோயில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை” என்று தன் ஒலிவாங்கியை இரு கைகளால் பவ்யமாகக் கோத்துக் கொண்டு ஆராதித்துப் பாடும் அந்தக் கலைஞன் எஸ்.ஜி.சாந்தன் என்று என்று எனக்கு முதன் முதலில் அறிமுகமாகிறார்.

அந்த நிகழ்ச்சியைத் தொகுத்தவர் பெயரைத் தற்சமயம் மறந்து விட்டேன், ஒரு காலத்தில் றேடியோ சிலோனில் இருந்தவர் பின்னாளில் ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்து அங்கும் வானொலிப் பணி செய்தவர். அவர் தன் கம்பீரக் குரலால் அறிமுகப்படுத்திய போது எம் போன்ற அடுத்த தலைமுறை இளையவர்களிடம் எஸ்.ஜி.சாந்தன் பதியம் போட்டு உட்கார்ந்து விட்டார். இவர் தான் தொடந்து எம் வாழ்நாளில் மறக்க முடியாத பாடகராக அமையப் போகிறார் என்பதும் அப்போது எமக்குத் தெரிந்திருக்காது.

பார்வதி சிவபாதம் இல்லாத தனிக் கச்சேரியா என்ற எங்கள் அவ நம்பிக்கையைத் தகர்த்துப் போட்டது “ராசாத்தி மனசுலே இந்த ராசாவின் நெனப்புத்தான்” சேவியர் சுகுமாரன் பெண் குரலெடுத்துக் கச்சிதமாகப் பாட, “தேவன் கோயில் மணியோசை” பாடலில் சீர்காழியாக உருகி நின்றவர் “ராசாத்தி மனசுல” பாடலில் மனோவாக காதல் ரசம் கொட்டிப் பாடுகிறார் இந்த எஸ்.ஜி.சாந்தன். இன்னும் “கேளடி கண்மணி காதலன் சங்கதி” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியமாகக் குரல் தணித்து இன்னொரு வேடம் பூணுகிறார் எங்கள் சாந்தன்.

தன்னுடைய குரலை வெவ்வேறு பரிமாணங்களாக வெளிப்படுத்தி, பாடும் போது தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பி போன்று மக்களோடு மக்களாய்க் குதூகலித்துப் பாடும் வித்தை கற்ற நட்சத்திரப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் ஊர் ஊராய் மக்கள் மனதில் ஊன்றியது இப்படித்தான். அப்போது பள்ளிக்கால விடலைகளாய் இருந்த எங்கள் காலத்துக்கு முற்பட்ட பால்ய காலத்து கண்ணன் கோஷ்டி மெல்லிசை மேடைகளிலும் எஸ்.ஜி.சாந்தனின் பங்களிப்பு இருந்தது பின்னாளில் தெரிந்த கதை. சாந்தனுக்காக, சேவியர் சுகுமாரனுக்காக, பார்வதி சிவபாதத்துக்காக கோயில் கோயிலாகத் திரிந்து திருவிழா மேடைகளில் அவர்களைக் கண்டு பூரித்தது ஒரு பொற்காலம்.

ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் தமிழகத்துப் பாடகர்களால் பாடி ஒலியேறிய காலம் கடந்து ஈழத்து இசை வல்லுநர்கள் இசைவாணர் கண்ணன் முதற் கொண்டு உள்ளூர்க் கலைஞர்களின் சங்கமம் அரங்கேறிய போது எஸ்.ஜி.சாந்தனின் அடுத்த பரிமாணம் வெளிப்படுகிறது. அதுவரை சினிமாப் பாடல்களால் அடையாளப்பட்டவர் நம் தாயகக் கலைஞன் என்ற சுய அந்தஸ்த்தை நிறுவுகிறார்.

ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் மரபிசை சார்ந்த திரு.பொன்.சுந்தரலிங்கம், திரு.வர்ண இராமேஸ்வரன் போன்ற நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு வெகுஜன அந்தஸ்துப் பெற்ற பாடகன் எஸ்.ஜி.சாந்தனின் வரவு தனித்துவமாக அமைகிறது. தன் குரலில் மிடுக்கையும், உணர்வையும் ஒரு சேரக் கொடுக்கும் திறன் , இயல்பாக உள்ளே பொதிந்திருக்கும் நடிப்பாற்றல் சேர்ந்த ஒரு ஜனரஞ்சகக் கலைஞராகப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் வீறு கொண்டு வியாபித்த சாந்தன் குரல் பறையொலிக்கு நிகரான போர் முழக்கமாகத் தெனித்தது.

“போற்றியெம் தமிழெனும் காவியப் பொருளே” என்று சங்கீத பூஷணம் திரு பொன்.சுந்தரலிங்கம் தன் மரபிசை சார்ந்த வெளிப்பாட்டைக் குரல் வழியே வெளிப்படுத்த
“ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்”

http://download.tamiltunes.com/songs/Eelam-Song

என்று தன் தாய்த் தாய்த் தமிழைப் போற்றிப் பாடும் அந்தக் குரலின் பாங்கு இன்னொரு திசையில் இருந்து கிளம்புகிறது எஸ்.ஜி.சாந்தனின் குரல் அது இன்னொரு முத்திரை இந்த இரண்டு விதமான இசைக் கூறுகளின் அடிப்படையிலேயே ஈழத்துப் போர்க்கால இசைப்பாடல்கள் தம்மை நிறுவியிருக்கின்றன.

“ஈடு வைத்து ஈடு வைத்து நந்தலாலா”

பாடல் ஆனையிறவுப் போர்க்களம் கடந்து பின்னாளில் சந்தித்த எல்லாக் களமுனைகளிலும் நின்றிருந்த போராளிகளின் வாயில் முணுமுணுக்க வைத்திருக்கும். அந்தக் காலத்துக் குஞ்சு குருமான்களும் சாந்தனின் குரலைப் பிரதி பண்ணிப் பாடிப் பார்த்தன.

“விண் வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும் ”

அந்த நீண்ட பாடலைக் கடப்பதற்குள் எத்தனை முறை அழுதிருப்பேன்/போம் அங்கே சாந்தன் வெளியில் நின்று வேடிக்கை பார்த்த எங்கள் குற்ற உணர்ச்சியைத் தட்டியெழுப்பியதோடு மானசீகமான அஞ்சலியையையும் கொடுக்க வைத்தார் தன் குரலில் பொதிந்த கற்பூர மெழுகால்.

ஈழத்துப் போர்க்காலப் பாடல்கள் வெறும் வீரத்தை மட்டுமா பறை சாற்றியும் தட்டியெழுப்பியும் வைத்தது? தமிழின் பெருமையை, ஈழத்து ஆலயங்களின் மகிமையையும் அல்லவா அரவணைத்தது. வடக்கிலிருந்து கிழக்கின் கோடி வரை போற்றித் துதித்தது எஸ்.ஜி.சாந்தனின் குரல்
http://thesakkatru.com

மொழியும் கலையும் எம் இனத்தின் இரு கண்கள் என்பது போல ஈழத்துக் கூத்திசைக்கான பாடல்களில் எஸ்.ஜி.சாந்தனின் குரலும் கையாளப்பட்டது. முந்த நாள் சிவராத்தியில் புலம் பெயர்ந்த சமூகத்தைக் கொக்கட்டிச்சோலைத் தாந்தோன்றீஸ்வரர் கோயிலுக்குப் போக வைத்தது “பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்”

இன்னும் “ஆழக் கடலெங்கும் சோழ மகராசன் ஆட்சி செய்தானே அன்று”

என்று தலைவனைப் போற்றிய குரலாய், போர்க் கால மேகங்களில் மீனவர் படும் துயரின் வெளிப்பாடாய் “வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்”

“இந்த மண் எங்களின் சொந்த மண்”

என்று உறுதியின் குரலாயும் “குயிலே பாடு”

http://thesakkatru.com/wp-content

என யாசித்துப் போகும் அத்துணை போர்க்காலத்து உணர்வுகளின் வெளிப்பாடாய் எஸ்.ஜி.சாந்தனின் குரல் ஆவணப்படுத்தியிருக்கிறது.

இவற்றையெல்லாம் எழுதும் போது ஒரு பெருங்குற்ற உணர்வை ஈழ சமூகத்தோடு சேர்ந்து சுமக்க வேண்டியிருக்கிறது. எஸ்.ஜி.சாந்தன் நோய்ப் படுக்கையில் இருக்கிறார் என்று செய்தி வந்த போது முந்திக் கொண்டிருக்க வேண்டும் அவருக்கான மருத்துவ உதவிகளுக்குப் பணம் வேண்டும் என்ற அறை கூவல் வருவதற்கு முன். மீண்டும் ஒருமுறை நாம் நன்றி மறந்த சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டு நிற்கிறோம்.
தன்னுடலில் நோயைச் சுமந்து கொண்டு வாழ்வாதாரத்துக்காக மேடையேறிப் பாடிய இந்தக் காணொளியைக் காணும் போது

அந்தக் குற்ற உணர்ச்சி மிகும்.
இன்றும் கூட அந்தக் கலைக் குடும்பத்தை ஏந்திப் பிடிக்க நாம் முன் வர வேண்டும்.

எஸ்.ஜி.சாந்தன் குறித்த இன்றைய செய்திகள் எல்லாம் வெறும் செய்திகள் தான்.

எஸ்.ஜி.சாந்தன் எங்களிடமிருந்து காலாகாலமாகப் பிரிக்க முடியாத உணர்வு மட்டுமே.

சாந்தன் குறித்த பிபிசி ஆவணம்
http://www.bbc.co.uk/programmes/p03tnxmx

http://www.madathuvaasal.com

Advertisements