மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம் சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் பொதுவான “புனித நூல்” ஒன்று இருக்குமானால், அது மகாவம்சம் தான். இவ்விரண்டு மொழித் தேசிய இனவாதிகளும், அடிக்கடி மகாவம்சத்தை உதாரணமாகக் காட்டிப் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக துட்டகைமுனுவின் கதை, அதில் அவன் தமிழர்களைப் பற்றிக் கூறும் வாசகம், அளவுக்கு அதிகமாகவே மேற்கோள் காட்டப் படுகின்றது. (“கங்காவுக்கு அப்பால் தமிழர்களும், இந்தப் பக்கம் கோதா கடலும் இருக்கும் போது, நான் எப்படி கை, கால்களை நீட்டி சுகமாகப் படுக்க முடியும்?” – துட்டகைமுனு) எல்லாளனை வென்று இலங்கைத் தீவை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்த துட்டகைமுனு வாழ்ந்த காலத்திற்கும், மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையில் குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. இத்தனை வருடங்களுக்குள் ஆயிரம் மாற்றங்கள் நடந்திருக்கலாம். அதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல், மகாவம்சத்தில் எழுதப் பட்டவற்றை உண்மை என்று நம்புவதால், அது ஒரு புனித நூல் தானா, என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

கி.பி. 400 ம் நூற்றாண்டளவில் மகாவம்சம் எழுதப் படுவதற்கு முன்னர், தீபவம்சம் என்றொரு நூல் இருந்தது. அந்த நூல் குறித்து, வெளியில் அறிந்தவர்கள் குறைவு. தீபவம்சத்தில் எழுதப் பட்ட சரித்திரக் குறிப்புகள், மகாவம்சத்தில் பிரதி செய்யப்பட்டுள்ளன. மகாவாம்சம் எழுதிய மகாசேன தேரர், அந்தக் காலத்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, துட்டகைமுனு அரசனை நாயகனாக சித்தரிக்கின்றார். மகாவம்சத்தில் வேறெந்த அரசனுக்கும் கொடுக்கப்படாத முக்கியத்துவம், துட்ட கைமுனுவுக்கு கிடைத்துள்ளது. நூலில் கிட்டத்தட்ட அரைவாசிப் பகுதி, அந்த மன்னனின் சரித்திரத்தைக் கூறுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் துட்டகைமுனு என்ற மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 161 – 137. இதற்கும் மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் கவனிக்கவும். சுமார் 500 ஆண்டு இடைவெளிக்குள், இலங்கைத் தீவில் பல்வேறு அரசியல்/பொருளாதார/சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். நமது காலத்தில் சில சரித்திர நாயகர்களை போற்றி, அவர்களைப் பற்றிய இலக்கியங்களைப் படைப்பது போன்று தான், மகாவம்ச காலத்திலும் நடந்திருக்கும். மகாவம்சம் எழுதப் பட்ட காலத்தில் இடம்பெற்ற, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இலங்கையின் தலைவிதி, அந்தக் காலத்திலும் இந்தியாவில் நடக்கும் மாற்றங்களுடன் பின்னிப் பிணைந்திருந்தது.

அசோக சக்கரவர்த்தி காலத்தில், இந்தியா முழுவதும் பரவியிருந்த பௌத்த மதம் பிற்காலத்தில் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. தமிழகத்தில் பக்தி மார்க்கம் என்ற பெயரில், சைவ சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கவனிக்கப் படாத குறுநில மன்னர்களாக இருந்த சோழர்கள், வட நாட்டு பார்ப்பனர்கள் உதவியுடன் ஆட்சியை ஸ்திரப் படுத்தினர். சோழ சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட காலத்தில், பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட சைவ சமயம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது. சைவ சமயம் ஆட்சியாளர்களின் மதமாக ஆதிக்கம் செலுத்திய காலத்தில், பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. பௌத்த, சமண மதங்கள் மட்டுமல்ல, இந்து மதத்தின் பிரிவாக கருதப்படும் வைஷ்ணவமும் அடக்குமுறைக்கு உள்ளானது.

சோழர்களின் காலத்திற்கு முன்னரே, தமிழகத்தில் பௌத்த மதம் ஏறக்குறைய அழிந்து விட்டிருந்தது. அந்த இடத்தை சமண மதம் பிடித்திருந்தது. அதனால், சைவ மத ஆதிக்க சக்திகள், சமண மதத்தை அழிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தின. பௌத்த மதத்தை சேர்ந்த தமிழர்கள், ஏற்கனவே இலங்கைக்கு தப்பியோடி புகலிடம் கோரியிருந்தனர். இவர்களில் பல பௌத்த துறவிகளும் அடக்கம். இன்றைக்கு அகதிகளாக புலம்பெயரும் மக்கள், எத்தகைய கோரமான கதைகளை காவிக் கொண்டு வருவார்கள், என்பதை நான் விளக்கத் தேவையில்லை. அது போன்று தான், அந்தக் காலத்தில் இலங்கைக்கு புலம்பெயர்ந்த தமிழக பௌத்த அகதிகள், சோழர்களின் கொடுமைகளை கூறும் கதைகளை காவிச் சென்றிருப்பார்கள்.

பிற்காலத்தில் சோழர்கள் இலங்கையையும் கைப்பற்றி தமது சாம்ராஜ்யத்துடன் இணைப்பதற்கு முயற்சித்தனர். இராஜேந்திர சோழன் காலத்தில் அந்த எண்ணம் நிறைவேறியது. இலங்கையும் சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. இத்தகைய சரித்திரப் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. அதாவது, சோழ ஏகாதிபத்தியம், பிராமணிய-சைவ மத ஆதிக்கம், இவற்றிற்கு எதிரான, ஒரு வகை “பௌத்த மத தேசியவாதத்தை” உருவாக்குவதே, மகாவம்சம் எழுதியவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். நமது காலத்திற்கு முந்திய நூல்களையும், நாயகர்களையும் அந்தக் காலத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், வரலாற்றுத் திரிபுகளும், தவறான கருத்துகளும் நமது கால அரசியலை தீர்மானிக்க வைத்து விடும்.

இலங்கை மீதான சோழர்களின் படையெடுப்பு கூட, அவர்களின் தமிழக எதிரியான பாண்டிய மன்னனின், இரத்தினக் கற்கள் பதித்த முடியை அபகரிப்பதற்காகவே நிகழ்ந்துள்ளது. அதாவது, அன்று இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையில் நெருங்கிய ராஜதந்திர உறவு காணப்பட்டது. பல சிங்கள மன்னர்களும், பிரபுக்களும், பாண்டிய நாட்டு உயர்குல தமிழ் பெண்களை மணம் முடித்திருந்தனர். இத்தகைய நெருங்கிய உறவின் நிமித்தம் தான், சோழர்களால் ஒடுக்கப்பட்ட பாண்டிய மன்னன், தனது பொன்முடியை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தான். ஆகவே, அன்றைய போர்களை சிங்கள-தமிழ் முரண்பாடாக கருதுவது அறியாமையின் பாற்பட்டது. சைவ- பௌத்த முரண்பாடு கூட, சில வேளை ஆட்சியாளர்களின் ஆதிக்க வெறிக்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால், அது அன்றைய அரசியலில் பெருமளவு தாக்கம் செலுத்தவில்லை. ஏனெனில், இலங்கை முழுவதையும் கைப்பற்றி ஆண்ட சோழர்கள், சைவக் கோயில்களை மட்டும் கட்டவில்லை. உதாரணத்திற்கு, தமிழ் பௌத்தர்கள் வழிபடுவதற்காக, சோழர்கள் கட்டிக் கொடுத்த பௌத்த ஆலயம், இன்றைக்கும் திருகோணமலையில் இடிபாடுகளுடன் காணப் படுகின்றது.

எல்லாளன், துட்டகைமுனு வாழ்ந்த காலம், சோழர்களின் வருகைக்கு முந்தியது. குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. எல்லாளனின் வருகைக்கு பல வருடங்களுக்கு முன்னர், சேனன், கூத்திகன் என்ற இரு குதிரை வியாபாரிகள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்களும் தமிழர்கள் என்றே, இன்று பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் குஜராத்திகளாக இருக்கலாம் என்றும் ஒரு அபிப்பிராயம் உண்டு. எல்லாளன் சோழர் வம்சத்தை சேர்ந்ததாக சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்ததாக, பண்டைய சரித்திர ஆவணங்கள் கூறுகின்றன. எல்லாளன் ஒரு தமிழனா, கன்னடனா, மலையாளியா, என்பது யாருக்கும் தெரியாது. (சேனன், கூத்திகன், எல்லாளன் ஆகியோரை “மலபாரிகள்” என்றே சரித்திர ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.) எல்லாளனின் பூர்வீகம் பற்றி அதிகம் தெரியா விட்டாலும், மகாவம்சத்தில் எழுதியதை வைத்து தான், எல்லாளனை சோழனாகவும், தமிழனாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகாவம்சத்தில் எழுதியுள்ளதை எல்லாம் உண்மை என்று நம்பினால், நாம் அதற்கு புனித நூல் அந்தஸ்து கொடுக்கிறோம் என்று தான் அர்த்தம்.

நமது காலத்தில், வரலாற்று உண்மைகளையும், கற்பனையும் கலந்து, சரித்திர நாவல்கள் எழுதுவதைப் போன்று தான், மகாவம்சமும் எழுதப் பட்டிருக்கலாம். இருப்பினும், மகாவம்சம் தனது இனத்தின் எதிரிகள் யார் என்று வரையறை செய்கின்றது. பிராமணீய ஆதிக்கத்தை நிலைநாட்டிய சோழர்களை மட்டுமே, இனவிரோதிகளாக சித்தரிக்கின்றது. மகாவம்சம் தமிழர்களை எதிரிகளாக சித்தரிப்பதாக சில இடங்களில் தோன்றலாம். ஆனால், அதே மகாவம்சம், தமிழர்களான பாண்டியர்களை எதிரிகளாக காட்டவில்லை. “சிங்கள” மன்னர்கள் வசமிருந்த தமிழ்ப் படையினர் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வருகின்றன. அப்படியானால், மகாவம்சம் எதிரியாக சித்தரிக்கும் “அந்தத் தமிழர்கள் யார்?” சந்தேகத்திற்கிடமின்றி, ஒரு இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சோழர்கள் தான். மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எல்லாளன்- துட்டகைமுனு போர் பல வரலாற்றுத் திரிபுகளுடன் எழுதப் பட்டது.

எது எப்படி இருப்பினும், துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய இனம், வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் சிங்கள மொழி, அரசவை மொழியாகியது. அப்போதும், சிங்கள மன்னர்களினால் ஆளப்பட்ட குடிமக்கள் எல்லோரும் சிங்களவர்களாக இருக்கவில்லை. டச்சு காலனிய ஆட்சி நடந்த 17 ம் நூற்றாண்டில் கூட, அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி பேசினார்கள். இதனை, கண்டி மன்னனின் சிறையில் இருந்து தப்பியோடிய ஆங்கிலேய மாலுமியான ரொபேர்ட்ஸ் நொக்ஸ் பதிவு செய்துள்ளார்.

“The people stood amazed as soon as they saw us, being originally Malabars, though subjects of Kandy. Nor could they understand the Sinhalese language in which we spake to them, and we stood looking one upon another until there came one that could speak the Sinhalese tongue who asked us, from whence we came? We told them from Kandy, but they believed us not, supposing that we came up from the Dutch from Mannar. So they brought us before their Governor. He not speaking Sinhalese spake to us by an interpreter.” (Robert Knox in the Kandyan Kingdom, Ed. E.F.C.Ludowyk, p 50).

அனுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள், காலச் சுழற்சியில் சிங்களவர்களாக மாறியிருக்கிறார்கள். இருப்பினும் அனுராதபுரத் தமிழர்களில் ஒரு பிரிவினர் முஸ்லிம்களாக, இன்றைக்கும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லாளன் சமாதி இருந்த இடம், இஸ்லாமிய தர்க்காவாக அண்மைக் காலம் வரையில் வழிபடப் பட்டு வந்தமை, அதற்கு சான்றாகும். சில மாதங்களுக்கு முன்னர், பௌத்த மத அடிப்படைவாதிகள் அந்த தர்க்காவை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், “அந்த இடத்தில் துட்டகைமுனுவின் சமாதி இருந்தது” என்பது தான். (இந்தியாவில் இடம்பெற்ற பாபர் மசூதி இடிப்பு ஞாபகத்திற்கு வருகின்றதல்லவா?) எல்லாளனை போரில் வென்ற துட்டகைமுனு, எல்லாளனுக்கு சமாதி கட்டினான். அந்த வழியாக பயணம் செய்பவர்கள் சமாதிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்.

ஆயிரக் கணக்கான வருடங்கள் உருண்டோடிய பிறகு, எல்லாளன் சமாதியின் முக்கியத்துவம் குறைந்து கொண்டு போனது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், எல்லாளன் சமாதி என்ற ஒன்று இருப்பதையே, மக்கள் மறந்து விட்டார்கள். சிங்கள-பௌத்த பேரினவாதிகள் அந்த இடத்தில் துட்டகைமுனு சமாதி இருந்ததாக உரிமை கோரினார்கள். உண்மையில் துட்டகைமுனுவின் சமாதி எங்காவது கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பு எதுவும் இல்லை. இத்தனை காலமாக, ஒரு தமிழ் தேசியவாதி கூட, எல்லாளன் சமாதிக்கு உரிமை கோராதது ஆச்சரியத்திற்குரியது! சிங்கள- பௌத்த பேரினவாதிகள், எல்லாளன் சமாதியை தகர்த்த செய்திக்கு கூட, எந்தவொரு தமிழ்த் தேசிய ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுக்க காரணம் என்ன? மகாவம்சம் கூற விளைவதைப் போல, துட்டகைமுனுவின் மனதில் தமிழின வெறுப்பு காணப்பட்டதா? மகாவம்சம் தனது அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றை திரித்தது என்றால், நமது கால இனவாதிகள் மகாவம்சத்தையே தவறாக மொழிபெயர்த்தார்கள். (மகாவம்சத்தின் மூலம் பாளி மொழியாகும்) “எல்லாளனைப் போன்று, துட்டகைமுனுவும் ஒரு தமிழன். எல்லாளன் ஒரு இந்து மத நம்பிக்கையாளன். துட்டகைமுனு ஒரு பௌத்த மத நம்பிக்கையாளன். அது மட்டுமே வேறுபாடாக இருந்திருக்க வேண்டும். ஒரு பௌத்தனான துட்டகைமுனு, இந்து மத வழிபாட்டையும் கடைப்பிடித்தமை குறிப்பிடத் தக்கது. எல்லாளனை போரில் தோற்கடிக்க கதிர்காமக் கந்தனை வழிபட்டுள்ளான்.” தமிழ்த் தேசிய இணையத்தளமான, Tamil Canadian இல், Dr. S. K. வடிவேல் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

The wars fought by Gemunu and Elara were not Sinhala-Tamil wars as maliciously projected by Mahanama. A careful examination of Gemunu’s pedigree will reveal that he was as much a Tamil as Elara, with the difference being that Gemunu was a Buddhist, while Elara was a Hindu. Elara was no enemy of the Buddhists. He was in fact, loved by the Buddhists. The strong hereditary Hindu element in Gemunu (present even today in all Sri Lankan Buddhists) made him a devotee of the Dravidian God Murukan at Kathirkamam. It is said in the Mahawamsa that Gemunu invoked the blessings of the Lord Murukan to endow him with strength to defeat King Elara in battle.

அது சரி, இந்த உண்மைகளை எல்லாம் எதற்காக ஆங்கிலத்தில் மட்டும் எழுத வேண்டும்? தமிழர்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழில் எழுதக் கூடாதா?

துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்!

துட்டகைமுனு என்ற பண்டைய சரித்திர கால மன்னன், இன்று சிங்கள தேசியவாதிகளின் ஒப்பற்ற கதாநாயகன். தமிழர்களுடனான இன முரண்பாட்டுப் போரில், துட்டகைமுனுவின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப் பட்டது. சிறிலங்கா அரசு கூட, தனது சிறப்புப் படையணிக்கு, “கெமுனு படைப்பிரிவு” என்று பெயரிட்டிருந்தது. “துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன், எல்லாளன் என்ற தமிழ் மன்னனை போரிட்டு வென்றதாலேயே”, அவனுக்கு அவ்வளவு மரியாதை. இந்தக் கதையானது, பாடசாலை மாணவர்களுக்கான, சிங்கள மொழிப் பாட நூலில் கூட எழுதப் பட்டுள்ளது. அப்படியாயின், சரித்திரப் பாட புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதியிருக்கும் என்பதை இங்கே விளக்கத் தேவையில்லை. சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான அரச பாடத்திட்டம், ஒரே மாதிரியான சரித்திரத்தை தான் போதிக்கின்றது. இதிலே குறிப்பிட்டளவு பகுதி, மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. வேடிக்கை என்னவென்றால், சிங்கள தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும், ஒரே கதைக்கு வெவ்வேறு விதமான பொழிப்புரைகள் வழங்கி வருகின்றனர்.

எமக்கு சரித்திரம் படிப்பித்த ஆசிரியர் பின்வருமாறு விபரிப்பார். “எமது தமிழ் மன்னர்கள், சிங்களவர்களை ருஹுனு (தென் பகுதி) வரை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். இன்னும் கொஞ்சம் போனால் கடலுக்குள் குதித்திருப்பார்கள்.” வகுப்பறையில் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாகும். “மகாவம்ச மனோபாவம்”, சிங்களவர்களை மட்டுமல்லாது, தமிழர்களையும் ஆட்டிப் படைக்கின்றது. பண்டைய மன்னர்களின் சரித்திரத்தை, சிங்கள, தமிழ் முரண்பாடாக மாற்றுவதில் மகாவம்சம் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளது. இருப்பினும், அது முழுக்க முழுக்க தமிழின விரோதக் கருத்துக்கள் கொண்டது எனக் கூறி விட முடியாது. மகாவம்சத்தைப் பொறுத்த வரையில், புத்த மதத்தை பாதுகாத்து பேணி வளர்க்கும் மன்னர்கள் எல்லோரும் அதற்கு நாயகர்கள் தான். பௌத்த ஆலயங்களை கட்டிய, அல்லது தானம் வழங்கிய, தமிழ் மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகளின் பெயர்களை குறிப்பிடத் தவறவில்லை.

“ஸ்ரீசங்கபோதியின் சேனைத் தலைவனாக விளங்கிய பொத்தசதா என்ற தமிழன், ஜெத்தவன விகாரைக்கு ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான். மகாகந்தன் என்ற தமிழ் அமைச்சன், தனது பெயரில் ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான்.” ( சூளவம்சம். 22 )
அதே நேரம், புத்த விகாரைகளை நாசப்படுத்தி, மத வழிபாட்டை ஒடுக்கிய மன்னர்களை வில்லன்களாக சித்தரிக்கின்றது. சீதாவாக்க ராஜசிங்க என்ற “பௌத்த-சிங்கள மன்னன்”, இந்து மதத்திற்கு மாறி, பல புத்த பிக்குகளை கொன்ற கதை ஒன்று மகாவம்சத்தில் உள்ளது.

“இலங்கையில் முதன்முதலாக பௌத்த சமயத்தை தழுவிய தேவநம்பிய தீசன் என்ற மன்னன் ஒரு தமிழன் தெரியுமா?” என்று கூறி, தமிழ்த் தேசியவாதிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். ஆனால், அவர்களிடம் “துட்டகைமுனு யார்?”, என்று கேட்டால், ஒரு சிங்களவன் என்ற பதில் வரும். தேவநம்பியதீசன் என்ற தமிழ் அரசனின் பரம்பரையில் வந்த துட்டகைமுனு எப்படி சிங்களவன் ஆனான்? துட்டகைமுனுவின் பாட்டன், முப்பாட்டன் பெயர்கள் எல்லாம், “மூத்தசிவன், காக்கவண்ண திஸ்ஸ” என்று தமிழ்ப் பெயராகக் காணப்படுகின்றன. இதனை தமிழ்த் தேசிய இணையத் தளமான Tamil Canadian விரிவாக விளக்குகின்றது.

It may be of interest and value to note that all kings from Muthu Siva (307-247 B.C.) right down to the beginning of the Christian era (a period of 300 years), were Tamils and barring King Muthu Siva, others were Buddhist by faith. The much adored and admired King Duttu Gemunu was a Tamil, both from his father`s side Kavan Tissa, and his mother`s side Vihara Devi, daughter of the Naga King of Kelaniya and a direct descendent of King Uttiya. They were of course, Buddhist by faith. (Source : http://www.tamilcanadian,com)

அப்படியானால், தமிழ் மன்னர்களான எல்லாளனுக்கும், துட்டகைமுனுவுக்கும் இடையில் எதற்காக போர் மூள வேண்டும்? ஒரே இன மக்களிடையே நிலவும், உறவினரின் கொலைக்காக பழிவாங்கும் பகையுணர்ச்சி தான் காரணம். பரம்பரை பரம்பரையாக பழிவாங்கும் வழக்கம். துட்டகைமுனுவின் பாட்டனான அசெலாவை கொன்று தான், எல்லாளன் ஆட்சியைக் கைப்பற்றினான். தேவநம்பிய தீசன் காலத்தில் இருந்து, இலங்கை முழுவதையும் ஆட்சி செய்து வந்த, புகழ்பெற்ற உள்நாட்டு அரச பரம்பரைக்கு, அது ஒரு பேரிழப்பு. பண்டைய இலங்கையில், எத்தனையோ அரச பரம்பரைகள் இருந்த போதிலும், முதன் முதலாக பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்ட அரச வம்சம் என்பதால், மகாவம்சத்தினால் போற்றப் பட்டது. தெற்குப் பகுதி குறுநில மன்னர்களை போரில் வென்று, ருஹுனு மாநிலத்தை ஒன்றாக்கிய பெருமை, துட்டகைமுனுவின் தந்தை கவன்திஸ்ஸவை சேரும்.

துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்,

துட்டகைமுனுவும், அவன் சகோதரனும் சிறுவர்களாக இருந்த காலத்தில், தந்தையான கவன்திஸ்ஸ அவர்களுக்கு தினசரி உணவூட்டுவான். அப்பொழுது “தமிழர்களிடம் யுத்தம் செய்வதில்லை” என்று உறுதிமொழி தருமாறு கேட்டிருக்கிறான். சகோதரர்கள் இருவரும், உறுதிமொழி கொடுக்க மறுத்து சாப்பிடாமல் போயிருக்கிறார்கள். துட்டகைமுனு வாலிபனாக வளர்ந்த காலத்தில், “தமிழர்களுடன் போரிட மறுத்த” தந்தையை சேலை கட்டிக் கொள்ளுமாறு பரிகசித்துள்ளான். ஏதோ ஒரு காரணத்திற்காக, கவன்திஸ்ஸ எல்லாளனுடன் போரிடுவதை விரும்பவில்லை. அந்தக் காரணம் என்ன? அதனை மகாவம்சம் விளக்கவில்லை. ஒரு வேளை, “எல்லாளனுடன் போரிடுவதற்கு இது ஏற்ற தருணம் அல்ல, என்று கவன்திஸ்ஸ நினைத்திருக்கலாம். நீதியும், நேர்மையும் மிக்க மன்னனாக இலங்கை மக்களால் மதிக்கப்பட்ட எல்லாளனை எதிர்ப்பது புத்திசாலித் தனமானதல்ல.” என்று நினைத்திருக்கலாம். துட்டகைமுனு இலங்கையை விட்டு புலம்பெயர்ந்து, பல வருடங்கள் மலேயாவில் தங்கியிருந்திருக்கிறான். அவன் தகப்பனின் சொல் கேளாத தனயன் என்பதால் தான், “துஷ்ட காமினி” (துட்ட கைமுனு அல்லது துட்ட கெமுனு) என்று பெயர் வந்தது.

இலங்கை முழுவதும், சிங்களவர், தமிழர் பேதமின்றி, அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எல்லாளனின் புகழ் பரவியிருந்தது. இந்துக்கள் மட்டுமல்லாது, பௌத்தர்களாலும் மதிக்கப் பட்ட எல்லாளனை, போரிட்டு வெல்வது அரசியல் தற்கொலைக்கு சமமாகும். மலேயாவில் இருந்து திரும்பிய துட்டகைமுனு, எல்லாளன் மீது போர் தொடுக்க தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தான். எல்லாளன் நீதிநெறி தவறாத அரசனாக ஆட்சி புரிந்த போதிலும், அவனது பிற்கால ஆட்சிக் காலத்தில், சில பௌத்த விரோத நடவடிக்கைகள் இடம்பெற்றன. குறுகிய மதவாத, இனவாதக் கண்ணோட்டத்துடன் செயற்பட்ட, சில குறுநில மன்னர்களும், தளபதிகளுமே அதற்கு காரணம். அவர்களால் துன்புறுத்தப்பட்ட புத்த பிக்குகள் எல்லாளனின் நாட்டை விட்டோடி, துட்டகைமுனுவின் நாட்டில் அடைக்கலம் புகுந்தனர்.

உண்மையில், எல்லாளனின் வீழ்ச்சி அப்போதிருந்தே ஆரம்பமாகி இருக்க வேண்டும். துட்டகைமுனு, “பௌத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரை” அறிவிப்பதற்கு, அது போன்ற சம்பவங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. எல்லாளனின் பூர்வீகம் சோழ மண்டலம் என்பதால், அன்னியர்கள் மீதான வெறுப்புணர்வும் சேர்ந்து கொள்ளவே, அதிர்ஷ்டக் காற்று துட்டகைமுனு பக்கம் வீசியது. எல்லாளனின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், பௌத்தர்களும் ஒரு தாய் மக்களாக சரிசமமாக நடத்தப் பட்டனர். அதனால் தான், எல்லாளனின் ஆட்சியை நாற்பத்துநான்கு ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியவில்லை. இந்த உண்மையை, குறுகிய இனவாத மனோபாவம் கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை, எல்லாளன் இன்று ஆண்டிருந்தால், சிங்களவர்களையும், தமிழர்களையும் சகோதரர்களாக கருதிய காரணத்திற்காக, அவனுக்கு துரோகிப் பட்டம் சூட்டியிருப்பார்கள்.

துட்டகைமுனு ஒரு தமிழன், அவனது படையில் தமிழ் வீரர்களும் இருந்துள்ளனர். அப்படியாயின், மகாவம்சம் எதற்காக தமிழர்களை எதிரிகளாக சித்தரிக்கின்றது? இதற்கான விடையை, கிறிஸ்தவ மத வரலாற்றில் இருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது, இயேசுவும், அவரது சீடர்களும் யூதர்கள். ஆனால், விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில் யூதர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப் படுகின்றன. மகாவம்சம் தமிழர்களை பகைவர்களாக சித்தரிக்கும் அதேயளவு வன்மத்துடன், பைபிள் யூதர்களை சித்தரிக்கின்றது. அதற்கு காரணம், ஆதிக் கிறிஸ்தவ பரப்புரையாளர்களின் பூர்வீகம் யூத இனமாக இருந்த போதிலும், அவர்கள் கிரேக்க மொழி பேசினார்கள்.

கிரேக்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் தான், பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். அவர்கள், யூத சமயத்தை பின்பற்றிய ஒரே இனத்தை சேர்ந்த மக்களிடம் இருந்து, தங்களை “வேறு இனமாக” காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அதன் விளைவு தான், யூதர்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் பிரச்சார அணுகுமுறை. மகாவம்சத்தில் காணப்படும் தமிழர் விரோத கருத்துகளின் மூலமும், நோக்கமும் அது தான். அதாவது, பௌத்த மதத்தை பின்பற்றிய தமிழர்கள், தமக்கென சொந்தமாக சிங்கள மொழி ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். வரலாற்றில் செயற்கையாக உருவாக்கப் படும் இனம் ஒவ்வொன்றும், தனக்கென பிரத்தியேகமான பூர்வீகக் கதைகளையும் கற்பித்துக் கொள்ளும். அதற்கு சிங்கள இனமும் விதி விலக்கல்ல.

மகாவம்சம் பற்றிய பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு காரணம், அதனது தவறான மொழிபெயர்ப்பு. இந்திய இந்துக்களுக்கு சமஸ்கிருதம் போன்று, இலங்கை (சிங்கள) புத்தர்களுக்கு பாளி புனித நூல்களின் மொழியாகவிருந்தது. சமஸ்கிருதம் போன்றே, பாளி மொழியும் பிற்காலத்தில் யாராலும் பேசப்படாமல் அழிந்து போனது. 19 ம் நூற்றாண்டில், இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்கள் மகாவம்சத்தை கண்டெடுத்தார்கள். 1837 ல், George Turnour என்ற ஆங்கிலேய அரச அதிகாரி, மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஆங்கிலேயர்களைப் பொறுத்த வரையில், “இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இந்திய படையெடுப்பாளர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டு வந்தவர்கள்.” இன்றைக்கும் பல பிரிட்டிஷ்காரர்களின் மனதில் மறைந்துள்ள தவறான அபிப்பிராயம், மகாவம்சத்தை மொழிபெயர்த்த காலத்திலும் இருந்திருக்கும். இன்றைக்கு நாம் வாசிக்கும் மகாவம்ச மொழிபெயர்ப்புகள் யாவும், ஆங்கில மொழியில் எழுதப் பட்ட மூலப் பிரதியில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டவை தான். சிங்களவர்களை ஆரியர்கள் என்றும், தமிழர்களை திராவிடர்கள் என்றும் சமூக விஞ்ஞானம் போதித்த ஆங்கிலேய இனவாத கற்பிதத்திற்கு ஏற்றதாக, இந்த மொழிபெயர்ப்புகள் (மொழி திரிப்புகள்) அமைந்துள்ளன.

மகாவம்சத்தின் சிங்கள மொழிபெயர்ப்பும் பிற்காலத்தில் எழுதப் பட்டது தான். இதனால், இந்த மொழிபெயர்ப்புகள் யாவும் மூலப் பிரதியில் இருந்து மாறியிருக்க வாய்ப்புண்டு. துட்டகைமுனுவின் தாயின் வரலாற்றைக் கூறும் கதையில் காணப்படும் முரண்பாடே அதற்கு ஒரு உதாரணம். துட்டகைமுனுவின் தாயான விஹாரமகாதேவி, களனி நாட்டை (இலங்கையின் மேல் மாகாணம்) சேர்ந்த இளவரசி என்று, ஒரு மொழிபெயர்ப்பில் எழுதப் பட்டுள்ளது. அவள் கல்யாணி நாட்டை சேர்ந்த இளவரசி என்று இன்னொரு மொழிபெயர்ப்பு கூறுகின்றது. இவ்விரண்டில் எது சரியானது? இது ஒன்றும் கவனக்குறைவால் ஏற்பட்ட எழுத்துப் பிழையல்ல.

கல்யாணி நாடு, மலேசியா அல்லது இந்தோனேசியாவுக்கு அருகில் இருந்த தீவாகும். அதனை சுனாமி தாக்கி அழித்தாக செவிவழிக் கதை ஒன்றுண்டு. அதன் அடிப்படையில் பார்த்தால், ராணி விஹாரமகாதேவி ஒரு சிங்களத்தியோ, அல்லது தமிழச்சியோ அல்ல என்பது நிரூபணமாகின்றது. ஆனால், ஒரு அந்நிய நாட்டுப் பெண்ணான, வேறொரு இனத்தை சேர்ந்த விகாரமகாதேவி தான், அதிகமான தமிழர் விரோதப் போக்கை கொண்டிருந்தாள் என்பது வியப்புக்குரியது. தனது மகன் துட்டகைமுனு குழந்தையாக இருக்கும் பொழுதே, அவன் மனதில் தமிழர்கள் மீது வெறுப்புணர்வை ஊட்டி வளர்த்திருக்கிறாள். போர்க்களத்திற்கு நேரில் சென்று படை நகர்த்திய பெண்ணாக போற்றப்படும், விகாரமகாதேவி தமிழர்களை வெறுக்க காரணம் என்ன?

எல்லாளன்: இன சமத்துவக் காவலனான சமணத் தமிழ் மன்னன்,

“ஏலாரா என்ற ஒரு தமிழ்க்குடிமகன்,சோழ நாட்டில் இருந்து வந்து, அசெலாவை வென்று நாற்பத்தி நான்கு ஆண்டுகள், நண்பன் பகைவன் என்று பாராமல் நீதி செலுத்தினான்.” (மகாவம்சம்)

துட்ட கைமுனு மகாவம்சத்திற்குப் பிடித்த கதாநாயகனாக இருந்த போதிலும், அவன் எதிரியான எல்லாளனை பற்றியும் வானளாவப் புகழ்கின்றது. “எமது நண்பர்கள் எல்லாம் நல்லவர்கள். நமது எதிரிகள் எப்போதுமே கெட்டவர்கள்.” என்ற கறுப்பு, வெள்ளைப் பார்வை, குறுகிய அரசியல் நலன்களை பெற்றுத் தரலாம். ஆனால், உண்மையை அறிந்து கொள்வதற்கு உதவப் போவதில்லை. சிங்கள இனவாதிகள், துட்டகைமுனுவை தமது மாவீரனாக போற்றுவதற்கு கூறும் நியாயம், “எல்லாளன் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளன்” என்பது தான். மகாவம்சம் குறிப்பிடும் முதலாவது அந்நிய ஆக்கிரமிப்பானது, விஜயனதும், அவன் தோழர்களினதும் வருகை தான். தம்மை விஜயனின் வம்சாவளியினர் என்று கூறிக் கொள்ளும் சிங்கள இனவாதிகள், எல்லாளன் போன்றோரை ஆக்கிரமிப்பாளர்களாக காட்டுவது வேடிக்கையானது. உண்மையில், இருபதாம் நூற்றாண்டு சிங்கள-தமிழ் முரண்பாட்டு அரசியலுக்கு ஏற்றவாறு, தம்மை பூர்வ குடிகளாக காட்டுவதே அவர்களது நோக்கம். இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், சிங்களவர்கள், தமிழர்களின் முன்னோர்கள் இலங்கையின் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர். அதே நேரம், இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய மக்கள் திரளுடனும் கலந்துள்ளனர். இன்றுள்ள சிங்களவர்களும், ஈழத் தமிழரும் கலப்பினங்கள் தான். குறுகிய மனோபாவம் கொண்ட இனவாதிகள் மட்டும், அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வட இந்தியாவில் (வங்காள தேசம்?) இருந்து வந்து குடியேறிய விஜயனும், தோழர்களும் பேசிய மொழி என்ன? அவர்களது மதம் என்ன? அவர்கள் முதலில் பழங்குடி இனமான இயக்கர் இனப் பெண்களையும், பின்னர் பாண்டிய நாட்டுப் பெண்களையும் மணம் முடித்து வாழ்ந்துள்ளனர். அவர்களது சந்ததியினர் சிங்களவர்களா, அல்லது தமிழர்களா? உண்மையில், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர், சிங்களவர், தமிழர் என்ற பேதம் உருவாகி இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில், இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மொழி ஒரு இனத்தின் குறியீடாக கருதப் படவில்லை. ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே நிறுவனமயப் படுத்தப் பட்ட மதங்கள், உலகில் தோன்றலாயின. அது ஒரு “மதப் புரட்சி”. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன்னை, நிறுவனமயப் பட்ட மதத்துடன் இனம் கண்டான். மேற்குலகில் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியன அரசுகளால் அங்கீகரிக்கப் பட்ட மத நிறுவனங்கள். இந்திய உப கண்டத்தில், பௌத்தமும், சமணமும் நிறுவன மயப் பட்ட மதங்களாக கருதப் பட்டன. இந்து மதத்தை ஒரு மதமாக கருத முடியாதா? அன்றிருந்த இந்து மதம், இன்றுள்ளதை விட மிகவும் வித்தியாசமானது. யாரும் இந்து மதத்தில் புதிதாக சேர முடியாது, அந்த மதத்தில் பிறந்திருக்க வேண்டும். இத்தகைய கடுமையான விதிகளால், பிராமணர்கள் மட்டுமே இந்துக்களாக இருந்தனர். அதனால், பிற சாதிகளை சேர்ந்த மக்கள், ஒன்றில் பௌத்த மதத்திற்கு, அல்லது சமண மதத்தில் சேர்ந்ததில் வியப்பில்லை.

தமிழகத்தில் பல்லவர் காலத்தில், இந்து மதம் மீளுயிர்ப்புப் பெற்றது. மக்களுக்கு புரியக் கூடிய மொழியிலேயே மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை சைவ சமயக் குரவர்களும், வைஷ்ணவ ஆழ்வார்களும் உணர்ந்து கொண்டனர். அவர்கள் ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, பௌத்த, சமண மதத்தவர் மீது புனிதப் போரை தொடுத்தார்கள். சோழர்கள் காலத்தில், மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் புனிதப் போர் தீவிரமடைந்தது. ஆனால், தமிழகத்தில் இந்து மதம் தலை தூக்குவதற்கு முன்னர், இன்னொரு மதப்போர் நடந்தது. பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் இடையிலான போர் அது. அந்தப் போரில் சமணர்கள் வென்றனர். தமிழ் பௌத்தர்கள் பலர், புத்த மதத்தின் கோட்டையாக விளங்கிய இலங்கைக்கு சென்று அடைக்கலம் கோரினார்கள்.

“பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன.சில காலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்கு குறைந்து விட்டது. ……. கி.பி. 8 ம் நூற்றாண்டில் சமண சமயக் குருவான பேர்பெற்ற ஆச்சாரிய அகளங்கர் காஞ்சிபுரத்தில் பௌத்த கோயிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள், இலங்கைக்கு சென்று விட்டனர்.” (சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி)

இன்றைக்கு பௌத்த மதத்தை பின்பற்றும் அனைவரும் சிங்களவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றும் அனைவரும் தமிழர்களாகவும் உள்ளனர். ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரும் இதே மாதிரித் தான் இருந்திருப்பார்களா? இந்துக்களின் “தாய் நாடான” இந்தியாவிலேயே, இந்து மதம் அழிந்து கொண்டு சென்றது. இலங்கையில் அது தனியாக நிலைத்து நின்றிருக்குமா?

“தமிழ் நாட்டிலே சமண சமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர, ஏனைய தொழில்களை எல்லாம் இந்த மதம் சிறப்பித்து போற்றி வந்தது. மிகச் சிறந்த தொழிலான பயிர்த் தொழிலை,பிராமண மதம் எனப்படும் வைதீக மதம் இழிவான தொழில் என்று தாழ்வு படுத்தியது போலல்லாமல்,சமண சமயம் பயிர்த் தொழிலை சிறந்த தொழில் என்று போற்றியது…..சேர, சோழ,பாண்டிய, பல்லவ அரசர்களில் சமண சமயத்தை சேர்ந்திருந்தனர். இவர்களால் சமண சமயத்திற்கு ஆசியும், செல்வாக்கும் ஏற்பட்டன.” (சமணமும் தமிழும்)

ஒரு காலத்தில் தமிழ் நாடு முழுவதும் சமண மதம் பரவியிருந்திருப்பின், இலங்கையிலும் பரவியிருக்க வாய்ப்புண்டல்லவா?
அன்று தமிழகத்தில் நிலவிய சூழ்நிலை போன்று தான், இலங்கையிலும் காணப்பட்டது. மக்கள் ஒன்றில் பௌத்தர்களாக, அல்லது சமணர்களாக இருந்தனர். வட பகுதியில் சமணர்களும், தென் பகுதியில் பௌத்தர்களும் பெரும்பான்மையாக இருந்திருப்பார். மக்கள் சிங்களம், தமிழ் எந்த மொழியைப் பேசினாலும், அவர்கள் இவ்விரண்டு மதங்களில் ஒன்றைப் பின்பற்றினார்கள். அனுராதபுரத்தில் உள்ள அபயகிரி விகாரை, முன்னொரு காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அது போன்று, வேறு பல சமணக் கோயில்கள், பிற்காலத்தில் பௌத்த விகாரைகளாக அல்லது சைவக் கோயில்களாக மாற்றப் பட்டிருக்கலாம்.

ஈழத்தில் சமண சமயம் சீரும் சிறப்புடனும் இருந்ததைக் குறிக்கும் இன்னொரு சான்று, எல்லாளனின் வரலாறு. எல்லாளன் சமண மதத்தை சேர்ந்தவன் என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கு முதலில், எல்லாளன் ஒரு இந்து மன்னன் என்பதற்கு, யாராவது ஆதாரத்தை காட்டியுள்ளனரா? இலங்கையை ஆண்ட இந்து- சோழ மன்னர்கள், சைவக் கோயில்களைக் கட்டியதற்கான சரித்திர சான்றுகள் உள்ளன. எல்லாளன் ஒரு சைவக் கோயிலையாவது கட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், அனைத்து மதங்களையும் சமமாக நடத்தியதாக பல குறிப்புகள் தெரிவிக்கின்றன. “எல்லாளன் சென்ற தேர் ஒரு தடவை, புத்த ஸ்தூபியின் ஒரு இடத்தில் இடித்து விட்டது. அரசன் அதனை வேண்டுமென்றே செய்யா விட்டாலும், தேரின் மீதிருந்து இறங்கி வீதியில் படுத்துக் கொண்டு, தான் மீது தேரைச் செலுத்த சொன்னான். ஆனால், பிட்சுக்கள் அதனை அனுமதிக்கவில்லை….. அவன் அந்த பதினைந்து ஸ்தூபிகளை செப்பனிட்டு விட்டுப் புதிதாக நிறுவ, பதினைந்தாயிரம் காசுபணம் செலவிட்டான்.” (மகாவம்சம்)

எல்லாளனின் நீதி வழங்கும் நெறி முறைக்கு உதாரணமாக, படுக்கையின் மேல் கட்டப் பட்ட மணி பற்றிய கதை கூறப் படுகின்றது.
” அவனுடைய படுக்கைக்கு மேல் ஒரு மணி கட்டப் பட்டிருந்தது. நீதி கேட்டு வந்தவர்கள், எந்த நேரத்திலும் அதை அடித்து அரசனை அழைக்கலாம். அந்த அரசனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. ஒரு நாள் திசா குளத்திற்கு அந்த மகன் தேரில் சென்ற போது, தெரியாமல் தாய்ப்பசுவுடன் படுத்துக் கிடந்த கன்றுக் குட்டியின் கழுத்தில் தேரை ஏற்றிக் கொன்று விட்டான். அந்தப் பசு மனவேதனையில் மணியை அடித்தது. அதே தேர்ச் சக்கரத்தின் அடியில் மகனைக் கிடத்தி கழுத்தின் மீது தேரைச் செலுத்தித் தலையைத் துண்டித்தான்.” (மகாவம்சம்) ஒரு பசுவுக்கு நீதி வழங்குவதற்காக, தனது மகனைக் கொன்ற நியாயவானாக எல்லாளன் மகாவம்சத்தால் புகழப் படுகிறான். இந்தப் பெருமை வேறெந்த தமிழ் மன்னனுக்கோ, அல்லது சிங்கள மன்னனுக்கோ கிடைக்கவில்லை. இதிலே கவனிக்கப் பட வேண்டிய இரண்டு அம்சங்கள். ஒன்று, மிருகங்களையும் மனிதருக்கு சமமாக மதிக்கும் ஜீவகாருண்யம். இரண்டு, பசுவும்,பறவையும் கூட நீதி கேட்டு வரக் கூடியதாக கட்டப்பட்ட மணி. இவையெல்லாம், இந்து மரபு அல்ல. சமண மத நம்பிக்கைகள். இன்றைக்கும் தீவிர சமண மதப் பற்றாளர்கள், வெளியில் போகும் பொழுது வாயை துணியால் கட்டிக் கொள்வார்கள். அதற்கு காரணம், தெரியாமல் எந்தப் பூச்சியாவது வாய்க்குள் அகப்பட்டு சாகக் கூடாது என்பது தான்.

நமது காலத்திய இனவாதிகள், எல்லாளன்- துட்ட கைமுனு போரை, சிங்கள- தமிழ் போராக திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது சிங்கள-தமிழ் முரண்பாட்டால் எழுந்த போரல்ல. அதே நேரம், பௌத்த – இந்து மதங்களுக்கு இடையிலான யுத்தமும் அல்ல. ஒரு வேளை, தமிழகத்தில் தீர்க்கப்படாத பௌத்த – சமண மோதல், இலங்கையில் தொடர்ந்திருக்கலாம். ஆனால் அந்தக் கருத்தை உறுதிப் படுத்தும் சான்றுகள் கிடைக்கவில்லை. துட்ட கைமுனுவின் பக்கத்தில் தமிழ் வீரர்கள் போரிட்டனர். அதே போன்று, எல்லாளனின் படையில் சிங்கள வீரர்கள் மட்டுமல்ல, சிங்கள சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். போர் முடியும் வரையில், சிங்கள தளபதிகளும், வீரர்களும் எல்லாளனுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். ஒருவர் கூட எல்லாளனுக்கு துரோகமிழைத்து விட்டு, “சிங்கள மன்னனான” துட்ட கைமுனுவிடம் போய்ச் சேரவில்லை. எல்லாளனின் படையில் முன்னணி அரங்கில் நின்று போரிட்ட சிங்கள சேனாதிபதிகளின் பெயர் விபரம் பின்வருமாறு: தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா …. இந்த சிங்கள சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத் தக்கது. இன்னொரு முக்கியமான தகவல். தீகபாய சேனாவி, துட்ட கைமுனு பக்கம் நின்ற (சிங்கள) குறுநில மன்னர்கள் மத்தியில், எல்லாளனுக்கு ஆதரவு திரட்டும் இராஜதந்திர நகர்வுகளை செய்துள்ளான்!

எல்லாளன் – துட்ட கைமுனு போர், நமது காலத்திய இனப் பிரச்சினையுடன் எந்த விதத்திலும் ஒத்துப்போகவில்லை என்பது தற்போது தெளிவாகியிருக்கும். சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் வரலாற்றைத் திரித்து, தமக்கேற்றவாறு அரசியல் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் யாவும், எல்லாளனுக்கும், துட்ட கைமுனுவிற்கும் அபகீர்த்தியை தேடித் தருகின்றன. துட்ட கைமுனுவுக்கு சிங்கள முலாம் பூசியதும், எல்லாளனுக்கு சைவ முலாம் பூசியதும், மன்னிக்க முடியாத வரலாற்று மோசடிகளாகும். நமது காலத்திய இனவாதிகள் பெரிதும் விரும்பும், இன அல்லது மத முரண்பாட்டுப் போர்கள், கி.பி. 9 ம் அல்லது 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றின. ராஜராஜ சோழனின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் இலங்கை வரையில் விஸ்தரிக்கப் பட்டது.

சோழர்கள் “தமிழுணர்வு” கொண்டவர்கள் அல்ல, மாறாக “சைவ ஆகம மத உணர்வு” கொண்டவர்கள். அவர்களது செயற்பாடுகள் பல மத அடிப்படைவாதிகளின் செயல்களை ஒத்துள்ளன. சோழர்களின் ஆக்கிரமிப்புப் படைகளால், இலங்கையில் பௌத்த மதம் நசுக்கப் பட்டது. புத்த விகாரைகள் இடிக்கப் பட்டன, புத்த பிக்குகள் கொல்லப் பட்டனர். பிற்காலத்தில், விஜபாகு அரசனால் சோழர்கள் வெளியேற்றப் பட்டாலும், அப்போது பௌத்த மதத்தை வளர்ப்பதற்கு ஒரு பிக்கு கூட இருக்கவில்லை! அதனால் பர்மாவில் இருந்து புத்த பிக்குகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது!! இத்தகைய கொந்தளிப்பான காலகட்டத்தின் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. பௌத்த மதத்திற்கு நேர்ந்த நெருக்கடிகளை பட்டியலிடும் மகாவம்சம், சோழர்களால் பாதிக்கப் பட்ட ஈழத் தமிழர்களை கண்டு கொள்ளவில்லை. அந்த வகையில், மகாவம்சம் ஒரு பக்கச் சார்பாகவே எழுதப் பட்டுள்ளது.

மகா வம்சம் முழு வடிவம் தமிழில் இதன் கீழே உள்ள லிங்கில் உள்ளது. https://goo.gl/2OQQjH

தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB)MP-TGTE-Zurich-Switzerland.

**

இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன்! மறைக்கப்பட்ட வரலாறு

அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன் எல்லாளன்.

இலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம் இந்த தகவலை பதிவுசெய்துள்ளது.

இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகவும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது.

மேலும் எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்தவர் என்றும், இவர் “பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்” சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவர் என்று சிலர் கருதுகிறார்கள்.

அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர்.

மறைக்கப்பட்ட வரலாறு

கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர்.

இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை ஈழசேனனுக்குமுரியவை.

ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது.

எல்லாளன் என்ற சோழ மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது.

இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.

அவைருக்கும் சமநீதி

எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது.

எல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது.

நீதி வேண்டுவோர் எந்த நேரமும் கோட்டைவாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.

உதாரணமாக

ஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.

பாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்த தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப்பிடித்து வரச்செய்து, அதன் வயிறு கீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது.

ஒரு வயோதிப மாது வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்டபோது, அவன் வருணனிடம் வாரத்திற்கொருதடவை இரவில் மட்டும் மழை பொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வர்ணிக்கிறது.

எல்லாளனின் மரணம்

காக்கவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் காமினி அபயன் ஆவான்.

கருவிலிருந்தே இனவெறியூட்டப்பட்டு வளர்த்த துட்டகாமினி தன் தந்தையின் மறைவிற்குப்பின் பெரும்படையுடன் எல்லாளனின் மீது படையெடுத்தான்.

இப்படையெடுப்பை பற்றிய போதிய ஆதாரங்கள் மஹாவம்சத்தில் காணப்படுகின்றது. இறுதி யுத்தமானது விஜிதபுரவில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.

எவ்வளவு முயன்றும், துட்டகைமுனுவால் எல்லாளனின் போர்த்தந்திரமையை வெற்றிகொள்ள முடியவில்லை. அவனது படையிலே இறப்புக்கள் அதிகமாக காணப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன.

அதனால் எல்லாளனை தனிச்சமருக்கு அழைத்தான். துட்டகைமுணு சதியினாலே எல்லாளனைக் கொன்றதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

*

தமிழர்களை மறைத்த புதிய வரலாறு.!!

ஓர் இனத்தின் வரலாறு மாற்றம் அடையும் போது அந்த இனத்தின் தொன்மையும் மாற்றம் அடைந்து போகும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

மிக முக்கியமானது மதம் சார்ந்து அல்லாமல் வரலாறுகள் படைக்கப்பட வேண்டும். ஆனால் அப்படி நடக்காத காரணத்தினாலேயே இலங்கையில் இன்று வரை பிரச்சினை.

இலங்கையின் தமிழர்களை புதிய வரலாறு கொண்டு மறைத்துள்ளார்கள் இலங்கை வரலாற்று எழுத்தாளர்கள். என்றாலும் இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சத்தை ஆராயும் போது சில தெளிவுகள் பிறக்கின்றன.

மகாவம்சம் என்பது இலங்கையின் வரலாற்றைக் கூறும் புராண நூல் அல்ல. இதன் கருப்பொருள் பௌத்தம் மட்டுமே. திரிபு படுத்தப்பட்ட அந்த வரலாற்று நூல் தமிழர்களின் பெருமையை மறைக்கின்றது.

ஆனாலும் அதனை ஆராயும் போது தமிழர்களின் இப்போதைய, அப்போதைய நிலையினை தெளிவு படுத்திக் கொள்ளமுடியும். அந்த வகையில் இலங்கை வரலாறு திரிபு படுத்தப் பட்டிருந்தாலும் ஒட்டு மொத்த வரலாறுகளையும் திரிபு படுத்த முடியாது.

இயற்கை வழிபாடுகள் மேற்கொண்டவர்களே இலங்கையின் பூர்வக் குடிகளான இயக்கரும் நாகரும் என மகாவம்சம் கூறுகின்றது. அதே காலகட்டத்தில் தென்னிந்தியாவில்.,

தமிழர்கள் அதாவது சேர சோழ பாண்டியர்கள் மேற்கொண்டது இதனையே என்பதும் வரலாறு. இந்து வேதங்களின் முதற்பகுதியில் இயற்கை வழிபாடுகளையே தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

“நாகர்” என்ற சொல் நாகம் அல்லது நாகர் என்ற தமிழ் சொல்லுடன் தொடர்பு பட்டதாகவும் இது தமிழர்களுக்கும் இலங்கையின் பூர்வ குடிகளுக்கும் உள்ள தொடர்பை எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விஜயன் தன் தோழர்களுடன் இலங்கைக்கு வந்த பின்னர் இயக்கர் இனத்தின் குவேனியை மணந்துள்ளான். பின்னர் இந்தியாவில் இருந்து பாண்டிய நாட்டு இளவரசிகளை அழைத்து வந்து மணவாழ்வில் ஈடுபட்டுள்ளான்.

இது இலங்கையில் ஆரம்ப காதத்தில் தென்னிந்திய தமிழர்களில் கலவையை எடுத்துக் காட்டுகின்றது. ஆனாலும் மகாவம்சத்தில் இது திரிபு படுத்தப்பட்டுள்ளது.

“சிகல” என்ற சொல் மகாவம்சத்தின் மூல நூலான தீபவம்சத்தில் இருந்தே வந்துள்ளது. 4ஆம் மற்றும் 5ஆம் நூற்றாண்டுகள் வரை இலங்கையில் “தமிழ், பாளி, பிராமி, மற்றும் கலிங்க மொழிகளே இருந்து வந்துள்ளது.

இம் மொழிகள் அனைத்தும் தமிழ் மொழியின் கலப்பு கொண்டவை என்றே தெரிவிக்கப்படுகின்றது.

அது மட்டும் அல்லாது நாக இனத்தின் மக்களின் பரம்பரைப் பெயர்களாக நாகன், தீசன், சிவன் ஆகியன காணப்பட்டுள்ளது. இவை தமிழ்ப்பெயர்கள் என்பது உலகறியும்.

மேலும், அநுராதபுரத்தினை கிமு 307 – 247 களில் ஆண்ட நாக மன்னன் மூத்தசிவனின், மகன் தேவநம்பியதீசனின் சகோதரன் மகாநாகனின் மூன்றாம் தலைமுறை இளவரசன் காக்கவண்ண தீசனுக்கும்.,

களனியினை ஆண்ட நாக மன்னனின் மகள் விகாரமாதேவிக்கும் பிறந்த துட்டகைமுனுவே கிமு 101-77களில் ஆட்சி செய்துள்ளான் அவனே மகாவம்சம் கூறும் நாயகன்.

நாகர் குல மன்னனான எல்லாளனுக்கும் துட்டகைமுனுவிற்கும் இடையே பௌத்தத்திற்கும் வைதீகம் அல்லது ஆதி சைவ மதத்திற்கும் யுத்தம் ஏற்பட்டுள்ளது. அதுவே பிற்காலத்தில் யுத்தம் சிங்கள தமிழ் யுத்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது துட்டைகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம் இலங்கை வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

எல்லாளனை நெருங்குவதற்காக 32 தமிழ் மன்னர்களுடன் துட்டைகைமுனு யுத்தம் செய்து வென்றதாக மகாவம்சம் சிறப்பாக கூறுகின்றது.

இந்த விடயம் கி மு 2ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் இலங்கையில் பரவலாக வசித்தமைக்கு முக்கிய சான்றாகும். 32 குறுநில மன்னர்கள் கொண்ட ஆட்சி அப்போது இலங்கையில் இருந்துள்ளது.

இங்கு குறிப்பிட்டு கூறப்பட வேண்டியது அந்த யுத்தத்தில் துட்டைகமுனுவின் படையில் பௌத்த மதத்தை தழுவிய தமிழர்களும் இருந்தார்கள்.

எல்லாளனின் படைதளபதியான மித்தனின் சகோதரன் மகன் நந்தமித்தன் துட்டகைமுனுவின் பிரதான தளபதிகளில் ஒருவனாக செயற்பட்டதாகவும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது.

இது தமிழர்களின் தோல்விக்கான காரணத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டும் ஒன்று அதே நிலைதான் இப்போது வரையிலும் தொடர்கின்றது.

அதேபோன்று இலங்கையில் ஆரம்ப வரலாறு சங்க இலக்கியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சங்க தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்றது “பரணன்” என்கின்ற கவிஞனின் பெயர்.

துட்டகைமுனுவின் உதவியாளர் படையில் இதே பெயர் கொண்ட வீரன் உள்வாங்கப்பட்டுள்ளான். இது மகாவம்சம் இருபதாம் அத்தியாத்தில் கூறப்பட்டுள்ளது.

அதே போல் இலங்கைக்கு வந்த ஐந்து தேரர்களில் ஒருவரான உதியன் மற்றும் உதியன் என்கின்ற மன்னனனுடைய பெயரும் சங்க காலத்தில வாழ்ந்த மன்னன் உதியன் சேரலாதனை என்பவனையே எடுத்துக் காட்டுகின்றது.

இவை மகாவம்வத்தில் 20 ஆம் அத்தியாயத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் பார்க்கும் போது.,

தமிழர்களின் நிலையை மாற்றியமைத்து வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்று வகை வரலாறு காரணமாகவே இலங்கைத் தீவின் பிரச்சினை தொடர்ந்து கொண்டு வருகின்றது என்பது தெளிவு.

Advertisements