இறுதிக் களத்தில் நடந்தது என்ன?

ஆட்சி மாறிவிட்டது இப்போது இலங்கையில் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலங்களுக்கு தீர்வு கொடுக்கப்பட வேண்டும்.,

போர்க்குற்ற விசாரனைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதும் ஒரு தரப்பினரது கோரிக்கையாக இருக்கின்றது.

இந்த நிலையில் இலங்கை அரசு மட்டும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதை ஒத்துக் கொள்ளாத நிலையிலேயே நாட்கள் நகர்த்தப்பட்டு கொண்டு வருகின்றது.

இறுதி யுத்த காலத்தில் இலங்கையில் இடம் பெற்றது என்ன? இங்கிலாந்து “சண்டே டைம்ஸ்’ நாளேட்டின் பெண் செய்தியாளர் மேரி கால்வின் அப்போது வெளியிட்ட செய்தி.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பாலசிங்கம் நடேசனிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

இலங்கையின் வடகிழக்குக் கடலோரத்தில் கடற்கரைக்கும் காட்டுக்கும் இடையிலான சிறிய நிலப் பகுதியில் இருந்து அவர் என்னிடம் பேசினார்.

பின்புலத்தில் இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் பொழியும் குண்டுகளின் சத்தங்கள் கேட்க “நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருக்கின்றோம்” என்றார்.

“ஒபாமா அரசு, இங்கிலாந்து அரசு ஆகியவற்றிடம் இருந்து எங்களின் பாதுகாப்புக்கு உறுதி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். பாதுகாப்புக்கு உறுதி கிடைக்குமா?” என்று நடேசன் கேட்டார்.

இதனை தெரிவித்த நடேசன் 26 வருட கால யுத்தத்தின் பின்னர், இலங்கை அரசிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் அறிந்திருந்தார் நடேசன்.

8 ஆண்டுகளுக்கு முன்னால் விடுதலைப் புலிகளின் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்று வந்ததில் இருந்து நடேசனையும், விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகத் தலைவர் சீவரத்தினம் புலித்தேவனையும் நான் நன்கு அறிவேன்.

விடுதலைப் புலிகளுக்கும் ஐ.நா.வுக்கும் இடையே பல நாள் தூதுவர் நான். அந்த வகையில் ஐ.நா.வுக்கு 3 விடயங்களைத் தெரிவிக்குமாறு நடேசன் என்னைக் கேட்டுக்கொண்டார்.

தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்க அவர்கள் தயாராக இருக்கின்றனர். தங்களின் பாதுகாப்புக்கு அமெரிக்கா அல்லது இங்கிலாந்து உறுதி அளிக்க வேண்டும். சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உறுதி அளிக்கக் கூடிய அரசியல் நடைமுறைக்கு இலங்கை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் இது நான் கொண்டு சென்ற தூது.

ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனின் தலைமைச் செயலர் விஜய் நம்பியார் இதனை இலங்கை அரசிடம் தெரிவிப்பதாக கூறினார். அதன் பின்னர் “சரண் அடையும் நடேசனுக்கும், புலித்தேவனுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக விஜய் நம்பியார் தெரிவித்தார்.

“வெள்ளைக் கொடியை ஏற்றினால் போதும்” எனவும் அவர் கேட்டுக் கொண்டார். அதனை விடுதலைப்புலிகள் தொடர்பாளர் மூலமாக நடேசனுக்கு அறிவிக்க செய்தேன்.

ஆனால் அப்படியே தலைகீழாகி விட்டது ஆயுத ஒப்படைப்பு, சரண் அடைந்ததில் தவறு நடந்து விட்டது. நடந்தது என்ன?? இந்த செய்திகளுக்கு இடைப்பட்ட வேளையில் ரோகன் சந்திர நேருவுக்கும் நடேசனுக்கும் பேச்சுவார்த்தை இடம் பெற்றுள்ளது.

“நடேசனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் முழுப் பாதுகாப்பு அளிப்போம் என அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ரோகன் சந்திர நேரு நடேசனிடம் தெரிவிக்க, “நடேசன் தன்னுடன் 300 பேர் இருப்பதாகவும், அவர்களில் சிலர் காயம் அடைந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் பசில் ராஜபக்ச மூலமாக வெள்ளைக் கொடி ஏந்தி வரவேண்டிய பாதை நடேசனுக்கு கூறப்பட்டுள்ளது.

திங்கற்கிழமை காலை 6.20 மணிக்கு ரோகன் சந்திர நேரு நடேசனைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். “நாங்கள் தயார், “வெள்ளைக் கொடியை ஏந்தி நான் நடக்கப்போகிறேன்” என்று நடேசன் தெரிவித்திருக்கிறார்.

“வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள். அதை அவர்கள் பார்க்க வேண்டும். மாலையில் நான் உங்களைச் சந்திக்கின்றேன் என ரோகன் சந்திர நேரு தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு இடையில் வெள்ளைக் கொடிக்களம் கொலைகளமாக மாறியது இடையில் நடந்தது என்ன??

அதனை போர்க்களத்தில் இருந்து தப்பி வந்த தமிழன் என்னிடம் சொன்ன செய்தி,

ஆண்கள், பெண்களுடன் ஒரு குழுவாக நடேசனும், புலித்தேவனும் வெள்ளைக் கொடியேந்தி வந்தபோது இலங்கைப் படையினர் அவர்களை நோக்கி இயந்திரத் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கி உள்ளனர்.

நடேசனின் மனைவி, “அவர் சரண் அடைய வருகிறார் அவரைச் சுடுகிறீர்களே” என்று சிங்களத்தில் குரல் எழுப்பியிருக்கிறார். ஆனால் அவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் உருவாகக் காரணமாக இருந்த தமிழ் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணாத வரையில், இலங்கையில் உடனடி எதிர்காலத்தில் ஒற்றுமை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.

இது செய்தியாளர் மேரி கால்வின் வெளியிட்ட செய்தி. இதன் படி இலங்கையில் பிரச்சினை தொடர்வதற்கு ஜ.நாவின் பங்களிப்பு காணப்பட்டுள்ளது.

மக்கள் மடிய அமெரிக்காவும் ஐ.நாவும் காரணம் என்று கூறப்படுகின்றது. அப்படி என்றால் ஏன் பிரச்சினையை வளர்த்து விட்டது ஐ.நா?

இந்த வெள்ளைக் கொடி விவகாரம் இன்று வரை பேசப்படுகின்றது ஆனால் ஏன் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை? இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லை.

ஆனால் இன்று கடந்த கால கசப்புச் சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரும் அரசு தரப்பு இந்த விடயத்தை ஏன் மறைக்கின்றது? அப்படி என்றால் ஒட்டுமொத்தமாக இணைந்து தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்களா? என்ற பல கேள்விகள் எழுகின்றது.

எவ்வாறாயிலும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு தீர்வு கொடுக்கப்பட்டு, அவர்களது உரிமைகள் நிலை நாட்டப்பட இப்போதைய அரசு முன் வரவேண்டும்.

ஆனால் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என அனைத்தையும் முன்னைய அரசுகள் போலவே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றது இப்போதைய அரசும் என விமர்சிக்கப்படுகின்றது.

ஆனாலும் அவற்றை விடுத்து விட்டு இன்னும் விடுதலைப்புலிகளையே தொற்றிக் கொண்டு இருப்பதில் எந்த பயனும் இல்லை. இது ஒரு வகையில் பிரச்சினையை தீர்ப்பது அல்ல வளர்த்து வரும் செயலே.

எவ்வாறாயினும் முறையான தீர்ப்பு கொடுக்கப்படுவது மட்டுமே எதிர் கால நல்லிணக்கத்திற்கு வித்திடும் என்பது உறுதி என்பது தென்னிலங்கை புத்திஜுவிகளின் கருத்து.

Advertisements