முல்லைத்தீவு- பிலக்குடியிருப்பு மக்கள் 2ம் முள்ளிவாய்க்கால் அவத்தையே இப்போதுஅனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

1ம் முள்ளிவாய்க்காலில் கிபிர் விமானங்களின்சத்தங்களும், செல் சத்தங்களும் நிறைந்து கிடந்தது. ஆனால் இப்போது அந்த சத்தங்கள்இல்லாமை ஒன்றே குறை, மற்றபடி முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான வாழ்க்கையே இப்போதும்வாழ்கின்றோம்.

மேற்கண்டவாறு கேப்பாபிலவு- பிலக்குடியிருப்பு மக்கள் கூறியுள்ளனர்.

19 நாட்களாக சொந்தநிலத்தில் தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி பிலக்குடியிருப்பு மக்கள் கவனயீர்ப்புபோராட்டத்தை நட த்தி வருகின்றனர்.

இந்நிலையில் 19 நாட்களாக எந்தவொரு தகவலும்மக்களுக்கு வழங்கப்படாத நிலையில் விரக்தியடைந்த மக்கள் மேற்கண்டவாறுகூறியிருக்கின்றனர்.

இதன்பேhது அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த மாதம் 30ம் திகதி எம்மை எமது சொந்தநிலங்களில் மீள்குடியேற்றவுள்ளதாக கிராமசேவகரும், விமானப்படையினரும் எமக்குகூறியிருந்தனர்.

அதனை நம்பியே நாங்கள் எங்களுடைய கிராமத்திற்கு வந்தோம். ஆனால்வந்தவுடன் பேச்சுக்கள் அனைத்தும் தலைகீழாக மாற்றப்பட்டது.

பிரதேச செயலரைஅழைத்தோம் அவர்பதிலளிக்கவில்லை. கிராமசேவகரை கேட்டோம், மன்னித்து கொள்ளுங்கள் என்றார்.விமானப்பi டயினரை கேட்டோம் அவர்களும் தமக்கு தெரியாது என்றார்கள்.

இந்த நிலையில்கோபமடைந்த நிலையிலேயே மக்கள் போராட்டத்தில் குறித்தனர். எங்களுடையகோரிக்கையில் எந்த பிழைகளும் இல்லை.

8 வருடங்களாக ஒரு கால் ஏக்கர் நிலத்தில்படையினர் அமைத்துக்கொடுத்த வீட்டில் வாழ்ந்தோம். அதனை வீடு என்றே கூற இயலாது. அந்தளவுக்கு சுவர்கள் இடிந்து கதவுகள் பூட்ட முடியாத நிலைக்கு மாறியிருக்கின்றது.

இவை எல்லாவற்றையும் பார்த்தேநாங்கள் போராடத் தொடங்கியிருக்கிறோம்.

எங்களுடைய இந்த போராட்டம் எமக்கு 2ம்முள்ளிவாய்க்காலே. 1ம் முள்ளிவாய்க்காலில் கிபிர் விமானங்களின் சத்தமும், செல்சத்தமும் நிறைந்திருந்தது.

ஆனால் அந்த சத்தங்கள் மட்டும் இல்லையே ஒழிய மற்றய அனைத்து துன்பங்களையும் நாங்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப நாங்கள் விரும்பவில்லை. காரணம் அவர்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம்கிடையாது.

ஐந்தரை கிலோ மீற்றர் தூரம் பல படைமுகாம்களை தாண்டியே எங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. அவர்களை படையினர் கடத்தி காணாமல்போக செய்யலாம்.

எனவே எங்களுடைய நிலத்தில் நாங்கள் நிம்மதியாக மீளக் குடியேறும் வரையில் நாங்கள் எங்களுடைய பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பப் போவதில்லை.

அவர்க ள்எங்களுடனேயே இருக்கலாம். அவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. எனவே நாங்கள் எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் 19 நாட்களாக போராடிகொண்டிருக்கின்றோம்.

எனவே உள்நாட்டில் உள்ளவர்களும், புலம்பெயர் தமிழர்களும் எமக்குஒத்துழைப்பை தாருங்கள் என மக்கள் கேட்டுள்ளனர்.

***

நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் குதித்த மாணவர்கள்

ஸ்ரீலங்கா இராணுவம் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி அறவழிப்போராட்டத்தை தொடுத்துள்ள முல்லைத்தீவு மக்களுக்கு ஆதரவாக பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கிலுள்ள சகல பாடசாலைகளின் மாணவர்களை இன்று காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணி வரையிலான ஒரு மணி நேரம் பாடசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசே 54 பாடசாலை மாணவர்களின் கல்வியை பாழாக்காதே, இலங்கை படையே பூர்விக காணிகளை எம்மிடம் கையளித்துவிடு,கேப்பாபுலவு சிறுவர்களின் கல்வியை சிதைக்கும் அரசே இதுவா? உன் நல்லாட்சி என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட கேப்பாபுலவு –பிலவுக்குடியிருப்பு மக்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரசேத மக்கள் தமது காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு போராட்டத்தில் பெற்றோர் ஈடுபட்டுள்ள நிலையில் மாணவர்களும் பெற்றோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

**

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் மக்கள் இரவுணவையும் வழங்கினர்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் சொந்த நிலங்களை மீட்கும் போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துடன் இரவுணவையும் வழங்கினர்.

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 20 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை விமானப்படைத்தளத்துக்கு முன்னால் வீதி ஓரத்தில் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஆதரவு பெருகிவரும் நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை முல்லைத்தீவு கிளையினரும் முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, தண்ணீர்ஊற்று, ஹிஜிராபுரம் ஆகிய பள்ளிவாசல்களின் பரிபாலனசபையினரும் நேற்று மாலை கேப்பாபுலவு மக்களின் போராட்டக்களத்துக்கு நேரடியாக வருகைதந்து தமது ஆதரவினை வெளியிட்டதோடு இரவு உணவினையும் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

***

எப்போதோ கேட்ட கவியொன்று இன்று நினைவில் வருகின்றது. கவிகளையும், இலக்கியப் புராணங்களையும் மீட்டிப் பார்க்க வைப்பதில் இலங்கைத் தமிழர் கெட்டிக்காரர்கள் தான்.

போராட்டமே வாழ்க்கையாகிப் போகின்றது தமிழர் தம் வாழ்வு. இதற்கு காரணம் எது வென கண்டு பிடிக்கும் முன்னரே வாழ்க்கை முடிந்து போய் விடும் போல. கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்தை பார்க்கும் போது தீர்க்கக் கவியாக நினைவு வருகின்றது.

இப்போதைய தமிழர் நிலையை அப்போதே வடித்தான் தமிழ்க்கவி பாரதி. அன்று பாரதி வடித்த காணி நிலம் பராசக்தி எனும் கவிதை இன்றைய தமிழர் போராட்டத்தை நினைவு படுத்துகின்றது.

தமிழ்க் கவிகள் தீர்க்கதரிசிகள் என்ற கூற்றை மெய்யாக்கியது பாரதி எனும் புரட்சிக் கவியின் சொற்கள்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வசதி என்றாலே சொந்தமாய் ஒரு நிலம் இருப்பது. காணி இருந்தால் அது போதாது சொந்தமாக இருக்கவேண்டும் அதுவும் தன் வசம் இருக்க வேண்டும்.

சொந்தக் காணிகள் அந்நியர் வசம் இருக்கும் போது பூர்வீக சொத்தில் கால் பதிக்க முடியாதா? இறக்கும் முன்னர் தன் சொந்தக் காணியில் குடியேருவோமா?

என போராடும் மக்களின் போராட்டம் விடும் கண்ணீர். துடிக்கும் இதயத்தை கொஞ்சம் மெதுவாக அல்லது வேகமாகவே துடிக்க வைக்கும்.

அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்

அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்

காணி மட்டும் போதாது பராசக்தி அழகிய தூய மாளிகை வேண்டும். மாட மாளிகை அல்ல ஓர் வீடு. திருத்தம் இங்கு கொடுக்கப்படுவது பொருத்து வீடுகள் காற்றடித்தால் காணாமல் போகும் என்கின்றனர் வீடு கிடைத்து விரக்தியடைந்த மக்கள்.

சொந்தக் காணியே கொடுக்கப்பட வில்லை அதில் யார் மாளிகை கட்டிக் கொடுக்கப்போவது. நம்பிப் பயன் இல்லை பாராசக்தியிடம் கையேந்துவோம். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை.

அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்

பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்

வடக்கிற்கு தென்னைகள் மட்டுமல்ல பனைகளும் மிக்க இயற்கைச் சூழல் இல்லாமல் மாளிகை மட்டுமல்ல குடிசையும் வேண்டாம். அதற்கு தானே வேண்டும் எங்கள் காணிகள் என கேட்கின்றனர் காணி உரிமையாளர்கள்.

இந்த தென்னையை பனையாய் சித்தரிப்போம். அவை இயற்கை விசிறிகள் அங்கே அமர்ந்தால் தெரியும் காற்று தனக்கே காற்று வீசிக் கொள்வது.

அதன் சுகம் அங்கே இருப்பவருக்கு மட்டுமே தெரியும். அதனைத் தானே கேட்கின்றார்கள். பத்து பன்னிரண்டு தென்னைகளை ஆனால் அவை சொந்தக் காணிகளாக இருக்க வேண்டும்.

நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்

அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்

பூமியைத் தாண்டி இப்போது வானம். சொந்தக் காணி, அழகிய வீடு சுற்றிலும் இயற்கைச் சூழல், வருடும் காற்று அத்தோடு நிலாவைப் பார்க்க வெளியே வரவேண்டும்.

அந்த அமைதி குளிர் அறையில் ஒய்யாரமாய் இருக்கும் அரசியல் வாதிகளுக்கு எட்டாக் கனி அதனாலேயே. மக்களுக்கு தன் காணியும் கானல் கனியாகி விட்டது.

கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும், இங்கு குயிலை அழைக்க வில்லை தன் காதல் துணையை அழைக்கின்றான் பாரதி.

என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்

பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்

இவை மட்டும் போதாது சித்தம் தனிந்திடத் தென்றல் வரவேண்டும். தென்னையும் தென்றலும் போதுமா? கொதிப்பவன் குளிரவேண்டுமே அவன் உரிமை கைவர வேண்டும். அத்தோடு பத்தினிப் பெண் வேண்டும்.

தன்மீது மட்டும் காதல் கொள்ளும் ஓர் பெண்ணே பத்தினிப் பெண். கற்பில் மட்டுமல்ல காதலிலும் பத்தினிப் பெண் வேண்டும் எனக் கவிப் படைத்தான் பாரதி. இது இன்றைய நிலையில் வடக்கைப் பெறுத்த வரை மாறி விட்டது.

பத்தினிகளை கூறு போடும் சமூதாயத்தை திட்டம் தீட்டி உருவாக்கப்படுகின்றார்கள். இது அறிந்ததாலோ தெரியவில்லை அன்றே பாரதி கேட்டு விட்டான் பத்தினிகளை விட்டு விடுங்கள் சிதைக்காதீர்கள் என்று.

எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்

அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்

என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்

கூட்டாக இவற்றை ரசிக்க வேண்டும் அவை மகிழ் கவிகள் தரவேண்டும். காடு வேண்டும், இயற்கை வேண்டும், தென்றல் வேண்டும், கேடு கெட்ட சமுதாயம் வேண்டாம் அப்போது ஒற்றுமையாக இருந்த காட்டு வாழ்க்கை போதும்.

கிடைக்காத இவை சில வேளை கிடைத்து விட்டால் என்ன செய்வது எவரையுமே நம்ப முடியாது. சுற்றிலும் காட்டிக் கொடுப்புகள் இவையனைத்தையும் காக்க பாராசக்தியே நீயே காவல் தர வேண்டும்.

அருமையான சொந்த நிலம், அங்கு அழகான வீடு, தென்னை தென்றலின் இதம், கேணி கொடுக்கும் ஊற்று, நட்சத்திரங்கள் சிரிக்க நிலவு ஒளி, கூவும் குயில், எழும் கொதிப்பைச் சீராக்கத் தென்றல், அருகில் பத்தினிப் பெண், பொங்கும் கவிதைகள், பொறாமை உலகினை காக்க பராசக்தி.,

இத்தனையும் வேண்டிய படி கிடைத்தால் சுகம் தலையேற நிலைமாறி தடம் மாறிப்போக மாட்டோம் அதுதான் என் மூச்சு, சொந்தக் காணி அதுதான் என் வாழ்க்கை அதுதான் என் உயிர் என்றான் பாரதி அப்போதே.

வடுக்களும் காயங்களும் மறைய இனியாவது சொந்தக் குழந்தைகளை திறன் பட வளர்க்க, சுயத்தோடு வளர்க்க சொந்தக் காணிகளைத் தாருங்கள் கேட்டு இன்றும் போராடும் மக்கள்.

அவர்களோடு சேர்ந்து மழலைகளும் போராட்ட களத்தில். என்று தீரும் இந்த அவலம், தீர்க்கப்படுமா? அல்லது தொடரப்படுமா அரசியல் தலைமைகள் வந்து பதில் தரவேண்டும்.

அயல் நாடுகளுக்கு சென்று வாழ்ந்தாலும் அது அவர்கள் வீடு அல்ல விடுதி மட்டுமே. சொந்த இடங்களில் தங்கள் உயிரற்ற உடலாவது புதைக்கப்பட வேண்டும் என்பது தமிழர்கள் வரமாக பார்க்கும் ஒன்று.

இது காணிகள் கேட்டு போராடும் மக்களின் மண் ஆசை அல்ல, அவர்களின் உயிர், உரிமைத் தேடல். அதனை தீர்க்க வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமை.

Advertisements