அங்கேயே உண்டு, உடுத்து, உறங்கி வாழ்வின் அத்தனை கூறுகளையும் எதிரியின் முன்னரங்க அரண்களுக்கும் அவனது துப்பாக்கிகளுக்கும் இடையிலேயே கட்டமைத்துவிட்டு மக்கள் பேராட்டத்தின் நவீன உத்தியை உலகிற்கு அறிமுகம் செய்து விட்டு நிமிர்ந்து நிற்கிறது கேப்பாபுலவு மண்.

‘தமது விடுதலைக்காக தாம்தான் போராடவேண்டும’; என்ற தெளிவுக்கு என்று வந்தார்களோ, அன்றே அவர்கள் வெற்றிக்கான சூத்திரத்தையும் வகுத்து விட்டார்கள். அதன் விளைவே எதிரியின் காலடிக்குள் திறந்திருக்கும் இந்த நவீன போரரங்கு.

இது பிரபாகரனியத்தின் கனவு வடிவம்.

இதே போல் எதிரிகளால் ஆக்கிரமிக்கப்படடிருக்கும் ஒவ்வொரு “தமிழர் நிலமும்” சமகாலத்தில் ஒன்றாக அணிதிரண்டு எதிரியைத் தேடிப்போய் அவன் காலடிக்குள் வாழ்வும் பேராட்டமும் கலந்த இந்த நவீன உத்தியை பிரயோகித்தால் எதிரிக்கு மண்டியிடுவது அல்லது தப்பியோடுவதைத்தவிர வேறு தெரிவுகள் இருக்கப் போவதில்லை.

நம்பிக்கை தரும் அறிகுறிகளுடன் கேப்பாபுலவு மண் அடங்க மறுத்து திமிறியெழுந்து நிற்கிறது.

‘நந்திக்கடல்’ இதன் மவுன சாட்சியாக அமைதியாகக் கிடக்கிறது.

-Parani Krishnarajani

**

தேவையில்லாமல் உட்சென்றால் சுடப்படுவீர் பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு விமானப்படை எச்சரிக்கை

இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் நேற்றைய தினம் அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களையும் தங்களையும் விமானப்படையினர் புகைப்படம் எடுத்து ஒளிப்பதிவு செய்து அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் நேற்றைய தினம் கருத்து தெரிவித்த நிலையில் இன்றையதினம் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இன்று அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு கோரி பதினெட்டாவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு விமான படையினர்

உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் போரட்டத்தில் ஈடுபடும் சிலரை மது பாவனைக்கு அடிமையாக்கி அவர்களூடாக போராட்டத்தை குழப்ப சதித்திட்டம் தீட்டிவருவதாகவும் அவ்வாறான சம்பவங்கள் சில இடம்பெற்றதாகவும் எத்தடை வந்தாலும் தாம் கணிக்குள் செல்லும்வரை போராட்டம் நிறுத்தப்படாது எனவும் தமக்கு மக்கள் அச்சமின்றி பூரண ஆதரவு வழங்குமாறும் கோரிய நிலையில் விமானப்படையினரின் இந்த அறிவித்தல் தம்மை அச்சுறுத்தவே எனவும் தெரிவிக்கின்றனர்.

விமானப்படையால் கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த காணிகளின் ஒருபுற வேலி அடைக்கப்படாது காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் அந்த பகுதியில் இந்த அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ளஇ குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்தரூ31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் நேற்றும் பலர் தமது ஆதரவுகளை வழங்கினர் .

**

கேப்பாப்பிலவு போராட்டம் குறித்த அரசின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது: யாழ் ஆயர்

நல்லாட்சி அரசு தாமாகவே முன்வந்து செய்திருக்க வேண்டிய ஒரு பணியை கேப்பாப்பிலவு மக்கள் கடந்த 18 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தியும், இதுவரை அரசு பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கது என யாழ் ஆயர் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்பிலவு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் குறித்து யாழ். ஆயர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விமான படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (சனிக்கிழமை) 19 நாட்களாகின்றன. அவர்களின் போராட்டம் இவ்வாறு எவ்வித தீர்வுமின்றி தொடர்வது மனவருத்தம் அளிக்கின்றது.

இதேவேளை புதுக்குடியிருப்பு மக்களும் 16ஆவது நாளாக போராடி வருகின்றனர். தம் சொந்த நிலங்களில் கால் பதிக்கும் வரை நகரப்போவதில்லை என இம்மக்கள் மிக உறுதியாக இருப்பது எல்லாவகையிலும் நீதியானதும் நியாயமானதுமாகும்.

நல்லெண்ண அரசு உடனடியாகவே இப்பிரச்சினைக்கு முடிவு காண விரைந்து செயற்பட வேண்டும் என அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பேரால் அரசிற்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அத்துடன், இது தொடர்பில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அமர்வில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

*
போரில் எம் சிறுவர்கள் கொன்றெறியப்பட்டதற்கும் பனி, வெயிலில் வாடிக் கிடப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை- தீபச்செல்வன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் 15ஆவது நாட்களை கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிலக்குடியிருப்பு மக்களின் ஆரம்ப சுகாதார நிலையமும் முன்பள்ளியும் இன்று இலங்கை அரசின் விமானப் படைமுகாம் வாயிலாக மாறியுள்ளது. அதற்கு எதிரிலே தகரங்களால் கூடாரங்களை அமைத்துக் கொண்டு, அதில் இருந்தும், அருகில் உள்ள வயல்களில் சமைத்து, உண்டு, உறங்கி எழுந்து கொண்டு கடந்த 15 நாட்களாக வீடு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் மக்கள்.

அந்த மக்கள் தங்கியிருந்து போராட்டம் நடத்தும் தகரக் கூடாரங்களில் ஒரு பத்து நிமிடம்கூட இருக்க முடியாது. பகல் முழுவதும் கடுமையான வெய்யில். பெண் குழந்தைகளும், சிறுவர்களும் வெயிலில் வாடிக் கறுத்துப் போயிருந்தார்கள். இரவு வந்ததும் கடும் பனி. இப்படித்தான் அந்த மக்கள் ஒவ்வொரு கணங்களையும் கடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மக்கள் ஏன் இப்படி தெருவில் வந்து போராடுகிறார்கள்? பல்வேறு போராட்டங்களைச் செய்து, பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலையிலேயே மக்கள் மிகவும் பாதிப்பை தரும் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் உக்கிரமான வார்த்தைகள் இந்த நிலத்தில் மண் ஆக்கிரமிப்புக்கு எதிராக, இன ஒடுக்குதலுக்கு எதிராக வெகுண்டெழுந்த குரல்கள் அவை. நாங்கள் 84 பெண்களை இந்த நிலத்திற்காக கொன்றால், 84 ஆண்கள் வருவார்கள். நாளை எங்கள் வீடுகளிலிருந்து பிள்ளைகள் வளர்ந்து எங்கள் நிலத்திற்காக வருவார்கள். நிலத்தை மீட்காமல் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று உக்கிரமாக பேசுகின்றனர் இப் பெண்கள். இராணுவமுகாங்களை தகர்க்கும் அனல் கொண்ட சொற்கள் அவை.

அவர்கள் கேட்கிறார்கள். சிங்கள மக்களுக்கு ஒன்று என்றால் இந்த அரசாங்கம் இத்தனை நாட்கள் பனியிலும், வெயிலிலும் இப்படி அலைய விடுமா? நாங்கள் தமிழ் மக்கள் என்பதால்தானே இப்படி ஓர வஞ்சனை? அந்த மக்களே இலங்கை அரசின் இனப் பாரபட்சம் குறித்தும் இன ஒடுக்குமுறை குறித்தும் மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் கேட்கிறார்கள். அந்தப் பச்சிழங் குழந்தைகளின் முகங்களை, பள்ளி செல்ல வேண்டிய சிறுவர்களின் முகங்களைப் பார்த்தால் மனசாட்சி உள்ளவர்களுக்கு இரக்கம் வரும். இறங்கி வருவார்கள்.

இலங்கை அரசாங்கத்திற்கு எப்போது மனசாட்சி இருந்தது? எங்கள் சிறுவர்கள் கொன்று வீசப்படுவதுதானே மனிதாபிமானம். உண்மையில் அன்று போரில் எம் சிறுவர்கள்மீது கொன்றெறியப்பட்டதற்கும் இன்று பனி, வெயிலில் வாடிக் கிடப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. அன்றைக்கு அவர்கள் வாழ்ந்த மண்ணாக, அவர்களை மண்ணைவிட்டு அவர்களை துரத்தாமல், அதற்காக யுத்தம் செய்யாமல், சிறுவர்களை, குழந்தைகளை அவர்களின் உரிமையுடன் அணுகாமல் அழித்து ஒழித்ததுபோலவே இன்றைக்கும் அவர்கள் இனப் பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளும் முன்னெடுக்கும் போராட்டம் இது. ஒழுங்கான உணவின்றி, ஒழுங்கான உறக்கமின்றி, நிலம் இழந்த துயரம் படிந்த குழந்தைகள் என்ன குற்றம் செய்தனர்? தம் தாய் நிலத்திற்காக இப்படி பனியிலும் குளிரிலும் வெயியிலும் போராட வேண்டிய நிலையிலுள்ளனர். கேப்பாப்புலவு பற்றிய பாடல்களை இயற்றி பாடிக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். தம் தாய் நிலம் குறித்தும் அதில் வாழ வேண்டிய வாழ்வு குறித்தும் அந்தப் பிஞ்சுகளிடம் இருக்கும் கனவை, ஆசையை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லையே. விமானப் படைவாசலாக்கப்பட்ட அப் பகுதியில் எந்த அச்சமுமின்றி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விமானப் படையை நோக்கி அம்புவிட்டு விளையாடி பொழுதை கழிக்கிறார்கள்.

அப் பகுதி சிறுவர்கள் எவரும் பாடசாலை போகவில்லை என்று தாய் ஒருவர் குறிப்பிட்டார். அதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் கல்விப் பாதிப்புக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மரங்களின் கீழே பெரியவர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடல்களைப் பாடி கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். ஆனால் எம் நிலத்திற்காக எப்படியெல்லாம் போராட வேண்டும் என்ற வரலாற்றுப் பாடத்தை கேப்பாபுலவுச் சிறுவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். எந்தப் பாடசாலையிலும் அவர்கள் கற்க முடியாதொரு பாடத்தை அச் சிறுவர்கள் கற்கின்றனர்.

எங்கள் நிலத்தை ஆக்கிரமித்தது யார்? யாருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம்? இப்படி எல்லாம் போராடும் எங்களை குரலை ஏன் அரசு செவிசாய்க்கவில்லை? நாங்கள் யார்? ஏன் இப்படி எல்லாம் துன்புறுத்தப்படுகிறோம்? எங்களுக்கு என்ன நடக்கிறது? இவைகளை கேப்பாபுலவு சிறுவர்களுக்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த ஈழச் சிறுவர்களுக்கும் செய்திகள் வழியும் புகைப்படங்கள் வழியும் ஊடகங்கள் வழியும் எடுத்து உணர்த்திக் கொண்டிருக்கிறது கேப்பாபுலவு மண்மீட்புப் போராட்டம்.

காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக சில செய்திகள் வந்தன. ஜனாதிபதி இணங்கினார் என்றும் இராணுவத்தளபதி இணங்கினார் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் அந்த மக்களின் காணிகளை இலங்கை அரச படைகள் அபகரித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை, போராட்டத்திற்கு வருபவர்களை புகைப்படம் பிடித்து பதிவு செய்கிறது. விமானப்படை. அதனால் தமது நிலத்தை கையளித்து இராணுவம் வெளியே சென்ற பின்னர்தான் போராட்டம் நிறைவுபெறும் என மக்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.

கேப்பாபுலவு அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த நிலம். அவர்கள் தம் உதிரத்தை, வியர்வையை கொண்டு உருவாக்கியது அந்த நிலம். சொந்த நிலத்திற்காக உயிரையும் விடுவோம் என்று எச்சரிக்கிறார்கள் கேப்பாபுலவு மக்கள். அங்கு வரும் மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதில் பதில் சொல்ல முடியாது. ஓர்மத்தை உறுதியை கேப்பாபுலவு மக்களிடமிருந்து ஈழ மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எத்தகைய போராட்ட வடிவத்தை கையில் எடுக்க வேண்டும்? ஈழமெங்கும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை எப்படி மீட்க வேண்டும் என்பதற்கு இந்த மக்களின் உன்னதமான போராட்டம் ஒரு முன்னுதாரணமாய் அமையும்.

Advertisements