வன்னிப் பெருநிலப்பரப்பில் கட்டுக்கரைக் குளத்தை அடுத்து நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு புராதன குடியிருப்பு மையம்

நீண்­ட­கா­ல­மாக தொல்­லியல், வர­லாற்று ஆய்­வா­ளர்­களால் அதிகம் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாத வன்னிப் பிராந்­தி­யத்­திற்கு தொன்­மை­யான, தொடர்ச்­சி­யான வர­லாறு உண்டு என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வதில் அண்­மைக்­கால­மாக மன்னார் மாவட்­டத்தில் கட்­டுக்­கரைக் குளம் என அழைக்­கப்­படும் பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தொல்­லியல் அகழ்­வாய்­வு­க­ளுக்கு முக்­கிய இட­முண்டு. இங்கு தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில் பூந­க­ரிப்­ பி­ர­தேச சபையின் நிர்­வா­கத்­திற்கு உட்­பட்ட முழங்­காவில் குமு­ழ­முனை வட்­டா­ரங்­களை அண்­டிய நாக­ப­டு­வானில் தெரி­ய­வந்த தொல்­லியற் சின்­னங்கள் பற்­றிய செய்­தி­களை அப்­பி­ர­தேச கிராம அலு­வ­லகர்;, சமுர்த்தி உத்­தி­யோ­கத்தர், ஊட­க­வி­ய­லாளர் மற்றும் வர­லாற்று ஆர்­வ­லர்கள் எமது தொல்­லியல் இறு­தி­ வ­ருட மாணவன் பானு­சங்­க­ருக்கு தெரி­யப்­படுத்­தினர். அதன் அடிப்­ப­டையில் தொல்­லியல் திணைக்­களப் பிர­திப்­ப­ணிப்­பாளர் மற்றும் பூந­கரிப் பிர­தேச செய­லா­ளரின் அனு­ம­தி­யுடன் தொல்­லி­யல் ­தி­ணைக்­கள பிர­தேச பொறுப்­பாளர் பா. கபிலனின் உத­வி­யுடன் யாழ்ப்­பாணப் பல்­கலைக்­க­ழக தொல்­லியல் பிரிவு ஆசி­ரி­யர்கள், மாண­வர்கள் இணைந்து கடந்த­ வாரம் அவ்­வி­டத்தை அடை­யாளம் கண்டு அங்கு பரீட்ச்­ச­ார்த்தமான ஆய்வு ஒன்றை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இவ்­விடம் கட்­டுக்­க­ரைக்­கு­ளத்­திற்கு வட­மேற்கே 50 கி.மீற்றர் தொலைவில் நாக­ப­டு­வானில் கானா மேட்டைக் குளம் என அழைக்­கப்­படும் காட்­டுப்­ப­கு­தியில் பாழ­டைந்த குளத்தின் அணைக்­கட்­டுக்கு அருகில் அமைந்­துள்­ளது. இவ்­வி­டத்தில் இருந்த பாரிய மர­மொன்று வேருடன் விழுந்த போது அவற்றின் அடிப்­ப­கு­தியில் புதை­யுண்­டி­ருந்த வர­லாற்றுத் தொன்மை மிக்க பல சின்­னங்கள் வெளிக்­கி­ளம்­பி­யி­ருந்­தன. இச்­சின்­னங்­களை அச்­சத்­து­டனும் ஆச்­ச­ரி­ய­மா­கவும் பார்த்த மக்­களில் ஒரு பிரி­வினர் அவற்றின் வர­லாற்றுப் பெறு­ம­தியை உண­ராமல் அச்­சின்­னங்­களில் பல­வற்றை ஆல­யங்­க­ளுக்கும், தமது வீடு­க­ளுக்கும் எடுத்துச்சென்­றுள்­ளனர். எஞ்­சி­யி­ருந்­த­வற்றை அச்சம் கார­ண­மாக மக்கள் சிதை­வ­டையச் செய்து ஒதுக்­குப்­பு­றங்­களில் வீசி­யுள்­ளனர்.

ஆயினும் எமது ஆய்வின் போது இவ்­வ­கை­யான தொல்­லியற் சின்­னங்கள் அவ்­விடத்தில் பரந்த அளவில் மண்­ணினுள் புதை­யுண்­டி­ருப்­பதை உண­ர­மு­டிந்­தது. அவற்றை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் அங்கு தெரிவு செய்­யப்­பட்ட ஒரு இடத்தில் 4 × 3 மீற்றர் நீள, அக­லத்தில் மாதி­ரிக்­குழி அமைத்து அகழ்வு செய்தோம். இந்த அகழ்வின் போது அடை­யாளம் காணப்­பட்ட மூன்று கலா­சார மண் அடுக்­கு­களில் பல்­வேறு கால­கட்­டத்தைச் சேர்ந்த மட்­பாண்­டங்­களைக் கண்­டு­பி­டிக்க முடிந்­தது. அவை வடிவ அமைப்­பிலும், தொழில் நுட்­பத்­தி­ற­னிலும் கட்­டுக்­கரைக் குளப்­பி­ர­தேச அகழ்­வாய்வில் கிடைத்த மட்­பாண்­டங்­களைப் பெரு­ம­ளவு ஒத்­த­தாக உள்­ளன. மூன்­றா­வது கலா­சார மண் அடுக்கில் ஒரு சில மட்­பாண்­டங்­க­ளுடன் பெரு­ம­ளவு சுடுமண் உரு­வங்­களும், கழி­வி­ரும்­பு­களும் (Iron Slakes) கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இக்­க­லாச்­சார மண்­ப­டையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சுடுமண் உரு­வங்­களும், மட்­பாண்­டங்­களும் இங்கு வாழ்ந்த பண்­டைய கால மக்­களின் சமய நம்­பிக்­கை­களைப் பிரதி­ப­லிப்­ப­தாக உள்­ளன. அச்­சு­டுமண் உரு­வங்­களில் பீடத்தின் மேல் அமர்ந்­தி­ருக்கும் இரு தெய்­வங்­களின் சிலைகள் சிறப்­பாகக் குறிப்­பி­டத்­தக்­கன. இத்­தெய்வச் சிலை­களை ஊர்­வ­ல­மாகத் தூக்கிச்செல்லும் வகையில் அதன் சது­ர­மான பீடத்தின் நான்கு பக்­கங்­க­ளிலும் முக்­கோண வடி­வி­ல­மைந்த சது­ர­மான துவா­ரங்கள் காணப்­படுகின்­றன. பீடத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தெய்வச் சிலை­களின் இரு கால்­களும் காற்­ச­லங்­கை­க­ளுடன் தொங்­க­வி­டப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­கின்­றன. சிலையின் வலது கரம் பிற்­கால தெய்வச்சிலை­களில் இருப்­பது போன்ற அப­யகரமா­கவும், இடது கரம் வர­தகரதமா­கவும் தோற்­ற­ம­ளிக்­கின்­றன. அவற்றின் வலது கரத்தின் உள்­ளங்­கையில் திரண்ட மும்­ம­ணிகள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றின் தோற்ற அமைப்பு பிற்­காலச் சிலைகள், செப்புத் திரு­மே­னி­களின் கலை­வ­டி­வங்­களை நினை­வு­ப­டுத்­து­வ­தாக உள்­ளன. இருப்­பினும் இச்­சி­லை­களின் தலைப்­பாகங்கள் பெரு­ம­ள­வுக்கு சிதை­வ­டைந்த நிலை­யி­லேயே காணப்­பட்­டன. அவற்­றி­டையே கிடைத்த நட்­சத்­தி­ர­ வ­டி­வி­லான தோட­ணிந்த காதுகள், தாடைப்­ப­கு­திகள் பண்­டைய கால மக்­களின் கலை­ம­ர­பையும், உயர்ந்த தொழில் நுட்பத் திற­னையும் புலப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளன. இச்­சிற்­பங்­க­ளுடன் சேர்ந்­த­தாக மேலும் சில கைகள் உடைந்த நிலையில் கிடைத்­துள்­ளன. அக்­கை­களில் சில­வற்றின் உள்­ளங்­கை­களில் திரண்ட மும்­ம­ணிகள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றை நோக்கும் போது பல கரங்கள் கொண்ட தெய்வச் சிலை­க­ளாக இவை இருந்­தி­ருக்­கலாம் என எண்ணத் தோன்­று­கி­றது.

இச்­சி­லை­க­ளுடன் இவ்­வ­கழ்­வாய்வில் கிடைத்த பிற தொல்­லியற் சின்­னங்கள் இவ்­விடம் பண்­டை­ய­கால மக்­களின் வழி­பாட்­டுக்கு­ரிய மைய­மாக இருந்­தி­ருக்­கலாம் எனக் கருத இட­ம­ளிக்­கி­றது. இதற்கு அகழ்­வாய்வின் போது கிடைத்த பல அள­வு­களிள் வடி­வங்­களில் அமைந்த நாக உரு­வங்கள், ஆமையின் வடிவம், அகல் விளக்­குகள், ஆலய மணிகள், எருதின் உருவம், யானை, குதிரை என்­ப­வற்றின் உடற்­பா­கங்கள், இலிங்க வடி­வங்கள், பல அள­வு­களில் பயன்­ப­டுத்­தப்­பட்ட சட்­டிகள், தட்­டுகள், அவற்றின் விளிம்­பு­களில் படுத்­து­றங்கும் நாகபாம்பின் உருவம் என்­ப­வற்றை உதா­ர­ணங்­க­ளாகக் குறிப்­பி­டலாம். இச்­சான்­றா­தா­ரங்­க­ளுடன் இங்கு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இரு சுடுமண் அச்­சுக்கள் இங்கு சிறப்­பாகக் குறிப்­பி­டத்­தக்­கன. அவற்றின் ஒரு­பக்­கத்தில் புள்­ளி­க­ளான இலச்சினை அல்­லது பண்­டைய கால எழுத்துக்கள் காணப்­ப­டு­கின்­றன. இது அறி­ஞர்­களின் முறை­யான பொருள் விளக்க்­கத்தைப் பெறும்­பட்­சத்தில் இங்­கி­ருந்த குடி­யி­ருப்­புக்கள் மற்றும் சமயச் சின்­னங்­களின் காலத்தை நிச்­ச­யப்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்கும் என நம்­பலாம்.

தமி­ழ­கத்தில் சுடு­மண்­ணா­லான தெய்வ உரு­வங்கள், அர­சனின் சிலைகள், சமயச் சின்­னங்கள் என்­பன நீர்­நி­லை­களை மையப்­ப­டுத்தி இற்­றைக்கு 2500 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தோன்­றிய குடி­யி­ருப்புப் பகு­தி­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றுள் தெய்வ உரு­வங்கள் கிராமி தெய்­வங்கள் அல்­லது நாட்­டுப்­புற த்தெய்வங்கள் என அழைக்கப்படுகின்றன. இம்­ம­ரபு பிற்­கா­லத்­திலும் தொடர்ந்­த­தற்கு சங்க இலக்­கி­யத்­திலும், பழந் தமிழ் இலக்­கி­யங்­க­ளிலும் பல ஆதா­ரங்கள் காணப்­ப­டு­கின்­றன. நாக­ப­டு­வானில் இவ்­வகைச் சிலைகள், சிற்­பங்கள் சின்­னங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இடத்­திற்கு மிக அருகே தெற்­கிலும், மேற்­கிலும் உள்ள காட்­டுப்­ப­கு­தியில் பாழ­டைந்த இரு குளங்­களின் அணைக்­கட்­டுக்கள் காணப்­ப­டு­கின்­றன. இதனால் இங்கு கிடைத்த சம­யச்­சின்­னங்கள் கட்­டுக்­கரைக் குளத்தைப் போல் பண்­டைய காலத்தில் குளத்தை மையப்­படுத்தி தோன்­றிய குடி­யி­ருப்­புக்­க­ளுக்­கு­ரிய பெறு­ம­தி­மிக்க சான்­று­க­ளாகக் கொள்­ளத்­தக்­கன. இவை ஈழத்­த­மி­ழரின் பூர்­வீக வர­லாறு, பண்­பாடு பற்­றிய ஆய்­வு­க­ளுக்கு கிடைத்த முக்கிய சான்றுகளாகக் கொள்வதில் எதுவித சந்தேகமும் இல்லை எனலாம்.

பேரா­சி­ரியர் ப.புஷ்பரட்ணம்
(தொல்­லியல் இணைப்­பாளர் யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-17#page-4

Advertisements