சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ் தேசமானது, தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், ஸ்ரீலங்கா மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் வலியுறுத்துவதே “எழுக தமிழ்” பேரணியின் நோக்கமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட எழுக தமிழ் நிகழ்வின் போது தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான தம்பிப்போடி வசந்தராஜாவினால் எழுக தமிழ் பிரகடனத்தை வெளியிடப்பட்டது. இந்த பிரகடனத்திலேயே இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அந்த பிரகடனத்தில் “வடக்கு – கிழக்கு பிராந்தியம் தமிழர்களின் பூர்வீகத் தாயக பூமி ஆகும். மாறி மாறி ஆட்சியமைத்த ஸ்ரீலங்கா அரசாங்கங்கள் குறிப்பாகக் கிழக்கை இலக்கு வைத்து மேற்கொண்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினூடாகத் தமிழ் மக்களின் நிலத்தையும், பொருளாதாரத்தையும், பண்பாட்டையும், மொழியையும் அழித்து வருகின்றன.

எல்லாவற்றுக்கும் உச்சமாக – தமிழர் தேசத்தைச் சிங்கள மயமாக்கி, அதன் அடையாளத்தையும் கூட்டிருப்பையுமே சிதைத்து வருகின்றன. இதுவே தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டுவரும் ஒரு நீண்ட வரலாற்றுப் பின்னணியில் தமிழர் தேசம்காக்கப்பட வேண்டுமாயின், தமிழினத்தின் நிலம், மொழி, பொருளாதாரம், பண்பாடு, அதன் தனித்துவமான அடையாளம் என்பன – ஒட்டுமொத்தமாக ஒரேயடியாகக் காக்கப்பட வேண்டும் என்பதே இந்த பேரணியின் தீர்மானமாகும்.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் – எமது இனத்தின் சமூக பொருளாதார – அரசியற் தனித்துவம் காக்கப்பட வேண்டுமாயின், கிழக்கின் தமிழர்களாகிய நாம், எம்மிலிருந்து வடக்கு பிரிக்கப்படாதவாறான சுயாட்சியலகு ஒன்று உருவாக்கப்படவேண்டும். இந்த நிலைப்பாடு எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் அப்பாற்பட்டது என்பதனையும் மட்டக்களப்பில் நடைபெறும் இந்த எழுக தமிழ் பேரணியின் ஊடாக குறிப்பாகவும் திட்டவட்டமாகம் பிரகடனப்படுத்துகின்றோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இன்னமும தீர்வுகாணப்படாத தமிழ் தேசிய இனப் பிரச்சனையினதும், நடந்து முடிந்த போரினதும் – நேரடி மற்றும்நேரடியற்ற விளைவுகளான சில அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாதவாறு தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியற் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஒரு சுயாட்சித் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தப் பேரணி பிரகடனம் செய்கின்றது.

தமிழர்களின் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனும் நோக்கில் 3ஆவது குடியரசு அரசியல் யாப்பை கொண்டு வருவோம் என்று இவ்வரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு கூறி வருகின்றது.

எனினும் ஸ்ரீலங்கா அரசின் ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வரும் எனவும் பௌத்தத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையில் மாற்றம் வராது எனவும் தொடர்ந்தேர்ச்சியாக கூறி வருகின்றனர். ஒற்றையாட்சிக்குள் ஒரு குறைந்த பட்ச அதிகாரப் பகிர்வை தமிழருக்கான தீர்வாக திணிக்க இவ்வரசாங்கம் முயற்சிக்கின்றது.

அவசர அவசரமாக ஓர் அரசியலமைப்பை நாடாளுமன்றில் நிறைவேற்றி பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் புதிய அரசியலமைப்பு ஒன்றிற்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற அரசாங்கம் முயற்சிக்கப் இருக்கின்றது.

தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் வாக்கு புதிய அரசியலமைப்பிற்கு கிடைத்தால் அதை வைத்து தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வொன்றை வழங்கி விட்டதாக அர்த்தப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம். புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

தமிழர்கள் புதிய அரசியலமைப்பு எப்படியாக இருக்க வேண்டும் எனக் கருத்துக் கூறுவதோ, கூட்டாக நிலைப்பாடு எடுப்பதோ, அது தொடர்பில் சனநாயக ரீதியாக அணிதிரள்வதோ அரசியலமைப்பாக்க முயற்சியை குழப்ப எடுக்கும் நடவடிக்கையாக சித்தரிப்பதை நாம் கண்டிக்கின்றோம். அந்த வகையில் பின்வரும் நிலைப்பாடுகளை இப்பேரணி எடுக்கின்றது:

தற்போதைய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் எமக்கு தந்த படிப்பினையின் அடிப்படையிலும், இலங்கை அரசியலின் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் கலாசாரத்தில்த தமிழர்களின் கடந்த 68 ஆண்டு கால கூட்டனுபவத்தின் பிரகாரமும் ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எந்த வடிவத்திலும் சாத்தியம் இல்லை என நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம்.

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில், தேசிய இனப்பிரச்சினைக்கான நடைமுறை சாத்தியமான தீர்வு, தமிழர்களை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் ஒரு தேசமாக, அவர்களது சுயநிர்ணய உரிமையை மதிக்கும், தன்னளவில் இறைமை கொண்ட சுயாட்சி ஒன்றை நிறுவும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் மூலமாகவே அடையப்படும் எனக் கூறுகின்றோம்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் அதன் வழி தமிழ்த் தேசத்தின் இறைமையையும், நிறுவன ரீதியாக, சமஷ்டி முறைமை ஒன்றின் மூலமாக அடைந்து கொள்ளலாம் என நாம் கூறுகின்றோம்.

தமிழர் தேசத்தின் தனித்துவத்தையோ, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தையோ அங்கீகரிக்காத, உள்ளடக்கத்தில் தெளிவில்லாத அரை குறை தீர்வொன்றை ஏற்றுக் கொள்ள முடியாது என இப்பேரணி கூறுகின்றது.

புதிய அரசியலமைப்பு மிகவும் இரகசியமான முறையில் உருவாக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு தொடர்பிலாக நடாத்தப்பட்ட பொது மக்கள் கலந்தாய்வு தொடர்பிலான அறிக்கை தமிழ் மக்களின் முன்வைப்புக்களை புறந்தள்ளியே சமரப்பிக்கப்பட்டுள்ளது.

உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பு நகல் தொடர்பிலான மக்கள் வாக்கெடுப்பிற்கு முன்னர் வெளிப்படையானதும், ஜனநாயக ரீதியதுமான கலந்துரையாடல் ஒன்று மக்கள் மத்தியில் இடம் பெற போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

அடக்குமுறையின் கீழ் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடலை நடாத்த முடியாது. வடக்கு கிழக்கில் கருத்துக் சுதந்திரத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான திறந்த விவாதம் நடைபெற பயங்கரவாதத் தடை சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், இராணுவமய நீக்கம் செய்யப்பட வேண்டும் என நாம் கூறுகின்றோம்.

தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில், தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரித்தது. அதன் அடிப்படையில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அடையப்பட வேண்டும் என இந்தப் பேரணி பிரகடனப்படுத்துகின்றது“ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements