இறுதிப்போர் நிகழ்ந்த முள்ளிவாய்கால் நந்திக்கடலின் நில அமைப்பை சற்று விரிவாக பார்த்துவிட்டு மேற்குறிப்பிட்ட விடையத்திற்கு வருகின்றேன். அதாவது இறுதிப்போர் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் பகுதியானது அதன் மத்திய பகுதியிலிருந்து வடக்காக பெரும் கடற்பரப்பினையும், தெற்காக நந்திக்கடல் எனும் சிறுகடல் பகுதியையும், கிழக்காக வட்டுவாகல் முல்லைத் தீவையும், மேற்காக இரட்டை வாய்க்கால் புதுக்குடியிருப்பையும் அருகாகக்கொண்ட ஒரு கிராமமாகும்.

மேலும் முள்ளிவாய்க்காலின் தெற்காக உள்ள சிறுகடல் பகுதியைத்தான் நந்திக்கடல் என அழைப்பார்கள்’ இந்த நந்திக்கடலின் ஒருபக்கம் முள்ளிவாய்க்கால் ஓரமாகவும், அதன் மறுபக்கம் இன்று இலங்கை விமானப்படை தான் பறிமுதல் செய்துவைத்திருக்கும் கேப்பா புலவு கிராமத்தின் ஒரு பக்கமுமாகவே அமைந்திருக்கின்றது.

இனி விடையத்திற்கு வருகின்றேன். இந்த கேப்பா புலவு பிரதேசமானது எதற்காக சிறிலங்கா படைகளின் கேந்திர மையங்களில் ஒன்றாக மாற்றம்பெற்றதென்று? மேலும் இந்த நிலப்பகுதியை அறியாதவர்கள் இதன் காரணத்தை தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை’ உண்மையில் கேப்பா புலவில் விடுதலைப் புலிகள் தாம் இருந்த காலப்பகுதியில்கூட அப்பகுதியை தமது கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த பகுதியாக வைத்திருக்கவுமில்லை’ புலிகளின் சாதாரண தளங்கள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பகுதியில் முன்பு இருந்திருந்தது.

மேலும் புலிகள் பாவித்த அநேகமான தமது கேந்திர தளங்களையே சிங்களப் படைகளும் கடந்த காலங்களில் தாம் கைப்பற்றி தமது தளமாக மாற்றியமைத்ததே வரலாறு’ அப்படியிருக்க எதற்காக வன்னியின் பிரதான புலிகளின் தளங்களை கைவிட்டு சிங்களப் படைகள் ஒரு புதிய நிலப்பரப்பை தமது கேந்திர தளங்களில் ஒன்றாக மாற்றவேண்டும்? என்ற உங்கள் அனைவரினதும் கேள்விக்கு இதோ உண்மையான பதில்.

அதாவது முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணங்களாக வர்ணிக்கப்பட்ட 16-05-2009து அன்று மாைலை வேளைதான் தலைவரின் உத்தரவுக்கமைவாக இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு முள்ளிவாய்க்காலை விட்டு “தலைவர் மற்றும் பொட்டம்மான்” உள்ளடங்கலாக சில முக்கிய அணிகள் வெளியேறுவதெனவும், காயப்பட்ட மற்றும் அரசியல் போராளிகளை உள்ளடக்கிய ஏனைய போராளிகள் அனைவரும் “ஐநாவின் முன்னிலையில் சரணடைவதெனவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக 16-05-2009து அன்று இரவு பதினொரு மணியளவில் தலைவர்,தளபதிகள் உள்ளடங்கலாக சுமார் ஆயிரம் வரையான போராளிகள் முள்ளிவாய்க்காலை விட்டு நந்திக்கடல் ஊடாக பெரும் ஊடறுப்பு தாக்குதல் ஒன்றை நிகழ்தியவாறு சிறிய சிறிய படகுகளிலும், மிதவைகளிலுமாக முள்ளிவாய்க்காலின் மறுமுனையான கேப்பா புலவில் தரையிறங்கி பாரிய தாக்குதலை அங்கு நிலைகொண்டிருந்த சிங்கள படைகளுடன் தொடுத்து சுமார் 10து மணிநேரம் தொடர்சியாக கடும் சமர் புரிந்து கேப்பா புலவு ஊடாக நெடுங்கேணி,ஒட்டுசுட்டான் நோக்கிய அடர்ந்த காடுகளுக்குள் சென்றுவிட்டதாக பெயர்குறிப்பிடவிரும்பாத சில தளபதிகள் ஊடாக நான் 25-05-2009து அன்று இச்செய்தியை சிங்கள தடுப்புமுகாமொன்றில் இருந்தவேளை அறிந்துகொண்டேன்.

மேலும் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறிய தலைவரின் அணிகள் வேக வேகமாக கேப்பா புலவில் தரையிறங்கி கடுமையான தாக்குதல்களை எதிரிகளுடன் தொடுத்தவாறு காடுகளைநோக்கி நகர்ந்துகொண்டிருந்தவேளை, தொடர்ந்து முள்ளிவாய்க்காலிலிருந்து கேப்பா புலவு நோக்கி தலைவருடைய மூத்த மகன் “சாள்ஸ் அன்ரனி” உள்ளடங்கலான சில தளபதிகள்,போராளிகளென நந்திக்கடலை கடக்கமுயன்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் காயமடைந்து மீண்டும் முள்ளிவாய்க்காலுக்குள் கொண்டுவரப்பட்டு அவர்களால் தொடர்ந்து செல்லமுடியாத சந்தர்ப்பத்திலேயே தம்மை தாமே அழித்து நந்திக் கடற்கரையில் காவியமானார்கள்.

தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் சென்ற அணியும், இசைப்பிரியா உள்ளடங்கலான அணியும் விடிகாலை நெருங்கியதால் மிக கடுமையான களச்சூழலுக்கு முகம்கொடுக்கவேண்டிய காரணத்தினால்தான் அவ்வணிகளை உள்ளடக்கிய சுமார் 300று வரையான போராளிகள் மிகவும் கடுமையாக எதிரிகளுடன் போரிடவேண்டிய சந்தர்ப்பத்தை எதிர்கொண்டிருந்தார்கள்.

மேலும் இந்த அணிகளில் அநேகமான போராளிகள் கேப்பா புலவு நந்திக்கடல் கரையோரமாக தரையிறங்க முற்பட்ட வேளைதான் எதிரிகளின் கரையோர அணிகளுடன் மிகக் கடுமையான போரை தொடுக்கவேண்டியதாயிற்று. இதனால் இந்த அணிகளில் சென்ற அநேகமான போராளிகள் கேப்பா புலவு நந்திக்கடல் கரையோரமாக பெரும் இழப்புக்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியிருந்தது.

மேலும் இந்த கேப்பா புலவு நந்திக்கடல் ஊடாக புலிகள் முள்ளிவாய்க்காலிலிருந்து ஊடறுத்து செல்கிறார்கள் என்பதை அறிந்த சிங்களப் படைகள் தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து மிகக்கடுமையான செல் தாக்குதல்களை இப்பகுதியை இலக்குவைத்து தமது பலமுனைகளில் அமைந்திருந்த ஆட்லறி, பல்குழல், மோட்டார் பீரங்கி தளங்களிலிருந்து சரமாரியாக குண்டுகளை பொழிந்துகொண்டிருந்தார்கள்.

இதனால் பல போராளிகள் வீரச்சாவினை தழுவியதுடன், காயப்பட்ட போராளிகள் அநேகமானோர் சுயநினைவின்றி மயக்கமுற்றிருந்தத காரணத்தினால் எதிரிகளிடம் அகப்பட்டும், எஞ்சிய பல போராளிகள் தம்மால் இயன்றவரை தம்மை தாமே அழித்தும் வீரச் சாவினை அணைத்துக்கொண்டார்கள்.

இதேவேளை இப்பகுதியல் காயங்களுடன் எதிரிகளிடம் பிடிபட்ட போராளிகளும் மேலும் பாலச்சந்திரன், இசைப்பிரியா உள்ளடங்கலான சில பத்து போராளிகளும், இதைவிட ஐநாவின் ஏமாற்றப்பட்ட சரணடைவொன்றின் ஊடாக பிடிக்கப்பட்ட திரு நடேசன்,புலித்தேவன்,உள்ளடங்கலான பலநூறு போராளிகளும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பகுதியும் இந்த கேப்பா புலவுப் பகுதிதான் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

மேலும் தலைவரின் இளைய மகனான “பாலச் சந்திரன்” மற்றும் “இசைப்பிரியா” ஆகியோர் உள்ளடங்கலான பல போராளிகள் மேற்குறிப்பிட்ட “கேப்பா புலவுப்” பகுதியில் பிடிபட்டுத்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

இதைவிட ஜநாவை நம்பிய சரணடைவு முள்ளிவாய்க்காலில் சாம்தியமற்றுப் போனதால்தான் பல்லாயிரம் காயப்பட்ட போரளிகளும் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறவேண்டிய சூழல் உருவாகி இருந்தது’ இப்படி வெளியேறிய போராளிகள் பலநூறுபேரைத்தான் சிங்களப் படைகள் பிடித்து தற்போதுவரை காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடக்கியுள்ளார்கள்.

ஆகவே முள்ளிவாய்க்கால் பகுதியில்வைத்து எமது மக்கள்முன் பிடிக்கப்பட்டு சிங்களப் படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் மேற்குறிப்பிட்ட “கேப்பா புலவு” இராணுவ தளத்தில் உயிருடனோ அன்றி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டோ அப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம்?என்பது ஒருபக்கம், மறுபக்கமாக முள்ளிவாய்க்காலை ஒருவேளை ஐநாவின் பரிசீலனை குழுவினர் பரிசீலிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை சிங்களப் படைகள் மேற்குறிப்பிட்ட கேப்பா புலவு பகுதியில் “பாரிய மனித புதைகுழிகளை” ஏற்படுத்தியிருக்கலாம் என்ற உண்மை நிலையினை அனைவரும் உணர்ந்து கேப்பா புலவில் இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை ஐநா கண்காணிப்பு குழு பார்வையிடவேண்டும் என வலியுறுத்தி படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களும்,தாயக மக்களும்,புலம்பெயர் உறவுகளும் பாரிய அளவிலான அழுத்தங்களை ஐநாவைநோக்கி கொடுத்தால் மட்டுமே கேப்பா புலவின் உண்மை நிலைவரம் வெளியில் தெரியவரும்.

குறிப்பு:தற்போதுவரை கேப்பா புலவு மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் காலவரையறையற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெறும் இடத்தில் இரவுவேளை மக்கள் அங்கு குழுமியிருப்பதால் இராணுவ முகாமுக்குள் இருந்து சிலர் ஓலமிடுவதான சத்தம் கேட்பதாகவும், ஐயோ அடிக்கவேண்டாம்,அடிக்கவேண்டாம் என்று குளறும் சத்தங்கள் ஒவ்வொரு இரவும் கேட்பதாகவும் மக்கள் கூறியுள்ளார்கள்’ ஒருவேளை இந்த பிரதேசத்தில்தான் சிங்களப் படைகளால் பிடிக்கப்பட்டு காணாமல் போய்விட்டார்கள் என்று கூறப்பட்ட போராளிகளும், மக்களும் சித்திரவதை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்திருப்பதால் உடனடியாக இப்பகுதியை உலகம் பார்வையிடவேண்டும் என்பதை அனைவரும் ஓரணியில் நின்று வலியுறுத்துங்கள்.

தமிழர்குரல்

Advertisements