தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு முன்னாள் போராளிகள் ஐவர் திட்டம் தீட்டியதாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவமானது, வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இராணுவத்தினரை நிலைகொள்ளவைப்பதற்கான சதித்திட்டமா எனச் சந்தேகம் எழுந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு முன்னாள் போராளிகள் ஐவர் திட்டம் தீட்டினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

முன்னாள் போராளிகள் 5 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்தார்கள் என்றே காவல்துறையினர் நீதிமன்றில் கூறியிருக்கின்றனர்.

மாறாக நாடாளுமன்ற உறுப்பினரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினார்கள் என காவல்துறையினர் நீதிமன்றில் கூறியிருக்கவில்லை.

எனவே இந்த விடயத்தில் எந்தளவுக்கு உண்மையுள்ளது, என்ன நோக்கத்தில் இவ்வாறான பேச்சுக்கள் அவிழ்க்கப்படுகின்றது என ஆராயவேண்டியிருக்கின்றது.

மேலும் வடமாகாணத்தில் படையிரை தொடர்ந்தும் நிலைகொள்ள செய்வதற்கான ஒரு முயற்சியா என்ற சந்தேகமும் எமக்கு வலுவாக உள்ளது என முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

சுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக, விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களே சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்தனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், இந்த திட்டத்தை சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள் முறியடித்துள்ளன.

இந்தச் சதித் திட்டம் கண்டறியப்பட்டதையடுத்து, நான்கு முன்னாள் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பிரான்சில் உள்ள புலிகளின் தலைவர் ஒருவரின் கீழ் செயற்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.

நாட்டில் உடனடியாக தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்பை உறுதிப்படுத்த படையினர் விழிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் இந்த இராணுவச் சிப்பாயின் அட்டகாசம்…

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அருகே நேற்று நடத்தப்பட்ட கருப்புக் கொடி ஏந்திய கவனயீர்ப்புப் போராட்டத்தை சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவை சேர்ந்த ஒருவர் காணொளிப்படம் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தையே சிறப்புப் படைப்பிரிவின் லான்ஸ் கோப்ரல் ஒருவர் காணொளிப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

இராணுவ சீருடையில், சிறப்புப் படைப்பிரிவினரின் பட்டியை அணிந்து கொண்டு இவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவினரே, இத்தகைய நடவடிக்கைகளில், சீருடையிலும், சீருடையில்லாமலும், ஈடுபடுவது வழக்கமாகும்.

எனினும், சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், சீருடையில் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை வழக்கத்துக்கு மாறான செயற்பாடாகும்.

சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக, தற்போதைய யாழ். படைகளின் கட்டளை தளபதியாக இருக்கும், மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவே பணியாற்றி வருகிறார்.

அவரது உத்தரவின் பேரிலேயே, சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல், காணொளிப்பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ஆழ ஊடுருவும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இந்த சிறப்புப் படைப்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள், யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டத்தை காணொளிப்பதிவு செய்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கனவு மாகாணத்தில் கலப்பு பொறிமுறை : விக்கி

கனவு மாகாணத்தில் கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த விடயம் ஒரு போதும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய மஹிந்த சமரசிங்க, வெளிநாட்டு சக்திகளுக்கும் நிறுவனங்களுக்கும் சில அரசியல்வாதிகள் அடிமையாகியுள்ளதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சில சலுகைகளை பெற்றுக்கொள்வதற்காகவே அவர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் படையினரையும் பொலிஸாரையும் காட்டிக்கொடுக்க மாட்டோம் எனக் குறிப்பிட்ட மஹிந்த சமரசிங்க, வட மாகாண சபையில் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படவுள்ளது என்ற செய்தியை அறிந்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

இது வட மாகாண முதலமைச்சரின் கனவு மாத்திரமே எனவும் அந்த கனவு ஒரு போதும் நிறைவேறாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் படைவீரர்களை காட்டிக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொருவரையும் அனுமதிக்க மாட்டார் எனவும் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

இதேவேளை தமது கருத்திற்கு பதற்றமடைந்து எதிர்ப்பு வெளியிடுவதன் மூலம் போர் குற்ற விசாரணையை நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றமை புலப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காரைநகர் பிரதேச சபைக் கட்டடத் திறப்பு விழாவின் பின்னர் ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

நான் ஒன்றும் சட்டம் தெரியாமல் கூறவில்லை..! வடக்கு முதல்வர் ஆதங்கம்

இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்குவரும் பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் போர் குற்றங்களை விசாரிக்க கூடாது என்பதில் திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போர்குற்றங்களை வடமாகாணசபை விசாரிக்க முடியுமா..? என சட்டத்தில் ஆராயவேண்டும் என நான் கூறியதற்கே பெரும்பான்மையின அரசியல் தலைவர்கள் மனப்பதற்றத்தில் உள்ளார்கள் அதனையே என் மீதான விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 31ம் திகதி மன்னார் – வட்டக்கண்டல் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவு நாளில் கலந்து கொண்டிருந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போர்குற்றங்களை வடமாகாணசபை விசாரிக்க முடியுமா? என ஆராயவேண்டும் என கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக மிகமோசமான விமர்சனங்களை தென்னிலங்கை அரசியல் தரப்புக்கள் முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக முதலமைச்சரிடம் இன்றைய தினம் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், போர் குற்றங்களை வட மாகாணசபை விசாரிக்க முடியுமா? என ஆராய வேண்டும் என நான் கூறியது சட்டம் தெரியாமல் இல்லை.

போர்குற்றங்களை விசாரிக்கும் விடயத்தில் பெரும்பான்மையின தலைமைகள் என்ன மனோநிலையில் உள்ளார்கள் என்பதை உலகத்திற்கும், மக்களுக்கும் வெளிச்சம்போட்டு காட்டுவதற்கேயாகும்.

நான் என்ன நடக்கும் என நினைத்து கூறினேனோ அத்தனையும் நடந்து கொண்டிருப்பதை நான் பார்த்து கொண்டிருக்கின்றேன்.

மேலும் காலத்திற்கு காலம் ஆட்சிக்குவரும் பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் போர் குற்றங்களை விசாரிக்க கூடாது என்ற மனோநிலையிலேயே உள்ளனர்கள் என்பதை என்னுடைய கருத்துக்கு பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் மனப்பதற்றத்தில் கூறும் கருத்துக்கள் ஊடாக அறிந்து கொள்ள கூடியதாக இருக்கின்றது.

என்னுடைய சிறு கருத்துக்கே இவ்வாறு கூறிக்கொண்டிருப்பவர்கள் எப்படி போர் குற்றங்களை விசாரிப்பார்கள் என்பதை உலகமும் மக்களும் தெளிவாக உணர்ந்து கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisements