யாழ்.குடாநாட்டில் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக இலங்கை அரச காவல்துறை தேடிக்கொண்டிருக்கும் தெருசண்டியர் குழுக்களது தலைவர்கள் இராணுவ முகாம்களுள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.அண்மையினில் யாழ் நல்லூர் அரசடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் யாழ்ப்பாணம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர் தமிழர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட கண்காணிப்புக் கமராவின் காட்சிகள் வெளி வந்ததே அந்தச் சம்பவத்தின் தோற்றப்பாட்டை எடுத்துக் காட்டியது.

எனினும் அந்த காணொலியை கசிய விட்டதன் பின்னணினில் இலங்கை இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்கள் உள்ளமை அம்பலமாகியுள்ளது.தமக்கு நெருக்கமான உறவை கொண்டுள்ள சில ஊடகவியலாளர்கள் ஊடாக அவ்வாறு காணொலியை கசிய விடுவதன் மூலம் இராணுவத்தின் சேவை தொடர்ந்தும் வடக்கினில் தேவையென்பதை வெளிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஆவா குழு,தவா குழுவென பல பற்றி கொழும்பினில் அமைச்சர்கள் ஈறாக பத்திரிகையாளர் மாநாடுகளை நடத்திக்கொண்டிருக்க அக்குழுக்களை தேடிக்கொண்டிருப்பதாக காவல்துறை இன்னொரு புறம் பிரச்சாரங்களை மேற்கொண்டும் வருகின்றது.

இந்நிலையினில் தேடப்படும் இக்குழுக்களது தலைவர்கள் படைமுகாம்களினில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு;ள்ளமை அம்பலமாகியுள்ளது.

வன்னியினில் படையினரால் மீட்கப்பட்ட சிறுத்தை குட்டியொன்று தற்போது மன்னாரிலுள்ள படை முகாமொன்றினில் வளர்க்கப்பட்டுருகின்றது.இந்நிலையினில் அம்முகாம்களுள் பதுங்கியுள்ள அல்லது விருந்தினராக வந்து செல்கின்ற முக்கிய தேடப்படும் குற்றவாளிகள் குறித்த சிறுத்தை குட்டியுடன் விளையாடும் புகைப்படமே இதுவாகும்.

யாழ்.குடாநாடு உள்ளிட்ட வடக்கினில் படைக்குறைப்பு பற்றி தமிழ் தரப்புக்கள் கோரிவருகின்ற நிலையினில் சர்வதேச நாடுகளும் இதன் நியாயத்தன்மையினை ஏற்றுக்கொண்டு வருகின்றன.

ஆனால் அரசோ படைக்குறைப்பினை விரும்பியிராத நிலையினில் அதனை நியாயப்படுத்த புலிகள் மீள் எழுச்சி மற்றும் இத்தகைய குழுக்களது செயற்பாடுகளை முன்னிறுத்தி பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றது.அதற்கேற்ப ஒருபுறம் முன்னாள் போராளிகளை கைது செய்து சிறைகளினில் அடைத்துவருவதுடன் இன்னொரு புறம் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களினை தேடுவதாகவும் காண்பிக்கப்பட்டுவருகின்றது.அவ்வாறாக தேடப்படுவதாக காண்பிக்கப்படும் பிரதான குற்றவாளிகளை மறுபுறம் படைமுகாம்களுள் பதுக்கி வைத்துள்ளமையே தற்போது அம்பலமாகியுள்ளது.

வாள் வெட்டுக்குழுக்களிலுள்ளவர்களிடையே புழங்கும் நிதி மற்றும் பயன்பாட்டிலுள்ள அதிவலுக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள் கூட ஒருபுறம் புலம்பெயர் சொந்த பந்தங்களிடமிருந்தும் மறுபுறம் பாதுகாப்பு அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டினில் வழங்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் அரசடிப்பகுதியில் அண்மையில் வாள்வெட்டில் ஈடுபட்டதுடன் கடைக்கு தீயிட்ட கும்பல் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் கைது செய்யப்பட்ட நபர்கள் திருநேல்வேலி சிவன் கோவில் பகுதியினில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களென தெரியவருகின்றது.

மக்களிடையே காவல்துறை செயற்திறனின்றி இருப்பதான குற்றச்சாட்டையடுத்தே ஊடகங்களிற்கு தவறான தகவல் வழங்கப்பட்டமை அம்பலமாகியுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் மீண்டும் அதிகரித்துள்ள வாள்வெட்டு போன்ற சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்ற பேரினில் சிறப்பு அதிரடிப்படையினரை ஈடுபடுத்த சிறிலங்கா காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சிறப்பு அதிரடிப்படையினர் யாழ்ப்பாணத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தொடங்கியுள்ளனர்.

வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து மாணவர்கள் கடந்தவாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வாள்கள், கோடரிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களிற்கு காண்பிக்கப்பட்ட போதும் அது மக்களினை ஏமாற்ற மேற்கொள்ளப்பட்ட காவல்துறையின் நாடகமென கூறப்படுகின்றது.

இதனிடையே நல்லூர் அரசடி தாக்குதல் சூத்திரதாரியொருவர் மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் விசாரணைக்காக யாழ்.நகர காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையியில் பெருமளவு பணம் கைமாறியதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

Advertisements