தமிழர் தாயகப் பகுதியான முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பில் மக்கள் துன்பங்களை அனுபவிக்கும் போது எங்களுக்கு என்ன சுதந்திரம் உள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்வுகளில் தாம் பங்கேற்காதது பெரிய விடயம் ஒன்றும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி பூநகரி வைத்தியசாலைக்கும், பொது மக்களுக்குமாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டம் வடமாகாண முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் இன்றைய சுதந்திர தின நிகழ்வில் தாங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை என ஊடகவியலாளா்கள் கேள்வியெழுப்பிய போதே வடமாகாண முதலமைச்சா் இவ்வாறு தெரிவித்தாா்.

**
தமிழின இனத்தின் துக்கநாள்;யாழ்.மாவட்ட செயலகம் முன் கறுப்பு பட்டி போராட்டம்

69ஆவது சுதந்திர தினத்தை தமிழ்தேசிய இனத்தின் துக்க தினமாக அறிவிக்கும் படிகோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கும் மத்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் காலை நடத்தப்பட்டது.

தேசிய சுதந்திர தினத்தை தமிழ்தேசிய இனத்தின் துக்கதினமாக அறிவிக்ககோரியும், “காணாமல்போன இருபதாயிரம் பேருக்கு அரசே பதில் சொல்”,
“தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்”,
“இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுதலை செய்”, புதிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்து”, “இனப்படுகொலை மற்றும் போர்குற்றங்களுக்கான நீதி விராணையை சர்வதேச நீதிபதிகளிடம் ஒப்படை”,
இனப்பிரச்சினைக்கு சர்வதேச மத்தியஸ்த்ததுடன் தார்வினை காண்” ஆகிய 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் கறுப்புபட்டி அணிந்து நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் மறுபக்கம் யாழ்.மாவட்ட செயலகத்திற்குள் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதேவேளை இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை நகர விடாமல் பொலிஸார் வீதித்தடைகளை அமைத்து தடுத்துள்ளதுடன், பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

*

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு : புலிக்கொடியை ஏந்தி பிரித்தானியாவில் போராட்டம்

இலங்கை சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது லண்டனில், தமிழர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் சுதந்திர தினத்தை அனைத்து இலங்கையரும் கொண்டாட வரும்படி லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று லண்டன் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராணுவமே வடக்கை விட்டு வெளியேறு , அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும், இலங்கையின் சுதந்திரதின நிகழ்வானது தமிழர்களுக்கான சுதந்திரமல்ல என விடுதலைப்புலிகளின் கொடியினை ஏந்தியவாறு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

ஒடுக்கப்படும் மக்களாகிய எங்களுக்கு இந்த நாள் கொண்டாடும் தினமல்ல. இது எமது சுதந்திர தினல்ல. பல்வேறு நாட்டு பிரதிநிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் இந் நிகழ்வில் இன, மத வேறுபாடின்றி நமது எதிர்ப்பினைப் பதிவு செய்வதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் நமது கோரிக்கைகளை ஒன்றிணைந்து முன்வைக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளனர்.

  • காணாமல் போனோர்கள் எங்கே? அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை வழங்கு.
  • அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.எல்லா இரகசிய சித்திரைவதை தடுப்பு முகாம்களும் மூடப்படல் வேண்டும்.
  • தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்.
  • சுதந்திரமான வெளிநாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்த படவேண்டும்.
  • அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் , மக்கள் மீதான கொலைச் சம்பவங்களில் தொடர்புடையவர்களும், கொலையாளிகளும் தண்டிக்கப்படவேண்டும்.
  • அரசாங்கமும், இராணுவமும் கைப்பற்றிய மக்களின் நிலங்களில் இருந்து வெளியேற வேண்டும்.
  • கல்வி மற்றும் சுகாதாரம் தனியார் மயப்படுத்தல் நிறுத்தப்பட வேண்டும்.
  • மலையக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
  • மலையக மக்களின் ஊதிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
  • மத தலங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தப்பட வேண்டும்.

முஸ்லிம் மக்களின் கலாச்சாரம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். போன்ற கோரிக்கைகள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

*
சுதந்திரத் தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகரில் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீலங்காவின் 69ஆவது சுதந்திரத் தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

கொழும்பு விஹாரமகா தேவி பூங்கா அருகில் ஆரம்பமான ஏதிர்ப்பு பேரணி பொது நூலகத்தை சென்றடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

நாட்டின் 69ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில் பொது மக்களின் உண்மையான சுதந்திரத்தை வென்றெடுப்போம் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாட்டின் தமிழர்கள் செறிந்து வாழும். வடக்கு கிழக்குப் பகுதியில் சுதந்தி்ரத் தினம் கொண்டாடப்படவில்லை எனவும், உண்மையில் நாட்டிற்கான சுதந்திரம் என்பது அனைத்து மக்களுக்கும் அனுபவிக்கக்கூடியதாக இருக்க வேண்டுமெனவும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் அவலம்! அடிபட தயார் இல்லை என கதறல் – தமிழரின் வேதனை இனவாதமா?

இலங்கை யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு தமிழ் மக்களின் காணிகள் இன்றும் விடுவிக்கப்பட வில்லை என்பது இப்போது வடக்கு வாழ் மக்களின் பெருந்துயர். இதனால் அம்மக்கள் கதறும் நிலையே இன்றும் தொடர்கின்றது.

என்றாலும் தென்னிலங்கையில் வடக்கு தமிழர்களின் மக்களுடைய துயர் கேலிக்கூத்தாகப் போய் விட்டது என்பதை தென்னிலங்கையின் ஒரு சில ஊடகங்கள் உறுதி செய்து கொண்டிருக்கின்றன.

“தெமலு இந்த வார்த்தைகள் இனவாதத்தின் வெளிப்பாடு என்பது ஒவ்வோர் தமிழர் மட்டும் அல்ல சகோதர சிங்கள மக்களும் கூட நன்றாக அறிவார்கள்”. ஆனாலும் இது இன்னும் கைவிடப்படவில்லை.

ஒரு காலத்தில் தமிழர்கள் என்றாலே புலிகள் என்று சித்தரிக்கப்பட்ட நிலையை மீண்டும் ஏற்படுத்த முயற்சி நடைபெறுகின்றதா என்ற கேள்வி வழுவடைந்து கொண்டிருக்கின்றது.

நேற்றைய தினம் முல்லைத்தீவு கேப்பாப்புலவு இராணுவ முகாம் ஒன்றின் முன்னால் உள்ள குடும்பஸ்தரின் காணி ஒன்றில் இராணுவம் புனரமைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மக்கள் அங்கு ஒன்று கூடியுள்ளனர். காணி உரிமையாளரான குடும்பஸ்தர் நடு வீதியில் தனது காணிகளை இராணுவம் அத்துமீறி தன்னகப்படுத்திக் கொண்ட துயர் தாளாமல் கதறி அழுகின்றார்.

இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. குறித்த காணொளியில்,

இராணுவம் தன் காணிகளை அத்துமீறி வைத்துக் கொண்டு உள்ளதாகவும், அந்த காணிக்கான உரிமைப்பத்திரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் இனிமேல் அடிபடக் கூடாது, நீங்கள் இராணுவம் ஆனால் நாங்கள் அப்பாவி சிவில் மக்கள். அனைத்தையும் விட்டுக் கொடுத்தோம் இதனையும் ஏன் கேட்கின்றீர்கள்.

என தனது வேதனையை கொட்டித் தீர்க்கின்றார். அத்தோடு வீதியில் புரண்டு அழுகின்றார் இந்த சம்பவம் அவருடைய துயரை மட்டும் அல்லாது முல்லைத்தீவு மக்களின் அவலத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.

அத்தோடு எதிர்ப்பின் காரணமாக இராணுவம் தனது புனரமைப்பு பணியை இடை நிறுத்திக் கொண்டு செல்கின்றது. ஒரு வகையில் இது இராணுவத்தினரின் பெரும் தன்மையினையும் காட்டுகின்றது.

இராணுவத்தினரின் பணியை இடை நிறுத்தி ஓரளவு வெற்றியும் இறுதியில் பெற்றுக் கொண்டார் கதறிய முல்லைத்தீவு குடும்பஸ்தர்.

என்றபோதும் இந்த காணொளியை தென்னிலங்கை ஊடகம் ஒன்று “யாழ்ப்பாண தமிழர் (தெமலு) இராணுவத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயல்” என வெளியிட்டு பரப்பி வருகின்றது.

அதேபோன்று குறித்த குடும்பஸ்தரின் செயலை விடுதலைப் புலிகளின் செயலாக சித்தரித்தும் விமர்சனங்கள் எழுப்பியுள்ளனர் ஒரு சிலர்.

இதன் மூலம் வடக்கில் தமிழ் மக்கள் இராணுவத்திற்கு அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்ற போலியான சித்தரிப்பை காட்ட முனைகின்றதா தென்னிலங்கை என்ற கேள்வியும் எழுகின்றது.

எவ்வாறாயினும் நடக்கும் விடயத்தின் உண்மைத் தன்மையினை அப்படியே எடுத்துக் காட்டாமல் திரிபு படுத்தி காட்டுவதன் ஊடாக நல்லிணக்கத்தை எட்டாக் கனியாக்கும் முயற்சிகளும் நடைபெற்று கொண்டு இருக்கின்றன என்பதே உறுதி செய்யப்படுகின்றது.

இவ்வாறான நிலை தொடர்ந்து கொண்டு செல்லுமானால் அரசுகள் எத்தனை மாற்றம் பெற்றாலும் நாட்டு மக்களின் நிலை பழைய பஞ்சாங்கமே.

இவை தடுக்கப்பட்டு உண்மையாக நல்லிணக்கத்தையும் வடக்கும் சரி தெற்கும் சரி அமைதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்து, சுதந்திர நாடு என்பதை அரசு நிலைநாட்ட வேண்டும் என்பது பொது மக்களின் இப்போதைக்கு கானலாக உள்ள கனவு.

**

தீக்குளிக்கப்போவதாக எச்சரிக்கை: புதுக்குடியிருப்பு மக்கள் ஆவேசம்

காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் இல்லாவிடில் தீக்குளிக்கப் போவதாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக தமது காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என கேப்பாபுலவு மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக, 49 பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

தாங்கள் இவ்வாறு பல போராட்டங்களை முன்னெடுத்தும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படவில்லை, அத்தோடு குறித்த பகுதியில் 60 வருடத்திற்கு மேலாக தாம் வசித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சென்ற வேளையில் இராணுவத்தினர் தமது காணிகளை கையகப்படுத்தியுள்ளனர்.

மேலும் தாம் 2009 ஆம் ஆண்டு தை மாதத்தில் இருந்து வீடின்றி அகதிகளாக வாழ்ந்து வருகின்றோம். ஆனால் இங்கு எமது காணிகளில் இவர்கள் சுகமாக வசித்து வருவதாக அவர்கள் குற்றம் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

*

தீக்குளிக்க தயாரான தாய் : கேப்பாபுலவிற்கு விக்னேஸ்வரன் நேரடி விஜயம்

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் 5 ஆவது நாளாகவும் தமது காணிகளை விட்டு இராணுவத்தினரை வெளியேற கோரி வாழ்வா சாவா என்ற ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

2009 ஆண்டு யுத்தம் காரணமாக குறித்த பகுதியை விட்டு இடம்பெயர்ந்து சென்றதாகவும், 2011 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது, தமது காணிகளை இராணுவத்தினர், கையகப்படுத்தியிருந்தாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடரும் ஐந்தாம் நாள் கருப்பு பட்டியுடன் ஆரம்பித்த போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் தமது முடிவினை தளரவிடாமல், “காலியில் சுதந்திரதினம் வீதியில் நாம், விடுதலை எமக்கு எப்போது?, எமது மண்ணை ஆக்கிரமித்து நம்மை வீதியில் அலையவிட்டு நல்லிணக்கம் பேசுதல் முறையா? ” போன்ற பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த போராட்டம் வலுப்பெறவே, அங்கு வருகை தந்திருந்த முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். முதலமைச்சரின் குறித்த விஜயத்தின் போது வட மாகாண சபை விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிவநேசன் மற்றும் ரவிகரன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளார்.

மேலும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் விமானப்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அத்துடன் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி, மற்றும் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக நேற்று புதுக்குடியிருப்பு பகுதியிலும் மாவட்ட செயலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று 2 ஆவது நாட்களாக நீடிக்கின்றது. இந்த நிலையில் தமது போராட்டங்களின் போது கொடுக்கப்பட்ட உறுதி மொழிகள் உதாசீனப்படுத்தபட்டதாகவும், எனினும் இம்முறை தாம் உறுதி மொழிகளை நம்பி போராட்டத்தை கைவிட போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தாய் , தமது காணிகளை, தமது மண்ணை மீட்டு தராத பட்சத்தில் தீக்குளிப்பதற்கு கூட தயங்கமாட்டேன் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் குறித்த பகுதிக்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதால் இவர்களுக்கான முடிவு வழங்கப்படும் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

கடந்த திங்கட்கிழமை குறித்த பகுதியை மீட்டு தருவதாக கேப்பாபுலவு கிராம சேவை உத்தியோகத்தர் அழைப்பு விடுத்திருந்த போதும் அங்கு சென்ற மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

*

ஹரிஷ்ணவி, வித்தியா முதல் யாழ் வாள்வெட்டுக்கள் வரை: இதுதான் தொடர்பு

2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதாகவே அதிகளவிலான மக்கள் கூறுகின்றனர்.

குறித்த கருத்துக்களை உண்மையாகும் விதங்களில் தற்போது யாழில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் ஹரிஷ்ணவி என்ற மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தூக்கிலிடப்பட்டவாறு அவரது வீட்டில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த படுகொலை வழக்கு யாழ். மக்களை முதலில் ஆட்டம் காணச்செய்தது எனலாம்.

குறித்த வழக்கு விசாரணைகளில் மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தும், இருந்தாலும் தற்போது வரையில் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் மட்டுமே நீடிக்கப்பட்டு வருகின்றது.

அடித்ததுடன் சிவலோகநாதன் வித்தியா படுகொலையும் தீர்வு கிடைக்கவில்லை என்றே கூறலாம் குறிப்பாக இந்த படுகொலை தொடர்பிலும் இன்று 2 ஆவது வருடங்களாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் ஊர்காவற்துறை பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணிப் பெண்ணின் மரணம் தொடர்பான பல சர்ச்சைகள் வடக்கில் எழுந்து வந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25 வயதிற்கு உற்பட்டவர்கள் என யாழ் பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்வாறு பெண்களுக்கு எதிராக மட்டும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றது என்பதும் ஒருபுறம் இருக்க, தற்போது தமிழனை தமிழனே அளித்து வருகின்ற நிலையே உருவாகியுள்ளது.

அதாவது இளைஞர்களுக்குள்ளே காதல், கோபம் என்ற சிறு காரணத்திற்காக வாள்களை கையில் எடுத்துக்கொண்டு மற்றவர்களை வெட்ட சென்று விடுகின்றனர்.

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தள ஊடகங்களும், பத்திரிகை செய்திகளும் கொலை கொள்ளை, வாள்வெட்டுக்கள் என்றே காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு சட்டங்களை தாங்களே கையில் எடுப்பதால் என்ன பயன்? என்பது தெரியாமல் போகின்றது இப்போதைய இளைஞர்களுக்கு.

குறிப்பாக வித்தியா ஹரிஷ்ணவி மற்றும் கர்ப்பிணி பெண் கொலை, யாழில் பல்வேறு இடங்களில் வாள்வெட்டு போன்ற சம்பவங்களை எடுத்து நோக்கும் போது அவை அனைத்தையும் செய்வது 18 தொடக்கம் 25 வயதுக்கு உற்பட்டவர்களே என பொலிஸார் கூறுகின்றனர்.

படிப்பதற்கு பாடசாலைகளுக்கு புத்தகங்களை ஏந்தி செல்லும் கைகளில் வாள்களை ஏந்தி குழுக்களை சேர்த்து வருகின்றார்கள். இதனை சாதகமாக பயன்படுத்தி தற்போது இராணுவத்தினரை வடக்கில் குவிக்க கோரி சில தென்இலங்கை அரசியல் வாதிகள் செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு “இராணுவம் வடக்கில் மீண்டும் குவிக்கப்பட்டால் அதனால் வருகின்ற பிரச்சினைகளை இந்த இளைஞர்களால் அறிந்திருக்க முடியாது” என்கின்றார்கள் யுத்தத்தால் அடிபட்டு வந்த பெரியவர்கள்.

இவ்வாறு முதியவர்கள், அனுபவமுள்ளவர்களின் சொற்களினை கேட்டு எதிர்வரும் தலைமுறையினருக்கு நல்ல உதாரணமாக இந்த இளைஞர்கள் மாற எத்தனிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

Advertisements