தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வருடங்கள், தசாப்தங்களாக கடந்து வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அன்றில் இருந்து இன்று வரை கண்முன் சிதைக்கப்பட்டு கொண்டு வருகின்றது யாழ்.

என்ற போதும் நீதி என்பது பேச்சளவிலும், ஏட்டளவிலும் மட்டுமே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

1981ஆம் வருடம் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது யாழ் நூலக எரிப்பு.

மறக்கமுடியாத அந்த வடு மற்றும் எரிக்கப்பட்ட தமிழர் வரலாறுகளினால், அடக்கு முறையினால் புதுப் புரட்சி வெடித்தது. ஆனால் சம்பவம் முத்தசாப்தங்கள் கடந்த நிலையில் அதற்காக அண்மையில் பிரதமர் பகிரங்கமான மன்னிப்பு கேட்டார்.

1981ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதாகவும் இது முற்றிலும் பிழையானது அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் ரணில் பாராளுமன்றில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இவ்வாறாக பிரதமருக்கு மன்னிப்பு கேட்கத் தோன்றியது வரவேட்கத்தக்கது. என்றாலும் கூட அவரது இந்த மன்னிப்பு மனமுவந்து கேட்கப்பட்டதாக தோன்றவில்லை.

காரணம் அன்று முதல் இன்று வரை யாழ் ஒரு கலவர பிரதேசமாகவே சித்தரிக்கப்பட்டு கொண்டு வருகின்றது. இப்போதும் ரணில் ஆட்சியில் இருக்கின்றார் பிரச்சினை மட்டும் தொடர்கின்றது.

அண்மையில் யாழில் ஏற்பட்ட கோரமான விபத்தில் சகோதர சிங்கள இனத்தைச் சேர்ந்த 11 பேர் இறந்தனர். இந்த விபத்து யாழ் மக்களின் மனிதாபிமானத்தை தென்னிலங்கைக்கு அம்பலப்படுத்தியது.

இந்த விபத்து நல்லிணக்கத்திற்கான வித்தாக அமைந்து போனது என்னமோ உண்மைதான். அப்படி மனிதாபிமானம் மிக்க இந்த யாழில் தான் இப்போது அட்டூழியங்களும் தலைவிரித்தாடுகின்றது இதற்கு காரணம் என்ன.

வெளிப்படையாக நோக்கப்படின் அன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்டது எதற்காகவோ அதே நிலைதான் இன்றும். அதாவது அன்று தமிழர்கள் அடக்கப்பட வேண்டும் என்பதற்காகவே.

இது இப்போதைய தென்னிலங்கை அரசியல் தரப்பும் ஒத்துக் கொள்ளும் வாதமே. அன்று தொடக்கம் இன்று வரை யாழை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணமே இன்று வரை பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.

ஒரு காலகட்டத்தில் யாழ் என்றாலே சர்வதேச மட்டத்தில் புகழ் வாய்ந்த பெருமைகளினதும் சிறப்புகளினதும் பிறப்பிடம்.

ஆனால் இன்று யாழ் என்றாலே அச்சம் என்ற ஓர் நிலை உருவானதா? உருவாக்கப்பட்டதா? கட்டாயமாக உருவாக்கப்பட்டது என்பதே உண்மை.

ஒரு நோக்கம் அன்று எரிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அந்த நோக்கத்தில் வெற்றியடையவே இன்றும் வடக்கில் பிரச்சினைகள் தோற்று விக்கப்பட்டு வருகின்றது. ஆட்சியாளர்கள் மட்டுமே வேடிக்கை அன்று முதல் இன்று வரை.

இப்போது யாழில் இடம் பெறும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் இராணுவத்தினரின் பங்களிப்பு இருக்கின்றது என்று கூறப்பட்டாலும் அவை அப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுகின்றது.

செய்தது எல்லாம் ஆவா என்றால், ஆவா யாழ்ப்பாணத்தில் உருவாகியதா? அல்லது கொண்டு சென்று விடப்பட்டதா என்ற பார்வை அவசியம். ஆனால் வெளிப்படுத்துவது யார்?

எப்படியாவது மிச்சம் மீதி உள்ள தமிழர்களை ஒடுக்கி ஓட்டி விட்டு அங்கு தென்னிலங்கை கொடியை நாட்டுவதற்கான செயற்பாடே இப்போது செய்யப்பட்டு கொண்டு வருகின்றது.

பேச்சளவில் வடக்கிற்கு அபிவிருத்தி செய்கின்றோம், அப்போது நடந்ததற்கு மன்னிப்பு கோட்டுக்கொள்கின்றோம் என சொல்லுகின்றார்களே தவிர அன்றைய நிலையே இன்றும் தொடர்கின்றது.

யுத்தம் நிறைவடைந்து விட்டது இன்றும் அப்போதைய நிலை போலவே வடக்கு மக்களின் துயர் மட்டும் தீர்க்கப்பட வில்லை.

அந்த வகையில் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் போடும் முயற்சியே இப்போது நடைபெற்று கொண்டு வருகின்றது. எங்கோ ஓர் பிரச்சினை நடந்தால் அங்கு முன்னாள் புலிகளுடன் இணைத்து கதைகள் பிறப்பிக்கப்படுகின்றது.

தெற்கில் இல்லாத ரவுடிகளும், பாதாள உலககோஷ்டிகளும், போதைப் பொருள் மன்னன்களை விடவா வடக்கில் அதிகமாக இருக்கின்றார்கள்?

முக்கியமான யுத்தம் நிறைவடைந்த பின்னரே வடக்கில் அனைத்து அராஜகங்களும் அரங்கேற்றப்பட்டு கொண்டு வரப்படுகின்றது. இது தெரிந்தும் அரசியல் வாதிகள் மௌனம் சாதிப்பது எதனால்?

ஆக மொத்தம் இனம், மதம் எனப்பாகுபாடு இன்றி அனைவரும் நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் கருத்திற் கொள்ள அரசுகள் முனைய வேண்டும்.

யாழ்ப்பாணமும் எமது வசமாக வேண்டும், தமிழர்கள் தலைநிமிராமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அரசு தலைவர்களிடையே அடியோடு ஒழியும் வரை.,

யாழில் வாள்வெட்டுகள் மட்டும் அல்ல கொலைகள் உட்பட அனைத்து அட்டூழியங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும். காரணம் பிரச்சினை அங்கில்லை இன்னுமோர் இடத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றது.

அரசியல் இலாபங்களுக்காக ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழித்து, பாரம்பரியத்தை அழிக்க தசாப்தங்களை தாண்டி வரும் பிரச்சினைக்கு தீர்வு எப்போது வரும்.

தீர்மானிக்க வேண்டியது இப்போதைய அரசியல் தலைவர்களின் முக்கிய கடமை இனியும் தாமதித்து கொண்டு வந்தால் கடந்த காலம் கண்முன்னே கொண்டு வரப்பட்டு விடும் என்பது மட்டும் உண்மை.

**

யாழ். வாள்வெட்டுக் குழுவினருக்கு தேவையானது இதுதானாம்..?

யாழ்ப்பாணத்தை ஆட்டிப்படைத்துவரும் ரவுடிக் கும்பல், அல்லது ஒட்டுக்குழுக்களுக்கு அவசியமாக பழைய மருத்துவ முறையினை கையில் எடுப்பது சிறந்தது போல தோன்றுகிறது.

2009ம் ஆண்டிற்குப் பின்னர் தமிழ் சினிமா போல, ஒருவகையான பதற்ற நிலையினை வடக்கில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த நிலை நாளொரு வண்ணம், பொழுதொரு மேனியாக வளர்ந்து இன்று பெரும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

தங்கள் தேவைக்காக ஆயுதக் குழுக்களை உருவாக்கியவர்கள் யார்..? என்று வெளிப்படையாகத் தெரியும். அவர்களின் தேவை முடிந்த பின்னர் இவர்களை வெளியில் விட்டுவிட்டார்கள்.

இன்று தங்கள் சொந்தப் பிரச்சினை, வாய்க்கால் தகராறு என்று எடுத்ததுக்கு எல்லாம் வாளெடுத்து வருகிறார்கள் இளைஞர்கள் என்று ஆதங்கப்பட்டார் பெரியவர் ஒருவர்.

அவரின் ஆதங்கத்தோடு ஒரு விடயத்தினையும் சொல்ல மறக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சமூக விரோதச் செயல்கள் பெரும்பாலும் இருந்ததில்லை.

அதற்கு காரணமும் இருந்தது. யாரேனும் சமூக விரோதச் செயலிலோ, அன்றி, பெண்களுக்கு, மாணவர்களுக்கு தொந்தரவு கொடுப்பார்களாயின் அவர்களுக்கு பச்சை மட்டை அடிகொடுப்பார்கள்.

அத்தோடு சமூகத்தை குழப்ப நினைப்பவர்கள் திருந்துவார்கள். அல்லது நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.

ஆனால், விடுதலைப்புலிகளின் இடைவெளியோடு இன்றைய தலைமுறையினர் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார்.

தொடர்ந்து நம்மோடு பேசிய அவர், அடியாத மாடு படியாது எண்டொரு பழமொழி இருக்கு. அதை எங்கட பெடியளுக்கு நல்லாத்தான் ஒப்புமைப்படுத்தி பார்க்க முடிகிறது.

சரியான கட்டமைப்பின் கீழோ, சரியான வழிகாட்டலின்படியோ இவர்கள் வளர்ந்திருப்பார்களாயின் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள்.

செய்யும் குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று அஞ்சியிருப்பார்களாயின் கிஞ்சித்தும், ஆபத்தான ஆயுதங்களை தூக்கப் பயப்பட்டிருப்பார்கள்.

ஆனால், இன்றைய இளைஞர்களின் மனதில் நாம் எப்படி குற்றம் செய்தாலும் அதில் இருந்து தப்பித்து வெளியே வந்துவிடலாம் என்பதை உறுதியாக நம்புகிறார்கள்.

அதற்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் முழு ஆதரவையும் வடக்கில் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், துணிந்து தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.

இவர்களை அடக்க வேண்டுமென்றால், திருக்கைவால் அடியும், பச்சை மட்டையாலும் வெளுத்துவாங்கினால் சரிவரும். இவர்களுக்குத் தேவையான மருந்து விடுதலைப் புலிகளிடம் தான் இருக்கின்றன.

ஆனால், வாளினை இன்று கையில் எடுத்தவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். வாள் எடுத்தவன் வாளினால் தான் மடிவான். இளம் கன்று பயமறியாது.

ஆனால், பொறுப்பு அறிந்து செயற்படவேண்டும். இன்று தங்கள் தேவைக்காக உருவாக்கியவர்கள் நாளை உங்களை அழித்துவிடுவார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள் வாள்வெட்டு இளைஞர்களே…!

**

கொலைக்களமாக மாறும் யாழ்ப்பாணம்! மீட்டெடுக்க பிரபாகரன் வருவாரா..?

யாழில் இடம்பெற்றுள்ள வாள்வெட்டு சம்பவம் அச்சத்தின் உச்ச வெளிப்பாடு என்றுதான் கூற வேண்டும். யாழ் மக்களை பதற வைத்த ஓர் சம்பவமாக இது காணப்பட்டுள்ளது.

நேற்று இரவு 07.30 மணியளவில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற மர்மக் கும்பலொன்று வர்த்தக நிலையத்திலிருந்த இளைஞர்கள் இருவரை வாள்களால் சரமாரியாக வெட்டியதுடன், கடைக்குப் பெற்றோல் குண்டு வீசியும் சென்றுள்ளனர்.

இந்த பதற்ற சூழலை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

இது மீண்டும் ஒரு அழிவின் ஆரம்பம் என்றுதான் கூற வேண்டும். இவ்வாறான சம்பவம் தற்போது சாதாரணமாக இடம்பெறுகின்றது. இதனை ஏன் முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை அரசு இது வரை மேற்கொள்ள வில்லை. இது புதிதாக ஆரம்பிக்கப்படவில்லை என்றாலும் பிண்ணனியில் செயற்படுவது யார்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் சுட்டிக்காட்டும் அளவு இடம்பெறவில்லை என்பது அனைவராலும் இன்றுவரை ஒத்துக்கொள்ளக் கூடிய உண்மையே.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் சில மாறுதல்கள் இடம்பெற்றிருந்தாலும் இவ்வாறான சமூக சீர்கேடுகள் ஏற்படவில்லை. இது இப்போதைய அரசியல் தலைவர்களுக்கும் நன்றாக தெரியும்.

தமிழர்கள் யுத்த காலப்பகுதியில் கூட அச்சம் இன்றி வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது கொலை, கொள்ளை, வாள் வெட்டு என்று தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.

இதே போன்று விடுதலைப்புலிகள் இருக்கும் காலத்தில் நாம் சந்தோசமாகவே இருந்தோம். விடுதலைப்புலிகளின் தலைவர் இருக்கும் போது யாழில் சமூக சீர்கேடுகள் குறைவாகவே இருந்தன என்பது இப்போதும் வடக்கு மக்களின் தெரிவிக்கும் கருத்துகள்.

அதனால் இதனை தடுக்க மீண்டும் விடுதலைப்புலிகளின் தலைவர் தான் வருவாரோ..? என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

கொடூரமான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்லுகின்றது. வித்தியா கொலையில் ஆரம்பித்து தற்போது ஹம்சிகாவின் படுகொலை வரை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஹம்சிகா படுகொலை செய்யப்பட்ட போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்பிணிப் பெண் என்று கூட பார்க்காமல் மிருகத்தனமாக கொலை செய்துள்ளனர்.

இப்படியே தொடருமாக இருந்தால் பெண்களின் நிலை என்னவாகும்…? அந்த சோகம் மறைவதற்குள் நேற்று இளைஞர்கள் இருவரை வாள்களால் சரமாரியாக மர்ம கும்மல் தாக்கியுள்ளது.

நிற்க.., கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் போன்றவற்றிற்கு பெயர் போன யாழ் இன்று கொலை, கொள்ளை, வாள் வெட்டுக்கும் எடுத்து காட்டாக உள்ள கொலைகளமாக மாறி வருவது கவலைக்குறிய விடயமாகும்.

வாள் வெட்டு திடீர் என தோற்றம் பெற வில்லை. இதன் பிண்ணனியில் யார் செயற்படுகின்றார்கள் என்பதை கண்டுபிடித்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய வேண்டுக்கோள்.

யாழ் மக்களை அச்சுருத்தும் பயங்கரவாதியாக சட்டவிரோத போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. இன்றைய பாரியசவால்களில் ஒன்றாக புகைத்தல், போதைப் பொருட்பாவனை காணப்படுகின்றது.

சிறியவர், பெரியவர், படித்தவர், பாமரர் என்ற பாகுபாடுகளின்றி வயது வித்தியாசமின்றி எல்லோரும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டு சீரழிவதனை பல்வேறு சம்பவங்கள் எமக்கு சான்று பகர்கின்றன.

“இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்” என்பர் ஆனால் இன்று இவ்வாறான வாசகங்கள் எல்லாம் செல்லாக் காசுகளைப் போல் பெறுமதி அற்றவைகளாக ஆகிவிடுமோ என அஞ்சுமளவு எமது மாணவ சமூகத்தின் நிலையைப் பற்றியும் இத்தருனத்தில் குறிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாக ஆகியுள்ளது.

காரணம் மாணவர்களுக்கு மத்தியிலும் இளைஞர்களுக்கு மத்தியிலும் போதைப்பொருள் பாவனை ஊடுருவியுள்ளது என்றால் யாரும் மறுப்பதுக்கில்லை.

நாளைய தலைமுறை எதனை அடுத்த தலைமுறையினருக்கு கற்று கொடுக்க போகின்றது, மிச்சம் வைக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதை தடுக்க வில்லை என்றால் நிச்சயம் கொலை, கொள்ளை, வாள் வெட்டில் யாழ்ப்பாணம் முதலிடம் பெறும். இது வரை பெற்றுக் கொண்ட பெருமை எல்லாவற்றையும் புதைத்துக் கொண்டு அழிந்து போகும் என்பது உண்மையே….!

Advertisements