உடல் சோர்வடைந்த நிலையில் காணாமல் போனவர்களின் உறவுகள் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!

வவுனியாவில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காணாமல் போனவர்களின் உறவுகள் தமது உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

குறித்த வேண்டுகோளினை தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினரே விடுத்துள்ளனர்.

குறித்த வேண்டுகோளில்,

கதவுகள் திறவாதோ! நீதியும் கிட்டாதோ!!

போகாத கோயில்களில்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. ஏறாத படிகள் இல்லை. தட்டாத கதவுகள் இல்லை. விழாத கால்கள் இல்லை. கெஞ்சாத ஆட்கள் இல்லை. ஆனால் பதில் சொல்லத்தான் யாருமில்லை!

எங்கள் பிள்ளைகளையும், கணவனையும், தந்தையையும், மனைவியையும், தங்கையையும், அண்ணனையும், தம்பியையும், அக்காவையும், தாயையும் இன்னும் கிட்டத்து உறவுகளையும், தூரத்து உறவுகளையும் நித்தம் நித்தம் தேடி அவர்களுக்காக அழுது கண்களும் வற்றிவிட்டன. கால்களும் தேய்ந்து போயின. உடலும் சோர்ந்துவிட்டது. வாழ்க்கையும் வெறுத்துவிட்டது.

நாங்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு எங்களது இதயத்தைப் பிளந்தால்தான் தெரியும் என்றால், ‘நாங்கள் இருக்கும் இந்த உண்ணாவிரதத்தில் எங்களில் யாரேனும் மரணித்தால் அவர்களது இதயத்தை அறுத்துப் பாருங்கள்’ அதில் நாங்கள் தேடியலைபவரின் உருவம் தெரியும். அப்பொழுதாவது அரசாங்கத்தின் மனம் இரங்குகிறதா? என்று பார்ப்போம்.

நாட்டைப் பாதுகாப்பவர்கள் என்று சொன்னவர்கள், ‘உங்களது பிள்ளைகள் ஒருநாள் புலிகள் இயக்கத்தில் இருந்தாலும் சரணடையச் சொல்லுங்கள். நாங்கள் பிடித்தால் கடுமையான தண்டனை கிடைக்கும். சரணடைந்தால் மூன்று மாத புனர்வாழ்வின் பின்னர் உங்களிடம் மீண்டும் கொண்டுவந்து தருகிறோம் என்றார்கள்.

இடம் பெயர்ந்து முகாமில் தங்கியிருந்தபோதும் எமது வாக்குகளால் அன்று மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரானவரும் அதே வேண்டுகோளை விடுத்தார்.

அத்துடன் அனைவருக்கும் தான் பொறுப்பு என்றும் சொன்னார். அவர்கள் நேர்மையானவர்கள் என்று எண்ணி எமது அன்பிற்குரியவர்களை அவர்களிடம் ஒப்படைத்தோம். காலங்கள் சென்றன. அவர்கள் எமது அன்பிற்குரியவர்களை காணாமல் ஆக்கியுள்ளார்கள். இன்றுவரை இலங்கை ஆட்சியாளர்கள் முதல் ஐ.நா சபை உயர் அதிகாரிகள் வரை அனைவரும் தேடிக்கொண்டிருக்கின்றோம்.

மற்றொரு சிலம்பை உடைத்து எங்களது நேர்மையை நிரூபித்து நியாயம் கேட்பதற்கு எங்களிடம் காற்சிலம்புமில்லை. நாங்கள் சிலம்பைத் தொலைக்கவுமில்லை. களவாடவுமில்லை.

நாங்கள் தொலைத்தது மனிதர்களை! எம் அன்பிற்குரியவர்களை அரச படைகளிடம் கையளித்து தொலைத்து நிற்கிறோம். தர்மம் பிழைத்ததற்காக நீதி கேட்டு, நாங்கள் மீண்டும் மதுரையை எரித்த கண்ணகியாக மாற விரும்பவுமில்லை. நீதி தேவதை தன் கண்களைத் திறந்து எம்மை நோக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அவள் கண்களைக் கட்டியுள்ள துணி அவிழ வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.

எம் மடியில் உருண்டு புரண்ட எம் அன்பிற்குரியவர்களை எம்மிடம் திரும்பத்தாருங்கள் என்றே கேட்கிறோம்.

எங்கள் கோரிக்கையின் நியாயம் இன்னமும் உங்களுக்குப் புரியாமல் இருப்பதால் இனி இந்த மண்ணில் வாழ்வதில் பயனில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டோம். ‘எங்களது மரணம்தான் உங்களது மனக்கண்ணை திறக்கும் என்றால் அது இப்பொழுதே நடக்கட்டும்’

மிகவும் சாத்வீகமான வழியில் உணவைத் தவிர்த்து எங்கள் உடலை வருத்தி நியாயம் கேட்கிறோம்.

அன்புள்ளங்களே!

எங்களுக்காக நீங்கள் செய்ய வேண்டிய கடமையொன்று உள்ளது. அதைச் செய்ய வேண்டும் என்று உங்களிடம் மன்றாடுகின்றோம்.

இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்தின்படி காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் தொடர்பாக உண்மைநிலையை எதுவித காலதாமதமும் இன்றி வருகின்ற கூட்டத்தொடரில் எழுத்துமூலம் வெளிப்படுத்த வேண்டும்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும் என்றும் யுத்தக்குற்றங்கள், மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்.

ஐ.நா சபை செயலாளர் நாயகம், ஐ.நா பாதுகாப்புச் சபை, ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகம் மற்றும் அனைத்து நாடுகளின் தூதரகத்திற்கும், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும், அனைத்து சமூக வலைதளங்கள் ஊடாகவும், முகநூல் ஊடாகவும், மின்னஞ்சல் ஊடாகவும், இணையதளங்கள் ஊடாகவும், ட்வீட்டர், வாட்ஸ்அப், வைபர் போன்ற தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் ஊடாகவும் கோரிக்கைகளை முன்வையுங்கள்.

எமது அன்புமிக்க தமிழக உறவுகளே! இதனை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் தமிழனின் அடையாளமாம் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கும், அதனூடாக பல்தேசியக் கம்பெனிகளின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது அந்தப் போராட்டத்துடன் இதனையும் முன்னெடுங்கள்.

உலகம் முழுவதிலுமுள்ள மனிதநேயம் உள்ளவர்களும் இனம், மொழி, மதம், சாதி, நாடு கடந்து, இந்தப் பணியை சிரமேற்கொண்டு முன்னெடுத்தால் நிச்சயமாகப் பலன்கிட்டும். எமது உறவுகளின் வருகைக்காக நாம் எமது உயிரைத் தருவதற்கும் தயாராகிவிட்டோம். ஒருவேளை இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நாங்கள் மரணிக்க நேரிட்டால் எங்களது வாரிசுகளை தன்மானமிக்க நற்பிரஜைகளாக வளர்த்தெடுங்கள். அவர்களாவது இந்த நாட்டில் சமத்துவமாகவும் சகோதரத்துவத்துடனும் வாழட்டும்!

சிறிலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

நேற்றுமுன்தினம் காலை தொடக்கம் வவுனியா அஞ்சலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை பலவீனமடையத் தொடங்கியுள்ளது. வவுனியா மருத்துவமனை மருத்துவர்கள் இன்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலையை பரிசோதித்தனர்.

இதன் போது இரண்டு தாய்மாரின் உடலில் சீனி அளவு குறையத் தொடங்கியுள்ளதால், எந்த நேரத்திலும் மயக்கமடையலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு மயக்கமடைந்தால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில், மருத்துவ சிகிச்சையை பெறப் போவதில்லை என்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக, பொதுமக்களும், பிரமுகர்களும், உண்ணாவிரத மேடைக்கு வந்து செல்வதையும் அவதானிக்க முடிகிறது.

காணாமற்போனோரின் உறவினர்களால் வவுனியாவில் நேற்று (23) ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாம் நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமற்போன தங்களின் உறவினர்கள் தொடர்பில் இறுதியான முடிவை அறிவிக்குமாறும், அரசியல் கைதிகளாக நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஏ-9 வீதியிலுள்ள வவுனியா பிரதான தபாலகம் முன்பாக காணாமற்போனரது உறவினர்கள் நேற்று முதல் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமற்போனோரின் உறவினர்கள் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தங்களின் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

தமிழகத்தில் இந்தியன் அடிக்கிறான்.. இங்கே சிங்களவன் அடிக்கிறான்.. இது தான் தமிழரின் இன்றைய நிலை..

கவனயீர்ப்பு..! உண்ணாவிரதம்..! போராட்டங்கள்..! அனைத்திலும் தமிழ்மக்களுக்கு ஏமாற்றம்!

வடக்கில் தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்க வேண்டுமெனக்கோரி பல்வேறு போராட்டங்களை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர்.

பலவித எதிர்ப்பார்ப்புகளை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் அனைத்திற்குமான பதில் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

இதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும், என்பதில் சந்தேக நிலை மேலும் வலுப்பெற்றுள்ளது.

குறிப்பாக இன்று காலை கோப்பாப்புலவு மக்கள் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை மீட்டுத்தரவேண்டும் என போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் வவுனியாவில் காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

முள்ளியவளை தொழிநுட்பக் கூடத்தை திறப்பதற்காக வருகைத்தரும் ஜனாதிபதியின் கவனத்திற்கு தமது பிரச்சினைகளை கொண்டு செல்ல முடியும் என தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்திருந்தனர்.

இன்று சம நேரப் போராட்டங்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு செல்லும் ஜனாதிபதியின் பதில் என்னவாக இருக்கப் போகின்றது என்பதிலும், ஜனாதிபதி என்ன உறுதிமொழி வழங்குவார் என்பது தொடர்பிலும் பொதுமக்கள் மத்தில் எதிர்ப்பார்ப்பு மேலோங்கியிருந்தது.

இந்நிலையில் முல்லைத்தீவு செல்லவிருந்த ஜனாதிபதியின் பயணத்தை சீரற்ற காலநிலை திசைதிருப்பியுள்ளது. இதன் காரணமாக தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளன.

இதேவேளை வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

*

அடக்கப்படும் தமிழினம் என்பதால் இந்த நிலையா..? ஒரே ஒருநாள் உங்களால் முடியுமா? அரசுக்கு பகிரங்க சவால்

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக கொட்டும் மழையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

இவர்கள் பணம் கேட்கவில்லை, உடைகளை கேட்கவில்லை, எந்த வசதிவாய்ப்பையும் கேட்கவில்லை. கேட்பதெல்லாம் ஒன்று. காணாமல் போன எமது உறவுகளுக்கு ஒரு பதில் தாருங்கள் என்பது மட்டுமே.

சிறு குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரை வவுனியாவில் கடந்த மூன்று நாட்களாக படும்பாடு அரசியல்வாதிகளே உங்கள் கண்களுக்கு தெரியவில்லை? அவர்களின் குரல் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?

பிள்ளைகளை பெற்ற பெற்றோரின் கதறல்கள், சகோதரர்களை தொலைத்து விட்டு தேடும் உடன்பிறந்த உறவுகள், கணவனை இழந்துவிட்டு நிர்க்கதியாக நிற்கும் பெண்கள், பெற்றோரை தேடும் குழந்தைகளின் அழுகுரல்கள் இந்த உலகில் யாருடைய காதுகளுக்கும் கேட்கவில்லையா?

நாட்டின் சட்டத்தையும், பொருளாதாரத்தையும், அபிவிருத்திகளில் மட்டும் அக்கறை கொண்டுள்ள அரசியல் தலைமைகளே இந்த மக்கள் பற்றி என்றேனும் சிந்தித்ததுண்டா? இவர்களும் இந்த நாட்டில்தான் வாழ்கின்றார்கள், இவர்களை தெரிந்தும் தெரியாததைப்பொல் இருக்கும் இந்த நாடகங்கள் மூலம் எதை அடையப்போகின்றீர்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாமல் இருக்கின்றார்கள் இந்த பாவப்பட்ட மக்கள். பொறுப்பு கூற வேண்டிய அரசியல்வாதிகள்தான் இவர்களை கண்டுகொள்ளாமலிருக்கின்றார்கள். ஆனால் இயற்கைகூட இவர்களை சோதிக்கின்றது.

இரவு பகலாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மழை பெய்து இவர்களது கஷ்டத்தை கூட்டுகின்றதா? அல்லது இவர்களது துயர்கண்டு வானம் கண்ணீர் சிந்துகின்றதா என்ற சந்தேகம் கூட எழத்தான் செய்கின்றது.

இவர்கள் சாகும் வரையான உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்கள். இவர்கள் செத்தாலும் அரசியல்வாதிகள் திரும்பிப்பார்ப்பார்களா என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவர்கள் உடம்பில் உண்ணாவிரதம் இருக்கும் அளவிற்கு சக்தி இல்லை. எத்னையோ கஷ்டங்களை தாண்டி வந்து, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சக்தியை இழந்துள்ளார்கள். நிச்சயம் மடிந்து விடுவார்கள். இவர்களை காப்பாற்றுங்கள்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாளை முதல் தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் களமிறங்கவுள்ளனர். கடந்த வருடம் நாட்டிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் சிலருக்கு உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நாட்டில் பலருக்கும் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்படவே சில அரசியல்வாதிகள் விடுதலை பெற்றுத்தரப்படும் என்று வாக்குறுதிகளை வழங்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்கள்.

அந்த நிலைமை மீண்டும் உருவாக வேண்டும் என்பதற்காகவா அரசியல்வாதிகளின் இந்த மௌனம்?

ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து 3 நாட்கள் உண்ணாமல் இருக்கின்றார்கள் எமது தமிழ் உறவுகள்.

குளிரூட்டப்பட்ட அறையில் மூன்று வேளையும் நல்ல உணவுகளை உண்டு, குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஓர் பகிரங்க சவால்..!

உங்களால் ஒருநாள் இவ்வாறு உண்ணாமல் உறங்காமல் கொட்டும் மழையிலும் இருந்து காட்ட முடியுமா?

எத்தனைபேர் இப்படி இருப்பீர்கள். ஒரு நேரம் சாப்பிடவில்லை என்றாலும், உறவுகளைக்காணா விட்டாலும் உங்களுக்கு உறக்கமே வராதே. உங்களுக்கு எப்படி தெரியப்போகின்றது எமது தமிழ் மக்களின் உள்ளக்குமுறல்கள்???

Advertisements