தமிழக மாணவர்கள் இளைஞர்கள் என இருசாராரும் ஒன்றிணைந்து எவ்வித பெரும் விளம்பரங்களின்றி களமிறங்க அவர்களின் போராட்ட நியாயங்களையும், சுயநலமற்ற துணிவையும் கண்டு இன்று தமிழக மக்களும் தன்னார்வத்துடன் ஆதரவளிக்க கிளர்ந்து எழ தமிழகமே சென்ற ஆறு ஏழு நாட்களாக தனது இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளது. உலகமே வியந்து பாராட்டி பல நாடுகளில் உள்ள தமிழர்களும் ஆதரவு கரம் நீட்டியுள்ள நிலையை ஆராய்வோமாயின் ஒரு சல்லிக்கட்டுக்காக மட்டுமே இப்படியான வீரியமான போராட்டமா என்ற கேள்வி எழுகிறது. ஆரம்பம் வேண்டுமானால் சல்லிக்கட்டும், வாடிவாசல் திறக்கும் வரை எனவும் கோரிக்கையாகலாம். ஆனால் தினந்தோறும் அதிகரிக்கும் கூட்டங்களை பார்க்கும்போது கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்துள்ள தமிழக பாதிப்புகள் அவர்களை வெகுவாக காயப்படுத்தியுள்ளதை உணரமுடியும். காவிரி,முல்லைப்பெரியாறு விவகாரங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்படவில்லை என்பதையும், விவசாயிகள் அதனால் உயிரிழந்ததையும் எந்த அரசுகளும் கண்டு கொள்ளவில்லை என்பதில் தமிழகம் கொதித்து கொண்டுள்ளது.

இந்நிலையில் சல்லிக்கட்டின் தடை இவர்களின் ஆத்திரத்தை உச்சகத்திற்கு கொண்டு சென்றதன் காரணமாகவே ஜல்லிக்கட்டை முன்னிறுத்தி இன்றைய அமைதி, அறவழிப் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் அதன் உண்மை புரியாமல் இது யாரோ சில அரசியல் நோக்கோடு நடத்துகின்ற போராட்டம் என கொச்சைப் படுத்தி தங்களை ஏதோ அறிவு ஜீவிகளாக்கிக்கொள்ள பார்க்கின்றனர். நாம் இந்த போராட்டத்தை ஆதரிப்பது போலவே அவர்களும் அதனை ஆதரிப்பது எப்படி தவறாகும். நம்மை போலவே மற்றவர்களும் தமிழ் சமூகத்தைச்சார்ந்தவர்கள்தான்.

இந்த போராட்டத்தில் தங்களின் தலையை நுழைத்து தங்களை ஒருங்கிணைப்பாளர்களாகவோ, ஒரு தலைவர்களாகவோ காட்டிக்கொண்டாலும் இம்மாணவர்கள் அவர்களை எந்தளவுக்கு மதிப்பார்கள் என்பதை அவர்களிடம் உள்ள தெளிவு விளக்கும். உண்மையாகவே இந்த ஊடுருவல் செய்யும் நபர்களுக்கு வலிமை இருந்தால் அவர்கள் இம்மாணவர்களை நாட வேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டில் உள்ள அயலகத் தமிழர்களிடம் வேண்டுமானால் இவர்களின் வீர பிரதாபங்களை காட்டலாம் அதனை அவர்களும் நம்பி அவர்களுக்கு பொருளுதவி செய்யக்கூடும். ஆனால் இங்கு மக்களுக்கு தெளிவாக அவர்களை பற்றி தெரியும். இந்த போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை பல்வேறு களங்களில் உள்ள மாணவ மாணவிகள், இளைஞர்கள், குடும்பத்தலைவிகள் அனைவருமே இந்த கேடு கேட்ட அரசியல் கட்சியினர், சிறு குழுக்கள் ஆகியோரை பற்றி தெளிவாக அறிந்து அவர்களை ஒதுக்கி வைத்துள்ளனர். இவர்கள்தான் தாங்களாகவே தங்கள் தலையை நுழைத்து இந்த போராட்டத்தை திசை திருப்ப பார்க்கின்றனர். ஆனால் அது நடைபெறப் போவதில்லை.

இவ்வளவு பெரும் போராட்டம் நடந்து கொண்டுள்ளபோது நாம் தமிழர் சீமான் வாடிவாசலை மறிக்கும் விளம்பரத்தை செய்கிறார். ஒரு நாளும் இவர்கள் போராடும் மாணவ, இளைஞர், பொது மக்களின் நம்பிக்கையை பெற்றவர்கள் இல்லை என்பதே உண்மை. அவரவர் தன்மைக்கு ஏற்ப தங்களின் பங்கினை காணொளிகளில் பதிந்து உலகத்த தமிழர்களின் பார்வைக்கு கொண்டு சென்று தலைவர்களாகப் பார்க்கின்றனர். ஆனால் விழிப்புடன் இவைகளை அவதானித்து வரும் தமிழ் மக்கள் இவர்களின் முயற்சியை தோலுரித்து காட்டுவார்கள். மாணவர்களும், இளைஞர்களும் அதில் விழிப்புடன், எச்சரிக்கையுடன் உள்ளது நமக்கு ஆறுதலான செய்தி.

தமிழக அரசியல் வினோதமானது. சறுக்கி விழுந்தாலும், செருப்பாலடித்தாலும் சிரித்துக்கொண்டே அரவணைத்து தாங்களும் போராட்டத்தின் ஆதரவாளர்களே என்று கூச்சமேயில்லாமல் சொல்லக் கூடியவர்கள். தமிழகமே அதிர்ந்து ஸ்தம்பித்த நிலையில் திமுக வினர் அதன் செயல் தலைவர் தலைமையில் ரயில் மறியல் செய்தும், உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தும் தங்களின் முக்கியத்துவத்தை காட்டிக் கொள்ள முயல்கின்றனர். அதி.மு.க அமைச்சர்களோ இவ்வளவு நாளாக தொடர்ந்து நடந்துவரும் போராட்டத்தை முறியடிக்க முயற்சித்து தோற்பது போலவே வருங்காலங்களில் இவ்விருவரும் இளைய தலைமுறையால் தூக்கி எறியப்படுவார்கள். கீழே விழுந்து மீசையில் மண் ஓட்டவில்லையென வேலுமணி போன்ற அமைச்சர்கள் வீம்புடன் இப்போராட்டத்தை கொச்சைப்படுத்த துணிந்துள்ளனர். அவர்கள் தாங்களாகவே தங்களுக்கு குழி வெட்டிக் கொள்கின்றனர். இதுகாறும் போராட்டம் எந்த அரசிய கட்சியினரையும் எதிரிகளாக கருதவில்லை. ஆனால் தமிழக அமைச்சர்கள் அதனை தூண்டி வருகின்றனர். தி மு க வோ தங்களின் கடந்த கால தவறுகளின் சுவடுகளை மறைக்க முயற்சிக்கின்றனர். இதனை எத்தனை காலம்தான் இந்த இளைய சமுதாயமும், பொது மக்களும் பொறுத்துக் கொள்வார்கள்? இவர்களது நாடகம் இவர்களுக்கே வில்லங்கமாகப் போவதை புரிந்து கொண்டுள்ளார்களா என்பது புரியவில்லை. போராட்டக்காரர்கள் தமிழக முழுதும் ஒருமித்து ஒரு முடிவை அறிவித்த பின்னர் அதனை சட்டை செய்யாமல் எதிர் வேலைகள் செய்ய அரசியல் கட்சி தலைமைக்கு எப்படி துணிவு வந்தது? மாணவர்களின் பொறுமை கட்டுக்குள் இருப்பது இவர்களுக்கு பாதுகாப்பினை இப்போது தரலாம். ஆனால் இப்படியே தொடர வாய்ப்பில்லை. அந்தளவுக்கு சுயநலமில்லாமல், கட்சி சார்பின்றி போராடும் மாணவர்களை, இளைஞர்களை ஆத்திரப்படுத்தும் செயல்கள் எவ்வளவு எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த திமிர் பிடித்த அரசியல்வாதிகள் விரைவில் உணர்வார்கள்.

இந்த அவசர சட்டத்தின் வெளியீடு யாரோ நல்ல முயற்சி எடுத்து கொண்டு வந்ததல்ல. மாணவர்களின், இளைஞர்களின் பொது மக்களின் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட விளைவு. அது வெற்றியானால் அது மாணவர்களின் வெற்றி. வேறு யாரும் அதற்கு உரிமை கோர இயலாது. அதனால் இதற்கு சின்னம்மாவின் பிரதிநிதி ஓ பி ஸோ மற்ற அமைச்சர்களோ உரிமை கோரினால் அது வெட்கப்படவேண்டிய ஒன்றாகும். இவர்கள் இப்போராட்டத்தின் குறிக்கோளையோ, அதன் விளைவுகளையோ அறியவில்லை. இன்று இவர்கள் நடந்து கொள்ளும் நிலையை பார்த்தால் தங்களின் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள மாட்டார்கள் போலுள்ளது. தமிழக அமைச்சர்களின் எண்ணமெல்லாம் தங்களின் மாண்பு மிகு சின்னம்மாவின் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியையும், குடிகளின் உணர்வையே மதிக்காமல் இந்திய அரசின் குடியரசு தின நிகழ்ச்சியையும் கருத்தில் கொண்டு அவசரப்படும் இவர்களை பற்றி அறிந்துதான் போராடும் மக்கள் இவர்களின் வாக்குறுதியை ஏற்க மறுக்கின்றனர். போராட்டத்தை தொடர்கிறோம் என்று போராடும் மக்கள் அறிவித்தும் இன்று தமிழகம் முழுதும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது என்று சின்னம்மாவின் பிரதிநிதி பன்னீர் செல்வம் சொல்லியுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே உள்ளது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பதவியிலிருப்போம் என்ற இறுமாப்பு அவருக்கு. விரைவில் விளைவுகள் தெரியும்.

இந்த அவசர சட்டத்தின் வெளியீடு தமிழக அரசு நல்லலெண்ண முயற்சி எடுத்து கொண்டு வந்ததல்ல. மாணவர்களின், இளைஞர்களின், பொது மக்களின் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவு. அது வெற்றியானால் அது மாணவர்களின் வெற்றி. வேறு யாரும் அதற்கு உரிமை கோர இயலாது. அதனால் இதற்கு சின்னம்மாவின் பிரதிநிதி ஓபிஸோ மற்ற அமைச்சர்களோ உரிமை கோரினால் அது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவர்கள் இப்போராட்டத்தின் குறிக்கோளையோ, அதன் விளைவுகளையோ அறிய வில்லை. இன்று இவர்கள் நடந்து கொள்ளும் நிலையை பார்த்தால் தங்களின் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள மாட்டார்கள் போலுள்ளது. தமிழக அமைச்சர்களின் எண்ணமெல்லாம் தங்களின் மாண்பு மிகு சின்னம்மாவின் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியையும், குடிகளின் உணர்வையே மதிக்காமல் இந்திய அரசின் குடியரசு தின நிகழ்ச்சியையும் கருத்தில் கொண்டு அவசரப்படும் இவர்களை பற்றி அறிந்துதான் போராடும் மக்கள் இவர்களின் வாக்குறுதியை ஏற்க மறுக்கின்றனர். போராட்டத்தை தொடர்கிறோம் என்று போராடும் மக்கள் அறிவித்தும் இன்று தமிழகம் முழுதும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது என்று சின்னம்மாவின் பிரதிநிதி பன்னீர்செல்வம் சொல்லியுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே உள்ளது. அவருக்கு இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பதவியிலிருப்போம் என்ற இறுமாப்பு. விளைவுகள் விரைவில் தெரியும். .

வழக்கறிஞர் கலைமணி

Advertisements