2017 ஜனவரி 17-ம் தேதி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்தது.

பீட்டாவுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் களத்தில் இருந்தவர்கள் தீவிரமாக முழங்கினர். அறப்போராட்டம் ஒரு கொண்டாட்டமாக மாறியது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை ஏற்க இந்த இளைஞர்கள் கூட்டம் மறுத்தது.

‘எங்களுக்கு அவசரச் சட்டம் தேவையில்லை. நிரந்தரத் தீர்வே வேண்டும்’ என விடாமல் போராடினார்கள். ஏழு நாட்கள் நீடித்த போராட்டம் நேற்று இறுதிக்கட்டத்தை எட்டியது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை, மெரினாவில் நடந்தவை அனைத்தும் அப்படியே இங்கே…

22.01.2017ஞாயிறு இரவு 10.30 மணி : மறுநாள் பொழுது விடிவதற்குள் மெரினா கடற்கரையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனஆளும் அரசும், அதிகார வர்க்கமும் விரும்புகின்றன என்பதை அங்குள்ள சூழல்களே உணர்த்தின. கடந்த ஆறு நாட்களாக இல்லாத அளவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காவல்துறையின் நடமாட்டம் மெரினா முழுவதும் அதிகரித்தது. சிலர், மஃப்டியிலும் போராட்டக்காரர்களின் மத்தியில் உலாவி மாணவர்களின் மனநிலையை மோப்பம் பிடித்தனர்.

நள்ளிரவு 12 முதல் 2 மணி வரை : களத்தில் இருந்த மாணவர்களும் தங்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தும் சூழல் இருப்பதை அறிந்தே இருந்தனர். அதனால், வயதான பெரியவர்களையும், குழந்தைகளையும், பெண்களையும் வீட்டுக்குச் செல்லும்படி கூறினார்கள். போக விருப்பம் இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

23.01.2017திங்கள் அதிகாலை 3:30 மணி! அங்கிருந்த போராட்டக்காரர்களை அகற்ற காவல்துறையினர் தடியடி நடத்தப்போவதாக தகவல் மெள்ள மெள்ள அங்கு இருப்பவர்களிடம் பரவியது. மைக்கில் எழுச்சியாகப் பேசிக்கொண்டிருந்த மாணவர்களில் சிலர், “எல்லாரும் சுற்றி அமருங்கள். காவல்துறை நம்மை எதுவும் செய்யமாட்டார்கள். இங்கிருந்து யாரும் கலைந்து செல்லக்கூடாது” என்று பேச, கடல் அலைகளை மீறிக் கைதட்டல்கள்.

3:40 மணி! போராட்டக் களத்தில் இருந்தவர்கள்… தங்கள் நண்பர்களுக்கு எல்லாம் செல்போனில் தொடர்ந்து அழைப்பு விடுத்தனர். உடனே மெரினா வரும்படி வாட்ஸ்அப் முதல் பல சமூகவலைதளங்களைப் பயன்படுத்தியும் வரச் சொன்னார்கள்.

4 மணி : பல்வேறு இடங்களில் இருந்தும் காவல்துறையினர் மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு அருகில் குவியத் தொடங்கினார்கள். அதற்கு முன் ஆறு நாட்களில் இல்லாத அளவுக்கு அவர்கள் கைகளில் லத்திகள் முளைத்திருந்தன.

4.20 மணி : மாணவர்களுக்கும் இந்த தகவல்கள் வந்தன. “நம் மீது லத்தி சார்ஜ் நடத்தினால் கலையக்கூடாது. அப்படி தடியடி நடத்தினால், அவனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாட வேண்டும்.” என மைக்பிடித்து அங்கிருந்த அனைவருக்கும் சொல்லிக்கொண்டிருந்தனர். இதற்கும் ஆதரவு தருவதாக கோஷங்கள் எழும்பின.

4.33 மணி : “காவல்துறையினர் அடித்தால் திருப்பி அடிப்போம். அன்பால், திருப்பி அடிப்போம்” என கோஷங்கள் எழுப்பினர்.

4.40 மணி : மெரினாவில் இருந்து கலைந்து செல்லும்படி காவல்துறையினர் சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது. அதில், ‘மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள். இந்தப் போராட்டமானது மிகவும் கட்டுப்பாட்டுடனும், அமைதியாகவும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி நடைபெற்றது.

தமிழக அரசின் முயற்சியால், ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நடைபெற்றது. போராட்டத்தின் குறிக்கோள் நிறைவேறியுள்ளதால் அனைவரும் மெரினா கடற்கரையிலிருந்து உடனடியாக கலைந்து செல்லும்படி, சென்னை பெருநகர காவல்துறை உங்களை கேட்டுக்கொள்கிறது’ என செய்தி வெளியானது.

ஆனால், இந்த செய்தி மாணவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. அப்போதும் போராட்டக் களத்தில் இருந்தவர்கள் “நம் பாதுகாப்புக்கு மட்டுமே காவல்துறையினர் வந்துள்ளார்கள். அவர்கள் நம் நண்பர்கள். அவர்களுக்கும் குடிக்க தண்ணீர் தாருங்கள்… உணவு தாருங்கள்…” என அன்போடு ஒருவர் மைக்கில் சொல்ல… உடனே காவல்துறையினரைத் தேடித்தேடி தண்ணீர் பாட்டில்களும், பிஸ்கட் பாக்கெட் போன்றவற்றையும் கொடுத்தார்கள். காவல்துறையினரும் அதை வாங்கிக்கொண்டார்கள்.

4.50 மணி : மெரினா முழுவதிலும் காவல்துறையினர் சூழ்ந்தார்கள். விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, சென்னைப் பல்கலைக்கழகம், லைட் ஹவுஸ் என அனைத்து இடங்களிலும் காவலர்களுக்கு வழிமுறைகள் தரப்பட்டன. அவர்கள் கைகளில் லத்திகளும் கொடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் கூட்டத்தில் இருப்பவர்களிடம் “யாரும் எழுந்து நிற்காதீர்கள். உட்காருங்கள்” என்றவாறு நின்றவர்களை மாணவர்களே அமர வைத்தனர். மேலும், கர்ப்பிணிப்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் இருப்பதால் கூட்டத்துக்குள் போலீஸ் நுழையக்கூடாது.” என காவல்துறையினருக்கு வேண்டுகோளும் விடுத்தனர்.

5 மணி : முக்கிய காவல்துறை அதிகாரிகள் மெரினா முழுவதும் அவர்களது சைரன் வாகனத்தில் சுற்றிச்சுற்றி வந்தனர்.

5.30 மணி : காவல்துறையினரிடம் தரப்பட்ட லத்திகள் அவர்களிடம் இருந்து திடீரென வாங்கப்பட்டன. ஆனால், பெரியார் மாளிகைக்கு எதிரில் திடீரென நான்கு காவலர்கள் வேகமாக கூட்டத்துக்குள் நுழைய மாணவர்கள் பெரும் கூச்சல் போட்டார்கள். உடனே, போலீசார் பின் வாங்கினார்கள்.

6.00 மணி : இரண்டு குழுக்களாக மெரினாவில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். விவேகானந்தர் இல்லத்திற்கு நேர் எதிரிலும், பெரியார் மாளிகைக்கு நேர் எதிரிலும் இருந்தனர். அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பெரியார் மாளிகைக்கு எதிரில் அமர்ந்திருந்த மாணவர்கள் முன்தான் முதலில் காவல்துறை சென்றது.

மைக் கட்டிய ஆட்டோவில் காவலர் ஒருவர், “மாணவக் கண்மணிகளே… இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் வென்றுவிட்டீர்கள். நேற்றே ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகம் முழுவதும் நடந்தது. கலைந்து செல்லுங்கள். எங்கள் கைகளில் லத்தி கூட கிடையாது.” என்று சொல்லியவாறே மாணவர்களை நெருங்கினார். மாணவர்கள் வைத்திருந்த மைக்குகள் பிடுங்கப்பட்டன. மைக் செட்டுகளும் உடனடியாக அகற்றப்பட்டன. மைக் செட்காரரை மிரட்டி அகற்றினார்கள்.

6.05 மணி : கொஞ்சம் கொஞ்சமாகக் காவல்துறையினர் கூட்டத்துக்குள் நுழைந்தார்கள். ஐந்து நிமிடம் கூட அவர்களுக்கு அவகாசம் தரவில்லை போலீஸ்காரர்கள். அதற்குள் மாணவர்கள் ஒருவருவருக்கு ஒருவர் கைகள் பற்றி இறுக அணைத்து அமர்ந்தார்கள். ஆனால் அவர்களை மூர்க்கமாகத் தரதரவென இழுத்து தூக்கி வீசினார்கள். கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலரை பெண் காவலர்கள், தலைமுடியைப் பிடித்து இழுத்தார்கள். கன்னத்தில் அறைந்தார்கள். மீடியாகாரர்கள் இதனைப் படம் பிடிக்க முயற்சிக்க, ‘அந்தப் பக்கமா போங்க…’ என்று போலீஸார் ஆக்ரோஷ குரல் கொடுத்தார்கள்.

6.15 மணி : பெரியார் மாளிகை முன் அமர்ந்த மொத்தக் கூட்டத்தையும் கலைத்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் ஓடிப்போய் விவேகனாந்தர் இல்லத்திற்கு எதிரில் அமர்ந்திருந்த மாணவக் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டார்கள். முன்பைவிட இரண்டுமடங்கானது கூட்டம்.

6.25 மணி : மைக் கட்டிய வேனில் ஏறிய காவலர், மொத்த பிரச்னையையும், ஆரம்பத்தில் இருந்து சொல்லி, தமிழக அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது ஜல்லிக்கட்டுக்கான அவரச சட்டம் என்றாலும் நிரந்தர சட்டம்தான்’ என்று பாயிண்ட் பை பாயிண்டாக பேசினார்.

சின்னச் சத்தம் கூட இல்லாமல் அனைத்தையும் கேட்ட மாணவர்கள். “நாங்கள் கலைந்து செல்கிறோம். ஆனால், எங்கள் சட்ட வல்லுனர்களிடம் பேச கொஞ்சம் அவகாசம் தாருங்கள். குறைந்தபட்சம் அரைநாளாவது வேண்டும் என்றார்கள்.

இதற்குக் காவல்துறையின் உயர் அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்க.. ‘குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தாருங்கள்’ என கெஞ்சினார்கள். கேட்கவில்லை. அதற்குள் கூட்டத்துக்குள் காக்கிகள் சூழ்ந்தன. கைகளில் லத்திகள் இல்லை என்றாலும் கண்மூடித்தனமாக மாணவர்களைக் கையாண்டது காவல்துறை.

கர்ப்பமாக இருந்த ஒரு பெண்மணியையும் சேர்த்து கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்களைக் கைகளைப் பிடித்து இழுத்து தள்ளினார்கள். அப்போது சில காக்கிகளிடம் மட்டும் லத்திகள் இருந்தன. மீடியா கவரேஜ் இல்லாத இடத்தில் அவர்கள் தங்கள் லத்திகளைப் பயன்படுத்தத் தயங்கவில்லை.

மாணவர்கள் கடலை நோக்கி ஓடினார்கள். அவர்களைத் துரத்திக்கொண்டு காவல்துறையும் ஓடியது. சில மாணவர்கள் காவல்துறையின் அடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கதறி அழுதார்கள்.

6.30 மணி : இதை கவரேஜ் செய்ய கடற்கரை நோக்கி ஓடிய மீடியாவை தடுத்து நிறுத்தினார் ஒரு முக்கிய காவல்துறை அதிகாரி. முக்கியமாக, ‛விகடன்’ என்றதும் கட்டாயமாக உள்ளே விட மறுத்தார்கள். வாக்குவாதம் ஆனது. வேறு மீடியாவைச் சேர்ந்தவர்கள் என்ன பிரச்னை என கேட்கவும்… அவர்கள் விலகிச் சென்றார்கள்.

6.40 மணி : கடற்கரை நோக்கி ஓடிய மாணவர்களைப் பிடிக்க முயல… ‘நாங்கள் கடலுக்குள் சென்று தற்கொலை செய்வோம்.” என அவர்கள் கூட்டமாய்க் குரலெழுப்ப, காவலர்கள் பின்வாங்கினார்கள். அதற்குள் ஒட்டுமொத்த கூட்டமும் கடற்கரைக்கு சென்றுவிட்டது. காக்கிகள் அருகில் வந்தாலே, கடலுக்குள் காலடி எடுத்து வைத்தனர்.

6.50 மணி : மெரினாவுக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும் தடுப்பரண்கள் அமைத்துத் தடுத்தது காவல்துறை. ஐஸ் அவுஸ் வழியாக மெரினாவுக்கு வரும் வழியில் பலரும் குவிந்தாலும் இவர்களை மீறி ஒரு அடி கூட முன் வைக்க முடியவில்லை.

7.30 மணி : லைட்அவுஸ் அருகில் வசிக்கும் மக்கள் கும்பலாக கடற்கரை ஓரமாக… போராட்டக்காரர்களை நோக்கி ஓடி வந்தனர். அவர்களைத் தடுக்க காவல்துறையினரால் முடியவில்லை. கூட்டம் அதிகமானது. சிலர் தள்ளுமுள்ளுவில் மயங்கி விழ… உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

8.30 மணி : படகுகளில் உணவுகளும், குடிநீரும் போராட்டகாரர்களுக்காக வந்தன. அங்கிருந்த பெண்களுக்காக அங்கு கிடந்த தார்ப்பாய்களை எல்லாம் எடுத்து சிலர் உடனடிக் கழிப்பறைகள் அமைத்துத் தந்தார்கள்.மெரினா கடற்கரைச் சாலைகளில் இருந்து யாராவது ஒருவர் ஓடிவந்தாலே, அவர்களைப் பார்த்து மொத்தக் கூட்டமும் “வா… வா…” என வரவேற்றது. அவர்களில் சிலரைக் காவல்துறை லத்தியால் விரட்டி அடித்தது.

9.00 மணி : காவல்துறையினர் சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், யாரும் கேட்பதாக இல்லை. காவல்துறையினர் பின் வாங்கினார்கள்.

10.15 மணி : அனைத்து ஊர்களிலும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வன்முறை தூண்டி விட்டதாக செய்தி பரவியதும்… பீட்டாவுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் போட்டனர்.

10.30 மணி : மாணவர்கள் அமைதியாக அமர… காவலர்களும் அவர்களைச் சுற்றி நின்றனர். சிலருக்குத் தண்ணீர் எடுத்துவர அவர்களை தடுத்தது போலீஸ். இதனால், ஆத்திரம் அடைந்தவர்கள் வெறித்தனமாக கத்தவும்… தண்ணீரை எடுத்துச் செல்ல அனுமதித்தது போலீஸ்.

11:30 மணி : லாரன்ஸ் வர இருப்பதாக தகவல் பரவியது. அதற்குள் திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் தீ வைக்கப்பட்ட செய்தி அங்கு இருக்கும் காவலர்கள் மத்தியில் பரவியது. சிறப்பு காவல் படையினர் வந்து சேர்ந்தார்கள்… மெரினாவில் நின்று கொண்டிருந்த அனைவருக்கும் லத்திகள் வேக வேகமாகத் தரப்பட்டன. “கையில மட்டும் எவனாது சிக்கட்டும். அடி பொளந்துட வேண்டிதான்.” என்ற ரீதியில் காவல்துறையினர் பேசுவதையும் கேட்க முடிந்தது. தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் சிலர் மயங்கி விழுந்தனர். ஒருசிலர் கலைந்து சென்றனர்.

11.50 மணி : மீண்டும் போராட்டக்கார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது போலீஸ். “அரசின் சார்பில் யாராவது வந்து பேச வேண்டும். அல்லது ராகவா லாரன்ஸ் வந்து தங்களிடம் பேசினால் கலையத் தயார்.” என நிபந்தனை வைத்தனர்.

12.30 மணி : மெரினா வந்தார் லாரன்ஸ். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. “போராட்டத்தில் வெற்றி அடைந்ததைக் கொண்டாட வேண்டிய நேரம் இது. தயவு செய்து போராட்டத்தைக் கைவிடுங்கள்.” என்றார். ஆனால் யாரும் அசைய மறுத்தார்கள்.

1.30 மணி : மீண்டும் காவல்துறையின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பல்வேறு இடங்களிலும் வன்முறை வெடிக்கிறது என கூறியும் கலைய மறுத்தார்கள். ‘நாங்கள் இரண்டு மணி நேரம் தானே தொடக்கத்தில் கேட்டோம். தந்தீர்களா?” என்று கோபக்குரல் எழுப்பினார்கள்.

2.30 மணி : சிலர் தண்ணீர் மட்டும் கொண்டு செல்வதற்கு காவல்துறையினர் அனுமதி தந்தனர். காவல்துறையை சேர்ந்த சிலர் மஃப்டியில் இருப்பதாக கூட்டத்தில் தகவல் பரவியதால் சின்ன சலசலப்பு ஏற்பட்டது.

3.15 மணி : ‘நாம் தமிழர்’ கட்சியின் சீமான் வருகை தந்தார். ஆனால், போராட்டக்காரர்கள் பேச மறுத்தனர்.

3.45 மணி : ஆர்.ஜே.பாலாஜி வந்தார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரும் கிளம்பினார்.

5.15 மணி : ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் முன்வடிவு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தடையை முற்றிலும் நீக்கும் இந்த ஜல்லிக்கட்டு சட்ட மசோதா, பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

5.45 மணி : முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், ஜல்லிக்கட்டு பிரச்னைகளை பற்றியும், அதன் சட்டச் சிக்கல்களையும் விரிவாக விளக்கினார். ‘போராட்டத்தைத் தொடர்வதா? வேண்டாமா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் சொன்னார். அதன்பின்னரும் போராட்டக்காரர்கள் தொடர்வதாக சொன்னார்கள்.

6.15 மணி : ஒருசிலர் அரி பரந்தாமன் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு கோரி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மாபெரும் அறப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்களின் ‘மெரினா புரட்சி’ வரலாற்றில் அழுந்தப் பதியப்பட்டது.

– Vikatan

**

கொதிக்கும் காட்சிகள்…! பெண்ணின் உடையை கிளித்த பொலிசார்? ரத்தவெள்ளத்தில் பெண்…

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெண்களை வெளியேற்ற முயன்ற பொலிஸார் அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களின் ஆடைகளை பொலிஸார் கிழித்ததாக மாணவர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னை மெரினாவில் 7வது நாளாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் என லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் நேற்று முதலே பொலிஸார் குவிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை ஏராளமான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்கள், தாய்மார்கள் என்றும் பாராமல் பொலிஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிதறியோடியுள்ளனர்.

தடியடியோடு நிறுத்தாமல் பெண்கள் மீது கைவைத்து அவர்களின் ஆடைகளை கிழித்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், ஒரு பெண்ணுக்கு தலை உடைந்து ரத்தம் பீரிட்டு வந்ததில் அவர் சுயநினைவு இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது மட்டுமல்லாது, மதுரை அலங்காநல்லூரிலும், போராட்டத்தை கலைக்க பொலிசார் தடியடி நடத்தி வயதான முதியவர்கள், பெண்கள் என கூட பார்க்காமல் தங்களது காட்டுமிராண்டி தனத்தினை வெளிபடுத்தியுள்ளனர்.

கர்ப்பிணி பெண்ணின் கை உடைப்பு..உயிருக்கு போராடும் இளைஞர்கள்! பொலிசின் அராஜகம்?

ஜல்லிக்கட்டு தடை மீட்புக்கு எதிரான போராட்டம் கடந்த ஆறு நாட்களாக சென்னை மெரினாவில் மக்கள் அணி திரள தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த நிலையில் ஏழாம் நாளான இன்று அதிகாலை தொடங்கி மக்கள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். தடியடிக்கு பயந்து கடலுக்கும் கரைக்குமாக மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர்.

திருவல்லிக்கேணி மற்றும் அதைச் சுற்றி இருக்கும் குடிசைப் பகுதிகளுக்குள் விரட்டியடிக்கப்பட்டவர்கள் சென்றதை அடுத்து அங்கிருந்தும் மக்கள் துரத்தியடிக்கப்பட்டனர்.

ஆனாலும் எதுவரை துரத்தி அடிக்கப்பட்டனரோ… அந்த எல்லையில் அமர்ந்து மக்கள்விடாமல் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களுடன் லூர்துபுரம், சிவராசபுரம், நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதி மக்களும் ஒன்றிணைந்தனர். போராட்டக்காரர்கள் துரத்தப்பட்ட இடத்தில் அப்படியே அமர்ந்ததால்… சென்னைக்குள்ளும் வெளியேயும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையின் மத்தியப் பகுதி அருகே சிட்டி சென்டரில் போராட்டத்துக்கு அமர்ந்த மாணவர்களும் மக்களும், ‘‘தொடர்ந்து அறவழிப் போராட்டத்தில் மட்டுமே ஈடுபட்டுவந்த மாணவர்கள் மீது தேவையற்று வன்முறை’’ ஏவப்பட்டதாகத் தெரிவித்தனர்.

அப்போது பேசிய ஒரு மாணவி, “கடந்த ஆறு நாட்களாக மாணவர்கள் நாங்கள் தொடர்ந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டோம்; மெரினா முழுவதும் குப்பைகளைப் பொறுக்கினோம்; சாலைப் போக்குவரத்தைச் சரிசெய்தோம்; பிரச்னை ஒன்றுகூட நிகழாமல் கண்ணியமாக நடந்துகொண்டோம்.

அப்படிப்பட்ட மாணவர்களை இப்படியா காவல்துறையினர் நடத்துவது?. நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று எங்களின் மீதுதான் காவல் துறை, இன்று தடியடி வன்முறையை ஏவியுள்ளது. மேலும் நடுக்குப்பம் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரது கையில் பலமாகத் தாக்கியது.

பெண் ஒருவர் தாக்கப்பட இருந்த நிலையில் அவரைச் சுற்றி நின்ற நபர்கள் மீது தாக்கினர் போலீஸார். அமைதியாக இருந்த எங்களிடம் ஏன் திடீரென அராஜகத்தை ஏவியது போலீஸ்.

இதற்கு உடந்தையாக இருந்த மத்திய – மாநில அரசுகள் உடனடியாக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். குறிப்பாக பிரதமர் மோடி ஒவ்வொரு தமிழனிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என ஆவேசமாகப் பேசினார். கூடியிருந்த மக்களுடன் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஆரவாரமாகக் குரல் கொடுத்தனர்.

சேரன் பற்ற வைத்த பொறி

நேற்று நடிகர் சங்கம் நடத்திய ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் இயக்குனர் சேரன் தமிழ் திரைப்பட கலாச்சார பாதுகாப்புக் குழு சார்பாக ரஜினி முன்னிலையில் ஒரு மனுவை கொடுத்தார். அதில் நான்கு கோரிக்கைகள் இருந்தன.

“பீட்டா அமைப்பில் இருக்கும் நடிகர்,நடிகைகளை அதிலிருந்து உடனடியாக வெளியேற நடிகர் சங்கம் சொல்லவேண்டும்; அதை கேட்காது நீடிக்கும் நடிகர், நடிகைகளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும்; இப்போது வெளியே தெரியாது. பீட்டாவில் இருக்கும் நடிகர் நடிகைகளின் விபரங்கள் பின்னால் தெரிந்தால், அவர்களுக்கு ஒத்துழைப்பு தரக்கூடாது ; தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் என்ற பெயரை ‘தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம்’ என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும்” ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை தந்தார் சேரன்.

ரஜினி, ‘ஏன் பெயர் மாற்றம் செய்யலை?” என்று விஷாலிடம் கேட்க,

“வேலை நடந்துகொண்டு இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்.

காலை வாரிய பிரபலங்கள்!

இத்தனை நாட்களாக அமைதியாக நடந்து வந்த போராட்டம் இன்று வன்முறை போராட்டமாக சித்தரிக்கப்படுகிறது.

மாணவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை. ஒரு வேளை காவல்துறை நியமித்த ஆட்கள் கலவரத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அமைதியான போராட்டத்தை உடனடியாக கலைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு ஏன் வந்தது.

எல்லாமே திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆதி திடீரென நேற்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட்டி விலகுவதாக அறிவிக்கிறார்.

அவருக்கு விவேக் ஆதரவு தெரிவிக்கிறார். அவர் சொன்னதையே ஆர்.ஜே.பாலாஜியும், ராகவா லாரன்ஸ்சும் அப்படியே ஒப்பிக்கின்றனர்.

காவல்துறை குண்டுகட்டாக அமைதியாக போராடியவர்களை தூக்கிச் செல்கிறது. போராட்டம் உச்சத்தில் இருந்தபோது ஆதரவு தெரிவித்த, பிரபலங்கள் பலரும் இல்லை.

கூட்டத்தை பார்த்து சேர்ந்த கூட்டம் கலைந்தது. உண்மையாக போராடியவர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.

சிலர் பாதி மனதுடனேயே கலைந்து செல்கின்றனர். போராட்டத்தை உண்மையாக ஆதரித்த பல ஊடகவியலாளர்களை கடந்த 2 நாட்களாக பார்க்க முடியவில்லை.

ஆக போராட்டம் வெற்றியடைந்துவிட்டது முழுமைபெறாமல் ஒடுக்கப்பட்டு விட்டது என்பது தான் உண்மை.

ஜல்லிகட்டு நிரந்தர சட்டம், பீட்டா மீதான தடை என எதுவும் நடக்கவில்லை. போராட்டக்காரர்களால் கதாநாயகர்களாக பார்க்கப்பட்டவர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாகவே மாணவர்களின் மனநிலை உள்ளது. இதற்கு அரசியல்வாதிகளே பரவாயில்லை என்கின்றனர் மாணவர்கள்.

**

ஜல்லிக்கட்டில் ஒன்றுபட்டதால் தமிழர் மரபு காப்பாற்றப்பட்டது!

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் எங்கும் சூடேற்றின.

தமிழர்களின் மரபு வழிப்பண்பாட்டு நிகழ்வான காளை அடக்குதல் என்ற ஜல்லிக்கட்டை தடுத்ததால் இளங்காளைகள் சிங்கங்களாகப் பாய்ந்தன.

அட! கட்டுக்கடங்காத காளைகளையே பாய்ந்து அடக்கும் எங்களை அடக்க முடியுமா? என்பது போல நம் தமிழகத்து இளைஞர்கள் பேரணியாகத் திரண்டு எழ, அதன் உணர்ச்சிப் பிரவாகமாக எங்கள் மண்ணிலும் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான கோசங்கள் எழுந்தன.

ஜல்லிக்கட்டில் அப்படி என்னதான் உண்டு என்று யாரேனும் கேட்கலாம்.தமிழ் இனத்தின் வீரத்தை பறைசாற்றுகின்ற நிகழ்வுதான் ஜல்லிக்கட்டு.

எனவே அந்த ஜல்லிக்கட்டை தடை செய்ய அனுமதியோம் என்று வீறுகொண்ட இளைஞர்கள் போர்க்கொடி தூக்க, தமிழகம் முழுவதும் ஒன்று சேர்ந்து ஒரணியாகி, பேரணியாகி எழுக தமிழ் என்று ஆர்ப்பரிக்கலாயிற்று.

இதன் முடிவாக ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இங்கு தடைவிதிக்கப்பட்டது ஜல்லிக்கட்டுக்காயினும். அதற்காக எழுந்த இளைஞர்களின் ஆவேசமும் இளைஞர்களின் பின்னால் தமிழகம் முழுவதும் திரண்டதும் கவனிக்கத்தக்க விடயமாகும்.

கூடவே தமிழகத்து இளைஞர்களின் ஒற்றுமை என்ற மாபெரும் சக்தி தமிழகம் என்ற எல்லை கடந்து உலக நாடுகளிலும் வியாபகம் பெற்றது.

ஆக, தமிழினம் ஒற்றுமைப்பட்டதன் விளைவாக தமிழர்களின் மரபுரீதியான – தமிழர்களின் வீரம் பொருந்திய நிகழ்வை மீண்டும் அமுல்படுத்த வேண்டிய தேவை பாரதத்திற்கு ஏற்பட்டது. இதற்காக சில விசேட சட்டங்களும் கொண்டு வரப்படலாயிற்று.

ஜல்லிக்கட்டுக்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள் தேவைதானா என்ற கேள்வியும் ஜல்லிக்கட்டு நிகழ்வில் ஜீவகாருண்யம் கசங்கிப்போகிறது. அல்லவா? என்ற கருத்தும் இருக்கலாம்.

இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த வாதப் பிரதிவாதங்கள் பேச்சளவில் இருந்துவிட்டுப் போகலாமே அன்றி செம்மொழியாம் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழினத்தின் பண்டைய நிகழ்வாகவும் தமிழர்களின் வீரத்தை – இளைஞர்களின் துணிச்சலை செப்புகின்ற பாரம்பரிய நிகழ்வாகவும் இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டை தடைசெய் வது என்பதும் அது கண்டு பேசாமல் இருப்பதும் தமிழ் இனத்திற்கு அவ கெளரவத்தை கொடுக் கக்கூடியது.

ஆகையால் தமிழகத்து இளைஞர்களும் அவர்களோடு இணைந்து தமிழகத்து மக்களும் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றி தந்தது. தமிழினத்தின் மரபுவழிப்பண்பாடு பாதுகாக்கப்பட்டது.

இந்த திருப்தியோடு தமிழ்மக்கள் ஒற்றுமைப்பட்டால் எதையும் சாதிக்கமுடியும் என்ற செய்தி சொல்லப்படுகின்றது. கூடவே ஜல்லிக்கட்டு மீதான தடை தமிழினத்தை உசார்ப்படுத்தியுள்ளது.ஒற்றுமைப்படுத்தியுள்ளது.

தமிழர் வீரத்தின் பக்கம் உலக நாடுகளை ஈர்த்துள்ளது என்ற உண்மைகளை நாம் அடிக்கடி நினைக்க வேண்டும்.

இந்த நினைப்பு எங்களுக்கு மிகவும் பலமானதாக இருக்கும்.

– Valampuri

Advertisements