எங்கு குற்றச்செயல்கள் இடம்பெற்றாலும் உடனடியாக முன்னாள் போராளிகளை கைது செய்யும் வழக்கத்தை பொலிஸாரும் இராணுவத்தினரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகரிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகர் போல் மற்றும் அவரது பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் யாழ்பாணத்துக்கு வருகை தந்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் எம்முடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். வடமாகாண மக்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்ய முடியுமென கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு போரினால் கணவனை இழந்த விதவை பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் முகமாக உரிய செயற்திட்டங்களைவகுக்க அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என தெரிவித்தேன்.

முன்னாள் போராளிகளிகள் தொடர்பாக பல முக்கிய விடங்களை தெரிவித்திருந்தேன் அதாவது அவர்களின் வாழ்வாதார உதவிகளை செய்து மீண்டும் அவர்களை சமூகத்துடன் இணைக்க வேண்டியுள்ளது.முன்னாள் போராளிகளுக்கு உரிய முறையில் முழுமையான புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை மீளவும் தமது வாழ்க்கையினை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் பயிறிசிகள் என்பன புனர்வாழ்வின் போது; செய்துகொடுக்கப்படவில்லை.

ஏதாவது குற்றங்கள் நடந்தால், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் முன்னாள் போராளிகளையே கைது செய்து செல்கின்றனர். இவ்வாறான கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு வாழ்கையில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்தேன். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த காலங்களில் பல உதவித்திட்டங்களை வழங்கி வந்துள்ளோம். மீண்டும் இவ்வாறான உதவிகளை வழங்குவோம் என உறுதியளித்திருந்தனர். மேலும் சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் பேணுவதற்கும் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமென கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

போர்க்குற்றங்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் நடைபெற வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட்டு நடந்த பிழைகளுக்கு நீதி கிடைத்தால் மாத்திரமே சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் உருவாக்க முடியும். அத்துடன் அரசியல் ரீதியான தரவேண்டிய உரித்துக்களைப் பெற்றுத்தந்தால் மாத்திரமே எம்மால் ஏனைய விடயங்களில் கரிசனை கொள்ள முடியும்.
அரசியல் ரீதியான உரித்துக்களை வழங்குவதற்கு தென்பகுதியினர் தடையாக உள்ளனர்.இதை மாற்றுவதற்கு , அதிகார பகிர்வு எவ்வாறு நாட்டிற்கு நன்மைகளைப் பயக்கும் என்பதுபற்றி பல்கலைக்கழகங்களிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபைஉறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வு செயற்திட்டம் மேற்கொண்டு நாடு முழுக்க நன்னமை பயக்கும் என்ற எண்ணத்தை விதைத்து விட்டால் வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

முதலமைச்சர் நிதியம் தொடர்பாக அரசு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை அரசு ஜெனீவா உடன்படிக்கையில் ஏற்றகொண்டது போல் இங்கு நடந்து கொள்கிறார்களா என தொடர்சியாக உலகநாடுகள் அவதானிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு எடுத்துக்கூறினேன் என தெரிவித்தார்.

Advertisements