தற்பொழுது எழுச்சி பெற்றிருக்கும் ஜல்லிக்கட்டுத் தடைக்கெதிரான போராட்டமானது மக்களின் ஒட்டுமொத்த கடந்த கால கோபத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

காவேரிப்பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை, சென்னை வெள்ளப் பேரழிவு, ஈழப் போராடத்தின் தோல்வி, தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் என அனைத்து காரணிகளின் பின்னிருக்கும் கோபத்தின் ஒரு வகை எழுச்சியாகவுமே இதனைப் பார்க்க வேண்டும்.

இதன் பின்னால் உள்ள நுண் அரசியலை மக்கள் உணர்ந்து கொண்டு, இந்த எழுச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துதல் பற்றி சிந்திப்பது மிக மிக முக்கியமானதொன்றாகும்.

தொண்ணூறுகளில் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்திய பொருளாதார சீர்திருத்தம் தொடங்கிய காலத்தில் இருந்தே சாதாரண மக்களின் கோபம் கூடுதல் வளர்ச்சி காணத் தொடக்கி விட்டது.

காப்ரேட் நிறுவனங்களின் வருகை அதனால் விவசாயிகளுக்கு மற்றும் உள்ளூர் கைத் தொழில்களுக்கு ஏற்பட்ட நட்டம், விவசாயிகளில் தற்கொலை, விளைச்சலின்மை,விலைவாசி உயர்வு, காப்ரேட் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பு போன்றன சாதாரண அடித்தட்டு மக்களை கோபம் கொள்ளச் செய்தன.

அந்தக் கோபத்தின் ஒரு வகை பரினாமமே இன்றைய இந்த மக்கள் புரட்சி ஆகும். மாட்டை வைத்து நடாத்தப்படும் இந்த அரசியல் தமிழகத்தில் காலூன்ற பாஜக கையில் எடுத்துக் கொண்ட ஒரு ஆயுதமாகும்.

மக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் இந்து தத்துவ நடவடிக்கைகளை கையிலெடுத்து அதனை குழப்பி அதன் ஊடாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு அல்லது கலவரத்தை ஏற்படுத்தி அதன் பின்னர் தமது கட்சியினை காலூன்ற வைப்பது, மக்களுக்கு நெருக்கமான கலாச்சார அடையாளங்களை அபகரித்து இந்துதத்துவம் நோக்கி திருப்புவது, இதுதான் பாஜாகாவின் வாக்கு வெல்லும் திட்ட மிடல்கள்.

குஜராத் படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, பிகாரில் இந்துதத்துவ மேலாண்மை போன்றவற்றின் பின்னணி அரசியல் என்பதும் இதுதான்.

விலங்குகள் நல வாரியத்தின் மாடுகள் மீதான திடீர் அக்கறை, மாட்டுக்கறி தடை, ஜல்லிக்கட்டு தடை, பொங்கல் விடுமுறை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு பின் சேர்த்தமை என்பன ஒன்றுடன் ஒன்று பிணைந்து காணப்படும் பாஜாகாவின் மோடி அரசின் தந்திர அரசியல் ஆகும்.

ஆகவே மக்கள் இதன் பின்னால் உள்ள அரசியலின் உண்மைத் தன்மையை உணர்ந்துகொண்டு மோடியின் வலைக்குள் சிக்காமல் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

இல்லையேல் ஏதேனும் ஒரு நாசாகார விளைவுகளை ஏற்படுத்தி இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் மோடியின் மக்கள் விரோத அரசு.

அதே நேரத்தில் தடைக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் ஊடாக மிருக வதையை நாம் ஆதரிக்கவில்லை. ஜல்லிகட்டு மட்டுமல்ல மிருகத்தை பண்ணையில் வைத்திருப்பது கூட ஒரு வகை மிருகவதை தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இறைசிக்காக மாடு வெட்டப்படுவது கூட ஒரு வகை மிருக வதைதான். அனால் அதை தடை செய்து பலரது வாழ்வாதாரத்தை சிதைக்க முடியாது. இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதையும், ஜல்லிக்கட்டுக்காக மாடுகள் சித்திரவதைப்படுத்தப் படுவதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது.

ஆனால் இங்கும் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் சம்மந்தப்படிருப்பதை நாம் அவதானிக்க வேண்டும். இது தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, மரபு என்ற காரணங்களை மட்டும் முதன்மைப்படுத்துவதும் தவறே

கலாச்சாரம் என்பது மாறிக் கொண்டே இருப்பது, காலவோட்டத்தில் பழைய கலாச்சாரங்கள் கைவிடப்பட்டு புதிய கலாச்சார அடையாளங்கள் உருவாகுவது தவிர்க்க முடியாதது.

ஜல்லிக்கட்டு எல்லா நகரங்களிலுமா நடக்கிறது? கலாச்சார அடையாளம் வாழ்வாதாரத்துடன் இணைந்திருக்கும் போது அது காத்துக்கொள்ளப்படுகிறது.

இதே கலாச்சார அடையாளம் வாழ்வாதாரத்திற்கு எதிரியாக இருப்பின் எதிர்க்கப்படும் அல்லது தேவைப்படாமல் வரலாற்றில் மறைந்து போகும்.

ஜல்லிக்கட்டை நடத்துவதற்குரிய மக்களின் உரிமைக்காக நாம் போராடுவது சரியே. தமிழ் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த ஒரு விசயத்தை எழுந்தமானதாக தடை செய்ய மத்திய அரசுக்கு நீதி மன்றத்துக்கு உரிமையே இல்லை.

இது மக்கள் வரலாறு சார்ந்த விடயமாகவும் இருக்கிறது. தடை என்பது அரசின் கொடும் கரம். அந்தக் கரத்தின் அடி ஒட்டு மொத்த மக்கள் மேலும் விழும்போழுது அவர்கள் எழுச்சி கொள்வது தவறில்லை.

மிருக வதைக்கு அப்பாற்பட்ட அரசியல் இங்கிருப்பதை இங்கு கவனிக்க வேண்டும். தமிழர்கள் எல்லாம் மிருக வதை விரும்பும் காட்டு மிராண்டிகள் என்பதுபோல் சிலர் வாதிப்பது நகைப்புக்கிடமானது.

மிருக வதைக்கு எதிராக இயங்குவதாக சொல்லும் விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற மக்கள் சார்ந்த அமைப்புகள் அல்ல. அவை அரசுகள் சார்ந்த மிகப் பெரும் நிறுவனத்தின் நலம் சார்ந்த அமைப்புகளாகும்.

மிருகங்களில் அக்கறை உள்ளவர்கள் வழங்கும் பணத்தை சுருட்டி எடுக்கும் இவர்கள் செய்வது என்ன ? பண்டங்களை நுகரும் சாதாரண மக்கள் வதை எதிர்பாளர்கள்.

தமது பண்டங்கள் நுகர்தலுக்குரியவை என நிறுவும் போட்டியால் பல நிறுவனங்களும் அரசுகளும் பீட்டா போன்ற அமைப்புகளுக்கு பண உதவி செய்கின்றன.

இந்தியாவில் இது வேறு பரிணாமம் கொள்கிறது. அங்கு இந்துதத்துவ அதிகாரம் இதன்மூலம் தன்னை நிறுவிக்கொள்ள முயல்கிறது.

இவ்வாறன அமைப்புகள் மனிதர்கள் கொத்துக் கொத்தாக சாகும்போது கவலைப்படாமல் மாடுகள் சாகும்பொழுது மட்டும் கவலைப்படுகின்றன. இந்தியா முழுவதும் மாடுகள் மட்டுமல்லாமல் எத்தனையோ விலங்குகள் வதைக்கப்படுகின்றன.

அது பற்றி கரிசனை ஏதும் கொள்ளாமல் மாட்டை பற்றி மட்டும் கவலை கொள்ளும் இவ்வமைப்புகளின் நோக்கம் உண்மையாகவே மாட்டைப் பற்றியதல்ல என்பது தெளிவாகின்றது.

குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்றனவற்றின் ஊடாக மாட்டை புனிதப்படுத்தும் பாஜக அரசின் உள்நோக்கம் என்பது பிராமண அரசியலை நிலைநிறுத்தல், மாட்டுக்கறி உண்ணும் தலித் மக்களுக்கு எதிரான போக்கை விதைத்தல், இதன் ஊடாக இந்துத்ததுவத்தை தமிழ் நாட்டில் வேரூன்றச் செய்து அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுதல் ஆகும்.

இதுபோன்ற மக்கள் விரோத அரசு தமிழ்நாட்டில் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். அதற்கு மக்கள் இன்னும் இன்னும் ஒருங்கிணைந்து போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும்.

தமிழ் நாட்டு மக்கள் போராட்டத்துக்கு தயாராக உள்ளனர். அதன் தற்போதைய இந்த மக்கள் திரட்சி என்பது தமிழ்நாட்டு அரசியல் புதிய திசையில் பயணிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதைக் காட்டுகின்றது. ஆனால் அதன் தற்போதைய பிரச்சனை தலைமைப் பற்றாக்குறையே.

அரசியல் தெளிவுடைய சரியான தலைமை இல்லாதவிடத்து இந்தப் போராட்டம் சிதறிவிடக்கூடும் அல்லது ஏதேனும் ஒரு வலதுசாரி கட்சியினை அல்லது அரசியல்வாதியினை நோக்கி சாயக் கூடும்.

அது பின்னர் வாக்கு வங்கிக்காக பயன்படுத்தப்படக்கூடும். அவ்வாறில்லாமல் இந்தப் போராட்டமானது அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும், அமைப்பு மயப்படுத்தப்படவேண்டும்.

அதன் ஊடாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படுதல் வேண்டும். இல்லையெனின் நோக்கங்கள் ஏதும் நிறைவு பெறாமல், முழுமையான வெற்றி எதுவும் பெறாமல் வெறுமனே அனைவரும் கூடிக் கோஷமிட்டு பின்னர் கலைதல் போன்றதாகிவிடும்.

இங்கு திரண்டு இருக்கும் மக்கள் திரட்சி என்பது மக்களின் பலத்தை காட்டும் சக்தியாக திறந்திருக்கிறது. இது அதிகாரத்தின் பலத்தை எடுக்கும் சக்தியாக மாற வேண்டும்.

இந்த திரட்சி அமைப்பு மயப்படும்போதுதான் இப்போராட்டமானது அடுத்த கட்டத்தை நோக்கி நகரக்கூடியதாக இருக்கும்.

மேலும் அவ்வாறு தோற்றுவிக்கப்படும் இந்த அமைப்பானது சனநாயக முறையில் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வையும், அரசியல் கலந்துரையாடல்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தி மக்களை அரசியலில் ஈடுபடச் செய்யவேண்டும்.

ஏனெனில் தற்பொழுது உணர்ச்சி அடிப்படையில் இணைந்து இருக்கும் இம்மக்களுக்கு உண்மையான அரசியல் புரிதல் அல்லது அறிதல் ஏற்படுத்தப்படவேண்டும் அதன் மூலம் மக்களின் பிரச்சனைகளுக்கு மக்களையே போராடச் செய்தல் வேண்டும்.

மக்கள் தமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தாமே போராடும் பொழுதுதான் இந்த மக்கள் எழுச்சி என்பது உச்ச பயன்பாட்டை அடையும் வாய்ப்புண்டு.

**

சல்லிக்கட்டும், அரசியல்வியாதிகளும்

இந்த வருடம் (2017) தை மாதம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட சல்லிக்கட்டுக்கான உரிமை சார்ந்த போராட்டம் கையாலாக மத்திய மாநில அரசுகளின் இருட்டடிப்பு சதியால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைகளுக்கு மாற்றப்பட்டு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு அசாதாரண அரசியல் புரட்சி உருவாகி விட்டிருக்கிறது.

இளைஞர்களின் புரட்சிகரமான இந்த போராட்டத்தின்பால் ஆளும் அரசுகளும் பல்வேறு அரசியற்கட்சிகளும் உள்ளூர வஞ்சகமான காழ்ப்புணர்ச்சியை கொண்டிருந்தாலும் வேறு வழியின்றி எதையும் வெளிக்காட்ட முடியாத திரிசங்கி நிலையில் தாமும் கூட போராட்டத்தில் இணைந்து நிற்க விரும்புவதாக நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றன.

நாட்டுக்காக அரசியல், மக்களுக்காக அரசாட்சி, என்ற சித்தாந்தம் கெடுவாய்ப்பாக மாற்றப்பட்டு அரசியற் கட்சிகளுக்காகவும் கட்சி தலவர்களுக்காகவுமே அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரம் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது.

இதுவரை மத்தியில் ஆட்சி செய்த பிரதமர்களை விடவும் மிக மோசமான சர்வாதிகார மனநிலை கொண்ட இந்துத்துவ இனவாத பழமைவாதியாக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருகிறார்.

தமிழ்நாட்டில் சல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு தடையாக (PeTA) People for the Ethical Treatment of Animals, என்ற அமெரிக்க சர்வதேச தொண்டர் அமைப்பும், இந்திய விலங்குகள் நல வாரியமும், மத்தியில் ஆட்சி நடத்திவரும் காங்கிரஸ், பாஜக அரசு, இணைந்து பணியாற்றி வருகின்றன.

மேற் குறித்த அங்கத்துவத்துடன் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஒன்றிணைந்து பலவருடங்களாக தமிழ்நாட்டில் சல்லிக்கட்டு விளையாட்டுக்கு திட்டமிட்டு தடைவிதித்து வைத்திருக்கின்றனர்.

சல்லிக்கட்டு விளையாட்டு பாரம்பரியமானதுதானா, அல்லது மத்திய சர்க்காரில் உள்ள ஒருசில பேர் சொல்லுவதுபோல காட்டுமிராண்டிதனமானதுதானா என்ற வாத பிரதிவாதங்களும் சல்லிக்கட்டு தடையுடன் தொடர்ந்தே வருகின்றது.

சல்லிக்கட்டு விளையாட்டில் அரசியல் எதுவும் இல்லை அது எங்கள் பாரம்பரியம், பண்பாடு கலாச்சாரம் பொதிந்த நிகழ்வு, கால்நடைகளை அழிவிலிருந்து காப்பதற்கான வழித்தடத்தின் ஒரு பரிமாணம் என்று சல்லிக்கட்டு ஆர்வலர்கள் விவசாயிகள் தரப்பில் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தாலும்,

சல்லிக்கட்டு விளையாட்டுக்குள் மறைமுகமான மிகப்பெரிய அசியலும், இது எங்கள் உரிமை சார்ந்த விடயம் இதை எவரும் தடுக்க முடியாது என்ற சுதந்திர மனப்பாங்குடன் கூடிய மக்கள் உரிமை சார்ந்த சுய கௌரவம் பொதிந்த மனவோட்டமும் மறைந்து கிடக்கிறது.

தமிழக மக்கள் சல்லிக்கட்டு விளையாட்டை விளையாடுவதால் மத்திய மாநில அரசுகளுக்கு அரசியல் ரீதியாக எவ்விதமான முட்டுக்கட்டையும் இருக்கப்போவதில்லை. பெரிய தாக்கம் ஒன்றும் இல்லாவிட்டாலும் வட இந்தியாவினால் தடை செய்யப்பட்ட ஒன்றை ஏற்றுக்கொள்ளாமல் தென் இந்திய தமிழர்கள் எதிர்ப்பதாவது அது வடக்கத்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு கௌரவப்பிரச்சினையாக உருவகப்படுத்தப்பட்டு வேறுவிதமாக சித்தரிக்கப்பட்டுவிட்டது.

சர்வாதிகார மனநிலை கொண்ட பிரதமர் மோடியால் ஒரு சிறிய சட்ட திருத்த மூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து சல்லிக்கட்டுக்கான தடையை ஒரு சில மணித்துளிகளில் திரும்ப பெற முடியும். அதற்கு எடுத்துக்காட்டான முன் உதாரணங்கள் மோடி ஆட்சியின் இந்த இரண்டரை வருட காலத்தில் பல சான்றுகள் பதிவாக இருக்கின்றன.

ஆனால் பாஜக கட்சியின் தான்தோன்றி தனமான கொள்கைகளில் சற்றும் மனம் லயிக்காது அக்கட்சியை கவனத்தில் கொள்ளாமல் உதாசினப்படுத்தும் தமிழகத்து மக்களின் அபிலாசைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதன் மூலம் சொற்பமேனும் திருப்திப்படுவதாகவே பாஜக வின் அசைவுகள் இருந்து வருகின்றன.

தமிழிசை சௌந்தரராஜன், இல கணேசன், எச் ராசா, பொன்னார் மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் பலரும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு வரலாற்று கதைகளை சொல்லி தமிழர்களின் தொன்று தொட்ட உரிமைகளை திசை திருப்பும் உத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஒருமாத காலமாக அனைத்து செய்தி ஊடகங்களிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் சல்லிக்கட்டு தடை பற்றிய விவாதங்களே இடம்பெற்று வருகின்றன.
குறிப்பிட்ட சில கட்சிகளை சேர்ந்த ஒருசில முகங்கள் மாறி மாறி பேசியவற்றையே பேசி பார்ப்பவர்களை வெறுப்பேத்தி வருகின்றன.

இப்போது சல்லிக்கட்டு பாரம்பரியம், கலாச்சார பண்பாட்டு விழுமியம் என்பதை தாண்டி வடக்கு தெற்கு என்ற கௌரவப்பிரச்சினையாக மாறிப்போய்விட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் மாணவர்கள் அரசியற் கட்சிகள் எதையும் போராட்ட களத்தினுள் உள்வாங்க விரும்பவில்லை என்று அறியப்படுகிறது, ஆனால் மிகப்பெரிய தந்தரவாதிகளான அரசியற்கட்சிகளை தொடர்ந்து புறந்தள்ளி வைத்துவிட முடியுமா என்பதும் கேள்விக்குட்பட்டது.

உணவு, குடிநீர், பள்ளி படிப்பு, வேலை இன்ன பல காரணிகளுக்கன நேர ஒதுக்கீடு மாணவ இளைஞர்களுக்கு எதிர்நோக்கி இருப்பதால் இளைஞர்கள் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தை தக்க வைத்து தாக்கி பிடிப்பார்களா என்பதும் கேள்விக்குட்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.

நாளடைவில் ஆரவாரம் குறைந்து இயல்பாக பெண் பிள்ளைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் வெளியேறி இயல்பாக பரம்பல் குறைந்து போவதற்கும் இடமிருக்கிறது.

போராட்டம் சற்று தொய்வு காணும் நேரத்தில் ஆட்சியாளர்கள் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி சமரசம் செய்து போராட்டத்தை நீர்த்துப்போக செய்யமாட்டார்கள் என்று சொல்வதற்கும் இல்லை.

தமிழ்நாட்டிலிருந்து தமிழர்களுக்காகவே கட்சி நடத்தும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா போன்றோர் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர், அவர்கள் அப்படி கருத்து தெரிவிப்பதால் மத்திய மாநில அரசுகளின் மறைமுகமான ஆதரவும் பாதுகாப்பும் அவர்களுக்கு நிச்சியம் கிடைக்கும். இவைகளை தாண்டி அடுத்த தேர்தல்களில் அதிமுக பாஜக போன்ற கட்சிகளுடன் இவர்கள் கூட்டணி அமைப்பதற்கான பேரம்பேசல் அனுகூலமும் இருப்பதால் ஆட்சியாளர்களின் ஆனுசரணையுடன் இவர்களது போராட்டத்துக்கெதிரான பிரச்சாரங்களை ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.

என்ன இருப்பினும் திராவிடக்கட்சிகளின் சுயநலமும் இயலாமையும் மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடும் தமிழக இளைஞர்களின் புரட்சிகரமான போராட்டத்திற்கு விதை போட்டதை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் இந்த போராட்டத்தை இளைஞர்களின் புரட்சியின் வெற்றியாக முடிவுசெய்து இந்த ஆட்சியாளர்கள் தீர்வு கொண்டுவருவார்கள் என்பதும் கனவாகவே இருக்கும்.

இந்த நேரத்தில் இந்த இளைஞர்களின் எழுச்சியை உருக்குலைக்காமல் தொடரக்கூடியவகையில் புதிய சிந்தனை கொண்ட அரசியற் கட்சிகளின் தயவு நிச்சியம் இந்த இந்த இளைஞர் கூட்டத்துக்கு தேவைப்படும் என்பது தவிர்க்க முடியாதது.

காலம் அனைத்தையும் கன கச்சிதமாக தீர்மானிக்கும் வல்லமை கொண்டது என்பதுதான் யதார்த்தமும் கூட,

வற்றிய ஓலை கலகலக்கும்
இஞ்ஞான்றும்
பச்சோலைக்கில்லை ஒலி.

வற்றிய ஓலைகளாகிவிட்ட திராவிட பழமைகளை களைந்து புதிய சிந்தனை கொண்ட தலைமைக்கு தமிழகம் தயாராகிவிட்டது என்பது யாராலும் புறந்தள்ள முடியாது, அந்த பச்சோலை என்பது இளைஞர்கள் மத்தியில் புதிதாக பிறந்த “நாம்தமிழர்” கட்சியாகவும் இருக்கலாம்.

புரட்சி வெல்லட்டும், சல்லிக்கட்டு நடக்கட்டும், காவிரி ஆறு பொங்கி பெருகட்டும்.

கனகதரன்.

***

அடக்கப்படும் தமிழினம்.!

இந்த விளையாட்டைத் தடை செய்தால் நாட்டு மாடு அழியும், வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பெருகும்.

அறியாத தமிழா உன் அறியாமை பிழையால், உன் அடையாளம் இழந்தால் நீ மெதுவாக அழிவாய். உன் அடையாளம் இழந்தால், உன் தாய் நாட்டில் நீயும் ஒரு அகதியாய் மாறிடுவாய்!

இது ஜல்லிக் கட்டையும் தமிழினத்தையும் காட்டும் பாடல் வரிகள்.

காரணம் இன்றி காரியம் எதுவும் நடப்பதில்லை. இது ஆன்மீகத்திற்கும் பொருந்தும் அரசியலுக்கும் மிக நன்றாகவே பொருந்தும்.

இப்போது உலகம் முழுதும் ஜல்லிக்கட்டுக்காக போராட்டங்கள் இடம் பெற்று கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தடைக்கு பின்னணியில் அளப்பரிய அரசியலும் பண வேட்கையுமே முன்னிற்கின்றது என்பது ஒரு தரப்பினரது வாதம்.

அடக்கப்படும் தமிழனத்தின் மூலம் அரசியல் இலாபங்களும் கொட்டப்போகும் கோடிகளையுமே பரிசாக பார்க்கின்றனர். அதனால் திட்டமிட்டு செய்யப்பட்டதே இந்த ஜல்லிக்கட்டு தடை என கூறப்படுகின்றது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பால் உற்பத்தி குறைவடையும் அப்போது வெளிநாடுகளில் இருந்து செயற்கை பால் இறக்குமதி செய்யப்படும்.

அப்படி இறக்குமதி செய்யப்படும் பால்மாக்கள் மூலம் புதிய பலவகை நோய்கள் பரவும், அதனைத் தடுக்க மீண்டும் புதுப்புது மருந்துகள் இறக்குமதி செய்யப்படும்.

இதன் மூலம் இலாபம் அரசுக்கும், அரசியல் வாதிகளுக்குமே என்ற பின்னணியிலே இந்த ஜல்லிக்கட்டு தடையின் முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.

இதனை தெளிவாக விளக்கும் போது,

தமிழர்களின் பாரம்பரிய செயற்பாடுகளின் பின்னால் அளப்பறிய அறிவு, நுட்பம் இருக்கும். அதே வகையில் இந்த ஜல்லிக் கட்டுக்கும் உள்நோக்கம் இருக்கின்றது.

ஜல்லிக்கட்டில் மாடுகள் அதிக பலத்துடன் வளர்க்கப்படும். இதன் காரணமாக அவற்றைப் பிற பசுக்களுடன் கருவூட்டலுக்கு பயன்படுத்தினால் கருவுறும் பசுக்கள் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

அதன்படி அவற்றில் இருந்து கிடைக்கும் பால் மிகுந்த போசனை உடையதாக காணப்படும். இதனை அறிந்து இந்த ஜல்லிக்கட்டை பாரம்பரியத்தோடு இணைத்தான் நம் வீரத் தமிழன்.

பால் வகையில் இருவகை உண்டு A1 மற்றும் A2 என்பனவே அவை. இவற்றின் வித்தியாசத்திற்கு காரணம் இவற்றில் உள்ள போசனைக் கூறுகளான புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் இதர பொருட்களின் கலவைகளே.

இந்த இரு வகையிலும் A2 என்பது நாட்டு மாடுகளினால் கிடைக்கப்படும் பால், A1 என்பது மேற்கத்திய கலப்பின மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் ஆகும்.

நமது நாட்டு மாடுகளின் பாலில் இருந்து கிடைக்கும் சத்துக்கள், புரதங்கள் இயற்கையாகவே நமது உடலுக்கு வலு சேர்ப்பவை. ஆனால் A1 இல் கிடைப்பது இதய பாதிப்புகள், நீரிழிவு நோய், செரிமான பாதிப்புகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனக் கூறப்படுகின்றது.

இந்த A1 வகை பாலைத் தான் நாம் இப்பொழுது பாக்கெட் பாலாகப் பயன்படுத்தி வருகிறோம். அதன் பதில் கொஞ்சம் கொஞ்சமாக நோய்க்கு தள்ளப்பட்டு வருகின்றோம்.

இதன் பின்னணியில் பாக்கெட் பால், கலப்பின மாடுகள், மருந்துகள் என வெளிநாட்டு பெரும் வர்த்தகமே இருக்கின்றது. அதன் பாதிப்பே இப்போது கிடைத்த ஜல்லிக்கட்டு தடை.

இந்த மாபெரும் பொருளாதாரத்திற்கு தடையாக இருப்பது மாடுகளும், ஜல்லிக்கட்டுமே. அதன் விளைவு இந்த பணத்தாசை கை வைத்துள்ளது தமிழனின் பாரம்பரியத்தில்.

ஜல்லிக்கட்டைத் தடை செய்தால் காளைகளின் பராமரிப்பு குறையும் பின்னர் பராமரிப்பு குறைந்து எண்ணிக்கை குறைந்து போகும்.

அடுத்தடுத்து பால் குறையும் நோய் வந்து சேரும். இப்படி குறைவடையும் தொகையில் படிப்படியாக வளர்ச்சியடைவது வெளிநாட்டு வர்த்தகம்.

அதனைச்சார்ந்து அதிகாரத்தில் உள்ளவர்களின் வீடு மற்றும் வங்கிக் கணக்குகளும் வளரத் தொடங்கும். கோடிகள் கொட்டத் தொடங்கும்.

அதற்காக தமிழரின் பாரம்பரியத்திலா கைவைக்க வேண்டும்? இது வரை உரிமைகளை அழித்து வந்த அரசுகள் இப்போது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் குறிவைப்பது ஏன்?

பாரம்பரியம் அழியும் போது அந்த இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிவடையும் என்பதையும் மறந்து விடலாகாது. அந்த வகையில் தமிழ் இனம் அடக்கப்பட்டு முடக்கவும் வைக்கும் திட்டமாகவே இந்த ஜல்லிக்கட்டு தடை.

மிருகவதை என பேசும் எத்தனை பேர் அசைவ உணவை உண்கின்றார்கள்? அப்படி என்றால் அதனை தடுக்க வேண்டுமே முடியாது காரணம் அங்கும் இலாபம். இதன் மூலம் மிருகவதையை நியாயப்படுத்துவதோ அல்லது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதோ நோக்கம் அல்ல.

தமிழும் தமிழ் இனமும் காக்கப்பட வேண்டும், அதற்கு கலாச்சாரமும் பாரம்பரியமும் நிலைக்க வேண்டும். காளைகளை தெய்வமாக பூஜிப்பதும் குடும்பத்தில் அங்கமாக பார்ப்பதும் தமிழ் இனமே.

அடக்கப்படும் தமிழினம் பொங்கி எழும் போது புரட்சிகளாகும் என்பதற்கு இந்த ஜல்லிக் கட்டும் அதற்கான போராட்டமும் ஓர் உதாரணம்.

*

பீட்டாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கிறது முழக்கம்!

ஜல்லிக்கட்டுக்கான தடையை உடைத்தெறிய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் அறவழியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமானது இப்போது வெற்றியின் விளிம்பை எட்டி உள்ளது.

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களும், இளைஞர்களும் நடத்தி வரும் உணர்ச்சிமிகு போராட்டத்துக்கு போலீசார் மதிப்பளித்துள்ளனர்.

போராட்டத்துக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் முழு ஒத்துழைப்பும் அளித்து வருகிறார்கள். மாணவர்கள், இளைஞர்களும் தங்களது உடலை வருத்திக்கொண்டு போராடுவது போலீசாருக்கு கவலை அளித்துள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை எடுத்துக்கூறி, போராட்டத்தை கைவிடும்படி அன்பான வேண்டுகோளும் போலீசார் தரப்பில் வைக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் இயற்றப்படும் என்றும், ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்களை உடனடியாக அனைவரும் கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையை போராட்டக்குழுவினரிடம் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் அளித்தார். அந்த அறிக்கையை சுட்டிக்காட்டி போராட்டத்தை உடனடியாக விலக்கி கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதனை போராட்டக்குழுவினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் திரும்ப மாட்டோம் என்று மெரினாவில் போராடும் இளைஞர்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர்.

மெரினாவில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தால் கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தால் 26-ந்தேதி குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை மெரினா கடற்கரையில் நடத்த முடியாது சூழல் ஏற்படும் என்பதால், போராட்டக்குழுவினருடன் போலீசார் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் போது மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் என்று ஒருபுறம் கோஷம் எழுப்பினாலும், மற்றொருபுறம் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்புகிறார்கள்.

தமிழகம் முழுவதும் இளைஞர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் பீட்டா பக்கம் பாய்ந்துள்ளது. பீட்டாவுக்கு எதிராக அனல்பறக்கும் வகையில், ‘மீசையை முறுக்கு, பீட்டாவை நொறுக்கு’, ‘பீட்டாவுக்கு நோட்டா’, ‘நாட்டைவிட்டு விரட்டு’ போன்ற வாசகங்களும், கோஷங்களும் விண் அதிர ஒலிக்கின்றன. பீட்டாவுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை, பீட்டா அமைப்பு சின்னத்தை பாடைகட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்வதும், பீட்டா என்று உருவபொம்மையில் எழுதி, அதை தூக்கில் தொங்கவிட்டும், செருப்பால் அடித்தும் பதிவு செய்தனர். தொடர்ந்து பீட்டாவிற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.