தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த தடையினை நீக்க கோரி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில், குறித்து போராட்டம் நேற்று முதல் தீவிரம் அமைந்துள்ளது. குறிப்பாக நீதிமன்ற உத்தரவை மீறி மதுரை அலங்காநல்லூரில் பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் காளை மாடுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், இளைஞர்கள் பலரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும், இந்த சம்பவம் தமிழகம் முழுவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி தமிழகத்தின் பல இடங்களிலும், போராட்டம் தீவிரம் பெற்றுள்ளது.

அந்த வகையில் இன்று காலை முதல் சென்னை மெரீனா கடற்கரையில், ஒன்று கூடிய இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஜட்டுக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை விதிக்க வலியுறுத்தியும், அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் சென்னை மெரினா கடற்கடையில் காலை முதலே திரண்ட இளைஞர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும், போராட்டத்தினையும் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் விடிய விடிய தொடரும் என ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்த ஏராளமான இளைஞர்கள் கறுப்புச்சட்டை அணிந்து வந்திருந்தனர். இரவு கவிந்தும் போராட்டம் தொடர்ந்த நிலையில் அங்கு மின்சாரம்‌துண்டிக்கப்பட்டதால், கையடக்க தொலை பேசியை ஒளிர வைத்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தமிழ் நாட்டு அரச அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும், அது தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பெற்றோர்களை கையடக்க தொலை பேசியின் ஊடாக அழைத்து அவர்களை மிரட்டும் நடவடிக்கைகளும் நடந்து வருவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements